Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

மக்களை ஏமாற்றும் ரியாலிட்டி ஷோக்கள்


மேற்கத்திய தொலைக்காட்சிகளில் நடக்கின்ற ரியாலிட்டி ஷோக்கள் வேறு வேறு வடிவங்களில் தமிழ் தொலைக்காட்சியையும் ஆக்கிரமித்துவிட்டது. மெஹா சீரியல் அழுகைகளில் இருந்து மக்களை ஓரளவேணும் இந்த நிகழ்ச்சிகள் காப்பாற்றினாலும் அண்மைக்காலமாக இவை மக்களை ஏமாற்றுவதுபோல் தோன்றுகின்றது, கிரிக்கெட்டில் எப்படி மேட்ச் பிக்சிங் செய்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளிலும் இவர் தான் வெற்றியாளர் என்ற முடிவு நடுவர்களாக இருப்பவர்களால் முதலிலேயே எடுக்கப்பட்டு பின்னர் மக்களை ஏமாற்ற எஸ் எம் எஸ் வாக்களிப்புகள் இணையத்தில் வாக்களிப்புகள் என்ற கபட நாடகங்கள். ஒரு சிறிய தொகைமக்கள் தான் இந்த வாக்களிப்புகளில் கலந்துகொண்டாலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவரும் ஏமாற்றப்படுகின்றார்கள்.

விஜய் டிவிதான் இந்த நிகழ்ச்சிகளை ஆரம்பித்த புண்ணியத்தைச் சேர்த்ததுடன் இந்நிகழ்ச்சிகளில் நாடகங்களையும் அழுகைகளையும் நிகழ்த்தி என்றும் முதல்வனானது.

ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுபவர்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள் என்பவற்றை ஒளிபரப்பி தங்கள் கஸ்டத்தைக் காட்டியது. சிம்பு பிருத்திவிராஜ் உமா ரியாஸ் சண்டையும் அந்தச் சண்டையில் சிம்பு தனக்கு நடிக்கத்தெரியாது என்ற உண்மையைச் சொன்னதும் ஹைலைட்டான விபரங்கள். உமா ரியாஸ் பிருத்திவி ஜோடிக்கு முதல் பரிசுகொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அதன்பின்னர் மக்களுக்கு யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்ற முடிவு நடுவர்களின் காமெண்ட்ஸிலிருந்து தெரியவந்துவிட்டது.

சில நடுவர்கள் ஏதோ உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்வதுபோல் பேசுவதும் சிலர் அதிக உணர்ச்சி வசப்பட்டு மேடைக்குச் சென்று ஆண் பெண் வேறுபாடின்றி கட்டிப்பிடி வைத்தியம் செய்வதும் திரும்பதிரும்ப பார்க்க சகிக்கமுடியாத காட்சிகள்.

விஜயை வழக்கம் போல் காப்பி பண்ணி சன் ஒரு நிகழ்ச்சி தொடங்கியது பின்னர் இடையில் நிறுத்திவிட்டது. ஆனால் கலைஞர் டிவி தன் பங்குக்கு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நாலாவது பகுதியாக(சீசன் 4) நடத்துகின்றது.

மானாட மயிலாட சர்ச்சைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அதில் ஆடிய சில கலைஞர்களுக்கு படங்களில் ந்டிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஒருவரின் கலைத்திறமையை உலகிற்க்கு காட்டும் நிகழ்ச்சிதான் ஆனால் தமிழருக்கு என்ரு ஒரு கலாச்சாரம் இருக்கின்றது. அந்தக் கலாச்சாரத்தை அனேகமான தடவை இந்த நிகழ்ச்சி மீறியிருக்கின்றது. அதிலும் நமீதாவும் ரம்பாவும் நடுவர்களாக இருக்கின்றபோது உடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றே தோன்றுகிறது.

நடந்துமுடிந்த சீசன் 3 இறுதிப்போட்டியில் பலரின் பாராட்டைப்பெற்ற ஒரு ஜோடிக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை அதற்க்கு காரணம் அவர்கள் அதிகம் ஓட்டுப்பெறவில்லையாம். ஒருவர் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அறிவிக்கின்றார்கள். பரிசுத்தொகை 10 லட்சம் ஆகவே நடனம் ஆடும் ஒரு ஜோடி ஒரு லட்சம் பெறுமதியான ஓட்டுகளை தங்கள் மொபைலில் இருந்து அளித்து அந்தப் பணத்தைப் வெற்றியீட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.

சூப்பர் சிங்கர் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இந்தமுறை வெற்றி பெற்றவரைவிட இன்னொருவர் மிக அழகாகப் பாடினார் ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமான காலத்தில் இருந்து நடுவர்கள் அனைவரும் பெற்றி பெற்றவரையே புகழ்ந்து தள்ளினார்கள். இணையத்தளத்தில் ஏனோயோருக்கு வாக்களிக்கும்போது பக்கம் வேலை செய்யவில்லை ஆனால் அவருக்கு வாக்களித்தால் மட்டும் பக்கம் வேலை செய்து உங்கள் ஓட்டுக்கு நன்றிகள் என செய்தி வருகின்றது. (இந்தப் பிரச்சனை பற்றி விஜய் டிவியின் கருத்துக்களத்தில் பெரிய விவாதமே நடைபெற்றது).

பாடல்போட்டியில் பாடுபவருக்கு பின்னால் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவார்கள். இதெல்லாம் தேவையா பாடுகின்றவரின் கவனத்தை திசைதிருப்பாதா?

பெரும்பாலும் பாட்டுப்போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பாடவும் வருகின்றார்கள் நடுவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை விஜய் டிவி சூப்பர் சிங்கரில் முன்னாள் தொகுப்பாளினிக்கு கல்தா கொடுத்த காரணமே இன்னொருவரை(பெரிதாக பாடமுடியாதவர்) நடுவர்கள் அடிக்கடி புகழ்ந்தது. இதனால் அவர் கோவித்துக்கொண்டுபோய்விட்டார்.

ரிமோட் உன் கையில் தானே இதெல்லாம் பார்க்கவேண்டுமா எனக்கேள்வி கேட்பவர்களுக்கு ஓரிருவர் பார்ப்பதனால் தான் அவர்கள் செய்யும் தவறுகள் புரிகின்றது.

நமது நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களை பல வாசகர்கள் ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றார்கள். அவர்களின் எந்தக் கருத்துக்களையும் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கண்டுகொள்வதேயில்லை.


நமீதா ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்துவந்த உடை


நல்லதொரு நிகழ்ச்சியைக் கத்தியே கொல்லவேண்டுமா அணுகுங்கள் டிடி


தமிழைக் கொல்வது இந்த நாயர் தம்பதிகளுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி.

யுகேந்திரனாக இருந்தவரை யுகேந்திரன் வாசுதேவ நாயராக்கிய பெருமை விஜய் டிவியையே சாரும்.

கலைஞருக்கு வயது ஒன்று.


நேற்றுத்தான் ஆரம்பித்தது போலிருக்கின்றது அதற்க்குள் ஓராண்டை வெற்றிகரமாக கடந்துவிட்டது(15.09.2008) கலைஞர் தொலைக்காட்சி. கலைஞருக்கு சன் குழுமத்துடன் ஏற்பட்ட சண்டையினால் கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி தேவைப்பட்டது. அதற்காக அவசர அவசரமாக தொடங்கப்பட்டாலும் ஒரு வருடத்தினுள் தன்னுடைய இடத்தை முன்னர் சன் தொலைக்காட்சி இருந்த இடத்தில் வைத்துகொண்டு சன்னை பின்னுக்கு தள்ளியதில் கலைஞர் தொகாவின் பங்கு அளப்பரியது.

ஒரு
சின்ன பிளாஷ் பேக்:
தனியார் தொலைக்காட்சிகள் உருவானபோது சன் தொலைக்காட்சி தமிழர்களின் எல்லையற்ற பொழுதூபோக்கு அம்சமாக மாறியது. வீட்டுக்குள் குடும்ப வன்முறைகளை கொண்டுவந்த பெருமை சன்னையே சாரும். அதவாது மெஹா சீரியல்கள் மூலம் எப்படி மருமகளைக் கொல்வது என மாமியாரும் எப்படி மனைவியைக் கொல்வது எனக் கணவரும் திட்டம்போடுவதையும் செயல்பட்டுத்துவதையும் வெளிச்சம் போட்டுக்காட்டிய அளப்பெரும் பெருமைகளை சன்னின் சீரியல்கள் பெற்றன. அத்திபூத்ததுபோல் மெட்டி ஒலி போல் சில சீரியல்கள் வந்தாலும்,ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனத்தின் சீரியல்கள் பலராலும் சிலாகிக்கப்பட்டன இவற்றிற்க்கு சித்தி சீரியலின் வெற்றி எடுத்துக்காட்டாகும். கலைஞரே தினமும் தான் நித்திரைக்குப்போகமுன்னர் சித்தி சீரியல் பார்த்துவிட்டு ராதிகாவை அடுத்த நாள் போனில் பாராட்டுவதாக சித்தி வெற்றி விழாவில் கூறியிருந்தார்.
திரைப்படத்துறையினரின் வெற்றிப்படங்களை தோல்விப்படங்களாகவும் தோல்விப்படங்களை வெற்றிப்படங்களாகவும் மாற்றிய பெருமையும் சன்னையே சாரும். டாப் டென் என இவர்கள் போடும் வரிசையைப்பார்த்து ரசிகர்கள் முன்னர் ஏமாந்ததுஓல் இப்போது ஏமாறுகிறார்கள் இல்லை. இதற்க்கு இன்னொரு காரணம் இணையத்தின் வளர்ச்சி, வலைப்பதிவாளர்கள் என்றால் மிகையாகாது.

சன்னின் மொனோபோலியை(இதற்கான தமிழ்வார்த்தை என்ன?) உடைக்க அதிமுகவினாரல் ஜெயாடிவியும், ஸ்டார் நிறுவனத்தால் விஜய் டிவியும் ராஜ் நிறுவனதால் ராஜ் டிவியும் உருவாக்கப்பட்டது. பின்னர் ஜெயாவும் ராஜ்யும் சன் போல் சீரியல்களை நம்பியே தம்மையும் வளர்த்துக்கொண்டன. ஜெயாடிவி செய்திகள் பெரும்பாலும் கலைஞரைத் திட்டவே உதவின. இடையில் சன்னுக்கும் கலைஞருக்கு நடந்த போரில் ராஜ் உள்ளே நுழைந்து திமுகவின் தொலைக்காட்சியாக மாற முயற்சி செய்தது ஆனால் முடியவில்லை. விஜய் டிவியோ சீரியல்களை விட்டுவிட்டு புதிதுபுதிதாக பல நல்ல நிகழ்ச்சிகளை தொடங்கியது. கலக்கப்போவது யாரு பலரை அறிமுகப்படுத்தியது என்றால் பொய்யில்லை. பின்னர் அவர்கள் விஜயின் முதுகில் குத்துவிட்டு பெயரைக்கூட சற்றே மாற்றி சன்னில் அசத்துகிறார்கள். ம‌துரையில் தின‌க‌ர‌ன் எரிப்புச் ச‌ம்ப‌வ‌த்தின் பின்ன‌ர் காட்சிக‌ள் மாறின‌. த‌யாநிதி மாற‌ன் அமைச்ச‌ர் ப‌த‌வியில் இருந்து வில‌க்க‌ப்ப‌ட்டார். ச‌ன் டிவியில் த‌ன்னைக் காட்ட‌வில்லை என்ற‌ அழுத‌ வைகோ அடிக்க‌டி ச‌ன்னில் தென்ப‌ட்டார். த‌யாநிதி மாற‌னுட‌ம் ச‌ன்னுட‌னும் பிர‌ச்ச‌னை செய்த‌ ச‌ர‌த்குமார் புதிய‌கட்சி தொட‌ங்கிய‌தும் ச‌ன்னைவிட்டு திமுக‌ சென்ற‌பின்ன‌ர் மீண்டும் ச‌ன்னுட‌ன் கைகோர்த்து தான் ஒரு சிற‌ந்த‌‌ அர‌சிய‌ல்வாதி என்பதை நிரூபித்துவிட்டார். இவ‌ர்க‌ள் எல்லோரையும் விட‌ த‌ம‌து தாத்தாவின் எதிரியான‌ ஜெய‌ல‌லிதா ஜெயாவில் க‌லைஞ‌ரைத் திட்டிய‌து போதாம‌ல் இப்போ ச‌ன்னிலும் திட்டுகின்றார்.

இனி கலைஞர் தொலைக்காட்சி:
அறிஞர் அண்ணாவின்(15.09.2007) பிறந்த நாளில் கலைஞர் தொலைக்காட்சி இனிதே தொடங்கப்பட்டது.(அன்றைக்கு விநாயகர் சதுர்த்தி என்பது ஒரு விபத்து). சன் டிவியில் வேலைபார்த்த பல கலைஞர் டிவிக்கு இடம்பெயர்ந்தார்கள் பெயர்த்து எடுக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. இதனால் சன்னின் பல நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டன. இதேபோல் சன் மியூசிக்கிலிருந்து இசையருவிக்கும் பல பெயர்த்து எடுக்கப்பட்டார்கள். கலைஞரின் நிகழ்ச்சிகள் பல சன்னின் ஜொராக்ஸ் போல் இருந்தாலும் அதிலும் சிலவற்றை சுட்டது தெரியாமல் நம்ம தமிழ்ப்பட இயக்குனர்கள் போல் திறமையாகத் தருகின்றார்கள்.

கலைஞர் டிவியின் நிகழ்ச்சிவரிசை 5(டொப் 5 நிகழ்ச்சிகள்). எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் தான் வரிசை ஒழுங்கு இல்லை.

1. லாஜிக் இல்லா மேஜிக்.

இதுவரை எந்த தொலைக்காட்சிகளிலும் இல்லாத புத்தம் புது நிகழ்ச்சியாக கலைஞர் தொகாவில் அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் சன் இதனைக் வழக்கம்போல் சுட்டு அதே வேகத்தில் இடை நிறுத்தியும் விட்டது. எஸ் ஏ சி.வசந்தின் மாஜயாலங்கள் பலரை மகிழ்ச்சியில் ஆற்றுகின்றது. ஸ்டார் மேஜிக் என பிரபலங்களுக்கு இவர் செய்துகாட்டும் மேஜிக், ரீச்சிங் மேஜிக் என பார்வையாளர்களுக்கு செய்துகாட்டும் எளிய மேஜிக் என பலரை தன் மேஜிக்கால் கட்டிப்போட்டுள்ளார் எஸ்ஏசி வசந்த். ஒலிவாங்கி இல்லாம‌ல் ப‌ல‌ இட‌ங்களில் குறிப்பாக‌ வீதிஓர‌ங்க‌ளில் இவ‌ர் செய்யும் மேஜிக்கில் ச‌த்த‌ம் கேட்க‌முடியாத‌து ஒரு மிக‌ப்பெரிய‌ குறை. இத‌னால் இவ‌ர் என்ன‌ சொல்கின்றார் அத‌னைப் பார்ப்ப‌வ‌ர்க‌ள் என்ன‌ சொல்கின்றார்க‌ள் என்ப‌து தெளிவாக‌க் கேட்க‌வில்லை.

2. மானாட மயிலாட‌
கலைஞரின் பெயர் சூட்டலில் விஜய் தொலைக்காட்சியினாரால் ஆரம்பிக்கப்பட்ட நடனப்போட்டியின் இன்னொரு வடிவம். சன்னும் தன் பங்கிற்க்கு மஸ்தானா மஸ்தானா என ஆரம்பித்து வழக்கம் போல் இடை நிறுத்திக்கொண்டது. விஜயோ தன் நிகழ்ச்சியின் தனித்தன்மை இழந்து ஜோடி நம்பர் ஒன்னை கேடி நம்பர் ஒன்னாக மாற்றிவிட்டது. சிம்பு ப்ரிதிவிராஜ் சண்டை பின்னர் ஜீவா விலகியது பிரஜினும் சந்திராவும் விலக்கப்பட்டது தற்போது மகேந்தரின் விலகல் என சச்சரவான நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள். மானாட மயிலாட முதல் சில வாரங்கள் சிம்ரன் நடுவராக கலந்துகொண்டார் பின்னர் நமீதா கலந்துகொண்டு நமீதா தமிழ் என்ற ஒரு வட்டார மொழியை உருவாக்கினார். இப்போ ரம்பா பலரையும் கவர்ந்துவிட்டார்( ஒருவர் இதனைப் பற்றி பதிவே போட்டுள்ளார்). நடனமாடும் சின்னத் திரைக் கலைஞர்களுக்கிடையே போட்டியில்லை என்பது ஆரோக்கியமான விடயம். ஒரு சில ஜோடிகளை நடுவர்கள் ஆஹோ ஓஹோ எனப்புகழ்வது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கின்றது(அவர்கள் சொதப்பலாக ஆடினாலும் புகழ்கின்றார்கள்)

மானடா மயிலாட ஆரம்பித்த போது ஒன்றிரண்டு விளம்பரங்கள் மட்டுமே இன்றோ 15 நிமிடங்கள் விளம்பர இடைவேளையாக எடுக்கிறார்கள்.

3. கானாக் குயில்ப்பாட்டு
இதுவரை எந்த தொலைக்காட்சிகளிலும் கானாப்பாடல்களுக்கு என எந்த பாட்டு நிகழ்ச்சிகளும் வந்ததில்லை. இந்த நிகழ்ச்சியில் தான் கந்தசாமியும் குப்புசாமியும் தங்கள் ஊர்பாசைகளில் வெளுத்துக்கட்டுகிறார்கள். பெரும்பாலான பாடல்களை அவர்களே எழுதிப்பாடுகின்றாகள். ஷங்கதி வரவில்லை என யாரும் கூறுவதே இல்லை. பாடுகின்ற பெரும்பாலானவர்கள் கிராமத்தார்களாகவே இருப்பது இன் நிகழ்ச்சியின் பலம். இரண்டாவது சுற்றின்போது நடனமாடுவதுமட்டும் பலவீனம். மிகப் பெரிய பலமாக இருப்பது தீபா வெங்கட்டின் தொகுப்பும் பாடலும் தான் கூடவே தொகுப்புரை செய்யும் ஷ்யாம் நடிகர் சோவின் பேரன் என்கிறார்கள் உண்மையா?

4. எல்லாமே சிரிப்புத்தான்
கலக்கப்போவது யாரின் கலைஞர் டிவி வடிவம். முதலில் கோவை சரளாவும் சின்னி ஜெயந்தும் நடுவர்களாக இருந்து நடத்தினார்கள் இப்போது கிரேஸ் கருணாஸும் டெல்லி கணேசும் நடத்துகின்றாகள். மேதா தன் அட்டகாச ஆடைகளை இங்கேயும் நிறுத்தவில்லை. நிகழ்ச்சியின் பலம் ரோபோ சங்கரும் அரவிந்தனும். அதே நேரம் சன் அசத்தப்போவது யாருபோல் நகைச்சுவையே வராதவர்களை ஜாம்பவான்கள் என்றோ விஜய் டிவியை கிண்டலோ செய்வதில்லை. கவிதை சொல்லும் ஒருவர், பாடல்களை வித்தியாசமாகப்பாடும் ஒருவர் பெண் நகைச்சுவையாளர்கள் இருவர் அதிலும் ஒருவர் கோவைத்தமிழில் அழகாக ஜோக் சொல்வார் இவர் இறுதியில் சொல்லும் தத்துவங்கள் தான் ஹைலைட்.
5. தீம்தரிகிட
எஸ்பிபி.சரண் தொகுத்து வழங்கும் இன்னொரு சப்தஸ்வரம். வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்க்காக பாடகர்களை ஸ்டூடியோவில் வைத்துப்பாடச் செய்கின்றார்கள் மற்றும்படி எந்த புதியவிடயமும் இல்லை.

சீரியல்களில் அனுஹாசன் நடிக்கும் ரேகா ஐபிஎஸ், பாரதிராஜாவின் தெக்கத்திப்பொண்ணு பலரைக் கவர்ந்திருக்கின்றது. ஆரம்பத்தில் கிரேசிமோகனின் தொடர் ஒன்று ஒளிபரப்பினார்கள் ஏனோ நிறுத்திவிட்டார்கள். பொன்னியின் செல்வன் எப்போ ஒளிபரப்புவார்கள்?

கலைஞர் தொலைக்காட்சியின் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டது என்னவோ சன் டிவிதான். விரைவில் செய்திக்கென தனி அலைவரிசை ஆரம்பிக்க இருக்கிறார்கள் என காற்றுவாக்கில் செய்தி அடிபடுகின்றது. இதனால் சன் நியூசும் விழுந்துவிடும். கலைஞர் செய்திகளில் திமுக புராணம் பாடப்பட்டாலும் ஜெயா டிவி செய்திகள் போல் தினமும் கலைஞரைத் திட்டுவதுபோல் ஜெயலலிதாவைத் திட்டுவதில்லை.

கலைஞர் தொலைக்காட்சியை மக்கள் தொலைக்காட்சிபோல் தமிழுக்கு முதல் மரியாதை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த அப்பாவிகளில் நானும் ஒருத்தன் ஆனால் அவர்களும் எனையவர்களைப்போல் தமிங்கிலிசீல் தான் நிகழ்ச்சி செய்கிறார்கள். இசையருவியில் சிலவேளைகளில் ஆங்கிலமொழி நிகழ்ச்சிபோல் இருக்கின்றது. ஆட்டம்பாட்டத்தில் பூஜா ஆங்கிலத்தில் அடிக்கடி பேசுகின்றார். ஏனைய நிகழ்ச்சிகளும் அதே நிலைதான். நிகழ்ச்சிகளுக்கு பெயர்கள் மட்டும் தமிழில் இருந்தால் போதுமா? இதனை சம்பந்தப்பட்டவர்கள் எப்போதுதான் உணர்வார்கள்.

த‌மிழ்மொழியை வ‌ள‌ர்ப்ப‌த‌ற்க்கு ந‌ல்ல‌ ஊட‌க‌மாக‌ இருக்குமா கலைஞ‌ர் தொலைக்காட்சி என்ப‌தை பொறுத்திருந்துதான் பார்க்க‌வேண்டும்.

பட உதவி : டாக்டர் கலைஞர் வலைப்பூ

விநாயக சதுர்த்தியும் கலைஞரும்

நாளை விநாயக சதுர்த்தி வழக்கம் போல் நம்ம தொலைக்காட்சி முட்டாள் பெட்டிகள் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முதலாக திரைக்குவந்தே சில மாதங்கள் ஆனா டப்பா படங்களை ஒளிபரப்புவார்கள். நமீதா, ப்ரியாமணி, நயந்தாரா போன்ற நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி விஷ்சஸ் என தமிங்கிலிஸில் ஒரு வரி சொல்லிவிட்டு தங்கள் கலைச் சேவை பற்றி பேட்டிகொடுப்பார்கள். காலையில் மட்டும் ஒரு அரைமணி நேரம் ஒரு நூல் பூண்டவர் விநாயகர் பற்றி செத்துப்போன மொழியில் இருக்கும் ஸ்லோகங்களைக் கொண்டு ஏதோ சொல்வார்.

இது வழமையான நடைமுறை ஆனால் இம்முறை விநாயக சதுர்த்தியை கலைஞர் தொலைக்காட்சி மட்டும் வித்தியாசமாக விடுமுறைதினம் என ஏனோ அழைக்கின்றது. சகலதொலைகாட்சிகளும் விநாயகர் சதுர்த்தி என அழைக்க இவர்கள் மட்டும் விடுமுறைதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என விளம்பரம் செய்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி என அழைத்தால் இவர்களின் கட்சிக்கொள்கைக்கு பிழையானது என நினைக்கின்றார்கள் போல. ஆனால் வெள்ளிக்கிழமைகளில் கலைஞர் தொலைக்காட்சியில் பக்திப்படம் ஒளிபரப்புகின்றார்கள்.


ஏன் இந்த முரண்பாடு?