கோஷ்டி பார்த்த கதை

எங்கட ஊரிலை திருவிழா தொடங்கினால் கடவுளைக் கும்பிடுகிறமோ இல்லையோ ஐந்தாம் திருவிழாவுக்கு ஆற்றை கோஷ்டி, இந்தமுறையும் எட்டாம் திருவிழா எழும்புமோ? என்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழும்.

கோஷ்டி என்றால் இசைக்குழு. இந்தப்பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. எங்கட காலத்திலை யாழில் பிரபலமான கோஷ்டிகள் ராஜன், சாந்தன், அருணா, யாழோசை கண்ணன், சப்தஸ்வரா போன்றவை. முன்னைய காலத்தில் கண்ணன் கோஷ்டி என்ற எழுச்சி இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் குழு பிரபலம்.

பொதுவாக இந்த ஆடி மாதத்தில் எங்கட பக்கத்திலை மூன்று கோயில்களில் திருவிழா நடக்கும் அல்வாய் முத்துமாரி அம்மன், வதிரி பூவற்கரைப் பிள்ளையார், மற்றது கரணவாய் மூத்தவிநாயகர் கோயில். அதனாலை எங்கட பாடு ஒரே கொண்டாட்டம் தான்.

கோயில் திருவிழா தொடங்கினால் கோஷ்டி பிடிப்பது என்பது சில திருவிழாக்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். இந்த இந்த திருவிழாக்களுக்கு கட்டாயம் கோஷ்டி நடக்கும் என அடித்துச் சொல்லலாம். பகலில் திருவிழா என்று இறைவனை வணங்கி களைத்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்த நிகழ்வாக இதனை நான் கருதுகின்றேன். சில ஏன் இந்த டாம்பீகச் செலவுகள் என்பார்கள். ஆனாலும் இதனால் இன்னொரு சாராருக்கு வருமானம் கிடைக்கின்றது என்ற உண்மையையும் மறுக்ககூடாது.

ஆனாலும் கோஷ்டியை மட்டும் தனித்து நடத்தமாட்டார்கள். இரவுத் திருவிழா முடிந்தபின்னர் ஒரு 8 மணியளவில் சமயச் சொற்பொழிவு நடைபெறும். கம்பன் கழக பேச்சாளர்கள் அவர்கள் இல்லையென்றால் ஊரில் உள்ள சமய அறிவு உள்ள பெரிசுகளை வைத்து இதனை நடத்துவார்கள். ஒரு சில குஞ்சுகுருமன்களும், பெரியவர்களும் பொறுமையாக இருந்து கேட்பார்கள். அதுமுடிய நாதஸ்வர தவில் கச்சேரி. பஞ்சாபிகேசன் குழுவினர், தவில் மேதை தட்சணாமூர்த்தியின் பிள்ளைகளான உதயசங்கர், ஞானசங்கர் குழுவினர், இணுவில் சின்னராசா குழுவினர் எனப் பலர் இதனை நிகழ்த்துவார்கள். சில இடங்களில் இரண்டு மூன்று கூட்டுச் சேர்ந்து வாசிப்பார்கள். ஒருமுறை மூத்த விநாயகர் கோவில் எட்டாம் திருவிழாவுக்கு பத்துக்கூட்டு மேளம், குழல். முன்னுக்கு இருந்து கேட்டவர்களுக்கு காது கிழிந்துருக்கும். எப்படியும் இவர்கள் ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிப்பார்கள்.

அதற்க்குப் பிறகு சிலவேளை பட்டிமன்றம் அல்லது வில்லுப்பாட்டு நடக்கும். பட்டிமன்றம் கம்பன் கழகக் குழுக்கள், கம்பன் கழகத்துக்கு நேரமில்லையென்றால் உள்ளூர் பேச்சாளர்கள். உள்ளூர் பேச்சாளர்களில் நவம் மாஸ்டர், நடராசா மாஸ்டர் இருவரும் சரியான பேமஸ். என்னவொன்று இருவரும் எதிர் எதிர் அணியில் இருந்தால் சிலவேளை பெரிய சண்டைகளே வரும். நானும் ஒரு சில மேடைகள் ஏறினேன் ஆனால் பெரும்பாலும் இவர்களது தலைப்புகள் பாரதம், இராமாயணம் என இருப்பதால் மெல்லக்கழண்டுகொண்டுவிட்டேன்.

வில்லுப்பாட்டுக்கு நல்லூர் ஸ்ரீதேவியும், சின்னமணி குழுவினரும் மிகவும் பிரபலம், அதிலும் ஸ்ரீதேவி அவர்கள் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டில் நடத்தும் போது பெண் குரலில் எல்லாம் கதைத்துப் பாடி நல்ல கைதட்டுப் பெறுவார்.

இதெல்லாம் முடிய கோஷ்டி தொடங்கும். கோஷ்டிகாரர்கள் தங்களை ஆயத்தப்படுத்த எப்படியும் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் அந்த இடையிலை சிலவேளைகளில் நல்ல நித்திரை கொண்டு எழும்புகிறது வழக்கம். எப்படியும் நித்திரையாகி இருக்கிறவர்களை மணிக்குரல் ஷண் அவர்களின் கணீர் குரல் எழுப்பிவிடும். ராஜன் கோஷ்டிக்கு அவர் தான் அறிவிப்பாளர்.

ஒவ்வொரு வாத்தியமாக அறிமுகப்படுத்திவிட்டு கடைசியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்கள் மணிக்குரல் ஷண் என்பார் உடனே ராஜனின் பிரதான கீபோர்ட்டுடன் ஒரு ரம்ஸ் இசை வரும் அது அவர்களின் ரேட்மார்க் மியூசிக்.

எந்தக்கோயில் என்டாலும் முதலில் பிள்ளையார் பாட்டுத்தான் பெரும்பாலும் "பிள்ளையார் சுழிபோட்டு" என்ற பாடலுடனேயே ஆரம்ப்பிபார்கள். பிறகு முருகன் கோயில் என்றால் முருகன் பாடல், அம்மன் கோயில் என்றால் அம்மன் பாடல் என ஒரு சில பக்திப்பாடல்கள் பாடுவார்கள். பின்னர் தாயக எழுச்சிப்பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சினிமாப்பாடல்கள் பாடுவார்கள். ஸ்டெனிஸ் சிவானந்தன், பார்வதி சிவபாதம் போன்றவர்கள் பிரபல பாடகர்கள். பலரின் பெயர்கள் ஞாபகம் இல்லை.

எப்படியும் கோஷ்டி முடிய விடிஞ்சுபோம். பிறகு அவசரமாக குளிச்சிட்டு பள்ளிக்கு போய் நித்திரை கொள்ளவேண்டியதுதான். சிலவேளை அடுத்த நாள் இன்னொரு கோஷ்டி இருக்கும். எப்படியும் பத்து நாள் திருவிழாவில் ஒரு ஐந்து முறையாவது இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

சில இடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கோஷ்டி நட‌க்கும். கோயில் வடக்கு வீதியில் ராஜன் கோஷ்டி, தெற்கு வீதியில் சாந்தன் கோஷ்டி. அங்காலை கொஞ்சம் தள்ளி ரோட்டிலை அருணா என விளாசித்தள்ளுவார்கள்.

திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது.

திருவிழாப்பார்க்கும் போது கச்சான்(மணிலாக் கொட்டை), சோளம், மஞ்சள் கடலை, கெளபி கரம் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு பார்க்கிறதும், லிங்கம் ஐஸ்கிறீம் வானில் சாமத்திலை அல்லது விடியப்புறத்திலை கோன் வாங்கிச் சாப்பிடுகிறதும் ஒரு சுகானுபவங்கள், மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்.

கடைசியாக நான் 2003ல் கோஷ்டி பார்த்தது இன்னும் இல்லை.

பின்குறிப்பு : ஆடி பிறந்தாளே ஊர்களில் திருவிழா தொடங்கிவிடும். திருவிழாவுக்கு போகமுடியாமல் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளறவே ஈழத்துமுற்றத்தில் எழுதிய இந்தப் பதிவை மீண்டும் தந்திருக்கின்றேன்,

12 கருத்துக் கூறியவர்கள்:

அசால்ட் ஆறுமுகம் சொல்வது:

//திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது.
//

உண்மைதான்.. அப்பிடியே நிலவையும் பார்த்துக்கொண்டு...

வடலியூரான் சொல்வது:

ம்ம்ம் எங்களுக்கும் கோஸ்டி பாத்த் ஒரு பீலிங்காத் தான் போட்டுது..சின்னமணி, சிறீதேவியின்ரை வில்லுப் பட்டிலிஐ நல்ல முசுப்பாத்தியள் அடிப்பாங்கள்.கேட்டு விழுந்து,விழுந்து சிரிக்கலாம்.இப்ப முத்துமாரி, மூத்தாநாயகர் எல்லாம் கொடியேறீற்றுது எண்டு நினைக்கிறன். கோஸ்டி எண்டால் அது மூத்த நாயகர் தான். போட்டிக்கு ஒரு திரு விழ்ழவிலேயே 4, 5 கோஸ்டி நடக்குமாம். கோஸ்டி நடத்திறதுக்கு இடமில்லாமல் வெங்காயத் தறைக்கையும் அங்கை இங்கை எண்டு எல்லா இடமும் வைப்பாங்களாம்.மணிக்குரல் சற்குணம் அண்ணையும் ஞாபகப் படுத்திப் போட்டியள். ஆளை இப்பவும் கண்டனான்.ஆள் இருக்குது..ம்ம் அதோடை உந்த கோஸ்டி நடக்கேக்கை கறண்ட் நிண்டுதோ கச்சான் காரியளின்ரை கச்சானை சுளகோடை சாரத்துக்கை தூக்கிப் போட்டுக் கொண்டோடின பெடியளும் இருக்கிறாங்கள்

நிரூபன் சொல்வது:

பாஸ், ம்...அதெல்லாம் ஒரு காலம் என்று பெரு மூச்சு விடும் வண்ணம் பதிவில் நினைவுகளை மீட்டியிருக்கிறீங்க.
பிற்காலக் கோஷ்டிகளில்,
ராகம்ஸ்,
சாரங்கா,
இவையளும் யாழில் கலக்கின ஆட்கள்.
அதே போல, வன்னியில் கோஷ்டிகளை விட, காத்தவராயன் கூத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
யாழில் திருவிழா என்றால், சான்ஸே இல்லை. சும்மா, அந்த மாதிரிப் போட்டுத் தாக்குவாங்கள்.

கோஷ்டி பார்த்து விட்டு வரும் போது ரோட்டில் இருக்கும் பஸ் நிறுத்தற் பலகையினைத் அப்படியே பிடுங்கிக் கொண்டு போய் அடுத்த சந்தியில் வைப்பதுவும், ரியூசன் கொட்டிலுக்குள் போய் குசப்பு வேலைகள் செய்வதும் ஒரு காலத்தில் எம் குறும்புகளாக இருந்தது.

கார்த்தி சொல்வது:

ஆனால் இந்தக்காலத்தில இப்பிடியான ரசனைகள் இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருகின்றது!!!

வந்தியத்தேவன் சொல்வது:

//அசால்ட் ஆறுமுகம் said...
உண்மைதான்.. அப்பிடியே நிலவையும் பார்த்துக்கொண்டு...//

எந்த நிலவைச் சொல்றீங்க அசால்ட் அண்ணை?

வந்தியத்தேவன் சொல்வது:

வடலீ
ஹாஹா நாங்கள் செய்த குழப்படியள் போலவே நீங்களும் செய்திருக்கிறீயள். முத்துமாரி மூத்தவிநாயகர் இரண்டும் கொடியேறிவிட்டது. மூத்தவிநாயகரில் ஒருக்கால் ஒரே நேரத்தில் 4 கோஷ்டி பார்த்த அனுபவம் இருக்கு. கோயில் முன்றலில் ராஜன், அங்கேளே ஒரு வைரபகோயிலடியில் சாந்தன், வெங்காயக் காணி ஒன்றுக்குள் அருணா இன்னொரு தறையில் ஏதோவொரு கோஷ்டி என ஒரு எட்டாம் திருவிழா களை கட்டியது.

நீங்கள் கச்சான் ஆச்சிகளையும் விட்டுவைக்கல்லையோ. சில ஆச்சிகள் உசாராக கைவிளக்கோடைதான் கச்சானே விற்பார்கள். அந்தகாலம் இனி வராது.

வந்தியத்தேவன் சொல்வது:

நிரூ
ராகம்ஸ் பார்த்ததாக ஞாபகம் இல்லை ஆனால் சாரங்கா பார்த்திருக்கின்றேன். காத்தவராயன் கூத்தும் ஒருமுறை யாழில் பார்த்திருக்கின்றேன். நாங்களும் படலையைக் கழட்டிய ஆட்கள் தான். ஆனால் நீங்கள் சும்மா ஆளா பேராதானையில் செய்த லீலைகளைத் தான் வாசித்தோமோ.

வந்தியத்தேவன் சொல்வது:

//கார்த்தி said...
ஆனால் இந்தக்காலத்தில இப்பிடியான ரசனைகள் இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருகின்றது!!!//

ஆமாம் கார்த்தி இன்றைய இளைஞர்கள் (அப்போ நாம் இன்றைய இளைஞர் இல்லையா எனக் கேட்கப்படாது) ஐபோன், பைக் , நெட் என இன்னொரு சூழலில் மாட்டுப்பட்டுவிட்டார்கள்.

அசால்ட் ஆறுமுகம் சொல்வது:

//எந்த நிலவைச் சொல்றீங்க அசால்ட் அண்ணை?//

வேற எந்த நிலவை வானத்தில தெரியுறத மட்டுந்தான்....

Unknown சொல்வது:

ஊர் நினைவுகள்,இப்பவும் மூத்த விநயாகர் கோவில் ரெண்டு கோஷ்டி என நினைக்கிறேன்.லைட் என்ஜின் ஓட அனைத்து இடமும் கூட நானும் சில வேளை போவேன். சாரங்கா சிறப்பாக உள்ளது எனது பார்வையில், ராகம்ஸும் சரி. இந்திர விழா பற்றிய பதிவு வருமா?

ஷஹன்ஷா சொல்வது:

/////திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது/////.

ஆஹா ஆஹா....எப்படி அனுபவிச்சு எழுதி இருக்கிறீங்க...

நிலவை பார்த்து கொண்டு துாங்குறவங்களில நானும் ஒருத்தனுங்கோ.....!!

aotspr சொல்வது:

"திருவிழா தொடங்கினால் அப்படி தான் இருக்கும்".
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com