வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது மிகவும் உண்மை. ஒரு மனிதனை நிலைத்திருக்க வைப்பது இரண்டு விடயங்கள் ஒன்று வாசிப்பு, இன்னொன்று அனுபவம்.
சாதாரணமாக ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவரால் ஏனைய நாடுகள், கலாச்சாரம், புதிய தகவல்கள் என்பவற்றை வாசிப்பதால் அறியமுடிகின்றது. வாசிப்பு என்பது வெறுமனே தினசரிகள், வார, மாத இதழ்கள் என்பதுடன் மட்டுப்படுத்தமுடியாது. எவனொருவன் பரந்துபட்ட வாசிப்புக்கு தன்னைத் தானே உள்ளாக்குகின்றானோ அவனது அறிவு மென்மேலும் வளரும். அத்துடன் வாசிப்பை குறிப்பிட்ட பகுதிகளுடன் நிறுத்துவதும் தவறானது ஆகும். உதாரணமாக சிலர் பொதுவாக நாவல்கள், சிறுகதைகள் மட்டும்தான் வாசிப்பார்கள். இன்னொரு சாராரோ கட்டுரைகள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே வாசிப்பார்கள். வாசிப்பதில் சகலகலா வல்லவனாக இருந்தால் உங்கள் அறிவு நிச்சயம் வளரும்.
இன்றைக்கு பலரிடம் பெரிதாக பேசப்படும் ஒரு விடயம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்பதாகும். இதற்கான முக்கியகாரணம் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையும் அதன் தாக்கங்களும். பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தை மட்டுமே வாசித்து அறிகிறார்களே ஒழிய ஏனைய பக்கம் கண் வைப்பதே இல்லை. பாடசாலைகளில் நூலகம் இருந்தாலும் நூலகத்தில் நேரம் கழிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.
இணையத்தின் வரவு வாசிப்பில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் வரவின் பின்னர் பலர் புத்தக வடிவிலான நூல்களை வாசிப்பது குறைவு இணையத்திலேயே மின் நூல்களாகவும் ஏனைய வடிவிலும் வலைகளிலும் வாசிக்கின்றார்கள். இது ஒருவகையில் நன்மையான விடயமாகும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான வலைப் பதிவர்கள் இருக்கமாட்டார்கள்.
இன்னொரு சாரார் தமிழ்மொழியில் வாசிப்பதை பாவமாக கருதுகிறார்கள். குறிப்பாக மேல்தட்டு மக்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. சிறந்த உதாரணமாக அண்மையில் தசாவதாரம் புகழ் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த எழுத்தாளர்களாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என புகழ்பெற்ற பல தமிழ் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டார். அதே நேரம் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் நூல்களை விட ஆங்கில நூல்களை அதிகம் பேர் முண்டியடித்து வாங்குகின்றார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.
ஆனாலும் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும்போது வாசிப்புப் பழக்கம் மிகமிக அரிதாக பலரிடம் காணப்படுகின்றது.
இனி எனது வாசிப்பு அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
சிறுவயதுமுதல் அம்புலிமாமா, கோகுலம் வாசகனாக இருந்தேன். 7 வயதில் உறவினர் ஒருவர் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் "ஆச்சி பயணம் போகின்றாள்" நகைச்சுவை நவீனத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதுதான் நான் வாசித்த முதல் நாவல்.
பின்னர் பாடசாலையில் ( 5 ஆம் வகுப்பு தொடக்கும் 8 ஆம் வகுப்பு வரை) பாடப்புத்தகத்தில் மறைத்து ராணி கொமிக்ஸ் வாசிப்பது எங்கள் வகுப்பு மாணவர்களின் மிக முக்கிய கடமை. பாடசாலையில் கொமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை. அதனால் சில துணிந்த மாணவர்கள் ஏதோ ஒருவழியில் புத்தகங்களை வகுப்பறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பின்னர் ஒரு பாடவேளைக்கு 50 சதம் என ஏனைய மாணவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலித்துவிடுவார்கள். ஆசிரியர்களிடம் பிடிபட்டால் புத்தகத்தின் உரிமையாளரைக் காட்டிக்கொடுக்ககூடாது. அப்படிக் காட்டிக்கொடுத்தால் அந்த மாணவனுக்கு பின்னர் வாசிப்பதற்க்கு யாரும் புத்தகம் கொடுக்கமாட்டார்கள்.
சிலவேளைகளில் இருவர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தை சேர்ந்துவாசித்து கட்டணத்தை பங்குபோடுவதும் உண்டு. என் வகுப்பில் நூற்றுக்கு எண்பதுவீதமானவர்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு, எங்கள் கைச் செலவுக்கு உள்ள பணம் பெரும்பாலும் இதற்க்கே செலவிடப்பட்டது. என்றும் மறக்கமுடியாத சுவாரசியமான மலரும் நினைவுகள்.
இந்த நாட்களில் விகடன், குமுதம் வாசகராகிவிட்டேன். முக்கியமாக கமல், ரஜனி புகைப்படம் வெளியாகிய குமுதம் விகடனுக்கு கிராக்கி அதிகம். மல்லிகை சிரித்திரன் போன்ற இதழ்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டன. ஒரு சிறிய அளவு மாணவர்களே இவற்றைப் படித்தோம்.
இந்த நாட்களில் விகடன், குமுதம் வாசகராகிவிட்டேன். முக்கியமாக கமல், ரஜனி புகைப்படம் வெளியாகிய குமுதம் விகடனுக்கு கிராக்கி அதிகம். மல்லிகை சிரித்திரன் போன்ற இதழ்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டன. ஒரு சிறிய அளவு மாணவர்களே இவற்றைப் படித்தோம்.
ஒன்பதாம் வகுப்புக்கு பின்னர் தேடல்கள் கொஞ்சம் மாறியது. பாடசாலை நூலகத்தில் ஊரிலிருக்கும் பொது நூலகத்திலும் பெரும்பாலான நேரங்கள் கழிந்தன. சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரை அறிமுகமாகினார்கள். ஏற்கனவே சில ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் நாவல்கள் படித்த காலமது. பெரும்பாலும் அவர்களது அந்தக்கால எழுத்துக்கள் சமூகப் பிரச்சனைகளை மட்டும் மையப்படுத்தியதாலும் செங்கைஆழியான் போன்ற சிலர் மட்டும் வேறு வேறு களங்களில் எழுதியதால், இந்திய எழுத்தாளர்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலையில் மேலே குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அனுமதிகள் இல்லை.( குறிப்பாக நாவல்களுக்குஏனென்றால் அவர்கள் பெரியவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் எழுதியிருப்பார்கள்). நூலகத்தில் மட்டுமே அவர்களை வாசிப்பது, இரவலாக வீட்டுக்கு கொண்ட செல்லமுடியாது அங்கேயும் இவர்களை வாசிக்காதே என செல்ல மிரட்டல். அதனால் இவர்களின் எழுத்தில் ஏதோ விடயம் இருக்கு என களவாக வாசிக்க பழகினேன். சுஜாதாவின் ஆங்கிலச் சொற்கள் வசந்தின் ஜோக்குகள் அப்போ புரியவில்லை.
ஓஎல்(கபொதசாதரண தரம்) படிக்கும்போது அப்பா சாண்டில்யனை அறிமுகப்படித்தினார் கடற்புறா முதல் முதல் வாசித்த சரித்திர நாவல், பின்னர் ஜவனராணி, கடல்ராணி என சாண்டில்யன் எனக்கு பொழுதுபோக்க உதவியதுடன் அந்தக்கால தமிழ் அரசர்களது வீரத்தையும் வெற்றிகளையும் அறியத்தந்தார். பலராலும் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் சிலாகிக்கப்பட்டாலும் எனக்கு அந்த வேளைகளில் வாசிக்க கிடைக்கவில்லை. நூலகத்தில் யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றிருப்பார்.
ஏஎல் (கபொதஉயர்தரம்) சோதனை எடுத்து பெறுபேற்றிற்காக காத்திருந்த போது பொன்னியின் செல்வன் வாசிக்க கிடைத்தது. முதல் பாகத்தை இரவிரவாக விழித்திருந்து வாசித்தேன். அடுத்த நாள் இரண்டாம் பாகம் என இப்படியே மூன்றோ நாலு நாட்களில் முழுவதுமாக வாசித்துமுடிந்துவிட்டேன். வந்தியத்தேவனும், பழுவேட்டரையர்களும் (தசாவதாரம் நெப்போலியனின் ஒப்பனை பெரிய பழுவேட்டரையர் போல் தெரிகின்றார்), பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மனும், குந்தவை, பூங்குழலி, வானதி, சேந்தன் அமுதன் என அனைத்துப்பாத்திரங்களும் கனவில் கூட வந்தார்கள். பல தடவைகள் வாசித்தும் இன்னும் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு சரித்திர நாவல் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
சிலர் சொல்வார்கள் வாசிக்கும்போது ஊண் உறக்கம் மறக்கின்றேன் என உண்மைதான். நானே இரு தடவைகள் சுய நினைவற்று வாசித்துக்கொண்டிருந்த வேளையில் நூலகத்தில் வைத்துப்பூட்டப்பட்டேன். பின்னர் நூலகர் திரும்ப வந்து என்னை திறந்துவெளியே விட்டார்.
வாசிப்பது என்பது ஒரு தவம். ஒரு புத்தகத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொருவனும் ஒரு தவத்திற்கு காட்டிற்குப் போகிறான். அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
இன்னும் எழுதலாம் ஆனால் எனக்கும் சலிப்புத் தட்டும் வாசிக்கும் உங்களுக்கும் சலிப்புத் தட்டும் ஆகவே இத்துடன் இந்த கதை நிறுத்தப்படுகின்றது. உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ இடுவீர்கள் என நினைக்கின்றேன்.
இன்றைக்கு சர்வதேச எழுத்தறிவு தினம் என்பதால் இந்தப் பதிவு மீள் பதிவாக இட்டிருக்கின்றேன்.
32 கருத்துக் கூறியவர்கள்:
unmai... ponniyin selvanil idhai unarndhaen.. vandhiyathevar en kanavilum vandhaar...
நல்ல பகிர்வு
எங்கட ஊர் வாசிகசாலையில் தமிழில் சின்ரெல்லா கதைகள் வாசிப்பதில் தொடங்கியது என் வாசிப்பனுபவம். வாசிக்கிற பழக்கம் கொஞ்சம் குறைஞ்சிட்டுதான் ஆனால் நேரம் கிடைக்கிற நேரமெல்லாம் வாசிக்க முயற்சி செய்வன். சில நேரம் நூலகத்தில எடுத்த புத்தகம் திருப்பி கொடுக்கவேண்டிய நாள் வந்திடும் ஆனால் புத்தகம் முதல் 10 பக்கம் மட்டும் வாசித்ததோடு இருக்கும்.
என்னிடமும் பொன்னியின் செல்வன் இருக்கு. திரும்ப ஒரு முறை வாசிக்க வேண்டும். வலைப்பதிவில நந்தினி என்ட பெயரில யாரும் எழுதேல்ல என்ன :)
கோகுலத்தில'வாசிச்ச கதையில இன்னும் ஞாபகம் இருக்கிறது 'மரகதச்சிலை'.
அருமையான பதிவு வந்தி.. நான் சிறிய வயதில் என் மாமா தான் எங்கள் ஊர் பத்திரிக்கைகளின் முகவராக இருந்தார். ஆகவே எல்லா விதமான பத்திரிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும்.
சிறிய வயதில் நான் வாசித்து பைத்தியமாக்கியது சிறுவர் சிந்தாமணி அதில் சிவலிங்கம் மாமாவின் கதைகள் என்றால் கொள்ளை பிரியம். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பத்திரிகைகள் வாசிக்க காலை 8 மணிக்கு தொடங்கினால் அது முடிய 12.00 மணி ஆகிவிடும். அந்த ஆரம்பம் தான் சொந்தமாக நானே பதிவெழுதும் இந்த நிலைக்கு காரணம்.
பின்பு நாவல்கள், சாண்டில்யனின் வரலாற்று கதைகள், ராணி முத்து, குமுதம், ஆனந்த விகடன் என நான் வாசிப்பு வேறு பக்கம் திசை திரும்பியது. நுவரெலியா பொது நூலகத்தில் உள்ள தமிழ் புத்தகங்கள் அனைத்தையும் (மற்றைய நுலகங்களோடு ஓப்பிடுகையில் குறைவு) வாசித்து முடித்திருக்கிறேன். சாண்டில்யனின் கடல்புறா தினம் ஒரு பாகம் என தூக்கம் விழித்து வாசித்திருக்கிறேன்.
இன்று எனது எல்லா வாசிப்பும் இணையத்திலேயே தங்கி விட்டது.
அருமையான பழைய நினைவுகளை தீண்டி சென்றது உங்களது இந்த பதிவு
வாசிப்பு ஒரு மனிதனை மேம்படுத்தும் என்பதும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது என்பதால் அல்லவா, ஒவ்வொரு சந்தியிலும் ஒவ்வொரு மாவீரர் பெயரிலும் படிப்பகங்கள் ஒரு காலத்தில் தோன்றின. இனி .......
HK
எனக்கு வாசிப்பதற்க்கு தேவையான பொறுமை மிகவும் குறைவு. அதனால் பொன்னியின் செல்வன், ருத்ரவீணை, பார்த்தீபன் கனவு போன்ற புத்தகங்கள் வாசிக்க கிடைத்தும் வாசிக்காது தவிர்த்துவிட்டேன். மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் முயன்று பார்க்கின்றேன்.
அந்த நாள் ஞாபகங்களை மீட்டதற்கு நன்றி வந்தி. அம்புலிமாமா வின் வேதாளம் சொல்லும் கதையில் தொடங்கி, முகமூடி வீரரின் நையப்புடைப்பு வரை அனைத்தும் மீண்டும் ஒரு முறை கண்முன் வந்து போனது.
தற்போது வாசிப்புபழக்கம் குறைந்துவிட்டது என்பது என்னவோ கசப்பான உண்மைதான். இதற்கு முக்கிய காரணமாக தற்போது பெருகியிருக்கும் தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களையே குற்றம் சொல்லுவேன்.
அருமையான அனுபவப் பகிர்வு வந்தி.. இன்று எனது காலை நேர நிகழ்ச்சியும் உங்கள் கருத்துகளோடு ஒத்த அனுபவங்களைக் கொண்டிருந்தது..
ஒத்த ரசனை எங்கள் வாசிப்புக்களில் இருக்கிறது.
நானும் ஒரு வாசிப்புப் பூச்சி.. இன்றுவரை வீட்டில் ஒரு அறை நிறையும் அளவுக்கு புத்தகங்கள் வாங்கிக் குவித்து வைத்துள்ளேன்..
விளையாட்டு,கவிதை,வரலாறு,சிறுகதை, ஆங்கில நாவல்கள் என்று எல்லா வகைகளும் இவற்றுள் உண்டு.. மீள் வாசிப்புக்கள் எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்கு..
இன்று இணைய வாசிப்பில் ஈடுபட்டும் நூல் வாசிப்புக்களை நான் குறைக்கவில்லை. இன்னமும் கிடைக்கும் அனைத்தையுமே வாசிக்கிறேன்..
சிறுவயதில் வாசிப்பை ஊக்குவித்த அப்பா,அம்மா ஆகியோர் ஞாபகம் வருகிறார்கள். வந்தி, நீங்கள் வேடிக்கையாகக் கேட்டீர்கள் இதை தொடர்பதிவாக மாற்றலாமா என்று?
நான் விருதுகள்,தொடர் பதிவுகளை சலிப்பாக நினைத்தாலும் இப்போது வாசிப்பு அனுபவம் பற்றி பதிவிடவேண்டும் என்றுஆசியயாக உள்ளது.
விரைவில் என் வாசிப்பு அனுபவப் பதிவு வரும்..
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
வாசிப்பைப் பற்றி அருமையாக எழுதிருக்கீங்க! பூங்கொத்து!
உங்களின் வாசிப்பனுபவத்தை போலவே எனது அனுபவங்களும் அமைந்திருக்கின்றன.
அண்மைக்காலங்களில் இணையத்தில் வாசிப்பது அதிகரித்து புத்தகங்களை வாசிப்பது குறைந்துவிட்டது. (நூலகத்திலிருக்கும் PDF புத்தங்கங்களை தவிர்த்து...)
வாசிப்பு அனுபவம் என்பது அனுபவித்த
வர்களுக்கே புரியும். வீட்டில் என்னை எல்லோரும் புத்தகப்பூச்சி என்றே கூபிடு
வார்கள். உங்கள் கட்டுரை என்னை என்
இளமைக்காலத்திற்கே இட்டுச்சென்றது.
வந்தி இந்த பதிவை யூத்புல் விகடன் தங்கள் குட் Blogs பகுதியில் இணைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
எனக்கு பொதுவாக அதிகமாக வாசிக்க பிடிப்பதில்லை. குறிப்பாக கதைகள்.
ஆனால் பெரியாரின் புத்தகங்களை தேடித் தேடித் தேடி வாசிப்பேன்.
அத்தோடு ஓஷோவின் புத்தகங்களையும் வாசிப்பதுண்டு.
என்னை பெரிய வாசிப்பாளனாக சொல்ல முடியாது.
ஆனால் புத்தகங்களில் வாசித்தவற்றை விட இணையங்களில் வாசித்தவை அதிகம்.
இணையத்தை வினைத்திறனாக பயன்படுத்துகிறேன் என்ற நம்பிக்கை மற்ற நண்பர்கள் இணையங்களில் பொழுதுபோக்கும் போது நான் நல்ல விடயங்களை தேடி அலைந்த பொழுது தான் ஏற்பட்டது. மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் இப்போது என் நண்பர்களும் பதிவிட ஆவலாக இருக்கிறார்கள். நிறையப் பேர் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அடுத்த பதிவர் சந்திப்பில் நிறைய புதுமுகங்கள் இருக்கும் பாருங்கள்.
புத்தகங்களுடன் பயனம் எனும் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் இப்படியான கட்டுரையை எழுதினேன்.
பலரது வாசிப்பு பழக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியிருப்பது ஆர்வமான விடையம்.
நான் சிறுவயதில் யானை, முற்றத்து ஒற்றைப் பனை போன்ற நாவல்களை வாசித்த ஞாபகம் இருக்கின்றது. இந்த நாவல்கள் மூலம்தான் செங்கையாழியானை எனக்கு அறிமுகமானார்.
//பார்த்திபன் said...
unmai... ponniyin selvanil idhai unarndhaen.. vandhiyathevar en kanavilum vandhaar...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பார்த்திபன், வந்தியத்தேவர் உங்கள் கனவில் மட்டுமல்ல பலரின் கனவிலும் வந்தார். கதையின் நாயகன் அவர் தான்.
//பனையூரான் said...
நல்ல பகிர்வு//
நன்றிகள் பனையூரான்
//சினேகிதி said...
சில நேரம் நூலகத்தில எடுத்த புத்தகம் திருப்பி கொடுக்கவேண்டிய நாள் வந்திடும் ஆனால் புத்தகம் முதல் 10 பக்கம் மட்டும் வாசித்ததோடு இருக்கும்.//
வலையுலகிற்க்கு நான் வந்தபின்னர் செய்யும் வேலை இது சில புத்தகங்கள் வாசிக்க பல நாட்கள் பிடிக்கும், சில பஞ்சியடித்தால் மேலோட்டமாக வாசித்துவிட்டு வைத்துவிடுவேன்.
//என்னிடமும் பொன்னியின் செல்வன் இருக்கு. திரும்ப ஒரு முறை வாசிக்க வேண்டும். வலைப்பதிவில நந்தினி என்ட பெயரில யாரும் எழுதேல்ல என்ன :)//
நான் பல தடவைகள் வாசித்துவிட்டேன், அண்மையில் கூட வாசித்துமுடித்தேன். நந்தினி என்ற பெயரில் இதுவரை யாரும் எழுதவில்லை, பெயரைத் துணடு போட்டு முன்பதிவு செய்யவும்.
//கோகுலத்தில'வாசிச்ச கதையில இன்னும் ஞாபகம் இருக்கிறது 'மரகதச்சிலை'.//
எனக்கு கோகுலம் கதைகள் பெரிதாக ஞாபகம் இல்லை ஜேம்ஸ்பாண்டும், மாயாவியும் ஞாபகம் இருக்கிறார்கள்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
அருமையான பதிவு வந்தி.. நான் சிறிய வயதில் என் மாமா தான் எங்கள் ஊர் பத்திரிக்கைகளின் முகவராக இருந்தார். ஆகவே எல்லா விதமான பத்திரிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். //
அடிச்சுது யோகம், சகல பத்திரிகைகளையும் வாசிக்கலாம்.
// சாண்டில்யனின் கடல்புறா தினம் ஒரு பாகம் என தூக்கம் விழித்து வாசித்திருக்கிறேன். //
ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தது கடற்புறாதான், பின்னர் பொன்னியின் செல்வர் கவர்ந்துவிட்டார்.
//இன்று எனது எல்லா வாசிப்பும் இணையத்திலேயே தங்கி விட்டது. //
தினமும் அரைமணி நேரமாவது புத்தகம் வாசிக்கவும்.
//அருமையான பழைய நினைவுகளை தீண்டி சென்றது உங்களது இந்த பதிவு//
நன்றிகள் அப்படியே உங்கள் வாசிப்பு அனுபவங்களையும் எழுதலாமே.
//Anonymous said...
வாசிப்பு ஒரு மனிதனை மேம்படுத்தும் என்பதும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது என்பதால் அல்லவா, ஒவ்வொரு சந்தியிலும் ஒவ்வொரு மாவீரர் பெயரிலும் படிப்பகங்கள் ஒரு காலத்தில் தோன்றின. இனி .......//
மிகவும் சரியான கருத்து, நானும் பல அத்தகைய படிப்பகங்களில் பொழுதுபோக்கினேன் அல்லது அறிவை வளர்த்துக்கொண்டேன், இனி ??? தான்
// நிரூஜா said...
எனக்கு வாசிப்பதற்க்கு தேவையான பொறுமை மிகவும் குறைவு. அதனால் பொன்னியின் செல்வன், ருத்ரவீணை, பார்த்தீபன் கனவு போன்ற புத்தகங்கள் வாசிக்க கிடைத்தும் வாசிக்காது தவிர்த்துவிட்டேன். மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் முயன்று பார்க்கின்றேன்.//
இவை மூன்றும் வித்தியாசமான பாணியில் அமைந்த நாவல்கள், ருத்ரவீணையும் மிகவும் அழகான கதை, சீரியலாக வந்தாலும் கதையாக வாசிக்கும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
//அந்த நாள் ஞாபகங்களை மீட்டதற்கு நன்றி வந்தி. அம்புலிமாமா வின் வேதாளம் சொல்லும் கதையில் தொடங்கி, முகமூடி வீரரின் நையப்புடைப்பு வரை அனைத்தும் மீண்டும் ஒரு முறை கண்முன் வந்து போனது. //
ஹாஹா வேதாளம் எல்லாம் இப்பவும் வாசித்தாலும் சுவைதான். சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்ச் சங்கத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ராணி கொமிக்ஸ் எடுத்துவந்து வாசித்தேன்
//தற்போது வாசிப்புபழக்கம் குறைந்துவிட்டது என்பது என்னவோ கசப்பான உண்மைதான். இதற்கு முக்கிய காரணமாக தற்போது பெருகியிருக்கும் தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களையே குற்றம் சொல்லுவேன்.//
உண்மைதான், ஆனாலும் நாங்கள் எங்கள் நேரத்தில் ஒரு பகுதியை வாசிக்க பழக்கிகொண்டால் நல்லது.
//LOSHAN said...
அருமையான அனுபவப் பகிர்வு வந்தி.. இன்று எனது காலை நேர நிகழ்ச்சியும் உங்கள் கருத்துகளோடு ஒத்த அனுபவங்களைக் கொண்டிருந்தது..///
ஓம் லோஷன் காலையில் இந்தப் பதிவுபோடும் வேளையில் விடியலில் எழுத்தறிவு தினத்தைப் பற்றிக் கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
//ஒத்த ரசனை எங்கள் வாசிப்புக்களில் இருக்கிறது. //
வாசிப்புகளிலும் என வரவேண்டும்.
//நானும் ஒரு வாசிப்புப் பூச்சி.. இன்றுவரை வீட்டில் ஒரு அறை நிறையும் அளவுக்கு புத்தகங்கள் வாங்கிக் குவித்து வைத்துள்ளேன்..//
அதே தான், ஒரு காலத்தில் வாங்கி உடனடியாக வாசித்துவிடுவேன், ஆனால் இப்போ அப்படியில்லை சென்ற வருட சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன. வரும் வாரம் இந்த வருடக் கண்காட்சி ஆரம்பமாகப்போகின்றது.
//விளையாட்டு,கவிதை,வரலாறு,சிறுகதை, ஆங்கில நாவல்கள் என்று எல்லா வகைகளும் இவற்றுள் உண்டு.. மீள் வாசிப்புக்கள் எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்கு..//
மீள் வாசிப்பில் சிலவேளை புதிய விடயங்கள் கூடத்தோன்றும்.
//இன்று இணைய வாசிப்பில் ஈடுபட்டும் நூல் வாசிப்புக்களை நான் குறைக்கவில்லை. இன்னமும் கிடைக்கும் அனைத்தையுமே வாசிக்கிறேன்..//
வீட்டில் என்னைக் கிண்டல் செய்வார்கள் பாண் சுத்திவாற பேப்பரைக்கூட வாசிக்கின்றேன் என, இணையத்திலும் மின்புத்தகங்கள் வலைகள் என வாசிப்பு அதிகரித்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.
//சிறுவயதில் வாசிப்பை ஊக்குவித்த அப்பா,அம்மா ஆகியோர் ஞாபகம் வருகிறார்கள். //
எங்கள் வீட்டில் கொஞ்ச நாள் இரண்டு விகடன் எடுப்பது காரணம் எனக்கும் அம்மாவிற்க்கு யார் முதலில் வாசிப்பது என்ற போட்டி. கிருலப்பனையில் இருக்கும் காலத்தில் வெள்ளவத்தை பூபாலசிங்கத்தில் வாங்கி புல்லட்டின் 141 பஸ்சினுள் முழுவிகடனும் வாசித்து முடித்துவிடுவேன்.
//வந்தி, நீங்கள் வேடிக்கையாகக் கேட்டீர்கள் இதை தொடர்பதிவாக மாற்றலாமா என்று? நான் விருதுகள்,தொடர் பதிவுகளை சலிப்பாக நினைத்தாலும் இப்போது வாசிப்பு அனுபவம் பற்றி பதிவிடவேண்டும் என்றுஆசியயாக உள்ளது.//
எழுதுங்கள் காத்திருக்கின்றோம், சிங்கம் போல் பாகம் பாகமாக வந்தாலும் பரவாயில்லை.
// சந்ரு said...
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்//
உங்கள் விருதுக்கும் அன்புக்கும் நன்றிகள் சந்ரு.
//அன்புடன் அருணா said...
வாசிப்பைப் பற்றி அருமையாக எழுதிருக்கீங்க! பூங்கொத்து!//
உங்கள் பாராட்டுக்கும் பூங்கொத்துக்கும் நன்றிகள் அருணா மேடம்.
// நிமல்-NiMaL said...
உங்களின் வாசிப்பனுபவத்தை போலவே எனது அனுபவங்களும் அமைந்திருக்கின்றன. //
உங்களது மட்டுமல்ல வாசிப்பில் பலரது அனுபவங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆண்களுக்கு சுஜாதாவும், ராஜேஸ்குமாரும் பிடிக்கும் ,பெண்களுக்கு ரமணிசந்திரனைப் பிடிக்கும்.
//அண்மைக்காலங்களில் இணையத்தில் வாசிப்பது அதிகரித்து புத்தகங்களை வாசிப்பது குறைந்துவிட்டது. (நூலகத்திலிருக்கும் PDF புத்தங்கங்களை தவிர்த்து...)//
உண்மைதான், ஆனாலும் நாங்கள் எங்கள் நேரத்தில் ஒரு பகுதியை வாசிக்க பழக்கிகொண்டால் நல்லது.
//Thevesh said...
வாசிப்பு அனுபவம் என்பது அனுபவித்த
வர்களுக்கே புரியும். வீட்டில் என்னை எல்லோரும் புத்தகப்பூச்சி என்றே கூபிடு
வார்கள். உங்கள் கட்டுரை என்னை என் இளமைக்காலத்திற்கே இட்டுச்சென்றது.//
புத்தகப்பூச்சியாக இருப்பதில் தப்பில்லை. நல்ல வாசிப்புகள் மனிதனை மேம்படுத்தும்.
//மன்மதன் said...
வந்தி இந்த பதிவை யூத்புல் விகடன் தங்கள் குட் Blogs பகுதியில் இணைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்//
நன்றிகள் மதன் நானும் பார்த்தேன்.
// கனககோபி said...
எனக்கு பொதுவாக அதிகமாக வாசிக்க பிடிப்பதில்லை. குறிப்பாக கதைகள்.//
வித்தியாசமான மனிதர் நீங்கள் உங்கள் வயதில் நான் கதைப்புத்தகம் தான் கூடுதலாக வாசித்தேன், இடையிடையே ஏனையவை,.
//ஆனால் பெரியாரின் புத்தகங்களை தேடித் தேடித் தேடி வாசிப்பேன்.
அத்தோடு ஓஷோவின் புத்தகங்களையும் வாசிப்பதுண்டு.//
பெரியார் வாசித்திருக்கின்றேன் சில கருத்துகளில் உடன்படமுடியவில்லை. ஓஷோ கொஞ்சம் விளங்கவில்லை.
//மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் இப்போது என் நண்பர்களும் பதிவிட ஆவலாக இருக்கிறார்கள். நிறையப் பேர் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அடுத்த பதிவர் சந்திப்பில் நிறைய புதுமுகங்கள் இருக்கும் பாருங்கள்.//
அடுத்த சந்திப்பை ஒழுங்குபடுத்துவதே உங்களைப்போன்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் தான்.
//Mayooresan said...
புத்தகங்களுடன் பயனம் எனும் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் இப்படியான கட்டுரையை எழுதினேன். //
இப்போதுதான் பார்த்தேன், அந்தக் காலத்தில் எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டேன் எனத் தெரியவில்லை.
//பலரது வாசிப்பு பழக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியிருப்பது ஆர்வமான விடையம்.//
காரணம் பெரும்பாலான புத்தகப்பூச்சிகள் ஒரே மாதிரியான ரசணைகளுடன் இருபபார்கள்
//நான் சிறுவயதில் யானை, முற்றத்து ஒற்றைப் பனை போன்ற நாவல்களை வாசித்த ஞாபகம் இருக்கின்றது. இந்த நாவல்கள் மூலம்தான் செங்கையாழியானை எனக்கு அறிமுகமானார்.//
நான் வாசித்த முதல் கதை ஆச்சி பயணம் போகின்றாள், பின்னர் வாடைக்காற்றை ஒரே மூச்சில் வாசித்துமுடிச்சேன், யானை ஊடக வன்னிக்காடுகள் பற்றி அறியக்கிடைத்தது. மாரிமுத்தரை மறக்கமுடியுமா. என்னுடைய செங்கைஆழியான் பற்றிய பதிவு உங்களின் பார்வைக்கு,.
செங்கைஆழியான்
//பெரியார் வாசித்திருக்கின்றேன் சில கருத்துகளில் உடன்படமுடியவில்லை.//
பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்று வாழ்பவன் அல்லன் நான். கடவுள் இருக்கிறார் என நம்புபவன். ஆனால் வழிபாடுகளையோ, மதங்களையோ கடுமையாக எதிர்க்கிறேன்.
// ஓஷோ கொஞ்சம் விளங்கவில்லை//
விளங்கினால் தான் படித்தது உண்மை என்றால் நான் தரம் 5 இற்குப் பிறகு படிக்கவில்லை என்றாகி விடும். ;)
oru parrellel walk-i uunara mudikiran. the.jaa-vum, cho-vum, yennuku peditha eezhuthalargal.
shri venugopalan-in thiruvarangan ulla-vum athan thodargalum, shri ramanujar-um, megakavum pedithamanavai. balakumaran, s.ramakrishnan patriyum athigam sollalam.
Mattali somu patriyum soliyagavendum
Post a Comment