Showing posts with label வலைப்பதிவு. Show all posts
Showing posts with label வலைப்பதிவு. Show all posts

இருக்கிறத்தில் வலைப் பதிவர்கள்

இலங்கையில் இருந்து மாதம் இருமுறை வெளியாகும் சஞ்சிகையான இருக்கிறம் 01.10.2009 இதழில் பல வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் நேரடியாகவும் வலைப்பதிவில் இருந்தும் வெளியாகியிருக்கின்றது.



இதனால் எதிர்காலத்தில் பல வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் வலை எழுதுபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவும் அமைகின்றது.



இலங்கை வலைப்பதிவர்களின் இனிய ஒன்ற்கூடல் என்ற தலைப்பில் லோஷனால் ஆகஸ்டில் நடந்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றிய ஆக்கம் படங்களுடன் வெளியாகியிருக்கின்றது.



மருதமூரானின் உன்னைப்போல் ஒருவன் திரைவிமர்சனம் "சாமானியனின் சமூக அக்கறை" என்ற தலைப்பிலும் இவர் கமல் பற்றி எழுதிய "கமல்ஹாசன் திரைத்துறையின் மறக்கமுடியாத ஆளுமை" என்ற கட்டுரையும் வெளியாகியிருக்கின்றது.



யோகாவின் யோ வாய்ஸ் வலையிலிருந்து "2070 ஆம் ஆண்டில் ஒருநாள்" என்ற நீர் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையும் வெளியாகியிருக்கின்றது.



டொக்டர்.எம்.கே.முருகானந்தனின் "நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாம்" என்ற உடல் ஆரோக்கிய கட்டுரையும் பிரசுரமாகியிருக்கிறது.



சிகே.மயூரனின் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் என்ற விளையாட்டு சம்பந்தமான கட்டுரையும், லோஷனின் ஆஷஸ் 2009 அலசல் என்ற கிரிக்கெட் கட்டுரையும் வெளியாகியுள்ளது.



ஜனாவின் வலைப்பூவிலிருந்து "யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்புகள்" என்ற சுவையான ஆக்கமும், சாருகேசியின் வலையில் வெளியான பலரின் பாராட்டுகளைப் பெற்ற "பெரிய மனுசி" என்ற சிறுகதையும் ஜப்பானிய அழகிகளும் நூதன விவசாயமும் என்ற கட்டுரையும் முத்மஹரி என்ற வலைப் பூவிலிருந்தும், வெளியாகியுள்ளன.



இவற்றில் சில நேரடியாக வலைப்பதிவர்களால் இருக்கிறம் சஞ்சிகைக்காக நேரடியாக எழுதப்பட்டவை. சில வலைப் பூக்களிலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானவை. வலைப் பூக்களில் இருந்து எடுத்தவற்றில் அந்த வலைப் பூவின் முகவரியைத் தந்திருந்தால் வாசகர்கள் அவற்றை வலைப் பூவிலும் வாசித்து தங்கள் கருத்துகளை கூற முடியும்.



அண்மைக் காலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வலைப் பதிவர்களின் ஆக்கங்கள் வெளிவருவது ஆரோக்கியமான விடயமே. இருக்கிறத்தில் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

என் உளறல்களுக்கு வயது நான்கு

ஆச்சரியமாக இருக்கின்றது நான் வலையுலகிற்க்கு காலடி எடுத்து வைத்து கடந்த ஜூலை 8 ந்திகதியுடன் மூன்று வருடங்கள் நிறைவுபெற்றுவிட்டன. அத்துடன் இதுவரை 150 பதிவுகள். பலரும் இந்த மைல்கற்களை இலகுவாக கடந்தாலும் நான் கடந்துவந்தது ஆச்சரியம் தான்.

ஆரம்பத்தில் என் எழுத்துக்கள் எனக்கே அவ்வளவு சுவாரசியம் கொடுக்கவில்லை, காரணம் பெரும்பாலும் சீரியசான விடயங்களை அந்தக் காலத்தில் எழுதியதாலோ தெரியாது. அதனால் அவ்வளவு பதிவுகள் போடவில்லை. பின்னர் நண்பர்கள் கொடுத்த ஊக்குவிப்பும், தினக்குரல், மெட்ரோ நியூஸ் பத்திரிகைகளில் என் வலையைப் பற்றி வந்த கட்டுரைகளும் என்னை இன்னும் எழுதத் தூண்டியவை.

அதன்பின்னர் கடந்தவருடம் செப்டம்பரில் தமிழ்மண நட்சத்திரமாகிய பின்னர் கிடைத்த அங்கீகாரம் என்னை இப்போது ஆகக்குறைந்தது கிழமைக்கு ஒரு பதிவாதல் எழுதத்தூண்டுகிறது.

இந்த நேரத்தில் என்னை வலையுலகிற்க்கு இழுத்துவந்த யுவகிருஷ்ணா(லக்கி லுக்), தமிழ்மணத்தில் இணைக்க உதவிகள் செய்த கானாபிரபா, என்னுடைய வலையினை அழகாக வடிவமைத்துத் தந்த நண்பன் லெனின் ஆகியோருக்கு என்றென்றும் நன்றிகள்.

அத்துடன் என்னுடைய பம்பல் பதிவாக இருந்தால் என்ன காத்திரமான பதிவாக இருந்தால் என்ன அனைத்திலும் தங்கள் கருத்துகளை இட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்திய அனைத்து பின்னூட்ட நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்னர் மூன்றாவது ஆண்டு பற்றிய பதிவுக்கு காரணம் இவ்வளவு நாளும் நான் அந்த நாளை நான் மறந்துபோனேன் எனக்கு நினைவூட்டிய நண்பர் வர்மாவுக்கு நன்றிகள்.

இந்தப் பதிவை இன்று மாலை இட்டவுடன் உடனடியாக என்னுடன் தொடர்புகொண்டு, நீங்கள் இதுவரை எழுதியதில் உங்களுக்குப் பிடித்த பதிவுகளைப் பற்றி சில குறிப்புகளுடன் அவற்றிற்க்கு இணைப்புக் கொடுக்கவும் என வேண்டுகோள் விடுத்த இனிய நண்பர் கானாபிரபாவிற்கு நன்றிகள்.



அதனால் பதிவில் சில மாற்றங்கள் செய்து புதிதாக எழுதியுள்ளேன். எனக்குப் பிடித்த சில பொக்கிச உளறல்கள்.

2006

காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா?

எல்லோரும் ஏதோவொரு கட்டத்தில் இந்த காதலைக் கடந்துவந்திருப்பீர்கள். சிலருக்கு வெற்றியளித்திருக்கலாம் சிலருக்கு வெறுப்பளித்திருக்கலாம். தோல்வியளித்திருக்கலாம் என நான் கூறவில்லை. ஏனெனில் காதல் ஒருபோதும் தோற்றதில்லை. காதலர்கள் தான் தோற்றுள்ளனர். லைலா மஜ்னுவிலிருந்து தோற்ற காதலர்கள்தான் பெரிதாக பேசப்படுகிறார்களே ஒழிய வெற்றியடைந்த காதலர்கள் பற்றி ஒருவரும் கதைப்பதில்லை.

அறிமுகத்துக்கு அடுத்த முதல் உளறலே காதல் பற்றியதுதான். முதலில் எழுதிய பதிவுமட்டுமல்ல இதில் கிஞ்சித்தும் நகைச்சுவையோ எள்ளலோ இருக்காது.

தமிழகச் சகோதரர்களுக்கு ஒரு மடல்

நான் பிறந்ததிலிருந்து தமிழ்நாட்டு புத்தகங்கள் திரைப்படங்கள் எனப் பல வாசித்தும் பார்த்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக தமிழ் சீரியல்கள் எம் கலாச்சாரத்தை சீரழிப்பது போல் அல்லது கொச்சைப் படுத்துவதுபோல் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எமது கலாச்சாரத்தை இவ்வளவு கேவலப்படுத்தவில்லை.

மெஹா சீரியல் கொடுமைகள் பற்றிய பதிவு. சிலவேளை சீரியசாக சீரியலைப் பற்றி எழுதியதாலோ என்னவோ ஒரு பின்னூட்டம் கூட கிடைக்கவில்லை.

மனித நேயம் வளர்ப்போம்

உலகத்துக்கு திருகுறள் என்ற பொதுமறை தந்தவர்கள் நாம். வீரத்தையும் காதலையும் மிக அழகாக புறநானூறு அகநானூறு என்று தந்தவர்கள் நாம், தொல்காப்பியம் என்னும் அழியாப்புகழ் பெற்ற வாழ்க்கைநெறிகளைக் கூறும் நூலையும் தந்தவர்கள் நாம் , இப்படி பல விழுமியங்களை உடைய நாங்கள் இன்றும் ஜாதி என்னும் நச்சு செடியை வளர்ப்பது முறையா?

என்னை மீண்டும் ஒரு சீரியஸ் பதிவராக காட்டிய பதிவு. சமூக நலனை கருதி எழுதிய பதிவு.

மழைக்கால நினைவுகள்

எப்படியும் எங்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும்போதே மழையும் ஆரம்பித்துவிடும் அதிலும் எமது பாடசாலை அலைவந்து தாலாட்டும் கடலுக்கு அருகில் இருப்பதால் மழை நாட்களில் கடல் ஒரு பெண்னைப்போல் தோற்றமளிக்கு அதுதான் அழகான ஆபத்து. நீலக்கடல் கருமையாக இருப்பதுடன் வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் இணையும் கடல் எமது கடல் ஆகையாலும் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த நாட்களில் தான் நீந்தப்போவது.

என் பாடசாலை மழைக்கால அனுபவங்கள். கானாபிரபாவும் சந்திரவதனா அக்காவும் மட்டும் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.

2007

சங்கரின் சிவாஜி

எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார்

முதல் முதலாக எழுதிய திரைப்பட விமர்சனம். ஏனோ அந்த நாட்களில் பெரிதாக பலரைக் கவரவில்லை. இதன் பின்னர் முட்டை அவிப்பது எப்படியென்ற நண்பர் ஒருவரின் ஆக்கத்தினை அவரின் அனுமதியோடு என் பதிவில் இட்டு கும்மிக்கு த்யாரான காலம் இது.

குற்றவாளிக் கூண்டில் காதல்!

இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கும் காதல் தேவையா? காதலுக்கு எதிராக இதுவரை யாரும் வழக்கு தொடரவில்லை அதனால் நான் தொடர்கிறேன். இந்த வழக்கின் முடிவில் நீதிபதி காதலுக்கு மரண தண்டனை விதித்து இன்றைய இளைஞர்களை அதிலும் ஆண் வர்க்கத்தினரை காப்பாற்றவேண்டும்.

மீண்டும் காதல் பற்றிய சர்ச்சையான பதிவு. சினேகிதி, சுவாதி சுவாமி மற்றும் இனிய தோழி ரம்யா ஆகியோரின் பின்னூட்டங்கள் பல கருத்துகளை எடுத்துரைத்தன.

நெஞ்சு பொறுக்குதில்லை

நாளை இந்தியாவின் 60வதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு ஜோராக களை கட்ட இருக்கிறது. சகல டீவிகளிலும் அரை மணித்தியாலம் சுதந்திரத தினம் பற்றி யாரோ பாடுகிறார்கள் அல்லது கதைக்கிறார்கள். பின்னர் சகல நிகழ்ச்சிகளும் சினிமா சினிமா. ட்ரையிலர்களைப் பார்த்தாலே புரியும்.

இந்திய சுதந்திர தினக்கொண்டாட்டங்களின் போது தொலைக்காட்சிகள் நடத்தும் கேலிக்கூத்துகளை விமர்சித்த பதிவு. இதனைப்போன்ற பல பதிவுகளை எனக்கும் முன்னரும் பின்னரும் பலர் எழுதினாலும் இதுவரை அந்தக்கேலிக் கூத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

விநாயகருக்கு நேர்ந்த கதி.

எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு விடயத்தை பகிர விரும்புகிறேன். விநாயகர் சதுர்த்தி தேவைதான் ஆனால் அதற்க்காக இப்படியா பிள்ளையார் சிலைகளை கேவலப்படுத்துவது.
கடவுளா? கல்லா? என பலர் கேள்விகேட்க இதுவும் ஒரு காரணம் தான்.

முதன்முறையாக படம் போட்டு படம் காட்டிய பதிவு. எதிர்வரும் திங்கட்கிழமை கூட இதனை மறுபதிப்பாக இடலாம் காரணம் விநாயக சதுர்த்தி பற்றிய பதிவு.

கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்

இன்னொரு மொழி சமூக கோபங்களை அடிப்படையாக கொண்டபதிவு.

ஓய்வெடுங்கள் சச்சின்

சில‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் மூத்த‌ வீர‌ர்க‌ள் ப‌ற்றி திலிப் வெங்சகார் கூறிய‌ க‌ருத்து உண்மையாகும் போல் தெரிகின்ற‌து. மூத்த‌ வீர‌ர்க‌ள் இள‌ம் த‌லைமுறைக்கு இட‌ம் விட்டு விட்டு ம‌ரியாதையாக‌ ஒதுங்குவ‌து ந‌ல்ல‌து.

வாழ்க்கையில் மறக்கமுடியாத பதிவு, சச்சின் ரசிகர்களைச் சீண்டியதுடன் டொக்டர் புருனோ பல தகவல்களை ஆதாரத்துடன் பின்னூட்டங்களாக‌ தந்த பதிவு. இதற்க்குத் தான் முதல் முறை அதிக ஹிட் கிடைத்தது என நினைக்கின்றேன்.


ஓம் சாந்தி ஓம்

இடைவேளைக்கு பின்னர் ஷாருக் கண்ட கனவுபோல் காட்சிகள் வருகின்றது, இவரின் தந்தை முன்னாள் பிரபல நடிகர் ராஜேஸ் கபூர் , ஷாருக்கின் பெயர் ஓம் கபூர். இந்த ஷாருக் முற்றிலும் மார்டேன் ஆன புதியவராக இருக்கிறார். இவருக்கு மூன்று அழகிகள் உதவியாளர்கள்.

சிவாஜிக்குப் பின்னர் ஒரு படத்தை ப்ரிவியூ ஷோ பார்த்துவிட்டு படம் வெளிவரமுன்னர் எழுதிய பதிவு. சில பின்னூட்டங்களில் நிறையத் தகவல்கள் கிடைத்தன.

நாயாட நரியாட

கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும்.
நடனமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம் அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஆர்கானிக் போன்றவை மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்தபின்னர் தான் நடனம் ஆடவும் கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை சீரியஸ் பதிவர் விம்பத்தில் இருந்து பம்பல்ப் பதிவர் அல்லது மொக்கைப் பதிவர் விம்பத்துக்கு மாற்றிய பதிவு. மானாட மயிலாடவை கிண்டல் செய்து எழுதியது.

ஆண்க‌ள் ஆண்க‌ள் தான்

சிறுவ‌னோ குழ‌ந்தையோ இளைஞ‌னோ யாராக‌ இருந்தாலும் ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் என்ற‌ சார‌ப்ப‌ட‌ என‌க்கு வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் உங்க‌ள் பார்வைக்காக‌. மின்ன‌ஞ்ச‌லை என‌க்கு அனுப்பிய‌வ‌ர் ஒரு பெண். ஆக‌வே இது ஆண்க‌ளை அவ‌தூறாக‌ அவ‌மதிக்கும் ஒரு பெண்ணாதிக்க‌வாதியின் செய‌லாக‌வே என‌க்குப் ப‌டுகின்ற‌து.

நாயாட நரியாடவின் பின்னர் கொஞ்சம் லொள்ளுப் பண்ண வைத்த பதிவு இன்றைக்கு இதேபோல் பல பதிவுகள் வந்துவிட்டன.

2008ல் எழுதியவற்றில் பிடித்தவை நீளம் கருதி அடுத்த பதிவில் தருகின்றேன். மீண்டும் அனைத்து பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் அனானிகளுக்கும் என் இனிய நன்றிகள்.

டிஸ்கி : நீலக்கலரின் இருப்பவை என்னுடைய பதிவுகள் பற்றிய சிறிய குறிப்புகள், இந்தக் குறிப்புகள் மூலம் என்னுடைய வலைப்பதிவு அனுபவங்களின் முன்னேற்றம் புரியும்.

கேபிள் சங்கரும் ஜெயா டிவியும்

இன்றைய டயல் ஜெயா டிவி நிகழ்ச்சியில் பிரபல வலைப்பதிவர் திரு. கேபிள் சங்கர் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றது. தனது சிறப்பான திரை விமர்சனங்கள் மூலம் பலரை ஈர்த்த பெருமை திரு கேபிள் சங்கரையே சாரும்.

இந்த நிகழ்ச்சியில் ஜாக்கிசேகர், சஞ்சய்காந்தி, சுகுமார், போன்ற சில வலைப்பதிவாளார்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டார்கள்.

மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சங்கர் அவர்கள் வலைப்பதிவு பற்றிய விளக்கங்களை வழங்கினார். எப்படி வலைப்பதிவு ஆரம்பிப்பது, திரட்டிகள், பின்னூட்டங்கள், அட்சென்ஸ் , பிரபல வலைப்பதிவுகள் என இவரின் விளக்கங்கள் பலரையும் சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரம் சில தொலைபேசியில் விளக்கம் கேட்ட நேயர்கள் வலைப்பதிவையும் இணையத்தையும் போட்டுக்குழப்பிவிட்டார்கள். கேபிள் சங்கரைக் கேள்விகள் கேட்ட அம்மணியும் சில கேள்விகளைத் திரும்ப திரும்பகேட்டார். இவருக்கு வலைப்பதிவுகள் பற்றிய தெளிவின்மை இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பொதுவாக கேள்வி கேட்பவர்கள் அந்த துறைபற்றி ஓரளவேணும் ஹோம் வேர்க் செய்திருக்கவேண்டும். இதற்க்கு சிறந்த உதாரணமாக ரமேஸ் பிரபா அவர்களைக் குறிப்பிடலாம்.

புதிதாக வலைப்பதிவுகள் ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு இவரது பேட்டி நிச்சயம் பிரயோசனமாக இருக்கும். சஞ்சேய் காந்தி கேட்ட கேள்வி போல் யாராவது ஒருவர் எப்படி வலைப்பதிவு ஆரம்பிப்பது? திரட்டியில் இணைப்பது? போன்ற டெக்னிகள் விடயங்களை தனிப்பதிவாக இட்டு புதியவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கலாம்.

இறுதியாக‌ வலைப்பதிவுகளில் நடுநிலைமை பற்றிய கேள்விக்கு கேபிளாரின் பதில் அவரது வலைப்பதிவு முதிர்ச்சியை வெளிக்காட்டியது.

வாழ்த்துக்கள் திரு. கேபிள் சங்கர்

இந்த நிகழ்ச்சி பற்றிய கேபிளாரின் விரிவான கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.

டிஸ்கி : இன்றைக்கு ஒரு திருமணவீட்டிற்க்குச் செல்லவிருப்பதால் இந்த நிகழ்ச்சி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

*** இலங்கை வலைப்பதிவாளர்கள். ***

வலைப்பதிவின் தாக்கம் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களை விட இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பெரிதாக ஏற்படவில்லை. தமிழகத்திலிருந்து பலர் தங்களுக்கு என ஒரு வலையோ பல வலைகளோ வைத்திருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் உள்ள பல இலங்கையர்கள் எத்தனையோவிதமான வலைகள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் இலங்கையில் வாழும் தமிழ்ப் பதிவாளர்களின் எண்ணிக்கை வெறும் நூற்றுக்குள் தான் அடங்கிவிடுகின்றது. இதே நேரம் இலங்கையில் ஆங்கிலத்தில் பதியும் பதிவாளர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கணணி சம்பந்தப்பட்டவர்களாகவும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுபவர்கள் ஆகவும் மட்டுமே இருக்கிறார்கள்.

மிகவும் சிறந்த எழுத்தாளர்கள் கருத்தாளர்கள் இருந்தும் இலங்கையிலிருந்து வலைப்பதிவர்கள் வெளியே வரதாதற்க்கு என்ன காரணங்கள் என நுனிப்புல் மேய்ச்சலே இந்தப் பதிவு.

முக்கியகாரணமாக நாட்டின் யுத்த சூழ்நிலையைக் குறிப்பிடலாம். இதனால் எழுத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையே பலரை எழுதவிடாமல் தடுக்கின்றது என்பது என் கருத்தாகும். இதனாலே எழுதுவதில் பல அரசியலைத் தொடாமல் அல்லது பட்டும்படாமல் எழுதுகின்றார்கள்.

அடுத்தது வலைபற்றியும் வலையுலகம் பற்றியும் அதிகமான விழிப்புணர்பு இல்லாததாகும். ஏற்கனவே வலையுலகம் பற்றி சில குறிப்புகளையும், வலைப்பதிவாளர்களையும் மெற்ரோ நியூஸ் பத்திரிகை அறிமுகம் செய்தது. இதன் பின்னால் தினக்குரலில் தாசன் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றி எழுதியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர் மாயாவால் இலங்கை வலைப்பதிவாளர்கள் திரட்டி ஆரம்பிக்கப்பட்டது.  மாயாவின் இலங்கை வலைப்பதிவர் திரட்டியைவிட இன்னொரு திரட்டியான இலங்கை வலைப்பதிவுகள் திரட்டியும் இலங்கையிலிருந்து எழுபவர்களின் ஆக்கங்களை திரட்டுகின்றது. இவ்வளவு முயற்சிகள் செய்தும் ஏனோ பலர் வலைப்பதிவை திரும்பிப்பார்பதே இல்லை. அதே ஒரு முறை நிர்ஷன் தன் பதிவில் குறிப்பிட்டதுபோல் வலைப்பதிவை சில எழுதுலக ஜாம்பவான்களும் கல்வியாளர்களும் ஏதோ சாதாரண விடயமாகவும் பொழுதுபோகாமல் இருப்பவர்கள் த‌ங்கள் எண்ணங்களை கொட்டும் இடமாகவுமே கருதுகிறார்கள்.


ஏற்கனவே எனக்கு இலங்கை எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். சிறந்த் எழுத்தாளர்கள் இருந்தாலும் வாரம் ஏதாவது ஒரு புத்தகம் வெளிவந்தாலும் இவர்கள் தங்களை இலங்கைக்கு வெளியே அறிமுகப்படுத்த ஏனோ தயங்குகிறார்கள். 2004ல் நானும் என் உறுவினர் ஒருவருமாகச் சேர்ந்து இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு இணையம் ஆரம்பித்தோம். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் மல்லிகை இதழிலும் இதனைப் பற்றி செய்திகள் வந்தன. தங்களது விபரங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கேட்டேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் என்னைத் தொடர்புகொண்டவர்கள் வெறும் மூன்றே மூன்று பேர்தான். ஏனையவர்கள் ஏனோ தொடர்புகொள்ளவில்லை. கவிஞர் மேமன்கவி எனக்கு ஊக்கம் அளித்தவர்களில் முக்கியமானவர் அவரே எத்தனையோ பேரிடம் நேரடியாகச் சொல்லியும் பலர் விரைவில் அனுப்பிவைக்கின்றேன் என்றார்கள் ஆனாலும் இன்னமும் அந்த விரைவான காலம் வரவில்லை என நினைக்கின்றேன். அந்த முயற்சி அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் மு.மயூரன் போன்றவர்களின் முயற்சியால் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு அதில் பல எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இதே நேரம் இணையத்தில் பிரபலமான எழுத்தாளர்கள் வரிசையில் டொக்டர்.முருகானந்தன், திரு.உடுவை தில்லை நடராஜா, கவிஞர் மேமன்கவி இவர்கள் மூவருமே வலையில் எழுதுபவர்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து எழுதும் நம்மவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானதாகும்.

அடுத்த காரணமாக தொழில்நுட்ப அறிவும் இணைய வசதிகளும் இல்லாமையைக் குறிப்பிடலாம். கொழும்பு போன்ற மாநாகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே இணையச் சேவைகளை பெரும்பாலும் தங்கு தடை இன்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஏனைய இடங்களில் இருப்பவர்கள் இணையக் சேவை வழங்கும் கடைகளுக்குச் சென்றே தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்.

இன்னொரு காரணமாக பலர் வலையை சிறுபிள்ளை வேளாண்மை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை இந்த சிறுபிள்ளை வேளாண்மை பலரை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் பலரது கருத்துக்கள் வலைப்பதிவாளர்களைப் பற்றி எதிர்மறையாகவே இருக்கின்றது அண்மைய உதாரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

இலங்கையிலிருக்கும் எழுத்து ஊடகங்களிலும் சரி இலத்திரனியல் ஊடகங்களிலும் சரி வலைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை. சில பத்திரிகைகளில் சில விடயங்கள் வந்தாலும் வானொலி தொலைக்காட்சிகள் இதனை ஏனோ வெளிக்கொணரத் தயங்குகின்றன. அண்மையில் கூட வெற்றிஎவ் எம் வானொலியில் லோஷனை ஒருவர் வலைப்பதிவுகளைப் பற்றிக்கேட்டிருந்தார். அதற்க்கு அவர் இதனைப் பற்றி வானொலியில் சொல்வது சாத்தியம் இல்லை என்றார். (ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து). அதே நேரம் தமிழ்மொழிக்கென இருக்கும் இரண்டு தொலைக்காட்சிகளிலும் எந்த நிகழ்ச்சிகளோ நேர்முகங்களோ இதுவரை இடம் பெறவில்லை. தனியார் தொலைக்காட்சியில் இதற்கான நேரம் ஒதுக்கமாட்டார்கள். ஆனால் அரச தொலைக்காட்சியில் காலைவேளை நடைபெறும் நேர்முகங்களில் ஒரு வலைப்பதிவாளரையோ அல்லது இரண்டு வலைப்பதிவாளர்களையோ அழைத்து வலைப்பதிவு பற்றிக்கேட்கலாம்.

தமிழக ஊடகங்கள் எமது நாட்டு ஊடகங்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வலைப்பதிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஊட்டியுள்ளது என்றே கூறமுடியும். சன் நியூஸில் வலைப்பதிவாளர்களைப் பற்றிய செய்திகளும் ஒரு விபரணமும் வந்தது. விகடன் தன் வரவேற்பறையில் வார ஒரு வலைப்பதிவை அறிமுகம் செய்கின்றது.

என் ஆதங்கம் என்னவென்றால் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களினதும் புத்திஜீவிகளினதும் எத்தனையோ சுவாரசியமானதும் ஆக்கபூர்வமானதுமான விடயங்கள் பலரையும் சென்றடையவேண்டும் என்பதே ஆகும். நிச்சயமாக அவர்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. இவர்களிடம் ஆற்றல் இருக்கின்றது. அதனைவெளிக்கொணர ஏனோ தயங்குகிறார்கள். என்னைப்போன்ற பலர் சும்மா விளையாட்டாக ஆரம்பித்த வலைப்பதிவு இன்றைக்கு தமிழ்மண நட்சத்திரமாக விளங்குகின்றது என்றால் இதற்கான காரணம் பின்னூட்டமிடும் வாசகர்களே.

இந்த இடத்தில் தமிழ்மணத்திடம் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன். சில வேளைகளில் இது அதிகப்பிரசங்கித் தனமாக இருந்தாலும், இலங்கை வலைப்பதிவாளர்கள் சார்பில் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். இதுவரை எனக்கு தெரிந்து இலங்கையிலிருந்து நட்சத்திரமாக மு.மயூரன், வன்னியன், த,அகிலன் போன்ற இலங்கையிலிருந்து வலைப்பதிவு செய்யும் பதிவர்களை நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கவிட்டீர்கள் இதேபோல் இலங்கையிலிருந்து வலைபதியும் ஏனையவர்களையும் மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையோ அழைத்து நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்யுங்கள். என் நட்சத்திர வாரத்தில் இந்தக்கோரிக்கையை வைப்பது சரியான எனத் தெரியவில்லை.

ஏனைய வலைப்பதிவாளர்களிடமிருந்து இதுபற்றிய ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கின்றேன்.