Showing posts with label ஜொள்ளு. Show all posts
Showing posts with label ஜொள்ளு. Show all posts

புதிய வேலை கிடைத்த பதிவர்கள்.

அண்மைக்காலமாக நான் உட்பட சில இலங்கைப் பதிவர்கள் அடிக்கடி பதிவு எழுதாமல் ஓய்வில் இருக்கின்றார்கள். இதற்கான காரணம் என்ன என அறிய அவர்களை ரகசியமாக கண்காணித்ததில் அனைவரும் புதிய கால்பந்தாட்ட அணி ஒன்றிற்கு பயிற்சியாளராகச் செல்ல விண்ணப்பித்திருக்கின்றார்களாம்.

கால்ப்பந்தில் எத்தனை சிக்ஸ் அடிப்பார்கள் எத்தனை விக்கெட் என கால்பந்தை அக்குவேறு ஆணி வேறாக அறிந்த கனககோபி சில நாட்களாக கூரே பார்க்கில் உடற்பயிற்சியுடன் ஓட்டப் பயிற்சியும் செய்வதால் அந்தப் பகுதியே அதிர்வதாக செய்திகள் கசிகின்றன.

அதே நேரம் இந்தப் பயிற்சியாளருக்கான சகல தகுதிகளும் தனக்குத் தான் இருக்கின்றது என சுபாங்கன் தொடை தட்டி சுகததாச ஸ்டேடியத்தில் அதிதீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். ஸ்டேடியம் தனக்குப் பக்கத்தில் இருப்பதால் தனக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என சுபாங்கன் நினைத்துவிட்டார்.

பாடசாலைக் காலங்களில் பாடசாலை அணிக்காக விளையாடிய ஆதிரை ரூபியுடன் பிசியாக இருப்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கமுடியாமல் வருந்தினாலும் தன் பங்குக்கு ஒரு நீலக் கலர் விண்ணப்பத்தை அனுப்பியிருப்பதாகவும் தனக்கு உதவியாளராக புல்லட்டை இணைக்கும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் புல்லட்டிற்க்கு எந்த விளையாட்டும் தெரியாது என கெளபாய் தன் பாணியில் அறிக்கை விட்டுள்ளார்.

கண்டியில் உள்ள மலைகளில் நன்கு ஓடி ஆடிப் பயிற்சி செய்த யோகா இந்த வேலைக்காக தான் எந்த நாட்டிற்கும் செல்லத் தயார் என்றும் அத்துடன் இந்தப் பயிற்சிகளுக்காக தான் பல காலம் நூடுல்ஸ் சாப்பிடவில்லை என்றும் கூறியிருப்பதுடன் இந்தப் பதவிற்காக தான் எத்தனை காலமும் இருக்கிறதற்க்கு தயார் என அறிவித்துள்ளார்.

வரும் 18ந்திகதி இளைய தளபதியின் வேட்டைக்காரன் வெளிவருவதால் தன்னால் இந்தப் பதவிற்க்கு விண்ணப்பிக்கமுடியாது என்றும் தனக்காக தன்னுடைய ரசிகர் மருதமூரானை தான் சிபாரிசு செய்வதாக சதீஷ் அறிக்கைவிட்டிருந்தாலும் இந்த அணியில் சில தமிழ்ப் பெண்கள் இருப்பது தனக்கு ஒத்துவராது என்பதால் மருதமூரான் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.

இதே நேரம் கலாச்சார ஆடைகளுடன் இவர்கள் பயிற்சி எடுக்க தயார் என்றால் தான் பயிற்சி கொடுக்கத் தயார் என சந்ரு அறிவித்திருந்தாலும் சந்ருவின் முடிவு அவரின் ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தைக் கேள்விப்பட்ட லோஷன் இதற்கெல்லாம் நான் தான் பொருத்தமானவர் என நினைத்தபடி கனககோபியுடன் கூரே பார்க்கில் ஓடுகின்றாராம். ஒரே நேரத்தில் இரண்டு பூகம்பம் என வெள்ளவத்தைவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

இவர்களை விட இன்னும் பலர் விண்ணப்பிக்க‌ முயன்றுகொண்டிருந்தாலும் வந்திக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதால் போட்டியில் இருந்து விலகிவிட்டதாக கடுகதிச் செய்திகள் தெரிவித்தாலும் வந்தி விசாப் பிள்ளையாருக்கு விசேட பூசை செய்யப்போகின்றாராம்.

இவர்கள் எல்லாம் போட்டி போட்டு விண்ணப்பிக்கும் பதவி எதற்க்குத் தெரியுமா? கீழே உள்ள படத்தில் இருக்கும் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளர் தேவையாம். விரும்பினால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.



டிஸ்கி: அண்மைக் காலமாக எங்கள் பதிவுலகம் அமைதியாக இருப்பதால் அவர்களை உசாராக்கவே இந்தப் பதிவு. எவரையும் புண்படுத்தவல்லை.இந்தப் பதிவு நகைச்சுவைக்காகவே ஒழிய வேறில்லை. 18+ பின்னூட்டங்கள் வந்தால் நான் பொறுப்பில்லை.

ஸ்ரீதேவி முதல் அசின் வரை - பகுதி 2

முதல் பகுதியில் என்னுடைய சிறு பராயத்தில் நடித்த நடிகைகளில் நான் ரசித்தவர்களில் ஐந்து பேரைப் பற்றி எழுதியதில் கிடைத்த வரவேற்புக்கு நன்றிகள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் பட்டியலில் இருந்தாலும் 5 பேரை மட்டுமே குறிப்பிட்டேன். நண்பர் டொன்லீ ஒரு படி மேலே போய் ஹோலிவூட், பாலிவூட் நடிகைகள் பற்றியும் ஜொள்ளச் சொன்னார். அடுத்த அடுத்த பதிவுகளில் ஹிந்தி ஆங்கில ஜொள்ளுகள் வரலாம்.

இந்தப் பதிவில் நான் கட்டுக்கடங்காத காளையாக இருக்கின்ற இக்காலத்தில் நடித்துக்கொண்டிருக்கின்ற நடிகைகள் பற்றிய ஜொள்ளு மழை தூறப்போகின்றேன். தயவு செய்து மழை சூறாவளியாகாமல் பார்ப்பது உங்கள் கடமை.

முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம் - ஸ்ரீதேவி முதல் அசின் வரை

சிம்ரன்

97களில் பார்க்கின்ற பெண்கள் எல்லாம் அழகாத் தெரிந்த காலம். தமிழ்சினிமாவைப் புரட்டிப்போட மும்பையிலிருந்து ரிஷிபாலா என்ற இயற்பெயருடைய‌ சூறாவளி "ஓன்ஸ்மோர் " என்ற படம் மூலம் சிம்ரனாக வீசியது. ஓன்ஸ்மோர், விஜபி என ஆரம்பத்தில் நடித்த இரண்டுபடங்களிலும் ஏனோ சிம்ரன் கவரவில்லை.

"மனம் விரும்புதே உன்னை" என நேருக்கு நேரில் பாடி சூரியாவை மட்டுமல்ல என்னைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் மனதை அவள் வருவாளா என கொள்ளை கொண்டவர். அந்தப் பாடலின் அவரின் இடுப்பசவைக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உலகே ஒரு கணம் அதிர்ந்தது. சட்டென்று சலனம் வரும் என சிம்ரனின் இந்தப் பாடலைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.



குஷ்புகள் ரம்பாக்கள் எல்லாம் Floppy disk போல் தூக்கி எறியப்பட்டு சிம்ரன் file எங்கள் ஹார்ட்(Heart) டிஸ்க்களில் சேமிக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கும் Format செய்து அழிக்கமுடியாத ஒரே ஒரு System file சிம்ரன்.

அதன் பின்னர் சிம்ரனுக்காக சில மொக்கைப் படங்களைக்கூடப் பார்க்கவேண்டியிருந்தது. பின்னர் கண்ணெதிரே தோன்றினால் ப்ரியாவும் வாலி ப்ரியாவும் மனதில் ஒட்டிக்கொண்டார்கள். இரண்டு படங்களில் தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்த சிம்ரனை துள்ளாத மனமும் துள்ளும் படம் உச்சத்திற்க்கு இட்டுச் சென்றது எனலாம்.

பின்னர் சில காலம் மொக்கைப் படங்களில் வந்து போனார். 2000ல் பார்த்தேன் ரசித்தேனில் வில்லியாக தன் நடிப்பின் இன்னொரு கோணத்தைக் காட்டினார். இந்தப் படம் பார்க்கும் போது என் நண்பன் ஒருவன் என்ன சிம்ரனுக்கு ஒரு பாடலையும் காணவில்லை என்ற போது "தின்னாதே" பாடலில் ஆடிய ஆட்டம் முழுப் படத்தையும் தின்றுவிட்டது என என் நண்பன் சொன்னான்.

பிறகு ப்ரியமானவளே, பார்த்தாலே பரவசம், 12பி என சில படங்களில் தன் நடிப்பைக் காட்டியவர். மீண்டும் இடையில் சில மொக்கைப் படங்கள்.

இந்த நேரத்தில் அவருக்கு கை கொடுத்தவர் எங்கள் உலகநாயகன் பம்மல்.கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் என அடுத்த இரண்டு படங்களிலும் ஜானகி, மைதிலியாக கமலுக்கு இணையாக நடித்திருந்தார். கமலுடன் நடித்த ராசியோ என்னவோ அடுத்து மணிரத்னம் படமான கன்னத்தில் முத்தமிட்டாலில் மூன்று பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது, ப்லிம்பேர் அவார்ட் என நான்கு விருதுகள் கிடைத்தன.

இதன் பின்னர் தமிழ்சினிமாவைக் கலக்கிய சில நடிகைகளின் வரவால் சிம்ரன் பின்னடைந்தாலும் சென்ற வருடம் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் மாலினியாக சிம்ரன் தன் முத்திரையைப் பதித்திருப்பார்.

ஜோதிகா

சிம்ரன் என்ற சூறாவளி வீசிக்கொண்டிருந்த ஆண்டில் அந்த சூறாவளியுடன் சேர்ந்து நடிக்க வாலி படத்தில் சோனாவாக அறிமுகமானவர் ஜோதிகா. முதல்ப் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அவரது விழிகளும் தமிழர்களுக்குப் பிடித்தமான கொஞ்சம் குண்டான உடலும் தமிழ்நாட்டின் சொத்தாக அவரை மாற்றிவிட்டது.

இவர் நடித்து வெளிவந்த முதல் படம் வாலியாக இருந்தாலும் அறிமுகமான படம் பூவெல்லாம் கேட்டுப்பார். அதில் சுடிதார் அணிந்த சொர்க்கமாக மாறி சூரியாவின் தூக்கத்தை மட்டுமல்ல பலர் இளைஞர்களின் தூக்கத்தையும் கெடுத்தவர்.



அஜித், விஜய், சூரியா, பிரசாந்த், மாதவன் என இளம் நடிகர்களுடன் அதிகமாக நடித்தவர். சூரியாவுடன் தான் அதிகமான படங்கள் நடித்தவர். தெனாலியில் ஜானகியாக கமலுடன் ஜோடி சேர்ந்தார். பின்னர் வேட்டையாடு விளையாடுவில் ஆராதனா என்ற இன்னொரு வித்தியாசமான பாத்திரம் என பல்வேறு வகையான நடிப்புகளைக் காட்டினவர்.

கவர்ச்சி சுனாமிகளுக்கு மத்தியில் தமிழ்சினிமாவில் தென்றலாக வீசியவர் ஜோதிகா தான். எத்தனையோ பாத்திரங்களில் நடித்திருந்தாலும் சந்திரமுகியாக ரஜனியுடன் தன் சிறப்பான நடிப்பில் பலருக்கு பயம் காட்டியவர்.

ஜோதிகா சிறந்த நடிகையாக இருந்தாலும் பலருக்கு கனவுக் கன்னியாக ஏற்கமுடியவில்லை இதற்கான காரணமாக அவரின் சூரியாவுடனான காதலைக் கூறலாம். திருமணத்தின் நடிக்க வராதது தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த துரதிஷ்டம்.

சினேகா

அழகான அடக்கமான தமிழ்பெண் எப்படி இருப்பாரோ அப்படியான Girls next door தோற்றம். இவரின் புன்னகையாலே பல இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர். நதியா போல் உடைகளைத் துறந்து கவர்ச்சி காட்டாமல் தன் சிரிப்பினாலேயும் நடிப்பினாலேயும் பலரைக் கவர்ந்த புன்னகை இளவரசி.

என்னவளேயில் அறிமுகமானாலும் விரும்புகின்றேன் தான் இவரின் முதல்படம். 2001களில் அறிமுகமானபோதே ஆனந்தம், பார்த்தாலே பரவசம், என்ற படங்களிலும் 2002ல் விரும்புகின்றேன், நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய், உன்னை நினைத்து, பம்மல் கே.சம்பந்தம் எனப் பல படங்களில் தொடந்து நடித்தவர்.



வசீகரா, பார்த்தீபன் கனவு இன்றைக்கும் சினேகாவின் நடிப்பில் சிறந்த படங்களில் ஒன்றாக இருந்தாலும் வசூல்ராஜா ஜானகியும் "ப‌த்துக்குள்ளே நம்பர்" பாடலும் சினேகாவின் பைத்தியமாக பலரை மாற்றியது.

புதுப்பேட்டையில் யாரும் செய்யத் துணியாத பாத்திரமாக நடித்தவர்( இன்றை சூழலில் இதனை விபரித்தால் பிழை). பின்னர் பிரிவோம் சந்திப்போமில் நிஜமான குடும்பப் பெண் அல்லது மனைவி எப்படி இருப்பாரோ அப்படியே வாழ்ந்து காட்டினார்.

கவர்ச்சி காட்டாவிட்டாலும் அதிகம் கிசுகிசுக்களில் அடிபட்டவர் மட்டுமல்ல, இன்றைய கவர்ச்சி சுனாமிகள் நயந்தாரா, திரிஷா,ஸ்ரேயாக்கள் மத்தியில் நின்று நிலைப்பது அவரது நடிப்பை நம்பியே என்பது பலருக்கும் தெரியும்.

அசின்

2004ல் தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த இன்னொரு கேரளத்து பெண். எம்.குமரன் சன் ஆவ் மஹாலட்சுமியில் மலபாராக வந்து "சென்னைச் செந்தமிழை" மறக்கச் செய்தவர். அனைத்து இளைஞர்கள் மனசிலும் பிசினாக ஒட்டியவர் அசின்.

கஜனியில் மொட்டைமாடி கல்பனாக வந்து அனைவரின் அனுதாபத்தையும் பெற்றவர். சிரித்த முகம், மெல்லிய உடல் என இன்றைய இளைஞர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்தவர். குண்டுப் பெண்களை விரும்பிய தமிழ் இளைஞர்கள் சிம்ரனுக்குப் பின்னர் விரும்பியது அசினைத் தான்.



விஜய், அஜித் சூரியா என இளம் கதாநாயகர்களுடன் அதிகமாக நடித்தவர். கமலின் தசாவதாரத்தின் இன்னொரு தூண் என்றால் மிகையாகாது. ஐயங்கர் ஆத்து ஆண்டாளாகவே பெருமாளே பெருமாளே என புலம்பித்திரிந்தவர்.

ஸ்ரீதேவி போல ஹிந்தி சினிமாவிற்க்கு கஜனிக்காக சென்றவர் அங்கேயும் வெற்றிக் கொடி நாட்டி தமிழ்நாட்டையும் தமிழ் இளைஞர்களையும் மறந்துபோனது அகில உலக அசின் ரசிகர்கள் சார்பாக கண்டிக்கத்தக்கது.

இன்றைக்கும் அசினைப் பார்த்தால் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ எனப் பாடுபவர்கள் பலர்.

ஐஸ்வர்யா ராய்

1994ல் உலக அழகியானதில் இருந்து நான் ஐஸ் ரசிகனாகிவிட்டேன். எத்தனையோ உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்க்கு நிகர் அவரே தான். உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யாவை நடிகையாக்கிய பெருமை இயக்குனர் மணிரத்தினத்திற்கே சேரும்.

1997 ல் இருவரில் "ஜெ"யாக மன்னிக்கவும் கல்பனாவாக நடிக்கவைத்தார். ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி என அவர் ஆடிய ஆட்டம் உலக அழகி பட்டம் கொடுத்ததில் எந்தத் தப்பும் இல்லை எனப் புரிந்தது.



மணிரத்தனம் ஹீரோக்களை தன் ஹீரோவாக மாற்றும் ஷங்கர் தன்னுடய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாவை மதுமிதாவாக்கி " நீ எனக்கே எனக்கா" என பிரசாந்துடன் சேர்ந்து பலரையும் பாட வைத்தார். பின்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் " கண்ணாமூச்சி ஏனடா" எனக் கேட்டுவிட்டு ஹிந்திக்கு பறந்துவிட்டார். மீண்டும் ஷங்கரின் முயற்சியால் எந்திரனில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

ஐஸுக்காக தால், தேவதாஸ், டூம்2 , ஜோதா அக்பர், புரவோக்ட் போன்ற தரமான ஹிந்திப்படங்களும் சில மொக்கைப் படங்களும் பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

கோடி யுகம் போனாலும் ஐஸ்வர்யாவுக்கு மட்டும் வயசாகாது அதனால் தான் அவர் இன்றைக்கு ஐஸ்வர்யா பச்சானாக மாறினாலும் இளைஞர்களின் கனவுக் கன்னி.


பின்குறிப்பு : நண்பர்கள் மருதமூரான், சுரேஷ் (பழனியிலிருந்து) போன்றவர்கள் விருப்புக்கமைய ஒவ்வொரு நடிகையின் நடிப்பைப் பற்றிய சின்ன ஆராய்ச்சிப் பதிவு விரைவில்.

ஸ்ரீதேவி முதல் அசின் வரை - கனவுக் கன்னிகள்

ஜொள்ளு ஸ்பெசல்

திரைப்படம் என்றதொரு பொழுது போக்கு சாதனம் வந்தநாள் முதல் திரையில் எத்தனையோ நடிகைகள் நட்சத்திரங்களாக தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் ஒரு சிலரே கனவுக் கன்னிகளாக நினைவில் நிற்பவர்கள். ஒரு ரசிகனுக்கு அவனது கதாநாயகர்கள் பெரும்பாலும் மாறுவதில்லை ஆனால் கதாநாயகிகள் மட்டும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கும், இதற்கான காரணத்தை யாரும் உளவியலாளர்கள் தான் கூறவேண்டும்.

அந்தக் காலத்து பழம்பெரும் நடிகைகளான பத்மினி, சரோஜாதேவி முதல் இன்றைய சுனைனா, தமன்னா வரை தமிழ் சினிமாவில் கனவுக் கன்னிகள் அதிகம். என்னுடைய திரைப்பட அனுபவங்களில் என்னைக் கவர்ந்த கதாநாயகிகள் பற்றிய ஒரு ஜொள்ளுப் பதிவே இது.

ஏற்கனவே நம்ம அண்ணன் கானா பிரபா ஒரு ஜொள்ளு மழையையே அழகு ராணிகள் என்ற பதிவில் ஏற்படுத்தியவர், அண்ணன் காட்டிய வழியில் தம்பியின் ஜொள்ளுத் தூறல் இந்தப் பதிவு.

இப்படியான பதிவுகள் எழுதும்போது ஏனோ உற்சாகம் தானாகத் தொற்றிக் கொள்கின்றது.

ஸ்ரீ தேவி

மயிலாக திரையில் பலருக்கு நன்கு தெரியவந்தாலும் எனக்கு குரு படம் மூலமே குழந்தைப் பருவத்தில் தெரியவந்தார். அந்தக் காலத்தில் என்னுடைய ஆதர்ச கதாநாயகர்கள் கமல், ரஜனியுடன் அதிக படங்களில் இணைந்து நடித்ததாலோ என்னவோ ஸ்ரீ தேவியை இன்றுவரை மிகவும் பிடிக்கும். நான் விடலைப் பருவத்தை அடைந்த சமயம் ஏனோ ஹிந்திக்குப் போய் அந்நியமானாலும் இன்றைக்கும் அவரின் பழைய பாடல்கள் மூலம் அடிக்கடி யூடூயூப்பிலும் இசையருவியிலும் ( இரவுகளில் இடைக்காலப் பாடல்கள் ஒளிபரப்புவார்கள் ) ஜொள்ளுவிடும் நடிகை.



அழகையும் நடிப்பையும் ஒருங்கே கொண்ட நடிகைகளில் முக்கிய இடம் இவருக்குத் தான் இன்னும் ஸ்ரீ தேவி போல ஒருவர் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கவில்லை. குரு, தர்மயுத்தம், ப்ரியா போன்ற படங்களில் மிகவும் அழகாக இருப்பார். பதினாறு வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சிவப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை போன்ற படங்களில் நன்றாக நடித்தும் இருப்பார்.

கமல், ரஜனி இருவருடன் நடித்தளவு ஸ்ரீ தேவி ஏனோ ஏனைய நடிகர்களுடன் அவ்வளவாக நடிக்கவில்லை.

ரேவதி

மண்வாசனையில் முத்துப்பேச்சியாக பாரதிராஜாவால் அறிமுகமானவர். மண்வாசனை, புதுமைப் பெண்,வைதேகி காத்திருந்தாள் என ஆரம்பகாலத்தில் கிராமத்து தேவதையாக தன் நடிப்பாலும் அழகாலும் பலரைக் கவர்ந்தவர். பின்னர் புன்னகை மன்னன், கைதியின் டயறி, இதயத் தாமரை எனப் பல படங்களில் நகரத்து நவநாகரீக பெண்ணாகவும் மாறி அந்த நாள் இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர்.



தேவர் மகன், மெளனராகம், அரங்கேற்ற வேளை, கிழக்கு வாசல், அஞ்சலி எனப் பல படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். கமல், கார்த்திக், பிரபு, மோகன் போன்றவர்களுடன் அதிகளவான படங்களை நடித்திருந்தார். ரஜனியுடன் கை கொடுக்கும் கையில் நடித்தவர். தேவர் மகனுக்காக தேசிய விருது பெற்றவர். நடிப்பை மட்டும் நம்பி அந்தக் காலக் கவர்ச்சிக் கன்னிகளுடன் போட்டிபோட்டவர்.

ரேவதியின் பலமே அவரது சிரிப்புத்தான். ரேவதி போன்ற சாயலுடன் அவரது சிரிப்பையும் ஒத்த என்னுடன் உயர்தரம் படித்தவர் ஒரு பெண் ஏனோ மனதில் வந்துபோகின்றார்.

நதியா

பூவே பூச்சூடவாவில் அனைவரின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகை, பின்னர் "நதியா நதியா நைல் நதியா" என தனக்கென ஒரு பாணியில் மிகவும் குறைந்தளவு படங்களில் நடித்தவர். நதியாவின் தாக்கம் அந்தக் காலத்தில் காதணி,வளையல், என பெண்களின் ஒப்பனைப் பொருட்களுக்கு நதியாவின் பெயர் வைக்கும் அளவிற்க்கு பிரபலமானது. நதியாக் காப்பு கொஞ்சக் காலம் ஊர்த் திருவிழாக்களை அலங்கரித்தது. அந்தக் கால இளைஞர்கள் பலரிடம் நதியாவின் மோகம் அதிகமாகவே காணப்பட்டது. இதற்க்கு அவரின் ஹோம்லி லுக்கும் நடிப்பும் முக்கிய காரணமாகும்.



சுரேஷ், மோகன், பிரபு போன்ற நடிகர்களுடன் அதிகளவு படங்களில் நடித்தவர். ரஜனியுடன் ஜோடி சேர்ந்து " எங்கிட்டை மோதாதே" என ஆடிப்பாடிய ராஜாதி ராஜா ஒரு மைல்கல்லான படம் எனலாம்.

சில காலம் திரைத்துறையில் இல்லாமல் மீண்டும் மஹாலட்சுமியாக எம்.குமரன் மஹாலட்சுமியில் அதே இளமையுடன் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்தார்.

குஷ்பு

தர்மத்தின் தலைவனில் அறிமுகமானாலும் வருஷம் 16 தான் இவரின் பெயரை உச்சரிக்க வைத்த படம். பின்னர் "போவோமா ஊர்கோலம்" என சின்னத்தம்பியில் பலரின் மனதைக் கொள்ளையடித்தவர். குஷ்புவுக்காகவும் இசைஞானிக்காகவும் இந்தப் படம் ஓடியது என இருவரின் ரசிகர்களும் இப்பவும் சத்தியம் செய்வார்கள். ரஜனியுடன் மன்னன், அண்ணாமலை, பாண்டியன் கமலுடன் சிங்காரவேலன், மைக்கல் மதன காமராஜன் என இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்த நடிகை. நதியாவிற்க்குப் பின்னர் மக்களிடையே செல்வாக்கு அதிகம் கிடைத்த நடிகையுமாவார். நதியாக் காப்புகளுக்குப் பின்னர் குஷ்பு காப்பும் குஷ்பு சேலையும் பெண்களிடம் செல்வாக்குச் செலுத்தியது.



அந்தக் காலத்தில் சைனீஸ் பட்லர், பப்ளிமாஸ் என செல்லப் பெயர்களால் அழைக்கப்பட்டவர். கார்த்திக், பிரபு இருவருடனும் அதிக படங்கள் நடித்தவர். ஆரம்பத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தாலும் பின்னர் நடிக்கவும் செய்தபடியால் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்க்கு மனதைக் கவர்ந்து அப்படியே தமிழ்நாட்டின் மருமகளாகத் தங்கிவிட்டார். பின்னர் சரத்குமாருடன் நாட்டாமை, சிம்மராசி என கொஞ்சம் வயதான தோற்றத்தில் வந்தவர் படிப்படியாக வெள்ளித்திரையில் கதாநாயகி அந்தஸ்தில் இருந்து அடுத்த கட்டத்திற்க்கு சென்றுவிட்டார்.

அப்படியே சின்னத் திரையில் கண்ணீருடன் அறிமுகமாகி பின்னர் இவரின் ஜாக்கெட்டுக்காகவே ஜாக்பொட் நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்க்க வைத்தவர். தற்போது குண்டாக மாறி மானாட மயிலாடவில் நடனம் ஆடுகின்றேன் என மேடையை அதிரவைக்கிறார். அந்தக் காலத்து நயன்தாரா இவர் தான் எத்தனை கிசுகிசுக்கள் சர்ச்சைகள்.

ரம்பா

"அழகிய லைலாவாக" அன்றைய என்னைப்போன்ற விடலைகளின் மனதைக் கொள்ளை கொண்டவர். உள்ளத்தை அள்ளித் தா படத்தை ரம்பாவுக்காகவே பார்த்த நாட்கள் பல. நான் உயர்தரம் படிக்கும் போது அறிமுகமான நடிகை அதனாலோ என்னவோ என் வகுப்பு மாணவர்களின் கனவுக் கன்னியாக அப்போது மாறிவிட்டார்.



ரம்பாவின் கண் கொஞ்சம் ஒன்றரையாக இருந்தாலும் ஏனோ பலருக்கு அவரைப் பிடித்தது. நடிப்பை விட கவர்ச்சியை நம்பித தொடை தட்டிக் களமிறங்கியவர். அந்த நாள் நக்மா, மீனா போன்றவர்களுடன் தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். கமல், ரஜனி இருவருடனும் ஜோடியாக நடிக்காவிட்டாலும் இருவரின் படத்திலும் நடித்திருந்தார். கார்த்திக்,அர்ஜீன் ஆகியோருடன் அதிக படம் நடித்தார்.

சில காலத்தில் நடிகைகள் மறைவதுபோல் மறைந்தாலும் கலா மாஸ்டரின் புண்ணியத்தில் மானாட மயிலாடவில் வந்து தன் பழைய ரசிகர்களை தனக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வைத்த பெருமை ரம்பாவையே சேரும்.

குறிப்பு : இந்தப் பதிவில் உள்ள ரம்பா தவிர ஏனையோர் நான் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது ரசித்தவர்கள். யூத்தாகி ரசித்தவர்களின் பட்டியல் நாளை வரும்.