காவலன் ஜெயந்தி

 இலங்கைப் பதிவுலக அதிகார மையத்தின் தலைவரும், பீப்பீமாமா, தலை, மங்காத்தா, வண்டிமாமா , அக்கா என பல செல்லப்பெயர்களால் அழைக்கப்படுபவரும் பெண் பெயரில் எழுதி வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் எங்கள் அருமை அண்ணன் மாலவனுக்கு (நீருஜா) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் தலைவர் பற்றிய சில ஞாபகச் சிதறல்கள். 

 தன் சொந்த நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் சில்க் கட் பேர்ப்பிளையும் சிமிர்னோவையும் விட்டு விட்டு புலம் பெயர் தேசத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிவந்த ஒரே ஒரு நாட்டுப்பற்றாளன் இவர்.

 இந்துக்களின் முழுமுதல் கடவுளாகிய பிள்ளையாரைப் போல உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் விசாலமானவர்.

 நாதஸ்வரம், ரம்பெட் போன்ற ஊதுகுழல்களின் தாய் பூவரசமிலைக் குழல் என்பதை இன்றைக்கும் மறக்காமல் அடிக்கடி பூவரசமிலைக் குழல் ஊதி பீப்பீ மாமா என யாழ்ப்பாணத்தில் பட்டம் பெற்றவர்.

 ஃபோர்ஸ்க்யூரில் தான் எங்கே நிற்கின்றேன் என்பதை நண்பர்களுக்கு மட்டுமல்ல தன் நேசத்துக்குரியவருக்கும் அடிக்கடி நினைவூட்டுகின்றவர்.
லண்டன் பிக்காடிலி சேர்கஸின் பெருமைகளை சதீஸுக்கு விளங்கப்படுத்தி சதீஸை சில நாட்கள் பிக்காடிலி பைத்தியம் பிடிக்க வழி சமைத்த வழிகாட்டி எங்கள் மால்ஸ்.

 உலகில் பயணம் செய்ய எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் புகை வண்டியில் பயணம் செய்வதே இவர் ஸ்டைல்.

 குழந்தைப் பிள்ளைகளால் குண்டு மாமா, வண்டி மாமா, தொந்திமாமா என அன்பாக அழைக்கப்படுகின்றவர் எங்கள் மால்ஸ்.

 தன் தொந்தியும் தலை அஜித்தின் தொந்தியும் ஒன்றெனச் சொல்லி இப்போ புதிதாக மங்காத்தா எனவும் பட்டம் பெற்றுக்கொண்டவர்.

 பெண்களின் காவலனான அனுதினனின் காவல் குரு இவர். தன்னுடன் படித்த வேலை செய்கின்ற பெண்களை பத்திரமாக பஸ் ஏத்தி சிலவேளைகளில் அவர்கள் இறங்கவேண்டிய பஸ் நிலையம் வரை சென்று பாதுகாப்புக்கொடுப்பதில் இவர் ஒரு கறுப்புப்பூனை.

சீதனக் கொடுமைகளை புலோலியூறாக எடுத்தியம்பிய ஜாவாப் பாரதி இவர்.

 நண்பர்களுடன் குறிப்பாக புதுமாப்பிள்ளை சித்தப்பூவுடனும் நவீன வாத்ஸ்யாயனர் மதுவுடனும் வேலை செய்வேன் என ஒற்றைக்காலில் நின்று அவர்கள் அலுவலகத்திலையே ஜாவாவுடன் குடும்பம் நடத்துகின்றார்.
அண்மைக்காலமாக சித்தப்பூ கோ ஜீவா போல் மாறியதால் மாலின் வண்டவாளங்கள் அலுவலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.
அன்னக்கிளி உன்னைத் தேடுது மற்றும் அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க... மால்ஸின் மனம் விரும்பிய பாடல்கள்..

 நண்பர் லோஷனுடன் போட்டிக்கு குனிந்தபடியே தன் கால் விரலை இலகுவாகத் தொட்டு சாதனை படைத்தவர், (லோஷனுக்கும் அடி சறுக்கும்).

 நீரூஜா என்ற புனைபெயரில் எழுதி புல்லட் மருதமூரான் இருவரையும் மையல் கொள்ளவைத்த பெருமை எங்கள் அக்காவிற்கே சேரும். 

அண்மையில் பெந்தோட்டையில் கடல்குளியலுடன் சித்தமருத்துவ
முறைப்படி மணல் குளியலும் குளித்த கோமகன் எங்கள் மால்ஸ். 

அண்மையில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற விதி இவரைப் பாடாய்ப்படுத்துகின்றது.


கடைசியாக நடந்துமுடிந்த இலங்கைப் பதிவர் சந்திப்பில் அன்னாசி ஜீஸ் குடிச்சும் பின்விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தப்பிய ஒரே ஒரு ஜீவராசி இவர் தான்.

தன் பிறந்தநாளை ஒட்டி பிறந்தநாளுக்கு முதல் நாள் (நேற்று), இன்று, நாளை என மூன்று நாட்கள் நண்பர்களுக்கு விருந்து தந்து அசத்திக்கொண்டிருக்கின்றார்.


மீண்டும் அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரூண்டி வாழ்க நண்பா.

விளையாடு மங்காத்தா

எந்திரனுக்கு பிறகு எழுதும் திரைவிமர்சனம் கடைசியாக திரையில் பார்த்த படம் கோ அதன் பின்னர் நேற்று மங்காத்தா.

கதை
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து வந்த முதல் தமிழ்ப் படம். 500 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் கொள்ளையர்களின் கதை.

திரைக்கதை
அர்ஜீன் , அஜித் என்ற இரண்டு நாயக‌ர்களையும் திரிஷா ,லக்ஸ்மிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்ற நான்கு நாயகிகளையும் வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா என்ற பெயரில் ஆடுபுலி ஆட்டம் தான் ஆடியிருக்கின்றார். இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பம். இந்தியன் படத்துக்குப் பின்னர் கிளைமாக்ஸ் மிகப் பெரிய எதிர்பாராத திருப்பம். வைபவ் அஞ்சலி காதல், ஆண்ட்ரியா அர்ஜூன் பாடல் கொஞ்சம் திரைக்கதையில் சறுக்கல்.

வசனம்
பிரேம்ஜியின் ட்விட்டர் கீச்சுகள் போல வசனங்கள். பல இடங்களில் ரசிக்கவைக்கின்றன. பிற்பகுதியில் ஆங்கிலப் படங்களில் வரும் வசனம் என்பதாலோ சென்சார் கையை நிறையவே வைத்துவிட்டது.

இயக்கம்
சென்னை 28, சரோஜா என இரண்டு சதமடித்த வெங்கட் பிரபு கோவாவில் சறுக்கினாலும் மீண்டும் மங்காத்தாவில் இரட்டைச் சதமடித்திருக்கின்றார். அதுவும் தலையை வைத்து இரட்டைச் சதமடித்தமை சாதனை தான். ஆனால் பிரேம்ஜி, பைவப், அரவிந்த் என தன் பழைய டீமையே வைத்து விளையாடுவதுதான் கொஞ்சம் நெருடுகின்றது, இந்திய அணிக்கே ரெய்கேனா, பர்தீப் பட்டேல் போன்றவர்கள் களம் இறங்கும் போது வெங்கட் பிரபுவும் வேறை டீமை வைச்சு அடுத்த இனிங்கசைத் தொடரலாம். விறுவிறுப்பான ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்தமைக்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு சலூட்.

லக்ஸ்மி ராய்
என்னடா தலை ஆக்சன் கிங் என நாயகர்கள் இருக்கும் போது கதாநாயகிகளில் ஒருவரைப் பற்றி எழுதுகின்றேன் என யோசிக்கின்றீர்களா? எல்லாம் அவரின் திறமைதான். ஏற்கனவே சில படங்களில் வந்துபோனாலும் இந்தப் படத்தில் மொத்தமாக அனைவரையும் கவருகின்றார். அதுவும் பல்லேலக்கா பாடலுக்கு அம்மணி லண்டன் சமர் போல ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றார். ஆனாலும் சென்சாரின் புண்ணியத்தில் அம்மணியை ரொம்பப் பார்க்கமுடியவில்லை என்பது பல ரசிகர்களின் கவலை. முதல் காட்சியில் தலை வீட்டில் செய்யும் லூட்டியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ஓவர் ஜொள்ளு உடம்புக்கு ஆகாதாம், எனிவே டோணிக்கு நன்றிகள்.


அஜித்
வாலி படத்திற்க்கு பின்னர் தலையை ரசித்துப் பார்த்தது மங்காத்தாவில் தான். நீண்ட நாட்களின் பின்னர் அலட்டலில்லாமல் அட்டகாச நடிப்பு. அதுவும் பிரேம்ஜியுடன் குடித்துவிட்டுச் செய்யும் அலும்புகளும், செஸ் போர்ட்டுக்கு முன்னால் இருந்து தன் சகாக்களை கொலை செய்ய பிளான் பண்ணும் காட்சியும் அல்டிமேட் ரகம். லக்ஸ்மிராயுடன் பொருந்திப்போகும் காதல் கெமிஸ்ரி ஏனோ திரிஷாவுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. 50 வயது தாண்டியவர்களே சின்னப் பெண்களுடன் டூயட் பாடும் போது தலை மட்டும் தலை முடியை வெள்ளையாக்கி தன் வயதை எல்லாம் சொல்லுவது நிஜத்தில் நல்லா இருந்தாலும் படத்தில் அவரின் கெட்டப் கொஞ்சம் நெருடல் தான்.

அர்ஜீன்
அர்ஜீனின் 1001ஆவது போலீஸ் வேடம், கொஞ்சம் வயதான போல் தெரிந்தாலும் சண்டைக் காட்சிகளில் அதே வேகமும் ஆக்ரோசமும் இருக்கின்றது. ஒரு பிட்டில் ஆண்ட்ரியாவுடன் டூயட்டும் பாடுகின்றார்.

த்ரிஷா
தமன்னாவுக்கு கிடைக்கவேண்டிய லூஸுப் பொண்ணு கேரக்டர் த்ரிஷாவுக்கு, பெரிதாக நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை, கிடைத்த வாய்ப்புகளிலும் லக்ஸ்மி ராய் சிக்சர் அடித்தபடியால் அம்மணி வாட்டர் பாய் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். த்ரிஷாவுக்கே இந்த நிலை என்றால் அஞ்சலி ஆண்ட்ரியா எல்லாம் காயமடைகின்ற இந்திய வீரர்களுக்கு ரிப்பிளேஸ்மெண்டில் வரும் ஏனைய வீரர்கள் போல் வந்துபோகின்றார்கள். அஞ்சலி பைவப்வுடன் ஒரு டூயட்டை அரைகுறையாக(ஆடை இல்லை பாடல்) ஆடி வைக்கின்றார்.

பிரேம்ஜீ

சில இடங்களில் சபாஷ் போட வைத்தாலும் பல இடங்களில் அதே பழைய இம்சை. லக்ஸ்மிராயை முதன்முறை பார்க்கும் காட்சியில் பின்னணீ இசையும் பிரேம்ஜீயின் நடிப்பும் கலக்கல். (இசைஞானியின் பழைய பாடல் ஒன்று பாடலின் பெயர் ஞாபகம் வரவில்லை).

இசை
இசை வழக்கம்போல் தம்பியுடையான் இசைக்கஞ்சான் போல் வெங்கட் பிரபுவுக்கு ஸ்பெசலகா யுவனின் பாடல்கள் சூப்பர் டூப்பர் விளையாடு மங்காத்தா பாடலும் தீம் மியூசிக்கும் ஏற்கனவே பட்டி தொட்டிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஏனைய பாடல்களும் கேட்க இதமாக இருந்தாலும் படத்தில் இடைச் செருகல் போலத்தான் இருந்தது. பின்னணி இசைக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, பிரேம்ஜி மூவரும் யுவனுக்கு உதவி செய்திருக்கின்றார்கள்.

நீண்ட நாட்களின் பின்னர் தலைக்கு மட்டுமல்ல தலை ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல பொழுதுபோக்கு படங்களின் ரசிகர்களுக்கும் மங்காத்தா மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.

பின்குறிப்பு 1: லண்டனில் சன் பிக்சர்ஸ் லோகோ எதுவும் வரவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விடயம். சன் செய்திகளில் லோகோவைக் கண்டதும் ரசிகர்கள் ஆராவராம் செய்கின்றார்கள் என மாசிலாமணி காலத்தில் இருந்து காட்டும் அதே டெக்னிக்கை மங்காத்தாவுக்கும் காட்டினார்கள் (திகார் ஜெயிலில் இன்னும் இடம் இருக்கின்றதாம்). அத்துடன் முதன்மை நிர்வாகி என ஷக்சேனாவின் பெயரும் மிஸ்சிங் (ஆள் எஸ்கேப்போ தெரியாது ).

பின்குறிப்பு 2: அஜித்தின் ஆரம்பக்காட்சிக்கு மட்டும் விசில் முழுங்கியது பின்னர் ரசிகர்கள் படத்துடன் ஒன்றிவிட்டார்கள்.

சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ

சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன் ஒரு கணணிப் பொறியியளாளர் அதுதாங்க சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஆவார். பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிச்சு இப்போ கொழும்பிலை ஒரு மல்டி நசனல் கம்பனியிலை வேலைபார்க்கின்றார். ரொம்ப மென்மையான நல்ல மனிதர் இவர். நல்ல பக்திமானும் கூட எப்படியான பக்திமான் என்றால் தான் எழுதுகின்ற ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான்.

தன்னை சன்மைக்ரோ சிஸ்டம் காரன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் கூப்பிட்டு பாராட்டாவிட்டால் நான் ஜாவாக்காரன் இல்லை என அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்குமளவுக்கு சித்தப்பூ ஜாவாவில் புலி இல்லை இல்லை சிங்கம். அப்லெட், சேர்வ்லெட், பைப்பிங் என ஜாவாவில் சித்தப்பூக்கு எல்லாம் அத்துப்படி சுருக்கமாச் சொன்னால் சித்தப்பூ ஈட் ஜாவா ட்ரிங் ஜாவா சிலீப் ஜாவா என வாழ்கின்றவர்.

அலுவலகத்தில் ஜாவாவுடன் வாழ்க்கை என்றால் ஏனைய நேரங்களில் பிள்ளையாருடன் பக்திமயமான காதல். வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் சித்தப்பூவை நீங்கள் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் அப்படியே புதிய கதிரேசன் ஒரு சில மீட்டர் நடந்து சம்மாங்கோட்டுப் பிள்ளையார் என ஒரே தரிசனம் தான், ஆனாலும் சித்தப்பூவுக்கு வெளிநாட்டு ஆசையும் இருப்பதால் விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட்.

வெள்ளிகளில் பிள்ளையார் கோயில் என்றால் செவ்வாய்கிழமைகளில் மயூரா அம்மனும் ஞாயிறுகளில் தெகிவளை விஷ்ணுவும் சித்தப்பூவின் வழிபடு தலங்கள். இடைக்கிடை லீவு கிடைத்தால் கொச்சிக்கடை சிவன், கொட்டாஞ்சேனை அம்மன் பிள்ளையார், முகத்துவாரம் விஷ்ணு என ஒரு ட்ரிப் அடிப்பார்.

பொறுங்கோ வாறன் இவ்வளவும் வாசிச்சவுடனை உங்களுக்கு சித்தப்பூவைப் பற்றி ஒரு விம்பம் வந்திருக்கும் எல்லோ ஆனால் அதை எல்லாம் உடைப்பது போல சித்தப்பூவிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கு. ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை சித்தப்பூ டெய்லி பியர் அடிப்பார். அதுவும் சின்னப்போத்தல்(படி) தான். நண்பர்கள் கேட்டால் சொல்லும் காரணம் அற்ககோலும் கொஞ்சம் உடம்பிலை இருக்கவேண்டும் என்பதுதான் ஆனால் அதைவிட ஜாவாவுடன் மல்லுக்கட்டிய களையைப் போக்கத்தான் பியர் அடிக்கின்றவர் என்ற உண்மை சித்தப்பூவுக்கு மட்டுமே தெரியும்.

சித்தப்பூ முதன்முறை பியர் அடிச்ச கதை நல்ல பம்பல். பேராதனையில் படிக்கின்ற காலத்திலை பொடியள் எல்லாம் கண்டிக்குப் போய் செட் ஆகினார்கள். நம்ம சித்தப்பூக்கும் பம்பல் பிடிக்கும் கோயில் குளம் என அலைந்தாலும் ஆள் முசுப்பாத்தியான ஆள். சிலர் விஷ்கி பிராண்டி என பெரிசிலை இறங்க நம்ம சித்தப்பூ பாத்தார், உதை எல்லாம் குடிச்சு சத்தியராஜ்(வாந்தி எடுப்பவர்களை செல்லமாக அழைக்கும் பெயர்) ஆகிறதை விட பியரிலை இறங்குவோம் என வலு கலாதியாக எனக்கொரு லயன் லாகர் என ஓடர்போட்டார்.

சித்தப்பூவின் நண்பன் ஜது "மச்சான் நீ இன்றைக்குத் தான் அடிக்கபோறீயோ? "
"அடச்சீ போடா உதெல்லாம் எனக்கு எப்பவோ பழக்கம் " என தன்னை விட்டுக்கொடுக்காமல் சித்தப்பூ ஒரு விடுவை விட்டுவிட்டார்.

சிங்கத்தை கொண்டுவந்து சித்தப்பூவின்ரை முன்னாள் வைச்சவுடன் ஆள் உடனே ஒரு கிளாசிலை அரைவாசிக்கு பியரை நிரப்பிவிட்டு மிச்ச அரைவாசிக்கு கோக்கை கலந்துவிட்டார்.


கூட்டாளிப் பொடியள் எல்லாம் கெக்கே பிக்கே எனச் சிரிக்க சித்தப்பூ "ஏன் நீங்களும் கோக் கலந்துதானே குடிக்கிறியள்? "
இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ.

கொஞ்ச நாளைக்கு முன்னர் சித்தப்பூவிற்க்கு ஆப்பு அவரின் தாய் ரூபத்திலை வந்தது. சித்தப்பூவிற்கு ஒரு கலியாணத்தைக் கட்டிப்பார்க்க தாய் ஆசைப்பட்டார். கம்பசிலை படிச்ச பொடியன் அதாலை ஏதும் லவ்வு கிவ்வு இருக்கும் என்ற டவுட்டிலை
"தம்பி உனக்கு எதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லப்பூ இல்லையெண்டால் எங்கடை புரோக்கர் நல்ல சம்பந்தம் இருக்கிறதாகச் சொல்லுறார் அதைப்பார்ப்பம்?" என்று கேட்க சித்தப்பூவோ

"என்ன விசர்க் கதை கதைக்கின்றாய் என்ரை கூட்டாளிகள் எல்லாம் நீலம் பச்சை சிவப்பு என கலர்க் கலராக பெட்டையளுக்குப் பின்னாலை சுத்தின நேரம் நான் படிச்சுக்கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கிறதைப் பார் எனக்குப் பிரச்சனை இல்லை" என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார்.

சித்தப்பூவின் தாயும் ஒரு மாதிரி வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைச் சித்தப்பூவிற்க்கு பார்த்துவிட்டார். சித்தப்பூவிற்க்கும் அவரைப் பிடிச்சுவிட்டது. என்ன பிரச்சனை என்றால் அந்தப் பிள்ளைக்கு வேலை பருத்தித்துறையில் , ஆனாலும் இப்போ அடிக்கடி சொகுசு பஸ் எல்லாம் ஓடுவதால் சித்தப்பூ வெள்ளிக்கிழமை இரவே வேலை முடிய யாழ்ப்பாண பஸ்சில் ஏறிவிடுவார். சிலவேளை கொழும்புக்கு ஏதும் அலுவலாக வந்த அந்தப் பிள்ளையும் சித்தப்பூவோடை தான் யாழுக்கு போறது.

ஒரு சுபயோக சுபதினத்திலை சித்தப்பூவும் அந்தப் பிள்ளைக்கு தாலி கட்டி தனக்கு மனைவியாக்கிவிட்டார். திருமணத்தின் பின்னர் சித்தப்பூ பியர் அடிப்பதை குறைச்சுக்கொண்டாலும் நிறுத்தவில்லை, இப்போ கோக் போத்தலுக்குள் பியரைவிட்டு கோக் குடிக்கின்றவர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும்.

ஒருநாள் சித்தப்பூ பிரிட்ஜைத் திறந்து கோக் போத்தலுக்குள் இருக்கும் பியரை அடிக்கத் தொடங்க வெளீயே போயிருந்த அவரின் மனைவி வந்துவிட்டார், "உதென்னப்பா கையிலை கோக்கோ ஒருவாய் தாங்கோ களைக்குது" இப்படிச் சித்தி கேட்க சித்தப்பூவிற்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டுவிட்டது.

"இ இ இ இல்லை இதை நீ குடிக்ககூடாது" என சித்தப்பூவின் வாய் தடுமாறியது.
"தாருங்கோ" என்ரபடியே அவரின் கையில் இருந்த கோக் போத்தலைப் பறித்த அவரின் மனைவி குடிப்பதற்க்கு வாய்க்கு கிட்டே கொண்டு போனபின்னர் தான் வேறை ஏதோ மணம் அடிப்பதால் இதென்னப்பா இது பியர் மணம் அடிக்குது. நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ எனக் கேட்டதுதான் சித்தப்பூ மயங்கிக்குப்போய் நிலத்திலை விழுந்துவிட்டார். சித்தப்பூவின் மனைவியின் உறவினன் ஜது சித்தப்பூ பற்றிய கதைகளை அவரின் மனைவிக்கு போட்டுக்கொடுத்த விடயம் சித்தப்பூவிற்க்கு இன்னமும் தெரியாது அதோடை இப்போ சித்தப்பூ பியரே குடிப்பதில்லை.

கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை.

பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். பிடிச்சிருந்தால் சொல்லுங்கள். சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்.