அண்ணா நூற்றாண்டு
சில நாட்களுக்கு முன்னர் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் கலைஞரில் நேரலை செய்தார்கள். தமிழக முதல்வர் சுற்றம் சூழ கலந்துகொண்டார். கவிதை பாடிய கவிஞர்கள் அனைவரும் கவிதைக்கு பொய் அழகு என்பதை அப்பட்டமாக நிரூபித்தார்கள். கவிதைப் பித்தன், ஆண்டாள் பிரியதர்சினி, யுகபாரதி, வைரமுத்து என அனைவரும் அண்ணாவை மறந்து தம்பி புகழ் பாடினார்கள்.
ஆண்டாள் பிரியதர்சினி நாஸ்திகரான முதல்வரை தமிழ்க் கடவுள் முருகனுடன் ஒப்பிட்டது அபத்தம் என்றால், கவிப்பேரரசு அண்ணாப் போற்றுகின்றேன் என மகாத்மா காந்தியை கீழிறக்கிவிட்டார். காந்தி படம் உள்ள நோட்டு கிழியும் ஆனால் அண்ணா படம் உள்ள நாணயம் கிழியாது என்றார். ஒருவரை ஏற்றுவதற்காக இன்னொருவரை கீழே இறக்ககூடாது என்பது கவிப்பேரரசுவுக்குத் தெரியவில்லை.
இவர்களின் புகழ்களை முதல்வர் ரசிக்கவில்லை என்பது அவரின் முகபாவனைகளில் தெரிந்தது. அத்துடன் சபையில் பலரும் கேட்டுத்தான் கை தட்டுவாங்கினார்கள்.
தமிழக அரசு விருதுகள்
வழக்கம் போல் தமிழக அரசு விருதுகள் பலரைத் திருப்திப் படுத்த கொடுத்திருக்கின்றார்கள். இப்போ தான் தெரிகிறது கமல் படம் வெளியாகும் ஆண்டில் ரஜனி படம் வெளியாகாது, ரஜனி படம் வெளியாகும் ஆண்டில் கமல் படம் வெளியாகாது, ஏனென்றால் அப்படி வந்தால் யாருக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பது என தமிழக அரசின் விருதுக் குழு குழம்பிப்போகும்.
தசாவதாரம் , சிவாஜியைவிட மொழி, சுப்பிரமணியபுரம், பூ, காஞ்சிவரம் எல்லாம் மிகவும் சிறந்த படங்கள் ஏனோ விருது கிடைக்கவில்லை. காஞ்சிவரத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஆனால் தமிழக அரசு விருது கிடைக்கவில்லை.
இந்த விருதுகளை விட நம்ம வலையுலக விருதுகள் எவ்வளவோ மேல் போல் தெரிகின்றது. விருதுகளும் சன் டீவி டொப் 10 நிகழ்ச்சிபோல் மாறிவருவது கண்டனத்துக்குரியது.
அப்பாவிக் கோவிந்தனின் கேள்வி: கலைஞருக்கு உளியின் ஓசைக்காக கிடைத்த சிறந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.
கிரிக்கெட்
தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான பல முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பலமான தென்னாபிரிக்கா, இலங்கை, அணிகள் அரையிறுதிக்கு செல்லமுடியவில்லை. இந்தியாவில் தலைவிதி சில மணித்தியாலங்களில் நிர்ணயிக்கப்படும்.
ஸ்மித், ஸ்ரோஸ் விவகாரமும் பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்திய அணி தற்சமயம் தோற்றால் ரசிகர்கள் மீண்டும் கல்லெறிவார்களா? வீடு உடைப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தற்போதைய நிலவரத்தை நம்ம தொலைக்காட்சி நடுவர்கள் பாணியில் சொன்னால்
New Zealand Selected, South Africa Eliminated and India Waiting List.
ஹாட் அண்ட் சவர் சூப் 30-09-09
எழுதியது வந்தியத்தேவன் at 31 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கிரிக்கெட், சூப், விருதுகள்
அதிரடி சனத், ஆக்ரோச முரளி, மாயாஜால மெண்டிஸ்
முதல் போட்டியில் தரப்படத்தலில் முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்காவை டில்ஷானின் சதத்தாலும் சங்ககாரா, ஜெயவர்த்தனாவின் அரைச் சதத்தாலும் வெற்றிகொண்ட இலங்கை இப்போ அரையிறுதிக்கு கூடப் போகமுடியாமல் வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.
முதல் போட்டியில் பலமான தென்னாபிரிக்காவை இலகுவாக வென்ற இலங்கை அணி பின்னர் தங்கள் குழுவிலையே பலம் குறைந்தது என பலராலும் கூறப்பட்ட இங்கிலாந்து அணியிடம் முன்வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் வாங்கிக் கட்டினார்.
இந்தப் போட்டியில் முதல் போட்டியில் சதமடித்த டில்ஷான் 2 ஜெயசூரியா டக் அடித்தார், சங்ககாரா 1 ஜெயவர்த்தனா 9 என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க கண்டம்பி, மத்யூஸ், சமரவீரா ஆகியோரின் ஆட்டத்தால் ஓரளவு மதிப்பான எண்ணிக்கையை எட்டினார்கள்.
பந்துவீச்சில் அமத்திப்போடுவார்கள் என எதிர்பார்த்தால் அதுவும் சரிவரவில்லை. முரளிதரன் இந்த தொடரில் எடுத்த ஒரே ஒரு விக்கெட்டுடன் 60 ஓட்டங்களையும் வாரி வ்ழங்கியிருந்தார். ஏனோ ஜெயசூரியாவை சங்ககாரா பந்துவீச அழைக்கவில்லை. அழைத்திருந்தால் சிலவேளைகளில் நியூசிலாந்திற்க்கு எதிராக நடந்தபோட்டியில் 3 விக்கெட் விழுத்தியது போல் நடந்திருக்கலாம்.
பின்னர் நியூசிலாந்துடன் கட்டாயம் வெல்லவேண்டிய போட்டியில் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் வள்ளலாக மாற நியூசிலாந்து 315 ஓட்டங்களை குவித்தது. மாலிங்க ஒரு விக்கெட்டுக்கு 85 ஓட்டங்களையும் துஷாரா, குலசேகரா இருவரும் 7 ஓவர்களில் முறையே 50, 52 ஓட்டங்களையும் கொடுத்தனர். ஜெயசூரியா மட்டும் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். மெண்டிசுக்குப் பதிலாக முரளியை எடுத்திருந்தால் விக்கெட் எடுக்கின்றாரோ இல்லையோ துடுப்பெடுத்து விசுக்கியிருப்பார்.
இலங்கை அணியின் தங்கள் சின்னச் சின்ன தவறுகளால் நேற்றைய நியூசிலாந்து, இங்கிலாந்து போட்டிவரை காத்திருக்கவேண்டிவந்தது. நீயூசிலாந்து இங்கிலாந்தை வென்றதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரத் தயாரிகிவிட்டார்கள்.
முதல் போட்டியில் முதலாம் இட அணியான தென்னாபிரிக்காவை வென்று அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்திய இலங்கை இன்று வெறுங்கையுடன் இலங்கை வருகின்றனர். இவர்களின் பின்னால் பெரிய அண்ணன் இந்தியாவும் கூடவரலாம்.
இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட, பந்துவீச்சு பெறுபேறுகள்.
துடுப்பாட்டம்
வீரர் ஓட்டங்கள் சராசரி
ஜெயவர்த்தனா 163 54.33
டில்ஷான் 149 49.66
திலான் சமரவீர 84 28.00
குலசேகரா 75 75.00
கண்டம்பி 70 23.33
மத்யூஸ் 69 23.00
சங்ககாரா 66 22.00
ஜெயசூரியா 34 11.33
பந்துவீச்சு
வீரர் விக்கெட்டுகள் சராசரி ஓட்டங்கள்
மத்யூஸ் 4 25.50 102
மாலிங்க 4 42.75 171
ஜெயசூரியா 3 13.00 39
மெண்டிஸ் 3 38.00 114
குலசேகரா 3 46.00 138
முரளிதரன் 1 106.00 106
இலங்கை, தென்னாபிரிக்கா, இந்தியா (பெரும்பாலும் வெளியேறும்) போன்ற அணிகள் இல்லாமல் எப்படி ஐசிசி மக்களை இறுதிப்போட்டியில் கவரப்போகின்றது என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், விளையாட்டு
காதல் விஞ்ஞானபூர்வமானதா?
"கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான் " எனப் பாடுவதும், " உன் பெயரை உச்சரித்தேன் இனித்தது" எனக் கவிதை எழுதுவதும் எல்லாம் இந்தக் காதல் செய்யும் லீலைகள்.
காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதா? இல்லை விஞ்ஞானரீதியாக உடல் சம்பந்தப்பட்டதா?
விஞ்ஞானிகள் காதல் என்பது உடலில் சுரக்கும் சுரப்பிகள் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். ஆண்ட்ரோஜன்ஸ், ஈஸ்ட்ரோஜன்ஸ், டெஸ்டோஸ்டரான் போன்ற சுரப்பிகள் தான் காதலுக்கு காரணம் என்கின்றார்கள்.
நியூயோர்க் ஸ்டேட் சைக்கியாட்ரிக் இன்ஸ்ரியூட் இது பற்றி ஆராய்ச்சி செய்தது. இவர்கள் காதல் வயப்பட்ட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்களை இந்த ஆராய்ச்சியில் பரிசோதித்து காதல் என்கின்றது எங்கள் உடலில் ஏற்படும் ஒருவிதமான இரசாயண(கெமிஸ்ரி) மாற்றமே ஒழிய வேறு ஒன்றுமில்லை எனக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். காதலர்களுடைய சிறுநீர் மாதிரியை பரிசோதித்தபோது அனைவருக்கும் ஃபினைல் எதில் அமின் (Phenyl ethan Amin) அதிகமாக இருப்பதை அறிந்தார்கள்.
எனக்கு ஒரு சந்தேகம் ஒரு உணவைப் பார்த்ததும் எப்படி நாக்கு உமிழ்நீர்ச் சுரப்பிகளால் ஊறுகின்றதோ, அதேபோல் ஒரு பெண்ணைப் பார்த்து ஆணுக்கும், ஆணைப் பார்த்துப் பெண்ணுக்கும் ஈஸ்ட்ரோஜனும் ஆன்ட்ரோஜனும் ஊறுகின்றது. ஆனால் சிலருக்குள் ஏன் காதல் ஏற்படுவதில்லை. சிலவேளைகளில் இந்த சுரப்பிகளின் அளவு குறைவாக இருப்பதனாலா? அப்படியென்றால் அவற்றை மருந்தாக உடலில் ஏற்றி சுரப்பை அதிகரித்து ஒருவரை ஒருவர் காதலிக்க முடியாதா? மருத்துவர்கள், மற்றும் இது தொடர்பான அறிவுடையவர்கள் விளக்கம் தாருங்கள்.
இந்த விடயத்தில் சுரப்பிகளை விட அவர்களது மனம் ஆதிக்கம் செலுத்துகின்றது என எனக்குப் படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
எங்கள் இரசாயனவியல் ஆசிரியர் காதலர்கள் நீர் போல இருக்கவேண்டும் என்பார். அதாவது ஐதரசன் மற்றும் ஒட்சிசன் இரண்டு மூலக்கூறுகளும் நீரில் இருப்பது போல் காதலர்களும் இணை பிரியாமல் இருக்கவேண்டுமாம். இதைச் சொன்னவர் இன்னொரு கருத்தும் சொன்னார், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் இதனை அழகாக விளக்கியிருக்கின்றாராம்.
"பைங்குவளைக் கார்மலரால்" என்ற திருவெம்பாவைப் பாடலில் "எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில்" என சிவனையும் சக்தியையும் போன்ற நீரிணை என்கிறார். ஆகவே அவரும் ஐதரசன், ஒட்சிசன் கோட்பாட்டை அறிந்திருக்கின்றார் என விளக்கவும் கொடுத்தார். இது அவர் காதலர்கள் பற்றிக் கொடுத்த விளக்கம், ஆனால் காதல் பற்றி அவரிடம் கேட்க அவரும் ஹோர்மோன்கள் சம்பந்தப்பட்ட விடயம் என பதிலளித்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா? என எழுதியிருந்தேன். அதில் சில பந்திகளை உங்களுக்காக மீள் பதிவு செய்கின்றேன். என்னுடைய சந்தேகங்களுக்கு தகுந்த பதில் கிடைத்தால் போதும்.
ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை.
கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போன் வரும் என அன்றே கம்பன் அறிந்துவிட்டான் போலும் (பல கவிஞர்கள் தீர்க்கதரிசிகள்).
காதலுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக இருவேறு பாலினர் ஏற்படும் ஒருவகையான ஹோமோன்களின் மாற்றமே காதல். வேறு சிலர் ஒரேமாதிரியான அலைவரிசை உடைய இருவரிடம் ஏற்படும் மாற்றம் காதல் என்கின்றனர். விஞ்ஞான ரீதியாக எடுத்துகொண்டால் காதல் உணர்வுபூர்வமானது அதாவது உணர்ச்சிவசப்படுவது அல்லது வசப்படுத்துவது.
அடுத்து இன்றைய நாளில் பல காதல்கள் வெறும் இனக்கவர்ச்சி என பலராலும் சிலாகிக்கப் படுகிறது. அதிலும் உண்மையில்லாமல் இல்லை வெறும் கவர்ச்சிக்காக அல்லது காதலிக்காமல் விட்டால் தமது ஸ்டேஸ்டட் ஏதோ குறைந்துவிடும் என எண்ணி தீர யோசிக்காமல் காதல் வலையில் ஆண்களும் பெண்களும் பலர் உள்ளனர். இத்தகைய சமயங்களில் காதல் அறிவுபூர்வமானது என்ற கருத்து அடிபட்டுப்போகிறது.
அறிவுபூர்மான காதல் என்றால் என்ன? நீங்கள் காதலிக்கும் பெண்ணோ ஆணோ உங்களுக்கு ஏற்றவரா? உங்கள் எதிர்காலம் இவரினால் மேம்படுமா? உங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவா? விட்டுகொடுப்புகளுக்கு இடமிருக்கா? என பல வேறுபட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து அவை உங்களால் முடியும் என நினைத்தால் காதலிக்கலாம் இல்லாவிட்டால் காதலுக்கும் உங்களுக்கும் வெகு தூரம்.
பின் குறிப்பு : இந்தப் பதிவு என் 200ஆவது பதிவாக வரவேண்டியது. தமிழக அரசின் தீடிர் விருதுகளால் 201 ஆவது பதிவாக வருகின்றது. என் முதல் பதிவு தொடக்கம் இன்றைக்கு வரை என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
கலைஞர், கமல், ரஜனிக்கு தமிழகஅரசு விருதுகள்
2007 மற்றும் 2008ற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
2007
சிறந்த நடிகர் : ரஜனிகாந்த (சிவாஜி)
சிறந்த நடிகை : ஜோதிகா (மொழி)
சிறந்த நடிகர் சிறப்பு விருது : சத்தியராஜ்
சிறந்த நடிகை சிறப்பு விருது : பத்மப்ரியா
சிறந்த படம்
முதலாவது : சிவாஜி
இரண்டாவது : மொழி
மூன்றாவது : பள்ளிக்கூடம்
சிறந்த படம் சிறப்பு விருது : பெரியார்
வில்லன் : சுமன்
குணசித்திர நடிகர் : எம்.எஸ்.பாஸ்கர்
குணசித்திர நடிகை : அர்ச்சனா
இயக்குனர் : தங்கர்பச்சான்
இசையமைப்பாளர் : வித்தியாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஸ்ரீநிவாஸ்
பாடகி : சின்மயி
ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா
நகைச்சுவை நடிகர் : விவேக்
நகைச்சுவை நடிகை : கோவை சரளா
2008
சிறந்த நடிகர் : கமலஹாசன் (தசாவதாரம்)
சிறந்த நடிகை : சினேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த நடிகர் சிறப்பு விருது : சூரியா
சிறந்த நடிகை சிறப்பு விருது : திரிஷா
சிறந்த படம்
முதலாவது : தசாவதாரம்
இரண்டாவது : அபியும் நானும்
மூன்றாவது : சந்தோஷ் சுப்பிரமணியம்
சிறந்த படம் சிறப்பு விருது : மெய்ப்பொருள்
வில்லன் : ராஜேந்திரன்
குணசித்திர நடிகர் : பிரகாஸ்ராஜ்
குணசித்திர நடிகை : பூஜா
இயக்குனர் : ராதாமோகன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பாடகர் : பெள்ளிராஜ்
பாடகி : மஹதி
ஒளிப்பதிவாளர்: ஆர்தர் ஏ வில்சன்
நகைச்சுவை நடிகர் : வடிவேல்
நகைச்சுவை நடிகை : கோவை சரளா
உரையாடல் : மு.கருணாநிதி
செய்தி ஆதாரம் : சன் நியூஸ்
தமிழக விருதுகள் பற்றிக் கடந்த வருடம் நான் எழுதிய சின்னதொரு எதிர்வு கூறல் அதில் சில சரிவந்துள்ளன.
2008 தமிழக அரசு விருதுகள்
பின்குறிப்பு : சிலரின் விருதுகள் என்ன படம் என சன் செய்திகளில் அறிவிக்கப்படவில்லை, நீரவ் ஷா பில்லா, விவேக் குருவி என நினைக்கின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 15 கருத்துக் கூறியவர்கள்
வேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள்.
ரசனை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவர் மாறுபடும் ஒரு விடயம். இசையைப் பொறுத்தவரை எனக்கு இளையராஜா என்றால் உயிர் அதற்காக ரகுமானையோ யுவனையோ பிடிக்காது எனச் சொல்லமாட்டேன். எனக்கு கமல் பிடிக்கும் அதற்காக ரஜனி பிடிக்காது என்பதில்லை. இதே நேரம் இன்னொருவருக்கு ரஜனி பிடிக்கும் அல்லது விஜய் பிடிக்கும். ஆகவே ரசனையானது எம் விருப்பங்களே ஒழிய மற்றவர்களுக்காக எம்மை மாத்துவதில்லை.
அண்மைக்காலமாக வலையுலகில் சிலர் கருத்துகளை எதிர்க்கருத்துகளால் வெல்லமுடியாமால் அல்லது விவாதிக்கமுடியாமல் சில எழுந்தமானமான கருத்துகளைச் சொல்கின்றார்கள். யார் மீதும் யாரும் ரசனையையோ விருப்பத்தையோ திணிக்கமுடியாது.
சில நாட்களுக்கு முன்னர் நண்பர் லோஷன் விஜய் நடிச்சா தாங்கமாட்டோம் என வேட்டைக்காரனின் இசையை விமர்சித்திருந்தார். ஒருவரின் படத்தையோ, புத்தகத்தையோ அல்லது இசையை விமர்சிப்பது யாரும் செய்யலாம். அவரைப் பொறுத்தவரை வேட்டைகாரன் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அது அவரின் தனிப்பட்ட விடயம். ஆனால் அதற்காக சில விஜய் ரசிகர்கள் பொங்கி எழுந்து அவரை காண்டாக்கிவிட்டார்கள்.
ஒரு ஊடகவியலாளன் (அவர் ஊடகவியலாளர் அல்ல ஒலிபரப்பாளன்) நடுநிலைமையாகத் தான் விமர்சனம் செய்யவேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை. அத்துடன் அவர் இந்த விமர்சனத்தை தான் சார்ந்த வானொலியில் செய்யவில்லையே, தன் தனிப்பட்ட வலையில் தானே செய்தார்.
வலையில் எழுதும் லோஷன் வேறை, வானொலி அறிவிப்பாளர் லோஷன் வேறை என்பதை ஏனோ சில விளங்கிக்கொள்ளவில்லை. இன்னொரு நகைச்சுவையின் உச்சமாக லோஷன் பிரபல அறிவிப்பாளராக இருப்பதால் தான் அவருக்கு அதிக ஹிட் கிடைக்கிறது என கொமெடி பண்ணியிருந்தார்.
இலங்கை நேயர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கலாம் ஆனால் ஏனைய நாட்டு வலைவாசகர்களுக்கு அவரைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அத்துடன் அவர் வலை எழுத வந்த புதுசில் அவருடைய வலைக்கு பெரிதாக ஹிட் கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மற்றவர்கள் போல் வலையில் மெருகூட்டித் தான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றார்.
இதே லோஷன் தான் கந்தசாமியை சிறந்தபடம் என எழுதினார், அதே நேரம் கந்தசாமி பலரால் துவைத்து எடுக்கப்பட்ட படம், ஆனால் யாரும் அவரின் வலையில் போய் நீ ஹிட்டுக்காக இப்படி எழுதியிருக்கின்றாய் என பின்னூட்டம் இடவில்லை ஏனென்றால் அவரின் பார்வையில் அந்தப் படம் நல்ல படம் என் பார்வையில் அது நொந்தசாமி. இதற்கான காரணம் இருவரின் ரசனையும் மாறுபட்டதே ஒழிய வேறு காரணம் இல்லை. எனக்கும் விக்ரம் பிடிக்கும் அதற்காக அவரின் மொக்கைகளை எல்லாம் நல்லது என்பது தவறு.
ரஜனி, கமல் ரசிகர்களுக்கு இருக்கும் சகிப்புத் தன்மை ஏனோ விஜய் ரசிகர்ளுக்கு இல்லை. அவரின் அந்தப் பதிவிற்க்கு இன்னொருவர் விஜய் காங்கிரசில் சேர்வதனால் இலங்கைத் தமிழர்கள் காண்டாகிவிட்டார்கள் என கலக்கல் கொமெடி ட்விட்டரில் செய்திருந்தார். என்ன செய்வது இதெல்லாம் இவர்களின் அறியாமை. அதே நேரம் லோஷனை கிண்டல் செய்த அல்லது திட்டிய பெரும்பாலான பின்னூட்டங்களை இட்டவர்கள் சாட்சாத் இலங்கை விஜயய் ரசிகர்களே என்பது அவருக்குத் தெரியவில்லை என்ன கொடுமை சார்.
அத்துடன் ஒருவர் தன் தொழிலுக்கு சார்பாக விமர்சனம் செய்யவேண்டும் என்றால் அதைவிட கடைந்தெடுத்த முட்டாள் தனம் எதுவும் இல்லை. அப்படியென்றால் நண்பர் கேபிளார் திரைப்படங்களை கிழித்து தோரணம் கட்டுகின்ற ஒருவர் இத்தனைக்கும் அவர் இருக்கும் துறை சினிமாத் துறை ஆகவே அவர் திரைப்படங்கள அனைத்தையும் சூப்பர், கலக்கல், உலகத் தரம் எனப் புகழவேண்டும் ஆனால் அவர் அப்படிச் செய்வதில்லை ஏனென்றால் விமர்சனம் என்பது பார்ப்பவனின் கண்ணோட்டம்.
முதலில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளப் பழகுகுங்கள் பின்னர் மற்றவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாம்.
அடுத்தது நண்பர் கனககோபி மதத் திணிப்புகள் கெளரவமான வடிவில் என ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் அவர் அம்மா பகவான் என்பவரது படத்தை பாடசாலையில் சில ஆசிரியர்கள் திணிப்பதாக கூறியிருந்தார். அதற்க்கு நான் //இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள். // எனப் பின்னூட்டம் இட்டிருந்தேன்.
இதற்க்கு ஒரு அனானி (அவர் யார் எனக் கோபிக்குத் தெரியும்) இதற்கு சம்பந்தமில்லாமல் அரசியலை இழுத்திருந்தார். நீங்கள் அவரின் பக்தராக இருந்தால் அவர் செய்வது சரி என நிரூபியுங்கள் அதனைவிட்டு விட்டு விசர்க் கதைகள் சொல்வது படு முட்டாள்தனம்.
பின்னர் இன்னொருவர் மொக்கைப் பதிவர் கோபி கவனத்திற்க்கு? என அம்மா பகவானைப் பற்றி அவர் எழுதியது தப்பு என தன் கருத்தைச் சொல்லியிருந்தார். அது அவரின் தனிப்பட்ட கருத்து ஆனால் அதற்காக ஒருவரை மொக்கைப் பதிவர் எனக் கிண்டலடிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
மொக்கைப் பதிவு எழுதக்கூட அறிவே வேண்டும். மற்றவர்களைச் சிரிக்கவைப்பது என்பது மிகவும் கஸ்டமானவேலை என்பதை ஏனோ அவருக்குப் புரியவில்லை.
இதனைவிட அவர் அந்தப் பதிவில் தேவையில்லாமல் என்னையும் வம்புக்கு இழுத்திருந்தார். நான் கோபிக்கு பாராட்டுக்கொடுத்தது தப்பாம்? அவரைக் இப்படி எழுதாதே எனச் சொல்லியிருக்கவேண்டும் என சாரப் பட அவர் எழுதியிருந்தார்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு ஆனால் உந்த மனிதர்களை அதிலும் துறவறம் செய்கின்றோம் என மாதம் மாதம் தங்கள் திருமணத்தைக் கொண்டாடும் மனைவியுடன் இருக்கும் மனிதர்களை வணங்குவதில் நம்பிக்கை இல்லை.
எந்த கடவுளும் நான் தான் கடவுள் எனச் சொல்வதில்லை. அத்துடன் இவர்கள் தங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மேல் திணிப்பது கண்டிக்கத்தக்கது. அதனைத் தான் நான் கோபிக்கு பின்னூட்டி இருந்தேன்.
கோபியின் கருத்துக்கு எதிர்க்கருத்தை ஆதாரபூர்வமாகச் சொல்லியிருக்கலாம் அதனைவிட்டு விட்டு அவரின் மேல் தனிமனிதத் தாக்குதல் செய்வது எந்தவகையில் நியாயம்?
உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் யார் மீதும் திணிக்காதீர்கள். இது அம்மா பகவான் என்றால் என்ன விஜய என்றால் என்ன இளைய்ராஜா என்றால் என்ன எவருக்கும் பொருந்தும்.
எழுதியது வந்தியத்தேவன் at 25 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் பதிவர் வட்டம், விமர்சனம், வேட்டைக்காரன்
மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல்
நயந்தாராவைக் கண்ட இடத்தில் அடிப்பேன், பிரபுதேவா மனைவி, என் சகோதரிக்கு பிரகாஷ்ராஜ் துரோகம் இழைத்துவிட்டார், நடிகை டிஸ்கோ சாந்தி. அண்மையில் இணையங்களிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளியான செய்திகள் இவை.
ஏன் சில பெண்கள் அல்லது ஆண்கள் திருமணமான ஆணை அல்லது பெண்ணை விரும்புகின்றார்கள். இப்படியான விடயத்தை ஆங்கிலத்தில் Mate Poaching ('தகாமுறைத் துணைகவரல்') என்கின்றார்கள். அதாவது இன்னொருவரின் துணையை விரும்புவது.
பெரும்பாலான ஜோடிகளை பொதுவாக "எப்படி நீங்கள் சந்தித்தீர்கள்" எனக் கேட்டால் அவர்கள் அதீத ஆவலினாலும் தங்கள் ஆசைகளைக் கிளறியதாலும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டோம் என்பார்கள். அவர்களது முதல் சந்திப்பு பெரும்பாலும் அதீத , வழக்கத்துக்கு மாறான, தற்செயலான, அதிகம் கவர்ச்சியூட்டும் சந்திப்பாகத் தான் இருந்ததாக கூறுகின்றார்கள். முன்பின் அறிந்திருதாவர்களின் வசீகரமும், மயக்கும் ஆற்றலும் அவர்கள் மேல் காதல் கொள்ளவைத்துவிடும்.
இதனை டொக்டர் டேவி ஷிமிட் (Dr. David Schmitt, a psychology professor and researcher at Bradley University in Peoria) 'தகாமுறைத் துணைகவரல்'(Mate Poaching ) எனக் கூறுகின்றார். அதாவது வசீகரத்தன்மையால் இன்னொருவரின் துணை மீது ஏற்படு ஈர்ப்பு.
அண்மையில் அவர் 53 நாடுகளில் இருந்து 16000 நபர்களிடம் எடுத்த தகவல்களின் படி 18% மான திருமணமான ஆண்களும் 11% மான திருமணமான பெண்களும் தங்கள் துணைகளை விட்டுவிட்டு இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள்.
உளவியல் ரீதியாக சில நபர்கள் தாங்கள் தனிமையாகவும் பாதுகாப்பற்றிருப்பதாகவும் உணர்வதால் வஞ்சகமாகவும் நேர்மையற்ற முறையிலும் இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள் எனவும் கருதலாம்.
எது எப்படியிருப்பினும் அவரின் ஆராய்ச்சி இன்னொரு துணையை தகாதமுறையில் கவருதல் அவர்களின் பிரத்தியேக, தனக்கு அப்பாற்பட்ட விடயங்களின் நாட்டமுள்ள, மனதிற்கு ஒவ்வாத, மனசாட்சியற்ற, நேர்மையற்ற" விடயமாகும் என உறுதியாகக் கூறுகின்றார். அவர்கள் தங்களுக்குள் திறந்தமனதுடனும் இலகுவாகவும் பாலியல் சம்பந்தமான விடயங்களை கலந்துரையாட முடிவதாகவும் கூறுகின்றார். இது இரு பாலினத்திற்க்கும் பொருந்தும்.
இந்த ஆராய்ச்சியில் மதிப்புகள் அல்லது கோட்பாடுகளின் வீழ்ச்சி, குறைபாடான கட்டுப்பாடுகள், குறைந்தளவு இரக்க உணர்ச்சிகள் மற்றும் தன்னிலைப் படுத்தாமை(self-centered) போன்றவற்றால் 'தகாமுறைத் துணைகவரல்' தோன்றுவது அவதானிக்கப்பட்டது.
சட்டத்துக்கு மாறாக இருக்கும் இந்த உறவுகளால் " உன் அயலவனையும் உன்னைப்போல் " நேசி என்ற கோட்பாடு அற்றுப்போகின்றது. சமூகத்தின் அவர்கள் மேலான பார்வையும் நேர்மையற்றதாகிவிடுகிறது.
சிலர் இதனை சரியென விவாதிக்கலாம் ஏனென்றால், ஒருவரின் துணை அறிமுகம் இல்லாதவராக அல்லது பழகிய அனுபவமற்றவராக இருப்பதும் இருவரிற்கிடையில் மனஒற்றுமை இல்லாதிருப்பதும் மற்றவரை இன்னொரு துணையைச் தேடச் செய்யும் நிலைக்கு மாற்றிவிடும். ஆனாலும் சமூக, மத நல் ஒழுக்கங்களினால் பெரும்பாலோர் இந்த நிலைக்குச் செல்லாமல் சகிப்புத் தன்மையுடன் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 'தகாமுறைத் துணைகவரல்' ஈடுபடுபவர்கள் இந்த ஒழுக்கங்கள், கோட்பாடுகளை மதிக்காமல் தங்கள் இஸ்டத்திற்க்கு இருக்கின்றார்கள்.
கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகள் உளவியல் ரீதியாக ஒரு செயற்களத்தில் இருந்தே செயற்படுகின்றது. அதாவது இந்தக் கட்டுப்பாடுகள் "உங்கள் உடல், எண்ணங்கள், உணர்ச்சிகள், செயற்பாடுகள்" போன்ற செயற்களங்களில் செயல்படுகிறது. இது உங்களை உங்கள் சமூகத்தில் இருந்து உங்களைப் புறக்கணிக்கவும் காரணமாகின்றது. யாரும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடமுடியாவிட்டாலும் சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அத்துடன் இன்னொரு துணையை நாடுகின்றவர்கள் தங்கள் பாதுகாப்பு, நிரந்தரத் தன்மை போன்ற காரணிகளிலும் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் உங்கள் புதிய துணையின் பொறுப்புகளும் எதிர்காலத் திட்டங்களும் நிச்சயமற்றுப் போய்விடும். 'தகாமுறைத் துணைகவரல்' என்பது நிலையற்றது.
நீங்கள் இன்னொருவரின் துணையின் மேல் டேட்டிங் (இதன் தமிழ் அர்த்தம் என்ன?), ஈடுபாடு, கூடிவாழ்தல்(cohabiting or living together) அல்லது திருமணம் போன்றவற்றில் அக்கறை இருந்தால் கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
1. இந்த அன்பு அல்லது காதல் கிடைத்தற்கரியதா எனப் பாருங்கள். சிலவேளைகளில் அவனோ/அவளோ ஆசைகாட்டினால் கூட ஒரு முறை சிந்தியுங்கள்.
2. அவருடைய தற்போதைய உறவுமுறை மனநிறைவற்ற அல்லது சீரற்றதாக இருக்கிறதா என தகுந்த காரணங்களுடன் ஆராயுங்கள்.
3. சந்தோசமற்ற துணைக்கு நீங்கள் அவரது கதைகளைக் கேட்டோ, பாராட்டியோ அல்லது துணைக்கு நின்றோ உதவி செய்யாதீர்கள்.
4. பாலியல் ரீதியான விடயங்களை அவருடன் கலந்தாலோசிக்காதீர்கள்.
5. நீங்கள் அவருக்கு துணையாக இருக்கவேண்டும் என நினைத்தால் , தனிமையான அல்லது துணையுடன் இருக்கும் ஒருவருடன் நேர்மையாகவும் , சரியான பாதையிலும் உங்கள் தொடர்புகளை வைத்திருங்கள்.
6. இந்த அனுபவமும் ஒரு பரவசமூட்டும் சிலிர்க்கச் செய்யும் குறுகியகால அனுபவமாக இருந்தாலும் இருவருக்கும் ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
'தகாமுறைத் துணைகவரல்' என்பது ஒழுக்ககேடான மற்றவர்களையும் பாதிக்கின்ற ஒரு விடயம் என்பதனைத் தெரிந்துகொண்டால் இல்லறங்கள் நல்லறங்களாக என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பின்குறிப்பு : இணையத்தில் நயன் பிரபுதேவா சர்ச்சைகள் பார்த்த ஒரு இடத்தில் இந்த சொல் புதிதாக இருந்தது என்ன விடயம் எனத் தேடியதில் பல இணையங்களில் இதனைப் பற்றிக் கிடைத்த குறிப்புகளை வைத்து எழுதியதே இது. மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவே இந்தப் பதிவு.
நன்றி : Mate Poaching என்ற ஆங்கிலப்பதத்திற்க்கு "தகாமுறைத் துணைகவரல்" என்ற தமிழ்ப் பதத்தை மொழிபெயர்த்துத் தந்த சஜிக்கு நன்றிகள்.
இந்தப் பதிவில் முதலில் இட்ட தலைப்பு ஆணாதிக்கவாதத் தலைப்பு எனப் பலர் கருதுவதால் தலைப்பை மாற்றிவிட்டேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 35 கருத்துக் கூறியவர்கள்
உன்னைப் போல் ஒருவன், வருண், விகடன்
விகடன், கமல் படங்களுக்கு இப்பொதெல்லாம் சரியான மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. 50 மதிப்பெண்களுக்கு மேல் விகடனில் பெற்ற கமல் படம் சமீபத்தில் இல்லை. "கமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார். விகடந்தான் கீழே போகிறது" என்று குற்றச்சாட்டுக்கள் விகடன் மேல் உண்டு. அது ஓரளவுக்கு நம்பும்படியாகவும் உள்ளது.
என நண்பர் வருண் உன்னைப்போல் ஒருவன் ( * * * *)- க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன்! என்ற பதிவில் எழுதியிருந்தார்.
இதற்க்கு நானும் நண்பர் கிரியும் எதிராக விகடன் கடைசிவரை 50ற்க்கு மேல் மார்க் கொடுக்கமாட்டார்கள், என அவருடன் வாதித்தோம்.
இறுதியில் இன்றைய விகடனில் உன்னைப்போல் ஒருவனுக்கு விகடன் கொடுத்த மார்க் 42 மட்டுமே வழக்கமாக சன் பிக்சர்ஸ் படங்களுக்கு கொடுக்கும் மார்க்.
இறுதியில் நண்பர் கிரி கூறியது போல்
விகடன் எப்போது படம் தயாரிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் நடுநிலைமை காணாமல் போய் போய் விட்டது (அதற்க்கு முன்பே என்று கூறுபவர்களும் உண்டு) அப்படி இருக்கும் போது..எதற்கு இதற்க்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு லூஸ்ல விடுங்க ;-) Relax கவுண்டர் சொல்ற மாதிரி less tension more work ;)
விகடன் தான் ஒரு வியாபாரி என்பதைக் காட்டிவிட்டது.
சமீபத்திய விகடன் மதிப்பெண்கள்
ஈரம் 43 எந்திரன் சன் பிக்சர்ஸ் ஷங்கர் தயாரிப்பு படம் என்பதால் 43
கந்தசாமி 42 (கந்தல்சாமிக் கதையும் உன்னைப்போல் கதையும் ஒன்றா)
மக்களே இன்னுமா விகடனை நம்புகின்றீர்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 11 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் உன்னைப் போல் ஒருவன், விகடன், விமர்சனம்
அம்மா, அஷாருதீன், ஐஸ்வர்யா, சுஜாதா, மழை இன்னும் பல
உறவுகள்
எல்லோரைப் போலவும் அம்மா, அப்பா, அக்கா, சித்திகள், சித்தப்பாக்கள், தங்கைகள், தம்பிகள், மாமா, மாமி, என் பாட்டை விரும்பிக் கேட்கும் செல்ல மச்சாள் என அனைத்து உறவுகளும் எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள், என்னைத் திருத்தும் நண்பர்கள், நான் சொல்வதைக் கேட்கும் நண்பர்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இடங்கள்
நான் தத்தித் தவழ்ந்து விளையாடிய மண், எங்கள் பாடசாலை, மைதானம், 11சி வகுப்பறை, வடமராட்சி மண் ஒழுங்கை முதல் பெரிய வீதிகள் வரை அனைத்து சுற்றிய சுழட்டிய ரோட்டுகள், வெள்ளவத்தை பீச், காலி வீதிகள், காலி உனவட்டுன அழகிய கடற்கரை, கொச்சிக்கடை சிவன் கோவில்.
உணவு
அம்மா சமைக்கும் பருப்புக் கறி, ரசம், உருளைக்கிழங்குப் பொரியல், நெல்லியடி சுபாஷ் பேக்கரிப் பாண், பூட் வேவ்ஸ் பன்னீர் பட்டர் மசாலா, சைனீஸ் ட்ராகன் நூடுல்ஸ், நளபாகம் பாலப்பம், பருத்தித்துறை வடை, ஆடை இல்லாத பால்,
ரசனை
அழகான அறிவான பெண்கள் (கண்டுபிடிப்பது மிகமிக கஸ்டம்)
பட்டுச்சாறியில் இளம் பெண்கள்(தேவதையின் தேவதைகள்),
பஸ்சில் பயணிக்கும்போது காதில் இளையராஜா, கையில் சுஜாதா
மழையில் நனையப் பிடிக்கும்
ரயில் பயணங்களில் யன்னலூடாக தென்படும் இயற்கை
விளையாட்டு
கிரிக்கெட் விளையாடவும் பார்க்கவும் பிடிக்கும், நீச்சலடிக்கப் பிடிக்கும்
அஷாருதீன் wrist style batting,
கபில்தேவ் வேகம்,
அரவிந்த டி சில்வா ஸ்டைல்,
லாராவின் அதிரடி
முரளியின் சுழல்
ஷ்ரபோவா அழகு
வீனஸ் அதிரடி
பெடரர் புன்னகை
சினிமா
கமலின் படங்கள், இளையராஜா பாடல்கள், தேர்ந்தெடுக்கப் பட்ட ரகுமான் பாடல்கள், ஷங்கர், நகைச்சுவைப் படங்கள், த்ரில் ஆங்கிலப் படங்கள், எப்போதும் ஐஸ்வர்யா ராய்.
படிப்பது
செங்கை ஆழியான், சுஜாதாவின் அனைத்துப் படைப்புகளும்
ராஜேஸ்குமார் க்ரைம் கதைகள்
உலாத்தல் கட்டுரைகள்
உணர்ச்சி, காதல் கவிதைகள்
இன்னும் நிறைய பிடித்தவை இருக்கின்றன. இந்த தொடருக்கு யாரையும் அழைக்கமாட்டேன் காரணம் ஏற்கனவே சில தொடர்களுக்கு அழைத்தவர்கள் இன்னும் எழுதவில்லை. ஆகவே யாராவது விரும்பினால் தொடருங்கள்.
விளையாட்டுக்கு அழைத்த சுபானுவிற்க்கு நன்றிகள்.
எழுதியது வந்தியத்தேவன் at 14 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனுபவம், தொடர்விளையாட்டு, பிடித்தவை
ஹாட் அண்ட் சவர் சூப் 23-09-09
நமீதாவும் மீனாவும்
தமிழச்சியான மீனாவும் குஜராத்திக்காரியான நமீதாவும் தமிழ்த் திரையுலகத்திற்க்கு நன்கு தெரிந்தவர்கள். இருவரும் தற்போது இருவேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக இருக்கின்றார்கள்.
மீனா விஜய் தொலைக்காட்சியின் Boys Vs Girls நிகழ்ச்சியிலும் நமீதா கலைஞரில் மானாட மயிலாடவிலும் நடுவர்கள். நமீதா கஸ்டப்பட்டு பெரும்பாலும் தன் நடனம் பற்றிய கருத்துக்களை தமிழிழையே சொல்கின்றார். இந்தத் தமிழை மச்சான்ஸ் தமிழ் என்கின்றார்கள். ஆனால் பச்சைத் தமிழச்சியான மீனாவோ மறந்தும் தமிழில் பேசாமல் ஏதோ பிரித்தானியாவில் பிறந்துவளர்ந்தவர் போல் பீட்டர் விடுகின்றார். அதிலும் அவருக்கு நடனத்தைப் பற்றி கொஞ்சம் தெரியும் போல் இருக்கிறது. அதனால் ஒரு குறிப்பிட்ட சொற்களை வைத்து ஜல்லி அடிக்கின்றார். இன்னொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நமீதாவிற்க்கு தமிழ் மேல் இருக்கும் ஆர்வம் ஏன் மீனாவிற்க்கு இல்லை.
Boys Vs Girls என்ற நிகழ்ச்சியில் பெண்கள் போடும் கத்தல்கள் மிகவும் கேவலமாக இருக்கின்றது. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களிடம் வரவில்லை. சீசன் 1 ல் இருந்த பிரியதர்ஷினி, பிருந்தா தாஸ் போன்றவர்களுக்கு இருந்த அடக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எதுவும் இல்லாத அடங்காப்பிடாரிகளாக இருக்கின்றார்கள் அந்தப் பெண்கள். ஒரு சிலர் திருமணமானவர்கள்(அவர்களின் கணவர்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள்).
விஜய் தொலைக்காட்சியினருக்கு நல்ல இளமையான நடிகை கிடைக்கவில்லையா? எதற்காக கிழவி மீனாவை நடுவராக்கினார்களோ?
உன்னைப் போல் ஒருவனும் சில பதிவர்களும்
வழக்கம் போல் கமல் படம் சிலரிடம் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. உன்னைப்போல் ஒருவனில் கமல் முஸ்லீம்களைத் தூற்றுகின்றார் என ஒரு குறூப் கமல் மேல் காண்டுடன் திரிகிறது.
ஐயா அறிவுஜீவிகளே உன்னைப் போல் ஒருவனின் கதை A Wednesday படத்தில் நீராஜ் பாண்டே எழுதிய கதை. ஹிந்தியில் முஸ்லீம்களை தீவிரவாதியாக்கியபோது உங்கள் கீபோர்ட்டுகள் எங்கே போனது? (இப்போ பேனையால் எழுதுபவர்களை விட கீபோர்ட்டில் தட்டுபவர்கள் தான் அதிகம்). ஹிந்தியை பக்கம் பக்கமாக உங்களால் கிழிக்கமுடியாமல் ஹிந்திப் படத்தை ஆஹோ ஓஹோ எனப் புகழ்கின்றீர்கள், ஆனால் ஒரு தமிழன் அந்தப் படத்தை அப்படியே தந்தால்( ஹிந்தி பார்த்த பலரின் விமர்சனம்) உடனே அவரை பார்ப்பன் என இகழ்கின்றீர்கள்.
என்னுடைய சிற்றறிவுக்கு சல்மான் கான், ஷாருக் கான், அமீர்கான் போன்ற ஹிந்தி நடிகர்கள் முஸ்லீம் என நினைவுக்கு வருகின்றது. அந்தக் கான்களே ஹிந்திப் படத்தில் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியபோது அமைதியாக இருக்கின்றார்கள். இந்தியப் படங்களில் காட்டப்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் பெரும்பாலும் பாகிஸ்தானிகளாகத் தான் இருக்கின்றார்கள். அண்மையில் வெளிவந்த நியூயோர்க் உட்பட பல படங்களில் அப்படித்தான் காட்டுகின்றார்கள் ஆனால் நீங்கள் மட்டும் கமல் காட்டியவுடன் துடித்துப் போவீர்கள்.
நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? முட்டையில் மயிர் பிடுங்காமல் படத்தைப் பார்த்தால் பிடித்துதா? இல்லையா என எழுதுவதை விட்டுவிட்டு கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.
தேசிய அவமானங்கள்
நேற்று இலங்கை எதிர் தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்க முன்னர் இரு நாட்டுத் தேசிய கீதங்களையும் இசைத்தார்கள். வழக்கம் போல் மக்கள் தேசியகீதத்திற்க்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்தார்கள். சிலரை கமெரா காட்டியபோது அதிர்ச்சியடைந்தேன், காரணம் அவர்கள் கைகளில் பியருடன், சிலர் குடித்தபடி தேசியகீதத்திற்க்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.
இந்த பியர் விடயம் ஏற்கனவே ஐசிசியின் இங்கிலாந்தில் நடந்த இருபதுக்கு 20 போட்டிகளிலும் இடம் பெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு கொடுக்கும் மரியாதை அற்றுப்போன நிலையில் (சில விளையாட்டுப் போட்டிகளில் குத்தக்கூடாத இடங்களில் பெண்கள் தேசியக் கொடியைக் குத்தியிருப்பார்கள்) தேசியகீதத்திற்க்கும் இப்போது அவமானம் ஏற்படத்தொடங்கிவிட்டது.
போட்டிகளில் விளையாடும் நாடுகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தால் இந்த அவமானங்கள் குறையலாம் இல்லையென்றால் நீடிக்கும் அபாயமே இருக்கின்றது.
பின்குறிப்பு : தேசியக்கொடியைக் குத்தக்கூடாது இடத்தில் குத்திய பெண்ணின் படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை.
ஒரு குட்டிக் கதை
ஒரு காட்டிலை பெரிய சிங்கம் ஒன்று ராஜாவாக வாழ்ந்து வந்தது. அந்த சிங்கத்தின் காலத்தில் புலியும் மானும் ஒன்றாக ஆற்றில் தண்ணீர் குடிக்கும். யானையும் கரடியும் ஓடிப்பிடிச்சு விளையாடும் என சகல மிருகங்களும் ஒற்றுமையாக இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் அந்தச் சிங்கம் இறந்துபோனது. அந்தக் காடு மட்டுமல்ல பக்கத்துக் காடுகள் கூட செய்தி அறிந்து சோகமாக இருந்தன.
அந்த சிங்கத்தின் இறப்பின் பின்னர் சிங்கத்துடன் நல்ல உறவாக இருந்த கழுதை ஒன்றை அனைவரும் ஏகமனதாக ராஜாவாக்கினார்கள். கழுதையும் சில காலம் நல்லாத்தான் காட்டை ஆட்சி செய்தது. நாளாக நாளாக கழுதைக்கு தான் என்ற அகங்காரம் வந்து தன்ரை காட்டைவிட சகல காட்டில் இருக்கும் மிருகங்களுக்கு தான் ராஜா என தானே அறிவித்துக்கொண்டது. ஏனைய மிருகங்களும் சிங்கத்துக்கு வேண்டப்பட்டவர் கழுதை என்றபடியால் பொறுத்துக்கொண்டனர்.
ஒருநாள் அந்த சிங்கத்தின் நினைவுநாள் அந்தக் காட்டில் பிரம்மாண்டமாக நடந்தது. சகல காடுகளில் இருந்தும் மான், குரங்கு, நரி என சகல விலங்குகளும் வந்தன. ஆனால் அவை அனைத்தும் சிங்கத்தை மறந்துவிட்டு கழுதையைப் பற்றியே பேசின, பாடின, ஆடின.
இதைப் பார்த்த அந்த சிங்கத்தின் தம்பி முறையான சிங்கம் ஒன்று சொன்னதாம் "நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".
சதீஸ் ஜோக்:
எழுதியது வந்தியத்தேவன் at 11 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கதை, கமல், சினிமா, சின்னத் திரை, சூப், விளையாட்டு
ப்ரியங்கா சோப்ரா + நான் + டேட்டிங்
காலையில் எழுந்திருக்கின்றேன் நல்ல மழை, இதமான குளிர் அப்படியே கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றால் நிறைய வேலைகள் இருப்பதாக மூளை சொல்லியது, மனமோ படு படு என்றது. இறுதியாக மூளை மனத்தை வென்று ஒருமாதிரி நித்திரையால் மன்னிக்கவும் கட்டிலால் எழும்பிவிட்டேன்.
காலையில் வீதியில் இறங்கவே நல்ல மழை குடை இருந்தாலும் ஓரளவு நனைந்துவிட்டேன். டுப்ளிகேசன் வீதியில் வெள்ளமோ வெள்ளம், சப்பாத்து முதல் கொண்டு அனைத்தும் நனைந்துவிட்டது.
நான் செல்லவேண்டிய அலுவலகத்திற்க்கு நனைந்து கஸ்டப்பட்டுப் போனால் எனக்கு வரவேண்டியவை வரவில்லை. என் விதியை நொந்துகொண்டு மீண்டும் மழைக்குள் இறங்கித் வந்த வழியே திரும்பினேன்.
மதியம் கணிணியை திறந்தால் மருமகன் சதீஸ் நடந்தகதையை அப்படியே திரித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அவருடை வெளிமாவட்டத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணைக் காட்டுகின்றேன் என எனக்கும் ஆதிரைக்கு கொடுத்த வாக்கை சதீஸ் மறந்துபோய் எங்களை கலாய்த்துவிட்டார். ஆனால் நானும் ஆதிரையும் மிகவும் நல்லவர்கள் என்ற உண்மை வலையுலகப் பெருமக்களுக்கு தெரியும். அதனால் அந்தப் பதிவு பாதகமில்லை என்று இருவரும் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டோம்.
மூஞ்சிப்புத்தகத்தைத் (FaceBook) திறந்தால் நம்ம மருமகன் சதீஸ் ப்ரியங்கா கோதாரி என்ற யாரோ ஒரு கோதாரியுடன் டேட்டிங் போவதாக செய்தி இருந்தது. இந்த மூஞ்சிப் புத்தகத்தில் இன்றைய நண்பன் யார்? இன்றைய எதிரி யார்? என பல விடயங்கள் வந்துவிட்டன. அதைப்போல் யாரோ ஒரு புண்ணியவான் யாருடன் இன்றைய டேட்டிங் என்ற விடயத்தையும் எழுதிவிட்டான்.
இன்னும் எத்தனை எத்தனை விடயங்கள் வரப்போகின்றதோ. இவர்களை மூஞ்சிப் புத்தக முருகன் தான் காப்பாற்றவேண்டும்.
அட நம்ம மருமகனே ஒரு கோதாரியோடை டேட்டிங் போகும் போது அவரின் மாமானாகிய நான் யாருடன் போவது என சோதித்துப்பார்த்தால் அதிர்ச்சியடைந்துபோனேன் எனக்கு முன்னால் பிரபஞ்ச அழகி ப்ரியங்கா சோப்ரா என்னுடன் டேட்டிங் வர சம்மதம் தெரிவித்திருந்தார்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நானும் அந்த தகவலை மூஞ்சிப் புத்தகத்தில் வெளியிட நண்பர் ஒருவர் டேட்டிங்க்கு நல்ல காலநிலை நிலவுகின்றது உடனே போங்கள் என எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
பிறகென்ன எழுத வந்த பதிவையும் மறந்துபோய் ப்ரியங்காவுடன் டேட்டிங் போக ரெடியாகிவிட்டேன். ஆகவே இன்றைக்கு பதிவுலகத்திற்க்கு லீவு நான். அப்போ வரட்டா.
டிஸ்கி: இது ஒரு மொக்கை. உன்னைப்போல் ஒருவன் சிலரின் பதிவுகள் வாசித்து கடுப்பாகி இந்த மொக்கையில் இறங்கினேன். மற்றும் படி எனக்கு டேட்டிங், காதல், கண்றாவி எல்லாத்திலையும் நம்பிக்கையில்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் மொக்கை
கடலேறியும் யாழ்தேவியும்
வலைப்பதிவர் சந்திப்பு வேளையில் ஒரு நாள் ஆதிரை எனக்கு விரைவில் ஆப்படிக்க போவதாகச் சொன்னார். நானும் எதோ நான் பூனை பிடித்த அல்லது எலி படித்த கதை என கற்பனைக் கதை எழுதப்போகின்றார் என நினைத்து அதை மறந்தே போனேன். சென்ற வாரம் எனக்கு இவற்றிற்குப் பதில் எழுதித்தாருங்கள் என மின்னஞ்சலில் 10 கேள்விகள் அனுப்பியிருந்தார்.
கேள்விகேட்கத்தான் தெரியும் பதில் சொல்றது எவ்வளவு கஸ்டம் என கமல் நாகேஸிடம் பஞ்சதந்திரத்தில் சொல்லும் வசனம் மனதில் வந்துபோனது. அவ்வளவு கஸ்டமான கேள்விகள் கேட்டிருந்தார். சில பல ஆராய்ச்சிகள் செய்து பல பழைய பதிவுகளை(என்னுடையதும் ஏனைய நண்பர்கள் சிலருடையதும்) தேடிக் கண்டுபிடித்து ஒரு மாதிரி பதில்கள் எழுதி அனுப்பினேன்.
அதனை மிகவும் அழகாக வலையேற்றியிருக்கிறார். என்னுடைய மிகவும் அழகான படங்கள்(?) சில அனுப்பியும் ஏனோ ஆதிரை அவற்றைப் பிரசுரிக்கவில்லை. என்னுடன் மட்டும் நில்லாமல் ஏனைய பலரையும் பல்துறை சார்ந்து ஆதிரை பேட்டி எடுக்கவருகின்றார் ஆயத்தமாக இருக்கவும்.
ஆதிரை கேட்ட கேள்விகள் அனைத்தும் பயிற்சி பெற்ற ஊடகவியலாளர் போல் மிகவும் சிறப்பான கேள்விகள். சில ஊடகவியலாளர்களுக்கு எப்படிக் கேள்வி கேட்பது என்பதே தெரியாது.
ஆதிரையின் கேள்விகளுக்கும் அவரது அணுகுமுறைக்கும் வாழ்த்துகள். என்னுடைய பதில்களும் எந்தவிதமான மழுப்பல்களும் இன்றி மிகவும் நேர்மையாக முறையில் கூறியிருக்கின்றேன் என நினைக்கின்றேன். இதனைப் பற்றி நீங்கள் தான் கூறவேண்டும்.
என் பேட்டி இணைப்புகள்
பகுதி 1
பகுதி 2
யாழ்தேவி நட்சத்திர வாரம்.
சென்றவாரம் இலங்கையில் இருந்து இயங்கிக்கொண்டிருக்கும் யாழ்தேவி திரட்டியில் நட்சத்திரமாகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்காக யாழ்தேவிக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.
யாழ்தேவிக்கு சில ஆலோசனைகள்.
உங்கள் திரட்டியில் இணைக்க முகவரி தொலைபேசி போன்றவற்றைத் தருமாறு பதிவர்களைக் கேட்கின்றீர்கள், இது வேண்டாமே. காரணம் தொலைபேசி, முகவரி என்பனவற்றைக் கொடுக்க பலர் பின்னடிப்பார்கள். இதுவரை எந்த திரட்டியும் இப்படி தனிப்பட்ட விவரங்கள் கேட்பதில்லை. இதனை மறுபரிசீலனை செய்யவும்.
நட்சத்திரப் பதிவராக இருப்பவருக்குரிய அழைப்பை இரு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத் தந்தால் அவர்கள் தங்களை அதற்கேற்றவாறு தயார்படுத்திக்கொள்ளமுடியும்.
உங்களின் திரட்டி பற்றிய விளம்பரம் போதாது. ஏனைய திரட்டிகள் செய்வதுபோல் புதிய பதிவுகளில் உங்கள் திரட்டியில் இணைக்க வேண்டுகோள் விடுக்கவும்.
நட்சத்திரப் பதிவராக இருந்த காலத்தில் யாழ்தேவியூடான வாசகர் வருகை என் பதிவுகளில் அதிகரித்திருந்தது.
மீண்டும் யாழ்தேவிக்கு என் இனிய நன்றிகள்.
எழுதியது வந்தியத்தேவன் at 12 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கடலேறி, பதிவர் வட்டம், பேட்டி, யாழ்தேவி
மினி உலகப் கிண்ணப் போர் - 2009
1998ல் மினி உலகக் கிண்ணம் என்ற பெயரில் வங்கதேசததில் ஆரம்பமான இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஒரு நாள் தொடர்போட்டிகள் இம்முறை தென்னாபிரிக்காவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.
எட்டு நாடுகள் பங்குபெறும் இந்தப் போட்டிகள் ஒக்டோபர் 5ந்திகதி வரை நடைபெறவுள்ளது. 20-20 போட்டிகளால் ஒருநாள் போட்டிகளின் சூடு குறைந்திருந்தாலும், எட்டு முன்னணி நாடுகள் பங்கு பெறும் போட்டிகள் என்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது. அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.
அவுஸ்திரேலியா
நடப்பு உலகக் கிண்ண, சாம்பியன் கிண்ண சாம்பியனான ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் இங்கிலாந்தை 6 க்கு 1 என்ற கணக்கில் புரட்டிப்போட்ட வேகத்தில் போட்டிகளில் கலந்துகொள்ளப்போகின்றது. அத்துடன் தென்னாபிரிக்கா இந்தியா என இரண்டு அணிகளிடம் இருந்து ஒரு நாள் தொடருக்கான முதலிடத்தை மீண்டும் பறித்துக்கொண்டது. ஆகவே இந்த உசாருடன் ஆஸி அணியானது தன்னுடைய குழுவிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளை எதிர்த்தாடப் போகின்றது. ஆஸிக்கு பலத்த போட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் விளங்கும்.
பலம் :
பலவீனம் :
மீண்டும் ஆஸி அணி பலமாக விளையாடினால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
தென்னாபிரிக்கா
1998ல் ஹன்சி குரேஞ்சே தலைமையிலான தென்னாபிரிக்கா அணி முதன் முறை டக்காவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து மோதி கிண்ணத்தைச் சுவீகரித்தது. இம்முறை கிரேம் ஸ்மித் தலைமையில் இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் உள்ள குழுவில் பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. ஆஸியுடன் ஒரு புள்ளிகளுடன் தரவரிசையைப் பகிர்ந்தாலும் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி.
இந்த ஆண்டில் ஆஸியுடன் மட்டும் ஆஸியில் நடந்த தொடரிலும் சொந்த மண்ணில் நடந்த தொடரிலும் விளையாடி இரண்டு தொடர்களையும் சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.
பலம் :
பலவீனம் :
அரையிறுதிக்கு இலகுவாகச் செல்லகூடிய வாய்ப்பு, சிலவேளைகளில் இறுதிப்போட்டிக்கு கூடச் செல்லமுடியும்.
இந்தியா :
இலங்கை முத்தரப்பு போட்டியில் வெற்றி பெற்ற சாதனை, மேற்கிந்திய தீவுகளை கடந்த ஜூலையில் சொந்த மண்ணில் வைத்து தொடர் வென்ற சாதனை என டோணி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சச்சின், ராவிட் போன்றவர்களுடன் செல்லும் இளமைப் பட்டாள அணி. 2002ல் இலங்கையுடன் சாம்பியன் கிண்ணத்தை பங்குபோட்ட அணி.
பலம் :
பலவீனம் :
சிறந்த ஆரம்ப துடுப்பாட்டமும் பரம வைரியான( கிரிக்கெட்டில் மட்டும்)பாகிஸ்தானுடனான போட்டியில் வெல்லும் ஆற்றலும் கைகூடினால் அரையிறுதி உறுதி. இருதடவைகள் சாம்பியன் கிண்ண இறுதிப்போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இம்முறை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்புகளும் ஓரளவு இருக்கின்றது.
நியூசிலாந்து
2000 ஆண்டில் ஸ்ரிபன் பிளேமிங் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை கென்யாவில் தோற்கடித்தது. அதன் பின்னர் இவர்களுக்கு சொல்லும் படியான பல நாடுகள் விளையாடிய தொடர் வெற்றிகள் கிடைக்கவில்லை. இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில், பெப்ரவரியில் ஆஸியுடனான சாப்பல் ஹட்லி கிண்ணத்தை 2 க்கு 2 என்ற விகிதத்தில் சமன் செய்த நியூசிலாந்து பின்னர் இந்தியாவுடனான போட்டிகளில் அடைந்த தோல்வியும், இலங்கையில் நடந்த முத்தரப்பு போட்டிகள் தோல்வியும் இலங்கை, தென்னாபிரிக்கா அணிகள் உள்ள குழுவில் இருப்பதும் பலவீனமே.
பலம் :
- பொண்ட், மில்ஸ், ரவ்வி ஆகிய வேகங்களுடன் வெட்டோரியின் சுழல்.
- ரைடர், ஓரம், வெட்டோரி புரூம் என சகலதுறை வீரர்கள்.
- மிகவும் பலவீனமான மத்தியதர துடுப்பாட்ட வரிசை.
- ஓரம், ரோஸ் டைலர், ரைடர் போன்றோர் ஃபார்மில் இல்லை.
- களத்தடுப்பில் அசிரத்தை.
பாகிஸ்தான்
ஜனவரியில் இலங்கையிடம் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் தொடர் தோல்விகளும் பின்னர் யூஎஈயில் வைத்து ஆஸியை வென்றமை என இரண்டும் கெட்டான் அணியாக பாகிஸ்தான் அணி இந்த வருடம் காணப்பட்டது. பாகிஸ்தான் தலைவர் யூனிஸ் கான் தொடருக்குச் செல்லமுன்னர் எப்பாடுபட்டாவது இந்தக் கிண்ணத்தை வெல்வது தங்கள் நோக்கம் என கூறிச் சென்றுள்ளார்.
பலம் :
- ஃபாவட் ஆலம், இம்ரான் நசீர், அப்ரிடி, யூனிஸ் கான், செயிப் மாலிக், மிஸ்பா உல் ஹக், முகமட் யூசுப், கம்ரன் அக்மல் என நீண்ட துடுப்பாட்ட வரிசை.
- மத்திய தரவரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள்
- ரானா நவீட், உமர் குல், முகமட் ஆசிப், முகமட் ஆமிர் என பலம் வாய்ந்த வேகங்கள்
- களத்தடுப்பில் அசிரத்தை.
- சில வீரர்கள் ஃபார்மில் இல்லாமை.
இலங்கை :
சங்ககாரவின் தலைமையில் செல்லும் இளமை சக அனுபவ வீரர்களின் பட்டாளம். 2002ல் இலங்கையில் வைத்து கிண்ணத்தைப் பகிர்ந்துகொண்டமை. இந்த ஆண்டில் பாகிஸ்தானை பாகிஸ்தானிலும் சொந்த மண்ணிலும் வென்றிருந்தாலும் இந்தியாவிடம் சொந்த மண்ணில் தொடர் தோல்விகள் என கஸ்டமான நிலையில் தான் இலங்கை அணியும் இருக்கின்றது.
பலம் :
- டில்ஷான், ஜெயசூரியா, சங்ககாரா, கண்டம்பி, கப்புகெதர, ஏஞ்சலோ மத்யூஸ், சமரவீர என நீண்ட துடுப்பாட்ட வரிசை.
- முரளி மீண்டும் அணியில் என்பதால் அவரின் சுழலும் துசாரா, நுவான் குலசேகர, லசித் மாலிங்க, போன்றவர்களின் வேகமும் கைகொடுக்கும்.
- சிறப்பான களத்தடுப்பு.
- மஹெல ஜெயவர்த்தனா, சில நாட்களாக இவரின் துடுப்பாட்டம் கேள்விக்குரியதாகியுள்ளது.
- மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய்வதில்லை.
- ஜெயசூரியாவின் துடுப்பாட்டம் பெரிதாக சிறப்பாக இல்லாவிடினும் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் சிறந்துவிளங்குவது இவருக்கு பலம்.
மேற்கிந்தியத் தீவுகள்
2004ல் சாம்பிய்னஸ் மூன்று தடவை இறுதிப்போட்டி வரை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இம்முறை அணிக்குள் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளால் இரண்டாம் தரமான அணியையே அனுப்புகின்றது. இவர்களுக்குப் பதிலாக வங்கதேசத்தை அழைத்திருந்தால் அந்தக் குழுவிற்க்கு ஓரளவு எதிர்ப்புக் கொடுத்திருப்பார்கள்.
பலம்:
- சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை.
- அணியே பலவீனம் தான்.
இங்கிலாந்து
தற்போது நடைபெற்று முடிந்த ஆஸியுடனான நட்வெஸ்ட் தொடரில் பரிதாபமான தோல்வியுடன் துவண்டபடி பங்குபற்றும் அணி. ஒரே ஒரு முறை இறுதிப்போட்டியில் விளையாடி இறுதிப்போட்டிகளில் தோல்வியடையும் துரதிஷ்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுடன் தோல்வியுற்ற அணி.
பலம் :
- ஆன்ரூ ஸ்ரோஸ், கொலிங்வூட், மத்யூ பிரையர், ஓவைஸ் ஷா, ரவி போபரா என கொஞ்சம் அனுபவ வீரர்கள்.
- சைட் பொட்டம், அன்டர்சன், ஸ்ருவர்ட் புரோட், கிரஹம் ஒனியன்ஸ் என வேகப் பந்துவீச்சாளர்கள்.
- தொடர் தோல்விகள்
- முன்னணி வீரர்களான பிளின்டோவ்ம் பீட்டர்சன் இல்லாமை.
- சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமை.
- சிறந்த சுழல்ப் பந்துவீச்சாளர் இல்லாமை.
என்னுடைய பார்வையில் அரையிறுதிக்குத் தெரிவாகும் அணிகள்
குழு A யில் : இந்தியா, அவுஸ்திரேலியா
குழு B யில் : தென்னாபிரிக்கா , நியூசிலாந்து/இலங்கை (கொஞ்சம் சிக்கலான குழு)
இறுதிப்போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்பதையும் எந்த அணி வெற்றி பெறும் என்பதையும் நண்பர்கள் எதிர்வு கூறுங்கள்.
சுவாரசியமான போட்டிகள் எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல விடயங்கள் நடைபெறலாம் அதுவரை பொறுத்திருப்போம்.
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் உலகக் கிண்ணம், கிரிக்கெட், தென்னாபிரிக்கா, விளையாட்டு
உன்னைப் போல் ஒருவன் - தார்மீகக் கோபம்
முன்குறிப்பு : நான் இந்தப் படத்தின் ஆதாரமான ஹிந்திப்(A Wednesday) படம் பார்க்கவில்லை. தசாவதாரத்தின் பின்னர் ஒரு படம் முதல் நாள் முதல் காட்சி.
நாம் தினமும் பத்திரிகைகளில், சில தொலைக்காட்சிகளில வாசிக்கும் பார்க்கும் சம்பவங்கள் எம்மை சமூகத்தின் மீதும் சில மக்களின் மீதும் தார்மீக கோபம் கொள்ளச் செய்யும், அப்படிக் கோபம் கொண்ட ஒரு சாமனியனின் கதைதான் உன்னைப் போல் ஒருவன்.
கதை :
வழக்கம் போல் சொல்லமாட்டேன், திரையில் பார்க்க.
திரைக்கதை :
கமலின் வேகமான திரைக்கதை படத்தின் அச்சாணி. எத்தனை காலமாகிவிட்டது இப்படியொரு வேகமான திரைக்கதையைப் பார்த்து. பிரேசில் அர்ஜென்ரீனா விளையாடும் கால்பந்து இறுதி ஆட்டம் போன்ற விறுவிறுப்பான திரைக்கதை. நான் இங்கே கால்பந்தைக் குறிப்பிடக் காரணம் படம் முதல் பாதி 50 நிமிடங்கள், இரண்டாம் பாதி 50 நிமிடங்கள் (கால்பந்தில் 45+45). மோகன்லால், கமல், மற்றும் இன்னும் இரண்டு போலீஸ்காரர்களினூடு கதையைக் கொண்டுபோகும் உத்தி என கமல் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.
வசனம் :
சுஜாதாவின் பின்னர் தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த இன்னொரு நல்ல வசனகர்த்தாவாக இரா.முருகன் மிளிர்கின்றார். எள்ளலுடன் கூடிய வசனங்கள் அனைத்தும் கூர்மையானவை. பல இடங்களில் வசனங்கள் ரசிகர்களைக் கை தட்ட வைக்கிறது. எந்த இடங்கள் எனச் சொன்னால் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் கெட்டுவிடும். சில இடங்களில் வரும் ஆங்கில வசனங்கள் கூட மிகவும் கூர்மையானவை. அத்துடன் சாதாரண ரசிகனுக்கும் புரியும் எளிமையான வசனங்கள் என இரா.முருகன் முதல் படத்திலையே சதமடித்திருக்கிறார்.
இயக்கம் :
சலங்கை ஒலியில் கோணங்கித் தனமாக படம் எடுத்த சின்னப் பொடியனான சக்ரி டொலட்டி இதை இயக்கியிருக்கிறார் (பின்னர் தசாவதாரத்தில் ஷிட்ராமாக மன்னிக்கவும் ஸ்ரீராமாக கோவிந்த் கமலுடன் அமெரிக்க காட்சிகளில் வருபவர்). கமல், மோகன் லால் என இரண்டு பிரமாண்டங்களை காட்சிகளில் பிரமாண்டம் இல்லாத படத்தில் திறமையாக இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு :
மனோஜ் சோனியின் ரெட் ஒன் கமேராவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். சமீபத்தில் பார்த்த ஒரு பிரமாண்ட படத்தின் ஒளிப்பதிவுடன் ஒப்பிடும்போது மிகமிகமிக அருமை. அதிலும் எந்த மொட்டை மாடிகளில் இருந்து கழுகுக் பார்வையாக சில காட்சிகள், ஒரு பானை சோற்றுக்குப் பதமான ஒரு சோறு.
இசை :
கமலின் தயாரிப்பான ஸ்ருதியின் அறிமுகம். பாடல்களும் பாடல் வரிகளும் பலராலும் ஏற்கனவே பாராட்டப்பட்டவை, ஆனால் படத்தில் பாடல்களே இல்லை. அல்லா ஜானேயின் சில வரிகள் மட்டும் ஒரு தடவை மட்டும் வருகின்றது. பின்னணி இசையில் ஸ்ருதி கம்பன் வீட்டுக் கட்டுத் தறியாக கலக்கியிருக்கிறார். கமல் மாடிப் படிகளில் ஏறும் காட்சிகளிலும் மோகன் லால் சம்பந்தப்பட்ட சில காட்சிகளிலும் ஸ்ருதி பிரமாதம். இன்னொரு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவிற்க்கு தயார்.
நடிப்பு :
கமல், மோகன் லால் இருவரினதும் மிகையில்லாத இயல்பான நடிப்புகளை பாராட்டுவது என்பது சூரியனுக்கு டோர்ச் அடிப்பது போன்றது(வரிகள் உதவி கேபிளார், வேறை வார்த்தைகள் தேடினேன் கிடைக்கவில்லை), இவர்களுடன் இந்த இரண்டு போலிஸ்காரர்களும் மிகவும் திறமையாக தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள். லக்ஸ்மியும் தன் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்(லக்ஸ்மிக்கு வயது போய்விட்டது என பக்கத்து இருக்கை நண்பர் கவலைப்பட்டார்). சதிலீலாவதி சின்னப் பையன், எங்கேயோ போய்விட்டீர்கள் சிவாஜி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன் போன்றவர்களும் வந்துபோகின்றனர். சிகரட்டும் கையுமாக நவநாகரீக பெண்ணாக வரும் அனுஜா ஐயரும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
படத்தில் உள்ள சிறப்புகள் :
1. ஹீரோ அறிமுகப் பாடல், குத்துப்பாடல், குத்தாத பாடல் எனப் பாடலே இல்லை.
2. கதாநாயகி இல்லை, கத்துக் குட்டி ஹீரோக்களே இரண்டு ஹீரோயின் கேட்கும் போது ஹீரோயினே இல்லாத படம்.
3. முகத்தை குளோசப்பில் காட்டி பயமுறுத்தும் பஞ்ச் டயலாக் இல்லை. இரண்டு தடவைகள் கமல் மொபைல் போனைப் பார்த்து "your time starting now " என்பார் அதுதான் உண்மையான பஞ்ச்.
4. திணிக்கப்பட்ட நகைச்சுவைகள் இல்லை. திரைக்கதையுடன்மெல்லிய நகைச்சுவையும் பயணிக்கின்றது.
5. கதாநாயகன் 20 பேருடன் சண்டைபோடுவது இல்லை, வில்லன் இல்லை.
இப்படிப் பல தமிழ்சினிமாவின் பாரம்பரியங்களை உடைத்திருக்கின்றது இந்தப் படம். படத்தின் பல காட்சிகளில் நிறைய உள்குத்துகள் பின்நவீனத்துவமாக தெரிகின்றது.
மொத்ததில் பொன்விழா நாயகன் கமலின் மகுடத்தில் இன்னொரு வைரம் உன்னைப்போல் ஒருவன்.
உன்னைப் போல் ஒருவன் வேறு யாரும் அல்ல நீங்களும் நானும் தான்.
எழுதியது வந்தியத்தேவன் at 23 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் உன்னைப் போல் ஒருவன், கமல், சினிமா, விமர்சனம்
எப்படியிருந்த நயன்தாரா - சில குறிப்புகள்
2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமாகி அடுத்த படத்திலையே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து பலரின் மனதைக் கவர்ந்தவர் பின்னர் தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிக்க கவர்ச்சி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து இன்றைக்கும் இளைஞர்களின் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் நயன் பற்றிய சில குறிப்புகள்.
இயற்பெயர் : டயானா மரியம் குரியன்
பிறந்த நாள் : 18 நவம்பர் 1984.
பிறந்த இடம் : திருவல்லா, கேரளா (இன்னொரு கேரளத்து பைங்கிளி)
கல்வி : BA (ஆங்கில இலக்கியம்)
முதல் படம் : மனசின்னகரே(மலையாளம், 2003), ஐயா(தமிழ், 2005)
ஐயா படத்தில் "ஒருவார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தேன் என" சரத்குமாரை மட்டுமல்ல இளைஞர்கள் பலரையும் செல்வியாக தன் அழகாலும் புன்னகையாலும் கவர்ந்தவர். இன்னொரு மீரா ஜாஸ்மின், அசின் போல் ஹோம்லியான நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். பின்னர் சந்திரமுகியில் தர்கா மன்னிக்கவும் துர்காவாகி சூப்பர் ஸ்டாருடன் பட்டம் விட்டு இளைஞர்கள் மனதிலும் பட்டமாக ஒட்டிக்கொண்டவர்.
கஜனியில் சித்ராவாக "எக்ஸ் மச்சி வை மச்சி" என கொஞ்சம் கவர்ச்சியாக ஆட்டம் போட்டவர். பின்னர் சிவகாசியில் இளைய தளபதியுடன் "கோடம்பாக்கம் ஏரியா" என ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
விரல் வித்தை நடிகர் சிம்புவின் வல்லவன் போஸ்டரிலையே அவரின் உதட்டைக் கடித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். சொப்னாவாக வல்லவன் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சிம்புவுடன் அவருக்கு "காதல் வந்துடுச்சு". பின்னர் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் ஹரிதா என்ற மென்பொருள் பெண்ணாக வந்து பாடல்களில் கவர்ச்சி ஆட்டம்போட்டார்.
பின்னர் தலைமகனில் மீண்டும் சரத்குமாருடன் நடித்தார். ஈ படத்தில் ஜீவாவுடன் ஜோதி என்ற பாத்திரத்தில் நடித்தார்.
இந்த நேரத்தில் சிவாஜியில் "பல்லேலக்கா " பாடலுக்கு ரஜனியுடன் ஆட்டம் போட்டார்.
ஷாசா என்ற பெயரில் பில்லாவில் இவர் காட்டிய கவர்ச்சி, கூட நடித்த கவர்ச்சி சூறாவளி நமீதாவையே கவர்ச்சியில் மிஞ்சி, எப்படி இருந்த நயன் இப்படியாகிவிட்டார் என பலரையும் உச் கொட்டவைத்தார்.
பில்லாவின் பின்னர் வெளிவந்த யாரடி நீ மோகினியில் ஐயராத்து பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்தார். மருமகனைத் தொடர்ந்து மீண்டும் மாமனாருடன் குசேலன் படத்தில் நயன்தாராவாகவே வந்து போனார்.
சத்யம் படத்தில் விஷாலுடன் இவர் காட்டிய நெருக்கம், கிசுகிசுவாக மாறியது. பின்னர் மீண்டும் தலையுடன் எகன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தலைக்கு ஜோடியானால் தளபதி விடுவாரா வில்லுவில் தனக்கு ஜோடியாக்கினார். இந்தப் படத்தை இயக்கிய பிரபுதேவாவுடனான காதல் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கு இணையங்களுக்கும் நல்ல தீனி போட்டது. வில்லுவில் இவர் காட்டிய கவர்ச்சி, கவர்ச்சியின் எல்லை வரை இருந்ததாக நண்பர் லோஷன் தன் வில்லு பட விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து சூரியாவுடன் இணைந்து நடிக்கும் ஆதவனை இவர் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். திரிஷா, ஸ்ரேயா, தமன்னா என பலர் வந்தாலும், பல கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா இருக்கின்றார் என்பது மிகைப் படுத்தப்பட்ட உண்மையல்ல.
பின்குறிப்பு : என் அன்புத் தம்பி ஆதிரை நயன்தாராவின் தீவிர ரசிகன் என்பது நேற்று ஒரு பதிவினைப் பார்த்த பின்னர் தெரியவந்தது. ஆகவே நயனின் தீவிர ரசிகன் ஆதிரைக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
போனஸ் படம் :
பிரத்தியேக குறிப்பு : நயனும் என்னைப் போல் நவம்பர் பேபிதான்.
தகவல் மற்றும் பட உதவிகள் : பல இணையத் தளங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 20 கருத்துக் கூறியவர்கள்
இலங்கை வலைப்பதிவர்கள்
முன்குறிப்பு : கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்க்கு முன்னர் எழுதிய பதிவு இது. நண்பர் மாயாவின் வேண்டுகோளின் படி மீள்பதிவாக எந்த மாற்றமும் செய்யாமல் இட்டிருக்கின்றேன். முன்னைய பதிவின் இணைப்பைக் கீழே கொடுத்திருக்கின்றேன். அதில் இந்தப் பதிவுடன் சம்பந்தப்பட்ட சில சர்ச்சையான பின்னூட்டங்கள் இருக்கின்றன, சென்று பாருங்கள். அத்துடன் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.
வலைப்பதிவின் தாக்கம் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களை விட இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பெரிதாக ஏற்படவில்லை. தமிழகத்திலிருந்து பலர் தங்களுக்கு என ஒரு வலையோ பல வலைகளோ வைத்திருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் உள்ள பல இலங்கையர்கள் எத்தனையோவிதமான வலைகள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் இலங்கையில் வாழும் தமிழ்ப் பதிவாளர்களின் எண்ணிக்கை வெறும் நூற்றுக்குள் தான் அடங்கிவிடுகின்றது. இதே நேரம் இலங்கையில் ஆங்கிலத்தில் பதியும் பதிவாளர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கணணி சம்பந்தப்பட்டவர்களாகவும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுபவர்கள் ஆகவும் மட்டுமே இருக்கிறார்கள்.
மிகவும் சிறந்த எழுத்தாளர்கள் கருத்தாளர்கள் இருந்தும் இலங்கையிலிருந்து வலைப்பதிவர்கள் வெளியே வரதாதற்க்கு என்ன காரணங்கள் என நுனிப்புல் மேய்ச்சலே இந்தப் பதிவு.
முக்கியகாரணமாக நாட்டின் யுத்த சூழ்நிலையைக் குறிப்பிடலாம். இதனால் எழுத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையே பலரை எழுதவிடாமல் தடுக்கின்றது என்பது என் கருத்தாகும். இதனாலே எழுதுவதில் பல அரசியலைத் தொடாமல் அல்லது பட்டும்படாமல் எழுதுகின்றார்கள்.
அடுத்தது வலைபற்றியும் வலையுலகம் பற்றியும் அதிகமான விழிப்புணர்பு இல்லாததாகும். ஏற்கனவே வலையுலகம் பற்றி சில குறிப்புகளையும், வலைப்பதிவாளர்களையும் மெற்ரோ நியூஸ் பத்திரிகை அறிமுகம் செய்தது. இதன் பின்னால் தினக்குரலில் தாசன் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றி எழுதியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர் மாயாவால் இலங்கை வலைப்பதிவாளர்கள் திரட்டி ஆரம்பிக்கப்பட்டது. மாயாவின் இலங்கை வலைப்பதிவர் திரட்டியைவிட இன்னொரு திரட்டியான இலங்கை வலைப்பதிவுகள் திரட்டியும் இலங்கையிலிருந்து எழுபவர்களின் ஆக்கங்களை திரட்டுகின்றது. இவ்வளவு முயற்சிகள் செய்தும் ஏனோ பலர் வலைப்பதிவை திரும்பிப்பார்பதே இல்லை. அதே ஒரு முறை நிர்ஷன் தன் பதிவில் குறிப்பிட்டதுபோல் வலைப்பதிவை சில எழுதுலக ஜாம்பவான்களும் கல்வியாளர்களும் ஏதோ சாதாரண விடயமாகவும் பொழுதுபோகாமல் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கொட்டும் இடமாகவுமே கருதுகிறார்கள்.
ஏற்கனவே எனக்கு இலங்கை எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். சிறந்த் எழுத்தாளர்கள் இருந்தாலும் வாரம் ஏதாவது ஒரு புத்தகம் வெளிவந்தாலும் இவர்கள் தங்களை இலங்கைக்கு வெளியே அறிமுகப்படுத்த ஏனோ தயங்குகிறார்கள். 2004ல் நானும் என் உறுவினர் ஒருவருமாகச் சேர்ந்து இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு இணையம் ஆரம்பித்தோம். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் மல்லிகை இதழிலும் இதனைப் பற்றி செய்திகள் வந்தன. தங்களது விபரங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கேட்டேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் என்னைத் தொடர்புகொண்டவர்கள் வெறும் மூன்றே மூன்று பேர்தான். ஏனையவர்கள் ஏனோ தொடர்புகொள்ளவில்லை. கவிஞர் மேமன்கவி எனக்கு ஊக்கம் அளித்தவர்களில் முக்கியமானவர் அவரே எத்தனையோ பேரிடம் நேரடியாகச் சொல்லியும் பலர் விரைவில் அனுப்பிவைக்கின்றேன் என்றார்கள் ஆனாலும் இன்னமும் அந்த விரைவான காலம் வரவில்லை என நினைக்கின்றேன். அந்த முயற்சி அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் மு.மயூரன் போன்றவர்களின் முயற்சியால் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு அதில் பல எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
இதே நேரம் இணையத்தில் பிரபலமான எழுத்தாளர்கள் வரிசையில் டொக்டர்.முருகானந்தன், திரு.உடுவை தில்லை நடராஜா, கவிஞர் மேமன்கவி இவர்கள் மூவருமே வலையில் எழுதுபவர்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து எழுதும் நம்மவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானதாகும்.
அடுத்த காரணமாக தொழில்நுட்ப அறிவும் இணைய வசதிகளும் இல்லாமையைக் குறிப்பிடலாம். கொழும்பு போன்ற மாநாகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே இணையச் சேவைகளை பெரும்பாலும் தங்கு தடை இன்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஏனைய இடங்களில் இருப்பவர்கள் இணையக் சேவை வழங்கும் கடைகளுக்குச் சென்றே தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்.
இன்னொரு காரணமாக பலர் வலையை சிறுபிள்ளை வேளாண்மை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை இந்த சிறுபிள்ளை வேளாண்மை பலரை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் பலரது கருத்துக்கள் வலைப்பதிவாளர்களைப் பற்றி எதிர்மறையாகவே இருக்கின்றது அண்மைய உதாரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா.
இலங்கையிலிருக்கும் எழுத்து ஊடகங்களிலும் சரி இலத்திரனியல் ஊடகங்களிலும் சரி வலைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை. சில பத்திரிகைகளில் சில விடயங்கள் வந்தாலும் வானொலி தொலைக்காட்சிகள் இதனை ஏனோ வெளிக்கொணரத் தயங்குகின்றன. அண்மையில் கூட வெற்றிஎவ் எம் வானொலியில் லோஷனை ஒருவர் வலைப்பதிவுகளைப் பற்றிக்கேட்டிருந்தார். அதற்க்கு அவர் இதனைப் பற்றி வானொலியில் சொல்வது சாத்தியம் இல்லை என்றார். (ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து). அதே நேரம் தமிழ்மொழிக்கென இருக்கும் இரண்டு தொலைக்காட்சிகளிலும் எந்த நிகழ்ச்சிகளோ நேர்முகங்களோ இதுவரை இடம் பெறவில்லை. தனியார் தொலைக்காட்சியில் இதற்கான நேரம் ஒதுக்கமாட்டார்கள். ஆனால் அரச தொலைக்காட்சியில் காலைவேளை நடைபெறும் நேர்முகங்களில் ஒரு வலைப்பதிவாளரையோ அல்லது இரண்டு வலைப்பதிவாளர்களையோ அழைத்து வலைப்பதிவு பற்றிக்கேட்கலாம்.
தமிழக ஊடகங்கள் எமது நாட்டு ஊடகங்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வலைப்பதிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஊட்டியுள்ளது என்றே கூறமுடியும். சன் நியூஸில் வலைப்பதிவாளர்களைப் பற்றிய செய்திகளும் ஒரு விபரணமும் வந்தது. விகடன் தன் வரவேற்பறையில் வார ஒரு வலைப்பதிவை அறிமுகம் செய்கின்றது.
என் ஆதங்கம் என்னவென்றால் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களினதும் புத்திஜீவிகளினதும் எத்தனையோ சுவாரசியமானதும் ஆக்கபூர்வமானதுமான விடயங்கள் பலரையும் சென்றடையவேண்டும் என்பதே ஆகும். நிச்சயமாக அவர்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. இவர்களிடம் ஆற்றல் இருக்கின்றது. அதனைவெளிக்கொணர ஏனோ தயங்குகிறார்கள். என்னைப்போன்ற பலர் சும்மா விளையாட்டாக ஆரம்பித்த வலைப்பதிவு இன்றைக்கு தமிழ்மண நட்சத்திரமாக விளங்குகின்றது என்றால் இதற்கான காரணம் பின்னூட்டமிடும் வாசகர்களே.
இந்த இடத்தில் தமிழ்மணத்திடம் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன். சில வேளைகளில் இது அதிகப்பிரசங்கித் தனமாக இருந்தாலும், இலங்கை வலைப்பதிவாளர்கள் சார்பில் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். இதுவரை எனக்கு தெரிந்து இலங்கையிலிருந்து நட்சத்திரமாக மு.மயூரன், வன்னியன், த,அகிலன் போன்ற இலங்கையிலிருந்து வலைப்பதிவு செய்யும் பதிவர்களை நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கவிட்டீர்கள் இதேபோல் இலங்கையிலிருந்து வலைபதியும் ஏனையவர்களையும் மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையோ அழைத்து நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்யுங்கள். என் நட்சத்திர வாரத்தில் இந்தக்கோரிக்கையை வைப்பது சரியானதா எனத் தெரியவில்லை.
ஏனைய வலைப்பதிவாளர்களிடமிருந்து இதுபற்றிய ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கின்றேன்.
இலங்கை வலைப்பதிவர்
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இலங்கை, தமிழமணம், பதிவர் வட்டம்
கண்டி மழையும் கள்ளக் காதலும்
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அழகிய மாலை நேரம் விவேகானந்த வீதி கடற்கரை கல்லிருக்கையில் நானு என் நண்பன் சிவாவும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தோம்.
"டேய் நம்ம குமாரின் போக்கு சரியில்லை" சிவா.
"ஏன்டா அவன் இந்த முறையும் கம்பசிலை அவன் கிளாஸ் அடித்தானே" நான்.
"இல்லையடா அவன் நல்லாப் படித்தாலும் நெட்டில் அடிக்கடி chat பண்ணுகின்றான். எனக்கென்னவோ அவன் அதிலை அடிக்ட் ஆகிவிடுவான் போல கிடக்கு" என சோகத்துடன் சொன்ன சிவா
"கூட நேரம் பெட்டையளோடுதான் Chat பண்ணுகின்றான்" என்ற பிரத்தியேக தகவலையும் சொன்னான்.
" சரி சரி கவலையை விடு அவனை சரிப்பண்ணலாம்" நான்.
******************************************************
வார நாட்களில் ஒருநாள் பேரராதனைப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏதோ ஒரு பீடத்தின் கணிணி ஆய்வுகூடத்தில் கணிணித் திரைக்கு முன்னால் ஏதோ ஒரு அரட்டை இணையத்தில் பிரத்தியேக அரட்டையில் குமார்.
குமார் : "ஹாய் அஞ்சலி எப்படி சுகம்"
அஞ்சலி : "ஹாய் குமார் நான் நலம் நீங்கள்?"
குமார் : "நானும் ஓகே அப்புறம் நேற்று எங்கை ஆளைக் காணவில்லை? நான் தவித்துப்போனேன், ஐ மிஸ் யூ லொட்"
அஞ்சலி : "இதுதானப்பா இந்தப் பெடியன்களின் குணம் ஒருநாள் காணவில்லையென்றாலும் ஐ மிஸ் யூ என படம் காட்டுகிறது"
குமார் : "சரி வெள்ளவத்தையில் நீங்கள் எந்த ரோட்"
2 மணித்தியாலமாக தொடர்ந்தது இவர்களின் உரையாடல்.
******************************************************
சில நாட்கள் கழித்து அக்பர் விடுதியில் ஓரிரவு சிவாவும் குமாரும்
"மச்சான் நான் உனக்கு ஒரு விடயம் சொல்லவா?", குமார்
"சொல்லடா? என்ன ஏதாவது பிரச்சனையா? புரொப் ஏதும் கரைச்சலா?", சிவா
"சீ அப்படியொண்டும் இல்லை நெட்டிலை அஞ்சலி என்ற ஒருவர் எனக்கு பிரண்டாகியிருக்கிறா, அவ என்னை லவ் பண்ணுகின்றார் போலை இருக்கு, எனக்கும் அவவிலை நல்ல விருப்பம்", குமார்.
"அடப்பாவி நீயும் விழுந்திட்டியா?, இந்தா நீ இங்கே வந்தது படிக்கத்தான் லவ் பண்ண இல்லை, சும்மா லவ் கிவ் என்டு அலையாதே" கோபத்துடன் சொன்னா சிவா.
"இல்லையடா மச்சான் அவள் நல்ல பெட்டையாகத் தான் தெரிகிறது, மற்றது அவள் எங்கடை வந்தியின்ரை சொந்தக்காரியாம், மெதடிஸ்டிலைதானாம் படித்தது, 97 ஏஎல் பயோ செய்தவராம்"
"மவனே உன்னைத் திருத்தமுடியாது நான் வந்தியுடன் கதைச்சிட்டு சொல்லுறன், முதல்லை நாளைக்கு செய்யவேண்டிய அசைன்ட்மெண்டை முடி".
******************************************************
அடுத்த நாள் காலை என் செல்பேசி அலறியது யாரென்று பார்த்தால் சிவா.
"மச்சான் ஒரு விசயம்" சிவா
"சொல்லு என்னவும் பிரச்சனையோ" நான்
"பிரச்சனை இல்லை, நம்ம குமார் தான் இலவிலை விழுந்துவிட்டான், பெட்டை யாரோ உன்ரை சொந்தக்காரி அஞ்சலியாம்" சிவா.
நான் சிரிசிரி என சிரித்துவிட்டு சொன்ன விடயம் மற்றப் பக்கத்தில் சிவாவை அதிர்ச்சியடைய வைத்தது.
"சரியடா மச்சான் உவனை நான் இனிப் பார்த்துக்கொள்கின்றேன்" என்ற படி சிவா செல்பேசியை அணைத்துவிட்டான்.
******************************************************
சில நாட்கள் கழித்து லேக் புரொண்ட் ரெஸ்டோரண்டில் நான், சிவா, குமார் மூவரும் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிந்தோம்.
"டேய் வந்தி உனக்கு அஞ்சலி மேட்டர் தெரியும் தானே " குமார்.
"ஓம் தெரியும், அவள் உன்னை லவ் பண்ணுகிறாள் எனச் சொன்னவளோ" நான்.
"இல்லையடா அவள் இதுவரை அப்படிச் சொல்லவில்லை, ஏன் உனக்கு என்னைப் பற்றிச் சொன்னவளோ?" என எதிர்க் கேள்வி கேட்டான் குமார்.
"இல்லை இல்லை அவள் அப்படியொண்டும் சொல்லவில்லை, ஆனால் அவளுக்கு கலியாணம் பேசுகின்றார்கள், மாப்பிள்ளை கனடா" என அதிர்ச்சிச் செய்தியை நான் சொல்லிமுடிக்க முன்னர்
"நான் இதை நம்பமாட்டேன், நாளைக்கே அவளை என்னவென்று கேட்கின்றேன்" என உணர்ச்சிவசப்பட்டு குமார் பதிலளித்தான்.
"டேய் அமைதியாக இருடா, நான் சொன்னனான் தானே இந்தப் பெட்டையளே இப்படித்தான் " என பெண்கள் சமூதாயத்தையே சீண்டினான் சிவா,
பின்னர் அவனை ஒருமாதிரி சாந்தப்படுத்தி விடுதிக்கு மூவருமாகச் சென்றோம்.
******************************************************
அடுத்த நாள் குமார் அஞ்சலிக்கு அவளின் திருமணம் பற்றி மின்னஞ்சலில் வினவியிருக்க ஓரிரு நாட்களில் அவனுக்கு அஞ்சலியிடமிருந்து பதில் வந்தது.
அன்பின் குமார்
முதலில் என்னை மன்னிக்கவும். நீங்கள் என்னைக் காதலிப்பது வந்தி சொல்லித்தான் தெரியும். முதலில் தெரிந்திருந்தால் என் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். என்ன செய்வது அம்மா அப்பாவின் கட்டளைப் படி நடக்கவேண்டியிருக்கிறது.
ஆகவே அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால் அதில் மீண்டும் ஒன்றுசேர்வோம்.
என்றும் உங்கள் மங்காத நினைவுகளுடன்
அஞ்சலி.
மடலைப் படித்த குமார் இரண்டு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருந்தான். பின்னர் சிவாவின் ஆலோசனைகளாலும் வழிகாட்டல்களாலும் அரட்டை அறைகள் பக்கம் போவதில்லை.
இறுதி ஆண்டுப் பரீட்சையில் நல்ல புள்ளிகள் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலமைப் பரிசில் கிடைத்துச் சென்றுவிட்டான்.
******************************************************
அவன் அஞ்சலியை மறந்துவிட்டான் Chat மறந்துவிட்டான் என்பதை அறிந்து சில நாட்களில் அதே வெள்ளவத்தை விவேகானந்தா வீதி கடற்கரையில் இன்னொரு கல்லில் நானும் சிவாவும்
"நீ கெட்டிகாரன் தான்டா. ஒருமாதிரி குமாரை சட் போதையில் இருந்து காப்பாத்தியாச்சு, கையைக் கொடடா" என என்னை கை கொடுத்து பாராட்டினான்.
"மச்சான் அவனுக்கு கடைசிவரை உண்மை தெரியக்கூடாது, தெரிந்தால் எங்களைக் கொன்றே போட்டுவிடுவான்" நான்.
"அந்த உண்மை எங்களுடன் மட்டுமே இருக்கட்டும்" சிவா.
அன்றைய ஞாயிறு ஏனோ எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.
******************************************************
சில நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடன் குமார் பேசினான்.
"மச்சான் எப்படியடா இருக்கிறாய்? " குமார்
"நான் ஓகே சிட்னி எல்லாம் எப்படி?, எப்ப ஊருக்கு வாறாய்?"
என எங்கள் கதை தொடர்ந்தது. கடைசியாக குமார் ஒரு கேள்வி கேட்டான்.
"மச்சான் அஞ்சலி எப்படி இருக்கிறாள்?"
"அவள் கனடாவிலை நல்லா இருக்கிறாள் 2 பிள்ளைகள்" என்றேன் அஞ்சலியாக அவனுடன் Chat பண்ணிய நான்.
பின்குறிப்பு: என்னுடைய பதிவுத் தலைப்புகள் கவர்ச்சியாக இல்லையென அடிக்கடி குறைபடும் நண்பர்களுக்காகவே இந்தத் தலைப்பு. இந்தக் கதை யாவும் கற்பனையல்ல.
எழுதியது வந்தியத்தேவன் at 22 கருத்துக் கூறியவர்கள்
ஐஸ்வர்யா, வந்தியத்தேவன்+ குந்தவை, அன்பே சிவம், டொலர்
அழகு
பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கின்ற ஒரு விடயம். எனக்கு ஐஸ்வர்யா ராய் அழகாகத் தெரிவார் ஆனால் அவருடன் போட்டியிட்டு இரண்டாவதாக வந்தவருக்கு ஐஸ்வர்யா அழகில்லாமல் தெரிவார். சின்ன குழந்தையிலில் ஒருவித அழகு, பின்னர் சிறுவர்களாக இன்னொரு வித அழகு, இளைஞன், இளைஞிகளாக கண்ணை வைத்தால் எடுக்கமுடியாத அழகு, திருமணத்தில் வாழ்க்கையின் அடுத்த படி என நினைக்கும் ஓர் அழகு, தாய்மை ஒருவித அழகு, முதுமை இன்னொருவித அழகு, சிலர் மரணத்தில் கூட அழகு.
காதல்
அட்டு பிகரைக் கூட தேவதைகளாகவும் இளவரசிகளாகவும் ஆண்களுக்கு காட்டும் பூதக் கண்ணாடி. உள்ளே இழுத்தவர்களை வெளியேறவிடாத மாயக் குகை. உள்ளே சென்றவன் வெளியே வரக் கஸ்டப்படுகின்றான். வெளியே இருப்பவன் உள்ளே செல்லக் ஆவலாக இருக்கின்றான். வரும்போது வரவேண்டிய விடயம். மாணவர் பருவத்தில் வந்தால் கல்வி நாசம். இளமைப் பருவத்தில் வந்தால் எதிர்காலம் நாசம். நண்பர்களின் நல்ல காதல்களையும் பார்த்திருக்கின்றேன் நாசமாகப் போன காதல்களையும் பார்த்திருக்கின்றேன், அதனால் நான் காதல் செய்யவில்லை ( தயவு செய்து நம்புங்கள்).
கவிதை உபயம் : தபூசங்கர்
கடவுள்
பார்க்கமுடியாத ஒரு விடயம். சர்ச்சைகளுக்கான ஒரு விடயம். எத்தனையோ போர்களுக்கு காரணமான விடயம். என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு சக்தி மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றது அந்த சக்திக்கு நாம் இட்ட பெயர் கடவுள். கடவுளைக் கண்டால் கேட்க நிறையக் கேள்விகள் இருக்கின்றன. மனிதரையும் இயற்கையையும் படைத்த கடவுள் ஏன் ஜாதி, மத, பேத, நிற, மொழி வேறுபாடுகளையும் படைத்தார். என் கடவுள் "அன்பே சிவம்".
பணம்
"கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்க்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்ற கருத்தே என் கருத்தும். பணம் என்பது மனிதர்களிடையே பரிமாற்றங்களை செயற்படுத்த கண்டுபிடிப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. இன்றைக்கும் எத்தனையோ நாடுகளில் மக்கள் பணம் என்பதையே அறியாமல் காட்டுவாசிகளாக வாழ்க்கை நடத்துகின்றார்கள். வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க பணத்தின் தேவையும் அதிகரிக்கின்றது. எத்தனையோ பணக்கார நாடுகள் ஆயுதப் பரிவர்த்தனைக்கு செலவிடும் பணத்தை ஏழைநாடுகளூக்கோ இல்லை தங்கள் நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கோ ஏனோ செலவிடுவதில்லை. என்றைக்கு எல்லோரும் இன் நாட்டு மன்னர் ஆகின்றார்களோ அன்றைக்குப் பணம் என்கின்ற விடயம் அழிந்துவிடும்.
அழகு, காதல், கடவுள், பணம் என்ற இந்த தொடருக்கு என்னை அழைத்த நண்பர் யோகாவிற்க்கு நன்றிகள். யாரை அழைப்பது என்பது கடினமான விடயம். ஆனாலும் வலையுலக சட்டப்படி 5 பேரை அழைக்கவேண்டும் என்பது விதி.
1. சிகே.மயூரன்: கிரிக்கெட் பற்றியே அடிக்கடி எழுதுபவர். நல்ல ரசனை உடையவர் என்பதால் நிச்சயம் தன்னுடைய கருத்துகளை வித்தியாசமாக சொல்வார்.
2. யாழினி : கவிதை விரும்பியான இவருக்கும் இந்த ஆப்பு.
3. சுபானு : ஊஞ்சலாடியபடி காதல் கவிதைகள் எழுதும் சுபானு.
4. டயானா : அறிந்ததும் அனுபவமும் என பல அனுபவங்களை எழுதுபவர்.
5. மயூரேசன் : அண்மையில் ஒரு காதல் கவிதை எழுதி காதலானனவர்.
நண்பர்களே என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 16 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனுபவம், கடவுள், காதல், தொடர்விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09
இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள்
இலங்கையின் பொருளாதாரம் எனக் கருதப்படும் பெரும்தோட்டத்துறை ஊழியர்கள் தங்கள் தினசரி சம்பளமாக ரூபா 500 கேட்டு போராட்டம் நடத்திவருகின்றார்கள். நாட்கூலியாக 500 ரூபா என்பது மிகவும் சிறிய தொகையே இன்றைய விலைவாசியில் இந்தச் சம்பளம் ஒரு சாரசரிக் குடும்பத்திற்க்கு போதாத நிலைமையே காணப்படுகின்றது.
மேசன் வேலை, மின்சார வேலை, பிளம்பர் என ஏனைய தொழில்செய்பவர்கள் தினப்படியாக ரூபா 1000ற்க்கு மேல் தற்போது சம்பாதிக்கிறார்கள். ஒரு காலத்தில் கொழும்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலை செய்தவர்களுக்கு ரூபா 1000 தினச் சம்பளமாக வழங்கப்பட்டது. ஏனையவர்களின் நிலை இப்படி இருக்கும் போது இலங்கையின் பொருளாதாரத்துடன் நெருங்கிய தோட்டத் தொழிலாளர்களுக்கு 290 ரூபா இதுவரை காலமும் வழங்கப்பட்டது. இதனை ரூபா 500 ஆக அதிகரிக்கவே அவர்கள் தற்போது போராட்டம் நடத்துகின்றார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் நுவரேலியா, தலவாக்கொல்லை, ஹட்டன் போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. பெரும்பாலும் அங்கேயுள்ள இளைஞர்கள் கொழும்பிற்க்கு நகை வேலை, ஹோட்டல்களில் வேலை என தங்கள் தொழில்களை மாற்றிவிட்டார்கள். அதனால் அங்கே பெண்களும் ஓரளவு வயது முதிந்தவர்களும் மாத்திரமே பெரும்பாலும் வேலை செய்கின்றார்கள்.
இவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க இவர்களோ குளிரிலும், அட்டைக் கடிகளிலும் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
இளையதளபதியும் அரசியலும்
கடந்த சில நாட்களாக நடிகர் விஜயின் அரசியல் பற்றிய செய்திகளே பெரும்பாலும் சகல ஊடகங்களையும் ஆக்கிரமித்திருந்தன.விஜய் காங்கிரஸில் சேரப்போகின்றார் என பலரும் காத்திருக்க, ராகுல் காந்தியோ 35 வயதுக்கு மேற்பட்டர்வர்களுக்கு இளைஞர் அணியில் இடமில்லை என மறைமுகமாக விஜயின் இளைஞர் அணித் தலைவர் ஆசைக்கு மண்போட்டுவிட்டார்.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் உலகத் தமிழர்களைக் விருப்பத்தை கேட்டுவிட்டு தன் அரசியல் பிரவேசம் இருக்கும் என்றார். நானும் ஒரு தமிழன் என்ற வகையில் விஜய்க்கு என் கருத்தைச் சொல்கின்றேன். அரசியலில் இருக்கும் நடிகர்களான சரத், விஜயகாந்த். நெப்போலியன், வீரத்தளபதி ரித்தீஷ் போன்றவர்கள் திடீரென அரசியலில் குதிக்கவில்லை. இவர்கள் தங்களுக்குப் பிடித்த கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேறி தற்போது நெப்போலியன், ரித்தீஷ் போன்றவர்கள் பாராளமன்ற உறுப்பினர்களாகவும், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் அரசியல் கட்சித் தலைவர்களாகவும் ஆனார்கள்.
நீங்களோ இதுவரை எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகச் சேராமால் நேரடியாகவே இளைஞர் அணித் தலைமை அல்லது சட்ட மன்ற அல்லது நாடாளமன்ற உறுப்பினர் ஆவது எப்படி நியாயமாகும்? முதலில் ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக கட்சிப் பணியாற்றுங்கள், பின்னர் அரசியல்வாதியாகலாம்.
சன் பிக்சர்ஸ் சில சந்தேகங்கள்.
தற்போது திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் சன் பிக்சர்ஸ் இதுவரை நேரடியாக எந்தப் ப்டத்தையும் தயாரிக்காமல் தயாரிப்பாளர்களிடம் இருந்து நல்ல விலைக்கு வாங்கி விற்பனையும் விளம்பரமும் செய்கின்றது. ஒரு பொருளைத் தயாரித்தவனுக்குத் தான் தயாரிப்பாளர் என்ற பெயர் செல்லவேண்டும் அதனை விட்டுவிட்டு மொத்தவியாபாரிகள் போல் பொருளைக் கொள்வனவு செய்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்க்கும் சன் எப்படி தயாரிப்பு நிறுவனமாகும்?
ஏனென்றால் சன்னின் பெரும்பாலான படங்கள்(எந்திரன் உட்பட) இடைநடுவில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டதுதான். நடிகர்கள் சம்பளம், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் என அனைத்தையும் முதலில் தயாரித்தவரே கவனிக்கின்றார். அப்படியென்றால் அவர்களுக்கு முதலாளி முதலில் படத்தைத் தயாரித்தவரே அப்படியிருக்க தரகராக வேலை பார்க்கின்ற சன்னை ஏன் அவர்கள் வாங்கிய படத்தில் நடிக்கும் நடிகள் அனைவரும் புகழ்ந்து தள்ளுகின்றார்கள்.
அயன், எந்திரன் தவிர சன் வாங்கிய அனைத்துப் படங்களும் சிறிய பட்ஜெட் சிறிய நடிகர்கள் நடித்த படங்களே. இந்த சன்னின் தயாரிப்பு அரசியல் பற்றி யாராவது தெளிவாக விளங்கப்படுத்தினால் புண்ணியம் கிடைக்கும்.
கொம்பக் கிண்ணத்தை சுவீகரித்த இந்தியா
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்து டோணி மீண்டும் தான் ஒரு அதிர்ஷ்டசாலித் தலைவர் எனக் காட்டிவிட்டார். இந்தப் போட்டியில் இந்தியா 319 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் அந்த இலக்கை மிகவும் வேகமாக துரத்திய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் செய்த சிறு சிறு தவறுகளினால் தோல்வியைத் தழுவியது.
ஏனென்றால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் பாடசாலை மாணவர்கள் போல் பந்துவீசினார்கள். ஆவ்திசையில் பந்துபோட்டால் தில்ஷான் அடிப்பார் எனத் தெரிந்தும் அதே திசையில் அடிக்கடிபந்துபோட்டு தில்ஷானை நான்கு ஓட்டங்கள் எடுக்கவைத்த நெஹ்ராவோ இஷாந்த் சர்மாவோ சிறப்பாக பந்துவீசவில்லை.
இந்தியப் பந்துவீச்சாளர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாவிட்டால் தென்னாபிரிக்காவில் நடைபெறும் சாம்பியன் கிண்ணத்தில் மிகவும் கஸ்டப்படவேண்டிய நிலை ஏற்படும். அதே போல் இலங்கைத் துடுப்பெடுத்தாட்ட வீரர்களும் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கு ஒருக்கால் நன்றாக ஆடிவிட்டு அந்த ஆட்டங்களினால் அணிக்குள் இன்றைக்கும் இருக்கும் மஹெல ஜயவர்த்தன தன்னுடை துடுப்பாட்டத்தை இன்னும் திருத்தவேண்டும்.
பொதுவாக மைதானத்தில் அமைதியாக காணப்படும் சங்ககார தான் ஆட்டமிழந்த பின்னர் நடந்துகொண்ட விதம் அவரின் நடத்தைக்கு களங்கம் விளைவிக்கும்.
லோஷனும் அவரது மகனும்
சில நாட்கள் முன்னர் நண்பர் லோஷனுக்கும் அவரது மகனுக்கும் நடந்த உரையாடலை தம்பி புல்லட் ஒட்டுக்கேட்டிருந்தார் அந்த உரையாடலை என்னுடன் பகிர்ந்துகொண்டார், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் ப்ழமொழிக்கமைய உங்களுக்காக அந்த உரையாடல்.
லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷன் : ஏன்டா?
லோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்
லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|
ஒரு சிறிய சுய விளம்பரம் : இந்தப் பதிவின் மூலம் நான் இந்த வருடம் சதமடித்திருக்கின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 17 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், இலங்கை, கிரிக்கெட், சினிமா, சூப், விளையாட்டு