ஈழத்து இலக்கியத்தில் தனக்கென ஓரிடம் பிடித்தவர் கலாநிதி.க.குணராசா என்ற இயற்பெயரையுடைய செங்கைஆழியான். 60களில் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்த செங்கைஆழியானின் பேனா இன்னமு எழுதிக்குவித்துக்கொண்டே இருக்கிறது.
"Proligic Writers" என ஆங்கிலத்தில் ஒரு தொடருண்டு. "எழுதிக்குவிப்போர்" என தமிழில் அர்த்தம் கொள்ளலாம். ஈழத்து எழுத்தாளர்களில் இவருக்கு இது பொருந்துவதுபோல் வேறுயாருக்கும் பொருந்தாது. இவரைப் பற்றி எழுதுவதென்றால் எத்தனையோ நாட்களும் பக்கங்களும் வேண்டும்.
இதுவரை கிட்டத்தட்ட 150க்கு மேற்பட்ட சிறுகதைகளும் 40க்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மட்டுமல்ல, தமிழகத்தின் பிரபலமான ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள், கணையாழி, சுபமங்களா போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றது. இவரது "ஷெல்லும் எழு இஞ்சிச் சன்னங்களும்" என்ற சிறுகதையை மறைந்த எழுத்தாளார் சுஜாதா தினக்குரல் பேட்டியில் மிகவும் சிறந்த கதை இப்படியான கதைகளை நம்மவர்களால் எழுதமுடியாது எனச் சொல்லியிருந்தார் குறிப்பாக கதையின் முடிவு.
நாவல்களில் இவர் சரித்திர நாவல், சமூக நாவல், நகைச்சுவை நாவல், துப்பறியும் நாவல் என சகல பிரிவுகளிலும் தன் தனித்துவ எழுத்தால் பலரைக் கவர்ந்தவர்.
நான் முதல் முதல் வாசித்த நாவல் இவரது நகைச்சுவை நாவலான "ஆச்சி பயணம் போகின்றாள்". யாழ்ப்பாணத்தில் கிணர்றுத்தவளையாக இருந்த பொன்னம்மா ஆச்சி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு கண்டி ஊடக செல்லும் பயணக் கதையே அது. முக்கியமான மூன்றே மூன்று பாத்திரங்களை வைத்துக்கொண்டு இவர் ஆச்சி சென்ற பாதையூடாக வாசகர்களையும் கதிர்காமத்திற்க்கு அழைத்துச் சென்றார். இந்த கதைக்கு ஓவியர் "செள்" வரைந்த படங்கள் இன்னும் மெருகூட்டின என்றால் மிகையில்லை.
அடுத்து யாழ்ப்பாணத்தவர்களின் பட்டம் விடும் கலையை வைத்து இவர் எழுதிய இன்னொரு நாவல் "முற்றத்து ஒற்றைப் பனை". கொக்கர் மாரிமுத்தர் அம்மான், பொன்னு ஆச்சி, சூலாயுதம் என்கின்ற வேலாயுதம், அலம்பல் காசியர் என கதையில் வரும் பாத்திரங்களை நிஜ வாழ்க்கையிலும் பலர் கண்டிருப்பார்கள்.
இன்னொரு நகைச்சுவை நாவலான "கொத்தியின் காதல்" ஒரு பேயின் காதல் கதையைச் சொல்கின்றது. "ஆச்சி பயணம் போகின்றாள்", "முற்றத்து ஒற்றைப் பனை" போல "கொத்தியின் காதல்" ஏனோ அதிகம் பேசப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் மழை நேரம் மட்டும் ஓடுகின்ற ஆறான வழிக்கியாறை கதைக்களமாக வைத்து இவர் எழுதிய "நடந்தாய் வாழி வழிக்கியாறு" என்ற குறு நாவல் நகைச்சுவையாக பல சமூக அவலங்களைக் காட்டுகின்றது.
இவரின் சமூக நாவல்கள் பெரும்பாலும் சாதிக்கொடுமைகளுக்கு சமூக அடக்குமுறைகளுக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளது. "வாடைக்காற்று" மீனவர் சமூதாயத்தின் பிரச்சனைகளை அலசிஆராய்ந்த நாவலாகும் இது பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கதையின் களம் நெடுந்தீவு என்ற யாழ்ப்பாணத்தின் ஒரு தீவக் கிராமம் ஆகும். கிடுகுவேலி, பிரளயம் போன்றவையும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கதைகளே,
இவரின் முக்கியமான வரலாற்றுப் படைப்பாக "குவேனி" என்ற நாவலைச் சொல்லமுடியும். இலங்கையின் மூத்த தலைவியான குவேனி பின்னர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனை மணம் முடித்து உருவாகிய இனமே சிங்கள இனம் என்பதை அந்தக் கதையில் வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு புவியலாளன் என்பதால் பெரும்பாலும் இவரது கதைகளின் களம்கள் பலராலும் உணரக்கூடிய வகையில் விபரிக்ககூடிய ஆற்ற்ல் படைத்தவர். குவேனியில் இதனை நன்கு உணரமுடியும்.
யானை என்ற இவரது நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு காட்டை கண்ணுக்கு முன்னே நிறுத்துகின்ற கதை அது, காட்டாறும் காடு சார்ந்த கதையே ஆகும்.
கங்கைக்கரையோரம் என்ற நாவலில் பல்கலைக்கழக வாழ்க்கையை அழகாகச் சொல்லியிருக்கிறார். அங்கே ஏற்படும் காதல்கள்,ராகிங் பிரச்சனைகள் என சகலதையும் பேராதனைப் பல்கலைக் கழக்ச் சூழலில் விபரித்திருக்கிறார். இந்த நாவலை வாசிக்கும்போது பேராதனை தெரிந்தவர்கள் அந்தக் கட்டிடங்கள், காதலர்கள் சந்திக்கும் பூங்கா, சிறிய குளம், குறிஞ்சிக் குமரன் ஆலயம் என சகலதும் நினைவில் வரும்.
சமகால விடங்களை வைத்து எழுதிய கொழும்பு லொட்ஜ்,மரணங்கள் மலிந்த பூமி, போரே நீ போ, வானும் கனல் சொரியும், ஒரு மைய வட்டங்கள், தீம் தரிகிட தித்தோம், ஓ அந்த அழகிய பழைய உலகம், இந்த நாடு உருப்படாது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கடல்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம், போன்ற நாவல்கள் வரலாற்று நாவல்களாகு, அதே நேரம் இவர் 76 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மையப்படுத்தி எழுதிய 24 மணி நேரம், யாழ்ப்பாணம் கோட்டையின் வரலாற்றை எழுதிய களம் பல கண்ட கோட்டை போன்ற வரலாற்று ஆவணங்களாகவே பாதுகாக்கப்ப்டவேண்டியவை.
இவற்றைவிட இவர் பல பாடனூல்களும் எழுதியுள்ளார். குறிப்பாக சமூகக்கல்வி, புவியியல் நூல்கள். இவரது எழுத்து வெற்றியின் இரகசியம் வாசிக்கும் வாசகனை கதை நடக்கும் களத்துக்கும் காலத்திற்க்கும் கொண்டுசெல்வதுதான். இதேபோல் எழுதியவர் மறைந்த எழுத்தாளர் டானியல். இன்றும் ஈழத்தின் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னனாகத் திகழ்கின்றார் செங்கை ஆழியான்.
பின் குறிப்பு :இவரது நாவல்கள் பற்றிய குறிப்புகள் காலமும் நேரமும் கிடைத்தால் இன்னொரு பதிவில் தரமுயற்சி செய்கின்றேன்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
8 கருத்துக் கூறியவர்கள்:
நல்ல பதிவு.
நிறைகுடத்துக்கே உரித்தான தன்னடக்கத்துடன் அனைவரோடும் அன்போடு பழகுபவர் செங்கை ஆழியான்.
இவருடைய நூல்கள் படித்திருக்கிறேன்.
மேலதிக தகவல் தந்தமைக்கு நன்றி நட்சத்திர வந்தி.
என் ஆதர்ச எழுத்தாளர், நான் கூட 2 பதிவுகள் போட்டிருந்தேன். உங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி வந்தி
செங்கை ஆழியானை எனக்கும் மிகவும் பிடிக்கும். பெரும்பாலான எழுத்துக்களில் உள்ளடங்கிய ஒரு சோகம் இருக்கும். 'கங்கைக் கரையோரம்'நாவலைப் பலமுறை வாசித்திருக்கிறேன். 'யானை'யுடன் காட்டு வழி நடந்த அனுபவம் இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு வரியில் மனதை அசைத்துவிடும் இயல்புடைய எழுத்து. 'காட்டாறு'ம் செங்கை ஆழியான் எழுதியது அல்லவா? சின்ன வயதில் 'கொத்தியின் காதல்'வாசித்துவிட்டு எங்கள் வயதொத்தவர்களை கேலியாக 'கொத்தி', 'எறிமாடன்''என்றெல்லாம் அழைத்துத் திரிந்தோம். ஒரு பதிவு எவ்வளவு ஞாபகங்களைக் கிளறுகிறது பாருங்கள் வந்தியதேவன். உங்களுக்கு குந்தவையைப் பிடிக்காதா:) எனக்கு அதில் பிடித்த பாத்திரமே குந்தவைதான்.
சங்கர் வருகைக்கு நன்றிகள். இது ஒரு சாராம்சமான பதிவுதான். இவரின் நாவல்களை ஒவ்வொன்றாக விமர்சனம் செய்தாலே தினமும் ஒரு பதிவு எழுதலாம்.
உண்மைதான் நிர்ஷன், இவரைப் பலதடவை நேரில் சந்தித்திருக்கின்றேன். நாலு கவிதைகள் எழுதிய "கவிஞர்கள்" தோளை உயர்த்திக்கொண்டு பந்தாவாத் தெரியும் போது மிக அமைதியாகவும் பணிவாகவும் இருப்பார்.
உங்கள் பதிவுகள் பார்த்தேன் பிரபா. விரைவில் இன்னொரு பதிவுபோடமுயற்சி செய்கின்றேன்.
வருகைக்கு நன்றிகள் சகோதரி. நீங்களும் உங்கள் செங்கைஆழியான் பற்றிய அனுபவத்தை எழுதலாமே. எனக்கு குந்தவையைவிட ஏனோ பூங்குழலியைப் பிடித்திருக்கிறது.
நானும் படித்திருக்கிறேன். ஆனாலும் அவரது வாழ்க்கை சுத்த மோசம்.
செங்கை ஆழியானை தெரியாத ஈழத்துவாசகர்களா...!
எனக்கும் பிடிக்கும்...
பகிர்வுக்கு நன்றி அண்ணன்...
அருமை. அந்தக்காலத்துப் புத்தக வாசிப்புகளை ஞாபகப்படுத்தியது. நன்றி தோழரே
Post a Comment