சன் பிக்சர்ஸின் விளம்பரம், ரஜனி, ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரகுமான், அமரர் சுஜாதா என பல பெரிய தலைகளின் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை இரண்டாம் நாளான நேற்றுப் பார்க்கும் சந்தரப்பம் கிடைத்தது.
கதை :
இராம நாரயணனின் கதை போன்ற ஒரு ஃபன்டாசி கலந்த சயன்ஸ் பிக்சன் கதை. கதையின் நாயகன் சுஜாதா என்பதால் சில இடங்களில் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா சாயல் காணப்படுகின்றது. இயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. AI (Artificial intelligence) வைத்து உருவான கதை. அதனால் கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களான ஐபி எண், கொன்ரோல், ஆல்டர் டிலிட், சிலிக்கன் சிப், பைட் என பல விடயங்கள் வந்துபோகின்றது. விக்ரம் படத்தில் கொஞ்சம் விஞ்ஞானத்தை அக்னிபுத்திரன் வடிவில் செலுத்திய அமரர் சுஜாதா இதில் சிட்டியை பிரதானமாக்கி இருக்கின்றார்.
திரைக்கதை :
ஷங்கரின் வழக்கமான பிரமாண்டமான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகின்றது என்றால் மிகையில்லை. பல இடங்களில் சுஜாதா கைகொடுத்திருக்கின்றார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னமும் வேகமான திரைக்கதை கிடைத்திருக்கும். முற்பாதி கலகலப்பாக இருந்தாலும் பின் பாதியில் சில இடங்களில் இழுவை. ஷங்கரின் படங்களில் ஜீன்ஸுக்குப் பின்னர் கொஞ்சம் சறுக்கலான திரைக்கதையை இந்தப் படத்தில் தான் பார்க்கின்றேன்.
வசனம் :
சுஜாதா, ஷங்கர், கார்க்கி என மூவர் வசனம் எழுதியிருக்கின்றார்கள். விஞ்ஞான விடய வசனங்களில் சுஜாதா தெரிகின்றார். பல இடங்களில் ரஜனியின் பட பஞ்ச் டயலாக்குகளை இலகுவாக வசனமாக்கி இருக்கின்றார்கள். முன்னாடி கண்ணாடி என பஞ்சதந்திர கிரேசிமோகன் சாயலும் சில இடங்களில் ஏற்படுகின்றது தவிர்த்திருக்கலாம். விஞ்ஞான வசனங்கள் வருவதால் கிராமத்து மக்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் கெளதம் வாசுதேவ மேனனின் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் வசனங்கள் பாராட்டத் தக்கது. மெல்லிய நகைச்சுவை கலந்த வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கின்றது. குறிப்பாக யுத்தம் ஆயுதம் கணணி சம்பந்தப்பட்ட வசனங்கள் கலக்கல். அதிலும் ரோபோ சொல்லும் நா.முத்துக்குமாரின் கவிதை சூப்பரோ சூப்பர்.
இயக்கம் :
சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜனியுடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான். ஷங்கரின் ரசிகனாக அவர் ஒரு ஹொலிவூட் படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. ரஜனியை தனது தேவைக்கு ஏற்றபடி இந்தப் படத்தில் இயக்கி இருக்கின்றார், ஏனென்றால் அதிரடி ஆரம்பம், பஞ்ச் டயலாக், அறிமுகப் பாடல் என ரஜனியின் வழக்கமான படங்கள் போல் இதில் இல்லை. ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும். 
ரஜனிகாந்த்:
ரஜனி என்ற மந்திரச் சொல்லினால் தான் இந்தப் படம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது, படுகின்றது. சிவாஜிக்குப் பின்னர் நடித்த படம்,விஞ்ஞானியாக ஒரு வேடம் இன்னொரு பரிமாணத்தில் ரோபோவாக ஒரு வேடம். ரோபோ மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை நினைவூட்டுகின்றது. இன்னமும் விஜய், அஜித் போன்றோருக்கு ரஜனி போட்டியாகத் தான் இருப்பார் என்பது போல் இளமையாகவே இருக்கின்றார். ஆனாலும் அந்த உருவத்துடன் ஒட்டாத தாடிக் காட்சிகளில் முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. வில்லனாக வரும் காட்சிகளில் ஷங்கர் ரஜனியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடிப்பையும் கறந்திருக்கின்றார். (ஒரு சில விமர்சர்கள் எழுதியதுபோல் விருது கொடுக்கும் அளவிற்க்கு எந்திரனில் ரஜனி நடிக்கவில்லை), தளபதிற்க்குப் பின்னர் ரஜனியின் ஸ்டைல் தான் நடிக்கின்றது ஒழிய அவரிடம் எவரும் நடிப்பை அவ்வளவாக வாங்கிக்கொள்ளவில்லை. ரஜனியிம் இனி ஷங்கர் போன்றவர்களின் படங்களில் நடித்தால் மீண்டும் அந்தக் கால ரஜனி கிடைப்பார்.
தன்னுடைய ரசிர்களின் எதிர்பார்ப்புகளை மீறி எந்தவிதமான பஞ்ச்கள், சண்டைகள் இல்லாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. ரஜனிக்கே உரிய நகைச்சுவையுடன் ரோபோவை உலாவ விட்டதும் பாராட்டுக்குரியது. வில்லன் ரஜனி தற்போதைய வில்லன்களுக்கு போட்டியாக உருவாகிவிட்டார். சாதாரண ரசிகர்களுக்கு இந்த ரஜனியைப் பிடிக்கும் ஆனால் அவரின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை இந்தப் படத்தில் தேடத்தான் வேண்டும்.
சிட்டி :
யார் இந்த நடிகர் என நினைக்கின்றீர்களா? வேறை யாருமல்ல ரோபோ ரஜனி தான். எப்படி சில நடிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றுகின்றார்களோ அதுபோல் ரஜனியும் சிட்டியுடன் ஒன்றிவிட்டார். முதல்பாதியில் சிரிக்க வைக்கும் சிட்டி இரண்டாம் பாதியில் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டுகின்றார். ஐசுக்கு காதல் சொல்லும் இடங்கள் கலக்கல்.
ஐஸ்வர்யா ராய் :
உலகின் நிரந்தர அழகி அல்லது இந்த நூற்றாண்டின் அழகி வெள்ளித் திரையிலும் இன்னும் இளமையாகவே இருந்து மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றார். இருவரில் பார்த்த மாதிரியே அதே அழகுடன் இருக்கின்றார். ஜீன்ஸில் 50 கேஜி தாஜ்மஹாலாக இருந்தவர் இதில் 40 கேஜியாக குறைந்தது போல் இருக்கின்றது. குறிப்பாக கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் உடைகள் அபாரம், எந்த இடங்களிலும் அவரை ஆபாசமாகவோ கண்றாவியாக தோன்றவில்லை.
பல இடங்களில் நடிக்கவும் செய்கின்றார். அபிசேக் பச்சான் உங்கள் மனைவிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஐஸ்வர்யாவிற்கு மாற்றீடாக இன்னொரு நடிகையை சனாவின் இடத்தில் யோசித்தால் ஸ்ரீதேவி மட்டும் தான் ரஜனிக்குப் பொருத்தமாக இருப்பார்.
இசை :
ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்கின்றார்கள். என்னுடைய பிளேயரில் கிளிமஞ்சதாரோ மெஹா ஹிட். புதிய மனிதா பாடல் ஆரம்பக் காட்சிகளுடன் ஒட்டவில்லை. ஏனைய பாடல்களில் வழக்கம் போல் ஷங்கர் வித்தியாசமாகவே எடுத்திருக்கின்றார். இதனை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை. பின்னணி இசை ரசிக்கலாம் குறிப்பாக தீம் மியூசிக் கலக்கல்.
ஒளிப்பதிவு :
பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத் தரம். பாடல்காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது.
கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது. 
எடிட்டிங் :
ஆண்டனியின் கத்தரி தேவையான இடங்களில் அழகாகவே கத்தரித்துள்ளது. பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.
சந்தானம் :
பாஸ் எ பாஸ்கரனில் சதமடித்தவர் இதில் டக் அவுட்டாகிவிட்டார்.
கருணாஸ்
திண்டுக்கல் சாரதிக்காக நன்றிக்கடனோ தெரியவில்லை.
ஜஸ்ட் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பின்னணியில் பலர் உழைத்திருக்கின்றார்கள் என்பது படம் முடிந்தபின்னர் காட்டும் பட்டியலில் தெரிகின்றது. ஐஸ்வர்யா ராயுக்கு குரல் கொடுத்தவர் தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னணியில் உழைத்தவர்கள் பலர் வெளிநாட்டினர். நிச்சயமாக தமிழ் வர்த்தக சினிமாவில் எந்திரன் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும்.
மொத்தத்தில் எந்திரன்
ரஜனி ரசிகர்களுக்கு - மினித் தீபாவளி
ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை
ஷ்ங்கர் ரசிகர்களுக்கு - ஹொலிவூட் தரம்
சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்
டிஸ்கி :
நான் பார்த்த தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டும் தான். காரணம் அந்த தியேட்டரில் முதன் முதலாக தமிழ்ப் படம் என்பதால் பலருக்குத் தெரியவில்லை. மற்றும் படி லண்டனில் பல இடங்களில் ஒரு நாளைக்கு எட்டுக் காட்சிகளுக்கு மேல் நடக்கின்றது.
படம் தொடங்குமுன்னர் ஒரு சில ஆங்கில அனிமேசன் படங்களின் ட்ரைலர் போட்டார்கள்.
எமக்குப் பின்னால் இருந்த சில பெண்களும் ஆண்களும் கடுப்பைக் கிளப்பினார்கள். பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஸ்டைல் ஆனால் வாய் திறந்தால் கூவம் தான். இவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீண்ட நாட்களின் பின்னர் நேற்றுத் தான் ஓய்வு கிடைத்தது, அதனால் தான் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு சினிமா விமர்சனம். இனி மன்மதன் அம்பு தான் திரையில்.
ஷங்கரின் எந்திரன்
எழுதியது வந்தியத்தேவன் at 19 கருத்துக் கூறியவர்கள்
சன் பிக்சர்சின் காமன் வெல்த்
கோபாலபுரத்தில் ஒரு காலைப்பொழுதில் கருணாநிதி தன் நாட்குறிப்பில் சினிமா இசை வெளியீடு, மானாடா மயிலாட சீசன் 5 இறுதிப்போட்டி, அடுத்த பாராட்டு விழா, போன்ற முக்கியமான விடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
சிங் : வணக்கம் கலைஞர்ஜி
கலைஞர் : உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன் அழைத்துவிட்டீர்கள்ஜீ, இதுவல்லவோ பண்பாடு.
சிங் :(மனதில்) சப்பா இந்த மனிசன் இனிப் பண்பாடு கலாச்சாரம் என அறுக்கபோகின்றது.
கலைஞர் : அழைத்த காரணம் என்னவோ. பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டுமா? இல்லை எனக்கு தலைநகரில் ஏதும் பாராட்டு விழாவா?
சிங் : (அவசரமாக) இல்லை இல்லை காமன்வெல்த் போட்டிகளை சீனாவைப் பார்த்து ஏதோ ஒரு உசாரில் நடத்துவோம் என தொடங்கினால் பாபர் மசூதி பிரச்சனையை விட இது பெரிய்ய பிரச்சனையாகிவிட்டது. அதுதான் உங்களிடம் ஒரு உதவி.
கலைஞர் : உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்கள் ஜீ.
சிங் : நம்ம அரசால் காமன்வெல்த் நடத்து அளவிற்க்கு பணம் இல்லை, இருந்த பணத்தையும் ஊழல் செய்துவிட்டார்கள், பத்திரிகைகள் எல்லாம் இது காமன் வெல்த்தா இல்லை காங்கிரஸ் வெல்த் கேமா என கிண்டல் செய்கின்றது. உங்கள் பேரன் கலாநிதியை காமன் வெல்த்தை ஸ்பொன்சர் செய்யச் சொல்லுவீர்களா?
கலைஞர் : இது சின்ன விடயம் இதனை நீங்களே செய்யலாமே? இடையில் நான் ஏன்?
சிங் : இல்லை ஜீ நீங்கள் அழைத்தால் அவர்கள் இதயம் இனிக்கும்.
இதனை மன்மோகன் சிங் கூறீயவுடன் கலைஞரின் கண்கள் உடனே பனித்தன.
கலைஞர் : உங்களுக்காக இல்லாவிடிலும் என் நண்பர் இந்திராகாந்தியின் மருமகள் சோனியாஜிக்காக நான் இதனைச் செய்கின்றேன் என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
காமன் வெல்த் கேமை தாமே நடத்தும் சந்தோஷத்தில் எந்திரன் பரபரப்புடன் சன் குழும அலுவலகம் அதகளப்பட்டத்து. கலாநிதி, தயாநிதி, ஷங்கர்,வைரமுத்து, ஷக்சேனா என பலர் எப்படி காமன் வெல்த்தை எப்படி சிறப்பாக செய்வது என தீவிர டிஸ்கசனில் இருந்தார்கள்.
தயாநிதி : எந்திரன் இசை வெளியீட்டை எப்படி மலேசியாவில் நடத்தினமோ அதேபோல் காமன் வெல்த் போட்டி தொடக்க விழாவை சந்திரனில் நடத்துவோம்.
வைரமுத்து : பூமாலையில் தொடங்கிய உங்கள் பயணம் சந்திரன் வரை செல்லும் என்பது நான் அறிவேன் ஒரு தமிழனாக எமக்கு இது பெருமை.
ஷங்கர் : ரகுமானின் தீம் பாடல் ஏற்கனவே பிரபலமானதால் அதனை நாம் நடிகர்களை வைத்து படம் எடுத்து காமன் வெல்த்தில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.
கலாநிதி : இல்லை ஷங்கர் இது விளையாட்டுப்போட்டி அதனாலை நடிகர்களை வைத்து எடுத்தால் மூளையுள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். சோ டோணி, சச்சின், சானியா போன்றவர்களை நடிகர்களுடன் இணைத்து நடிக்க வைத்துவிடலாம்,
ஷக்சேனா : சூப்பர் ஐடியா நான் இப்பவே அனைவருக்கும் கோல் போடுகின்றேன்.
நீங்கள் கால் போடமுன்னரே நான் வந்திட்டேன் எனக் கூறியபடி நடிகர் கருணாசும் டிஸ்கசனில் நுழைகின்றார்.
கலாநிதி : ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்,
ஷங்கர் : ஸ்ரேடியத்தை நம்ம தோட்டாதரணி செட்டாகவே போட்டுவிடுவார் , ஸ்ரேடியம் புதிதாக கட்டுவதை விட செலவு கொஞ்சம் அதிகமாகும்.
தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.
கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்.
ஷக்சேனா : ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்தின் போதும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக சன் பிக்சர்ஸ் வழங்கும் 100 மீற்றர் ஓட்டம், குத்துச் சண்டை என விளம்பரப்படுத்தவேண்டும்.
ஷங்கர் :சியர் லீடர்சாக நம்ம நமீதா, அசின், திரிஷா என அனைவரையும் ஆடவிடலாம்.
கலாநிதி : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என்ற வரிகள் இந்த நிகழ்வில் தான் நிஜமாகும்.
கலாநிதி : மைதானத்தைச் சுற்றி உள்ள விளம்பரப் பலகைகள் அனைத்திலும் எங்கள் தயாரிப்புகளான திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போன்ற மொக்கைக்ப் படங்களின் போஸ்டர்களை வைக்கவேண்டும்.
வைரமுத்து : வாவ் இதுதான் வியாபார யுக்தி, அப்படியே அந்தப் படங்களை ஆங்கிலத்தில் டப் செய்தால் இன்னமும் விளம்பரம் பெருகும்.
ஷக்சேனா : (மனதில்) அந்த மொக்கைகளை ஓட்ட நாம் பட்ட கஸ்டம் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது.
தயாநிதி : அப்படியென்றால் தங்கம் எல்லாம் நமக்குத் தான்.
ஷங்கர் : எனக்குப் புரியவில்லை.
தயாநிதி : அந்தப் படங்களைப் பார்க்கும் வெளிநாட்டினர் போட்டியும் வேண்டாம் ஒரு பதக்கமும் வேண்டாம் என தங்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.
அனைவரும் அவரை கொல்லுவது போல் பார்த்தார்கள்.
இந்த விடயம் இப்படியே ரெட் ஜெயின்ட், கிளவுட் நைன் போன்ற தமிழ்ப் பட நிறுவனங்களுக்குப் பரவ அவர்களும் பரபரப்பாக தமக்குத் தான் போட்டிகளை நடத்தும் உரிமை வேண்டும் என கலைஞருக்கு போன் போடுகின்றார்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் பம்பல், மொக்கை, விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2010
அரசியல்
கடந்த சில நாட்களாக தர்மபுரி பஸ் எரிப்புப் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தங்களின் தலைவி மேல் வைத்திருக்கும் அதீத அடிமைத்தனத்தில் அவர்கள் செய்த இந்த கொடுங்கோலுக்கு அரேபிய நாட்டுத் தண்டனைகள் தான் சரியானது. அப்பாவி மாணவிகளை கதறக் கதறக் தீக்கிரையாக்கிவர்களை இப்படியான கொலைச் செயலைச் செய்யத்தூண்டிய அரசியல்வாதிகளையும் கண்டிக்கவேண்டும் அல்லது தண்டனை கொடுக்கவேண்டும் ஆனாலும் எய்தவன் ஏதோ ஒரு நாட்டில் சுகமாக ஓய்வெடுக்க அம்புகள் மட்டுமே தூக்கில்.
தூக்குத் தண்டனை என்பது பெரியதொரு தண்டனைதான். அதே நேரம் இந்தக் குற்றவாளிகள் மிருகங்களை விடமிகக் கேவலமாக நடந்துகொண்டபடியால் இவர்களுக்கு தூக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும். அதே நேரம் மதுரை தினகரன் சம்பவ குற்றவாளிகளுக்கும் தூக்கு கொடுக்கவேண்டும். கண்கள் பனித்து இதயம் இனித்ததால் அந்த சம்பவம் விரைவில் மறக்கப்பட்டுவிடும். நம்ம உலக நாயகன் விருமாண்டியில் சொன்னது போல் மன்னிப்பவன் பெரிய மனிதன் என்ற கருத்து இந்த இரு சம்பவம் செய்தவர்களுக்கும் செய்யத் தூண்டியவர்களுக்கும் பொருந்தாது.
கிரிக்கெட்
இங்கிலாந்தில் இவ்வளவு நாளும் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகளை கடந்த ஞாயிறுமுதல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டன. எல்லாப் புகழும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கே சேரும். இளம் வீரர்கள் முகமட் அமீரும் அசீப்பும் ஸ்பொட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிகொண்ட பாகிஸ்தான் அணி இப்போ சல்மான் பட் அமீரின் கைங்கரியத்தால் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கின்றது. மஜீர் மஜீட் என்ற லண்டன் வாழ் தொழிலதிபரே இந்த சூதாட்டத்தின் சூத்திரதாரி என ஸ்கொலண்ட்யார்ட் போலிஸார் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
அதே நேரம் அடுத்து வரும் பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 போட்டிகளையும் ஒருநாள் போட்டிகளையும் ரத்துச் செய்து தங்களுக்கு பணத்தை திரும்பத் தரும்படி இங்கிலாந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். எது எப்படியோ சில நாட்களுக்கு பாகீஸ்தான் கிரிக்கெட்டை வைத்து பத்திரிகைக கல்லா கட்டுவது நிச்சயம்.
அத்துடன் ஐபிஎல் புகழ மோடியும் சொந்தமாக விமானம் வாங்கியதாக கலைஞர் செய்திகளில் காட்டினார்கள். விளையாட்டு இப்போ வியாபாரமாக மாறிவிட்டது. நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் எம்மைப் போன்ற அப்பாவி ரசிகர்கர்கள் தான் பாவம்.
ஷேன் வாட்சனுடனும் சில சூதாட்டவாதிகள் தொடர்புகொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இப்படியே போனால் இனி நானும் கிரிக்கெட் விளையாடலாம். காரணம் எப்படியும் போடுகின்ற போல் நோ போல் தான். எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.
சினிமா
எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான். கிளிமஞ்சதாரோபாடல் மிகவும் பிடித்துவிட்டது சின்மயின் ஐஸ்கிறீம் குரல் ஐஸ்வர்யா ராஜை அப்படியே படம் போட்டுக் காட்டுகின்றது. புதியமனிதாவில் பாடும் நிலா பாலா இளையவர்களுடன் போட்டி போடுகின்றார். இசைப்புயல் எந்திரன் பாடல்களில் இசையை இன்னொரு வடிவத்தில் கொடுத்திருக்கின்றார். இந்தப் பாடல்களில் புதியவகையான ஒரு இசை ஒலிகள் தெறிக்கின்றன. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ தெரியவில்லை இசைக் கோலங்கள் மேற்கத்தைய சாயலில் இருகின்றது. எப்போ படம் வரும் உலக அழகியும் சூப்பர் ஸ்டாரும் எப்படி இந்தப் பாடல்களுக்கு ஆடி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது.
எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் விவேக்கின் சில கொமெண்டுகள் மேடை நாகரிகத்துக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. ரஜனியின் பேச்சு மட்டும் வழக்கம் போல் கலக்கல். தமிழ்நாட்டு முதல்வர் ஏன் இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்? ஏன் இந்த ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் செய்யவில்லை போன்ற சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவிலை.
ஷங்கரின் பிரமாண்டமும் ரகுமானின் இசையும் ஐஸ்வர்யா ராயின் அழகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் படைத்தை எப்படியும் வெற்றி ஆக்கும், அதே நேரம் சன் குழுமத்தின் படம் என்பதால் ஓவர் விளம்பரம் ஆபத்தாகவும் அமையலாம்,
சின்னத் திரை :
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் எதோ ஒரு சீசனில் ஈழத்து மைந்தர்கள் பிரேம் கோபாலும் பிரேமினியும் முதல் பரிசைப் பெற்றார்கள். பிரேம் கோபாலின் கடின உழைப்பு அவருக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி பரசைக் கொடுக்காவிட்டாலும் ஜோடி நம்பர் ஒன்னில் விட்டதைப் பிடித்துவிட்டார்.உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி ஈழத்தில் நடந்த குண்டுவெடிப்பை தத்ரூபமாக நிகழ்த்தி பலரின் பாராட்டைப் பெற்றவர் இம்முறையும் ஈழத்துய்ரத்தை மீண்டும் நிகழ்த்தினார். அதன் காணொளி கீழே:
இளவரசி டயனா :
நேற்று முந்தினம் இளவரசி டயானாவின் நினைவுதினம் கென்சிங்டன் கார்டனில் நினைவு கூரப்பட்டிருந்தது, அதே நேரம் சைனாவில் உள்ள ஷென்சன் விமான நிலையத்தில் டயனாவின் அரைகுறை ஆடைகளுடனான ஒரு விளம்பரம் உள்ளாடை ஒன்றுக்கு விளம்பரப்படுத்தியிருந்தது. அத்துடன் அந்த விளம்பரத்தில் "Feel the Romance of British Royality" என்ற வாசகமும் இருந்தது. டயானா போன்ற ஒரு பிரபலத்தை இறந்தபின்னரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்தும் சீன உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான "ஜெலசி இன்டர்னெசலின் மேல் இதுவரை எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.இது பற்றி அவரது கணவர் இளவரசர் சாள்ஸ்சும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறந்தபின்னரும் சர்ச்சைகளின் நாயகியாகிவிட்டார் இளவரசி டயானா.
எனக்குப் பிடித்த பாடல் :
கமல் இசைஞானி கூட்டணியில் அருண்மொழி சித்ராவின் குரலில் சூரசங்காரம் படத்தில் இடம் பெற்ற மெஹா ஹிட் பாடல். பாடல் ஹிட்டுக்கு நிரோஷாவின் கவர்ச்சியான அழகும் ஒரு காரணமாகும். கறுப்பானாலும் களையான அழகி நிரோஷாவுக்கு நல்ல படங்கள் கிடைத்தும் ஏனொ கோடாம்பக்கத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை. அந்த நாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நிரோஷாவின் பாடல். இசைஞானியின் இசையும் கலைஞானியும் நடிப்பும் இந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்க வைக்கும்,
சின்ன சந்தேகம் :
பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை? ஓ அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி.
எழுதியது வந்தியத்தேவன் at 23 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், விளையாட்டு
