கறுப்பு வரலாறும் நேற்றைய கல்லறையும்

கறுப்பு வரலாறும் நேற்றைய கல்லறையும்
வாழ்த்துக்கள் மோகன் உங்கள் இரு நாவல்களும் நேற்றிரவு ஒரே மூச்சில் வாசித்தேன். வாசித்தபின்னர் என் கருத்தை அல்லது விமர்சனத்தைக் கூறுவதுதான் உங்களைமாதிரி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என்பதால் என் விமர்சனத்தை தொடர்கிறேன். அதற்குமுன் நான் பாடசாலை நாட்களில் விமர்சன உரையாற்றியுள்ளேனே தவிர இதுவரை பெரிசாக விமர்சனம் எதுவும் செய்ததில்லை. இது ஒரு நுனிப்புல் மேய்ச்சலே தவிர முழுமையான விமர்சனம் அல்ல.

மோகனின் முதலாவது துப்பறியும் அல்லது மர்மக் கதையான கறுப்புவரலாறு ஆனது களப்பிறர் பற்றிய ஒரு ஆய்வுடன் ஆரம்பமாகிறது. சில சரித்திர எழுத்தாளர்களின் சில கதைகளில் களப்பிறர் என்ற இனத்தைப் பற்றி தெரிந்திருக்கிறேனே ஒழிய எனக்கு மோகனின் நாவலில்தான் அவர்கள் பற்றிய சில விடயங்கள் தெரியவந்தது. இவர்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர் பழனியப்பன் அவர்களும் அவருடன் வரலாற்று மாணவர்களான ரவி, ரகு , சங்கர், சவீதா மற்றும் நீலவேணி ஆகியோர் முனைகிறார்கள். இவர்கள் சந்திக்கும் இடர்கள் ஆபத்துக்கள் என்பவற்றை கொஞ்சம் காதலுடன் கதாசிரியர் தனக்கே உரிய பாணியில் சொல்லியுள்ளார்.

பல இடங்களில் மோகன் களப்பிறர் பற்றிய தகவல்களை விரிவாக கல்கி சாண்டில்யன் வரலாற்றுப் பாத்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தருவதுபோல் தந்திருப்பதால் படிப்பவர்களுக்கும் களப்பிறர் பற்றி அறியும் ஆவலுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்ற திகிலுடன் சொல்லியுருப்பது சுவையாகவும் அதே நேரம் எடுத்த புத்தகத்தை சாரி மின் புத்தகத்தை வைக்க மனமில்லாமல் வாசிக்கதூண்டுகிறது. இது மோகனது எழுத்துக்கு கிடைத்த பெற்றியாகும். ஏனென்றால் ஒரு எழுத்தாளனின் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய வாசகனைத் தூண்டுவதுடன் அவரது அடுத்த படைப்புக்களையும் வாசிக்க தூண்டும்.

அத்துடன் ஒரு அத்தியாயம் முடியும்போது ஒரு திகில் வசனத்துடன் முடிப்பது தேர்ந்த எழுத்தாளருக்கே உரியது. அந்தவகையில் மோகன் தன்னை ஒரு தேர்ந்த எழுத்தாளராக நீரூபித்துள்ளார்.உதாரணமாக "கறுப்பு பட ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில்" என்று ஒரு அத்தியாயத்தை முடிப்பவர், அடுத்த அத்தியாயத்தில் சங்கர் "என்னுடைய கறுப்பு சட்டையைமறக்காமல் எடுத்து வையுங்க என்றான்" இப்படி அவர் கறுப்பு என்பதை பல இடங்களில் உலாவ விடுகிறார்.

ஒரு இடத்தில் மோகன் குறிப்பிடுகிறார் வரலாற்று பொக்கிசங்களை அழித்து அந்த வரலாற்றை பலர் மறைக்கப்பார்க்கிறார்கள் என அது நூற்றுக்கு நூறு உண்மையானது. இலங்கையில் தென் தமிழீழத்திலுள்ள திருகோணமலை மட்டக்களப்பு போன்றவற்றை தற்போது சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் தமது பிரதேசமாக மாற்றுவதற்காக அங்கே புத்த கோவில்களையும் புத்தர் சிலைகளையும் வைத்து ஆக்கிரமிக்கிறார்கள். அத்துடன் தமிழர்களின் எச்சங்களை இவர்கள் அழிக்கிறார்கள். இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ரமேசும் ஜெயாவும் கதைக்கின்ற 22ஆம் அத்தியாயத்தில் ஹிட்லர் சதாம் போன்றோர் எப்படி வரலாறுகளைக் கொளுத்தினார்கள் என்பதற்கு எம் நாடும் இன்னொரு உதாரணம். இங்கேயும் வரலாற்றைத் திரிவுபடுத்துகிறார்கள்.

இக்கதையில் வரும் ரமேஸ் என்ற பாத்திரமும் அவரது ஒரு சில வரிக்காதலும் இறுதியாக அவர் யார் குற்றாவாளி என கண்டுபிடிக்கும் இடங்களும் அருமையாக இருக்கிறது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத முடிவை கிளைமாக்சில் சொல்லியிருப்பது பாரட்டத்தக்கது. பல நேரம் வாசகர்களால் யார் குற்றவாளி என்பதை கதையின் ஓட்டத்தை வைத்து கண்டுபிடிக்கமுடியும் ஆனால் இக்கதையில் அது கஸ்டமானது.

மோகனின் எழுத்துக்கள் சுஜாதா பாணியில் இருப்பதாக கூறுவதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது. ஆனால் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது கஸ்டம். பல இடங்களில் மோகன் சுஜாதாவைவிட்டு விலகியுள்ளார். குறிப்பாக இவரின் கதைகளுக்கு பிரப்ல ஓவியர் ஜெயராஜ் ஒவியம் வரையமுடியாது காரணம் இவரின் இந்தக்கதையில் வரும் நாயகிகள் சுஜாதா ,ராஜேஸ்குமார், சுபா, பிகேபி நாயகிகள் போல் வராமல் சாதாரண பெண்களாக மோகன் காட்டியிருப்பது இயல்பாக உள்ளது. அத்துடன் அவர்கள் போல் கதாநாயகிகளின் அங்க அசைவுகளை வர்ணிக்காமல் சைவமாகவே கதையை கொண்டுசெல்கிறார். துப்பறியும் கதைகளில் பெண்களை வர்ணிப்பதற்கே சிலர் இருக்கிறார்கள். அவர்கள்போல் இல்லாமல் மோகன் வித்தியாசமான முறையில் எழுதுவது நன்றாக இருக்கிறது.

ஒரு விமர்சனத்தில் அக்கதையின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டவேண்டியது விமர்சகரின் கடமை ஆனால் இக்கதையில் என் அறிவுக்கு எட்டியவரை பெரிதாக எந்தக் குறைகளும். தென்படவில்லை. ரமேசின் நடவடிக்கைகள் ஒரு சினிமாப் பாடலில் கதாநாயகன் பணக்காரன் ஆவதுபோல் பாஸ்ட்டாக இருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது ஆனால் இது கதை ஓட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதபடியால் பரவாயில்லை.


அனைவராலும் படித்து ரசிக்கவேண்டிய ஒரு நாவல் கறுப்புவரலாறு.

மோகனிடம் ஒரு கேள்வி களப்பிறர் பற்றிய விபரங்களை எப்படி எடுத்தீர்கள்? அத்துடன் அவர்கள் பற்றிய மேலும் விபரங்கள் தரமுடியுமா? குறிப்பாக இறுதியாக அவர்கள் என்ன ஆனார்கள்? எந்தக்காலத்தில் வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தரமுடியுமா?

மோகனின் அடுத்த நாவலான நேற்றைய கல்லறையும் ஒரு புதையல் பற்றிய குறுநாவலாகும். இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனின் பார்வையில் அல்லது அவனின் நோக்கில்(தமிழில் இதனை முன்னிலையோ படர்க்கையோ எனச் சொல்வார்கள் ஞாபகம் இல்லை) சொல்கிறார். அதனால் கதாநாயகனின் பெயர் இக்கதையில் இல்லை.

மிகமுக்கியமாக இக்கதையில் பெண் பாத்திரம் என யாரும் இல்லை. கதாநாயகன் ஒரு மெஸ் நடத்தும் ஐயங்கார் ஏசுநாயகம் என மூன்று முக்கிய பாத்திரங்களை வைத்து கதையை கொண்டுசெல்கிறார்.
இக்கதையின் முதல் அத்தியாயத்தில் என்னைப்போன்ற இளைஞர்களிம்(?) முக்கிய பிரச்சனையான கடைச்சாப்பாட்டை அனுபவித்து எழுதியுள்ளார். அதே நேரம் இதில் வரும் கதாநாயகன் ஒரு ஹைடெக் ஆசாமியாவதால் லாப்டாப் சாப்ட்வேர் போன்றவை கதையில் வருவதாலும் நாமே கதாநாயகன் என்ற எண்ணம் வருகிறது.

அதேவேளை இன்றைய நாட்களில் இடுகாட்டுக்கு பக்கத்தில் வீடுகள் கட்டி மக்கள் குடியேறும் நகரமயமாக்களையும் அப்படியே தொட்டுச்சென்றுள்ளார். மேலும் இக்கதையின் ஓட்டம் வாசகனை இடையில் எந்த வேலையும் செய்யமுடியாமல் அப்படியே கதையுடன் ஒன்றச் செய்வது பராட்டுக்குரியது.


இறுதியாக இக்கதையின் முடிவு ஒரு ஹைக்கூ கவிதை மாதிரியான யாரும் எதிர்ப்பார்க்கமுடியாத முடிவாகும்.

இக்கதைகளைப் படிக்க இத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள் http://etheni.com

மழைக்கால நினைவுகள்

மழைக்கால நினைவுகள்
என் நினைவுகளை 15 வருடங்களுக்கு பின்னால் பின்னோக்கிப்பார்க்கிறேன் கார்த்திகை மார்கழி மாதம் என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான் அதற்கு இரண்டு காரணம் ஒன்று பாடசாலை விடுமுறை மார்கழியில் வரும் மற்றது மாரிமழை.

எப்படியும் எங்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும்போதே மழையும் ஆரம்பித்துவிடும் அதிலும் எமது பாடசாலை அலைவந்து தாலாட்டும் கடலுக்கு அருகில் இருப்பதால் மழை நாட்களில் கடல் ஒரு பெண்னைப்போல் தோற்றமளிக்கு அதுதான் அழகான ஆபத்து. நீலக்கடல் கருமையாக இருப்பதுடன் வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் இணையும் கடல் எமது கடல் ஆகையாலும் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த நாட்களில் தான் நீந்தப்போவது.

பரீட்சை நாள் என்றால் பாடசாலை பரீட்சை முடிந்ததும் விட்டுவிடுவார்கள் சிலவேளை காலை 8 மணிக்கு பரீட்சை என்றால் எப்படியும் 10 மணி 11 மணிக்கு விட்டுவிடும் நாம் உடனே வீடு செல்வதில்லை யாரும் படிக்கும் மாணவர்கள் வீடு சென்று அடுத்த நாள் பரிட்சைக்கு தம்மை தயார்ப் படுத்துவார்கள் நாமே கடலில் சென்று குளித்து கும்மாளவிடுவது தான் எம் தலையாய கடமை அடுத்த நாளைப் பற்றி அன்றே நாம் சிந்திப்பதில்லை. 2 மணிமட்டும் கடலில் கும்மாளமிட்டுவிட்டு ஈரகாற்சட்டைகளுடன் அப்படியே வீடு செல்வது வழியில் அந்தக் காற்சட்டை உலர்ந்துவிடும்.

ஒரு முறை யாரோ ஒரு எட்டப்பன் வீட்டில் காட்டிக்கொடுத்துவிட்டான் நான் எவ்வளவு மறுத்தும் அம்மா நம்பவில்லை இறுதியாக அவர் என் கையை நக்கிப்பார்த்தார் உப்புக்கரித்தது வேர்வை உப்பல்ல கடல் உப்பு அப்புறம் என்ன செம திருவிழா தான் . நண்பர்களுக்கு இந்த விடயத்தை சொன்னதபின் தான் அவர்கள் ஒரு ஐடியா கொடுத்தார்கள் வீட்டுக்குபோகுமுன் ஏதாவது நல்ல தண்ணி உள்ள கிணற்றில் குளித்துவிட்டு செல்லும்படி அதன் பின் வரும் வழியில் உள்ள அம்மன் கோவில் கிணற்றில் நீராடிவிட்டுத்தான் வீடு செல்வது.

கடலில் தினமும் குளித்தால் உடம்பு கறுக்கும் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதின் பின்னர் என்னை மாதிரி சிவலைப் பொடியள் கடலில் குளிக்க செல்வது குறைவு . கடலில்ற்குப் பதில் கோயில் கேனிகள் (தெப்பக்குளம்).

யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பது அந்த நாளில் எமக்கு கடவுளை வணங்கப் பயன்பட்டதோ இல்லையோ சைட் அடிக்கவும் கேணிகளில் குளித்து கும்மாளமிடவும் நன்றாகப் பயன்பட்டது. மழை நாட்களில் கோயில் குளங்கள் நிரம்பி வழியும் எப்படியும் ஒரு 15 அல்லது 20 அடிகளுக்கு தண்ணிர் நிரம்பியிருக்கும். அங்கே டைவ் அடிப்பது முதல் நீரின் அடியில் சுழியோடி மண் எடுப்பது என பல வித்தைகள் செய்வோம். சில்வேளை மதிய உணவு உண்ண வீடு செல்வது கூட இல்லை பக்கத்து காணிகளில் உள்ள மாமரங்கள் தென்னமரங்கள் எல்லாம் எம் கட்டுப்பாட்டில் மாங்காய் தேங்காய் தான் எம் உணவு. சில பெரிய பொடியள் மட்டும் கொஞ்சம் கள்ளும் சிகரெட்டும் குடிப்பார்கள் (அவர்கள் வேறை கேங்). நாம் அவர்கள் சுருள் சுருளாக புகைவிடுவதை வேடிக்கை பார்ப்போம்.

எமது பாடசாலைக்கு அருகில் உள்ள அம்மன் கோவில் கேணி, இன்னொரு வீரபத்திரர் கோவில் கேணி சிலவேளை மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் குளமும் கேணியும் எங்கள் மழைக்கால வாசஸ்தலங்கள். மழை நாட்களில் எந்த விளையாட்டும் விளையாடமுடியாது ஆதாலம் எமக்கு தெரிந்த ஒரே பொழுதுபோக்கு இதுதான். சில தடவைகள் வீட்டில் எச்சரித்தார்கள் பின்னர் அவர்களே தண்ணி தெளித்து போனால் போகட்டும் போடா என்று விட்டுவிட்டார்கள் .

இன்றும் இந்த நினைவுகள் மனதைவிட்டு அகலாதவை. இனி எப்ப வரும் அந்த வசந்தகாலம்.

மனித நேயம் வளர்ப்போம்

கடந்த சில காலங்களாக கருத்துக்களங்களிலும் வலைப்பூக்களிலும் ஒரு சிலர் ஜாதி வெறிகொண்டு அலைகின்றனர். அதிலும் அனேகர் இளைஞர் என்பது வேதனைக்குரியது. சென்ற தலைமுறைகளில் இருந்த இந்தப் பிரச்சனையை இன்னும் சிலர் தூக்கிப்பிடிப்பது ஏன் என்று புரியவில்லை. யாரோ ஒருவன் சில தேவைகளுக்காக அன்று எழுதியவையை ஏன் நாம் இப்பவும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக இந்த களங்கம் தமிழர்களிடையே மட்டும் பெரிதாக இருப்பது வருந்தத்தக்கது.

உலகத்துக்கு திருகுறள் என்ற பொதுமறை தந்தவர்கள் நாம். வீரத்தையும் காதலையும் மிக அழகாக புறநானூறூ அகநானூறு என்று தந்தவர்கள் நாம், தொல்காப்பியம் எனும் அழியாப்புகழ் பெற்ற வாழ்க்கைனெறிகளைக் கூறும் நூலையும் தந்தவர்கள் நாம் , இப்படி பல விழுமியங்களை உடைய நாங்கள் இன்றும் ஜாதி என்னும் நச்சு செடியை வளர்ப்பது முறையா?

இந்த ஜாதியைப் பற்றிக் கதைக்கும் எல்லா இடங்களிலும் ஏன் பிராமணர்களை மட்டும் தாக்குகிறிர்கள்? சிலர் பிராமணர்களையும் யூதர்களையும் ஒப்பிட்டுக்கூட எழுதுகிறார்கள். இதுவரை எந்தப்பிராமணராவது வன்முறையில் இறங்கியிருக்கிறார்களா? அவர்களின் மூதாதையர் தவறு செய்திருந்தால் ஏன் தற்போதைய சந்ததியை தூற்றுகிறீர்கள்?

இத்தகைய நிலையை இளைஞர்களாகிய நாம் ஏன் மாற்ற முடியாது? சுவாமி விவேகானந்தர் தனக்கு நல்ல 100 இளைஞர்களை கொடுத்தால் உலகையே மற்றூவேன் என்றார் ஏன் நாம் சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களாகி இந்த உலகை திருத்த முடியாது? முதலில் இந்த ஜாதி வெறியை மாற்றுவோம்.

இதற்கு என்ன செய்யவேண்டும்?

இனிவரும் காலங்களில் ஜாதி மத இன வெறி பிடித்த வலைப்பூக்களை தவிர்ப்போம்

ஜாதி பற்றிய திரெட்டுகளை ஆரம்பித்தால் அந்த தலைப்புகளை தவிர்ப்பதுடன் அதை எழுதுவரையும் புறக்கணிப்போம்.

கருத்துக் களங்களாயின் அவற்றை நடத்துபவர்கள் ஜாதி பற்றி எழுதுபவர்களை இடை நிறுத்தலாம்.
ஜாதி பற்றி எழுதும் பத்திரிகைகள் புத்தகங்கள் சஞ்சிகைகள் என்பவற்றை வாங்குவதை நிறுத்துவோம்.

ஜாதிக் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பதை முற்றாக தவிர்த்தல்.(இது சிலவேளைகளில் அவர்கள் சேரும் கூட்டணிக்கட்சி நல்லதாயின் மறைமுகமாக அவர்களை ஆதரிப்பதுபோல் வரும்).

இப்படி பல சொல்லிகொண்டிருக்கலாம். ஆனால் இவை நடமுறைக்கு சாத்தியமா?

இந்த கட்டுரைக்கே நான் ஜாதியை ஒழிப்போம் வாருங்கள் என தலைப்பிடாமல் மனித நேயம் வளர்ப்போம் என தலைப்பிட்டதே தலையங்கத்தில் கூட ஜாதி வரக்கூடாது என்பதற்காகத்தான்.

வாருங்கள் நண்பர்களே ஒன்றாக வடம் பிடிப்போம். ஜாதி என்ற அரக்கனை ஒழிப்போம். இளைஞர் சக்தியை உலகிற்கு உணர்த்துவோம்.