பாடசாலைகள் கல்வியை மட்டுமல்ல நல்ல நண்பர்கள், ஒழுக்கம், விளையாட்டு, வாசிப்பு மற்றும் பல விடயங்களை எமக்கு பெற்றுத்தரும் ஒரு இடம். இதனை விட என் பாடசாலைக் காலத்தில் எனக்கு அறிமுகமான ஒரு விடயம் காமிக்ஸ் புத்தகங்கள். அதிலும் ராணி காமிக்ஸ் எங்கள் பள்ளியில் மிகவும் பேமஸ்.
நான், கவி, வேந்தன், கபில்(பெயரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடுவான் என நினைக்கவேண்டாம்), மலர் என ஐந்துபேர்கள் பஞ்சபாண்டவர்கள் போல வகுப்பில் ஒன்றாகவே குழப்படி செய்வோம். எது கிடைத்தாலும் (வேறு என்ன அடிதான்) ஐவீரும் ஒருவீராக பகிர்ந்துகொள்ளும் நல்ல பழக்கமும் எமக்கு உண்டு.
பெரும்பாலும் மலரே ராணி காமிக்ஸ் நெல்லியடி மொடேர்ன் ஸ்ரோரிலோ அல்லது பருத்தித்துறை உதயன் புத்தகநிலையத்திலோ(டொக்டர் முருகானந்தன் மருத்துவசாலை கட்டடத்தில் இருந்த கடை) வாங்கிவருவான். அதனை நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வாசிப்பது வழக்கம். பெரும்பாலும் ஐந்துபேரும் ஒன்றாக இருந்தால் யாராவது சீபிளேன்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்பதால் மூன்று பேர் முதலிலும் மற்ற இருவர் பின்னரும் வாசிப்போம். 
எங்கள் பாடசாலையில் அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா போன்ற புத்தகங்களுக்கு அனுமதி ஆனால் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு தடா. ஏனென்றால் அவற்றில் வரும் படங்கள் சிறுவர்களைக் கெடுத்துவிடுமாம். ஏனென்றால் ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியையோ அல்லது ஏனைய ஏஜெண்டையோ முத்தமிடாமல் அவரின் எந்தக் கதைகளும் வருவதில்லை. மாடஸ்தி பிளைசி பெரும்பாலும் உள்ளாடைகளுடனே துப்புத் துலக்குவ்பார். இரும்புக்கை மாயாவியும் சிலவேளைகளில் ஜேம்ஸ்பாண்டாக மாறி விடுவார். ஆகவே பாட்சாலையில் இப்படியான காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை போட்டது சரிதான், ஆனால் அந்த நேரம் எமக்கு அந்த உண்மை விளங்கவில்லை. இப்போ ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகளை வாசித்தால் புரிகின்றது.
ஆசிரியர்களிடமும் மாணவர் தலைவர்களிடமும் பிடிபடாமல் வாசிக்க நாம் செய்யும் உத்திகள் புத்தகத்தை விஞ்ஞானம் அல்லது சமயப் புத்தகத்தின் உள்ளே வைத்து வாசிப்பது, வெளியில் இருந்துபார்த்தால் பொடியள் மும்முரமாக அப்பர் தேவாரமும் மின்குமிழின் அமைப்பும் படிப்பது போல் இருக்கும். அடுத்தது பாடசாலையில் அனுமதியுள்ள கதை கட்டுரைப் புத்தகங்களிற்குள் வைத்து வாசிப்பது. வாங்கிற்க்கு(பெஞ்ச்) அடியுள் வைத்து வாசிப்பது அதுவும் கஸ்டம் என்றால் மைதானத்திற்க்கு மற்றவர்கள் விளையாடச் செல்லும் வேளையில் அங்கே சென்று சுதந்திரமாக வாசிப்பது. நாங்கள் ஐவரும் பாடசாலையில் விளையாட்டுக்காக எதுவுமே செய்தது கிடையாது. 
அதே நேரம் எமது வகுப்பில் இன்னொரு பிரிவில் கற்கும் மாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாடகைக்கு விடுவார்கள். ஒரு பாட நேரத்திற்க்கு 50 சதம். கொஞ்சம் பெரிய தீபாவளிச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் என்றால் புத்தகத்தின் சைசுக்கு ஏற்றபடி 1 ரூபா 2 ரூபாவாக அந்த வாடகை மாறும். வாடகைக்கு புத்தகம் விடுபவர்களின் சட்டதிட்டம் பொது நூலகத்தை விட கொடூருமானது
குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை வாசித்துவிட்டுக்கொடுக்கவேண்டும்.
சிலவேளைகளில் அவர்களே அடுத்து யாரிடம் கொடுக்ககூடாது.
ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தலைவர்களின் கைகளில் மாட்டினால் தம்மைக் காட்டிக்கொடுக்ககூடாது.
அப்படிக் காட்டிக்கொடுத்தால் இனிமேல் காட்டிக்கொடுப்பவனுக்கு புத்தகம் வாடகைக்குத் தரப்படமாட்டாது.
புத்தகம் பிடிபட்டால் அதற்க்குரிய பெறுமதியை அவருக்கு கொடுக்கவேண்டும்.
வாசிக்கும் நேரத்தில் தனது அனுமதி இன்றி இன்னொருவருக்கு புத்தகத்தை கைமாற்றம் செய்யக்கூடாது.
ஆகக்கூடியது இருவர் மட்டும் சேர்ந்துவாசிக்கலாம்.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு கொண்டுபோய் வாசிப்பது என்றால் வாடகைப் பணம் இரண்டு மடங்கு.
இப்படிப் பல சட்டங்கள், நாங்கள் பொதுவாக எம்மிடையே காசைப் பங்கிட்டு எப்படியும் வாசித்துவிடுவோம். எங்கள் குறூப்புக்கு 007ம் மாடஸ்தியும் தான் பேவரிட் அதிலும் கவி இப்பவும் மாடஸ்தியின் நினைவுகளில் இருக்கின்றான். நாம் இடையிடையே சந்திக்கும் போது மீள நினைக்கின்ற விடயங்களில் பாடசாலை நாட்களில் வாசித்த இந்தமாதிரி எங்கள் சாகசங்களை நினைப்பது வழக்கம்.

அண்மையில் நாம் சந்தித்தப்போது இன்னொரு நண்பன் தான் வாசித்த ராணி காமிக்ஸை மாணவர் தலைவர் ஒருவரிடம் பறிகொடுத்து அதன் உரிமையாளருக்கு புத்தகத்தின் பெறுமதியான ரூபாய் 7.50 செலுத்திய கதையைச் சோகத்துடன் சொன்னான்.
சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ஒரு ராணி காமிக்ஸ் வாசித்தேன் பல வருடங்கள் போனாலும் ஜேம்ஸ் பாண்டும் மாறவில்லை ராணி காமிக்ஸின் தரமும் மாறவில்லை. நான் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஏனோ பலர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி எல்லாம் ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே இருந்தது.
பிற்குறிப்பு : 2010ல் ரசித்த பதிவுகள் பகுதி 2 சில நாட்களில் வெளிவரும். நேரமின்மை காரணமாக அது தாமதமாகின்றது. ஒரு பதிவு எழுத ஒரு மணி நேரம் போதும் அதுவே இங்கே கிடைப்பது கஸ்டம். அதனால் நான் தான் இடைக்கிடை மட்டும் என் இருப்பையும் தக்க வைத்துக்கொள்கின்றேன்.

