வலைப்பதிவின் தாக்கம் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களை விட இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பெரிதாக ஏற்படவில்லை. தமிழகத்திலிருந்து பலர் தங்களுக்கு என ஒரு வலையோ பல வலைகளோ வைத்திருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் உள்ள பல இலங்கையர்கள் எத்தனையோவிதமான வலைகள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் இலங்கையில் வாழும் தமிழ்ப் பதிவாளர்களின் எண்ணிக்கை வெறும் நூற்றுக்குள் தான் அடங்கிவிடுகின்றது. இதே நேரம் இலங்கையில் ஆங்கிலத்தில் பதியும் பதிவாளர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கணணி சம்பந்தப்பட்டவர்களாகவும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுபவர்கள் ஆகவும் மட்டுமே இருக்கிறார்கள்.
மிகவும் சிறந்த எழுத்தாளர்கள் கருத்தாளர்கள் இருந்தும் இலங்கையிலிருந்து வலைப்பதிவர்கள் வெளியே வரதாதற்க்கு என்ன காரணங்கள் என நுனிப்புல் மேய்ச்சலே இந்தப் பதிவு.
முக்கியகாரணமாக நாட்டின் யுத்த சூழ்நிலையைக் குறிப்பிடலாம். இதனால் எழுத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையே பலரை எழுதவிடாமல் தடுக்கின்றது என்பது என் கருத்தாகும். இதனாலே எழுதுவதில் பல அரசியலைத் தொடாமல் அல்லது பட்டும்படாமல் எழுதுகின்றார்கள்.
அடுத்தது வலைபற்றியும் வலையுலகம் பற்றியும் அதிகமான விழிப்புணர்பு இல்லாததாகும். ஏற்கனவே வலையுலகம் பற்றி சில குறிப்புகளையும், வலைப்பதிவாளர்களையும் மெற்ரோ நியூஸ் பத்திரிகை அறிமுகம் செய்தது. இதன் பின்னால் தினக்குரலில் தாசன் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றி எழுதியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர் மாயாவால் இலங்கை வலைப்பதிவாளர்கள் திரட்டி ஆரம்பிக்கப்பட்டது. மாயாவின் இலங்கை வலைப்பதிவர் திரட்டியைவிட இன்னொரு திரட்டியான இலங்கை வலைப்பதிவுகள் திரட்டியும் இலங்கையிலிருந்து எழுபவர்களின் ஆக்கங்களை திரட்டுகின்றது. இவ்வளவு முயற்சிகள் செய்தும் ஏனோ பலர் வலைப்பதிவை திரும்பிப்பார்பதே இல்லை. அதே ஒரு முறை நிர்ஷன் தன் பதிவில் குறிப்பிட்டதுபோல் வலைப்பதிவை சில எழுதுலக ஜாம்பவான்களும் கல்வியாளர்களும் ஏதோ சாதாரண விடயமாகவும் பொழுதுபோகாமல் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கொட்டும் இடமாகவுமே கருதுகிறார்கள்.
ஏற்கனவே எனக்கு இலங்கை எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். சிறந்த் எழுத்தாளர்கள் இருந்தாலும் வாரம் ஏதாவது ஒரு புத்தகம் வெளிவந்தாலும் இவர்கள் தங்களை இலங்கைக்கு வெளியே அறிமுகப்படுத்த ஏனோ தயங்குகிறார்கள். 2004ல் நானும் என் உறுவினர் ஒருவருமாகச் சேர்ந்து இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு இணையம் ஆரம்பித்தோம். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் மல்லிகை இதழிலும் இதனைப் பற்றி செய்திகள் வந்தன. தங்களது விபரங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கேட்டேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் என்னைத் தொடர்புகொண்டவர்கள் வெறும் மூன்றே மூன்று பேர்தான். ஏனையவர்கள் ஏனோ தொடர்புகொள்ளவில்லை. கவிஞர் மேமன்கவி எனக்கு ஊக்கம் அளித்தவர்களில் முக்கியமானவர் அவரே எத்தனையோ பேரிடம் நேரடியாகச் சொல்லியும் பலர் விரைவில் அனுப்பிவைக்கின்றேன் என்றார்கள் ஆனாலும் இன்னமும் அந்த விரைவான காலம் வரவில்லை என நினைக்கின்றேன். அந்த முயற்சி அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் மு.மயூரன் போன்றவர்களின் முயற்சியால் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு அதில் பல எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
இதே நேரம் இணையத்தில் பிரபலமான எழுத்தாளர்கள் வரிசையில் டொக்டர்.முருகானந்தன், திரு.உடுவை தில்லை நடராஜா, கவிஞர் மேமன்கவி இவர்கள் மூவருமே வலையில் எழுதுபவர்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து எழுதும் நம்மவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானதாகும்.
அடுத்த காரணமாக தொழில்நுட்ப அறிவும் இணைய வசதிகளும் இல்லாமையைக் குறிப்பிடலாம். கொழும்பு போன்ற மாநாகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே இணையச் சேவைகளை பெரும்பாலும் தங்கு தடை இன்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஏனைய இடங்களில் இருப்பவர்கள் இணையக் சேவை வழங்கும் கடைகளுக்குச் சென்றே தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்.
இன்னொரு காரணமாக பலர் வலையை சிறுபிள்ளை வேளாண்மை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை இந்த சிறுபிள்ளை வேளாண்மை பலரை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் பலரது கருத்துக்கள் வலைப்பதிவாளர்களைப் பற்றி எதிர்மறையாகவே இருக்கின்றது அண்மைய உதாரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா.
இலங்கையிலிருக்கும் எழுத்து ஊடகங்களிலும் சரி இலத்திரனியல் ஊடகங்களிலும் சரி வலைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை. சில பத்திரிகைகளில் சில விடயங்கள் வந்தாலும் வானொலி தொலைக்காட்சிகள் இதனை ஏனோ வெளிக்கொணரத் தயங்குகின்றன. அண்மையில் கூட வெற்றிஎவ் எம் வானொலியில் லோஷனை ஒருவர் வலைப்பதிவுகளைப் பற்றிக்கேட்டிருந்தார். அதற்க்கு அவர் இதனைப் பற்றி வானொலியில் சொல்வது சாத்தியம் இல்லை என்றார். (ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து). அதே நேரம் தமிழ்மொழிக்கென இருக்கும் இரண்டு தொலைக்காட்சிகளிலும் எந்த நிகழ்ச்சிகளோ நேர்முகங்களோ இதுவரை இடம் பெறவில்லை. தனியார் தொலைக்காட்சியில் இதற்கான நேரம் ஒதுக்கமாட்டார்கள். ஆனால் அரச தொலைக்காட்சியில் காலைவேளை நடைபெறும் நேர்முகங்களில் ஒரு வலைப்பதிவாளரையோ அல்லது இரண்டு வலைப்பதிவாளர்களையோ அழைத்து வலைப்பதிவு பற்றிக்கேட்கலாம்.
தமிழக ஊடகங்கள் எமது நாட்டு ஊடகங்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வலைப்பதிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஊட்டியுள்ளது என்றே கூறமுடியும். சன் நியூஸில் வலைப்பதிவாளர்களைப் பற்றிய செய்திகளும் ஒரு விபரணமும் வந்தது. விகடன் தன் வரவேற்பறையில் வார ஒரு வலைப்பதிவை அறிமுகம் செய்கின்றது.
என் ஆதங்கம் என்னவென்றால் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களினதும் புத்திஜீவிகளினதும் எத்தனையோ சுவாரசியமானதும் ஆக்கபூர்வமானதுமான விடயங்கள் பலரையும் சென்றடையவேண்டும் என்பதே ஆகும். நிச்சயமாக அவர்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. இவர்களிடம் ஆற்றல் இருக்கின்றது. அதனைவெளிக்கொணர ஏனோ தயங்குகிறார்கள். என்னைப்போன்ற பலர் சும்மா விளையாட்டாக ஆரம்பித்த வலைப்பதிவு இன்றைக்கு தமிழ்மண நட்சத்திரமாக விளங்குகின்றது என்றால் இதற்கான காரணம் பின்னூட்டமிடும் வாசகர்களே.
இந்த இடத்தில் தமிழ்மணத்திடம் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன். சில வேளைகளில் இது அதிகப்பிரசங்கித் தனமாக இருந்தாலும், இலங்கை வலைப்பதிவாளர்கள் சார்பில் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். இதுவரை எனக்கு தெரிந்து இலங்கையிலிருந்து நட்சத்திரமாக மு.மயூரன், வன்னியன், த,அகிலன் போன்ற இலங்கையிலிருந்து வலைப்பதிவு செய்யும் பதிவர்களை நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கவிட்டீர்கள் இதேபோல் இலங்கையிலிருந்து வலைபதியும் ஏனையவர்களையும் மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையோ அழைத்து நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்யுங்கள். என் நட்சத்திர வாரத்தில் இந்தக்கோரிக்கையை வைப்பது சரியான எனத் தெரியவில்லை.
ஏனைய வலைப்பதிவாளர்களிடமிருந்து இதுபற்றிய ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கின்றேன்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
27 கருத்துக் கூறியவர்கள்:
நல்ல அருமையான கருத்தை கூறி உள்ளிர்கள் வந்திய தேவன்.
உங்கள் வேண்டுகோள் நிறை வேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்ல வேண்டுகோள் தான்...
நன்கு தொகுத்துள்ளீர்கள்
இலங்கையில் இப்போது சிறிது சிறிதாக விழிப்புணர்வு வந்துகொண்டிருப்பாதாக நினைக்கின்றேன்.உங்களைப்போன்ற மண்னின் மைந்தர்களின் முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்..
இலங்கை வலைப்பதிவுகள் திரட்டியில் இதுவரை 58 பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றில் 30-40 வரையானவையே தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகின்றன. மொத்தத்தில் 50-75 வரையான பதிவர்களே இலங்கையில் இருந்து பதிவார்கள் என நான் நினைக்கிறேன்.
1. வலைப்பதிவுகள் தொடர்பில் விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும்.
2. தொழில்நுட்பம் இணையத்தொடர்பு என்பன தடங்கல்களாக இருக்கின்றன.
எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை விடுத்து, பாடசாலை மாணவர்கள் இளைஞர்களை உள்ளீர்க்க முயற்சிக்க வேண்டும். தம்மை 'பெரிய' எழுத்தாளர்களாக சுய பிரகடனம் செய்தவர்கள் பின்னால் வரட்டும்.
இதற்கு ஒரு இணைந்த முயற்ச்சி தேவை.
மிகவும் சரியாக சொன்னீர்கள் !
ஆனாலும் இப்போ கொஞ்சம் அதிகமாகவே வலைப்பதிவர்கள் வெளிவரத்தொடங்கியிருக்கிறார்கள் . .
ஆரொக்கியமான போக்கு தான் . .
நசரேயன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். பெயர் வித்தியாசமாக இருக்கிறது.
தூயா இந்த வேண்டுகோளால் பலர் நிச்சயம் வெளிச்சத்திற்க்கு வருவார்கள். என்னுடைய நட்சத்திர அனுபவத்தில் பல புதிய முகங்கள் அறிமுகமாகின அதேபோல் தமிழ்மணம் நம்மவர்களை ஊக்குவித்தால் நிச்சயம் வெளிச்சம் கிடைக்கும்.
முரளிகண்ணன் வருகைக்கு நன்றிகள்.
ரஜீபன் சிலகாலமாக பலர் பலவிதத்தில் விழிப்புணர்பு ஊட்டுகிறார்கள். ஆனாலும் இதுகாணது. நிறையத் திறமைசாலிகள் இருக்கிறார்கள் ஏனோ வருவதில்லை.
நிமல் நீங்கள் கூறிய காரணங்களும் முக்கியமானவை. சில "பெரிய" தலைகளுக்கு வலைப்பதிவாளர்களையே பிடிப்பதில்லை. தன்னைத் தாங்களே கவிஞராகவும் எழுத்தாளராகவும் சொல்லிக்கொண்டு திரிகின்ற சிலரும் வலைப்பதிவு என்றால் குப்பை என்றதாக அறிந்தேன்.
ஆமாம் மாயா ஆரோக்கியமான போக்குத்தான். எப்போ இலங்கை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடத்துவது? (அடிக்கவரவேண்டாம்)
இலங்கை வலைப்பதிவுகள் பற்றி சிறப்பான ஆய்வு ஒன்றை செய்துள்ளீர்கள். எனக்குள்ளும் அப்படி ஒரு கேள்வி இருந்தது. வருங்காலத்தில் இந்தக்குறை நிவர்த்தி செய்யப்படும் என நம்புகிறேன்.
-கலையரசன்
கலையகம்
இலங்கையிலிருந்து பதிவிடும் தமிழ்மணத்தில் தங்களை இணைக்காதவர்களின் விலாசங்களை தேடி பலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். இது பற்றி ஏற்கனவே மாயாவுக்கும் அறிவித்திருந்தேன்.
ஆனாலும் மிகக் குறைவானவர்களே பதில் தந்திருந்தார்கள். தரமான பதிவு இல்லாததும் அதற்கு ஒரு காரணம் வந்தி. தம்மை தாழ்மை எண்ணத்துக்குள் உட்படுத்தி வெளிப்படுத்த சிலர் மறுக்கிறார்கள். நீங்கள் மேற்சொன்ன காரணங்கள் அனைத்தும் ஏற்புடையவை.
என்னதான் இருந்தாலும் நாம் விரைவில் சந்திப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கலையரசன். நிச்சயமாக எதிர்காலத்தில் இந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என நினைக்கின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கலையரசன். நிச்சயமாக எதிர்காலத்தில் இந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என நினைக்கின்றேன்.
நிர்ஷன் நானும் ஆரம்பத்தில் என் பதிவுகளை நானே தரம் இல்லை என நினைத்தேன்(இப்போ மட்டும் என்னவாம் எனக்கேட்காதீர்கள்) ஆனாலும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் கருத்துக்களும் என்னை எழுதவைத்தன.
பதிவுக்கு நன்றி.
-/ புலன்பெயர்தமிழ்ப்பதிவன்.
நல்ல பதிவு நண்பரே.
ஆங்கிலத்தில் பதிவிடும் எனது நண்பர்கள் பல நண்பர்கள் தமிழில் பதிவெழுத ஏனோ தயங்குகிறார்கள். உங்கள் பதிவு சுட்டியை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்.
இது பதிவு...
இது குறித்தான ஆதங்கம் எனக்கும் உண்டு. ஆனால் இணைய சூழலும் அரசியல் சூழலும் தடங்கல்களுக்கான காரணங்கள்.
தினக்குரல் பரவாயில்லாமல் செய்கிறது என நினைக்கிறேன்.
நான் பார்த்தவரை வித்தகர்கள் பதிவுலகிற்கு வரமாட்டினம். அவை ஒரு எட்டடி தள்ளி நிற்கவே விரும்புகினம். தமிழகசூழலிலும் இது பொதுதான். எல்லாரும் எழுத்தாளராகுவதை இவ்வளவு நாளும் எழுத்தாளராக இருந்தவர்கள் பொறுக்க மாட்டினம் தானே.. அதுதான் இந்த எள்ளல் -
ஆனால் பொதுவாக சகல புலம் பெயர்ந்த பெயராத இலங்கை வலைப் பதிவர்களும் வலைப் பதிவை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சி. போலிப் பிரச்சனைகளோ சூடான பிரச்சனைகளோ இல்லையென்பது கூடுதல் மகிழ்ச்சி.
இதுவரை எனக்கு தெரிந்து இலங்கையிலிருந்து நட்சத்திரமாக மு.மயூரன், வன்னியன், த,அகிலன் போன்ற இலங்கையிலிருந்து வலைப்பதிவு செய்யும் பதிவர்களை நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கவிட்டீர்கள் //
இதில் மயுரன் மட்டுமே இலங்கையிலிருந்து..
இந்தியாவின் விளையாட்டு, இந்தியாவின் நடிகர்கள், இந்தியாவின் அரசியல் என்றே பதிவு போட்டுக்கொண்டிருக்கும் இலங்கைப்பதிவர்கள் எதற்காக, திரட்டிகளிலே தனியே "இலங்கைப்பதிவர்" இட ஒதுக்கீடு வேண்டுமென்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. விளக்குவீர்களா?
சன் ரீவியிலே.... மன்னிக்கவேண்டும்.. சன் டீவியிலே அப்துல் கலாம் ஆண்டுப்பிறப்புக்கும் தேசிய (இந்திய இந்திய) தினத்துக்கும் என்ன உரையாற்றினார் என்று கேட்டு அழும் இலங்கைப்பதிவர்கல், இலங்கையிலிருந்தாலென்ன, இங்கிலாந்திலிருந்தாலென்ன, எவ்வகையிலே இலங்கைப்பதிவராவார்கள்?
பதிவுகளிலே இலங்கைப்பதிவர்கள், இங்கிலாந்துப்பதிவர்கள் என்றெல்லாம் இட ஒதுக்கீடு அவர்களாகவே தேர்ந்து கொன்ண்டாலேயுண்டு.
தனிப்பட்ட ஒவ்வொரு பதிவருக்கும் அவருக்கு வேண்டிய விடயங்களிலே பதிவிட உரிமையுண்டு; அவரவர் விருப்பம்; எவரும் விமர்சிக்க உரிமை கொண்டாரில்லை. ஆனால், இந்தியாவைப் பற்றியே முக்கால்நேரம் மூக்காலே பேசிவிட்டு, இலங்கைப்பதிவர்கள் என்று இட ஒதுக்கீடு கேட்பதிலும்விட, இந்திய ஒட்டுண்ணிப்பதிவர்கள் என்று இட ஒதுக்கீடு கேட்பது பொருத்தமானது. you can even compete for Tamil-desiblog awards.... and of course the name வந்தியத்தேவன் can be cashed well in those circles
பெயரிலி உங்களுக்கு அப்படி என்ன கோபம் இலங்கையர்கள் மேல். நாம் இங்கே எப்படி இருக்கின்றோம் என்பது தெரியுமா? ஒரு சிலருக்கு வந்த மிரட்டல்கள் தெரியுமா? சயந்தன் சொன்னதுபோல் போலித் தொல்லைகள் இல்லைத்தான் ஆனால் சில இனம் தெரியாத விஷமிகளின் தொல்லைகள் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. எங்களாலும் நீங்கள் நினைப்பதுபோல் எழுதமுடியும் ஆனால் சூழ்நிலை தடுக்கின்றது. இதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையோ.
இலங்கையில் இருந்தால் என்ன இங்கிலாந்தில் இருந்தால் என்ன இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கையர்கள் தான் இதில் எந்த சந்தேகம் இல்லை. நாங்கள் இலங்கையைப் பற்றித்தான் எழுதவேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது.
இந்தியாவைப் பற்றியோ பாகிஸ்தானைப் பற்றியோ பேசுவதற்க்கு எந்த ஐனநாயக நாட்டிலும் உரிமையை உண்டு. நாம் இந்தியாவைப் பற்றி எழுதினால் என்ன இஸ்ரேலைப் பற்றி எழுதினால் என்ன எங்கள் பெயர் என்னவோ இலங்கை வலைப்பதிவாளர்கள் தான்.
பார்ப்போம் ஏனைய புலம் பெயர்ந்த புலம் பெயராத உறவுகள் இதற்க்கு என்ன பதில் சொல்கின்றார்கள் என்பதை.
வணப்பம் பெயரிலி ஐயா வணக்கம் ! உங்கட பின்னூட்டத்தில இலங்கைப்பதிவர் ஒருவர் திரு அப்துல் கலாம் பேட்டியை யாரோ கேட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள் (அதுவும் இலங்கைப்பதிவர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்) . .
நானும் தடவிப்பார்த்தன் வேற யாருமில்ல மாயா தான் !!!!!!!!
சரி சரி மாயா அப்துல் கலாமின் வீடியோ பெட்டி தானெ கேடடிருக்கியார் நமீதாவோடையோ அல்ல விஜயோட போட்டியையோ கேட்கல்ல தானே !!!!!
அப்பிடி அப்துல் கலாமின் மீது என்ன வெறுப்பு ?
இல்ல மாயா மீது ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையோ !!!!
ம்ம்ம் ஆனாலும் உங்களிட்ட வயதுக்கு தகுந்த மரியாதை இல்ல . .
சரி வாறன்
தமிழ்மணத்திடம் சலுகைகள் கேட்பதைவிட நாம் நமக்குள் இணைந்து செயற்பட்டால் பொருத்தமாக இருக்கும்.
1. எமக்கான திரட்டி ஒன்றை உருவாக்குதல்
2. நம் இணைந்து கருத்தாட வழிவகை செய்தல்.
3. இருக்கும் அனைத்து பதிவர்களையும் ஒன்று சேர்த்தல்
4. பதிவர் சந்திப்புக்கள், பட்டறைகள்
5. பொது விழிப்புணர்வு நடவடிக்கை
இனிவரும் நாட்களில் இது தொடர்பில் சிந்திக்கலாம். என்னால் முடிந்த பணிகளை நான் செய்ய முயற்சிக்கிறேன். தொடர்பிலிருக்கவும்.
நன்றி.
மாயா அய்யா
உங்களைத்தான் சொன்னேன். அப்துல் கலாமிலே எனக்கேதும் வெறுப்பில்லை.
ஆனந்தக்கும்மிகளையாட நிறையப்பேர் இருக்கிறார்கள். நமக்கும் அதற்கும் சரிப்படாது. சும்மா இருந்தாலே, விஜயசாந்திகள் விரலைக் காட்ட அடிக்கும் "விபரமான" விஜயகாந்துகள் இருக்கும் தமிழ்வலைப்பதிவிலே வயதுக்குத் தகுந்த மரியாதையை தக்கார் தகாதார் எவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதில்லை ;-)
/இலங்கையில் இருந்தால் என்ன இங்கிலாந்தில் இருந்தால் என்ன இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கையர்கள் தான் இதில் எந்த சந்தேகம் இல்லை. நாங்கள் இலங்கையைப் பற்றித்தான் எழுதவேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது.
இந்தியாவைப் பற்றியோ பாகிஸ்தானைப் பற்றியோ பேசுவதற்க்கு எந்த ஐனநாயக நாட்டிலும் உரிமையை உண்டு/
வந்தியத்தேவன்
மேலே நான் எழுதியதை நீர் வாசித்திருப்பீர் என்று நம்புகிறேன்.
"தனிப்பட்ட ஒவ்வொரு பதிவருக்கும் அவருக்கு வேண்டிய விடயங்களிலே பதிவிட உரிமையுண்டு; அவரவர் விருப்பம்; எவரும் விமர்சிக்க உரிமை கொண்டாரில்லை."
உமது கருத்திலே எனது பிரச்சனை, ந்தியப்பிரச்சனைகளையே வருடிப்புணர்ந்தெழுதியெழும் இந்தியா வாழாப்பதிவர்களுக்கு இலங்கைப்பதிவாளர் என்று இட ஒதுக்கீடு என்பது திரட்டிகளிலே எதற்கென்பதே. நீர் எதையெழுதலாம் எழுதக்கூடாது என்று சொல்ல நான் யார்? ஆனால், இலங்கைப்பதிவர்கள் என்ற பதாகையின்கீழே, வடிவேலுவையும் இந்தியாவின் கிரிக்கெட்டினையும் கட்டியெழுதும்போது, இலங்கைப்பதிவர்கள் என்ற இட ஒதுக்கீடு எதுக்கோ?
நிச்சயமாக, இலங்கையிலிருந்து எதை எழுதலாம் எதை எழுதமுடியாது என்று தெரியாத நிலையிலிருந்து நான் இதைப் பேசவில்லை. இலங்கை அரசியல், இனம்சார் பிரச்சனையைத்தான் இலங்கைப்பதிவர்கள் எழுதவேண்டுமென்பதில்லை. அதைத்தான் சொன்னேன்.
நந்தனவனத்து ஆண்டி, நீங்கள் மாயாவோ? எதுக்குக் குதிக்கிறியள்? முன்னரைப்போல, பித்தம் தெளியாமல், அன்பான மொழியிலே பின்னூட்டம் சொந்தப்பதிவிலேயே போடலாம்; அனுமதிக்கலாமே? ;-)
http://www.orupaper.com/files//issues/102/K_london_pages__43.pdf
புலம்பெயர் தமிழ்பத்திரிகை ஒன்றிலான பதிவர் அறிமுகம்.
வணக்கம் வந்தி,
காத்திரமான வாதப்பிரதிவாதங்கள் ஏற்புடையவை.
இலங்கைப் பதிவாளர்கள் பற்றிய பதிவு தேவையானது.
பெயரிலி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்பூர் என பதிவர்களை பிரித்துக்காட்டுவதற்காகவோ பாகுபாட்டுடன் வெளிக்கொணர்வதற்காகவோ வந்தி இந்தப் பதிவினை தரவில்லை.
இலங்கை பதிவாளர்கள் வலைப்பதிவுகளில் பதிவிட முன்வராமையும் பதிவிடுபவர்களை ஊக்குவிப்பதற்கான சுய ஆலோசனையையும் தான் கூறியிருந்தார். இதில் பாகுபாட்டைக் காணாதீர்கள்.
வடிவேலுவின் படம் இலங்கையில் திரையிடப்படுகிறதென்றால் ஏன் அதைப்பற்றி எழுத முடியாது? கலை ரசனைக்கு எல்லை சுட்ட முடியுமா?
உலகமே திரும்பிப்பார்க்கும் விளையாட்டாக கிரிக்கெட் மாறியிருக்கிறது. திறமையானவர்களின் விளையாட்டை ரசிப்பதிலும் விமர்சிப்பதிலும் என்ன தவறு இருக்கிறது? ரசனைக்கு எல்லை வரையறையோ காலவரையறையோ விதிக்க முடியுமா?
பதிவர்களை பிரித்துப்பர்க்க முயல வேண்டாம். குறிகாட்டுதல்களுக்காக சுட்டிக்காட்ட வேண்டியதை பிரிவினை என எண்ண வேண்டாம்.
வெளிப்படையாக கேள்விகளை முன்வைத்தமைக்கு பெயரிலிக்கு நன்றிகள்.
சரியான நேரத்தில் சரியான பதிவுகள். எனக்கும் எப்படியாவது இலங்கையில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் ஆவல். பார்ப்போம் காலச் சூழ்நிலை மாறவேண்டும். இப்பொழுது வவுனியாவில் எனது மாணவர்களிடையே வலைப்பதிவினைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றேன். பெரும்பாலானோர் வலைப்பதிவினை உருவாக்குகின்றார்கள். ஆனால் தொடர்ந்து நடத்த அவர்களால் இயலவில்லை.
பார்த்தேன்...
நன்றி
அண்ணா இதே பதிவை மீண்டும் மீள்பதிவாக இடுங்கள், இக்காலத்துக்கு தேவையான பதிவொன்று.கடந்த வருடம் என்ன நிலமை என புதிய பதிவர்கள் அறிந்து கொள்ள உதவும்..
வாழ்த்துக்கள் நண்பர்களே!... இவ்வளவு பதிவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதைக்காண மிக்க மகிழ்சியளிக்கிறது. கடந்த சில வருடங்களாக நானே எழுதி நான் மட்டுமே வாசித்த எனது பதிவையும் தூசுதட்டி, புதுப்பொழிவுடன் புத்துயிர் பெறச்செய்கிறேன். உங்கள் அணைவரினதும் ஆதரவு எனக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நன்றி
http://www.4tamil.blogspot.com/
http://fortamil.tk
உங்களைப்போலவே இலங்கைப்பதிவர்களுக்கு தனித்த அடையாளம் வேண்டும் என எண்ணினேன். ஆனால் இப்போது எனது 'பதிவர்' என்ற அடையாளத்தையே துறக்கப் பிராயர்த்தனப்பட்டுக்கொண்டிருக்கிறேன்
Post a Comment