இளையராஜா ஒரு சகாப்தம்

இளையராஜா அவ்வளவுதானா? என கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பதிவுக்கு தலைப்பிட நினைத்தேன். ஆனால் என்னால் அப்படி இடமுடியவில்லை காரணம் நான் கடைந்தெடுத்த இசைஞானி ரசிகன்.



கடந்த சில காலமாக ராஜாவைப்பற்றி பல கருத்துகள் வலைகளிலும் சரி சில களங்களிலும் குழுமங்களிலும் ஏன் நேரில் கூட விவாதித்துக்கொள்ளப்படுகின்றது. 70களின் முடிவிலும் 80களில் முழுவதும் 90களின் ஆரம்பத்திலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இசையுலகை தன் ஆர்மோனியப்பெட்டியில் வைத்திருந்தவர் இளையராஜா என்றால் மிகையாகாது.

இந்தப்பதிவிற்க்கு மூலகாரணம் அண்மையில் வால்மீகி படத்தைப்பார்த்துவிட்டு பலர் ராஜாவின் இசை சரியில்லைஎனக் கூறுகின்றார்கள். படம் இன்னும் பார்க்கவில்லை, பாடல்கள் கேட்கவில்லை அதனால் இந்தப்படத்தினைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது.

ஒருமுறை ஹாய் மதனில் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டிருந்தார் "சிவாஜிகணேசன், அசாரூதீன், இளையராஜா மூவரும் இனி ஓய்வெடுக்கலாமா?" என. அதற்க்கு மதன் "இவர்கள் மூவரும் சாதனையாளர்கள் இவர்களின் சாதனைகளை இன்னொருவர் முறியடித்தாலும் இவர்கள் தான் முன்னோடிகள்" என பதில் அளித்திருந்தார்.

ஆக இளையராஜா அண்மைக்காலங்களில் அவ்வளவாக சேபிக்காவிட்டாலும் முன்னைய காலங்களில் அவர் தந்த பாடல்களை மிஞ்ச இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல இன்றைக்கும் அவர் தான் பின்னணி இசையில் நம்பர் ஒன்.

ஒரு கலைஞனுக்கு தன் நாட்டை விட ஊரைவிட இன்னொரு ஊரில் தான் மரியாதை அதிகம். அதனால் தான் என்னவோ இளையராஜாவை மலையாளத் திரையுலகம் தத்தெடுத்துவிட்டது இசைப்புயலை மும்பை தத்தெடுத்துவிட்டது.

80களின் இசைபற்றி ஆராயவே தேவையில்லை. ராஜா கொடிகட்டிப்பறந்த காலமது.இளையராஜாவுக்காகவே ராமராஜன் ராஜ்கிரண் படம் எல்லாம் பார்த்து தொலைத்தகாலமது

90களின் தொடக்கத்தில் ரகுமானின் வரவால் இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை குறைந்ததே அல்லாமல் தரம் குறையவில்லை. அந்தகாலத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் மீண்டும் தன் இருப்பை மற்றவர்களுக்கு காட்டினார்.

பின்னர் ஹேராம், விருமாண்டியில் உச்சத்திற்க்கு வந்த இசைராஜா மும்பை எக்ஸ்பிரசை கமலுடன் சேர்ந்து மிஸ் பண்ணிவிட்டார். இடையில் பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளராகி சேதுவில் எங்கே செல்லும் இந்தப்பாதை தேடி பிதாமகனில் இளங்காற்று வீசி நான் கடவுளில் ஓம் சிவோஹம் என உருத்திர தாணடவமே ஆடினார். ரமணாவில் இரண்டே இரண்டு பாடல்களிலும் பின்னணியிலும் கேப்டனுக்கு முருகதாசுடன் மறுவாழ்வு கொடுத்தார்.

இடையில் சில படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் நல்ல கதை அமைப்பு இல்லாதபடியால் பாடல்களும் எடுபடவில்லை. அதே நேரம் அந்தக்காலத்தில் கதையே இல்லாத பல படங்கள் இவரின் பாடல்களுக்காகவே ஓடின.

ராஜாவின் இன்றைய பின்னடைவிற்க்கு என்னால் கூறக்கூடியவை காரணங்கள் :

1. புதிய தலைமுறைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமை முக்கிய காரணமாகும். மகன் யுவன் சங்கர் ராஜா புதிய தலைமுறைக்கேட்ப இசையமைக்கும்போது இவரால் அதனைச் செயல்படுத்தமுடியவில்லை. இதற்க்கு தலைமுறை இடைவெளியும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

2. எவ் எம் ரேடியோக்கள் மியூசிக் சேனல்களின் வருகை. இவை இரண்டும் பெரும்பாலும் இளசுகளை டார்கட் பண்ணியே நடைமுறைப்படுத்தப்படுவதால் ராஜாவைவிட ரகுமான், ஹாரிஸ், யுவன் போன்றோரே இவர்களின் தெரிவாக இருக்கின்றது. ஆஹா எவ் எம்மில் பவதாரணி நடத்திய ராஜாங்கமும் இலங்கையில் சக்தி எவ் எம்மில் ஒளிபரப்புகின்ற ராஜாங்கமும் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன.

3. ராஜாவின் கெடுபிடிகளை நினைத்து இளம் இயக்குனர்கள் பயத்தினால் இவரை நாடுவது குறைவு, அண்மையில் கூட மிஷ்கினின் நந்தலாலாவில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது இளையராஜா யூசர் பிரண்ட்லி இல்லையென செய்தி அடிபடுகின்றது.

சிலர் சொல்வதுபோல் அவரிடம் சரக்கில்லை என்பது கடைந்தெடுத்த பொய். சரக்கிருக்கு அதனை இந்தக்காலத்திற்க்கு ஏற்ப கொடுக்க தவறிவிட்டார் அல்லது இந்தக்காலத்தின் சில வடிவங்களை அன்றே தந்துவிட்டார் எனலாம். உதாரணமாக விக்ரம் படத்தின் வனிதாமணி வனம்மோகினி பாடலின் முன்னால் வரும் "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" தமிழில் முதல் வந்த ராப் என இசைவல்லுனர்கள் சொல்கிறார்கள்.

வால்மீகி படத்தின் இசைக்கு அதன் தயாரிப்பாளர்களான விகடனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆரம்ப நாட்களில் விகடனால் இளையராஜா கண்டுகொள்ளப்படவில்லை. இதனை தற்போது அவர்கள் வெளியிடும் விகடன் பொக்கிசத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ராஜா கோலோச்சிய பல படங்களின் விமர்சனங்களில் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட விகடன் எழுதவில்லை. இதனைப் பலர் விகடன் இணையப்பதிப்பில் பின்னூட்டங்களில் கூடச் கூறியிருந்தார்கள். ஆகவே அதற்க்குப் பழிவாங்கும் வகையில் இசையை சொதப்பினரா? இல்லை இந்தப் படத்திற்க்கு இவ்வளவு போதும் என நினைத்தாரா? (விகடனுக்கு மட்டுமா சிண்டு முடியத்தெரியும்).

இசையில் பல சாதனைகள் செய்த மனிதரை மத்திய மாநில அரசுகள் தான் கண்டுகொள்ளவில்லை என்றால் பதிவுலகத்திலும் எத்தனை எத்தனை எதிர்க்கருத்துக்கள்.

ஒருமுறை விவேக் சொன்னதுபோல் இளையராஜா வெளிநாடு ஒன்றில் பிறந்திருந்தால் அவரை அங்கே கொண்டாடியிருப்பார்கள். தவறிப்போய் அவர் தமிழ்நாட்டில் பண்ணைபுரத்தில் பிறந்தது அவரது துரதிஷ்டம்தான்.

நியூயோர்க் திரைவிமர்சனம்

விமர்சனத்திற்க்கு முன்னாள் சின்ன ஒரு பிளாஷ் பேக் :

2001 செப்டம்பர் 11 உலகையே புரட்டிப்போட்ட இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்காவில் வெளிநாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1200க்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்று வருடத்தின் பின்னர் பலர் தீவிரவாதி என எந்தவித ஆதாரமும் இல்லாதபடியால் விடுதலை ஆனார்கள். விடுதலையான பலர் மன உளைச்சலுக்கும், உட்காயங்களும் ஆளானார்கள். பின்னர் ஜோர்ஜ் புஷ் தான் யாரையும் சித்திரவதை செய்யச் சொல்லி உத்தரவிடவில்லை என தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா தான் பதவி ஏற்பதற்க்கு சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சித்திரவதை முகாம்களை மூடப்போவதாக அறிவித்தார்.

இனி நியூயோர்க்கினுள் செல்வோம்.

யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் கபீர் கானின் இயக்கத்தில் ஜோன் ஆப்ரகாம், கத்ரினா கைவ் இர்பான் கான் மற்றும் நீல் நித்தின் முகேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஹிந்தி திரைப்படம் நியூயோர்க்.

மேலே கூறப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலை அடிப்படையாக வைத்து முற்றுமுழுதாக அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது.



ஓமர்( நீல் நித்தின் முகேஷ்)ஒரு நாள் எவ்பிஐ(FBI)இனால் கைது செய்யப்படுகின்றான். அவனை விசாரிக்கும் எவ்பிஐ அதிகாரியான ரொஷான்(இர்பான் கான்)அவனுக்கு அவனுடைய‌ சினேகிதன் சாம் என்ற சமீர் ஷேக்குக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். இதனை மறுத்த ஓமர் தாம் இருவரும் அப்பாவிகள் என்று நியூயோர்க் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 1999ல் ஒன்றாகபடித்தவர்கள் எனவும் கூறகின்றான்.

1999ல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக வரும் ஓமர் அங்கே சாம் என்ற அமெரிக்க இந்தியன், மாயா என்ற அமெரிக்க இந்தியன்(கத்ரினா கைவ்)ஆகியோருடன் நட்பாக இருக்கும் அதேவேளை ஒருதலையாக மாயாவைக் காதலிக்கிறான். ஒருநாள் மாயா தன்னைக் காதலிக்கவில்லை சாமைத்தான் காதலிக்கிறாள் என அறிந்து அவளைவிட்டு விலக முயல்கின்றபோது இரட்டைக்கோபுரம் தாக்கப்படுகின்றது. அந்ததாக்குதலின் பின்னர் ஓமர் பிலடெல்பியாவிற்க்கு இடம் மாறுகின்றான்.

அதன்பின்னர் அவனை 2008 அல்லது 2009 கால கட்டத்தில் கைது செய்யும் ரொஷான் அவனை குற்றமற்றவன் என நிரூபிக்க சாமுடன் சென்று இணைந்து எவ்பிஐக்கு உளவுவேலை செய்யுமாறு வற்புறுத்துகிறார். இதனைடையில் அவர் சாமுக்கும் மாயாவுக்கும் திருமணமாகிவிட்டது அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது, மாயாவின் வாழ்க்கையும் சாமின் வாழ்க்கையும் நல்லாயிருக்கவேண்டும் என்றால் ஓமர் கட்டாயம் சாமை கண்காணித்து அவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்த ஒரு கட்டத்தில் அந்த வேலையைச் செய்ய ஓமர் ஒப்புக்கொள்கிறான்.

சாம் ஏன் தீவிரவாதியானான், மாயாவுக்கும் சாமுக்கும் எப்படித் திருமணம் நடந்தது? ஓமர் நண்பனை மனம் மாற்றினானா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை படத்தைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் சக்தே இந்தியாவிற்க்கு பிறகு வந்த நல்ல படம் என்று நியூயோர்கை கூறலாம். இடையில் ஒரு சில மொக்கைப்படங்கள் தயாரித்திருந்தார்.

ஜோன் ஆப்ரகாம், நீல் நித்தின் முகேஷ், இர்பான் கான்(பார்ப்பதற்க்கு நம்ம எஸ் ஜே சூர்யா போல் இருக்கிறார்) கத்ரினா கைவ் ஆகியோர் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

ஆதித்யா சோப்ராவின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் சந்தீப் ஸ்ரீவத்சவா. இவரது கொஞ்சம் மெதுவான திரைக்கதையை இயக்கியிருக்கிறார் கபீர் கான். பல இடங்களில் அடுத்த காட்சி இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை. இது கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் தெளிவான திரைக்கதை என்பதால் ரசிக்கும்படி இருக்கின்றது.

இடைச்செருகல் இல்லாமல் திரைப்படத்துடன் ஒன்றிவருகின்ற பாடல்கள் என்பதாலோ என்னவோ பாடல்கள் போரடிக்கவில்லை. அத்துடன் வழமையான ஹிந்திப்படங்கள் போல் பாடல்களும் இல்லை மொத்தம் இரண்டோ மூன்று பாடல்கள் தான் படத்தில் வருகின்றது. ஒரு டூயட் கூட இல்லை என்பது அதிசயம் தான்.

அத்துடன் அதைக்களம் அமெரிக்காவில் இருந்தாலும் எந்தக் கெட்டவார்த்தையும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். வேட்டையாடு விளையாடுவிலும் இதேபோல் கெளதம் மேனன் முயற்சி செய்திருக்கலாம்.

அஷீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றது. மிக அழகாக நியூயோர்க் நகரத்தை படம் பிடித்துக்காட்டியுள்ளார். 1999ஆம் ஆண்டுக்காட்சிகளில் பின்னணியில் இரட்டைகோபுரத்தை காட்டியிருக்கிறார்கள்.

சித்திரவதை முகாம்( Detention Camp )காட்சிகள் வேறு சில நினைவுகளையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன் தீவிரவாதிகள் எனக் காண்பிக்கும் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்கும் அதேநேரத்தில் எவ்பிஐ அதிகாரியான இர்பான் கானும் ஒரு இஸ்லாமிய பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். அமெரிக்கா போலீசின் மனிதாபிமானமற்ற போக்கை சில காட்சிகளில் சாடியிருக்கிறார் இயக்குனர். இறுதிக்காட்சியில் அமெரிக்கர்கள் தீவிரவாதி ஒருவனின் மகனை ஹீரோவாககொள்கிறார்கள் என்ற அமெரிக்கர்களின் பரந்த மனப்பான்மையையும் இயக்குனர் பதிவுசெய்யத் தவறவில்லை.

தீவிரவாதி என்ற பெயர் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி மாற்றுகின்றது என்பதை காத்திரமாக சொல்லும் படம் தான் நியூயோர்க்.

டிஸ்கி : இப்படியான படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? அப்படி வந்தாலும் ஏன் ஓடுவதில்லை? என்ற கேள்விக்கு யாராவது பதில் தாருங்கள்.

உலகத் தமிழர்களின் கனவுக் கன்னி

நேற்று சன்னில் சிங்கப்பூரில் நடைபெற்ற‌ சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஒளிபரப்பினார்கள். விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் அனைவருக்கும் விருதுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.



விழாவின் உச்சக்கட்டமாக சென்ற வருடத்தின் மக்கள் மனம் கவர்ந்த கனவுக்கன்னியாக சினேகாவுக்கு விருது கொடுத்தார்கள். என்ன கொடுமை? அசின் , நயந்தாரா, திரிஷா, தமன்னா என பல அழகு தேவதைகள் இருக்கும் போது நடிக்கவந்து 10 வருடங்களுக்கு மேலாக நடித்து இப்போ ஓய்வு எடுக்கும் நிலையில் உள்ள‌ ஒரு நடிகைக்கு விருது கொடுத்தது சிரிப்பாக இருந்தது.



விருது கொடுத்த நன்றிக்கடனுக்காக சினேகாவும் ராம்ஜியுடன் நல்ல கெமிஸ்ரியுடன் ஒரு நடனம் ஆடினார்.

பின் குறிப்பு : நிமிடத்திற்க்கு ஒரு தடவை சன் பிக்சர்ஸ் புகழ் சுனைனாவை காமெரா படம் பிடித்த மர்மம் என்னவோ?

மக்களை ஏமாற்றும் ரியாலிட்டி ஷோக்கள்


மேற்கத்திய தொலைக்காட்சிகளில் நடக்கின்ற ரியாலிட்டி ஷோக்கள் வேறு வேறு வடிவங்களில் தமிழ் தொலைக்காட்சியையும் ஆக்கிரமித்துவிட்டது. மெஹா சீரியல் அழுகைகளில் இருந்து மக்களை ஓரளவேணும் இந்த நிகழ்ச்சிகள் காப்பாற்றினாலும் அண்மைக்காலமாக இவை மக்களை ஏமாற்றுவதுபோல் தோன்றுகின்றது, கிரிக்கெட்டில் எப்படி மேட்ச் பிக்சிங் செய்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளிலும் இவர் தான் வெற்றியாளர் என்ற முடிவு நடுவர்களாக இருப்பவர்களால் முதலிலேயே எடுக்கப்பட்டு பின்னர் மக்களை ஏமாற்ற எஸ் எம் எஸ் வாக்களிப்புகள் இணையத்தில் வாக்களிப்புகள் என்ற கபட நாடகங்கள். ஒரு சிறிய தொகைமக்கள் தான் இந்த வாக்களிப்புகளில் கலந்துகொண்டாலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவரும் ஏமாற்றப்படுகின்றார்கள்.

விஜய் டிவிதான் இந்த நிகழ்ச்சிகளை ஆரம்பித்த புண்ணியத்தைச் சேர்த்ததுடன் இந்நிகழ்ச்சிகளில் நாடகங்களையும் அழுகைகளையும் நிகழ்த்தி என்றும் முதல்வனானது.

ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுபவர்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள் என்பவற்றை ஒளிபரப்பி தங்கள் கஸ்டத்தைக் காட்டியது. சிம்பு பிருத்திவிராஜ் உமா ரியாஸ் சண்டையும் அந்தச் சண்டையில் சிம்பு தனக்கு நடிக்கத்தெரியாது என்ற உண்மையைச் சொன்னதும் ஹைலைட்டான விபரங்கள். உமா ரியாஸ் பிருத்திவி ஜோடிக்கு முதல் பரிசுகொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அதன்பின்னர் மக்களுக்கு யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்ற முடிவு நடுவர்களின் காமெண்ட்ஸிலிருந்து தெரியவந்துவிட்டது.

சில நடுவர்கள் ஏதோ உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்வதுபோல் பேசுவதும் சிலர் அதிக உணர்ச்சி வசப்பட்டு மேடைக்குச் சென்று ஆண் பெண் வேறுபாடின்றி கட்டிப்பிடி வைத்தியம் செய்வதும் திரும்பதிரும்ப பார்க்க சகிக்கமுடியாத காட்சிகள்.

விஜயை வழக்கம் போல் காப்பி பண்ணி சன் ஒரு நிகழ்ச்சி தொடங்கியது பின்னர் இடையில் நிறுத்திவிட்டது. ஆனால் கலைஞர் டிவி தன் பங்குக்கு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நாலாவது பகுதியாக(சீசன் 4) நடத்துகின்றது.

மானாட மயிலாட சர்ச்சைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அதில் ஆடிய சில கலைஞர்களுக்கு படங்களில் ந்டிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஒருவரின் கலைத்திறமையை உலகிற்க்கு காட்டும் நிகழ்ச்சிதான் ஆனால் தமிழருக்கு என்ரு ஒரு கலாச்சாரம் இருக்கின்றது. அந்தக் கலாச்சாரத்தை அனேகமான தடவை இந்த நிகழ்ச்சி மீறியிருக்கின்றது. அதிலும் நமீதாவும் ரம்பாவும் நடுவர்களாக இருக்கின்றபோது உடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றே தோன்றுகிறது.

நடந்துமுடிந்த சீசன் 3 இறுதிப்போட்டியில் பலரின் பாராட்டைப்பெற்ற ஒரு ஜோடிக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை அதற்க்கு காரணம் அவர்கள் அதிகம் ஓட்டுப்பெறவில்லையாம். ஒருவர் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அறிவிக்கின்றார்கள். பரிசுத்தொகை 10 லட்சம் ஆகவே நடனம் ஆடும் ஒரு ஜோடி ஒரு லட்சம் பெறுமதியான ஓட்டுகளை தங்கள் மொபைலில் இருந்து அளித்து அந்தப் பணத்தைப் வெற்றியீட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.

சூப்பர் சிங்கர் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இந்தமுறை வெற்றி பெற்றவரைவிட இன்னொருவர் மிக அழகாகப் பாடினார் ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமான காலத்தில் இருந்து நடுவர்கள் அனைவரும் பெற்றி பெற்றவரையே புகழ்ந்து தள்ளினார்கள். இணையத்தளத்தில் ஏனோயோருக்கு வாக்களிக்கும்போது பக்கம் வேலை செய்யவில்லை ஆனால் அவருக்கு வாக்களித்தால் மட்டும் பக்கம் வேலை செய்து உங்கள் ஓட்டுக்கு நன்றிகள் என செய்தி வருகின்றது. (இந்தப் பிரச்சனை பற்றி விஜய் டிவியின் கருத்துக்களத்தில் பெரிய விவாதமே நடைபெற்றது).

பாடல்போட்டியில் பாடுபவருக்கு பின்னால் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவார்கள். இதெல்லாம் தேவையா பாடுகின்றவரின் கவனத்தை திசைதிருப்பாதா?

பெரும்பாலும் பாட்டுப்போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பாடவும் வருகின்றார்கள் நடுவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை விஜய் டிவி சூப்பர் சிங்கரில் முன்னாள் தொகுப்பாளினிக்கு கல்தா கொடுத்த காரணமே இன்னொருவரை(பெரிதாக பாடமுடியாதவர்) நடுவர்கள் அடிக்கடி புகழ்ந்தது. இதனால் அவர் கோவித்துக்கொண்டுபோய்விட்டார்.

ரிமோட் உன் கையில் தானே இதெல்லாம் பார்க்கவேண்டுமா எனக்கேள்வி கேட்பவர்களுக்கு ஓரிருவர் பார்ப்பதனால் தான் அவர்கள் செய்யும் தவறுகள் புரிகின்றது.

நமது நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களை பல வாசகர்கள் ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றார்கள். அவர்களின் எந்தக் கருத்துக்களையும் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கண்டுகொள்வதேயில்லை.


நமீதா ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்துவந்த உடை


நல்லதொரு நிகழ்ச்சியைக் கத்தியே கொல்லவேண்டுமா அணுகுங்கள் டிடி


தமிழைக் கொல்வது இந்த நாயர் தம்பதிகளுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி.

யுகேந்திரனாக இருந்தவரை யுகேந்திரன் வாசுதேவ நாயராக்கிய பெருமை விஜய் டிவியையே சாரும்.

தடம் மாறும் சன் டிவி

கிட்டத்தட்ட தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்னர் 90களின் ஆரம்பத்தில் தூரதர்சனில் ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் மட்டுமே பார்த்துவந்த தமிழ்மக்களுக்கு (இலங்கைவாழ் மக்களுக்கு செய்திகளும் கலையரங்கம் என்ற இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நிகழ்ச்சி)சன் தொலைக்காட்சி புத்துயிர்கொடுத்தது,



புதிய படங்கள், திரைவிமர்சனம், டாப் டென், சிறந்த நகைச்சுவைகள், பாடல்கள், போட்டிகள் என புதிய புதிய நிகழ்ச்சிகள் மக்களும் சன்னுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகத் தொடங்கிவிட்டார்கள். சில நாட்களில் தமிழர்களை மெல்லக் கொன்றுகொண்டிருக்கும் விஷமான மெஹா சீரியல்களின் வருகை என சன் மெல்ல மெல்ல தன் கிளைகளை படரவிட்டது.

அத்துடன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் டிவி என்ற அரசியல் முத்திரையும் குத்தப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் அதிமுகவும் தன் அரசியல் பணிகளுக்காக ஜெயா டிவியை தொடங்கியது. இப்படியே சட்ட‌ர்லைட் யுகத்தில் பல தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன.

தன் சிறப்பான தனித்துவமான நிகழ்ச்சிகளால் மக்கள் மத்தியில் சன் பிரபலமடையத் தொடங்கியது. இதன் வெளிப்பாடக சினிமாப் படங்களில் செய்தி என்றால் தூரதர்சனைக் காட்டியவர்கள் சன்னைக் காட்டத்தொடங்கினார்கள்.

தற்போது சன்னில் பல நிகழ்ச்சிகள் மறைந்து மெஹா சீரியல்களே முற்றுமுழுதாக ஆக்கிரமித்துள்ளது. சன்னை விட்டு மறைந்த சில நல்ல நிகழ்ச்சிகள்.

ஸப்தஸ்வரங்கள் :
ஏவிரமணனால் தொகுத்தளிக்கப்பட்ட சுபஸ்ரீ தணிகாசலத்தால் தயாரிக்கப்பட்ட பல இளம் பாடகர்களை வெளி உலகிற்கு கொண்டுவந்த நிகழ்ச்சி. சுபஸ்ரீயின் வெளியேற்றத்தாலும் ஏவிரமணனின் வெளியேற்றத்தாலும் சில நாட்கள் இன்னொருவரால் நடாத்தப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.

இந்த வார உலகம்:
கடந்த வாரம் உலகில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு. பின்னர் சன் நியூசில் சிலகாலம் நடத்தினார்கள். அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

நீங்கள் கேட்டபாடல் :
விஜயசாரதியால் பல நாடுகளுக்கும் சென்று அந்த அந்த நாடுகள் பற்றிய தகவல்களுடன் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி. பாடல் நிகழ்ச்சியைவிட விஜயசாரதி தொகுத்தளிக்கும் நாடுகள் பற்றிய சுவையான செய்திகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தது.

மலரும் மொட்டும் மற்றும் குட்டிஸ் சாய்ஸ்:
சிறுவர்களுக்கான நிகழ்ச்சி, சுட்டி டிவியின் வருகையுடன் இந்த நிகழ்சிக்கும் கல்தா.

இளமை புதுமை :
சொர்ணமால்யாவை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி. காலேஜ் மாணவமணிகளை வைத்து இவர் செய்த ரகளை. பல இளைஞர்களின் விருப்பத்திற்க்குரிய நிகழ்ச்சி. சொர்ணமால்யாவிற்க்கு பின்னர் அர்ச்சனா, அர்ச்சனாவின் திருமணத்திற்க்கு பின்னர் ஹேமா சிங்ஹா என அழகிகளின் கை மாறி இப்போ கிடப்பில் போடப்பட்டுவிட்டது.


பாட்டுக்கு பாட்டு :
பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியின் வருகையின் பின்னர் ரமேஷ் பிரபாவின் வெளியேற்றத்தால் அப்படியே இடம் பெயர்ந்து அதே தலைப்பில் அதே ஸ்பொன்சருடன் கலைஞர் டிவியில் வெற்றி நடைபோடுகின்றது.

மீண்டும் மீண்டும் சிரிப்பு :
இதுவும் கலைஞர் டிவியின் வருகையால் காணாமல் போன நிகழ்ச்சி. மூர்த்தியின் காமெடியும் இறுதியில் இவர்கள் சொல்லும் மெசேயும் பிரபலம். இப்போ கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகின்றது.

காமெடி டைம் :
மயில்சாமியால் இரவு வேளையில் நடத்தப்பட்டு பின்னர் சிட்டிபாபு அர்ச்சனாவின் வணக்கம், வணக்கம், வணக்கத்தால் ரொம்பவும் பிரபலமான நிகழ்ச்சி. அர்ச்சனாவின் விலகலுக்குப் பின்னர் இன்னொருவர் (சுப்ரஜா என நினைக்கின்றேன் அவரையும் இப்போ எந்த சானலிலும் காணவில்லை) சிட்டிபாபுடன் இணைந்து செய்தார். பின்னர் அப்படியே மறைந்துபோய்விட்டது. அதன் புதியவடிவம் ஆதித்யாவில் காலை மாலை வேளைகளில் பலரால் தொகுத்தளிக்கப்படுகின்றது.



திரைவானம், கொண்டாட்டம் :
மோனிகாவால் தொகுத்தளிக்கப்பட்ட திரைப்படங்களின் சிறப்புக்காட்சிகள். திரைவானத்தில் ஒரே மாதிரி கதை அல்லது காட்சிகள் உள்ள இரண்டு படங்களைக் காட்டுவார்கள். கொண்டாட்டம் நகைச்சுவைத் துணுக்குகள் நிறைந்த காட்சிகள் காட்டப்படும் நிகழ்வு.

அசத்தப்போவது யாரு :
சன் இன்னொரு சானலில் இருந்து லாவகமாக சுட்ட பல நிகழ்ச்சிகள் இருக்க ஒரு சானலில் இருந்து நிகழ்ச்சியை மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், நிகழ்ச்சி செய்பவர்கள் என பலரையும் தூக்கி இயக்குனருக்கும் மதன்பாபு சிட்டிபாபுவுக்கும் ஜால்ரா அடித்த நிகழ்ச்சி. அதிலும் பத்தோ பதினொரு படங்கள் மட்டும் நடித்த சிட்டிபாபுவை காமெடி ஜாம்பவான் எனும்போது வரும் சிரிப்பு இவர்களின் பார்போர்மன்ஸ் பார்க்கும் போது வருவதில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மனாக மதுரை முத்து ஒருவரையே பல கால நம்பியிருந்த நிகழ்ச்சி. சில வாரங்களாக ஏனோ நிறுத்திவிட்டார்கள். இதே நிகழ்ச்சியின் இன்னொரு காப்பியான எல்லாமே சிரிப்புத்தான் கலைஞர் டிவியில் களை கட்டுகிறது. குறிப்பாக ரோபோ சங்கர் அரவிந்த் இருவரின் பார்போமன்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது.

விஜய் டிவியில் இருந்து எப்படி ஒரு நிகழ்ச்சியை சன் முற்றுமுழுதாக தன் வசமாக்கியதோ அதேபோல் சன்னுக்கு நியூட்டனின் மூன்றாம் விதிப்படி கலைஞர் டிவி செய்துகாட்டியது.

இப்படிப் பல நிகழ்ச்சிகளை நிறுத்தி தற்போது சன் வெறும் மெஹா சீரியல்களை ஒளிபரப்பி மக்களின் சிந்தனைகளை பாழாக்குகின்றது. கோலங்கள் என்ற தொடர் கடந்த 5 வருடமாக மக்களை அறுத்துக்கொண்டிருக்கின்றது. பெரும்பாலான மெஹா சீரியல்களின் கதைகள் ஒரே மாதிரியான கதைதான் பழிவாங்கல், குடும்பப் பிரச்சனை. இன்னொருத்தி கணவன் மேல் ஆசைப்படும் பெண், இன்னொருவன் மனைவி மேல் ஆசைப்படும் ஆண். இரண்டு கல்யாணம், கள்ளக்காதல் என ஒரே திசையில் மக்களை முட்டாளாக்கும் தொடர்கள்.

சன்னில் தற்போது எந்தவிதமான நகைச்சுவைத் தொடர்களோ அல்லது விடாது கருப்பு, ருத்ரவீணை போன்ற திரில் தொடர்களோ இல்லை. சனி ஞாயிறுகளில் அம்மன் தொடர்போட்டு அறுக்கின்றார்கள்.

சன்னின் இந்த தடம் புரளல்களுக்கான காரணமாக எனக்குப் பட்டவை:

1. கலைஞர் டிவியின் வருகையும் வளர்ச்சியும் என்னதான் கண்கள் பனித்து இதயம் இனித்தாலும் டிவியைப் பொறுத்தவரை சன்னின் தற்போதைய எதிரி கலைஞர் தான். அதனால் தான் அவர்கள் ரஜனி படம் போட்டால் இவர்களும் ரஜனி படம் போடுவார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்பெசல் ஷோ போட்டால் இவர்கள் உடனே அதே நேரத்தில் கேடிவியில் சூப்பர் ஹிட் திரைப்படம் போடுவார்கள். இந்தப்போட்டி இசையருவிக்கும் சன் மியூசிக்கும் கூட உண்டு.

2. கேடிவி, ஆதித்யா, சுட்டிடிவி, சன் மியூசிக் என ஒவ்வொரு வகைக்கும் ஒரு சானல் இருப்பதால் சன்னில் மெஹா சீரியல் மட்டும் போதும் என்ற மனப்பான்மை. கேடிவியில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் பத்தாயிரம் முறையாக ஒளிபரப்பான படமே ஒளிபரப்பாகும். லியோனி நடித்த கங்கா கெளரி படம் தியேட்டரைவிட கேடிவியில் அதிக நாட்கள் ஒளிபரப்பானது.

3. சன் குழுமம் படம் தயாரிக்க அல்லது மற்றவர்கள் தயாரித்ததை வாங்கி விநியோகிக்கத் தொடங்கியதன் பின்னர் தங்கள் இதுவரை தயாரித்த மொக்கை படங்களை மாத்திரம் டாப் டென்னிலும் சூப்பர் சீன்ஸ்சிலும் ஒளிபரப்பாக்கி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்தது. மாசிலாமணி விளம்பரத்தைக் கண்டாலே ஆட்டோம‌டிக்காக ரிமோட் சானல் மாற்றுகின்றது.

4. சன் மியூசிக்கில் முன்னர் போல் அழகான தொகுப்பாளினிகள் இல்லை. இருந்தவர்களும் இசையருவிக்கு போய்விட்டார்கள். அத்துடன் சன் மியூசிக்கில் தங்கள் படத்தின் மொக்கைப்பாடல்களே போடுகின்றார்கள். அயன் பாடல்களைப் போட்டுமுடித்ததும் "சான்ஸே இல்லை சூப்பர் டூப்பர் பாடல் பார்த்தோம்" என தொகுப்பாளினி தினமும் சொல்லும் போது அவரை அடிக்கத் தான் மனம் வருகின்றது.

5. சன் நியூஸ் பக்கத்தில் பாரிய அனர்த்தம் நடந்தபோதும் அமெரிக்காவில் 4 பேர் விபத்தில் செத்ததும், ரஷ்யாவில் மாடு கன்னு போட்டதும் என நடுநிலையான செய்திகளால் வெறுப்படையச் செய்தது.

6. ஆதித்யா காமெடிச் சானலில் சிரிக்கமட்டும் என மற்றவர்களைத் துன்புறுத்தின் ஒரு நிகழ்ச்சி செய்கிறார்கள். இதனை இதுவரை எவரும் கண்டிக்கவில்லை. அத்துடன் ஒரே காமெடியையே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள். எத்தனையோ இடைக்கால கவுண்டமணி காமெடிகள். பழைய நாகேஷ் சுருளி சோ காமெடிகள் இருக்க மீண்டும் மீண்டும் வடிவேலும் விவேக்கும் தான்.



சன் தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்யவேண்டும் இல்லையென்றால் அடுத்த இடத்தில் இருக்கும் டிவிக்கள் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.

இளையதளபதி விஜயிடம் 32 கேள்விகள்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அம்மா அப்பா வைத்த இயற்பெயரான ஜோசப் விஜயை விட எனக்கு நானே ரசிக‌ர்கள் சார்பில் வைத்த இளையதளபதி பிடிக்கும், புதிய பெயரான டாக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வருங்காலத்தில் கிடைக்கும் முதல்வர் பெயரைக் கேட்கவே காது குளிருது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வில்லு ப்ரிவியூ ஷோவில்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
புதிய பட கான்ராக்ட்டில் கையெழுத்துப்பிடிக்கும், ஆட்டோகிராப்பில் பிடிக்காது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும் வடு மாங்காவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கூட நடிக்கும் நடிகைகளுடன் மட்டும்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிப்பதை விட எனக்கு சோப்பு போடவே பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
குஷி படத்திலிருந்து இடுப்பைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: அது (ங்ணா பஞ்ச் டயலாக்ணோ)
பிடிக்காத விஷயம் : பத்திரிகையாளர் சந்திப்பு

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எத்தனை கிசுகிசு வந்தாலும் பொறுமையாக இருப்பது

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
வேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை மஞ்சள் நீலம் என மல்ரிகலர்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இணையத்தில் வெளியான வேட்டைக்காரன் பாடல்கள்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நம்ம ரேஞ்சுக்கு பேனாவாக ஆக முடியாது

14.பிடித்த மணம்?
ஜாஸ்மின்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அஜித். பிடித்த விடயம் எனக்கு போட்டியாக மொக்கை போடுவது, அவர் நன்னாப் பேஸ்வார்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
வடிவேல். விஜயகாந்திற்க்கு எதிராக அவர் செய்த தேர்தல் பிரச்சாரப் பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?
கில்லி தாண்டு

18.கண்ணாடி அணிபவரா?
சிலவேளைகளில் கண்ணாடி அணிந்தால் அறிவாளிபோல் லுக் வருமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சகல தெலுங்குப் படங்களும்

20.கடைசியாகப் பார்த்த படம்?
எம்ஜீஆரின் வேட்டைக்காரன்

21.பிடித்த பருவ காலம் எது?
ஸ்விட்சர்லாந்தின் குளிர்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எம் எஸ் உதயமூர்த்தியின் தோல்விகளைக் கண்டு துவழாதே

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மனைவி பார்க்கும் வரை மாற்றுவதேயில்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?
ஜிங்க் சக்

பிடிக்காத சத்தம்?
சைலண்ட்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இன்னும் நிலவிற்ககுத் தான் போகவில்லை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இதென்ன சின்னப்பிள்ளைத் தனமான கேள்வி, தனித் திறமை இருப்பதால் தானே நடிக்கிறேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரீமேக் படங்கள் தோற்பது

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போக்கிரி

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஈசிஆர் ரோட்டிலுள்ள பப்புகள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பிரதம மந்திரியாக‌

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அதைத்தான் தினமும் செய்திட்டு இருக்கேனே ஜூவியில் கூட எழுதிட்டாங்கள்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை ஒரு வட்டம்

டிஸ்கி : ஏற்கனவே கலைஞர், ஜெயலலிதா என அரசியல்வாதிகளைச் சிலர் கலாய்த்துவிட்டார்கள். எனக்கு அரசியல்வாதிகளைக் கலாய்க்க ஆசைதான் ஆனால் இங்கே ஆட்டோவிற்க்கு பதில் வெள்ளைவான் வரும் அதனால் ஜஸ்ட் ஜாலியாக நம்ம இளையதளபதியைக் கலாய்த்திருக்கிறேன். சிலகேள்விகளுக்கு என்னைவிட நல்ல பதில் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

கேபிள் சங்கரும் ஜெயா டிவியும்

இன்றைய டயல் ஜெயா டிவி நிகழ்ச்சியில் பிரபல வலைப்பதிவர் திரு. கேபிள் சங்கர் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றது. தனது சிறப்பான திரை விமர்சனங்கள் மூலம் பலரை ஈர்த்த பெருமை திரு கேபிள் சங்கரையே சாரும்.

இந்த நிகழ்ச்சியில் ஜாக்கிசேகர், சஞ்சய்காந்தி, சுகுமார், போன்ற சில வலைப்பதிவாளார்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டார்கள்.

மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சங்கர் அவர்கள் வலைப்பதிவு பற்றிய விளக்கங்களை வழங்கினார். எப்படி வலைப்பதிவு ஆரம்பிப்பது, திரட்டிகள், பின்னூட்டங்கள், அட்சென்ஸ் , பிரபல வலைப்பதிவுகள் என இவரின் விளக்கங்கள் பலரையும் சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரம் சில தொலைபேசியில் விளக்கம் கேட்ட நேயர்கள் வலைப்பதிவையும் இணையத்தையும் போட்டுக்குழப்பிவிட்டார்கள். கேபிள் சங்கரைக் கேள்விகள் கேட்ட அம்மணியும் சில கேள்விகளைத் திரும்ப திரும்பகேட்டார். இவருக்கு வலைப்பதிவுகள் பற்றிய தெளிவின்மை இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பொதுவாக கேள்வி கேட்பவர்கள் அந்த துறைபற்றி ஓரளவேணும் ஹோம் வேர்க் செய்திருக்கவேண்டும். இதற்க்கு சிறந்த உதாரணமாக ரமேஸ் பிரபா அவர்களைக் குறிப்பிடலாம்.

புதிதாக வலைப்பதிவுகள் ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு இவரது பேட்டி நிச்சயம் பிரயோசனமாக இருக்கும். சஞ்சேய் காந்தி கேட்ட கேள்வி போல் யாராவது ஒருவர் எப்படி வலைப்பதிவு ஆரம்பிப்பது? திரட்டியில் இணைப்பது? போன்ற டெக்னிகள் விடயங்களை தனிப்பதிவாக இட்டு புதியவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கலாம்.

இறுதியாக‌ வலைப்பதிவுகளில் நடுநிலைமை பற்றிய கேள்விக்கு கேபிளாரின் பதில் அவரது வலைப்பதிவு முதிர்ச்சியை வெளிக்காட்டியது.

வாழ்த்துக்கள் திரு. கேபிள் சங்கர்

இந்த நிகழ்ச்சி பற்றிய கேபிளாரின் விரிவான கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.

டிஸ்கி : இன்றைக்கு ஒரு திருமணவீட்டிற்க்குச் செல்லவிருப்பதால் இந்த நிகழ்ச்சி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மகளிர் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணம்

முதலாவது மகளிர் இருபதுக்கு இருபது போட்டிகள் இன்று இங்கிலாந்திலுள்ள டோன்டன் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. முதற்சுற்றின் அனைத்துப்போட்டிகளும் இதே மைதானத்தில் தான் நடக்கவிருக்கின்றது. டோன்டன் மைதானத்தை இலங்கை இந்திய ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். 1999 உலகக்கிண்ணத்தின் போது இலங்கை அணியை கங்குலியும் ராவிட்டும் துவைத்து எடுத்த மைதானம். அந்த ஆட்டத்தின் பின்னர் இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவேயில்லை. காரணம் மைதானம் நம்ம ஊர் மைதானங்கள் போல் அளவில் சிறியது. பெண்கள் போட்டிகள் என்பதால் இந்த மைதானத்தில் முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெறுகின்றன.



இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியதீவுகள், இங்கிலாந்து என எட்டு அணிகள் பங்குபெறுகின்றன. இலங்கை தவிர ஏனைய அணிகள் இருபதுக்கு இருபது போட்டிகளில் ஏலவே பங்குபற்றியுள்ளன.

இந்தவருட உலககிண்ணத்தைக் கைப்பற்றிய இங்கிலாந்து தன் சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஏனைய அணிகளுக்கு கடும் சவலாகவே விளங்கும் கிளையர் டைலர், கேப்டன் எட்வேர்ஸ் மற்றும் விக்கட் காப்பாளர் சாரா டைலர் அசத்துவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றாகள்.

அதேவேளை தன் சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியாவும் திறமைகாட்டலாம். அணியின் கேப்டன் கரன் ரோல்டனுக்கு இதுதான் இறுதித் தொடராகும்.

முதலாவது ஆண்கள் இருபதுக்கு இருபது கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியதுபோல் இந்திய மகளிர் அணிக்கும் கைப்பற்றும் வாய்ப்பு பலமாக இருக்கின்றது. அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ் துடுப்பாட்டத்தில் திறமைகாட்டி கேப்டன் ஜுலான் கோஸ்வாமி பந்துவீச்சில் அசத்தினால் கிண்ணம் இந்தியாவுக்கே.

ஏனைய அணிகள் பெரிதாக எதனையும் சாதிக்காது போனாலும் மற்றய அணிகளுக்கு சவாலாகவே விளங்கும். ஆண்கள் இருபதுக்கு இருபது போட்டிகள் போல் இங்கேயும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ தெரியாது.

அரையிறுதிப்போட்டிகளும் இறுதிப்போட்டியும் ஆண்கள் அரையிறுதிப்போட்டிகள் இறுதிப்போட்டி நடக்கும் அதே மைதானத்தில் அதே தினத்தில் முதல் போட்டியாக நடைபெறவிருக்கின்றது. ரசிகர்களுக்கு ஒரே ரிக்கெட்டில் இரண்டு ஆட்டங்கள்.

ஆனாலும் மகளிர் டென்னிசுக்கு இருக்கும் ரசிகர்கள் போல் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஏனோ இல்லை.

விஜய் விருதுகள் - அபத்தமான சில தெரிவுகள்

விரைவில் வெகுகோலாகலமாக விஜய் அவார்ட்ஸ் நடைபெறவிருக்கின்றது. இதற்கான முன்னோட்டங்கள் சில நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகின்றது.



பல துறைகளில் கொடுக்கப்படும் இந்த விருதுகளில் மக்களால் தெர்ந்தேடுக்க 5 பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிறந்த நடிகர், நடிகை, படம், பாடல் மற்றும் இயக்குனர்.

2008க்கான விருதுப்பட்டியலில் ஒரு சில முன்மொழியப்பட்டவர்கள் (Nominees) மிகவும் அபத்தமான தெரிவுகளாக இருக்கின்றது. சிலவேளைகளில் இவர்களின் ரசிகர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி விளம்பரம் தேடும் முயற்சியோ தெரியவில்லை.

சிறந்த நடிகர்கள் :
கமலஹாசன் ‍- தசாவதாரம்
சூரியா - வாரணம் ஆயிரம்
விஜய் - குருவி
அஜித் - ஏகன்
ஜெய் - சுப்பிரமணியபுரம்



இந்தப்பட்டியலில் கமலும் சூரியாவும் ஏன் ஜெய்கூட ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தெரிவுகள். விஜயும் அஜித்தும் எப்படி இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். காரணம் குருவியும் ஏகனும் இவர்கள் இருவரது ரசிகர்களாலும் மறக்கப்படவேண்டிய திரைப்படங்கள். ஆக விஜய் தொலைக்காட்சி அஜித் விஜயை வைத்து வியாபாரம் செய்கின்றது. அத்துடன் இவை மக்கள் தெரிவென்பதால் பெரும்பாலான இவர்கள் ரசிகர்கள் ஓட்டு இவர்களுக்கு கிடைத்து சிறந்த நடிகர் விஜய் படம் குருவி என விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,

பூ படத்தில் நடித்த ஸ்ரீகாந்தையோ அல்லது பிரிவோம் சந்திப்போம் சேரனையோ இன்னொரு தெரிவாக சேர்த்திருக்கலாம்.

அடுத்து நடிகைகள் தேர்வு அவ்வளவு பிரச்சனை இல்லை.
பார்வதி - பூ.
சுவாதி - சுப்பிரமணியபுரம்
அசின் - தசாவதாரம்
ஜெனிலியா - சந்தோஷ் சுப்பிரமணியம்
திரிஷா - அபியும் நானும்



அடுத்தது உச்சக்கட்ட காமெடியாக இவர்கள் கொடுத்திருக்கும் சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியல்
தசாவதாரம்
வாரணம் ஆயிரம்
சுப்பிரமணியபுரம்
ஏகன்
குருவி

ஏனோ தெரியவில்லை குசேலனை இவர்கள் தங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. மீண்டும் அஜித் விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்த இந்தப் பட்டியல்.

சிறந்த இயக்குனர்கள் பட்டியல்
கே எஸ் ரவிகுமார் தசாவதாரம்
சசி பூ
சசிகுமார் சுப்பிரமணியபுரம்
மிஷ்கின் அஞ்சாதே
தரணி குருவி

இந்தப்பட்டியலில் மீண்டும் குருவி இணைக்கப்பட்டிருக்கின்றது. குருவி படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதால் அவருக்கு விருதுகொடுக்க விஜய் தொலைக்காட்சி விரும்புகின்றதா?

சிறந்த பாடல்களாக வாரணம் ஆயிரத்தில் இருந்து மூன்று பாடல்களும் தசாவதாரத்தில் இருந்து ஒருபாடலும் இன்னொரு பாடல் சக்கரைக்கட்டியில் வந்த டாக்சி டாக்சி பாடலாகவும் முன்மொழிந்திருக்கின்றார்கள்.

பெரும்பாலான விருதுகள் கொடுக்கும் அமைப்பைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன. அவை மாநில விருதாக இருந்தால் என்ன? தேசிய விருதாக இருந்தால் என்ன? இல்லையென்றால் ஹிரித்திக் ரோஷன் எல்லாம் தேசிய விருதுக்கு முன்மொழியப்படுவாரா?

கடந்த இரண்டு முறையும் விஜய் விருதுகள் பெரும்பாலும் நடுநிலமையுடன் மக்களின் தீர்ப்பாகவே இருந்தன ஆனால் இம்முறை இவர்கள் சில விருதுகளுக்கு உரியவர்களை மக்களுக்குத் திணித்திருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும்.

அதேவேளை நடுவர்களின் விருதுகள் என சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், படம் போன்றவைக்கு இன்னொரு விருதும் காத்திருக்கின்றது. சிலவேளைகளில் மக்களின் தீர்ப்பாக குருவி சிறந்தபடமாகவும் நடுவர்களின் தீர்ப்பாக சுப்பிரமணியபுரம் சிறந்தபடமாகவும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

எது எவ்வாறாயினும் இந்த முறை விஜய் தொலைக்காட்சி விருதுப்பட்டியல் அபத்தமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே நேரம் விருது வழங்கும் விழாவில் என்ன என்ன ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றனவோ, பொறுமையாக விளம்பரங்கள் இடையே பார்ப்போம்.

ஆஸிக்கு ஆப்பு

இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐசிசி இருபதுக்கு இருபது போட்டிகள் தொடங்கிய நாள் முதலே பல அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறது. போட்டியின் முதல் ஆட்டத்தில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் மக்கா எனப்படும் லோர்ட்ஸில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்தின் சூப்பர் எட்டு கனவு தகர்ந்துவிட்டது என்றே கூறலாம். இன்று நெதர்லாந்து பாகிஸ்தானை வென்றால் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் தங்கள் குழுவில் சூப்பர் எட்டிற்க்கு தெரிவாகிடும். எது எப்படியோ பாகிஸ்தானினது தலைவிதி இன்றைக்கு நெதர்லாந்தால் எழுதப்படும்.



(கிரிக்கெட்டிலும் வைல்ட் கார்ட் ரவுண்ட் வைக்கவேண்டும் என்று ஐசிசிக்கு தந்தி அடிக்கப்போறேன் - பொண்டிங்)

நேற்றைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை அயர்லாந்து வீழ்த்தி சூப்பர் எட்டுக்குள் நுழைந்தது. டெஸ்ட் அந்தஸ்துள்ள வங்கதேசத்தை இன்னொரு கத்துக்குட்டி அணியான அயர்லாந்து வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையளித்தது.

வங்கதேசத்திற்க்கு அயர்லாந்துகொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னர் அடுத்த ஆட்டத்தில் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இலங்கை அணி புரட்டியெடுத்தது. ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் கிடைத்த ரணம் ஆறமுன்னர் இலங்கையும் பொண்டிங்கின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.





கிறிஸ் கெய்ல் அடித்த ஆப்பை சங்ககாரா, டில்ஷான், மெண்டிஸ் போன்றோர்கள் சற்று இறுக்கி அடித்து ஆஸியின் இருபதுக்கு இருபது சம்பியன் கனவைத் தகர்த்தார்கள்.

இந்த இருபதுக்கு இருபது போட்டிகளையும் வரப்போகும் ஆஷஸ் தொடரையும் மனதில் வைத்து பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்குபெற்றவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் வெளியேற்றத்தால் நியூசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இதுவரை அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய அணிகள் ஸ்கொட்லாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நான்கவது அணி பாகிஸ்தானா இல்லை நெதர்லாந்தா? இன்றிரவு விடைகிடைக்கும்.

ஞாநி, கமல், சுஹாசினி, ஷக்தி சிதம்பரம்.

அண்மையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடத்திய திரைக்கதை பயிலரங்கம் பற்றி விகடன், குமுதம் புகழ் ஞாநி "ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, திரைக்கதை, எழுத்து பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வார குட்டு" என்று குமுதம் வார இதழில் எழுதியுள்ளார்.



முதலில் ஞாநி ஒரு விடயத்தை விளங்கியிருக்கவேண்டும் அங்கே நடந்த திரைக்கதை பயிலரங்கத்தில் தமிழர்கள் மட்டும் பங்குபற்றவில்லை. ஏனைய மாநிலங்களிலிருந்தும் பலர் பங்குபற்றினார்கள். அத்துடன் பலமொழி இயக்குனர்களும் பங்குபற்றினார்கள். பன்மொழி உள்ள இடத்தில் தமிழில் பயிலரங்கம் நடத்துவது எப்படிச் சாத்தியம்?



இதே ஞாநி எத்தனை தடவைகள் விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆங்கிலத்திலேயே பேசினார் அங்கே இருந்தவர்கள் பலரும் ஆங்கிலத்தில் பேசினார்கள் குறிப்பாக நீயா? நானாவில் கலந்துகொள்ளும் இளம் பெண்கள் ஆங்கிலத்தில் பேசுவதுதான் தங்கள் அந்தஸ்தை கூட்டும் என நினைக்கின்றார்கள். அப்போது அந்நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்துக்கோ? இல்லை ஏனையவர்களுக்கோ ஏன் குட்டவில்லை?

தனக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் என நடப்பதில் ஞாநிக்கு நிகர் இவர்தான். பிரபலங்களை வைத்து பிரபலமாக நினைக்கும் தந்திரம் ஞாநிக்கு நன்றாகவே வரும்.

இந்தப் பயிலரங்கத்தில் கமல் இன்னொரு விடயத்தையும் உரத்துச் சொல்லியிருக்கின்றார். "தேசிய சினிமா என்பது இந்தி சினிமா கிடையாது. இந்தியும் ஒரு மாநில மொழிதான். ஒரு கால கட்டத்தில் இந்தி, தேசிய மொழி ஆவதை எதிர்த்தோம். ஏனென்றால், இந்தி தெரிந்தால் மட்டுமே மத்திய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டதால் இந்தியை எதிர்த்தோம் என்றார்."

பெரும்பாலான வேற்றுநாட்டு மக்கள் இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா என நினைக்கின்றார்கள். இலங்கையில் கூட இந்திய சினிமா பெஸ்டிவல்களில் இந்தி சினிமாவுக்குத்தான் முன்னுரிமை. தமிழோ ஏனைய தென்னக மொழிகளோ அல்லது வங்கமொழியில் வெளிவந்த நல்ல படங்களை இவர்கள் காண்பிப்பது குறைவு.

கமலின் இந்தக் கருத்துக்கு என்னவிதமான எதிர்வினைகள் வருகின்றது என பொறுத்திருந்ததுதான் பார்க்கவேண்டும்.

ராஜாதிராஜா படத்தை கிழித்து தொங்கவிட்டதன் மூலம் சுஹாசினியும் சில நாட்களாக பலரின் பார்வைக்கு உட்பட்டிருக்கின்றார். ஒரு தரம் குறைந்த படத்தை தரம் குறைவு என சொல்வதில் என்ன தப்பு. உதாரணமாக பாய்ஸ் படத்திற்க்கு ஆனந்தவிகடன் குப்பை என ஒரு வரியில் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.



ஷக்தி சிதம்பரம் வலையுலகில் பல பதிவர்கள் இந்தப்படத்தை தேறாது என விமர்சித்ததை ஷக்தி சிதம்பரம் படிக்கவில்லைப்போலும். சுஹாசினி சொன்னதுபோல் 20 வருடங்களுக்கு முன்னர் வரவேண்டிய படம் அத்துடன் ராகவா லோரன்ஸ் அப்பட்டமாக படத் தலைப்பில் மட்டுமல்ல நடிப்பிலும் சூப்பர் ஸ்டாரை கொப்பிபண்ணியிருக்கின்றார்.

ராஜாதி ராஜா என்றால் அது ரஜனிகாந்தின் சூப்பர் ஹிட் படம் தான் நினைவுக்கு வரும், அந்தப்படத்தின் தலைப்பை இன்னொரு மஹா குப்பைப்படத்திற்க்கு ஏன் கொடுத்தார்களோ தெரியாது. இதேபோல் இளையதளபதியும் புரட்சித் தலைவரின் வேட்டைக்காரன் மீனவ நண்பன் என பழைய பட தலைப்புகளை வைத்து மக்களைச் சோதிக்கபோகின்றார். ராஜாதி ராஜா தலைப்பை மாற்றச் சொல்லி ரஜனி ரசிகர்கள் வேண்டுகோள் கொடுத்திருக்கவேண்டும் ஏனோ செய்யவில்லை.

சம்பந்தப்பட்ட இணைப்புகள்

முரளிகண்ணன்


ஜாக்கிசேகர்

ஜெயிக்கபோவது யாரு?

பதிவுக்கு முன்னர் ஒரு முன்குறிப்பு :
சில நாட்களாக எந்தவிதபதிவுகளும் இடவில்லை. காரணம் பலருக்கு புரிந்திருக்கும். அரசியல்பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை ஆனாலும் நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் எழவு வீட்டில் கிரிக்கெட், சினிமா மொக்கை என என் பதிவுகளை இடமனம் இடம் தரமறுத்ததால் கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக வலைமனையில் புதிதாக எந்தப்பதிவும் இடவில்லை. ஆனாலும் தமிழ்மணத்தின் உதவியுடன் பெரும்பாலான வலைமனைகளுக்கு விஜயம் செய்து சிலருக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறேன். சில நண்பர்களின் வேண்டுகோளிற்கிணங்க மீண்டும்.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக முடிந்து மீண்டும் ஐசிசி டி20 உலக கிண்ணம் இன்றிரவு ஆரம்பமாகின்றது. போட்டிகளை நடத்தும் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் இன்றைய முதல் போட்டியில் மோதுகின்றன. நடப்புச் சம்பியன் இந்தியா நாளை வங்கதேசத்தை எதிர்தாடுகின்றது.


இங்கிலாந்தில் தற்போது கோடைகாலம் அதிலும் வெயில் இந்திய உபகண்டத்தைப்போல் இருப்பதால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு காலநிலை பிரச்சனை கொடுக்காது.

நான்கு குழுக்களாக 12 அணிகள் கலந்துகொள்கின்றன. இனவெறி காரணமாக சிம்பாவே சேர்த்துக்கொள்ளப்படவில்லை(?). ஒவ்வொரு குழுக்களிலும் முதல் இரண்டிடம் பெறும் அணிகள் சூப்பர் எட்டு போட்டிகளில் ஆடும். குழு சியில் அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியதீவுகள் உள்ளன. இந்தக்குழுவில் மட்டும்தான் எந்த அணிகள் முதல் இரண்டு இடம் பெறும் என்பதைக் கணிப்பது கஸ்டம். ஏனையவற்றில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகள் இருப்பதால் ஏனைய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு அவ்வளவு சிரமம் இருக்காது.

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா இங்கிலாந்து போன்றவை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பெரும்பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. பாகிஸ்தான் அணியில் உள்ள சிக்கல்களால் சென்றமுறை இறுதிக்கு வந்ததுபோல் இம்முறையும் வருமா என்பது சந்தேகமே.

பயிற்சி ஆட்டங்களில் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா என்பன சிறப்பாக ஆடின. இந்தியாவின் நியூசிலாந்திடம் ரி20 போட்டிகளில் தோற்கும் பலன் பயிற்சி ஆட்டத்திலும் நிரூபணமாயிற்று. அதே நேரம் இந்தியா தன் விளையாட்டு எதிரியான பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது. இங்கிலாந்தும் பயிறிப்போட்டியின் போது மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தன் நிலையை காட்டியது. பயிற்சி ஆட்டங்களின் போது இலங்கை தடுமாறியதும் சங்கககாராவின் புதிய தலைமையும் இலங்கைக்கு வெற்றி கொடுக்குமா?

சில முக்கியமான அணிகளின் பலம் பலவீனம் :

தென்னாபிரிக்கா :

சிமித் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியில் ஐபிஎலில் கலக்கிய கிப்ஸ், கலீஸ், டும்மினி, டீ வில்லியர்ஸ், மோர்கல், பவுச்சர் போன்ற நீண்ட பலமான‌ துடுப்பாட்ட வரிசை. வண்டர் மேர்வே, க‌லீஸ், டும்பினி, மோர்கல் என சகல துறைவீரர்கள் பலரும் போர்மில் இருப்பது. எனப்பலமான அணியாக காணப்படுகின்றது .பந்துவீச்சில் யூசுப் அப்துல்லா, டேல் ஸ்ரென் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அனுபவ வீரர் நிட்னி இல்லாதது கொஞ்சம் பலவீனமே. அத்துடன் உலகப்கோப்பைப்போட்டிகளில் இவர்களின் அதிர்ஷ்டமில்லாமை இன்னொரு பலவீனமாகும்.

அவுஸ்திரேலியா :
பொண்டிங் தலைமையிலான ஒருநாள் போட்டிகளின் நடப்புச் சம்பியன் ஆஸி இம்முறை எப்படியேனும் இருபது20 போட்டிகளிலும் தங்கள் பராக்கிரமத்தைக் காட்டவே செய்வார்கள். இவர்களின் அதிரடி தொடக்கவீரர்களான மத்யூ ஹெடன், கில்கிறிஸ்ட் இருவரும் ஐபிஎலில் அதிரடிவாணவேடிக்கை காட்டியவர்கள். இவர்கள் இருவரும் அணியில் இல்லாதது பெரியபலவீனமே. அத்துடன் ஷோன் மார்ஷ், சர்ச்சைகளின் நாயகன் அன்ரூ சைமண்ட்ஸ் அணியில் இல்லாதது இன்னொரு வகையில் ஆஸிக்கு ஆப்புத்தான். டேவிட் வார்னர், பொண்டிங், மைக்கள் கிளார்க், டேவிட் மற்றும் மைக்கள் ஹசி ஆகியோரில் துடுப்பாட்டம் பெரிதும் தங்கியிருக்கின்றது. பிரட் லீ, மிச்சல் ஜோன்சன், நேதன் பிராக்கன் மிரட்டல் வேகங்கள் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும்.

இந்தியா :
நடப்புச் சம்பியன் இந்தியா இம்முறையும் கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ள எப்படியும் முயற்சி செய்யும். ஐபிஎலில் சொதப்பிய ஆரம்ப ஜோடிகளான கம்பீர், சேவாக் (இருவரும் டெல்லிக்காக ஆரம்பவீரர்களாக களமிறங்கியிருந்தாலும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை) இங்கிலாந்தில் பிரகாசிப்பார்களா? இல்லை பயிற்சிப்போட்டிகளின் போது கம்பீருடன் ரோகித் சர்மா களமிறக்கப்பட்டு அது வெற்றிகரமாக இருந்தபடியால் ரோகித் சர்மாவும் கம்பீரும் களமிறங்குவார்களா? சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான், யுவராஜ் சிங், டோணி என பலமான துடுப்பாட்ட வரிசை. இதில் ஜடேஜா ரெய்னா போன்றவர்கள் ஐபிஎல்லில் தங்கள் திறமையை நிருபித்தவர்கள்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஆர்பிசிங் ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். இஷாந்த் சர்மா, இர்பான் பதான், பிரவீன் குமார் காயத்திலிருந்து மீண்டால் ஷாகீர் கான் என வேகங்கள் அச்சுறுத்தலாம். சுழலில் பிரயன் ஓஜா, ஹர்பயன் மாயம் செய்யலாம். பகுதி நேரப்பந்து வீச்சாளர்களான ரெய்னா, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், யூசுப் பதான்,ஜடஜா விக்கெட்டுகள் வீழ்த்தினால், இந்திய அணியின் இரண்டாம் முறை வெல்லும் கனவு நனவாகலாம்.

மிகப்பெரிய பலவீனமாக இந்திய அணியின் களத்தடுப்பு. பயிற்சி ஆட்டங்களின்போது கூட அப்பட்டமாக இவர்களின் களத்தடுப்பு பிழைகள் தெரிந்தன. ஐபிஎல்லில் சென்னையை அரையிறுதியில் தவறான வழியில் கொண்ட சென்ற டோனி அதே தவறுகளை செய்யக்கூடாது, அத்துடன் டோனி ஒருநாள் போட்டிகள் ஆடுவதுபோல் இருபது ஓவர் போட்டிகளில் ஆடுவதையும் நிறுத்தவேண்டும்.

இலங்கை :
சங்ககாரா தலைமையிலான பழைய வீரர்கள் சில புதிய வீரர்கள் என்ற கலவையான அணி. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஜெயசூரியாவுடன் பெரும்பாலும் டில்ஷான் ஆடவரலாம். தொடர்ந்து ஜெயவர்த்தனா, சங்கக்கார, மகரூப் சாமர சில்வா என பலம் குன்றிய துடுப்பாட்ட வரிசை. பந்துவீச்சில் மாலிங்காவில் மட்டும் வேகப்பந்துவீச்சில் தங்கியிருப்பது. திலான் துஷாரா, இசுரு உதான இருவரும் புதிய முகங்கள். சுழலில் முரளிதரன் அஜந்தா மெண்டிஸ். மெண்டிஸ் மந்திரம் ஐபிஎல்லில் அவ்வளவாக பலிக்கவில்லை. அத்துடன் இவர்கள் இருக்கும் குறூப்பும் அட்டமத்தில் சனி உள்ள குறூப். இலகுவாக வெல்ல நெதர்லாந்தோ ஸ்கொட்லாந்தோ இல்லை. ஆஸியும் மேற்கிந்தியத்தீவுகளும் இருவரில் ஒருவரையாவது வெல்லவேண்டும். இலங்கைக்கு ரி20யில் அவ்வளவு இலகுவாக வெற்றி கிடைக்காது.

இங்கிலாந்து :
சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய பலம், இதுவரை எவ்வித உலகக்கோப்பைகளும் கைப்பற்றவில்லையென்பது இவர்களின் பெரிய துரதிஷ்டம், போல் ஹொலிங்வூட் தலைமையிலான அணியில் பீட்டர்சன், ரவி போபரா, ஓவைஸ் ஷா என ஒருசில நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள். பந்துவீச்சிலும் அன்டர்சன் நம்ம மன்னார் பொடியன் டிமிதிரி மஸ்ஹரின்ஹஸ் ( உச்சரிப்பதே கஷ்டம்) சைட்பொட்டம் போன்றவர்கள் ஓரளவு பிரகாசித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

பாகிஸ்தான் :
யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் 17வயது நிரம்பிய
அஹமட் ஷெஷாட் பயிற்சிப்போட்டிகளின் போது திறமைகாட்டினார்.யூனிஸ் கான், சல்மான் பட், மிஷ்பா உல் ஹக், அப்ரிடி, ஷோயிப் மாலிக், யசீர் அரபாத், கம்ரன் அக்மல் என பலமான நீண்ட‌ துடுப்பாட்ட வரிசை. அண்மையில் ஆஸியை துபாயில் வெற்றி பெற்ற மனத்தைரியம் போன்றவை பாகிஸ்தானை இம்முறையும் இறுதிப்போட்டிவரை அழைத்துச் செல்லுமா? இல்லை இடையில் இவர்களின் கனவு பறிபோயிடுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பந்துவீச்சைப்பொறுத்தவை அக்தர், குல், தன்வீர் வேகங்கள் திறமைகாட்டினால் பாகிஸ்தான் கோப்பையைக்கூட வெல்லமுடியும். மிரட்டுகின்ற சுழல் பந்துவீச்சாளர் இல்லையென்பது மிகப்பெரிய பலவீனம்,

நியூசிலாந்து :

டானியல் விட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணியில் கொல்கத்தா நைட் ரைடருக்கு தலைமைதாங்கிய மெக்கலம், ஜெசி ரைடர், ரோஸ் டைலர், ஸ்கொட் ஸ்ரைரிஸ், நாதன் மெக்கலம், குப்தில், ஜேக்கப் ஓரம், கப்டன் விட்டோரி என பலமான துடுப்பாட்ட வரிசை எதிரணியின் பந்துவீச்சாளர்களை சின்னாபின்னப்படுத்தலாம். ஓ பிரெய்ன், இயன் பட்லர் போன்ற ஆகிய வேகங்களுடன் விட்டோரியின் சுழலும் ஜாலம் செய்தால் நியூசிலாந்தும் ஏனைய அணிகளுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும்.


மேற்கிந்திய தீவுகள் :
கிறிஸ் கெய்ல் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல், சர்வான், சந்திர‌போல், பிராவோ, போன்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரகள் இருந்தாலும் பலம் வாய்ந்த குறூப்பில் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்றால் ஆஸியை அல்லது இலங்கையை வென்றே ஆகவேண்டும் என்ற நிலை. பந்துவீச்சில் எட்வேர்ட்ஸ், ஜெரோம் டைலர், போன்றவர்கள் திறமைகாட்டினால் வெற்றிவாய்ப்புகள் கிடைக்கும். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் ஆகவே ஒருமுறை டாக்காவில் மினி உலகக்கிண்ணத்தை வென்றதுபோல் மேற்கிந்தியதீவுகள் முயற்சி செய்துபார்க்கலாம்.

என்னுடைய கணிப்பின் படி இங்கே எப்படி நாடுகளைப் பட்டியல் இட்டிருக்கின்றேனோ அதேபோல் தான் வெற்றுவாய்ப்புகளும். எதற்க்கு சில நாட்கள் பொறுத்திருந்துபார்ப்போம்.

டிஷ்கி 1: இங்கேயும் சியர்ஸ் லீடர்கள் ஆடுகின்றார்களா? என சியர்ஸ் லீடர்களின் பரமவிசிறிகள் கேட்கின்றார்கள்?