நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் வெளிவந்த சாகசப்(Adventure) படம். இயற்கையில் அழகான கடற்கரையில் தன் ராட்சியத்தை அமைத்த இயக்குனர் ஜனநாதன் இம்முறை காட்டுக்குள் ராட்சியம் நடத்தியிருக்கின்றார்.
கதை :
ஜெயம் ரவி ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த காட்டு இலகா அதிகாரி, அவரின் கீழ் பயிற்சி பெறும் ஐந்து அழகிய பெண்கள், ரவியின் மேலதிகாரி பொன்வண்ணன். ரவியும் அந்த 5 பெண்களும் காட்டினுள் பயிற்சிக்காகச் சென்றபோது 16 வெள்ளைக்காரத் தீவிரவாதிகளைக் காண்கின்றார்கள், அவர்கள் இந்தியா ஏவும் ராக்கெட்டை அழிக்க வருகின்றார்கள், அந்த தீவிரவாதிகள் ராக்கெட்டை அழித்தார்களா? ரவிக்கு என்ன நடந்தது? 5 பெண்களும் என்ன ஆனார்கள் என்பதை முற்பாதியில் நொண்டியடித்து பிற்பாதியில் ராக்கெட் வேகத்தில் சொல்லும் கதை.
திரைக்கதை :
முதல்பாதியில் அடங்காப்பிடாரிகளான 5 பெண்களும் ரவியைப் படுத்துப் பாடுகளையும் பொன்வண்ணன் அவரை சாதீய ரீதியில் திட்டும் காட்சிகளிலும் திரைக்கதை கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் காட்டில் நடக்கும் காட்சிகளில் கைதட்டுவைக்கின்றது. குறிப்பாக முதல் 2 தீவிரவாதிகளையும் கொல்வதற்க்கு ரவி செய்யும் உத்திகளும் அவருக்கு உறுதுணையான பெண்களின் உதவிகளும் கலக்கல். அதே நேரம் கிளைமாக்ஸ் காட்சியில் இராட்சத உருவம் கொண்ட வில்லனுடன் ரவி மோதும் காட்சிகளும் பெண்களை துர்க்கை, காளி, பராசக்தி என விழித்து இடம் பெறும் பாடலும் சாமானிய சினிமாத்தனமாக இருந்தது.
வசனம் :
ஜனநாதன் தன்னுடைய வசனங்களினால் பல இடங்களில் பொதுவுடமைக் கருத்துகளைத் தூவுகின்றார். இரட்டை அர்த்த வசனங்களை விட்டுவைத்த தணிக்கை குழு சாதீய ரீதியிலான வசனங்களை ஏன் வெட்டினார்களோ தெரியாது? இப்படியான காட்சிகள் வசனங்கள் மூலம் சாதீக் கொடுமைகளை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என உயர்சாதித் தணிக்கைக் குழுவினர் எண்ணியிருந்தனரோ தெரியவில்லை ( தணிக்கைக் குழுவில் இருப்பவர்கள் உயர்சாதியினர் என நண்பர் ஒருவர் தெரிவித்தார்).
இயக்கம் :
இயற்கையில் காலடி எடுத்து வைத்த ஜனநாதன் முதல்படத்தில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தவர், பின்னர் ஈயில் மருத்துவ சீர்கேடுகளை ஒரு கைபார்த்தவர் இம்முறை தீவிரவாதத்தைக் கையிலெடுத்திருக்கின்றார். ஆனால் முதல் இரண்டு படங்களிலும் முகம் சுழிக்காமல் பார்க்கச் செய்தவர் இந்தப் படத்தில் அதிகமான இரட்டை அர்த்த வசனங்களும் பெண்னொருவரின் ஜட்டியை அவரின் நண்பர்கள் கழட்டுவது, அரைகுறை ஆடைகளுடன் பெரும்பாலும் இரவு உடைகளுடன் மாணவிகளை உலாவவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஜெயம் ரவி :
பெரும்பாலும் ரீமேக் படங்களில் கஸ்டப்படாமல் நடித்துவந்த ஜெயம் ரவிக்கு இந்தப் படம் நல்ல பெயரை நிச்சயம் கொடுக்கும். தன்னை கேவலப்படுத்தும் மாணவிகளிடமும் சரி, மேலதிகாரியிடமும் சரி தன் கோபத்தைக் காட்டாமல் மிகவும் சாந்தமாக இருந்தவர், காட்டில் மரங்களில் ஏறுவதிலும் மலைகளில் ஏறுவதிலும் காடுகளுடன் தனக்கு அதிகம் பரிச்சயம் இருப்பதுபோல் செய்துகாட்டியுள்ளார். அத்துடன் கதாநாயகி இல்லாமல் வளர்ந்துவரும் நடிகர் ஒருவர் நடிக்க ஒப்புக்கொண்டமையே பெரிய விடயம்.
கதாநாயகிகள் :
யாரென்றே அறிமுகம் இல்லாத 5 பெண்கள் தான் படத்தின் கதாநாயகிகள். அஜிதா என்ற பாத்திரத்தில் வரும் பெண் தன்னுடைய பங்கை நன்றாகச் செய்திருக்கின்றார். ஏனையவர்கள் முதல் பாதியில் ரவியை சீண்டுவதும் இரவு ஆடைகளுடன் நடமாடுவதும் என்றிருந்தாலும் இறுதிச் சண்டைக் காட்சியில் விஜயசாந்திபோல் செய்ய முயற்சி செய்திருக்கின்றார்கள். கொஞ்சம் தெரிந்த பழகிய முகங்களைப் போட்டிருக்கலாம்.
வெள்ளைக்கார வில்லன் :
ஜிம் பாடியை விட இரண்டு மடங்கு பெரிதான உடலுடன் தோன்றும் வெள்ளைக்கார வில்லன் பெரும்பாலும் சண்டைதான் போடுகின்றாரே ஒழிய அவருக்கு நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் மனிசன் அநாயாசமாக சண்டைபோடுகின்றார், சுடுகின்றார், குத்துகின்றார்.
பொன்வண்ணன் :
ரவியின் மேலதிகாரியாக அடிக்கடி ரவியை சாதீய ரீதியில் தாக்கிக்கொண்டு பின்னர் ரவி செய்த செயலைத் தான் தான் செய்தது எனச் சொல்லும் நியமான மேலதிகாரி வேடம். ஏற்கனவே அஞ்சாதேயில் பார்த்த வேடம் போல் இருந்தாலும் சிறப்பாகவே செய்திருக்கின்றார்.
ஒளிப்பதிவு :
படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் சதீஸ்குமார்.அடர்ந்த காடுகள், மலைகள், அருவிகள், ஆறு, பள்ளத்தாக்கு என சகல இயற்கைகளையும் நேரில் பார்ப்பதுபோன்ற தெளிவான ஒளிப்பதிவு.
இசை :
வித்தியாசகரின் இசையில் ஒரு பாடல் கேட்கும் தரமாக இருக்கின்றது. ஏனைய பாடல்கள் இடைச் செருகல்கள் தான். பின்னணி இசை சுமார்தான். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
படத்தொகுப்பு :
V.T.விஜயன் ஆரம்பக் காட்சிகள் சிலவற்றிலும் சில சண்டைக்காட்சிகளிலும் கத்திரி வைத்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும்.
நிறைவுகள்
1. நீண்ட நாளின் பின்னர் நல்லதொரு படம்
2. ஜெயம் ரவியின் நடிப்பு
3. இயக்கம், சில இடங்களில் வசனங்கள்
4. ஒளிப்பதிவு
குறைகள்
1. ஜெயம் ரவியே அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என சொல்வது.
2. பல இடங்களில் லொஜிக் மீறல் அதிலும் ஜெயம் ரவி வெள்ளைக்காரர்கள் ராக்கட்டைத் தாக்கத்தான் வருகின்றார்கள் என எப்படிக் கண்டுபிடித்தார்?
3. இரட்டை அர்த்த வசனங்களும் மாணவிகள் விடுதி லூட்டிகள்
4. 5 பெண்களின் பாத்திரத்தையும் ஒரே மாதிரிக் காட்டியது.
5. பாடல்கள், இசை.
சில பல குறைகள் இருந்தாலும் பார்க்ககூடிய நல்லதொருபடம.
பேராண்மை - பெருமை
பின்குறிப்பு : நான் ஒரு பாடாவதித் தியேட்டரில் தான் படம் பார்த்தேன். (அங்கேதான் வெளியிட்டிருக்கின்றார்க்ள்), சீட் எல்லாம் கிழிந்த நிலையில் தியேட்டர் நிர்வாகம் சீட்டுகளை மாற்றாவிட்டால் நட்டத்தில் தான் ஓடவேண்டும்
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
7 கருத்துக் கூறியவர்கள்:
//இந்தப் படத்தில் அதிகமான இரட்டை அர்த்த வசனங்களும் பெண்னொருவரின் ஜட்டியை அவரின் நண்பர்கள் கழட்டுவது, அரைகுறை ஆடைகளுடன் பெரும்பாலும் இரவு உடைகளுடன் மாணவிகளை உலாவவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
//
உபயம்: சன் பிக்ஸர்ஸ் கலாநிதி மாறன்
"ரீமேக் ரவி" க்கு யாராவது வாய்ஸ் கொடுத்திருக்கலாம். உடலுக்கேற்ற வாய்ஸ் இல்லை. சின்னப்பசங்க சண்டைபோடும் போது, கோபமாக பேசும்போது எப்படி இருக்குமோ அப்படித்தான் இவரின் வாய்ஸ் உள்ளது.
பேராண்மை பார்க்க சொல்லுறீங்க, கண்டிக்கு படம் வந்தால் பார்ப்போம்..
பார்க்கத்தான் வேண்டும். பார்க்கலாம்.
// நான் ஒரு பாடாவதித் தியேட்டரில் தான் படம் பார்த்தேன். (அங்கேதான் வெளியிட்டிருக்கின்றார்க்ள்), சீட் எல்லாம் கிழிந்த நிலையில் தியேட்டர் நிர்வாகம் சீட்டுகளை மாற்றாவிட்டால் நட்டத்தில் தான் ஓடவேண்டும்//
பார்க்கிங் வசதியுடன் நல்ல இடத்திலும் உள்ளது. கொஞ்சம் செலவளித்தால் நல்ல எதிர்காலம் நிச்சயம்.
பேராண்மை பார்க்கப் போறேங்கோ……….. இந்த பின்னூட்டம் எழுதிவிட்டு றொக்சிக்கு போறேன். அப்ப படம் பார்த்திட்டு வந்து கருத்தை விரிவாக சொல்லுகிறேன்.
:-))) எது அந்த தியேட்டர்...?
அவ்வப்போது இம்மாதிரி பண்டிகைகள் வந்தால்தான் படம் பார்ப்பது வழக்கம். என்ன செய்வது இங்கு கண்டியில் ஆதவந்தான் போட்டார்கள்.. உன்னைப் போல் ஒருவன் பார்க்கச் சென்ற போது ஆதவன் trailer பார்த்த அனுபவத்தால் இந்த முறை தீபாவளி புதுப் படம் இல்லாமலே போய் விட்டது.
உங்கள் விமர்சனம் நன்றாய் உள்ளது.
Post a Comment