சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ

சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன் ஒரு கணணிப் பொறியியளாளர் அதுதாங்க சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஆவார். பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிச்சு இப்போ கொழும்பிலை ஒரு மல்டி நசனல் கம்பனியிலை வேலைபார்க்கின்றார். ரொம்ப மென்மையான நல்ல மனிதர் இவர். நல்ல பக்திமானும் கூட எப்படியான பக்திமான் என்றால் தான் எழுதுகின்ற ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான்.

தன்னை சன்மைக்ரோ சிஸ்டம் காரன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் கூப்பிட்டு பாராட்டாவிட்டால் நான் ஜாவாக்காரன் இல்லை என அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்குமளவுக்கு சித்தப்பூ ஜாவாவில் புலி இல்லை இல்லை சிங்கம். அப்லெட், சேர்வ்லெட், பைப்பிங் என ஜாவாவில் சித்தப்பூக்கு எல்லாம் அத்துப்படி சுருக்கமாச் சொன்னால் சித்தப்பூ ஈட் ஜாவா ட்ரிங் ஜாவா சிலீப் ஜாவா என வாழ்கின்றவர்.

அலுவலகத்தில் ஜாவாவுடன் வாழ்க்கை என்றால் ஏனைய நேரங்களில் பிள்ளையாருடன் பக்திமயமான காதல். வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் சித்தப்பூவை நீங்கள் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் அப்படியே புதிய கதிரேசன் ஒரு சில மீட்டர் நடந்து சம்மாங்கோட்டுப் பிள்ளையார் என ஒரே தரிசனம் தான், ஆனாலும் சித்தப்பூவுக்கு வெளிநாட்டு ஆசையும் இருப்பதால் விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட்.

வெள்ளிகளில் பிள்ளையார் கோயில் என்றால் செவ்வாய்கிழமைகளில் மயூரா அம்மனும் ஞாயிறுகளில் தெகிவளை விஷ்ணுவும் சித்தப்பூவின் வழிபடு தலங்கள். இடைக்கிடை லீவு கிடைத்தால் கொச்சிக்கடை சிவன், கொட்டாஞ்சேனை அம்மன் பிள்ளையார், முகத்துவாரம் விஷ்ணு என ஒரு ட்ரிப் அடிப்பார்.

பொறுங்கோ வாறன் இவ்வளவும் வாசிச்சவுடனை உங்களுக்கு சித்தப்பூவைப் பற்றி ஒரு விம்பம் வந்திருக்கும் எல்லோ ஆனால் அதை எல்லாம் உடைப்பது போல சித்தப்பூவிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கு. ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை சித்தப்பூ டெய்லி பியர் அடிப்பார். அதுவும் சின்னப்போத்தல்(படி) தான். நண்பர்கள் கேட்டால் சொல்லும் காரணம் அற்ககோலும் கொஞ்சம் உடம்பிலை இருக்கவேண்டும் என்பதுதான் ஆனால் அதைவிட ஜாவாவுடன் மல்லுக்கட்டிய களையைப் போக்கத்தான் பியர் அடிக்கின்றவர் என்ற உண்மை சித்தப்பூவுக்கு மட்டுமே தெரியும்.

சித்தப்பூ முதன்முறை பியர் அடிச்ச கதை நல்ல பம்பல். பேராதனையில் படிக்கின்ற காலத்திலை பொடியள் எல்லாம் கண்டிக்குப் போய் செட் ஆகினார்கள். நம்ம சித்தப்பூக்கும் பம்பல் பிடிக்கும் கோயில் குளம் என அலைந்தாலும் ஆள் முசுப்பாத்தியான ஆள். சிலர் விஷ்கி பிராண்டி என பெரிசிலை இறங்க நம்ம சித்தப்பூ பாத்தார், உதை எல்லாம் குடிச்சு சத்தியராஜ்(வாந்தி எடுப்பவர்களை செல்லமாக அழைக்கும் பெயர்) ஆகிறதை விட பியரிலை இறங்குவோம் என வலு கலாதியாக எனக்கொரு லயன் லாகர் என ஓடர்போட்டார்.

சித்தப்பூவின் நண்பன் ஜது "மச்சான் நீ இன்றைக்குத் தான் அடிக்கபோறீயோ? "
"அடச்சீ போடா உதெல்லாம் எனக்கு எப்பவோ பழக்கம் " என தன்னை விட்டுக்கொடுக்காமல் சித்தப்பூ ஒரு விடுவை விட்டுவிட்டார்.

சிங்கத்தை கொண்டுவந்து சித்தப்பூவின்ரை முன்னாள் வைச்சவுடன் ஆள் உடனே ஒரு கிளாசிலை அரைவாசிக்கு பியரை நிரப்பிவிட்டு மிச்ச அரைவாசிக்கு கோக்கை கலந்துவிட்டார்.


கூட்டாளிப் பொடியள் எல்லாம் கெக்கே பிக்கே எனச் சிரிக்க சித்தப்பூ "ஏன் நீங்களும் கோக் கலந்துதானே குடிக்கிறியள்? "
இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ.

கொஞ்ச நாளைக்கு முன்னர் சித்தப்பூவிற்க்கு ஆப்பு அவரின் தாய் ரூபத்திலை வந்தது. சித்தப்பூவிற்கு ஒரு கலியாணத்தைக் கட்டிப்பார்க்க தாய் ஆசைப்பட்டார். கம்பசிலை படிச்ச பொடியன் அதாலை ஏதும் லவ்வு கிவ்வு இருக்கும் என்ற டவுட்டிலை
"தம்பி உனக்கு எதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லப்பூ இல்லையெண்டால் எங்கடை புரோக்கர் நல்ல சம்பந்தம் இருக்கிறதாகச் சொல்லுறார் அதைப்பார்ப்பம்?" என்று கேட்க சித்தப்பூவோ

"என்ன விசர்க் கதை கதைக்கின்றாய் என்ரை கூட்டாளிகள் எல்லாம் நீலம் பச்சை சிவப்பு என கலர்க் கலராக பெட்டையளுக்குப் பின்னாலை சுத்தின நேரம் நான் படிச்சுக்கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கிறதைப் பார் எனக்குப் பிரச்சனை இல்லை" என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார்.

சித்தப்பூவின் தாயும் ஒரு மாதிரி வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைச் சித்தப்பூவிற்க்கு பார்த்துவிட்டார். சித்தப்பூவிற்க்கும் அவரைப் பிடிச்சுவிட்டது. என்ன பிரச்சனை என்றால் அந்தப் பிள்ளைக்கு வேலை பருத்தித்துறையில் , ஆனாலும் இப்போ அடிக்கடி சொகுசு பஸ் எல்லாம் ஓடுவதால் சித்தப்பூ வெள்ளிக்கிழமை இரவே வேலை முடிய யாழ்ப்பாண பஸ்சில் ஏறிவிடுவார். சிலவேளை கொழும்புக்கு ஏதும் அலுவலாக வந்த அந்தப் பிள்ளையும் சித்தப்பூவோடை தான் யாழுக்கு போறது.

ஒரு சுபயோக சுபதினத்திலை சித்தப்பூவும் அந்தப் பிள்ளைக்கு தாலி கட்டி தனக்கு மனைவியாக்கிவிட்டார். திருமணத்தின் பின்னர் சித்தப்பூ பியர் அடிப்பதை குறைச்சுக்கொண்டாலும் நிறுத்தவில்லை, இப்போ கோக் போத்தலுக்குள் பியரைவிட்டு கோக் குடிக்கின்றவர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும்.

ஒருநாள் சித்தப்பூ பிரிட்ஜைத் திறந்து கோக் போத்தலுக்குள் இருக்கும் பியரை அடிக்கத் தொடங்க வெளீயே போயிருந்த அவரின் மனைவி வந்துவிட்டார், "உதென்னப்பா கையிலை கோக்கோ ஒருவாய் தாங்கோ களைக்குது" இப்படிச் சித்தி கேட்க சித்தப்பூவிற்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டுவிட்டது.

"இ இ இ இல்லை இதை நீ குடிக்ககூடாது" என சித்தப்பூவின் வாய் தடுமாறியது.
"தாருங்கோ" என்ரபடியே அவரின் கையில் இருந்த கோக் போத்தலைப் பறித்த அவரின் மனைவி குடிப்பதற்க்கு வாய்க்கு கிட்டே கொண்டு போனபின்னர் தான் வேறை ஏதோ மணம் அடிப்பதால் இதென்னப்பா இது பியர் மணம் அடிக்குது. நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ எனக் கேட்டதுதான் சித்தப்பூ மயங்கிக்குப்போய் நிலத்திலை விழுந்துவிட்டார். சித்தப்பூவின் மனைவியின் உறவினன் ஜது சித்தப்பூ பற்றிய கதைகளை அவரின் மனைவிக்கு போட்டுக்கொடுத்த விடயம் சித்தப்பூவிற்க்கு இன்னமும் தெரியாது அதோடை இப்போ சித்தப்பூ பியரே குடிப்பதில்லை.

கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை.

பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். பிடிச்சிருந்தால் சொல்லுங்கள். சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்.

தீப்பிடித்த லண்டனும் வேடிக்கை பார்த்த காவல் துறையும்

கடந்த ஞாயிறு மிதமான குளிர் அடித்துக்கொண்டிருந்த அதிகாலை வேளை வேலை இல்லாத நாளாக இருந்தபடியால் இன்னும் கொஞ்சம் தூங்குவோம் என பிளாங்கெட்டினுள் தூக்கத்தை அனுபவித்துக்கொண்டிருந்தபோது போன் அடித்தது நம்பரைப் பார்த்தால் இலங்கையில் இருந்து மைத்துனன்.

"மச்சான் நோர்த் லண்டன் டொட்டனம்(Tottenham) உங்களுக்கு அருகிலா?"
"இல்லை ஏன்டா கேட்கின்றாய்?"
"அங்கே கலவரமாம் அதுதான் கேட்டேன், நான் பிறகு எடுக்கின்றேன்" என்றபடி வோக்கி டோல்க்கியில் கதைப்பதுபோல சோர்ட் அன்ட் ஸ்வீட்டாகப் பேசியபடி வைத்துவிட்டான்.

தூக்க கலக்கத்தில் டிவியைப்போட்டால் ஸ்கை நியூசில் Tottenham பகுதியில் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையைக் காட்டினார்கள். அல்டி(ALDI) சூப்பர் மார்க்கெட் உட்பட பல கட்டடங்கள் சூறையாடப்பட்டத்துடன் எரிந்துகொண்டும் இருந்தன. ஒரு டவுள் டெக்கர் பஸ் எரிந்து பஸ்பமாகியது.

Mark Duggan

வடக்கு லண்டன் Tottenham பகுதியில் கடந்த வியாழக்கிழமை (04.08.20110 கறுப்பினர் இளைஞர் மார்க் டக்கன் பொலீசாரால் சுடப்பட்டு இறந்ததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் பொலீஸ் நிலையம் முன்னாள் கடந்த சனி பிற்பகல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறி பொலீஸ்காரர்களின் கார்கள் உட்பட சில வாகனங்கள் கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் என பல உடைத்தெறியப்பட்டு எரியூட்டவும் பட்டன.

ஞாயிறு மதியம் அந்தப் பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை கட்டுக்கு அடங்கியதாக Metropolitan பொலிஸார் தெரிவித்தார்கள். ஆனால் ஞாயிறு இரவு வடக்கு லண்டன் Enfield பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்தது.

திங்கள் காலை வழக்கம் போலவே லண்டன் வாசிகளுக்கு விடிந்தது. அவரவர் தங்கள் கடமைகளில் தம்மை மறந்து இருந்தபடியால் முதல் நாள் நடந்த சம்பவத்தை மறந்தேவிட்டார்கள். மாலையில் மீண்டும் Oxford Circus, Enfield, Lewisham, Brixton, Peckham, Camberwell என தென்கிழக்கு, வடக்கு லண்டனில் வன்முறை வெடித்தது. கார்கள் எரிப்பு, சூப்பர் மார்க்கெட்டுகளை உடைத்து பொருட்கள் சூறையாடல் என்பன பெரும்பாலும் இளவயது இளைஞர் யுவதிகளால் முகத்தை மூடியபடி நடத்தப்பட்டன.

வன்முறையின் உச்சக்கட்டமாக குறொய்டனில் உள்ள 100 வருடங்களுக்கு மேற்பட்ட ஹவுஸ் ஆவ் ரீவ்ஸ் (House of Reeves) என்ற தளபாடக் கடை தீயிடப்பட்டு கொழுந்துவிட்ட எரியத் தொடங்கியது. தீயணைப்பு படையினர் பெரும் பிரயத்தனம் செய்தும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. அத்துடன் Waltham Cross லுள்ள சொனி கம்பனியின் ஸ்டோர் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் எரியூட்டப்பட்டது.
ஈலிங்கிளுள்ள ஒரு கடை என் கமேராவில் சுட்டது


இதே நேரம் நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் Clapham சந்தியில் கூடி கறிஸ் டிஜிட்டல், டெபனாம்ஸ் ஆடையகம் போன்றன உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன.

கிழக்கு வடக்கு தென்கிழக்கு லண்டன்களில் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் போது மேற்கு லண்டன் மட்டும் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியிலும் இரவு 9 மணியளவில் மண் அள்ளிப்போட்டார்கள் வன்முறையாளர்கள். ஈலிங் (Ealing)பகுதியில் ஆடையகம் மக்டொனால்ட் உட்பட சில கடைகளை கொள்ளை அடித்ததுடன் இரண்டு கார்களும் எரியூட்டப்பட்டன. திங்கள் இரவு முழுவதும் லண்டனில் பெரும்பாலான நகரங்கள் தீயுடன் புகைந்தன.

லண்டனுக்கு வெளியே பெர்மிங்காமில் மட்டும் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டத்தொடங்கினார்கள்.

இவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கின்றதே, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலீஸார் உள்ள லண்டனில் எப்படிப் பொலிஸாரால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனது என்ற சந்தேகம் சாமான்யனுக்கும் ஏற்படும். உண்மைதான் லண்டன் பொலீசாரால் வேடிக்கை மட்டுமே சில மணி நேரம் பார்க்கமுடிந்தது. காரணம் அவர்களுக்கு வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. அத்துடன் பிரதமர் உட்பட பொறுப்பு வாய்ந்த பல அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருந்தார்கள்.

உள்துறைச் செயலாளர் திரேசா மே உடனடியாக தன் விடுமுறைய ரத்துச் செய்துகொண்டு வந்திருந்தாலும் அவரால் பொலீசாருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்கமுடியாமல் போனது. வெறுமனே இந்த வன்முறைகள் தண்டிக்கப்படவேண்டியவை என அறிக்கை மட்டுமே அடிக்கடி கொடுக்க முடிந்தது. ஸ்கொட்லாண்ட் யார்டின் பிரதி காமிசனர் ரிம் காட்வின் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளை உடனடியாக எங்கே இருக்கின்றார்கள் எனத் தேடும் படி அறிக்கை கொடுத்தார். இவர்கள் இருவரும் அடுத்தநாள் பிரதமர் டேவிட் கமரூன் வரும் வரை தாம் எதுவும் செய்யமுடியாது என்பதையும் தெரிவித்தார்கள்.

சில இடங்களில் வன்முறையாளர்கள் பொலீசாரை தாக்கிய சம்பங்களும் நடந்தன. இத்தனைக்கும் ஒரு சில ஆயிரம் பொலீஸார் மாத்திரமே கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். விடுமுறையில் சென்ற பொலீஸார் மீண்டும் கடமைக்கு அழைக்கப்பட்டார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை முதல் நாள் நடந்த வேண்டத்தகாத சம்பவங்களினால் லண்டன் வாசிகளுக்கு பயத்துடனே விடிந்தது. பல கடைகள் திறந்து உடனடியாகவே மூடப்பட்டன. மத்திய லண்டனில் இருக்கும் லண்டன் ஐ போன்ற சுற்றுலா இடங்களும் பொலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறுது நேரமே இயங்கின. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்டது போல வன்முறை லண்டனில் வெடிக்கவில்லை மாறாக மன்செஸ்டரில் வெடித்தது.

வன்முறையாளர்களில் பலர் வயதுக்கு வராத மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் 11 வயது மாணவனும் அடக்கம் என்பதும் பாடகி மியாவின் உறவினர் ஒருவரின் கடை கொள்ளையில் ஒரு 5 வயதுச் சிறுவன் ஈடுபட்டான் என்பதும் மியாவின் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இந்த வன்முறைக்கு மார்க் டுங்கனின் கொலை மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது, சமூக வலைத்தளங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடுத்த தாக்குதல் எங்கே என அறிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. பழமைவாதக் கட்சியின் சில கெடுபிடியான சட்டங்கள் மக்களை அரசின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. அரச உதவித் தொகையை மட்டுப்படுத்துவது, மாணவர்களுக்கான பல்கலைக் கழக கட்டணம் அதிகரிப்பு, போன்றன பலரிடம் அரசின் மீது வெறுப்பை தந்தது.

ஏற்கனவே மாணவர்கள் சென்ற வருடம் செய்த ஆர்ப்பாட்டங்கள் இத்தகைய வன்முறைக்கு அடிகோலினாலும் வன்முறைக்காரர்கள் அரசை எதிர்க்கின்றேன் என்று பொது மக்களின் சொத்துக்கு சேதம் விளைவித்ததும் கொள்ளை அடித்ததும் தண்டனைக்குரிய குற்றமே.

அத்துடன் பொலீசாரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமையும் ஒரு காரணமாகும். நேற்றுத்தான் வன்முறையாளர்கள் மேல் தண்ணீர் பீய்ச்சி அடிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் வன்முறையாளர்களுக்கு காலுக்கு கீழ் அடிக்கவோ அல்லது சுடவோ அதிகாரம் கொடுக்கப்படவில்லை.(எங்கள் நாட்டுப் பொலீசார் என்றால் சகல அதிகாரமும் இருக்கு). அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தை விட கொஞ்சம் சர்வாதிகாரம் கலந்த ஜனநாயகமே என்றைக்கும் நன்மை பயக்கும்.

லண்டன் 2012 ஒலிம்பிக்குக்கு இன்னமும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் போது லண்டன் வன்முறைகள் பாரிய பொருளாதார பாதுகாப்பு நெருக்கடிகளை கமரூன் அரசுக்கு கொடுக்கும் என்பது நிச்சயம்.

பின்குறிப்பு :அடடே இது எனது 300ஆவது பதிவு. (ஷப்பா எவ்வளவு கஸ்டம்)

கோஷ்டி பார்த்த கதை

எங்கட ஊரிலை திருவிழா தொடங்கினால் கடவுளைக் கும்பிடுகிறமோ இல்லையோ ஐந்தாம் திருவிழாவுக்கு ஆற்றை கோஷ்டி, இந்தமுறையும் எட்டாம் திருவிழா எழும்புமோ? என்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழும்.

கோஷ்டி என்றால் இசைக்குழு. இந்தப்பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. எங்கட காலத்திலை யாழில் பிரபலமான கோஷ்டிகள் ராஜன், சாந்தன், அருணா, யாழோசை கண்ணன், சப்தஸ்வரா போன்றவை. முன்னைய காலத்தில் கண்ணன் கோஷ்டி என்ற எழுச்சி இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் குழு பிரபலம்.

பொதுவாக இந்த ஆடி மாதத்தில் எங்கட பக்கத்திலை மூன்று கோயில்களில் திருவிழா நடக்கும் அல்வாய் முத்துமாரி அம்மன், வதிரி பூவற்கரைப் பிள்ளையார், மற்றது கரணவாய் மூத்தவிநாயகர் கோயில். அதனாலை எங்கட பாடு ஒரே கொண்டாட்டம் தான்.

கோயில் திருவிழா தொடங்கினால் கோஷ்டி பிடிப்பது என்பது சில திருவிழாக்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். இந்த இந்த திருவிழாக்களுக்கு கட்டாயம் கோஷ்டி நடக்கும் என அடித்துச் சொல்லலாம். பகலில் திருவிழா என்று இறைவனை வணங்கி களைத்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்த நிகழ்வாக இதனை நான் கருதுகின்றேன். சில ஏன் இந்த டாம்பீகச் செலவுகள் என்பார்கள். ஆனாலும் இதனால் இன்னொரு சாராருக்கு வருமானம் கிடைக்கின்றது என்ற உண்மையையும் மறுக்ககூடாது.

ஆனாலும் கோஷ்டியை மட்டும் தனித்து நடத்தமாட்டார்கள். இரவுத் திருவிழா முடிந்தபின்னர் ஒரு 8 மணியளவில் சமயச் சொற்பொழிவு நடைபெறும். கம்பன் கழக பேச்சாளர்கள் அவர்கள் இல்லையென்றால் ஊரில் உள்ள சமய அறிவு உள்ள பெரிசுகளை வைத்து இதனை நடத்துவார்கள். ஒரு சில குஞ்சுகுருமன்களும், பெரியவர்களும் பொறுமையாக இருந்து கேட்பார்கள். அதுமுடிய நாதஸ்வர தவில் கச்சேரி. பஞ்சாபிகேசன் குழுவினர், தவில் மேதை தட்சணாமூர்த்தியின் பிள்ளைகளான உதயசங்கர், ஞானசங்கர் குழுவினர், இணுவில் சின்னராசா குழுவினர் எனப் பலர் இதனை நிகழ்த்துவார்கள். சில இடங்களில் இரண்டு மூன்று கூட்டுச் சேர்ந்து வாசிப்பார்கள். ஒருமுறை மூத்த விநாயகர் கோவில் எட்டாம் திருவிழாவுக்கு பத்துக்கூட்டு மேளம், குழல். முன்னுக்கு இருந்து கேட்டவர்களுக்கு காது கிழிந்துருக்கும். எப்படியும் இவர்கள் ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிப்பார்கள்.

அதற்க்குப் பிறகு சிலவேளை பட்டிமன்றம் அல்லது வில்லுப்பாட்டு நடக்கும். பட்டிமன்றம் கம்பன் கழகக் குழுக்கள், கம்பன் கழகத்துக்கு நேரமில்லையென்றால் உள்ளூர் பேச்சாளர்கள். உள்ளூர் பேச்சாளர்களில் நவம் மாஸ்டர், நடராசா மாஸ்டர் இருவரும் சரியான பேமஸ். என்னவொன்று இருவரும் எதிர் எதிர் அணியில் இருந்தால் சிலவேளை பெரிய சண்டைகளே வரும். நானும் ஒரு சில மேடைகள் ஏறினேன் ஆனால் பெரும்பாலும் இவர்களது தலைப்புகள் பாரதம், இராமாயணம் என இருப்பதால் மெல்லக்கழண்டுகொண்டுவிட்டேன்.

வில்லுப்பாட்டுக்கு நல்லூர் ஸ்ரீதேவியும், சின்னமணி குழுவினரும் மிகவும் பிரபலம், அதிலும் ஸ்ரீதேவி அவர்கள் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டில் நடத்தும் போது பெண் குரலில் எல்லாம் கதைத்துப் பாடி நல்ல கைதட்டுப் பெறுவார்.

இதெல்லாம் முடிய கோஷ்டி தொடங்கும். கோஷ்டிகாரர்கள் தங்களை ஆயத்தப்படுத்த எப்படியும் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் அந்த இடையிலை சிலவேளைகளில் நல்ல நித்திரை கொண்டு எழும்புகிறது வழக்கம். எப்படியும் நித்திரையாகி இருக்கிறவர்களை மணிக்குரல் ஷண் அவர்களின் கணீர் குரல் எழுப்பிவிடும். ராஜன் கோஷ்டிக்கு அவர் தான் அறிவிப்பாளர்.

ஒவ்வொரு வாத்தியமாக அறிமுகப்படுத்திவிட்டு கடைசியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்கள் மணிக்குரல் ஷண் என்பார் உடனே ராஜனின் பிரதான கீபோர்ட்டுடன் ஒரு ரம்ஸ் இசை வரும் அது அவர்களின் ரேட்மார்க் மியூசிக்.

எந்தக்கோயில் என்டாலும் முதலில் பிள்ளையார் பாட்டுத்தான் பெரும்பாலும் "பிள்ளையார் சுழிபோட்டு" என்ற பாடலுடனேயே ஆரம்ப்பிபார்கள். பிறகு முருகன் கோயில் என்றால் முருகன் பாடல், அம்மன் கோயில் என்றால் அம்மன் பாடல் என ஒரு சில பக்திப்பாடல்கள் பாடுவார்கள். பின்னர் தாயக எழுச்சிப்பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சினிமாப்பாடல்கள் பாடுவார்கள். ஸ்டெனிஸ் சிவானந்தன், பார்வதி சிவபாதம் போன்றவர்கள் பிரபல பாடகர்கள். பலரின் பெயர்கள் ஞாபகம் இல்லை.

எப்படியும் கோஷ்டி முடிய விடிஞ்சுபோம். பிறகு அவசரமாக குளிச்சிட்டு பள்ளிக்கு போய் நித்திரை கொள்ளவேண்டியதுதான். சிலவேளை அடுத்த நாள் இன்னொரு கோஷ்டி இருக்கும். எப்படியும் பத்து நாள் திருவிழாவில் ஒரு ஐந்து முறையாவது இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

சில இடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கோஷ்டி நட‌க்கும். கோயில் வடக்கு வீதியில் ராஜன் கோஷ்டி, தெற்கு வீதியில் சாந்தன் கோஷ்டி. அங்காலை கொஞ்சம் தள்ளி ரோட்டிலை அருணா என விளாசித்தள்ளுவார்கள்.

திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது.

திருவிழாப்பார்க்கும் போது கச்சான்(மணிலாக் கொட்டை), சோளம், மஞ்சள் கடலை, கெளபி கரம் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு பார்க்கிறதும், லிங்கம் ஐஸ்கிறீம் வானில் சாமத்திலை அல்லது விடியப்புறத்திலை கோன் வாங்கிச் சாப்பிடுகிறதும் ஒரு சுகானுபவங்கள், மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்.

கடைசியாக நான் 2003ல் கோஷ்டி பார்த்தது இன்னும் இல்லை.

பின்குறிப்பு : ஆடி பிறந்தாளே ஊர்களில் திருவிழா தொடங்கிவிடும். திருவிழாவுக்கு போகமுடியாமல் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளறவே ஈழத்துமுற்றத்தில் எழுதிய இந்தப் பதிவை மீண்டும் தந்திருக்கின்றேன்,

சுவாமி வந்தியானந்தாவின் தத்துவ மாலை

சுவாமி வந்தியானாந்தா சுவாமி விவேகானந்தர் போல் வரவேண்டியவர் கால நேர சூழ்நிலைகள் காரணமாக தன் திறமைக்கு ஏற்றது போல ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் ஆசிரமம் நடத்திக்கொண்டிருப்பவர். அதனால் சில பல சீடர்களையும் ஓரிரு குருவை மிஞ்சிய சீடர்களையும் வைத்திருப்பவர். அவர் இடையிடையே உதித்த தத்துவ முத்துக்களை அவரின் அனுமதியுடன் பொறுக்கி இங்கே தத்துவ மாலையாக தந்திருக்கின்றேன். இங்கேயுள்ள கருத்துக்களுக்கு சுவாமி வந்தியானந்தாவே பொறுப்பு.

ஒரு பெண் எம்மைக் காதலிப்பது முக்கியமல்ல நாம் எத்தனை பெண்களைக் காதலித்தோம் என்பதுதான் முக்கியம்

ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை மணம் முடிப்பதில் உள்ள சூத்திரம் விளங்கவில்லை #சந்தேகம்

கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி கவிராஜன் எல்லாம் இருக்கின்றார்கள் ஆனால் ஏன் கவி இளவரசன் மட்டும் இன்னும் இல்லை #சந்தேகம்

ஆவின் பால் குடிப்பவன் எல்லாம் அமலா பாலைத் தேடுறான்

மதுவைப் போதைக்காக குடிக்காமல் மேசைக் கலாச்சாரத்துக்காக (Table Manners ) குடிப்பவர்கள் குடிகாரர்கள் அல்ல,

தமிழ்சினிமாவின் கனவுக்கன்னிகள் ஏன் எப்போதும் பிறமொழிக்கன்னிகளாகவே இருக்கின்றார்கள் #சந்தேகம்

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது. #சந்தேகம்

உணவு உடை உறையுள் போய் இனி பேஸ்புக் ட்விட்டர் கூகுள்+ என மாறும் #அத்தியாவசியம்

நல்லவனாக இருப்பவர்களை ரொம்ப நல்லவனாக மாற்றும் இந்த சமூகத்தை என்ன செய்யலாம்

சன் டீவியும் கலைஞர் டீவியும் முடக்கப்பட்டால் ஆண்கள் சந்தோஷப்படுவார்கள் பெண்கள் தற்கொலை செய்வார்கள் #மெஹா சீரியல்

Google+ புதுப் பொண்டாட்டி மாதிரி ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்கும் But Facebook காதலிபோல எல்லாமே பழகிவிட்டது #அவதானம்

குருவே பட்டும் தெளியாமல் இருக்கும் போது சிஷ்யன் மட்டும் படாமல் எப்படித் தெளிவது (என் முதன்மைச் சிஷ்யனுக்கு கூறியது)

அட்டமத்துச்சனியும் ஏழரைச்சனியும் ஜோதிடத்தில் ஒருபோதும் ஒன்றாக வருவதில்லை தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் வருது #வேலாயுதம் மங்காத்தா ரிலீஸ்

ஐஸின் குழந்தையும் ஐஸ் பிறந்த அதே நவம்பரில் தானாம் டெலிவரி #அழகானவர்கள் அறிவானவர்கள் நவம்பரில் தான் பிறப்பார்கள்.

வங்கியில் பணம் மட்டுமல்ல காதலையும் வைப்புச் செய்யலாம். (விரைவில் இல்லறத்தில் இணையவிருக்கும் நண்பர் ஒருவருக்கு அருளியவாக்கு)