சென்ற வருடம் நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த காலத்தில் "உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி" என்ற தலைப்பில் நுனிப்புல் மேய்ந்த விடயம் இன்றைக்கு நண்பர் சந்ருவினால் பரபரப்பாக எழுதப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?.
ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா..
அவருக்கு பின்னூட்டத்தில் சில விடயங்கள் சொல்லியிருந்தாலும் ஒரு பதிவுமூலம் அவருக்கும் ஏனைய ஊடகவியளாலர்களுக்கும் ஊடகங்களில் நடக்கும் தமிழ்மொழிக் கொலைகள் பற்றிய விளக்கங்களை கொடுக்கமுயற்சி செய்கிறேன்.
ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்கவேண்டும் என்பதே காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கொள்ளும் ஒரு தந்திரம். ஏனைய மொழி பேசுபவர்களுக்குள்ள மொழிப்பற்று ஏனோ தமிழனுக்கு இல்லை, இதனால் அவனின் மொழியை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது.
ஒருகாலத்தில் இந்திய இலத்திரனியல் ஊடகங்களினால் கொல்லப்பட்ட நம்மொழி இன்றைக்கு நமது ஊடகங்களினாலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறுகிறது. ஆகவே இந்திய ஊடகங்களைச் சாடுவதற்க்கு முன்னர் எங்கள் பக்கமுள்ள குப்பைகளை களையவேண்டும்.
பலதாசப்பதங்களாக வானொலி உலகில் கொடிகட்டுப்பறந்த வானொலியென்றால் அது இலங்கை வானொலிதான். இலங்கை வானொலியின் தமிழைக்க்கேட்டு தன் மொழி அறிவை வளர்த்ததாக ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தெரிவித்திருந்தார். அமரர்.எஸ்.கே.பரா, திரு.அப்துல் ஹமீத், திருமதி.இராஜேஸ்வரி சண்முகம், திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்,(சில பெயர்கள் மறந்துபோய்விட்டன) எனப் பலரால் கட்டிக்காத்த இலங்கை வானொலி இன்றைக்கு தனியார் வானொலிகளின் போட்டியால் தன் சுயத்தை இழந்துவிட்டது என்றே குறிப்பிடலாம்.
90களின் ஆரம்பகாலத்தில் எவ்எம் 99 என்ற பெயரில் ஒரு தனியார் வானொலி மக்களிடையே பிரபலமானது. கொழும்பையும் அதனைச்சூழவுள்ள இடங்களிலும் மாத்திரம் அந்த ஒலிபரப்பு கேட்ககூடியாதாக இருந்தது. பின்னர் 98களின் நடுப்பகுதியில் ஒரு பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பமாகி ஜூலையில் 24மணி நேர சேவையாக சூரியன் எவ்எம் தொடங்கியது. ஒரு இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு ஆரம்பமான சூரியன் பட்டிதொட்டியயெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. வரட்சியாக இருந்த வானொலி நேயர்களுக்கு சூரியன் வரப்பிரசாதமாக மாறியது. பேச்சுதமிழில் அறிவுப்புகள் நேயர்களுடனான நேரடி தொலைபேசி அழைப்பு கலந்துரையாடல்கள் என சூரியன் வெற்றிக்கொடிநாட்டிக்கொண்டிருந்தபோது அதே ஆண்டு சக்தி எவ்எம் என்ற எதிர்க்கடை பிரபல அறிவிப்பாளரும் நீலாவணன் என்ற ஈழத்து கவிதைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய கவிஞரின்(இவர் பற்றிய ஒரு சர்ச்சை அடுத்த பதிவில்)மகனான எழில்வேந்தன் தலைமையில் இன்னொரு இளைஞர்கள் பட்டாளத்துடன் தொடங்கப்பட்டது. ரஜனி கமல், விஜய் அஜித் போல் சக்தி என்றால் சூரியன் என்ற போட்டி வானொலிகளுக்கிடையே மட்டுமல்ல நேயர்களுக்கிடையில் கூட ஏற்பட்டது.
சக்தியில் காலை வணக்கம் தாயகத்தில் பல அறிவுபூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். திரு.எழில்வேந்தனுடன் லோஷன் என்ற புதியவர்(எமக்கு பழையவர்), இலக்ஷ்மன்(அஞ்சனன்), ரமணிதரன்(சிலவேளைகளில்) போன்றவர்கள் இணைந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசென்றார்கள்.
சிலநாட்களில் இலங்கையின் பிரபல நிறுவனமான ஈஏபியினால் சுவர்ணஒலி என்ற வானொலி நம்நாட்டு அறிவிப்பாளர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்தியாவிலிருந்து யுகேந்திரனையும்(தற்போதைய யுகேந்திரன் வாசுதேவன் நாய்ர்)மலேசியாவிலிருந்து மாலினியையும் ((தற்போதைய மாலினி யுகேந்திரன் )கொண்டு நிகழ்ச்சி படைத்தார்கள். இந்த வானொலியில் தான் முதன்முதலில் மொழிக் கொலைகள் ஆரம்பித்தன எனலாம். சிலகாலத்தில் இந்த வானொலி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தவானொலியால் யுகேந்திரன் மாலினி திருமணம் மட்டும் நடந்த ஒரு நல்லவிடயமாகும்.
சில காலங்களுக்கு முன்னர் இன்னொரு வானொலியின் ஆட்சி மாற்றம் காரணமாக வெற்றி என்ற பெயரில் இன்னொரு புதிய வானொலி அறிமுகமானது. இவர்கள் பெரும்பாலும் நல்ல நிகழ்ச்சிகளே செய்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளினதும் நேரம் அதிகம். சில நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 4 மணித்தியாலம். ஆகக்குறைந்தது 2 மணித்தியாலம் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒரு நேயரால் ஓரளவு கேட்கலாம் ஆனால் 4 மணித்தியாலம் என்றால் அவரால் நிச்சயமாக முழு நிகழ்ச்சியையும் கேட்கமுடியாது. இது நேயர்களை தங்கள் வானொலியுடன் முற்றுமுழுதாக இருக்கவைக்கும் உத்தி என்றாலும் சிலவேளைகளில் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கோ அல்லது ஒருகதைக்கோ விடை தெரிய நிகழ்ச்சி முடிவு மட்டும் இருக்கவேண்டும் என்பது வேலைப்பளு உள்ளவர்களுக்கு கஸ்டமான காரியம்.
கால மாற்றமும் கேபிள் டிவிக்களின் அதிகரித்த வருகையும் அந்த தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் பாணியும் நம்மவர்களையும் தொத்திக்கொண்டது. இதனால் தமிழ் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. யாருக்காக இந்தப்பாடலை கேட்க விரும்புகிறீர்கள் போய் யாருக்கு டெடிக்கேட் செய்ய விரும்புகிறீர்கள் என தமிங்கிலீஸ் பெரும்பாலனவரது நுனிநாக்கில் விளையாடத்தொடங்கியது.
இது சிலவேளைகளில் ஆங்கிலம் பெரிதாக தெரியாத நேயர்களைப் பாதிக்கத் தொடங்கியது. அறிவிப்பாளர் ஆங்கிலத்தில் பேச நேயரோ என்னசெய்வது என்ற அறியாமல் தட்டுத்தடுமாறுவார்.
சில இடங்களில் நாம் தமிழ்மொழிக்குள் நுழைந்த மாற்றுமொழிகளுடன் ஒத்துப்போவதில் தப்பில்லை. அதற்காக நிகழ்ச்சியின் பெயரில் தொடங்கி அறிவிப்புவரை ஆங்கிலம் தேவையா? பெரும்பான்மை இன வானொலிகளைக்கேட்டுப்பாருங்கள் அவர்கள் தங்கள் மொழியிலையே கூடுதலாக உரையாடுவார்கள்.
தமிழை வளர்க்கின்றேன் என்றுவிட்டு ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதும் ஆங்கிலத்தை வேண்டுமென்றே திணிப்பதும் தமிழ்மொழி அபிமானிகளிடம் இவர்கள் மேல் கசப்பையே ஏற்படுத்துகின்றது.
முன்னைய நாட்களில் நேயர்களின் கடிதங்களை நிகழ்ச்சி ஒன்றில் சேர்த்துக்கொள்வார்கள் அதில் நேயர்கள் கூறும் விமர்சனங்களை வாசித்து தங்கள் கருத்தை வானொலி அறிவிப்பாளரோ அல்லது நிகழ்ச்சிக்கு பொறுப்பானவரோ கூறுவார். ஆனால் இன்றைக்கு அப்படியான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. தினக்குரல் என்ற ஒரே ஒரு பத்திரிகையில் முழுப்பக்கத்தை இலத்திரனியல் ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கினாலும் சில பந்திகள் மட்டும் நம் நாட்டு ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கப்படுகிறது. ஏனைய இடத்தில் தொல்காப்பியனின் பேட்டியோ இல்லை ராதிகா புதிய நாடகத்தில் நடிக்கும் செய்தியோ இடம் பெறும்.
அண்மையில் இடம்பெற்ற ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் அழகாக நிகழ்ச்சியை அழகாகத் தமிழில் தொகுத்தளித்தார். இதுவரை ஆங்கிலத்தில் தொகுப்புகளைக்கெட்டுப் புளித்த அந்த இளம்பாடகர்கள் நிச்சயம் இந்த தொகுப்பாளரையும் அவரது தமிழையும் வியந்திருப்பார்கள்.
ஒரு தொலைக்காட்சியின் குறைகளை ஒவ்வொருவாரமும் யாராவது குறிப்பிடுவார்கள் ஆனால் அவர்கள் மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வானொலி தொலைக்காட்சி என்று நாம் குற்றம் சுமத்த விரும்பினால் இந்தப் பதிவு பாகம் பாகமாக வரவேண்டும். இவர்களிடம் எந்த நிறைகளும் இல்லையா எனக்கேட்டால் நிச்சயமாக நிறைய இருக்கிறது ஆனால் அதற்க்கு முன்னர் இவர்கள் தங்கள் குறைகளை குறிப்பாக மொழிக்கொலையை நிறுத்தினால் இலங்கை வானொலிகள் சூரிய சக்தியுடன் சேர்ந்து தென்றலாக ஒலித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
13 கருத்துக் கூறியவர்கள்:
உங்கள் பதிவுகள் வரவர உண்மைத்தமிழனின் பாணியில் இருக்கிறது. நல்லதொரு இடுகை வானொலிகளின் ஆரம்ப வரலாற்றை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.
அன்புடன்
வர்மா
நல்லதொரு பதிவு நண்பரே. நான் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்பதனால் நான் வானொலிகளின் பெயரை விட்டு விடுகிறேன். என்னுடைய கேள்விகளும் என் தமிழை இந்த அறிவிப்பாளர்கள் கொலை செய்கின்றார்கள் என்பதே.
காலப்போக்கில் எமது தமிழ் மொழி அழிந்து விடும் போல் இருக்கிறது. இவற்றை சுட்டிக்காட்டியும் கூட எவரும் திருந்துவதாக இல்லை. இந்த இடத்திலே பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சில பத்திரிகைகள் சந்சிகைகளும் குறிப்பிட்ட வானொலி தொலைக்காட்சிகளோடு ஒத்து ஊதுகின்ற, அவர்களின் புகழ் பாடுகின்றனவாகவே இருக்கின்றன. நான் வானொலி தொலைக்காட்சிகளிலே தமிழ் மொழி கொலை செய்யப்படுதல் தொடர்பாக பல பத்திரிகைகள், சந்சிகைகளுக்கு பல கட்டுரைகளை அனுப்பினேன். எதுவும் அச்சில் ஏறவில்லை
அவர்களிடம் கேட்டபோது கிடைக்கவில்லை என்று பதில் வந்தது மீண்டும் அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கலாசாரம் மாறி தமிழை வளர்க்கின்ற ஒரு சமுகம் வர வேண்டும் என்பதே எனது அவா.
//வர்மா said...
உங்கள் பதிவுகள் வரவர உண்மைத்தமிழனின் பாணியில் இருக்கிறது. நல்லதொரு இடுகை வானொலிகளின் ஆரம்ப வரலாற்றை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.//
வருகைக்கு நன்றிகள் வர்மா. உண்மைத்தமிழன் போல் எழுதுவது என்பது கஸ்டமான வேலை வேண்டுமென்றால் அவரைப்போல் நீண்ண்ண்ட பதிவுகள் இடலாம்.
வானொலிகளின் வரலாற்றை ஓரளவு சொல்லியிருக்கிறேன். இதில் கொடுமை என்னவென்றால் பல ஊடகவியளாலர்கள் வலைப்பதிவு செய்கிறார்கள் ஓரிருவரைத் தவிர ஏனையவர்கள் என்னுடையதையோ அல்லது சந்ருவினுடையதற்க்கோ இதுவரை பதில் சொல்லவில்லை.
//சந்ரு said...
நல்லதொரு பதிவு நண்பரே. நான் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்பதனால் நான் வானொலிகளின் பெயரை விட்டு விடுகிறேன். என்னுடைய கேள்விகளும் என் தமிழை இந்த அறிவிப்பாளர்கள் கொலை செய்கின்றார்கள் என்பதே. //
ஆமாம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என்பது தெரிந்தபடியால் தான் உங்கள் பதிவுகளில் நேரடியாக நான் எந்த நிறுவனத்தையும் சுட்டிக்காட்டவில்லை. அது என் விமர்சனம் என்றாலும் உங்கள் பதிவில் இருக்கும்போது அது உங்கள் கருத்தாகவும் மாற வாய்ப்புகள் உண்டு.
தமிழைமட்டுமல்ல ஆங்கிலத்தையும் குத்திகுதறுகிறார்கள். இதில் ஒரு கொடுமை ஒரு அறிவிப்பாளர் ஆங்கிலத்திலும் ஏதோ வலைஎழுதுகிறார். தமிழில் எழுதியவற்றிற்க்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார். எத்தனை தமிழர் அல்லாதோர் இவரது வலையைப் படிக்கப்போகின்றார்கள். இப்போது விளம்பரமோகம் சிலரைப் பிடித்து ஆட்டுகின்றது.
முன்னாள் மூத்த அறிவிப்பாளர்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் வாழ்ந்துகாட்டினார்கள் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள் ஆனால் ஒரு சில இன்றையவர்கள் தங்களைச் சினிமா நடிகர் நடிகையர் ரேஞ்சுக்கு நினைத்து பொது இடங்களில் பந்தா பண்ணுகின்றார்கள்.
சில விடலைகளினதும் விசிலடிச்சான் குஞ்சுகளினதும் ஆதரவில் இவர்கள் தங்கள் பந்தாவைக் காட்டுகிறார்கள். முன்னர் ஒரு அறிவிப்பாளர் இருந்தார் அவர் ஓரிடமும் தனித்து திரியமாட்டார் நாலைஞ்சு பொடியளுடன் பெரிய தாதா போல் செல்வார்.
எங்கள்ளுக்கும் சொல்ல வேண்டும் என்கிறதை சொல்லி விட்டீர்கள், ஆனால் இன்னும் நல்ல அழகு தமிழில் நிகழ்ச்சி படைக்கும் லோஷன் போன்றவர்கள் இருக்கின்றார்கள். நான் கலையில் லோஷனின் நிகழ்ச்சியையும் இரவில் "மாயாவின் மறுபக்கம்" என்னும் நிகழ்ச்சியையும் கட்டாயம் கேட்பேன், இரண்டுக்கும் காரணம் ஆங்கிலம் கலக்காத தமிழ், மாயா மனித உணர்வுகளை அழகு தமிழில் கூற அதை கேட்பதே மிக இனிமையாக இருக்கும், லோஷன் உலக நடப்புகளை, விளையாட்டு நிகழ்ச்சிகளை தமிழிலே தருவது சிறப்பு, ஒரு விஷயம் இந்திய ஊடகங்களுடன் ஒப்பிடும் பொது நம்ம ஊடகங்கள் எவ்வளவோ பரவாயில்லை என கூறலாம். முக்கியமா இந்திய இசை அலைவரிசைகள் செய்யும் தமிழ் கொலைகள் ஏராளம் ஏராளம்.. ஒரு முக்கிய சந்தேகம் ஆமா அவங்க பேசுறது தமிழா?
//யோ (Yoga) said...
எங்கள்ளுக்கும் சொல்ல வேண்டும் என்கிறதை சொல்லி விட்டீர்கள், ஆனால் இன்னும் நல்ல அழகு தமிழில் நிகழ்ச்சி படைக்கும் லோஷன் போன்றவர்கள் இருக்கின்றார்கள். நான் கலையில் லோஷனின் நிகழ்ச்சியையும் இரவில் "மாயாவின் மறுபக்கம்" என்னும் நிகழ்ச்சியையும் கட்டாயம் கேட்பேன், இரண்டுக்கும் காரணம் ஆங்கிலம் கலக்காத தமிழ், மாயா மனித உணர்வுகளை அழகு தமிழில் கூற அதை கேட்பதே மிக இனிமையாக இருக்கும், லோஷன் உலக நடப்புகளை, விளையாட்டு நிகழ்ச்சிகளை தமிழிலே தருவது சிறப்பு, ஒரு விஷயம் இந்திய ஊடகங்களுடன் ஒப்பிடும் பொது நம்ம ஊடகங்கள் எவ்வளவோ பரவாயில்லை என கூறலாம். முக்கியமா இந்திய இசை அலைவரிசைகள் செய்யும் தமிழ் கொலைகள் ஏராளம் ஏராளம்.. ஒரு முக்கிய சந்தேகம் ஆமா அவங்க பேசுறது தமிழா?//
யோகா உங்கள் கருத்துக்கு நன்றிகள். லோஷன் போன்ற ஒருசிலர் மட்டும் தான் தமிழ்மொழியை தமிழகாக் உச்சரிக்கிறார்கள். ஒருகுடம் பாலுககு ஒரு துளி விஷம் என்பதுப்போல் இவர்கள் எவ்வளவுதான் நல்ல நிகழ்ச்சிகள் செய்தாலும் சில விஷங்களால் அனைத்தும் பாழாகின்றன.
இந்திய ஊடகங்கள் பற்றிப் பின்னர் பார்ப்போம். முதலில் நம் அழுக்கைப் பற்றிப் பேசிவிட்டு இந்திய ஊடகங்களைப் பார்ப்போம். இந்திய ஊடகங்களின் ஆக்கிரமிப்பினால் தான் பல அறிவிப்பாளினிகள் ஹேமா சிங்ஹாவாகவும் விஜய் தொலைக்காட்சி கவிதா, ரம்யா திவ்யதர்சினி போலவும் வான்கோழிகளாக மாறியுள்ளார்கள் இதில் கொடுமை என்னவென்றால் இந்த வான்கோழிகள் உடல் மொழியிலும் அவர்களைப் போல் ஈயடிச்சான் கொப்பியாக இருப்பது வேதனைக்குரியது.
இன்னொரு கேள்வி இந்தப்பதிவில் ஊடகங்களைப் பற்றி நான் எழுதியும் ஏன் இதுவரை சந்ருவைத் தவிர ஏனையவர்கள் பதில் தரவில்லை. பல நாடறிந்த ஊடகவியலாளர்கள் வலையிலும் இருக்கிறார்கள்.
கரடியாக நுளைவதற்கு மன்னிக்கவும்
மாயாபேசுவது தமிழா லகர,ழகர,ளகர அவர் வாயிலிருந்து தவறாக வருகிறது.
இன்னொரு கேள்வி இந்தப்பதிவில் ஊடகங்களைப் பற்றி நான் எழுதியும் ஏன் இதுவரை சந்ருவைத் தவிர ஏனையவர்கள் பதில் தரவில்லை. பல நாடறிந்த ஊடகவியலாளர்கள் வலையிலும் இருக்கிறார்கள்.//
நேற்று கொஞ்சம் வேலையாய் இருந்தேன்..
மற்றும்படி விமர்சனங்கள்,கருத்துக்களை நேர்மையாக எதிர்கொள்வதில் நான் என்றும் பின்னிற்பவன் கிடையாது.
//லோஷன் போன்ற ஒருசிலர் மட்டும் தான் தமிழ்மொழியை தமிழகாக் உச்சரிக்கிறார்கள்.//
பாராட்டுக்களுக்கு நன்றி..
சில குற்றச் சாட்டுக்களை ஏற்கிறேன்.. எனினும் என் சார்பான, ஒட்டுமொத்த ஒலிபரப்பாளர் சார்பான சில விளக்கங்கள் எனது சிங்கப்பூர் தொடர்கட்டுரை முடிந்த பிறகு வரும்.
உங்கள் வானொலிகள் பற்றிய வரலாற்று அறிவுக்கு வாழ்த்துக்கள்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் இருந்த காலம் தனி ஒரு அலைவரிசை.. அப்போது அது சேவை.. இப்போது அப்படியல்ல.. வியாபாரம்/போட்டி.. பணம் உழைக்க யுக்தியாகப் பல விஷயங்களினால் தான் இந்தப் பின்விளைவும்..
நான் பொறுப்பாளராக இருந்த,இருக்கும் காலங்களில் நான் சார்ந்திருந்த/சார்ந்துள்ள வானொலி நிகழ்ச்சிகளின் பெயர்கள் தனித் தமிழிலேயே இருந்தன/இருக்கின்றன.
பேச்சுத் தமிழில் கூட உச்சரிப்பில் மிகக் கவனமாய் இருக்கப் பழகியும் பழக்கியும் இருக்கிறேன்.
சில நிறுவனங்களில் சில கட்டுப்பாடுகள்,வித்தியாச அணுகுமுறைகள் இருக்கலாம்..
எனினும் நான் ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன்..
பதிவுகள் போடுகிறவர்கள் தனித் தமிழில் மட்டுமா எழுதுகிறீர்கள்?
எத்தனை பேர் ஆங்கிலம் கலந்து கொட்டி முழக்குகிறீர்கள்? (தேவை ஏற்படும்போது ஆங்கிலம் என்ற எங்கள் வானொலிகளின் தாத்பரியம் இங்கேயும் வருகிறதே..)
உங்கள்/எங்கள் எல்லோரது பதிவுகளிலும் காணப்படும் இலக்கண/இலக்கிய/வாக்கியப் பிழைகள் போலவே ஒளி/ஒலிபரப்பிலும் பிழைகள் வருகின்றன..
எத்தனை பேர் தவறுவிடாமல் பதிவுகள் இடுகிறோம்?
சினிமா/பத்திரிகைகள் தமிழை சிதைக்காததை ஒலிபரப்புக்கள் சிதைத்து விடும் என்று நினைக்கிறீர்களா? (ஒளிபரப்பை நான் விளக்கி விடுகிறேன்.. கொடுமை அது)
முழுமையான எனது பதில்கள் மற்றும் குமுறல்களை நான் தரவுள்ளேன்.. நண்பர்கள் காத்திருங்கள்..
எனினும் இந்த ஆரோக்கியமான விவாதம்/அலசலுக்கு வித்திட்ட சந்துரு, வந்தியத்தேவனுக்கு வாழ்த்துக்கள்..
//Anonymous said...
கரடியாக நுளைவதற்கு மன்னிக்கவும்
மாயாபேசுவது தமிழா லகர,ழகர,ளகர அவர் வாயிலிருந்து தவறாக வருகிறது.//
மாயா என்பவர்தான் இசைஇளவரசர்கள் என்ற நிகழ்ச்சியை மட்டமாகத் தொகுத்தளித்தவர்.
லோஷன் உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கு கொஞ்ச நேரத்தில் பதில் தருகின்றேன்.
//நேற்று கொஞ்சம் வேலையாய் இருந்தேன்..
மற்றும்படி விமர்சனங்கள்,கருத்துக்களை நேர்மையாக எதிர்கொள்வதில் நான் என்றும் பின்னிற்பவன் கிடையாது.//
உங்களைச் சொல்லவில்லை. வலையுலகிலும் பல ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்குத் தான் அந்தக்கேள்வி.
//சில குற்றச் சாட்டுக்களை ஏற்கிறேன்.. எனினும் என் சார்பான, ஒட்டுமொத்த ஒலிபரப்பாளர் சார்பான சில விளக்கங்கள் எனது சிங்கப்பூர் தொடர்கட்டுரை முடிந்த பிறகு வரும்.//
குற்றச்சாட்டுகளை ஏற்கவேண்டும் என்றில்லை ஆகக்குறைந்தது நீங்கள் பொறுப்பாக உள்ள வானொலியில் இவ்வாறான குறைகள் இருப்பின் அவற்றைக் குறைத்தால் ஏனையவர்களும் நிச்சயம் உங்களைப் பார்த்துத் திருந்துவார்கள்.
//இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் இருந்த காலம் தனி ஒரு அலைவரிசை.. அப்போது அது சேவை.. இப்போது அப்படியல்ல.. வியாபாரம்/போட்டி.. பணம் உழைக்க யுக்தியாகப் பல விஷயங்களினால் தான் இந்தப் பின்விளைவும்.. //
நிச்சயமாக இது போட்டி நிறைந்த சூழல் தான். விளம்பரதாரர்களைக் கவரவேண்டும் என்றால் சிலபல விட்டுக்கொடுப்புகளை கொடுக்கவேண்டும். அதே நேரம் இன்னொரு விடயத்தையும் மறக்ககூடாது ஒரு வானொலியின் நிகழ்ச்சி பிடிக்கவில்லையென்றால் உடனடியாக இன்னொரு வானொலிக்கு மாற்றவேண்டிய சூழலுக்கு நேயர்கள் தள்ளப்படுவார்கள். அதே நேரம் ஒவ்வொரு வானொலிக்கென்றும் ஒரு குறிப்பிட்ட நேயர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் என்றைக்கும் அந்த வானொலியை விட்டு மாறமாட்டார்கள்.
//நான் பொறுப்பாளராக இருந்த,இருக்கும் காலங்களில் நான் சார்ந்திருந்த/சார்ந்துள்ள வானொலி நிகழ்ச்சிகளின் பெயர்கள் தனித் தமிழிலேயே இருந்தன/இருக்கின்றன.//
தெரியும்.
//பதிவுகள் போடுகிறவர்கள் தனித் தமிழில் மட்டுமா எழுதுகிறீர்கள்?
எத்தனை பேர் ஆங்கிலம் கலந்து கொட்டி முழக்குகிறீர்கள்? (தேவை ஏற்படும்போது ஆங்கிலம் என்ற எங்கள் வானொலிகளின் தாத்பரியம் இங்கேயும் வருகிறதே..)//
லோஷன் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். நாங்கள் ஒன்றும் சிறப்புத்தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் அல்ல. ஏதோ எங்கள் பொழுதுபோக்கிற்க்கும் மனத் திருப்திக்கும் மற்றவர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றோம். விமர்சனம் சொல்பவர்கள் எல்லாம் சிறந்த விமர்சகராக இருக்ககூடாது. ஆனால் வானொலி அறிவிப்பாளர்கள் என நேர்முகத் தேர்வு வைத்து( சிலவேளைகளில்) குரல்த் தேர்வு வைத்துத் தானே ஆட்களை எடுக்கின்றீர்கள். அதில் சிறப்பாக பயிற்றப்பட்டவர்கள் தப்பு செய்வதைச் சுட்டுக்க்காட்டுவதில் தப்பில்லை.
தனித்தமிழில் பதிவு போடவேண்டும் என்பது அவரவர் தமிழ்ப் பற்றைப் பொறுத்தது. பெரும்பாலும் என்னுடைய பதிவுகளில் நான் ஆங்கிலம் கலப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே இங்கே நீங்கள் அரசியல்வாதிகள் போல் நீங்களும் குற்றம் செய்கிறீர்கள் என்று சொல்வது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கின்றது.
ஆனால் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் ழகர, லகர, ளகர விடயத்தில் கஸ்டப்படுகின்றார்கள். நாங்கள் இன்னொரு அப்துல் ஹமீத் போல் அவர்கள் பேசவேண்டும் என்று சொல்லவில்லை. ஆங்கிலம் கலக்காமல் முயற்சி செய்யுங்கள் என்றுதான் கேட்கின்றோம்.
//உங்கள்/எங்கள் எல்லோரது பதிவுகளிலும் காணப்படும் இலக்கண/இலக்கிய/வாக்கியப் பிழைகள் போலவே ஒளி/ஒலிபரப்பிலும் பிழைகள் வருகின்றன..
எத்தனை பேர் தவறுவிடாமல் பதிவுகள் இடுகிறோம்?//
மீண்டும் அதே ஆனை. இப்போ நீங்கள் ஒரிரு முறை விடும் இலக்கண இலக்கிய தவறுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலவேளைகளில் வாலி எழுதிய பாடலை வைரமுத்து எழுதியது என்பார்கள். அந்தத் தவறுகள் எல்லாம் பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஜெனீவாவை நாடு என்பதும் இந்திய மத்திய அரசுத் தேர்தலில் தமிழகத்திலிருந்து திமுக சார்பில் 21 அமைச்சர்கள் தெரிவானர்கள் (சிங்களத்தில் மந்திரித்துமா என்பதை அமைச்சர்கள் என்ற மொழிபெயர்த்த அந்த தொலைக்காட்சி மொழிபெயர்ப்பாளர் எவரோ)என்பதும் தகவல் பிழைகளாகவே மாறிவிடும்.
மீண்டும் முதல் கேள்விக்கு அளித்த பதில் நாங்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. இலக்கண இலக்கியப் பிழைகள் விடலாம். ஒரு சில எழுத்தாளர்கள் வலையில் எழுதுகின்றார்கள் அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை வைத்தால் அவர்களுக்கு வேண்டுமானல் இந்தக்கேள்வி பொருந்தும்.
இன்னொரு விடயம் நீங்களும் ஒரு வலைப்பதிவாளர்.
சினிமா/பத்திரிகைகள் தமிழை சிதைக்காததை ஒலிபரப்புக்கள் சிதைத்து விடும் என்று நினைக்கிறீர்களா? (ஒளிபரப்பை நான் விளக்கி விடுகிறேன்.. கொடுமை அது)
//சினிமா/பத்திரிகைகள் தமிழை சிதைக்காததை ஒலிபரப்புக்கள் சிதைத்து விடும் என்று நினைக்கிறீர்களா? (ஒளிபரப்பை நான் விளக்கி விடுகிறேன்.. கொடுமை அது)//
சினிமாவை விடுங்கள் அது தனி ஊடகம். அது பற்றிய சர்ச்சைகள் தினமும் எங்கேயாவது நடக்கும். ஆனால் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசிப்பது இன்றைய இளம் சமுதாயத்தினிடையே குறைந்துள்ளது. அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு சாதனங்களாக தொலைக்காட்சியும்,வானொலியும் தான் இருக்கின்றன.
உங்கள் பதில்களையும் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
//இலங்கை வானொலிகள் சூரிய சக்தியுடன் சேர்ந்து தென்றலாக ஒலித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.//
கலக்கல் வரிகள். எதாவது ஒரு நிகழ்ச்சியை எடுத்து விமர்சனம் செய்யலாமே?
Post a Comment