சங்கரின் சிவாஜி

சங்கரின் சிவாஜி

கதை:
எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை.

ரஜனி :
மீண்டும் ஒரு முறை ரஜனி தான் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்ரார் என ஸ்டைலாலும் மேக்கப்பாலும் நிரூபித்திருக்கிறார். ரஜனியின் இளமையான தோற்றம் சூப்பர் ஸ்ரார் நாற்காலியைக் குறிவைக்கும் இன்றைய ஜெராக்ஸ் சூப்பர் ஸ்ரார்களான விஜய் அஜித் சிம்பு போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பது வெளிப்படை உண்மை. ரஜனியிடம் இந்தப் படத்திலும் நடிப்பு மிஸ்சிங். முள்ளும் மலரும் தில்லு முல்லு ரஜனியை என்றுதான் பார்ப்போமோ. வழமைபோல் தன் காமெடியாலும் ஸ்டைலாலும் பைட்டாலும் கவர்ந்திருக்கிறார். ரஜனியைப் பொறுத்தவரை இந்தப்படம் பாட்ஷாவிற்க்கு அடுத்தபடமாக தன் வாழ்நாளில் கூறலாம்.

அதே நேரம் இந்தக் கதைக்கு ரஜனியைத் தவிர வேறு யார் நடித்திருந்தலும் படம் அவ்வளவாக ஓடியிருக்கமுடியாது.

ஸ்ரேயா :
ஒரு சாதாரண தமிழ்ப் பட கதாநாயகியாக பாடல்களுக்கு மட்டும் வந்துபோகிறார்ர். குளோசபில் முகத்தைக் காட்டுகிறபோது திரிஷா அசின் பரவாயில்லை போல் தெரிகிறது ( ஆனால் திரிஷாவினால் வாஜி வாஜி பாடலுக்கு ஸ்ரேயாபோல் கவர்ச்சி காட்டியிருக்க முடியாது). இவரை ஒரு அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக காட்டுகிறார்கள் ஆனால் வீட்டில் தாவணியுடன் இருக்கும் போதும் தொப்புள் காட்டுகிறார். பாடல்களில் தொப்புள் இடுப்பு இன்ன பிறவற்றால் ஸ்ரேயா தன் பணியைத் திறம்படச் செய்துள்ளார்.

திரிஷா நமீதா போன்றவர்களின் கவர்ச்சிக்கு ஆப்பு வைப்பது உறுதி.

விவேக் :
ரஜனியுடன் கூடவே இருக்கிறார்(பாடல் காட்சிகளில் மட்டும் மிஸ்சிங்). சுஜாதாவின் வசந்த் பாத்திரம் போல் பெண்களைப் பார்த்து ஜொள்ளு பிளஸ் லொள்ளு பண்ணுகிறார். மற்றும்படி எந்த காமெடியும் மனதில் நிற்கவில்லை. அந்த நேரம் மட்டும் சிரிப்பு வருகிறது. விவேக்கிடம் ஒரு கேள்வி : உங்கள் சொல்லியடிப்பேன் எப்போ வெளிவரும்?

சுமன் :
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அசத்தலான வில்லன் கிடைத்துள்ளார். உதட்டில் புன்சிரிப்புடன் இவர் செய்யும் வில்லத்தனங்கள் சூப்பராக இருக்கிறது. அதிலும் இவர் பெட்டிக்கடையில் பஜ்ஜி சாப்பிடும்போது முகத்தில் காட்டும் ரியாக்சன்கள் அமர்க்களமாக இருக்கிறது. ஆனால் பாத்திரப்படைப்புத் தான் கொஞ்சம் நெருடுகிறது. ஒரு தனிமனிதனால் ஒரு அரசாங்கத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? தமிழகச் சகோதரர்களிடம் இருந்து பதில் எதிர்பார்க்கிறேன்?

ஏ ஆர் ரகுமான் :
பாடல்களில் ரகுமான் தான் இருப்பை மீண்டும் காட்டியுள்ளார். சகல பாடல்களும் அருமையாக இருக்கிறது. ஆனால் பின்னணி இசையில் அவ்வளவாக சிரத்தை எடுக்கவில்லைபோல தெரிகிறது(படையப்பா பின்னணி இசை மாதிரி இல்லை). மிகமுக்கிய விடயம் டைட்டில் சூப்பர் ஸ்ரார் இசையும் கிராபிஸ்சும் ரஜனியின் அடுத்த(?) படங்களில் இனி உபயோகிக்கப்படும்.

சுஜாதா :
வழக்கம் போல் தன் இளமையான எழுத்துக்களால் வசீகரித்துள்ளார். இறக்கும் நாள் தெரிந்திருந்தால் வாழ்க்கை நரகமாகும் என்ற வசனங்கள் அவரின் ஆளுமையை காட்டுகின்றன. இம்முறை பாய்ஸ் மாதிரி எந்த இரட்டை அர்த்தவசனமும் இல்லை. அதே நேறம் ஜாதகம் ஜோதிடம் பற்றிய காட்சிகளில் குழப்புகிறார். ரஜனியின் ஜாதகத்தில் ரச்சுப் பொருத்தம் சரியில்லாதபடியால் ரஜனி இறப்பார் என்கிறார்கள் ஆனால் படத்தில் ரஜனி இறந்து மறுபடியும் வருகிறார். ஒரு வகையில் ஜோதிடம் உண்மையானதுபோல் தெரிகிறது இன்னொரு பக்கம் ஜோதிடம் பொய் போல் தெரிகிறது. இறுதியாக சுஜாதா என்ன சொல்ல வருகிறார் என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். அடுத்த கற்றதும் பெற்றதும் கட்டுரையில் எழுதுங்கள்.

பீட்டர் ஹெயின் :
வாவ் அந்த ரைவின் கார் ஷேசிங் காட்சியிள் அவரின் உழைப்பு தெரிகிறது. இசை வளாகத்தில் அவரின் சண்டையுடன் காமெடியும் கலந்து ஜாக்கிசான் படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் சண்டையிலும் சோடைபோகவில்லை. ஆனால் ரஜனி சுமனிடம் முதல் முறை பணம் வாங்கும் அந்த சண்டையில் கிட்டத்தட்ட 50 பேரை ரஜனி சமாளிப்பது நம்பும்படி இல்லை ( சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா).

இயக்குனர் சங்கர் :
என்னைப் போன்ற சங்கர் ரசிகர்களுக்கு இயக்குனர் சங்கர் ஏமாற்றம் அளித்துள்ளார். முதல்ப்பாதி சுந்தர். சி படம் பார்த்த உணர்வு. பாடல்களில் மட்டும் சங்கரும் அவருன் பிரமாண்டமும் தெரிகிறது. இறுதியில் மொட்டைபோட்ட ரஜனி காட்சிகளில் சங்கரின் பாணி தென்படுகிறது. பல இடங்களில் அடுத்தது இதுதான் என ஊகிக்க வைப்பதும் இவரது திரைக்கதை பழைய மொந்தையில் புதிய கள் போல் தென்படுகிறது. எம் எம் எஸ்சை பயன்படுத்தி ரஜனி தப்பும் காட்சியில் புதிய தொழில்னுட்பம் பயன்படுதும் இடங்களில் சங்கரிசம். ஆனாலும் ஒரு நிமிடம் கூட போரடிக்காத திரைக்கதையில் சங்கரின் அனுபவம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆணாலும் தியேட்டரை விட்டு வெளிவரும்போது இந்தியன் ஒரு நாள் முதல்வனும் அந்நியனும் மனதில் வந்துபோகிறார்கள். அடுத்த படம் என்ன யாருடன் ?

வீணடிக்கப்பட்டவர்கள் :
சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, மணிவண்ணன், ரகுவரன். அத்துடன் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த். எந்த ஒரு இடத்திலும் காமெராவில் புதிதாக ஏதும் காட்சிகளோ பிரேம்களோ இல்லை. பாடல்காட்சிகளில் மட்டும் பிரமாண்ட செட்டுகளை வைத்து விளையாடியிருக்கிறார்கள். வழமையான சங்கர் படத்தில் வருவதுபோல் கமெரா படம் பிடிக்கவில்லை.

பிடித்தவை :
1. ரஜனிகாந்த் ஓரிடத்திலும் சிகரெட் பிடியாதது.( அன்புமணி இம்முறையும் வாழ்த்துவாரா?).
2. வழமையான ரஜனி படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் காட்சிகள் வரும் இம்முறை அவை இல்லை.
3. பாடல்காட்சிகளும் அவைபடமாக்கப்பட்ட விதமும்.

பிடிக்காதவை :
1. ஸ்ரேயா.
2. ஒரு பாடலில் ஆடிய நயன் தாரா. அது நயன் தாரா என பக்கத்து சீட்டுக்காரர் சொல்லித்தான் தெரிந்தது. சிம்புவின் இழப்பு அவரை இப்படி வாட்டியுள்ளது. பேசாமல் நமீதாவை அந்தப்பாடலில் ஆடவிட்டிருக்கலாம்.

மனதில் எழும் சில கேள்விகள் :
1. இலவச கல்வி பற்றி பேசும் ரஜனி தன் ஆஸ்ரம் ஸ்கூலில் பணம் வாங்குகிறாரே ஏன்?
2 கறுப்புபணத்துக்கு எதிரான இந்தப் படத்தில் ரஜனி எவ்வளவு பணம் கறுப்பாக வாங்கினார்?
3. கறுப்புபணத்துக்கு எதிரான இந்தப் படத்துக்கு பிளாக்கில் ரிக்கெட் விற்பது நியாயமா?
4. இயக்குனர் சங்கரிடம் ஒரு கேள்வி? நீங்கள் லஞ்சத்துக்கு எதிராக எடுத்த இந்தியனும் ஊழல் செய்கின்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த முதல்வனும் மக்களிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? இந்தியன் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது ( சிவாஜியில் நிறைய காட்சிகளில் வெளிப்படையாக லஞ்சம் வாங்குகிறார்கள்).
5. இந்நாள் முன்னால் முதல்வர்கள் இந்தப்படம் பார்த்துள்ளார்கள். அவர்களது ஆட்சியில் நடக்கும் இந்த கொடுமைகள் அவர்களைப் பாதித்திருக்குமா? இல்லையா?

இறுதியாக எத்தனை நாட்டின் அவலங்களைச் சாடும் படங்கள் வந்தாலும் அரசியல்வாதிகள் திருந்தமாட்டார்கள். இந்தியா இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு போதும் பொருளாதார வளர்ச்சியடையாது.

மொத்தத்தில் சிவாஜி ஒரு பொழுதுபோக்கிற்கான சிறந்தபடம்.

5 கருத்துக் கூறியவர்கள்:

Mayooran சொல்வது:
This comment has been removed by the author.
Mayooran சொல்வது:
This comment has been removed by the author.
Mayooran சொல்வது:

எங்கள் தலைவி ஸ்ரேயா பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது

நாஞ்சில் பிரதாப் சொல்வது:

விமர்சனம்...நன்றாக இருந்தது...படம் பார்க்கவேண்டும் போல்......................................................................................இல்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

// விமர்சனம்...நன்றாக இருந்தது...படம் பார்க்கவேண்டும் போல்//.
நன்றி பிரதாப் மற்றும் வித்யா