இந்தியன் பாகம் - 2

நான் அவனில்லை, பில்லா இப்போது சிங்கம் என சில படங்களின் பாகம் 2 வெளியான நிலையில் பாகம் 2க்கு முதல் பாகத்தில் அடிபோட்ட இந்தியன் பாகம் 2 இயக்குனர் ஷங்கரினால் மீண்டும் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என ஒரு சின்ன கற்பனை.

முதல்பாகத்தில் இந்தியன் தாத்தா மகன் சந்ரு கமலை ஏர்போர்ட்டில் கொலை செய்துவிட்டு ஏதோ ஒரு நாட்டிலிருந்து போலிசாரைத் தொடர்புகொண்டு மீண்டும் வருவேன் என எச்சரிக்கின்றார். இந்த இடத்திலிருந்து பாகம் இரண்டு தொடங்கவேண்டும்.

காட்சி 1
டெல்லியில் மிகவும் பாதுகாப்பான ஒரு இடம் அந்த தேசிய கட்சியின் தலைவர் மர்மான முறையில் இறந்துகிடக்கின்றார். அருகே ஊழல்பெருச்சாளிகளை களைவதே என் தொழில் ஐயாம் பேக் இப்படிக்கு இந்தியன் என்ற சிறு அட்டையும் இருக்கிறது.

காட்சி 2
டெல்லிக் கொலைதொடர்பாக சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான மீட்டிங், இந்தியன் தாத்தாவை மீண்டும் கைது செய்யவும் அவரின் அடுத்த இலக்கு தமிழகத்தில் ஊழல் செய்யும் செய்த அரசியல்வாதிகள் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததாகவும் கமிஷனர் விஜயகுமார்(நம்ம மஞ்சுளா மாமியின் கணவர் தான் ) ஏனைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துக்கொண்டிருந்தார். இந்தியன் தாத்தாவை கைது செய்து விசாரணை நடத்த டிஎஸ்பி துரைசிங்கத்தை அப்போயிண்ட்மெண்ட் செய்யலாம் என முடிவு செய்ததாகவும் ஆனால் அவர் அமெரிக்காவில் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரனை(கமல் படம் என்பதால் கடத்தல்காரனை இஸ்லாமியப் பெயராக சொன்னால் கல்லாகட்டும்)பிடிக்க போயிருப்பதால் அவருக்குப் பதிலாக அசிஸ்டெண்ட் கமிஷனர் ராகவனை நியமித்திருப்பதாகவும் அறிவிக்கும் போது இன்னொரு இளமையான கமல் அறிமுகம்.அந்தக்கமல் யார் என்றால் இந்தியன் தாத்தாவின் தம்பி மகன்.(இங்கே வைக்கின்றோம் ட்விஸ்ட்).

காட்சி 3
ஏசி கமலுக்கும் அவர் கூடவே அவருக்கு அசிஸ்டெண்டாக இருக்கும் சமந்தாவுக்கும் லவ் பத்திக்கொள்கின்றது. செவ்வாய்க்கிரகம் போல பிரமாண்ட செட்டுப் போட்டு ஒரு பாடலுக்கு இருவரும் நடனமாடுகின்றார்கள். பாடல் முடிந்தபின்னர் தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் குஜராத்தில் ஒரு அரசியல்வாதியும் ஒரே நாளில் இந்தியன் தாத்தாவினால் கொல்லப்படுகின்றார்கள். இந்த இருகொலைகளும் எப்படி நடந்தது என போலீசார் தலையைப் பிய்த்துக்கொள்கின்றார்கள்.

காட்சி 4
இந்ததலைமுறையினர் தான் கொல்லும் காரணத்தை மறந்துபோயிருப்பதால் விஜய் டிவி நீயா?நானா?வுக்கு இந்தியன் தாத்தா காரணத்தை விளக்கி ஒரு விடியோ அனுப்புகின்றார். இந்தியன் தாத்தா நல்லவரா என ட்விட்டர்ஸ், பேஸ்புக்கர்ஸ், புளொக்கர்ஸ்சை வைத்து கோபிநாத் ஒரு நீயா?நானா? நடத்துகின்றார்.

காட்சி 5
அடுத்தகொலை மும்பையில் நடக்கின்றது. மும்பைப் போலீசாரிடம் கொலையாளி சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கின்றது. உடனே மும்பைப் போலீசார் தமிழக காவல்துறையை தொடர்புகொண்டு உடனடியாக ஏசி ராகவனைக் கைது செய்ய ஆணை இடுகின்றது,(இடைவேளை).

காட்சி 6
இந்தியன் தாத்தாவாக வேஷம் போட்டு, இத்தனை கொலைகளையும் செய்தது தான் என ஏசி ராகவன் ஒத்துக்கொள்கின்றார். அடுத்த கொலையாக அரசியலில் மிகப்பெரும் பிரபலம் ஒருவரை ஆகஸ்ட் 15 அன்று கொல்வேன் என்றும் அன்றைக்குத் தான் நேதாஜியும் காந்தியும் வாங்கித் தந்த சுதந்திரத்துக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்றும் ராகவன் கோர்ட்டில் சபதமிடுகின்றார்.

ராகவனின் சபதம் நடந்ததா? உண்மையான இந்தியன் தாத்தா எங்கே? யார் அந்த அரசியல் பிரபலம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் வெள்ளித் திரையில் மிகப் பிரமாண்டமாக.

இந்தியன் தாத்தாவாக இம்முறை மேக்கப் போட கமல் அவ்வளவு மினைக்கெடவேண்டாம். ஏசியாக வேட்டையாடு விளையாடு கெட்டப்பை கொஞ்சம் மாத்தினால் போதுமானது. 

இடையில் ஒரு பாடலுக்கு மனிஷா கொய்ராலாவும் ஊர்மிளாவும் குத்தாட்டம் போடவேண்டும். (சந்ரு கமலின் நினைவுகளை ஏசிக் கமலிடம் சொல்லும் போது இந்தப்பாடலை செருகலாம்).

கவுண்டரின் பாத்திரத்துக்கு சந்தானத்தை அணுகலாம். 

சமந்தாவுடன் ஒரு முத்தக்காட்சி வைத்தால் இளசுகளின் மனம் வெந்துவிடும் என்பதால், மனிஷா கொய்ராலாவுடனோ அல்லது ஊர்மிளாவுடனோ முத்தக்காட்சி வைக்கலாம், முதல் தலைமுறை இளசுகளின் மனம் கொஞ்சம் வெம்பும்.

இந்தியன் தாத்தாவு ட்விட்டர் எக்கவுண்ட் தொடங்கி அதில் அடுத்து யாரைக் கொல்லவேண்டும் என தன் ஃபோலவர்ஸிடம் ஆலோசனை கேட்கலாம். (அந்நியன் ஞாபகம் வந்தால் சங்கம் பொறுப்பில்லை).

உங்கள் கற்பனை வளத்தையும் தட்டிவிடுங்கள்.

பின்குறிப்பு : விரைவில் வலைப்பதிவர்களுக்கிடையே ஒரு கிரிக்கெட் போட்டி நடாத்தப்போவதாக ஒரு செய்தி இந்த வருடம் நானும் ஒரு பதிவு போட்டு என் சீட்டைப் பிடித்துவிட்டேன். ஏலத்தில் என்னை எடுப்பவர்கள் இப்பவே துண்டைப் போடவும்.