முன்கதை:
இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கிவைத்தார். அவரின் அழைப்புக்கு நன்றிகள்.வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்தகதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத்தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத்தொடங்குவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்தக்கதைகள் தகவல்களாக ஆவணமாகப் போய்ச்சேரும்.
விதிமுறை:
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் மூவருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.
மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.
இனி என் கதை :
2005களில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின. மு.மயூரன், கானாபிரபா, சினேகிதி, சந்திரவதனா அக்கா, போன்றவர்களின் வலைகளைப் படித்திருக்கின்றேன் ஆனால் பின்னூட்டம் இட்டத்தில்லை. காரணம் அப்போ எனக்கு பின்னூட்டம், பதிவு, அனானி போன்ற எந்த விடயமும் தெரியாது. அவர்கள் சொந்த டொமைனில் எழுதுகின்றார்களோ என்ற எண்ணம்.
2006ல் சும்மா இணையங்களை அலசி ஆராய்ந்ததில் தமிழ்நாடுடோல்க் என்ற விவாதக் களத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கே என் கருத்துகளைச் சொல்லும் போது நண்பர் லக்கிலுக் (யுவகிருஷ்ணா). நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள் ஏன் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்ககூடாது என என்னைக் கேட்டார்.
நானும் ஒரு ஆர்வக்கோளாற்றில் சரி நானும் எழுதிப்பார்ப்போம் என துணிந்தேன்.பாடசாலை நாட்களில் கட்டுரை எழுதிய அனுபவம் நிறைய இருக்கின்றது. அத்துடன் தகவல் தொழில்நுட்ப மாணவனாக இருந்தபோது பத்திரிகைகளில் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்(என் வலையில் இதுவரை எந்த தொழில்நுட்ப பதிவும் எழுதவில்லை என்பது தனிக்கதை). ஆகவே தைரியத்துடன் களத்தில் குதித்தேன்.
வலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றிருந்தபோது நான் எப்போதும் திறந்த மனதுடன் கதைப்பதால் பலர் என்னை உளறி என்பார்கள். எதையும் மறைத்துவைக்கும் பழக்கம் என்னிடம் இருந்ததில்லை. ஆகவே என்னுடைய உளறல்களாக இந்த வலையை உருவாக்குவோம் என்ற நினைப்பில் என் உளறல்கள் எனப் பெயரிட்டேன்.
எனது சொந்தப்பெயரில் எழுதலாம் என்றால் ஏற்கனவே மு.மயூரன், மயூரேசன், மாயா என்ற மயூரன் எனப் பல மயூரன்கள் வலையுலகில் இருப்பதால் கல்கியின் அழியாப் புகழ் கொண்ட பாத்திரமான வந்தியத்தேவன் என்ற பெயரை எனக்கு புனை பெயராகச் சூட்டினேன். வலையுலகில் என் சொந்தப் பெயரை விட வந்தி என்ற பெயரே நிலைத்து நின்றுவிட்டது.
2006 ஜீலை 08ல் என் அறிமுகம் தொடங்கியது. லக்கி ஜீமெயில் சாட் மூலம் எனக்கு துரோணராக வலைவித்தை பயிற்றுவித்தார். அவருடன் லெனின் என்ற பூக்குட்டியும் (நல்ல நகைச்சுவையாளர் ஏனோ இப்போ எழுதுவதில்லை)எனக்கு உறுதுணை புரிந்தார்கள்.
அறிமுகப்பதிவில் எனக்கு ஏற்கனவே அறிமுகமான கானாபிரபா என்னைத் தமிழ்மணத்துடன் இணைக்கும் படி பின்னூட்டம் இட்டிருந்தார். முதல்ப் பின்னூட்டம் பூக்குட்டியின் பின்னூட்டம் இரண்டாவது பின்னூட்டம் கானாவின் பின்னூட்டம்.
அறிமுகம் முடிந்தபின்னர் என்ன எழுதுவது ஏது எழுதுவது என எண்ணியிருக்கும் போது எல்லோருக்கும் பிடித்த காதல் பற்றிய என் முதல்ப் பதிவை இட்டேன். அதன் பின்னர் இரண்டு மூன்று சமூகக் கருத்துகள் உள்ள பதிவுகளை இட்டேன்( ஏனோ வரவேற்புக் கிடைக்கவில்லை). ஆகவே 2006ல் என்னால் வெறும் 6 பதிவுகள் மாத்திரம் எழுதக்கூடியதாக முடிந்தது.
2007ல் ஒருமாதிரி வலையுலக அரசியல்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது. இதனால் ஜொள்ளு, லொள்ளு, கிரிக்கெட், சினிமா, பம்பல் என பதிவுகளை தொடர்ந்தேன். இடையிடையே சமூகத்துக்கு கருத்து கந்தசாமியாக கருத்துகள் சொன்னாலும் ஏனோ அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2007ல் மொத்தமாக 28 பதிவுகள்.
இதே நேரத்தில் இலங்கையில் இருந்து பதிவு எழுதிய மாயா, இறக்குவானை நிர்ஷன், ஆரவாரம் தாசன் போன்றவர்களது அறிமுகங்களும் ஏனைய நம்மவர்களது பதிவுகளும் படிக்கவும் பின்னூட்டவும் தொடங்கினேன்.
2008ன் ஆரம்பமே எனக்கு அமர்க்களமாக இருந்தது தினக்குரல் பத்திரிகையில் தாசன் எழுதிவந்த வலைப்பதிவுகள் பற்றிய பத்தியில் 2008 ஜனவரி 27ந்திகதி என்னுடைய உளறல்கள் பற்றி எழுதியிருந்தார்.
அதற்கு முதல் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஜனவரி 23ந்திகதி என்னுடைய உளறல்கள் பற்றிய சிறுகுறிப்பு வெளிவந்தது. ஆகவே அந்த நாட்களில் வெறும் 50 பதிவுகளுக்குள் எழுதிய எனக்கு இன்னும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் தானாகவே ஏற்பட்டது.
இதன் விளைவாக கொஞ்சம் காத்திரமாகவும் ( என் நினைப்பு மற்றவர்கள் எப்படி நினைக்கின்றார்களோ தெரியவில்லை) எனக்கு ஓரளவு கைகொடுக்கின்ற கிண்டல், நகைச்சுவை கலந்தும் எழுதினேன். அதனால் தான் என்னவோ 100 பதிவுகளையே கடக்காத என்னை தமிழ்மணம் 2008 செப்டம்பர் 22ந்திகதி தொடக்கம் 28ந்திகதி வரை நட்சத்திரமாக அழகுபார்த்தது. இலங்கையில் இருந்து எழுதும் பதிவர்களில் முதல் நட்சத்திரமாக இலங்கையின் முதல் தமிழ் வலைப்பதிவர் மு.மயூரன் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தார். அவரைத் தொடர்ந்து இலங்கை நட்சத்திரமாக நான் அறிமுகமானேன் என நினைக்கின்றேன்.
ஆகவே 2008ல் எனக்கு கிடைத்த ஊக்குவிப்புகளால், அந்த ஆண்டு மொத்தமாக 52 பதிவுகளை இடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
2009ல் வலையுலகம் மேலும் வளர்ந்தது, கூடவே நானும் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 74 பதிவுகள் நிறைய நட்புகள், இலங்கைப் பதிவர் சந்திப்பு எனப் பல விடயங்கள் நடந்தேறிவிட்டன. இதுதான் நான் பதிவு எழுத வந்த கதை.
இனி சில அனுபவங்கள் :
பயன் படுத்திய கருவிகள் :
ஆரம்பத்தில் எனக்கும் பலரைப்போல் பாமினியின் நட்புத்தான் கிடைத்தது. ஆகையால் பாமினியில் தட்டச்சு செய்வது மிகவும் இலகுவாக இருந்தது, ஆனால் பாமினியை வைத்து வலையேற்ற முடியாது என்பதால் அதனை சுரதாவின் பொங்குதமிழ் மாற்றி மூலம் யுனிகோட்டிற்க்கு மாற்றி வலையேற்றினேன். அதே நேரம் சில நாட்கள் கலப்பையினால் உழுவவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
பின்னர் தமிழ் எழுதியின் அறிமுகம் கிடைத்தபின்னர் அதனால் தான் தட்டச்சு செய்கின்றேன். இது எனக்கு வேகமானதாக தெரிகிறது. ஆனாலும் இந்த முறை தப்பென இப்போது அறியக்கூடியதாக இருக்கின்றது. சில நாட்களில் ரங்கநாதனுக்கோ அல்லது தமிழ்99க்கோ மாறும் எண்ணம் இருக்கின்றது.
பின்னூட்டம் :
ஆரம்பத்தில் நான் அனானி அதர் ஒப்சன் பகுதிகளைத் திறந்தே வைத்திருந்தேன், ஆனால் சில நாட்களில் இந்தியாவின் மிகப்பிரபலமான பகுதி ஒன்றில் இருந்து வந்த ஒரே ஒரு அனானியின் ஆபாச பின்னூட்டங்களும் மிரட்டல்களும் என்னைக் கொஞ்சம் பயம்கொள்ளவே வைத்தன. பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நடுநிசிக்குப் பின்னர் தான் அவரின் ஆட்டம் தொடரும், இந்தப்பின்னூட்டங்களால் நான் மட்டுமல்ல ஏனைய சில பிரபல மூத்த வலைப்பதிவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் நான் அரசியல் எழுதுவதேயில்லை. இதனைப் பற்றி மாயா, நிர்ஷன் போன்றோருடன் கதைத்தபோது சில நாட்கள் அனானி, அதர் ஒப்சன்களை மூடச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் அனானி கூகுளின் உதவியால் புதிய புதிய கணக்குகள் உருவாக்கி தன் வக்கிரத்தைத் தொடர்ந்தார்.
என் வலையில் அரசியல் கருத்துக்களோ இல்லை எந்த தனிநபர் தாக்குதல்களோ இல்லாதபோது நான் ஏன் பயப்படவேண்டும் என எண்ணி மீண்டும் அனானி, அதர் ஒப்சன்களை திறந்துவிட்டேன். பின்னர் சில தமிழக நண்பர்கள் அந்த அனானி ஒரு சைகோ எனத் தெரிவித்தார்கள். அதன்பின்னர் அவரையோ அவரது பின்னூட்டங்களையோ பொருட்படுத்துவதில்லை.
நட்சத்திரவாரத்தில் இலங்கைப் பதிவர்கள் பற்றிய பதிவு ஒன்றிற்கு இலங்கையைச் சேர்ந்த ஒருவரே எம்மைத் திட்டிப் பின்னூட்டம் இட்டிருந்தார். மற்றும் படி பின்னூட்டங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன்.
மொத்ததில் வலையுலகில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டாலும், நிறைய நட்புகளை உலகம் பூராவும் எனக்குத் தந்திருக்கிறது. அதே நேரம் கமல் ரசிகனான நான் சகலகலாவல்லவன் வலைப்பூவிலும், கானாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்துமுற்றம் வலைப்பூவிலும் ஒரு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.
ஈழத்துமுற்றத்தில் படிப்பவை/ எழுதுபவை ஏதோ என் சொந்த ஊரில் இருக்கும் எண்ணத்தை ஞாபகப்படுத்துகின்றது. அத்துடன் இலங்கையின் ஏனைய இடத்து பிரதேச வட்டார சொற்களையும், கலை கலாச்சாரங்களையும் அறியக்கூடியதாகவும் உள்ளது.
என்னை இந்த விளையாட்டுக்கு அழைத்த நண்பன் மு.மயூரனுக்கு நன்றிகள்.
நான் அழைக்கவிருப்பவர்கள் :
நான்கு பேரை நாலு வேறு வேறு இடங்களில் இருந்து அழைக்கவிரும்புகின்றேன்.
1. கெளபாய் மது :
இலங்கையிலிருந்து எழுதும் ஒரு பதிவர். பதிவர் சந்திப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர்.
2.மணிமேகலா
அட்சயபாத்திரம் வைத்திருப்பவர் அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதுபவர். ஈழத்துமுற்றத்தில் செல்லமாக மணியாச்சி.
3. கீத் கிருத்திகன் குமாரசாமி
மெய் சொல்லப்போகின்றேன் என பல மெய்களைச் சொல்பவர். எனது பாடசாலையில் படித்தவர், பக்கத்து ஊர்க்காரர், இப்போது கனடாவில் வசிக்கின்றார்.
4. சினேகிதி
தத்தக்க பித்தக்க என தாளம் போடும் சினேகிதி, அண்மையில் தான் தெரியவந்தது இவரும் நம்ம ஊர்க்காரர் என்ற தகவல்.
இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என சமத்துவம் பேணியிருக்கின்றேன்.
மகாலிங்கம் பத்மநாபன் : வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் வரலாற்றை எழுதி
வரலாறாய் ஆனார்
-
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும்
நனி சிறந்தனவே…”
தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து கழித்த எங்கள் அப்பா தன் இறுதிக்காலம் வரை
மந்திரம் போலச் சொ...
2 days ago
12 கருத்துக் கூறியவர்கள்:
அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிகள் வந்தியத்தேவன்.
சமூகக்கருத்துச் சொல்லப்போய் "ஆதரவு" கிடைக்காமல் பின்வாங்கிய கதை சுவாரசியமான கதை.
உங்கள் தொழிநுட்ப எழுத்துக்களைத்த்தான் பதிவுலகம் தவறவிட்டுவிட்டது.
நிச்சயம் எழுதுகிறேன். இந்த வார இறுதிக்குள்
ஆரோக்கியமானநல்லவிளையாட்டு. வந்தியத்தேவரே மகிழ்ச்சியானசெய்தியைமறைத்துவிட்டீர்களே. உங்கள் பெற்றோரின் திருமணநாள் இன்று எனக்கேள்விப்பட்டேன். உங்கள்வீட்டுமகிழ்ச்சியில் வலைஉலகநண்பர்களான நாமும் கலந்துகொள்கிறோம். முகம்தெரியாவலைஉலகநண்பர்களேஇன்றுமுதல் இப்புதியகலாசாரத்தை ஆரம்பிப்போம்.பரீட்சையில்சித்தி,புதியபதவி,பதவிஉயர்வு,திருமணம், பிறந்தநாள் எனஇது விரிவடையட்டும்.
அன்புடன்
வர்மா
ம்... ம்...
சமூகக் கருத்து எழுதினேன் முதலில், வரவேற்பு கிடைக்கவில்லை என்று எல்லா பதிவர்களும் சொல்வார்கள் பாருங்கள்...
ம்ம்ம்ம்... அண்ணா.... நீங்க எதையுமே மறைக்காமல் பேசுபவர் என்பதை பதிவர் சந்திப்பிலும் அறிய முடிந்தது...
உண்மையில் இது ஒரு நல்ல விளையாட்டுத்தான்...
வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்தும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்...
வலைக்கு வந்த கதை சுவாரஸ்யம் வந்தியத்தேவன். இந்த அனானி இம்சைகள் தாங்கறதில்லை. கோழைகள். கண்டுக்காதிங்க. தொடருங்கள்.
//வலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றிருந்தபோது நான் எப்போதும் திறந்த மனதுடன் கதைப்பதால் பலர் என்னை உளறி என்பார்கள். எதையும் மறைத்துவைக்கும் பழக்கம் என்னிடம் இருந்ததில்லை.//
நம்புறேன் நீங்கள் ஒரு உளறிதான் எண்டு நம்புறேன் :))
என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறீர்கள். A for Apple தொடர் பதிவினையே 13 மாதங்கள் கழித்து எழுதிய பெருமை எனக்கு உண்டு. ஆனால் இது ஏனோ தானோ என்று எழுதிவிட்டுப் போகின்ற பதிவல்ல... ஆவணப்படுத்தப்படப் போகும் பதிவாதலால்... கொஞ்சம் மினக்கட வேண்டும்... இரண்டு கிழமைகள் அவகாசம் தாருங்கள்... எழுதுகிறேன்...
நன்றி
மதுவதனன்,
சிறப்பாகவும் முழுமையாகவும் செய்ய வேணும் எண்டு திட்டம் போட்டீங்க எண்டா வலைப்பதிவு விசயத்தில அது நடக்காத காரியமாத்தான் போய் முடியும். ஒரு பஸ் பயணம் முழுக்க எப்பிடி வந்தீங்க வலைக்கு எண்டு யோசிச்சிட்டு வீட்டு வந்ததும் உடனே ஒரே மூச்சில எழுதிருன்க. அப்பதான் காரியம் ஆகும் ;)
சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ;)
/இரண்டு மூன்று சமூகக் கருத்துகள் உள்ள பதிவுகளை இட்டேன்( ஏனோ வரவேற்புக் கிடைக்கவில்லை./
ஒரு வேளை மொக்கை பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ
ஆரம்பத்திலயே உளறல் எண்டு சொல்லியிருக்கிறதால சில அரசியல்ல இருந்து தப்பலாம் எண்டும் ஒரு காரணம் இருக்கிறதா கேள்வி..
அப்படித்தானே வந்தி.?
:))
அனானி பிரச்சினை அந்த காலத்தில இருந்து இருக்குதா? நீங்க எல்லாம் ரொம்பவே பாவம்.
அருமையாக இருக்கிறது உங்கள் வலையுலக ஆரம்பம்
Post a Comment