இருக்கிறத்தில் வலைப் பதிவர்கள்

இலங்கையில் இருந்து மாதம் இருமுறை வெளியாகும் சஞ்சிகையான இருக்கிறம் 01.10.2009 இதழில் பல வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் நேரடியாகவும் வலைப்பதிவில் இருந்தும் வெளியாகியிருக்கின்றது.



இதனால் எதிர்காலத்தில் பல வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் வலை எழுதுபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவும் அமைகின்றது.



இலங்கை வலைப்பதிவர்களின் இனிய ஒன்ற்கூடல் என்ற தலைப்பில் லோஷனால் ஆகஸ்டில் நடந்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றிய ஆக்கம் படங்களுடன் வெளியாகியிருக்கின்றது.



மருதமூரானின் உன்னைப்போல் ஒருவன் திரைவிமர்சனம் "சாமானியனின் சமூக அக்கறை" என்ற தலைப்பிலும் இவர் கமல் பற்றி எழுதிய "கமல்ஹாசன் திரைத்துறையின் மறக்கமுடியாத ஆளுமை" என்ற கட்டுரையும் வெளியாகியிருக்கின்றது.



யோகாவின் யோ வாய்ஸ் வலையிலிருந்து "2070 ஆம் ஆண்டில் ஒருநாள்" என்ற நீர் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையும் வெளியாகியிருக்கின்றது.



டொக்டர்.எம்.கே.முருகானந்தனின் "நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாம்" என்ற உடல் ஆரோக்கிய கட்டுரையும் பிரசுரமாகியிருக்கிறது.



சிகே.மயூரனின் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் என்ற விளையாட்டு சம்பந்தமான கட்டுரையும், லோஷனின் ஆஷஸ் 2009 அலசல் என்ற கிரிக்கெட் கட்டுரையும் வெளியாகியுள்ளது.



ஜனாவின் வலைப்பூவிலிருந்து "யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்புகள்" என்ற சுவையான ஆக்கமும், சாருகேசியின் வலையில் வெளியான பலரின் பாராட்டுகளைப் பெற்ற "பெரிய மனுசி" என்ற சிறுகதையும் ஜப்பானிய அழகிகளும் நூதன விவசாயமும் என்ற கட்டுரையும் முத்மஹரி என்ற வலைப் பூவிலிருந்தும், வெளியாகியுள்ளன.



இவற்றில் சில நேரடியாக வலைப்பதிவர்களால் இருக்கிறம் சஞ்சிகைக்காக நேரடியாக எழுதப்பட்டவை. சில வலைப் பூக்களிலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானவை. வலைப் பூக்களில் இருந்து எடுத்தவற்றில் அந்த வலைப் பூவின் முகவரியைத் தந்திருந்தால் வாசகர்கள் அவற்றை வலைப் பூவிலும் வாசித்து தங்கள் கருத்துகளை கூற முடியும்.



அண்மைக் காலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வலைப் பதிவர்களின் ஆக்கங்கள் வெளிவருவது ஆரோக்கியமான விடயமே. இருக்கிறத்தில் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

26 கருத்துக் கூறியவர்கள்:

maruthamooran சொல்வது:

தகவல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வந்தி

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

தகவலுக்கு நன்றி வந்தி.
பதிவர்களின் பதிவுகள் அனைத்தும் எதுவித தரமுமன்றி வெறும்பொழுதுபோக்கிற்காக எழுதப்படுபவை என ஆரம்பகாலங்களில் பலர் (கல்விமான்கள் கூட) கூறிவந்தனர். ஆனால் இந்த மாற்றம், தனிநபர்களின் சிந்தனையோட்டத்துக்கு கிடைக்கும் ஊடக அங்கீகாரமாக இருக்கிறது.

நன்றி இருக்கிறம்.

Jana சொல்வது:

பதிவுக்கும் தகவலுக்கும் நன்றிகள் நண்பர் வந்தியத்தேவன்.

KANA VARO சொல்வது:

வலைப்பதிவில் எழுதினால் அதைத் தூக்கிப் புத்தகத்தில் போட்டு விடுவார்கள் என்று நினைத்து இருந்துவிடவேண்டாம். இருக்கிறமைப்போல் எத்தனைபேர் அதை ஊக்குவிப்பார்கள்.???
நாளொரு பதிவு வலைப்பதிவுக்காக பலர் இடும் போது மாதம் இரு ஆக்கம் ஏன் இருக்கிறமுக்காக எழுதக்கூடாது?.. முயற்சியுங்கள்
வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறம் ஆசிரியர் பீடத்துக்கும் இடையேயான இனியசந்திப்பு ஒன்று வெகுவிரைவில் நடைபெற ஏற்பாடாகி வருகின்றது. வெகு விரைவில் சந்திப்போம்.

roshaniee சொல்வது:

வலைப்பதிவில் இருந்து பல ஆக்கங்கள் இருக்கிறமில் போடப்படுகின்றது. அதிலும் பார்க்க இருக்கிறமையும் ஒரு வலைப்பதிவு புத்தகம் ஆக்கிவிடலாமே.!!!
எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் இந்தஊக்குவிப்பு முறையற்றது.

tharshi சொல்வது:

ஒரு விடயம் இரண்டு ஊடகத்தின் மூலமாக செல்கின்றது. பிரபலமானவர்களின் வலைப்பதிவுகளை பலர் பார்வையிடுகின்றனர். அவர்களின் பதிவுகளை தான் இருக்கிறம் போடுகின்றது. முகம் தெரியாத பலர் பதிவுலகில் இருக்கிறார்கள். அதேபோல் ஆக்கங்களையும் நேரில் கையளிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். எத்தனைபேர் இருக்கிறமை தேடிச்சென்று தங்கள் ஆக்கங்களை கொடுத்திருப்பார்கள்.???

இளையதம்பி தயானந்தா சொல்வது:

நட்புக்கும் அன்பிற்குமுரிய வந்தியத்தேவனுக்கு முதலில் நன்றிகள்!

இப்பதிவில் இடப்படும் வாதப் பிரதிவாதங்கள் அனைத்துமே இனி வரும் எம் அசைவுகளுக்கான அவசிய தேவைக்குரியவை.

இருக்கிறம் செய்வது, இறக்குவானை நிர்ஷன் சொன்னதுபோல தனிநபர்களின் சிந்தனையோட்டத்துக்கு கிடைக்கும் ஊடக அங்கீகாரமா? அல்லது ரொஷானியும் தர்ஷியும் கொள்ளும் கோபத்துக்குரியதா? என்று சிந்திக்க வேண்டும்.

ஏற்பாடாகியிருக்கும் வலைப் பதிவர்களுடனான சந்திப்பு, வளரும் இதழ் ஒன்றுக்கும் ஆற்றல் மிகு வலைப் பதிவர்களுக்குமான பரஸ்பர புரிந்துணர்வுகளை பெற்றுத் தரும் என நம்புகிறோம்.

முடிவாய் ஒன்று சொல்ல வேண்டும்,'இருக்கிறம்' மீன் போல. கிணற்றில் வாழும் மீன்கள் அக்கிணற்றை சுத்தம் செய்வதற்காக பாசிகளைத் தினபதில்லை. அவற்றின் பசிக்காகவும்தான்.

என்றும் அன்புடன்,
ஆ-ர்

வந்தியத்தேவன் சொல்வது:

//மருதமூரான். said...
தகவல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வந்தி//

நன்றி மருதமூரான் அல்லது மலர்மகன் தங்கமயில். நண்பர்களுக்கு ஒரு தகவல் மலர்மகன் தங்கமயில் என்ற பெயரில் இருக்கிறம் சஞ்சிகையில் ஆக்கம் எழுதுபவர் மருதமூரான் என்பதை இந்த இடத்தில் சொல்லவேண்டும். அவர் நீண்டகாலமாக இருக்கிறத்தில் எழுதுகின்றார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//இறக்குவானை நிர்ஷன் said...

பதிவர்களின் பதிவுகள் அனைத்தும் எதுவித தரமுமன்றி வெறும்பொழுதுபோக்கிற்காக எழுதப்படுபவை என ஆரம்பகாலங்களில் பலர் (கல்விமான்கள் கூட) கூறிவந்தனர். ஆனால் இந்த மாற்றம், தனிநபர்களின் சிந்தனையோட்டத்துக்கு கிடைக்கும் ஊடக அங்கீகாரமாக இருக்கிறது. //

இது பற்றி நீங்கள் ஒரு பதிவுகூட போட்டிருந்தீர்கள் என நினைக்கின்றேன். அண்மைக்காலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் வலைப் பதிவர்களின் தரமான ஆக்கங்களை வெளியிடுகின்றது. இது ஒரு நல்ல அங்கீகாரம், ஏற்கனவே வலைப் பதிவர்களை தினக்குரல், மெட்ரோ நியூஸ், மல்லிகை போன்றவை வெளிக்காட்டியுள்ளன அவர்களுடன் இருக்கிறம் போன்ற சஞ்சிகைகளும் ஏனைய பத்திரிகைகளும் ஆதரவு தரத் தொடங்கியதால் இன்னொரு படிக்கட்டில் பதிவர்கள் கால் வைக்க முடியும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Jana said...
பதிவுக்கும் தகவலுக்கும் நன்றிகள் நண்பர் வந்தியத்தேவன்.//

வருகைக்கு நன்றி ஜனா.

வந்தியத்தேவன் சொல்வது:

//VARO said...
வலைப்பதிவில் எழுதினால் அதைத் தூக்கிப் புத்தகத்தில் போட்டு விடுவார்கள் என்று நினைத்து இருந்துவிடவேண்டாம். இருக்கிறமைப்போல் எத்தனைபேர் அதை ஊக்குவிப்பார்கள்.??? //

இது யாருக்கான கேள்வி. எனக்கென்றால் நான் வலைப் பதிவு எழுதுவது என் பொழுதுபோக்குக்காகவே ஒழிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரவேண்டும் என்பதற்காக அல்ல. இன்னொரு விடயம் சென்ற வாரம் என் கட்டுரை ஒன்று தினக்குரலில் வெளியானது, நேற்று நிர்ஷனின் கட்டுரை ஒன்று சுடரொளியில் வெளியானது. நாமாக கொடுக்கவில்லை அவர்களாக வெளியிட்டார்கள். என்னுடைய கட்டுரை என்னுடைய அனுமதியுடன் தான் வெளியிடப்பட்டது.

//நாளொரு பதிவு வலைப்பதிவுக்காக பலர் இடும் போது மாதம் இரு ஆக்கம் ஏன் இருக்கிறமுக்காக எழுதக்கூடாது?.. முயற்சியுங்கள் //

இதுவரை இருக்கிறமோ அல்லது எந்தப் பத்திரிகையோ பதிவர்களிடம் இருந்து ஆக்கங்களை உத்தியோகபூர்வமாக கேட்கவில்லை. நீங்கள் கூட அண்மையில் ஒரு கட்டுரை ஏதோ பத்திரிகையோ சஞ்சிகைக்கோ அனுப்பி இன்னும் வெளியிடவில்லை என்ற ஆதங்கத்தில் உங்கள் வலையில் பிரசுரித்தீர்கள். பத்திரிகைகளுடன் தொடர்புடைய உங்களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை எப்படியிருக்கும்?

பெரும்பாலான பதிவர்கள் தங்கள் ஆத்ம திருப்திக்காக எழுதுகின்றார்களே ஒழிய பத்திரிகைகளில் வரவேண்டும் என எழுதுவதில்லை. ஆகவே தான் அவர்களால் தங்கள் ஆக்கங்களை அச்சு ஊடகங்களுக்கு அனுப்புவதில்லை.

அத்துடன் அச்சு ஊடகங்களில் எழுதும் பெரும்பாலானவர்கள் வலைப் பதிவு செய்வதில்லை. இதுதான் முரண்பாடு ஏற்படக் காரணமாகின்றது.

//வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறம் ஆசிரியர் பீடத்துக்கும் இடையேயான இனியசந்திப்பு ஒன்று வெகுவிரைவில் நடைபெற ஏற்பாடாகி வருகின்றது. வெகு விரைவில் சந்திப்போம்.//

சந்திப்போம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// roshaniee said...
வலைப்பதிவில் இருந்து பல ஆக்கங்கள் இருக்கிறமில் போடப்படுகின்றது. அதிலும் பார்க்க இருக்கிறமையும் ஒரு வலைப்பதிவு புத்தகம் ஆக்கிவிடலாமே.!!!//

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள். அண்மைக் காலமாக பல இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் திறனை வலைகள் மூலம் தான் காட்டிவருகின்றார்கள். அப்படியானவர்களின் ஆக்கங்கள் வெளியிடுவதில் என்ன தப்பு. முன்னர் என்றால் எழுத்தாளர்கள் என அறியப்பட்டவர்களின் ஆக்கங்கள் தான் பெரும்பாலும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி புதியவர்கள் தாங்களே தமக்கு களம் அமைத்து எழுதுவதால் அவர்களின் ஆக்கங்களும் தேவைப்படுகின்றது.

//எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் இந்தஊக்குவிப்பு முறையற்றது.//

அப்படியென்றால் எப்படி ஊக்குவிக்கலாம் என்பதையும் அது பற்றிய உங்கள் கருத்துகளையும் தாருங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// tharshi said...
ஒரு விடயம் இரண்டு ஊடகத்தின் மூலமாக செல்கின்றது. பிரபலமானவர்களின் வலைப்பதிவுகளை பலர் பார்வையிடுகின்றனர். அவர்களின் பதிவுகளை தான் இருக்கிறம் போடுகின்றது. //

அச்சு ஊடகங்களை விட தற்போது இணையத்தின் தாக்கம் உலகெங்கும் பரந்துள்ளது. இதனால் தான் சிலர் தங்களின் அச்சில் ஏறிய ஆக்கத்தையே இணையத்தில் ஏற்றுகின்றார்கள். இதில் தப்பில்லை என நினைக்கின்றேன்.

பிரபலமானவர்களின் பதிவகளைத் தான் இருக்கிறம் போடுகின்றது என்பது தவறானது ஏனென்றால் இந்த முறை இருக்கிறத்தில் வெளிவந்த சில வலைப் பதிவர்களைப் பலருக்குத் தெரியாது. அவர்கள் சிலவேளைகளில் ஒரு குழுவினரிடம் பிரபலமாக இருக்கலாம் ஆனால் திரட்டிகளில் அவர்களின் வலைகள் இல்லை. ஆகவே பிரபல என்ற கருத்து இதனால் அடிபட்டுப்போகின்றது. காத்திரமான ஆக்கங்களை எவரும் பிரசுரிப்பார்கள்.

அதே நேரம் வலையுலகில் பிரபலமானவர்களான லோஷன், மருதமூரான், சிகே.மயூரன் போன்றவர்கள் நீண்டகாலமாக இருக்கிறத்திலும் எழுதுகின்றவர்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆக்கங்களை இருக்கிறத்தில் எழுதிவிட்டு பின்னர் வலையேற்றுகின்றார்கள்.

//முகம் தெரியாத பலர் பதிவுலகில் இருக்கிறார்கள். அதேபோல் ஆக்கங்களையும் நேரில் கையளிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். எத்தனைபேர் இருக்கிறமை தேடிச்சென்று தங்கள் ஆக்கங்களை கொடுத்திருப்பார்கள்.???//

இந்தக் கேள்விக்கான பதில் வரோவின் பதிலில் இருக்கின்றது. அத்துடன் எனக்கும் இருக்கிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை இந்தக் கேள்வியை இருக்கிறத்திடம் அல்லது வரோவிடம் கேட்கவும்.

வந்தியத்தேவன் சொல்வது:

// இளையதம்பி தயானந்தா said...
நட்புக்கும் அன்பிற்குமுரிய வந்தியத்தேவனுக்கு முதலில் நன்றிகள்!//

உங்கள் வருகைக்கு நன்றிகள் அண்ணா.

//இப்பதிவில் இடப்படும் வாதப் பிரதிவாதங்கள் அனைத்துமே இனி வரும் எம் அசைவுகளுக்கான அவசிய தேவைக்குரியவை. //

நிச்சயமாக அதனால் தான் என் கருத்துகளைக் கூறாமல் வெறுமனே இருக்கிறத்தில் வந்த ஆக்கங்களின் தொகுப்பாக கொடுத்தேன்.

//இருக்கிறம் செய்வது, இறக்குவானை நிர்ஷன் சொன்னதுபோல தனிநபர்களின் சிந்தனையோட்டத்துக்கு கிடைக்கும் ஊடக அங்கீகாரமா? அல்லது ரொஷானியும் தர்ஷியும் கொள்ளும் கோபத்துக்குரியதா? என்று சிந்திக்க வேண்டும்.//

இதனை இருக்கிறம் நிர்வாகம் கவனத்தில் எடுக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை இருக்கிறம் வெளிப்படையாக ஒரு அறிவித்தல் மூலம் வலைப் பதிவர்களிடமும் வலை பதியாத புதியவர்களிடமும் ஆக்கங்களைக் கோரலாம். இதனால் சில சந்தேகங்கள் நீங்கும்.

//ஏற்பாடாகியிருக்கும் வலைப் பதிவர்களுடனான சந்திப்பு, வளரும் இதழ் ஒன்றுக்கும் ஆற்றல் மிகு வலைப் பதிவர்களுக்குமான பரஸ்பர புரிந்துணர்வுகளை பெற்றுத் தரும் என நம்புகிறோம்.//

உண்மைதான் என்றைக்கும் பேச்சுவார்த்தைகள் மூலமான கருத்துப் பரிமாற்றங்கள் தான் வெற்றி அளிக்கும்.

//முடிவாய் ஒன்று சொல்ல வேண்டும்,'இருக்கிறம்' மீன் போல. கிணற்றில் வாழும் மீன்கள் அக்கிணற்றை சுத்தம் செய்வதற்காக பாசிகளைத் தினபதில்லை. அவற்றின் பசிக்காகவும்தான்.//

நல்லதொரு உதாரணம்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

உங்கள் கருத்துப் பகிர்வுகளைப் பார்வையிட்டேன்.... சிந்திக்க வேண்டிய விடயங்கள் பல.... என்ற போதும் ஒரு சில கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

//வலையுலகில் பதிவிடப்படும் ஆக்கங்களே இருக்கிறமை அலங்கரிக்கின்றன, தெரிந்தவர்களின் ஆக்கங்களே அலங்கரிக்கின்றன// என்னும் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது அதாவது ஒரு சஞ்சிகையோ, புத்தகமோ குறித்த சிலரை சார்ந்து வெளியிடப்படுவதில்லை பொது மக்களை இலக்காக கொண்டே தொடரப்படுகின்றது

//முகம் தெரியாத பலர் பதிவுலகில் இருக்கிறார்கள். அதேபோல் ஆக்கங்களையும் நேரில் கையளிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள்//
முகம் தெரியாத பலர் என நீங்களே கூறிவிட்டீர்கள் அவர்கள் முகத்தை வெளிச்சப்படுத்த வேண்டிய முதல் பொறுப்பு குறித்த அந்த நபருக்கே உள்ளது. அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள். வெற்றியடைவீர். (நீங்கள் முயற்சித்ததை விட ஒரு படி அதிகமாக வெளியிடப்பட்ட ஆக்கங்களின் உரிமையாளர்கள் முயற்சித்திருக்கலாம் என்பது என் கருத்து)

மேலும் குறித்த சிலரின் ஆக்கங்களே தொடர்ந்து வருவது வீழ்ச்சிக்கும், மக்களின் கவனத்தை வேறொன்றில் செலுத்துவதற்கும் காரணமாக அமைந்துவிடக்கூடும். (கவனத்தில் கொள்ள வேண்டும்)

மற்றும் இது போன்றதொரு பதிவை இட்டு வலப்பதிவர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கும் உங்களுக்கு எனது அன்பான நன்றிகள்

மொக்கைப் பதிவைத் தாண்டி சிறந்தப்பதிவொன்றை இட்டு சிறந்த பல கருத்துக்களை அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றிகள்

வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்





வாழ்த்துக்கள் அண்ணா!

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

//பெரும்பாலான பதிவர்கள் தங்கள் ஆத்ம திருப்திக்காக எழுதுகின்றார்களே ஒழிய பத்திரிகைகளில் வரவேண்டும் என எழுதுவதில்லை. ஆகவே தான் அவர்களால் தங்கள் ஆக்கங்களை அச்சு ஊடகங்களுக்கு அனுப்புவதில்லை.//

வலைப்பதிவுகளில் நாம் நமது கருத்தினை சுதந்திரமாக வெளியிடுகிறோம். ஆனால் அச்சு ஊடகங்களுக்கென தனியாக ஆக்கங்கள் எழுதும்போது பலவற்றை கவனத்திற்கொள்ள வேண்டும்.

//எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் இந்தஊக்குவிப்பு முறையற்றது.//

இருக்கிறம் சஞ்சிகையானது தனிப்பட்ட ஒரு குழுவுக்கு உரிய சஞ்சிகை அல்ல. பலவித எண்ணவோட்டங்கள் கொண்டவர்கள், பல்வேறு வயது சார்ந்தவர்கள் என வித்தியாசமான வாசகர்கள் இருக்கிறார்கள். ஆதலால் அவரவர்களுக்கு ஏற்றவகையிலும் பக்கம்சாராமலும் ஊடக தர்மத்திற்கு களங்கம் ஏற்படாமலும் வாசகர்களின் ஆக்கங்களை பிரசுரிக்கவேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு (அது தனிப்பட்ட கருத்துக்களை கொண்ட ஆக்கமாகவும் இருக்கலாம்).
ஆக்கங்கள் வெளிவரவில்லை என்ற ஆதங்கம் இருக்கலாம். மறுபுறம் அதற்கான காரணத்தையும் நாங்கள் தெரிந்துகொண்டு திருத்திக்கொள்ளுதல் அவசியமாகும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

நேற்றே வாசித்துவிட்டேன் பின்னூட்டம் போட நேரமிருக்கவில்லை, எனது கட்டுரை ஒன்றும் இருக்கிறத்தில் வெளியான செய்தி நீங்கள் தொலைபேசியில் கூறிதான் தெரியும். சந்தோஷமான விடயம், ஆனால் சம்பந்தப்பட்ட ஆக்கத்தை எழுதிய பதிவருக்கு இந்த ஆக்கத்தை அச்சு ஊடகத்தில் வெளியிட்டிருக்கிறோம் என்று ஒரு மின் மடலாவது அனுப்பியிருக்கலாம். நீங்கள் கூறியிருக்காவிடின் எனக்கு இந்த ஆக்கம் வெளியான விடயமே தெரிய வந்திருக்காது.

இதை நான் கும்மிக்காக சொல்லவில்லை. என்னை போன்று தங்களது ஆக்கம் வெளிவந்தது தெரியாத பதிவர்கள் இருக்கலாம் அவர்களுக்கும் சேர்த்து சொல்கிறேன்.

எனினும் எமது பதிவர்களுக்கு களம் அமைத்து கொடுக்க இருக்கும் “இருக்கிறம்” சஞ்சிகைக்கு வாழ்த்துக்கள்...

தகவல் தெரிவித்த உங்களுக்கு நன்றிகள்..

Unknown சொல்வது:

OH... such a good news to all our bloggers...
Congrats to all bloggers who got a place in some magazines...

I hope that this will encourge our bloggers very much...
Cheers...

KANA VARO சொல்வது:

வந்தியத்தேவன் சொல்வது:
//நான் வலைப் பதிவு எழுதுவது என் பொழுதுபோக்குக்காகவே ஒழிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரவேண்டும் என்பதற்காக அல்ல.//
"போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து" உங்கள் பெருந்தன்மை விளங்குகின்றது. இந்த உலகத்தில் ஆசையில்லாத மனிதா் நீங்களாகத் தான் இருக்கும்.

//இதுவரை இருக்கிறமோ அல்லது எந்தப் பத்திரிகையோ பதிவர்களிடம் இருந்து ஆக்கங்களை உத்தியோகபூர்வமாக கேட்கவில்லை.//
அடடே இந்த விசயம் நல்லாயிருக்கே! வாய்ப்பெல்லாம் உங்க கதவை வந்து தட்டணும் என்று நினைக்கிறீா்கள். இன்னும் எத்தனை போ் இப்படி இருக்கிறீங்க. ப்ளீஸ் சொல்லுங்க எல்லாரையும் என்னைப்போல ஆக்களுக்கு தெரியாது தானே.

//பெரும்பாலான பதிவர்கள் தங்கள் ஆத்ம திருப்திக்காக எழுதுகின்றார்களே ஒழிய பத்திரிகைகளில் வரவேண்டும் என எழுதுவதில்லை. ஆகவே தான் அவர்களால் தங்கள் ஆக்கங்களை அச்சு ஊடகங்களுக்கு அனுப்புவதில்லை.//
அனுப்பினால் உங்களுக்கு தானே நன்மை. என்பெயரா ஊடகத்தில வரபோகுது?... உங்க போ் தானே. புரிஞ்சுகுங்க

யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:
//ஆனால் சம்பந்தப்பட்ட ஆக்கத்தை எழுதிய பதிவருக்கு இந்த ஆக்கத்தை அச்சு ஊடகத்தில் வெளியிட்டிருக்கிறோம் என்று ஒரு மின் மடலாவது அனுப்பியிருக்கலாம்.//
இப்படி ஒரு பின்னுாட்டத்தை தான் எதிர்பார்த்தேன். இருக்கிறம் ஆசிரியா் பீடம் இதை கவனத்தில் எடுக்கவும். நன்மை செய்யப் போய் பகையை சந்திக்க வேண்டாம். நானும் "இருக்கிறத்திற்கு கட்டுரை அனுப்புங்கள்" என்று பதிவிட்டதை பலா் எனது சொந்த நன்மைக்காக சொல்கிறேன் என நினைத்துவிட்டார்கள்.

இவ்வாறான சம்பவங்களிற்காகத் தான் தா்ஷி, றொஷானி கோபப்பட்டார்கள் என நினைக்கின்றேன்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//VARO said...
வந்தியத்தேவன் சொல்வது:
//நான் வலைப் பதிவு எழுதுவது என் பொழுதுபோக்குக்காகவே ஒழிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரவேண்டும் என்பதற்காக அல்ல.//

"போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து" உங்கள் பெருந்தன்மை விளங்குகின்றது. இந்த உலகத்தில் ஆசையில்லாத மனிதா் நீங்களாகத் தான் இருக்கும்.//

இங்கு வலைப்பதிவு எழுதும் அனைவரும் தங்களது ஆக்கம் சஞ்சிகளில் வெளிவர வேண்டும் என எழுத வில்லை, நான் உட்பட எங்களது சொந்த கருத்துகளை வெளிக்காட்டும் ஒரு இடமாகவே வலைப்பதிவுகளை பார்க்கிறோம். இதற்காக நீங்கள் வந்தியை தனி மனித தாக்குதல் செய்வது சரியில்ல நண்பரே

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:
//ஆனால் சம்பந்தப்பட்ட ஆக்கத்தை எழுதிய பதிவருக்கு இந்த ஆக்கத்தை அச்சு ஊடகத்தில் வெளியிட்டிருக்கிறோம் என்று ஒரு மின் மடலாவது அனுப்பியிருக்கலாம்.//
இப்படி ஒரு பின்னுாட்டத்தை தான் எதிர்பார்த்தேன். இருக்கிறம் ஆசிரியா் பீடம் இதை கவனத்தில் எடுக்கவும். நன்மை செய்யப் போய் பகையை சந்திக்க வேண்டாம். நானும் "இருக்கிறத்திற்கு கட்டுரை அனுப்புங்கள்" என்று பதிவிட்டதை பலா் எனது சொந்த நன்மைக்காக சொல்கிறேன் என நினைத்துவிட்டார்கள்.//

நான் நன்மை செய்ததற்கு விமர்சிப்பதாக நினைக்க வேண்டாம், இதில் எந்த விதமான பகையும் இல்லை எல்லா விடயத்திலும் இருபக்க விமர்சனங்களும் உண்டு அதை புரிந்து கொள்ளுங்கள். நண்பர் வரோ நீங்களும் “இருக்கிறோம்” சஞ்சிகையின் உறுப்பினரா? அவ்வாறெனில் கூறுங்கள் ..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//அடடே இந்த விசயம் நல்லாயிருக்கே! வாய்ப்பெல்லாம் உங்க கதவை வந்து தட்டணும் என்று நினைக்கிறீா்கள். இன்னும் எத்தனை போ் இப்படி இருக்கிறீங்க. ப்ளீஸ் சொல்லுங்க எல்லாரையும் என்னைப்போல ஆக்களுக்கு தெரியாது தானே.//

இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், தெளிவாக சொல்லுங்கள் மறு மொழி கூறுகிறேன்

KANA VARO சொல்வது:

யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:
//இதற்காக நீங்கள் வந்தியை தனி மனித தாக்குதல் செய்வது சரியில்ல நண்பரே//
வந்தி அண்ணாவை தனிமனித தாக்குதல் நடத்தவில்லை நண்பரே! ஒரு பதிவை போட்டு முடிப்பதற்குள் நாம் படும் கஷ்டம் எமக்கு தெரியும். வந்தி அண்ணாவின் முயற்சி பதிவுலகில் முன்னுதாரணம். ஆதிரையுடைய வந்தி அண்ணாவின் நோ்காணல் மிகப் பொருத்தமானதே.

//நான் நன்மை செய்ததற்கு விமர்சிப்பதாக நினைக்க வேண்டாம், இதில் எந்த விதமான பகையும் இல்லை எல்லா விடயத்திலும் இருபக்க விமர்சனங்களும் உண்டு அதை புரிந்து கொள்ளுங்கள். //
புரிந்து கொண்டேன். என்னையும் பலா் புரிந்து கொள்கிறார்கள் இல்லை.
இதனை வாசியுங்கள்
http://www.facebook.com/groups.php?ref=sb#/group.php?gid=32791766180
(யோகாவினுடைய 2070ல் ஒரு நாள் என்ற கட்டுரை அபாரம். இக்கட்டுரை இன்னும் பலரைச்சென்றடைய வேண்டும். அப்பொழுது தான் சமுகத்தில் விழிப்புணா்வு ஏற்படும். இது போன்ற ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் தப்பில்லை).
குற்றம் கண்டுபிடிப்பது என் வேலை என்று நினைக்க வேண்டாம். உங்கள் திறமைக்கு இருக்கிறமின் அங்கீகாரமே இது. தொடருங்கள்.

//இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், தெளிவாக சொல்லுங்கள் மறு மொழி கூறுகிறேன்//
விதண்டாவதத்திற்காக சொல்லவில்லை. உண்மையாகவே எனக்கு தெரிந்த வலைப்பதிவா்களையும் எழுத்தாளா்களையும் இருக்கிறம் குழுமத்திடம் கொண்டு போய் சோ்க்கிறேன். களம் கிடைக்காத யாருக்கும் உதவுவேன். இனி கூறுங்கள் நண்பரே.

http://shayan2613.blogspot.com/2009/09/blog-post_12.html நல்லதுக்கு காலமில்லை நண்பரே.

விஜய் ரசிகன் என்று ஒருவா் வந்த வேகத்திலேயே போட்டார். என்னை பினாமியா எனக் கேட்கும் அந்த அனாமிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. அவா் இருக்கிறம் புத்தகம் வாசிப்பதில்லை என்பது மட்டும் தெளிவு. இத்துடன் நான் இங்கு நிறுத்திக்கொள்கின்றேன்.
நான் எனக்காக இந்தப்பின்னுாட்டங்களை இட்டதில்லை.
மேலதிகமாக ............ ஆசைப்படுவோர் varo.slcj09@gmail.com இற்கு அனுப்புங்கள்

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

// VARO said...

யோகாவினுடைய 2070ல் ஒரு நாள் என்ற கட்டுரை அபாரம். இக்கட்டுரை இன்னும் பலரைச்சென்றடைய வேண்டும். அப்பொழுது தான் சமுகத்தில் விழிப்புணா்வு ஏற்படும். இது போன்ற ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் தப்பில்லை).
குற்றம் கண்டுபிடிப்பது என் வேலை என்று நினைக்க வேண்டாம். உங்கள் திறமைக்கு இருக்கிறமின் அங்கீகாரமே இது. தொடருங்கள்.//

நான் உங்களை விமர்சிக்கவில்லை நண்பரே. நான் கூற வந்தது, எனது ஆக்கம் இருக்கிறமில் வெளிவந்தது மகிழ்ச்சியான விடயமே, ஆனாலும் அது சம்பந்தப்பட்ட நானே இது வரை அந்த ஆக்கத்தை பார்க்கவில்லை. எனது ஆக்கம் வெளியானதும் கூட தெரியாது. அதை எழுதியது யார் என போட்டிருக்கிறார்கள் என கூட தெரியாது என்னுமிடத்து எனது கூற்று நியாயமே

இன்பரூபன் சொல்வது:

வந்தியத்தேவன் அவர்களே, இந்த வரோ ஒரு குறுக்குவழிப் பிரபல்யப் பிரியன் என்று புரிகிறது. பல வலைப்பதிவுகளிலும் புகுந்து தன் தனிப்பட்ட ஆசைகள்,கருத்துக்களை எல்லாம் திணிப்பதில் மிக்க கெட்டிக்காரர்.
விஜயை முதலில் விற்றார்.இப்போது இருக்கிறம். ம்ம் விக்கட்டு,விக்கட்டும்.
தயானந்தாவே அடக்கி வாசிக்கும்போது இந்த வால் என் துள்ளுதோ தெரியேல்லை.

நீங்கள் சொன்னது போல வலைப்பதிவில் இருந்து எடுத்தால் அந்த வலைப்பதிவு முகவரியை கட்டாயம் பிரசுரிக்கவே வேண்டும்.
இருக்கிறமுக்காக பிரத்தியேகமாக எழுதினால் அது வேறு.

எனினும் இருக்கிறமின் முயற்சிக்கு ஆசிரியர் தயானந்தா அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

கீழை ராஸா சொல்வது:

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...துபாயில் இந்த இதழ் கிடைக்க வாய்ப்புள்ளதா...?இல்லை என்றால் இந்த இதழின் PDF வடிவம் கிடைக்க உதவ முடியுமா?

architectraza@gmail.com

இருக்கிறம் இதழ் ஆசிரியருக்கு

பதிவர்களின் சிறந்த பதிவுகளை தங்கள் இதழில் எழுத்து வடிவில் கொண்டுவருவது பாராட்டத்தக்க பணிதான்...அதற்கு முன் சம்பந்த பட்டவர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பதில்லை குறைந்த பட்சம் அவர்களுக்கு தெரியப்படுத்தவாவது செய்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

இருந்தாலும் தங்களின் இதழில் என் படைப்பையும் இடம்பெற செய்தமைக்கு மிக்க நன்றி.