*** என் நன்றி கொன்றார்க்கும் ***


சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு நிர்வாகியிடமிருந்து எதிர்வரும் செப்டம்பர் 29ந்திகதி தொடக்கம் அக்டோபர் 6 ந்திகதிவரை தமிழ்மணத்தின் நட்சத்திரமாக இருக்கமுடியுமா? என அழைப்பு வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த வாரமல்ல அதற்க்கு முதல்வாரமே உங்களை நட்சத்திரமாக்குகின்றோம் என அழைப்புவிடுத்தார்கள். என் வாழ்க்கையில் அவசரம் என்பது கூடவே வருவது அதனால் உடனடியாக ஒரு வாரம் முன்னர் இருப்பதாக ஒத்துக்கொண்டேன்.

என்னுடைய கஷ்டகாலம் என் நட்சத்திரவாரத்தில் தான் அலுவலகத்தில் நிறையவேலை புதிய புரஜெக்ட் ஒன்றுமே செய்யமுடியாத நிலை. அப்படியிருந்தும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பற்ற ஏதோ என்னால் முடிந்த சில பதிவுகளைக் கொடுத்திருந்தேன். வலைக்கு வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. ஆனால் நான் நினைத்ததுபோல் ஏனோ பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை. ஆனாலும் இலங்கைப் பதிவாளார்கள் சிலர் தங்கள் கருத்துக்களை மின் அஞ்சல் ஊடகச் சொல்லியிருந்தார்கள்.

பெயரிலி அவர்கள் ஒரு பதிவில் இலங்கையைப் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். நட்சத்திரமாக இருந்துதான் எழுதவேண்டியதில்லை ஏற்கனவே எழுதிய சில இலங்கைப் பதிவுகளுக்கு பெரிதாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் வராதபடியால் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற எண்ணத்தில் அதனைக் குறைத்துக்கொண்டேன். பெயரிலியின் வேண்டுகோளுக்காக ஒரு பதிவை மீள் பதிவாகக் மீண்டும் தந்திருக்கின்றேன்.

கடந்த வாரம் முழுவதும் எனது வலைக்கு வருகை தந்த நண்பர்களுக்கும், கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த வாரத்தில் எனக்குத் தெரிவித்த ஆதரவுபோல் மீண்டும் எனக்கு உங்கள் ஆதரவுக்கரங்களைத் தருவீர்கள் என நம்புகின்றேன்.

இந்த இடத்தில் நன்றிக்குரியவர்களாக என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்ற நண்பர்களான இறக்குவானை நிர்ஷன், மாயா, தாசன்,வர்மா, வியாபகன்( ஏனோ சில நாட்களாக எழுதுகின்றார் இல்லை) லீனாரோய்,தூயா, கானாப் பிரபா போன்ற தாயக உறவுகளுக்கு நன்றிகள்.

தமிழ்மணத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மீண்டும் என் நன்றிகள். சுவையான நினைவுகளுடனும் நானும் ஒரு வலைப்பதிவன் என பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்னம்பிக்கையுடனும் நட்சத்திர வாரத்தில் இருந்து விடைபெறுகின்றேன்.

என்னுடைய உளறல்கள் தொடரும்......

மழைக்கால நினைவுகள்

என் நினைவுகளை 15 வருடங்களுக்கு பின்னால் பின்னோக்கிப்பார்க்கிறேன் கார்த்திகை மார்கழி மாதம் என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான் அதற்கு இரண்டு காரணம் ஒன்று பாடசாலை விடுமுறை மார்கழியில் வரும் மற்றது மாரிமழை.

எப்படியும் எங்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும்போதே மழையும் ஆரம்பித்துவிடும் அதிலும் எமது பாடசாலை அலைவந்து தாலாட்டும் கடலுக்கு அருகில் இருப்பதால் மழை நாட்களில் கடல் ஒரு பெண்னைப்போல் தோற்றமளிக்கு அதுதான் அழகான ஆபத்து. நீலக்கடல் கருமையாக இருப்பதுடன் வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் இணையும் கடல் எமது கடல் ஆகையாலும் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த நாட்களில் தான் நீந்தப்போவது.



பரீட்சை நாள் என்றால் பாடசாலை பரீட்சை முடிந்ததும் விட்டுவிடுவார்கள் சிலவேளை காலை 8 மணிக்கு பரீட்சை என்றால் எப்படியும் 10 மணி 11 மணிக்கு விட்டுவிடும் நாம் உடனே வீடு செல்வதில்லை யாரும் படிக்கும் மாணவர்கள் வீடு சென்று அடுத்த நாள் பரிட்சைக்கு தம்மை தயார்ப் படுத்துவார்கள் நாமே கடலில் சென்று குளித்து கும்மாளவிடுவது தான் எம் தலையாய கடமை அடுத்த நாளைப் பற்றி அன்றே நாம் சிந்திப்பதில்லை. 2 மணிமட்டும் கடலில் கும்மாளமிட்டுவிட்டு ஈரகாற்சட்டைகளுடன் அப்படியே வீடு செல்வது வழியில் அந்தக் காற்சட்டை உலர்ந்துவிடும்.

ஒரு முறை யாரோ ஒரு எட்டப்பன் வீட்டில் காட்டிக்கொடுத்துவிட்டான் நான் எவ்வளவு மறுத்தும் அம்மா நம்பவில்லை இறுதியாக அவர் என் கையை நக்கிப்பார்த்தார் உப்புக்கரித்தது வேர்வை உப்பல்ல கடல் உப்பு அப்புறம் என்ன செம திருவிழா தான் . நண்பர்களுக்கு இந்த விடயத்தை சொன்னதபின் தான் அவர்கள் ஒரு ஐடியா கொடுத்தார்கள் வீட்டுக்குபோகுமுன் ஏதாவது நல்ல தண்ணி உள்ள கிணற்றில் குளித்துவிட்டு செல்லும்படி அதன் பின் வரும் வழியில் உள்ள அம்மன் கோவில் கிணற்றில் நீராடிவிட்டுத்தான் வீடு செல்வது.

கடலில் தினமும் குளித்தால் உடம்பு கறுக்கும் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதின் பின்னர் என்னை மாதிரி சிவலைப் பொடியள் கடலில் குளிக்க செல்வது குறைவு . கடலில்ற்குப் பதில் கோயில் கேனிகள் (தெப்பக்குளம்).

யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பது அந்த நாளில் எமக்கு கடவுளை வணங்கப் பயன்பட்டதோ இல்லையோ சைட் அடிக்கவும் கேணிகளில் குளித்து கும்மாளமிடவும் நன்றாகப் பயன்பட்டது. மழை நாட்களில் கோயில் குளங்கள் நிரம்பி வழியும் எப்படியும் ஒரு 15 அல்லது 20 அடிகளுக்கு தண்ணிர் நிரம்பியிருக்கும். அங்கே டைவ் அடிப்பது முதல் நீரின் அடியில் சுழியோடி மண் எடுப்பது என பல வித்தைகள் செய்வோம். சில்வேளை மதிய உணவு உண்ண வீடு செல்வது கூட இல்லை பக்கத்து காணிகளில் உள்ள மாமரங்கள் தென்னமரங்கள் எல்லாம் எம் கட்டுப்பாட்டில் மாங்காய் தேங்காய் தான் எம் உணவு. சில பெரிய பொடியள் மட்டும் கொஞ்சம் கள்ளும் சிகரெட்டும் குடிப்பார்கள் (அவர்கள் வேறை கேங்). நாம் அவர்கள் சுருள் சுருளாக புகைவிடுவதை வேடிக்கை பார்ப்போம்.

எமது பாடசாலைக்கு அருகில் உள்ள அம்மன் கோவில் கேணி, இன்னொரு வீரபத்திரர் கோவில் கேணி சிலவேளை மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் குளமும் கேணியும் எங்கள் மழைக்கால வாசஸ்தலங்கள். மழை நாட்களில் எந்த விளையாட்டும் விளையாடமுடியாது ஆதாலம் எமக்கு தெரிந்த ஒரே பொழுதுபோக்கு இதுதான். சில தடவைகள் வீட்டில் எச்சரித்தார்கள் பின்னர் அவர்களே தண்ணி தெளித்து போனால் போகட்டும் போடா என்று விட்டுவிட்டார்கள் .

இன்றும் இந்த நினைவுகள் மனதைவிட்டு அகலாதவை. இனி எப்ப வரும் அந்த வசந்தகாலம்

*** இவர்களைத் தெரியுமா? ***

சில காலங்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த சிலர் இப்போ எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைப் பற்றிய சில சிறுகுறிப்புகள்.

தயாரிப்பாளர்கள்:
எத்தனையோ தயாரிப்பாளர்கள் சில இயக்குனர்களாலும், பொருத்தமில்லாத கதைகளாலும் பிரமாண்ட விளமபரங்களாலும் போண்டியாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஞாபகம் வைத்த்திருப்பது கடினம் அதில் ஒருவரை மட்டும் உங்களுக்குத் தெரிகின்றதா?

ஜென்டில்மேன் குஞ்சுமோன்:
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வாழ்வளித்த வள்ளல். பின்னர் மகனை( மகனின் பெயர் எபி என ஞாபாகம்) வைத்து கோடிஸ்வரன் என்ற பெயரில் பத்து வருடங்களுக்கு முன்னர் படம் எடுத்தார். இன்னமும் படமும் வெளிவரவில்லை இவரும் படம் எடுப்பதில்லை. அந்த படத்தின் ஒரு பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. நம்ம ஊர் எவ் எம் வானொலிகள் ஆரம்பித்த காலத்தில் வெளிவந்த பாடல் அடிக்கடி ஒலிபரப்பினார்கள். பாடல் ஞாபகம் இல்லை. இந்தப் பாடலை கானாபிரபா கண்டுபிடித்துக்கொடுப்பார் என நினைக்கின்றேன். ஷங்கர் தன் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இவருக்கு ஏன் நிதி உதவி செய்யக்கூடாது?

இயக்குனர்கள் :

ஆர்.வி.உதயகுமார்:
கமல், ரஜனியை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர். பலகாலமாக படம் எதையும் இயக்கவில்லை.

பாண்டியராஜன் :
கதாநாயகனாக நடிப்பதை சில காலமாக நிறுத்தியிருந்தார். துணை நடிகராக பல படங்களில் தலைகாட்டுபவர் சில காலமாக படங்களை இயக்குவதை ஏனோ நிறுத்திவிட்டார். ஆண்பாவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம மற்றக்முடியாது.

எஸ்பி.முத்துராமன்:
ரஜனி, கமலை வைத்து ஏவிஎம் நிறுவனத்துக்கு பல படங்களை இயக்கிவெற்றிகொடுத்தவர். இவர்களை இருவரையும் வசூல் நாயகன்களாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் ஏனைய நடிகர்களை வைத்து படம் இயக்கிய படங்கள் மிகச் சிலவாகும்.

மணிவண்ணன் :

நூறாவது நாள், அமைதிப்படை என பல சிறந்தபடங்களைக் கொடுத்தவர். பின்னர் இவர் இயக்கிய படங்கள் பெரிதாக சோபிக்காவிட்டாலும் படங்களீல் வில்லனாகவும் கொமடியனாகவும் வந்துபோனார். நண்பர் முரளிகண்ணன் இவர் பற்றிய சிறப்பான பதிவு ஒன்றைப்போட்டிருக்கின்றார்.

சசி :
ரோஜாக்கூட்டம், சொல்லாமலே என சிறந்த காதல் படங்களைக் கொடுத்தவர். தற்போது என்ன செய்கின்றார் எனத் தெரியவில்லை.

இசையமைப்பாளர்கள் :


கார்த்திக்ராஜா:
டும்டும்டும், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளைபோகுமே, அல்பம்( செல்லமே செல்லம் ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ்ப் பாடல்) என பலபாடல்களில் உள்ளத்தை கொள்ளைகொண்ட இசைராஜாவின் முதல்வாரிசு, தம்பி யுவன் இசை உலகில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார். ஏனோ வாரிசுகளில் இரண்டாமவருக்குத் தான் செல்வாக்கு அதிகம் என நினைக்கின்றேன். தற்போது புதிதாக ஒரு படத்திற்க்கு இசையமைப்பதாக அறியக்கிடைத்தது.

தேவா:
காப்பி ராக மன்னர் தேவா, பாடல்கள் பல ஒரே மாதிரியும் எங்கேயோ கேட்டதுபோல் இருந்தாலும், கானாப்பாடல்களில் கொடிகட்டிப்பறந்தவர். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். வாலி, குஷி, நேருக்கே நேர், கண்ணெதிரே தோன்றினாள் என பல படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், ஸ்ரீகாந்த் தேவாவின் வரவின் பின்னர் ஒதுங்கிவிட்டாரோ தெரியவில்லை.

எஸ்ஏ ராஜ்குமார் :

லாலலா புகழ் இசையமைப்பாளர் அனேகமாக இவரது பாடல்கள் மெல்லிசையாகவே இருக்கும். இயக்குனர் விக்ரமனி ஆஸ்தான இசையமைப்பாளர். சில காலமாகக் காணாமல் போய்விட்டார்.

நடிகர்கள் :

கார்த்திக் :

80களின் காதல் மன்னன், இளவரசன் எனப் பல பட்டங்களைக் கூறலாம். இளஞிகளைக் கட்டிப்போட்ட நடிகர். எத்தனையோ ஹிட் கொடுத்தவர். அரசியல்வாதியாகி 2011 ஆம் ஆண்டில் முதல்வராகும் கனவில் இருப்பதாலோ என்னவோ படங்களில் அதிகம் காணவில்லை.

முரளி :
மைக் மோகனிற்க்கு பின்னர் அதிகம் மைக் பிடித்த நடிகர். காதலைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் பலகாலம் கல்லூரிக்கு போனதிலும் இவரது சாதனையை வருங்கால கதாநாயகர்கள் உடைப்பது என்பது மிகவும் கஸ்டம். இறுதியாக இவரின் நல்ல படம் என்றால் சுந்தரா ராவல்ஸ் தான்.

பிரபு :

என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை மிகப் பிரபலமாக்கியவர். சமீபகாலமாக துணை நடிகராகத் தான் வருகின்றாரே ஒழிய கதாநாயகனாக வருவதில்லை.

நடிகைகள் :

நடிகைகளைப் பொறுத்தவரை அவர்கள் காலத்திற்கேற்ப அடிக்கடி மாறுவதால் பட்டியல் இடமுடியாது. ஆனாலும் திவ்யா உன்னி, மீரா ஜாஸ்மின் போன்ற சில கேரளத்து கிளிகள் காணாமல் போனது கவலை அளிக்கின்றது. அல்லது நடிகைகள் தங்கள் காலம் முடிய சின்னத் திரையில் கிளிசரினுடன் அவதாரம் எடுக்கிறார்கள்.


இன்னும் யார் யாரை நீங்கள் தேடுகின்றீர்கள் என அறியத்தாருங்கள்.

*** உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி. ***

அரசாங்கத்தின் நான்காவது தூணான ஊடகங்களைப் பற்றிய என்னுடைய ஆதங்கங்களும் கருத்துக்களுமே இந்த பதிவில். ஒரு ஊடகம் என்பது மக்களுக்கு முக்கியமான செய்திகளூடன் உண்மைச் செய்திகளையும் கொண்டு செல்லவேண்டும் ஆனால் இன்றோ பல ஊடகங்கள் பொய்யையும் மற்றவர்களின் அந்தரங்களையுமோ செய்தியாக்கி வருமானம் பார்க்கிறார்கள்.

இன்றையகாலத்தில் ஊடகங்களை எழுத்துஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். இணையம் இலத்திரனியல் ஊடகங்களில் வருவது சாலப்பொருத்தமாகும்.

பெரும்பாலான பத்திரிகைகள் வார இதழ்கள் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இன்னொருவரின் தனிப்பட்ட விடய‌ங்களை பெரிதாக்கு அதில் குளிர்காய்கிறார்கள். சில பத்திரிகைகள் சொல்வதை வேதவாக்க எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் அரசியல்ரீதியான பாகுபாடுகளை விட்டுவிட்டு ஏனைய விடயங்களுக்கு வருவோம். இவர்கள் சினிமா நடிகர்களை வைத்துத்த்தான் சம்பாதிக்கிறார்கள். ரஜனியை அட்டைப்படத்தில் போட்டால் இவர்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதால் அவரை வைத்து வியாபாரம் செய்வார்கள். பின்னர் அதே ரஜனியை கிழிகிழி எனக் கிழிப்பார்கள் கேட்டால் பத்திரிகை தர்மமாம். ஐயா நடுநிலையாளர்களே சில நாட்களுக்கு நீங்கள் ரோபோ, மர்மயோகி பற்றிய செய்திகளை போடாது வளரும் கலைஞர்களான ஜெயம் ரவி, சிபிராஜ் போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். இதனைவிட்டு விட்டு மூத்த நடிகர்களின் சூடான செய்திகளை போடுவீர்கள் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை காய்ச்சி எடுப்பீர்கள். ஆனால் நடிகைகள் விடயத்தில் நீங்கள் எப்பவுமோ புத்திசாலிகள் தான் களத்தில் எந்த நடிகைக்கு மவுசோ அவரைப் பற்றித்தான் எழுதுவீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பாரம்பரிய வார இதழான விகடனுக்கும் தான். விக‌டன் தான் நமீதாவை வைத்து "ஹாய் மச்சான்ஸ்" என ஒரு தொடர் கொடுத்தது. இதன் தாக்கம் இப்போ நமக்கு தெரியாது இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்தப் பத்திரிகைளைப் யாரும் ஒரு அந்தக்கால வாசகன் பார்த்தால் நமீதா ஒரு தமிழ்ப்பேராசிரியை என நினைப்பார்.

அடுத்தது இவர்கள் சினிமா தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு பெரிதாக மதிப்பளிப்பதில்லை. யாருக்காவது குற்றாலீஸ்வரன் என்ற சாதனை நீச்சல் வீரனை இன்றைக்கு ஞாபகம் இருக்கா? சிறந்த வீரனாக வரவேண்டியவர் சில காரணங்களால் அதனை செய்துமுடிக்கமுடியவில்லை, எந்தப் பத்திரிகையும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

திரைப்படத்துக்கு விமர்சனம் செய்கின்றேன் என இவர்கள் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது. ஒடாத படத்தை நல்ல படம் என்பார்கள். ஓடிய படத்தை தோல்விப் படம் என்பார்கள். நல்ல படத்தை போரடிக்கின்றது என கூச்சமின்றி எழுதுவார்கள். சமீபகாலமாக இவர்களின் விமர்சனங்களை பெரிதாக யாரும் எடுப்பதில்லை. வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் நடுநிலையாகவே விமர்சிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் படத்துக்கு நல்ல புள்ளிகள் கொடுப்பார்கள் ஏனையவை மட்டம் என்பார்கள். பொதுவாக இவர்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் பெரும்பாலான வார இதழ்களின் விமர்சனங்கள் ஒரே மாதிரியே இருக்கும், வாசிக்கும் வாசகன் குழப்பம் அடையத்தேவையில்லை. ஆனால் தொலைக்காட்சி படவரிசை பத்துகளில் சன்னில் சத்யம் முதலாவது, கலைஞரில் உளியின் ஓசையும் தசாவதாரமும் முதலாவது, ஜெயாவில் இன்னொரு படம் முதலாவது என மக்களைத் தெளிவாக குழப்புவார்கள். அதே நேரம் இவர்கள் வசூல் ரீதியாகவா அல்லது தரரீதியாகவா தரப்படுத்துகின்றார்கள் என்பது புரியவில்லை. புரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள். நல்ல படம் எனப் பெயரெடுத்த படங்களுக்கு தரவரிசையில் இடமிருக்காது அதே நேரம் ஓடவில்லை என பலரும் சொன்ன படம் முதலாவது சமீபத்திய உதாரணம் சத்யம்.

இலத்திரனியல் ஊடகங்களில் இன்னொரு பெரிய பிரச்சனை ஏனைய வானொலி தொலைகாட்சிகளை கிண்டல் செய்வதும் அவருர்களுடன் மல்லுக்கட்டுவதும். எங்களூரில் சில வானொலிகள் முதல்தரம் நம்பர் ஒன் என தம்மைத் தாமே சொல்லிக்கொள்வார்கள். எனக்கு ஒரு சந்தேகம் முதல் தரம் என்றால் அது ஒன்றாகத் தானே இருக்கவேண்டும் ஆனால் இங்கே இரண்டு வானொலிகள் முதல் தரத்தில் இருக்கின்றன என்ன கணிப்போ? நல்ல காலம் சமீபத்தில் ஆரம்பித்த வானொலி இன்னும் அந்தச் சண்டையில் இறங்கவில்லை. இறங்காது என நினைக்கின்றேன். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சூரிய சக்தி தென்றலாக வீசி வெற்றியைத் தரும்.

இதேபோல் சண்டை சன் தொலைகாட்சியின் அசத்தப்போவது யாரில் அடிக்கடி நடக்கும் மதுரைமுத்து என்பவர் சன்னைப் புகழோ புகழ் என்று புகழ்வார். தங்களை ஏத்திவிட்ட விஜய தொலைக்காட்சியை ஏனோ மறந்துவிட்டார்.முன்னைய தொலைகாட்சிகளுடன் பிரச்சனை இருக்கலாம் அதற்காக அவர்களை நக்கலடிப்பது நல்லதல்ல. சன்னுக்கு கலைஞர் தொலைக்காட்சியை நக்கலடிக்கமுடியாத சூழ்நிலையில் ஜெயாவை அடிக்கடி செய்திகளில் காட்டி தங்கள் தாத்தாமீதான பாசத்தைக் காட்டுகிறார்கள்.

பொதுவாக ஊடகம் என்பது மக்களுக்கு நல்ல விடயங்களைத் தான் போதிக்கவேண்டும் ஆனால் இப்போ எதிர்மாறாகத் தான் நடக்கின்றது, சிறந்த உதாரணமாக மெஹா சீரியல்களைச் சொல்லமுடியும். இரண்டு கணவன், இரண்டு மனைவி, கள்ள உறவு இல்லாத சீரியல் எது? இதுவா நம்ம கலாச்சாரம்? தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தணிக்கை தேவை.

இங்கே தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் தமிழ் மொழியைக் கடித்து துப்பவர்களைப் பற்றிச் சொல்ல அவசியமில்லை. அதனை யாரும் முளையிலே கிள்ளவில்லை. மக்கள் தொலைக்காட்சி மட்டும் விதிவிலக்கு,

இதனைவிட சகல வானொலிகளிலும் தொலைக்காட்சிகளும் ஏனோ இங்கிலாந்து ராணியின் வாரிசுகள் போல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதில் விஜய் தொலைகாட்சி முதலிடம் பெறும். இந்த தொற்றுநோய் இப்போ நம்ம நாட்டிலும் தொற்றியிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம். ஒரு முறை இந்த ஆங்கிலமோகத்தைப் பற்றி நண்பர் லக்கிலுக்கிடம் பேசியபோது தமிழகத்தின் நகரத்தில் தான் இந்த மோகம் என்று கிராமங்களில் இன்னமும் பரவவில்லை என்றும் சொல்லியிருந்தார்.

ஒருமுறை நடிகர் கமலஹாசன் குறிப்பிட்ட ஒரு விடயம் ஞாபகத்திற்க்கு வருகின்றது. "பத்திரிகையாளர்களே என் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்" என்றார். டயானா முதல் இன்றைய நயந்தாரா சிம்பு காதல் வரை பெரிதுபடுத்தியவர்கள் சில பத்திரிகையாளர்கள்தான்.

சில இணையத்தளங்களும் செய்திகொடுக்கின்றேன் என மிகவும்தப்புத்தப்பான தகவல்களைக் கொடுக்கிறார்கள். அண்மையில் இலங்கையில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒரு சம்பவத்திற்க்கு இன்னொரு சம்பவத்தின் ஒளிவடிவத்தை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வருத்தம் தெரிவித்தார்கள்.

ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பதுபோல் சில பத்திரிகை, தொலைகாட்சி,வானொலிகளால் அனைத்து ஊடக‌ங்களுக்கும் கெட்டபெயர். தற்போது வலையிலும் நிறைய ஊடகவியளாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும்.

பின்குறிப்பு : உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி என்ற தலைப்பு ஏன் எனக்கேட்கிறீர்களா? நம்ம ஊரில் உள்ள தொலைக்காட்சி ஒன்று தங்கள் செய்திக்கு அவர்கள் செய்தி எனத் தமிழில் சொல்வதில்லை கொடுக்கும் விளம்பரம். இவர்களை இதுவரை யாரும் எங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் செய்தி ஆக்குவீர்கள் எனக் கேட்டதே இல்லை.

*** செங்கைஆழியான் ***

ஈழத்து இலக்கியத்தில் தனக்கென ஓரிடம் பிடித்தவர் கலாநிதி.க.குணராசா என்ற இயற்பெயரையுடைய செங்கைஆழியான். 60களில் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்த செங்கைஆழியானின் பேனா இன்னமு எழுதிக்குவித்துக்கொண்டே இருக்கிறது.



"Proligic Writers" என ஆங்கிலத்தில் ஒரு தொடருண்டு. "எழுதிக்குவிப்போர்" என தமிழில் அர்த்தம் கொள்ளலாம். ஈழத்து எழுத்தாளர்களில் இவருக்கு இது பொருந்துவதுபோல் வேறுயாருக்கும் பொருந்தாது. இவரைப் பற்றி எழுதுவதென்றால் எத்தனையோ நாட்களும் பக்கங்களும் வேண்டும்.

இதுவரை கிட்டத்தட்ட 150க்கு மேற்பட்ட சிறுகதைகளும் 40க்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மட்டுமல்ல, தமிழகத்தின் பிரபலமான ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள், கணையாழி, சுபமங்களா போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றது. இவரது "ஷெல்லும் எழு இஞ்சிச் சன்னங்களும்" என்ற சிறுகதையை மறைந்த எழுத்தாளார் சுஜாதா தினக்குரல் பேட்டியில் மிகவும் சிறந்த கதை இப்படியான கதைகளை நம்மவர்களால் எழுதமுடியாது எனச் சொல்லியிருந்தார் குறிப்பாக கதையின் முடிவு.

நாவல்களில் இவர் சரித்திர நாவல், சமூக நாவல், நகைச்சுவை நாவல், துப்பறியும் நாவல் என சகல பிரிவுகளிலும் தன் தனித்துவ எழுத்தால் பலரைக் கவர்ந்தவர்.

நான் முதல் முதல் வாசித்த நாவல் இவரது நகைச்சுவை நாவலான "ஆச்சி பயணம் போகின்றாள்". யாழ்ப்பாணத்தில் கிணர்றுத்தவளையாக இருந்த பொன்னம்மா ஆச்சி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு கண்டி ஊடக செல்லும் பயணக் கதையே அது. முக்கியமான மூன்றே மூன்று பாத்திரங்களை வைத்துக்கொண்டு இவர் ஆச்சி சென்ற பாதையூடாக வாசகர்களையும் கதிர்காமத்திற்க்கு அழைத்துச் சென்றார். இந்த கதைக்கு ஓவியர் "செள்" வரைந்த படங்கள் இன்னும் மெருகூட்டின என்றால் மிகையில்லை.

அடுத்து யாழ்ப்பாணத்தவர்களின் பட்டம் விடும் கலையை வைத்து இவர் எழுதிய இன்னொரு நாவல் "முற்றத்து ஒற்றைப் பனை". கொக்கர் மாரிமுத்தர் அம்மான், பொன்னு ஆச்சி, சூலாயுதம் என்கின்ற வேலாயுதம், அலம்பல் காசியர் என கதையில் வரும் பாத்திரங்களை நிஜ வாழ்க்கையிலும் பலர் கண்டிருப்பார்கள்.

இன்னொரு நகைச்சுவை நாவலான "கொத்தியின் காதல்" ஒரு பேயின் காதல் கதையைச் சொல்கின்றது. "ஆச்சி பயணம் போகின்றாள்", "முற்றத்து ஒற்றைப் பனை" போல "கொத்தியின் காதல்" ஏனோ அதிகம் பேசப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் மழை நேரம் மட்டும் ஓடுகின்ற ஆறான வழிக்கியாறை கதைக்களமாக வைத்து இவர் எழுதிய "நடந்தாய் வாழி வழிக்கியாறு" என்ற குறு நாவல் நகைச்சுவையாக பல சமூக அவலங்களைக் காட்டுகின்றது.

இவரின் சமூக நாவல்கள் பெரும்பாலும் சாதிக்கொடுமைகளுக்கு சமூக அடக்குமுறைகளுக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளது. "வாடைக்காற்று" மீனவர் சமூதாயத்தின் பிரச்சனைகளை அலசிஆராய்ந்த நாவலாகும் இது பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கதையின் களம் நெடுந்தீவு என்ற யாழ்ப்பாணத்தின் ஒரு தீவக் கிராமம் ஆகும். கிடுகுவேலி, பிரளயம் போன்றவையும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கதைகளே,

இவரின் முக்கியமான வரலாற்றுப் படைப்பாக "குவேனி" என்ற நாவலைச் சொல்லமுடியும். இலங்கையின் மூத்த தலைவியான குவேனி பின்னர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனை மணம் முடித்து உருவாகிய இனமே சிங்கள இனம் என்பதை அந்தக் கதையில் வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு புவியலாளன் என்பதால் பெரும்பாலும் இவரது கதைகளின் களம்கள் பலராலும் உணரக்கூடிய வகையில் விபரிக்ககூடிய ஆற்ற்ல் படைத்தவர். குவேனியில் இதனை நன்கு உணரமுடியும்.

யானை என்ற இவரது நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு காட்டை கண்ணுக்கு முன்னே நிறுத்துகின்ற கதை அது, காட்டாறும் காடு சார்ந்த கதையே ஆகும்.

கங்கைக்கரையோரம் என்ற நாவலில் பல்கலைக்கழக வாழ்க்கையை அழகாகச் சொல்லியிருக்கிறார். அங்கே ஏற்படும் காதல்கள்,ராகிங் பிரச்சனைகள் என சகலதையும் பேராதனைப் பல்கலைக் கழக்ச் சூழலில் விபரித்திருக்கிறார். இந்த நாவலை வாசிக்கும்போது பேராதனை தெரிந்தவர்கள் அந்தக் கட்டிடங்கள், காதலர்கள் சந்திக்கும் பூங்கா, சிறிய குளம், குறிஞ்சிக் குமரன் ஆலயம் என சகலதும் நினைவில் வரும்.

சமகால விடங்களை வைத்து எழுதிய கொழும்பு லொட்ஜ்,மரணங்கள் மலிந்த பூமி, போரே நீ போ, வானும் கனல் சொரியும், ஒரு மைய வட்டங்கள், தீம் தரிகிட தித்தோம், ஓ அந்த அழகிய பழைய உலகம், இந்த நாடு உருப்படாது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கடல்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம், போன்ற நாவல்கள் வரலாற்று நாவல்களாகு, அதே நேரம் இவர் 76 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மையப்படுத்தி எழுதிய 24 மணி நேரம், யாழ்ப்பாணம் கோட்டையின் வரலாற்றை எழுதிய களம் பல கண்ட கோட்டை போன்ற வரலாற்று ஆவணங்களாகவே பாதுகாக்கப்ப்டவேண்டியவை.

இவற்றைவிட இவர் பல பாடனூல்களும் எழுதியுள்ளார். குறிப்பாக சமூகக்கல்வி, புவியியல் நூல்கள். இவரது எழுத்து வெற்றியின் இரகசியம் வாசிக்கும் வாசகனை கதை நடக்கும் கள‌த்துக்கும் காலத்திற்க்கும் கொண்டுசெல்வதுதான். இதேபோல் எழுதியவர் மறைந்த எழுத்தாளர் டானியல். இன்றும் ஈழத்தின் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னனாகத் திகழ்கின்றார் செங்கை ஆழியான்.

பின் குறிப்பு :இவரது நாவல்கள் பற்றிய குறிப்புகள் காலமும் நேரமும் கிடைத்தால் இன்னொரு பதிவில் தரமுயற்சி செய்கின்றேன்.

*** இந்தியா ஆஸ்திரேலியா பலப்பரீட்சை ***

நடக்குமா நடக்காதா என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 டெஸ்ட் தொடர்கள் வரும் மாதம் 9ந்திகதி பெங்களூரில் ஆரம்பிக்க் இருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை ரிக்கி பொண்டிங் தலைமையிலான ஆஸி அணி இந்தியா வந்தடைந்தது. கடந்த முறை இந்தியா சென்ற அணியைவிட மிகவும் பலம் குன்றியதாகவே இம்முறை ஆஸி அணி காணப்படுகின்றது. இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் குறைந்த பல வீரர்கள் இருக்கிறார்கள். அனுபவம் குறைந்தாலும் எந்த நேரமும் விஸ்வரூபம் எடுக்ககூடிய அணிவீரகளான மைக்கல் கிளார்க், சைமன் கட்டிச், ஷேன் வாட்சன்(ஐபிஎலில் கலக்கியவர்) ஹசி, ஸ்டுவேர்ட் கிளார்க், பிரட் ஹாடின் என இளைஞர்கள் பாண்டிங்குக்கும் ஹைடனுக்கும் கைகொடுப்பார்கள். பந்துவீச்சில் பிரட் லீ, மிக்சல் ஜோன்சன் என்ற வேகங்களுடன் புதிதாக சில வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சைமண்ட்ஸ் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக(மீன் பிடிக்க சென்ற பிரச்சனை) அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை இது ஆஸியைப் பொறுத்தவரை இழப்புதான். ரசிகளுக்கும் ஹர்பஜன் சைமண்ட்ஸ் தர்க்கம்களையும் தகராறுகளையும் பார்க்கமுடியாது .


இந்திய அணியைப் பொறுத்துவரை இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரில் இலங்கைஅணியிடம் வாங்கிக்கட்டினார்கள். முரளி, அஜந்தா மெண்டிஸ் சுழலில் கும்ளேயின் அணி பரிதாபமாகத் தோற்றது. ஆனால் இம்முறை சொந்தமண் என்ற பலமும் விக்கெட் காப்பாளர் டோணி மீண்டும் அணிக்கு வந்துள்ள பலமும் (இலங்கையில் தினேஷ் கார்த்திக்கும் பட்டேலும் சொதப்பினார்கள்)ஹர்பஜனின் சுழலும் கைகொடுக்கலாம்.

மும்மூர்த்திகளில் கங்குலிக்கு இடம் கொடுக்காதது இந்திய அணிக்கு சிலவேளைகளில் பாதகமாகமுடியலாம். இதேவேளை சச்சின், ராவிட் இந்த தொடரிலும் சோபிக்காவிட்டால் ஓய்வெடுப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். இலங்கையில் லாராவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் சொந்த மண்ணிலாவது அந்த சாதனையை முறியடிப்பாரா? பொறுத்திருந்துபார்ப்போம்.

ஆஸி அணிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் உதவி செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்தவர் என்பதால் வீரர்களின் பலம்,பலவீனம் நன்கு தெரிந்திருக்கும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கேர்ஸ்டனும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.

அடுத்தமாதம் தொடக்க‌ம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கின்றது. வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? .


*** இலங்கை வலைப்பதிவாளர்கள். ***

வலைப்பதிவின் தாக்கம் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களை விட இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பெரிதாக ஏற்படவில்லை. தமிழகத்திலிருந்து பலர் தங்களுக்கு என ஒரு வலையோ பல வலைகளோ வைத்திருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் உள்ள பல இலங்கையர்கள் எத்தனையோவிதமான வலைகள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் இலங்கையில் வாழும் தமிழ்ப் பதிவாளர்களின் எண்ணிக்கை வெறும் நூற்றுக்குள் தான் அடங்கிவிடுகின்றது. இதே நேரம் இலங்கையில் ஆங்கிலத்தில் பதியும் பதிவாளர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கணணி சம்பந்தப்பட்டவர்களாகவும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுபவர்கள் ஆகவும் மட்டுமே இருக்கிறார்கள்.

மிகவும் சிறந்த எழுத்தாளர்கள் கருத்தாளர்கள் இருந்தும் இலங்கையிலிருந்து வலைப்பதிவர்கள் வெளியே வரதாதற்க்கு என்ன காரணங்கள் என நுனிப்புல் மேய்ச்சலே இந்தப் பதிவு.

முக்கியகாரணமாக நாட்டின் யுத்த சூழ்நிலையைக் குறிப்பிடலாம். இதனால் எழுத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையே பலரை எழுதவிடாமல் தடுக்கின்றது என்பது என் கருத்தாகும். இதனாலே எழுதுவதில் பல அரசியலைத் தொடாமல் அல்லது பட்டும்படாமல் எழுதுகின்றார்கள்.

அடுத்தது வலைபற்றியும் வலையுலகம் பற்றியும் அதிகமான விழிப்புணர்பு இல்லாததாகும். ஏற்கனவே வலையுலகம் பற்றி சில குறிப்புகளையும், வலைப்பதிவாளர்களையும் மெற்ரோ நியூஸ் பத்திரிகை அறிமுகம் செய்தது. இதன் பின்னால் தினக்குரலில் தாசன் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றி எழுதியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர் மாயாவால் இலங்கை வலைப்பதிவாளர்கள் திரட்டி ஆரம்பிக்கப்பட்டது.  மாயாவின் இலங்கை வலைப்பதிவர் திரட்டியைவிட இன்னொரு திரட்டியான இலங்கை வலைப்பதிவுகள் திரட்டியும் இலங்கையிலிருந்து எழுபவர்களின் ஆக்கங்களை திரட்டுகின்றது. இவ்வளவு முயற்சிகள் செய்தும் ஏனோ பலர் வலைப்பதிவை திரும்பிப்பார்பதே இல்லை. அதே ஒரு முறை நிர்ஷன் தன் பதிவில் குறிப்பிட்டதுபோல் வலைப்பதிவை சில எழுதுலக ஜாம்பவான்களும் கல்வியாளர்களும் ஏதோ சாதாரண விடயமாகவும் பொழுதுபோகாமல் இருப்பவர்கள் த‌ங்கள் எண்ணங்களை கொட்டும் இடமாகவுமே கருதுகிறார்கள்.


ஏற்கனவே எனக்கு இலங்கை எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். சிறந்த் எழுத்தாளர்கள் இருந்தாலும் வாரம் ஏதாவது ஒரு புத்தகம் வெளிவந்தாலும் இவர்கள் தங்களை இலங்கைக்கு வெளியே அறிமுகப்படுத்த ஏனோ தயங்குகிறார்கள். 2004ல் நானும் என் உறுவினர் ஒருவருமாகச் சேர்ந்து இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு இணையம் ஆரம்பித்தோம். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் மல்லிகை இதழிலும் இதனைப் பற்றி செய்திகள் வந்தன. தங்களது விபரங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கேட்டேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் என்னைத் தொடர்புகொண்டவர்கள் வெறும் மூன்றே மூன்று பேர்தான். ஏனையவர்கள் ஏனோ தொடர்புகொள்ளவில்லை. கவிஞர் மேமன்கவி எனக்கு ஊக்கம் அளித்தவர்களில் முக்கியமானவர் அவரே எத்தனையோ பேரிடம் நேரடியாகச் சொல்லியும் பலர் விரைவில் அனுப்பிவைக்கின்றேன் என்றார்கள் ஆனாலும் இன்னமும் அந்த விரைவான காலம் வரவில்லை என நினைக்கின்றேன். அந்த முயற்சி அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் மு.மயூரன் போன்றவர்களின் முயற்சியால் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு அதில் பல எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இதே நேரம் இணையத்தில் பிரபலமான எழுத்தாளர்கள் வரிசையில் டொக்டர்.முருகானந்தன், திரு.உடுவை தில்லை நடராஜா, கவிஞர் மேமன்கவி இவர்கள் மூவருமே வலையில் எழுதுபவர்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து எழுதும் நம்மவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானதாகும்.

அடுத்த காரணமாக தொழில்நுட்ப அறிவும் இணைய வசதிகளும் இல்லாமையைக் குறிப்பிடலாம். கொழும்பு போன்ற மாநாகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே இணையச் சேவைகளை பெரும்பாலும் தங்கு தடை இன்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஏனைய இடங்களில் இருப்பவர்கள் இணையக் சேவை வழங்கும் கடைகளுக்குச் சென்றே தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்.

இன்னொரு காரணமாக பலர் வலையை சிறுபிள்ளை வேளாண்மை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை இந்த சிறுபிள்ளை வேளாண்மை பலரை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் பலரது கருத்துக்கள் வலைப்பதிவாளர்களைப் பற்றி எதிர்மறையாகவே இருக்கின்றது அண்மைய உதாரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

இலங்கையிலிருக்கும் எழுத்து ஊடகங்களிலும் சரி இலத்திரனியல் ஊடகங்களிலும் சரி வலைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை. சில பத்திரிகைகளில் சில விடயங்கள் வந்தாலும் வானொலி தொலைக்காட்சிகள் இதனை ஏனோ வெளிக்கொணரத் தயங்குகின்றன. அண்மையில் கூட வெற்றிஎவ் எம் வானொலியில் லோஷனை ஒருவர் வலைப்பதிவுகளைப் பற்றிக்கேட்டிருந்தார். அதற்க்கு அவர் இதனைப் பற்றி வானொலியில் சொல்வது சாத்தியம் இல்லை என்றார். (ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து). அதே நேரம் தமிழ்மொழிக்கென இருக்கும் இரண்டு தொலைக்காட்சிகளிலும் எந்த நிகழ்ச்சிகளோ நேர்முகங்களோ இதுவரை இடம் பெறவில்லை. தனியார் தொலைக்காட்சியில் இதற்கான நேரம் ஒதுக்கமாட்டார்கள். ஆனால் அரச தொலைக்காட்சியில் காலைவேளை நடைபெறும் நேர்முகங்களில் ஒரு வலைப்பதிவாளரையோ அல்லது இரண்டு வலைப்பதிவாளர்களையோ அழைத்து வலைப்பதிவு பற்றிக்கேட்கலாம்.

தமிழக ஊடகங்கள் எமது நாட்டு ஊடகங்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வலைப்பதிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஊட்டியுள்ளது என்றே கூறமுடியும். சன் நியூஸில் வலைப்பதிவாளர்களைப் பற்றிய செய்திகளும் ஒரு விபரணமும் வந்தது. விகடன் தன் வரவேற்பறையில் வார ஒரு வலைப்பதிவை அறிமுகம் செய்கின்றது.

என் ஆதங்கம் என்னவென்றால் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களினதும் புத்திஜீவிகளினதும் எத்தனையோ சுவாரசியமானதும் ஆக்கபூர்வமானதுமான விடயங்கள் பலரையும் சென்றடையவேண்டும் என்பதே ஆகும். நிச்சயமாக அவர்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. இவர்களிடம் ஆற்றல் இருக்கின்றது. அதனைவெளிக்கொணர ஏனோ தயங்குகிறார்கள். என்னைப்போன்ற பலர் சும்மா விளையாட்டாக ஆரம்பித்த வலைப்பதிவு இன்றைக்கு தமிழ்மண நட்சத்திரமாக விளங்குகின்றது என்றால் இதற்கான காரணம் பின்னூட்டமிடும் வாசகர்களே.

இந்த இடத்தில் தமிழ்மணத்திடம் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன். சில வேளைகளில் இது அதிகப்பிரசங்கித் தனமாக இருந்தாலும், இலங்கை வலைப்பதிவாளர்கள் சார்பில் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். இதுவரை எனக்கு தெரிந்து இலங்கையிலிருந்து நட்சத்திரமாக மு.மயூரன், வன்னியன், த,அகிலன் போன்ற இலங்கையிலிருந்து வலைப்பதிவு செய்யும் பதிவர்களை நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கவிட்டீர்கள் இதேபோல் இலங்கையிலிருந்து வலைபதியும் ஏனையவர்களையும் மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையோ அழைத்து நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்யுங்கள். என் நட்சத்திர வாரத்தில் இந்தக்கோரிக்கையை வைப்பது சரியான எனத் தெரியவில்லை.

ஏனைய வலைப்பதிவாளர்களிடமிருந்து இதுபற்றிய ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கின்றேன்.



*** தமிழகத்தின் அடுத்த முதல்வர் வடிவேலு. ***

கடந்த சிலநாட்களாக புரட்சித்தலைவர் கேப்டன் விஜயகாந்திற்க்கும் வைகைப்புயல் வடிவேலுவுக்கும் நடக்கும் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வடிவேலு விஜயகாந்த் என்ன மஹாத்மா எனவும் கேள்விக்கேட்கிறார். அத்துடன் விஜயகாந்த் எந்தத் தொகுதியில் தேர்தலில் நின்றாலும் அவரை எதிர்த்து தான் வெற்றிபெறுவேன் எனவும் வடிவேலு வெடிவேலாக வெடித்திருக்கிறார். வடிவேல், விஜயகாந்த் மோதலைப் பற்றி பலரும் பலவிதமாக கிழிகிழி எனக் கிழித்துவிட்டதால் அதனை விட்டுவிட்டு வடிவேல் அரசியல் பிரவேசம் செய்வாரா இல்லையா என ஒரு சின்ன அலசல்.
இதனை சீரியசாக எடுப்பவர்கள் சீரியசாகவும் மொக்கையாகவோ நகைச்சுவையாகவோ எடுக்கக்கூடியவர் அப்படியேயும் எடுக்கவும்.

வடிவேலின் இந்த அறிக்கைப்போர்களுக்கும் வழக்குகளுக்கும் பின்னால் நிச்சயமாக ஒரு பெரிய சக்தி இருப்பதுபோல் தெரிகின்றது. சிலவேளைகளில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வடிவேலுக்கு ஆசனம் கிடைக்கவும் கூடும் யார் கண்டார். தமிழக அரசியலில்தான் எத்தனையோ கட்சிமாறிய காட்சிகளும் அரசியல் குழிபறிப்புகளும் நிகழ்ந்துள்ளன.

வரும் சட்டமன்றத்தேர்தலைப் பொறுத்தவரை சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், விஜய ரி ராஜேந்தர், ஜேகேரித்திஷ் என ஒரு நடிகர் பட்டாளாமே முதல்வர் நாற்காலிக்கு குறிவைக்கின்றனர். யார் யாருடன் கூட்டணி, யார் யாரை முறிப்பது என பல விடயங்கள் திரைக்குப் பின்னால் இப்பவே தயாரகியனிலையில் இருக்க‌லாம், சிறந்த உதாரணம் அண்மையில் பாமக கூட்டணியில் இருந்து பிரிந்ததும் மருத்துவர் இராமதாஸ் அடுத்த கூட்டணி யாருடன் அமைப்பது என சிந்திப்பதுமாகவும் இருக்கின்றார். போயஸ் கார்டனிலிருந்து அழைப்புவந்தால் சிலவேளைகளில் கூட்டணி மாறிவிடுவார். வைகோ மீண்டும் தாய் கழகத்திற்க்கு வந்துசேர்வார். இதெல்லாம் நம்ம கவுண்டர் பாசையில் அரசியலில் சகஜமான விடயங்கள்.

அதே நேரம் கலைஞருக்கு விஜயகாந்தை தன் பக்கம் இழுக்ககூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றது. அண்மைக்காலமாக சில காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்த் தம்முடன் கூட்டணி வைப்பார் என பூடகமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே விஜயகாந்த் அப்படிக் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் தெரிந்தோ தெரியாமலோ திமுக கூட்டணியில் விஜயகாந்தும் ஒரு அங்கமாகிவிடுவார். இந்நிலையில் வடிவேலின் வழக்குகள் செல்லபடியற்றவையாகிவிடும். சிம்பு மேல் உள்ள குற்றச்சாட்டுகளும் விஜயரி ராஜேந்தரை கூட்டணிக்குள் சேர்க்கும் ஒரு முயற்சி என்றும் தகவல். காரணம் சில நாட்களாக ராஜேந்தர் மாறன் சகோதரர்க்ளுடன் மிகவும் அந்நியோன்யமாக இருக்கின்றார். மாறன் சகோதரர்கள் இதுவரை தாம் எந்தக்கட்சி என்பதை வெளிப்படையாக கூறாவிட்டாலும் திமுகவுக்கு எதிரிகளாக மாறிவிட்டார்கள். தினமும் சன்னில் ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், வைகோ என திமுக எதிர்முகாம்காரர்களின் கூடாரம் ஆகிவிட்டது சன் நிறுவனம்.

விஜயகாந்தைப் பொறுத்தவரை இவரது செயல்பாடுகள் இவரும் அரசியலில் கலந்த‌பின்னர் தனது கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டார்போல் தான் தெரிகின்றது. ஏனைய எதிரணி அரசியல்வாதிகள் போல் கலைஞர் எதிர்ப்புத் தான் இவரது தாரக மந்திரம், கலைஞரைக் குடும்ப அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டும் இவர் செய்வதும் அதேதான்.



பெரும்பாலும் விஜயகாந்த் எதிரணியில் இருக்ககூடியதாகவே சாத்தியக்கூறுகள் உள்ளன. அதே நேரம் விஜயகாந்தையும் வடிவேலுவையும் வைத்து சிலர் காமெடி கீமெடிகூடப் பண்ணலாம். உதாரணமாக வடிவேலு விஜ‌யகாந்தை தேர்தலில் ஒண்டிக்கு ஒண்டியாக வாறியா எனக்கேட்டு அவரை எதிர்த்து நின்றால், வடிவேல் சார்ந்த கட்சிக்கு வடிவேல் வெற்றிபெற்றால் விஜயகாந்தையே எதிர்த்து வெற்றிபெற்றுவிட்டேன் என்ற மமதையில் வடிவேல் சிலவேளைகளில் அமைச்சுப் பதவி கேட்ககூடும். இல்லை தோல்வி அடைந்தால் கட்சிக்கு எந்த நட்டமும் இல்லை, காமெடி நடிகன் தானே அதனால் மக்கள் வாக்களிக்கவில்லை எனக் கூறித்தப்பித்துக்கொள்ளலாம்.


இவற்றை எல்லாம் விட அக்டோபரில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியல் பிரவேசம் செய்யலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இதனால் பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுமா? இல்லை ரஜனி வழமைபோல் இப்போ வருவார் அப்போ வருவார் எனப் பத்திரிகைகள் பூச்சாண்டி காட்டுகின்றனவோ தெரியவில்லை.

சென்ற தேர்தலிலும் திமுக, அதிமுக இரண்டு கட்சியிலும் சினிமா நட்சத்திரங்கள் அணி திரண்டிருந்தன. சிம்ரன் கூட இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். ஆனால் இம்முறை பல நடிகர்களே கட்சித் தலைவர்களாக இருப்பதால் இன்னும் சுவராசியமாக இருக்கும்.

இவற்றைஎல்லாம் விட சிலவேளைகளில் நாளையே இல்லை சில நாட்களிலோ விஜயகாந்தும் வடிவேலும் கட்டிப்பிடித்தபடி நாங்க மதுரைக்கார பசங்க எங்களுக்கை அடிச்சுக்குவோம் அதைக்கேட்க நீங்க யார் எனக்கேட்டாலும் கேட்கலாம். ஏதோ சில நாட்களுக்கு பத்திரிகைகளுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது.

பின்குறிப்பு. வடிவேல் அடுத்த முதல்வர் என தலையங்கம் இட்டது என்ன சின்னப்புள்ளைத் தனமாக இருக்கு என யாரும் கேட்ககூடாது. கேட்டால் நான் அழுதிடுவேன்.

*** வியாபாரமாகும் விளையாட்டு. ***

கன‌வான்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் ஆரம்ப கால‌ங்களில் பெரிதாக பணம் புழங்கவில்லை. அதுவும் ஐந்துநாள் டெஸ்ட்போட்டிகளில் கோப்பைக்குத்தான் போட்டி. பின்னர் ஒரு நாள் போட்டிகளின் ஆதிக்கமும், 83 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியின் எழுச்சியும் கிரிக்கெட்டை பணக்காரர்களின் விளையாட்டாக உருவெடுக்க வைத்தது. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை என ஆசிய அணிகள் உலகக்கோப்பையை வென்றதன் பின்னர் உலக கிரிக்கெட் அரங்கில் வெள்ளையர்களின் விளையாட்டு ஆசியர்களின் கைகளுக்கு வந்தது. நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் காசுக்காக விளையாட ஆரம்பித்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் விளம்பரத்தில் காட்டுகின்ற அக்கறையை விளையாட்டில் காட்டமறுத்து அடிமேல் அடிவாங்கினார்கள். மேற்கிந்தியவீரர்கள் தங்களுக்கு தகுந்த சம்பளம் இல்லை என்று போர்க்கொடிதூக்கினார்கள். லாராகூடதன் அணித்தலைவர் பதவியை இதற்காக ராஜினாமாச் செய்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உலகில் பணக்கார அமைப்பாக மாறியது. இந்தியாவில் ஏனைய விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டுக்கு பணம் அதிகம் செலவு செய்யப்படுகின்றது(ஆதாரம் க‌டந்த இரண்டுவார நீயா? நானா?). இதனால் ஹாக்கியில் படுதோல்வி அடைந்து இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கமுடியாத நிலை வந்தது.


க‌டந்த வருடம் இந்திய அணிக்கு உலககோப்பையில் ஏற்பட்ட படுதோல்வி விளையாட்டில் நிஜமான அக்கறையுள்ள கபில்தேவ் போன்ற சிலரை சீற்றமடைய வைத்தது. இதனால் ஐசிஎல்(இந்தியன் கிரிக்கெட் லீக்) உருவானது. ஐசிஎல்லுக்கு இந்தியாவில் மறைமுகமான தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பெரும்பாலும் ஐசிஎல்லில் விளையாடிய விளையாடுகின்ற ஏனைய நாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் மூத்தவீரர்களும் தங்கள் நாட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுமாவார்கள். சிறந்த உதாரணமாக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மாவன் அத்தப்பத்துவைக் குறிப்பிடலாம். ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் ஐபிஎல்(இந்தியன் பிரிமியர் லீக்)உருவாக்கப்பட்டு பெரும் செலவில் ஒரு 20க்கு 20 போட்டியையும் கிரிக்கெட் வீரர்களுடன் சினிமா நடிகர்களையும் வைத்து நடாத்திமுடித்தார்கள். வீரர்கள் அடிமைகள் போல் விலைபேசப்பட்டு தங்கள் எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்கள். எஜமானர்களையே எதிர்த்த சிலரும் உண்டு. (ராகுல் ராவிட் மல்லையா பனிப்போர்). டோணி விலை கூடிய வீரராக இருந்தார்.

பின்னர் சில சர்ச்சைகளுடன் ஐபிஎல் போட்டிகள் இனிதே நிகழ்ந்தன. பிரீத்தி ஜிந்தாவின் கட்டுப்பிடி வைத்தியமும் ஹர்பஜனின் அறையும் மறக்கமுடிய்தா நிகழ்வுகள் ஆகின. மீண்டும் சில நாட்களுக்கு முன்னர் வங்களாதேச வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் தங்களது கிரிக்கெட் சபைகளை எதிர்த்து கபில்தேவின் ஐபிஎல்லில் விளையாட முடிவு செய்தார்கள். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களின் தடையை நீக்கியது. இங்கிலாந்து கவுண்டிகளில் எந்த வீரரும் விளையாடமுடியும் ஆனால் ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என பல கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் ஐசிசிக்கு பயந்து கூறிக்கொண்டன. ஐசிஎல்லில் விளையாடும் இலங்கை வீரர்களின் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அண்மையில் நீக்கியது ஆனாலும் மீண்டும் இந்த தடை வரலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஐபிஎல்லும் செய்யும் சதிகளைப் பலரும் அறிந்தாலும் ஏனோ குரல்கொடுக்க தய‌ங்கவில்லை. பல நாடுகளில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் தனித்த அமைப்பாக இயங்கும்போது ஆசிய நாடுகளில் மட்டும் அரசியல்வாதிகளின் கைப்பிடிக்குள் அடங்கியிருப்பது வேதனைக்குரியது. அதேபோல் தெரிவுக்குழுவும் தங்களிற்க்கு பிடித்தவர்களைத் தான் தெரிவுசெய்கிறார்கள். சொதப்புகின்ற வீரர்களை மீண்டும் மீண்டும் எடுப்பார்கள், சிறந்த உதாரணம் அகர்கார். அதே நேரம் திறமையுள்ள வீரர்களுக்கு ஏனோ இடம் கொடுப்பதில்லை. ஐபிஎல்லில் திறமையாக விளையாடிய ஷான் மார்ஷ் இன்றைக்கு அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பவீரராக பரிமாணம் எடுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஹைடன் தான். ஆனால் இந்தியவீரர்களில் பிரகாசித்த பத்ரினாத், கோணீ, யுசூப் பதான், போன்ற வீரகளுக்கு ஓரிருபோட்டிகளில் மட்டும் இடம்கொடுத்து அவர்களை மீண்டும் ஒதுக்குகின்றனர் தெரிவாளர்கள். ஐசிஎல் என்றால் என்ன ஐபிஎல் என்றால் என்ன இரண்டும் திறமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தினால் எவரையும் வாங்கிவிடமுடியும் என நினைக்கின்றார்கள். இரண்டுபோட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்காது திறமைக்கேற்ற ஊதியம் என்றால் எத்தனை வீரர்கள் போட்டி போட்டுகொண்டு இணைவார்கள். அத்துடன் திறமையாக விளையாடினாலும் அணியில் சில நந்திகள் இருக்கும்வரை இளம் வீரர்களுக்கு இடமில்லை என்பதே யதார்த்தம் .

*** வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும். ***

வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலம். சிவபூமியான இலங்கையில் மிகவும் குறைந்தளவான விஷ்ணு ஆலயங்களே இருக்கின்றன. வடபகுதியில் வல்லிபுர ஆழ்வாரும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் மட்டும் விஷ்ணு ஆலயங்களாக விளங்குகின்றன. வல்லிபுர ஆழ்வார்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என பிரசித்தமானது. அதிலும் கடல்தீர்த்தம் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. புரட்டாதி பூரணைதினத்தில் வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட மாலையில் பக்தர்கள் புடைசூழ‌ செல்வார். காலையிலிருந்தே வடமராட்சியின் பல பாகத்திலிருந்தும்,தென்மராட்சி, வலிகாமம் போன்ற எனைய யாழ்குடாநாட்டின் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் துன்னாலையை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள். பல வீதிகளில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பார்கள். எண்பதுகளில் மாட்டுவண்டில்களில் பலர் வருகைதருவார்கள். பின்னர் காலமாற்றத்தில் ஏனைய வாகனங்களிலும் சிலர் கால்நடையாகவும் வருவார்கள்.
வல்லிபுர ஆழ்வார் கோவில் இராஜகோபுரம் 2002ல் எனது புகைப்படக் கருவியில் சுட்டது. இராஜ கோபுரத்தில் மஹாத்மா காந்தியின் சிலை இருக்கின்றது.


கோவிலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலுக்கு தீர்த்தமாடச்செல்லவேண்டும். முன்னர் மூன்று மணற்குன்றுகளை கடந்து செல்லவேண்டும், தற்போது மணல் அகழ்வினால் ஒரே ஒரு குன்றுமாத்திரம் இருக்கின்றது. பருத்திதுறை துறைமுகம் வரை முருகைக்கல் பாறையினால் அமைந்த கடற்கரைப்பகுதி(ஆண்கடல் என்பார்கள்). பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து மணல்சார்ந்த நெய்தல் கடலாக அழகாகவும் மிகவும் ஆபத்தாகவும் காட்சிதருகின்றது.காங்கேசந்துறையிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையான கடல் பாக்குநீரிணை ஆழம் குறைந்தகடல். அதன்பின்னர் ஆழம் கூடிய வங்காள விரிகுடா ஆரம்பமாகின்றது. இதனாலோ என்னவோ இலங்கையின் கிழக்குப்பகுதி கடற்கரை பெரும்பாலும் மணல் சார்ந்த கடலாகவே இருக்கின்றது. வருடத்திற்க்கு ஒருதடவைதான் கடலுக்கு தீர்த்தமாடச் செல்லும் பாதை பாவிக்கபடும். போகும் வழியில் கடற்தாவரங்களான இராவணன் மீசை போன்றவை கிடைக்கும். சிறியவயதில் சிப்பி, சோகியுடன் இராவணன் மீசையையும் பொறுக்கியது ஞாபகம் வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாரணர்கள், முதலுதவி அணியினர் எனப் பலரின் உதவிகளை ஆலய நிர்வாகம் ஏற்படுத்துகின்றது. பாடசாலை சாரணர் அணியில் இருந்தபடியால் சில தடவைகள் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலைவேளையிலும் பூரணை நாளிலும் தீர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவே இருக்கும் பெரிய அலைகள் உருவாகும். ஆனால் இதுவரை யாரும் அலையில் அடித்துச் சென்றதாக தெரியவரவில்லை. சிறுவர்கள் முதியவர்கள் எனப் பலரும் கடலில் குளிப்பார்கள். தீர்த்தம் ஆடமுன்னர் அந்தப் பகுதியில் குளிப்பது தடை செய்யப்பட்டிருக்கும். ஆஞ்சனேயரை கடலில் ஒரு தடவை போட்டு எடுத்ததன் பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும். பின்னர் சந்திரன் உதயமாகும் போது மக்கள் கோவிலடிக்கு திரும்புவார்கள். தொண்ணூறுகளுக்கு முன்னர் கிழக்கிழங்கை, தென்னிலங்கை என இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் வருவார்கள். தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்.

நாங்கள் பதின்மவயதில்(டீன் ஏஜ்) இருந்த காலத்தில் தீர்த்தத்திற்க்கு போவதென்பது ஒரு சுற்றுலாபோல‌. வழியில் யூகேயில்(உபயகதிர்காமம்)சில நண்பர்களைச் சந்திப்போம் அங்கேயுள்ள தண்ணீர்ப் பந்தலில் மோர், சர்க்கரைத் தண்ணீர், பின்னாளில் ஜூஸ் என குடிப்பது வழக்கம். பின்னர் ஆனைவிழுந்தான் சந்தியிலும் தண்ணீர்ப் பந்தலில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்வது. ஆனைவிழுந்தானில் பேய் இருக்கின்றது என பரவலாக ஒரு கதை அடிபட்டதால் இரவு வேளைகளில் அந்தப் பாதையை பாவிப்பதில்லை. இந்த அனுபவம் பெரும்பாலான வடபகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். வலையுலகிலும் சிலருக்கு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன் குறிப்பாக டொக்டர் முருகானந்தன், சந்திரவதனா அக்கா, தாசன்( நீண்ட நாட்களாக காணவில்லை) போன்றவர்கள் நிச்சயம் இந்த அனுபவம் உடையவர்களாக இருப்பார்கள். இதனை எழுதச் சொன்ன லீனா அண்ணன் அவர்களுக்கு நன்றிகள்.

*** வாசி வாசி நீ வாசி ***



வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது மிகவும் உண்மை. ஒரு மனிதனை நிலைத்திருக்க வைப்பது இரண்டு விடயங்கள் ஒன்று வாசிப்பு, இன்னொன்று அனுபவம்.

சாதாரணமாக ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவரால் ஏனைய நாடுகள், கலாச்சாரம், புதிய தகவல்கள் என்பவற்றை வாசிப்பதால் அறியமுடிகின்றது. வாசிப்பு என்பது வெறுமனே தினசரிகள், வார மாத இதழ்கள் என்பதுடன் மட்டுப்படுத்தமுடியாது எவனொருவன் பரந்துபட்ட வாசிப்புக்கு தன்னைத் தானே உள்ளாக்குகின்றானோ அவனது அறிவு மென்மேலும் வளரும். அத்துடன் வாசிப்பை குறிப்பிட்ட பகுதிகளுடன் நிறுத்துவதும் தவறானது ஆகும். உதாரணமாக சிலர் பொதுவாக நாவல்கள், சிறுகதைகள் மட்டும்தான் வாசிப்பார்கள். இன்னொரு சாராரோ கட்டுரைகள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே வாசிப்பார்கள். வாசிப்பதில் சகலகலா வல்லவனாக இருந்தால் உங்கள் அறிவு நிச்சயம் வளரும். 

இன்றைக்கு பலரிடம் பெரிதாக பேசப்படும் ஒரு விடயம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்பதாகும். இதற்கான முக்கியகாரணம் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையும் அதன் தாக்கங்களும். பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தை மட்டுமே வாசித்து அறிகிறார்களே ஒழிய ஏனைய பக்கம் கண் வைப்பதே இல்லை. பாடசாலைகளில் நூலகம் இருந்தாலும் நூலகத்தில் நேரம் கழிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. 

இணையத்தின் வரவு வாசிப்பில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் வரவின் பின்னர் பலர் புத்தக வடிவிலான நூல்களை வாசிப்பது குறைவு இணையத்திலேயே மின் நூல்களாகவும் ஏனைய வடிவிலும் வலைகளிலும் வாசிக்கின்றார்கள். இது ஒருவகையில் நன்மையான விடயமாகும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான வலைப்பதிவாளர்கள் இருக்கமாட்டார்கள்.

இன்னொரு சாரார் தமிழ்மொழியில் வாசிப்பதை பாவமாக கருதுகிறார்கள். குறிப்பாக மேல்தட்டு மக்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. சிறந்த உதாரணமாக அண்மையில் தசாவதாரம் புகழ் ஒளிப்பதிவாளர் ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த எழுத்தாளர்களாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என புகழ்பெற்ற பல தமிழ் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டார். அதே நேரம் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் நூல்களை விட ஆங்கில நூல்களுக்கு அதிகம் பேர் முண்டியடித்து வாங்குகின்றார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். 

ஆனாலும் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும்போது வாசிப்புப் பழக்கம் மிகமிக அரிதாக பலரிடம் காணப்படுகின்றது. 

இனி எனது வாசிப்பு அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

சிறுவயதுமுதல் அம்புலிமாமா, கோகுலம் வாசகனாக இருந்தேன். 7 வயதில் உறவினர் ஒருவர் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நகைச்சுவை நவீனத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதுதான் நான் வாசித்த முதல் நாவல். 

பின்னர் பாடசாலையில்( 5 ஆம் வகுப்பு தொடக்கும் 8 ஆம் வகுப்பு வரை) பாடப்புத்தகத்தில் மறைத்து ராணி கொமிக்ஸ் வாசிப்பது எங்கள் வகுப்பு மாணவர்களின் மிகமுக்கிய கடமை. பாடசாலையில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை. அதனால் சில துணிந்த மாணவர்கள் ஏதோ ஒருவழியில் புத்தகங்களை வகுப்பறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பின்னர் ஒரு பாடவேளைக்கு 50 சதம் என ஏனைய மாணவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலித்துவிடுவார்கள். ஆசிரியர்களிடம் பிடிபட்டால் புத்தகத்தின் உரிமையாளரைக் காட்டிக்கொடுக்ககூடாது. அப்படிக் காட்டிக்கொடுத்தால் அந்த மாணவனுக்கு பின்னர் வாசிப்பதற்க்கு யாரும் புத்தகம் கொடுக்கமாட்டார்கள். 

சிலவேளைகளில் இருவர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தை சேர்ந்துவாசித்து கட்டணத்தை பங்குபோடுவதும் உண்டு. என் வகுப்பில் நூற்றுக்கு எண்பதுவீதமானவர்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு, எங்கள் கைச் செலவுக்கு உள்ள பணம் பெரும்பாலும் இதற்க்கே செலவிடப்பட்டது. என்றும் மறக்கமுடியாத சுவாரசியமான மலரும் நினைவுகள். இந்த நாட்களில் விகடன், குமுதம் வாசகராகிவிட்டேன். முக்கியமாக கமல், ரஜனி புகைப்படம் வெளியாகிய குமுதம் விகடனுக்கு கிராக்கி அதிகம்.  மல்லிகை சிரித்திரன் போன்ற இதழ்கள் பாடசாலையில் அனுமதிக்கட்டன. ஒரு சிறிய அளவுமாணவர்களே இவற்றைப் படித்தோம். 

9 வகுப்புக்கு பின்னர் தேடல்கள் கொஞ்சம் மாறியது. பாடசாலை நூலகத்தில் ஊரிலிருக்கும் பொது நூலகத்திலும் பெரும்பாலான நேரங்கள் கழிந்தன. சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரை அறிமுகமாகினார்கள். ஏற்கனவே சில ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் நாவல் படித்தகாலமது. பெரும்பாலும் அவர்களது அந்தக்கால எழுத்துக்கள் சமூகப் பிரச்சனைகளை மட்டும் மையப்படுத்தியதாலும் செங்கைஆழியான் போன்ற சிலர் மட்டும் வேறு வேறு களங்களில் எழுதியதால், இந்திய எழுத்தாளர்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலையில் மேலே குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர்களின் புத்தகத்துக்கு அனுமதிகள் இல்லை.( குறிப்பாக நாவல்களுக்கு). பொது நூலகத்தில் அவர்களை வாசிப்பது இரவலாக வீட்டுக்கு கொண்ட செல்லமுடியாது அங்கேயும் இப்போ கூடி இவர்களை வாசிக்காதே என செல்ல மிரட்டல். அதனால் இவர்களின் எழுத்தில் ஏதோ விடயம் இருக்கு என களவாக வாசிக்க பழகினேன். சுஜாதாவின் ஆங்கிலச் சொற்கள் வசந்தின் ஜோக்குகள் அப்போ புரியவில்லை. 

ஓஎல்(கபொத‌சாதரண தரம்) படிக்கும்போது அப்பா சாண்டில்ய‌னை அறிமுகப்படித்தினார் கடற்புறா முதல் முதல் வாசித்த சரித்திர நாவல், பின்னர் ஜவனராணி, கடல்ராணி என சாண்டில்யன் எனக்கு பொழுதுபோக்க உதவியுதடன் அந்தக்கால தமிழ் அரசர்களது வீரத்தையும் வெற்றிகளையும் அறியத்தந்தார். பலராலும் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் சிலாகிக்கப்பட்டாலும் எனக்கு அந்த வேளைகளில் வாசிக்க கிடைக்கவில்லை. நூலகத்தில் யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றிருப்பார். 

ஏஎல் (கபொத‌உயர்தரம்) சோதனை எடுத்து பெறுபேற்றிற்காக காத்திருந்த போது பொன்னியின் செல்வன் வாசிக்க கிடைத்தது. முதல் பாகத்தை இரவிரவாக விழித்திருந்து வாசித்தேன். அடுத்த நாள் இரண்டாம் பாகம் என இப்படியே மூன்றோ நாலு நாட்களில் முழுவதுமாக வாசித்துமுடிந்துவிட்டேன். வந்தியத்தேவனும், பழுவேட்டரையர்களும்(தசாவதாரம் நெப்போலியனின் ஒப்பனை பழுவேட்டரையர் போல் தெரிகின்றார்), பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மனும், குந்தவை, பூங்குழலி, வானதி சேந்தன் அமுதன் என அனைத்துப்பாத்திரங்களும் கனவில் கூட வந்தார்கள். பல தடவைகள் வாசித்தும் இன்னும் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு சரித்திர நாவல் இதுவாகத்தான் இருக்கமுடியும். 

சிலர் சொல்வார்கள் வாசிக்கும்போது ஊண் உறக்கம் மறக்கின்றேன் என உண்மைதான். நானே இரு தடவைகள் சுய நினைவற்று வாசித்துக்கொண்டிருந்த வேளையில் நூலகத்தில் வைத்துப்பூட்டப்பட்டேன். பின்னர் நூலகர் திரும்ப வந்து என்னை திறந்துவெளியே விட்டார். 

இன்னும் எழுதலாம் ஆனால் எனக்கும் சலிப்புத் தட்டும் வாசிக்கும் உங்களுக்கும் சலிப்புத் தட்டும் ஆகவே இத்துடன் இந்த கதை நிறுத்தப்படுகின்றது. உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதவிவாகவோ இடுவீர்கள் என நினைக்கின்றேன்.

*** நட்சத்திர வணக்கம் ***

நானும் ஒரு பதிவர் என இனி நான் என் சட்டையை உயர்த்திக்கொள்ளமுடியும். தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஆவதென்றால் உங்களின் எழுத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டது என பிரபல மூத்த பதிவாளர் ஒருவர் சொல்லியிருந்தார். என்னையும் ஒரு பதிவாளராக உருவாக்கிய தமிழ்மணத்திற்க்கு முதற்கண் நன்றிகள்.

2006 ஜூலை மாதமளவில் எனக்கு வலைப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. சில நாட்களுக்கு நண்பர் லக்கிலுக்கின் வலைப்பக்கம் மேயக்கிடைத்தது. இதற்க்கு முன்னரே அவர் எனக்கு அறிமுகமாயிருந்தார் ஆகையால் அவரிடம் இதனைப் பற்றியும் இதன் தொழில்நுட்ப விடயங்கள் பற்றியும் ஜீடோக்கில் கதைத்து தபால் மூலம் படிப்பதுபோல் ஈமெயில் மூலம் வலைப் பதிவுகள் பற்றிக் கற்றுக்கொண்டேன்.

எத்தனையோ ருடங்களுக்கு முன்னர் பாடசாலை கையெழுத்துப்பிரதிகளிலும் சிலத்திரிகைகளில் விளையாட்டு ம்பந்தமாகஎழுதியவைதான் என் ஆக்கங்கள். இதுவரை வாழ்க்கையில் நான் எழுதியஒரே ஒரு சிறுகதை என் .பொ.(சாதாரணதரம்).எல் மிழ் பாடத்தில் எழுதியது ட்டும்தான். இந்தக் தை எழுதியதையை இன்னொரு திவில் ருகின்றேன்.(ஒரு வாரத்திற்க்கு என் தொல்லை இருக்கும்).

என்ன எழுதலாம் எப்படி எழுதலாம் என நினைத்த போது வலைஉலகம் என்பது ஒரு வித்தியாசமான உலகம் என்னத்தையும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என உணர்த்தியது தமிழ்மணத்தில் வந்த பதிவுகள் தான். அரசியல், சினிமா, சமூகம், அனுபவம், சிறுகதை, மொக்கை(என் பல பதிவுகள் அதுதான்), கும்மி என பட்டியல் தொடர சரி நானும் ஜோதியில் கலக்கவேண்டியதுதான் என 2006 ஜூலை 8 ந்திகதி ஜோதியில் ஐக்கியமானேன்.
ஆரம்பத்தில் பெரிதாகஎழுதாவிட்டாலும் (வெறும் 6 திவுகள்) முட்டை அவிப்பது எப்படி எனலீனா அண்ணா ண்டத்தில் எழுதித் ந்ததிவும், விநாயகருக்கு நேர்ந்த கதி என்றதிவும் லரால் அதிகம் டிக்கப்பட்டு பின்னூட்டமும் இடப்பட்டதிவுகள் ஆகும். இதன் பின்னர் எழுதியஓய்வெடுங்கள் சச்சின் சூடானஇடுகைகளில் முதல் இடத்தைக்கூடசிலணி நேரம் பிடித்திருந்தது. இதுவரை எனது திவுகளில் அதிகபின்னூட்டம் கிடைத்தபதிவு இதுவாகத் தான் இருக்கமுடியும்.
இப்படித்தான் நான் ஜோதியில் ஐக்கியமாகினேன். பெரும்பாலானஎன் திவுகள் ம்பந்தம்பந்தமில்லாமல் இருப்பதால் என் உளல்கள் எனப் பெயரிட்டேன். பொன்னியின் செல்வன் வாசித்ததிலிருந்து நான் ந்தியத்தேவன் பாத்திரம் என்னை மிகவும் ர்ந்ததால் அவரின் பெயரை எனக்கு புனை பெயராகவும் சூட்டிக்கொண்டேன்.

இதுதான் முன்கதைச் சுருக்கம். ட்சத்திரவாரத்தில் அதிகம் மொக்கைப் திவுகள் போடாது சிலஆக்கபூர்வமானதிவுகளும் போடஉத்தேசித்துள்ளேன். என் அனுபவங்கள், சினிமா, இலக்கியம், விளையாட்டு எனஒரு ம்பமாகட்சத்திரவாரத்தை எழுதஎண்ணியுள்ளேன். உங்கள் மேலானருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இதுவரை ழ்ந்தஇந்தக் குழந்தை இன்றிலிருந்து எழுந்திருக்கமுயற்சி செய்கின்றேன். விழும் வேளைகளில் கைகொடுத்து உதவுங்கள்.

மிழ்மத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மீண்டும் எனது ன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.