நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்



வலையுலக நண்பர்கள் அனைவருக்கு என் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.

சில நாட்களுக்கு வலையுலகில் என் பதிவுகளைக் (இல்லாவிட்டாலும் ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று)காணமுடியாது.

புதுவருடம் பிறந்து சில நாட்களின் பின்னர் புதிய அனுபவங்களுடன் உங்களைச் சந்திக்கின்றேன்.

நன்றி வணக்கம்.

நீச்சல் உடையில் பார்வதி ஓமணக்குட்டன்

இனிய நண்பர் ஒருவர் பார்வதி இந்தியா சார்பாக உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பார்வதி ஓமணக்குட்டனின் புகைப்படம் வலையில் பிரசுரிக்கவில்லை என ஆதங்கப்பட்டிருந்தார். அவரின் வேண்டுகோளிற்கிணங்க இந்தப் படம்.

யாராவது இதனை அகற்றவேண்டும் என்றால் அன்பாகச் சொல்லவும் இடுகை அகற்றப்படும்.

சச்சின் நடந்தது என்ன?

நேற்றைய சென்னை மேட்சில் இந்திய அணி சாதனை படைத்ததும் சச்சின் தனது 41 ஆவது சதத்தை அடித்ததும் பழைய கதைகளாகிவிட்டது. சச்சினின் சாதனைகளையோ திறமையையோ யாரும் குறைத்துமதிப்பிடமுடியாது.

அதே நேரம் நேற்றையபோட்டியில் ஒரு கட்டத்தில் யுவராஜ் 78 ஓட்டங்களும் சச்சின் 84 ஓட்டங்களும் பெற்றிருந்தார்கள். அணிக்கு வெற்றி பெறத் தேவையான‌ ஓட்ட எண்ணிக்கை 40. இருவரும் சதமடிக்க போதுமான ஓட்டங்கள். இருவரின் துரதிஷ்டமோ ஒரு பந்து லெக் பையாக 4 ஓட்டங்களை எடுத்துக்கொடுத்தது. யுவ்ராஜ் தன் பங்கிற்க்கு ஒன்று இரண்டு என ஓட்டங்கள் எடுக்கின்றார். அமைதியாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் திடீரென பனேசரின் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி தன் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டிருக்கின்றார்.

சச்சின் 98 ஓட்டங்கள் எதிர்முனையில் யுவராஜ். சச்சின் யுவராஜிடம் சென்று ஏதோ சொல்கின்றார். அடுத்த 4 பந்துகளை யுவராஜ் மெல்லத் தடுத்து ஆடுகின்றார். அடுத்த ஓவர் முதல் பந்தில் சச்சின் ஒரு ஓட்டம் எடுத்து 99ல் நிற்கின்றார் யுவராஜோ மீண்டும் தடுப்பாட்டம் ஆடுகின்றார். வெற்றிக்குத் தேவையான ஓட்டங்கள் 4. மீண்டும் அடுத்த ஓவர் சச்சின் 4 ஓட்டங்கள் அடித்து தன் சதத்துடனும் இந்திய வெற்றியுடனும் பேருவகை கொள்கின்றார். வழக்கமாக தன் சதத்துக்கோ அல்லது அணியின் வெற்றிக்கோ சச்சின் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒரு சிரிப்பு சூரியனை மேலே பார்ப்பார் அவ்வளவுதான். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சச்சின் துள்ளிக் குதித்ததைப் பார்க்கும் போது ஏதோ ஒரு பிளாஸ்பேக் இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகின்றது.

காரணம் சச்சின் ஒருபோதும் தன் சொந்த சாதனைக்காக ஆடியது கிடையாது. அதே நேரம் நேற்று யுவராஜின் காதில் சொன்னது நீ அடித்து ஆடு என்பதா? அல்லது எனக்கு சதமடிக்க சந்தர்ப்பம் கொடு என்பதா? அல்லது வேறு ஏதாவதா? என்பது அந்த இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சச்சினைக் குறைகூறும் நண்பர்கள் கூறிய கருத்துக்களே இவை.

அதே வேளை சச்சின் சதமடிக்காமல் ஆட்டமிழக்காமல் 90களில் இருந்தாலும் யுவராஜைக் குறைசொல்வார்கள். அதே குறைசொல்பவர்கள் இன்றைக்கு சச்சின் தன் சுயனலத்திற்காக ஆடி சதமடித்தார் எனக் குறை சொல்லும்படியாகிவிட்டது.

உண்மையில் நடந்தது என்ன? சச்சினை சதமடிக்கும் படி வீரர்கள் ஓய்வறையில் இருந்து தகவல் வந்ததா? காரணம் வர்ணனையாளர்கள் ஒருதரம் தண்ணீர் கொண்டுசெல்லும் வீரர் ஏதோ ஒரு தகவலுடன் சென்றிருக்கின்றார் அது பெரும்பாலும் சச்சினை சதமடிக்க முயற்சி செய்யவும் என்ற தகவலாக இருக்கும் எனவும் சொன்னார்கள்.

நேற்றிரவு ஹைலைட்ஸ் பார்த்தும் என்ன நடந்தது என்பது புரியாமல் இருக்கின்றது.

வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு சச்சின் அவலாகிவிட்டார். இதே விடயம் ஆஸி மேட்சில் நடைபெற்றிருந்தால் பாண்டிங்கும் ஏனைய ஆஸி பத்திரிகைகளும் இதற்க்கு முக்கியம் கொடுத்திருப்பார்கள்.

அதிரடி சேவாக், அபார யுவராஜ்,அனுபவ சச்சின், அதிர்ஷ்ட டோணி


சவாலான இலக்கு இறுதி நாள் ஆட்டம் இதுவரை உபகண்டத்தில் நாலாம் இனிங்கிஸ்சில் வெல்லப்படாத ஓட்ட இலக்கு என 387 ஓட்டங்களை நேற்று இங்கிலாந்து அணி இந்தியாவிற்க்கு நிர்ணயித்தது, சேவாக், கம்பீர், யுவராஜ், சச்சின் போன்றவர்களின் சிறப்பான ஆட்டங்களால் புதிய உபகண்ட சாதனை படைத்தது இந்திய அணி.




முதல் இனிங்கிஸில் 241 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி அடுத்த இனிங்கிஸிலும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிடும் என்ற பீட்டர்சனின் கனவை முதலில் தவிடுபொடியாக்கியவர் சேவாக். சேவாக்கின் நேற்றைய அதிரடி ஆட்டம் தான் இன்றைய வெற்றிக்கு காரணம் என்றால் மிகையாகாது. முதல் இனிங்கிசில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சேவாக் இரண்டாம் இனிங்கிஸில் பொறுப்பாகவும் அதே நேரம் அதிரடியாகவும் ஆடி இந்திய அணிக்கு சிறந்த அடித்தளம் இட்டுக்கொடுத்தார். சேவாக்கின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.



இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியப் பெரும் சுவர் என அழைக்கப்பட்ட ராவிட் மீண்டும் தன் பலவீனத்தைக் காட்டி முதல் இனிங்கிசை விட ஒரு ஓட்டம் கூடுதலாக எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் இருந்து அடுத்து ஓய்வு பெறப்போகும் வீரர் அல்லது நிறுத்தப்படும் வீரர் பட்டியலில் ராவிட்டின் பெயர் முதலாவதாக இருக்கும்.



லக்ஸ்மன் கம்பீருடனும் சச்சினுடனும் சில நிமிடங்கள் நின்றாலும் தன் பங்கிற்க்கு இன்னொரு அடித்தளம் இட்டுக்கொடுத்தார் என்றே சொல்லவேண்டும்.

லக்ஸ்மன் ஆட்டமிழந்தவுடன் தன் இருப்பை தக்க வைத்திருக்கவேண்டிய கட்டாயத்துடனும் எப்படியும் ஆட்டத்தை வெல்லவேண்டும் என்ற உறுதியுடனும் ஆரம்பம் முதலே யுவராஜ் சிங் அடித்து ஆடத்தொடங்கினார்.

சச்சினும் தன் 19 வருட அனுபவ ஆட்டத்தை ஆடி 41 ஆவது சதத்தைக் கடந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சச்சின் சதமடிப்பதற்க்கு வசதியாக யுவராஜ் இறுதி ஓவர்களில் பெரும் உதவி செய்தார்.

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தாலும் வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சாலும் டோனியின் அதிர்ஷ்டத்தாலும் இந்திய ஒரு சாதனை வெற்றியை சென்னை சேப்பாக்கத்தில் ஈட்டியது.

நடந்தது டெஸ்ட் மேட்சா இல்லை ஒரு நாள் ஆட்டமா என மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் திகைக்கவைத்தார்கள். டெஸ்ட் மேட்சுக்கு அவ்வளவு கூட்டம்.

மெஹாலியில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துபார்ப்போம்.

உலக அழகி நான் தான்.



இன்று தென் ஆபிரிக்காவின் ஜோகன்ர்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியில் ரஸ்ய அழகி கெஸ்னியா சுக்கினோவா( வாசிக்கும் போது வாய் சுழுக்கினால் நான் பொறுப்பல்ல) தெரிவு செய்யப்பட்டார்.



எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அழகி பார்வதி ஓமணக்குட்டனுக்கு இரண்டாவது இடமே கிடைத்து.



மூன்றாவது இடம் ரினிடாட் அன்ட் டோபாக்கோவைச் சேர்ந்த அழகி கபரில்லா வோல்ஹொட்டுக்கு கிடைத்துள்ளது.

தினம் தினம் கொண்டாடு

இன்றைக்கு எதேச்சையாக தமிழ்மணத்தை வழக்கம் போல் மேய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு தெரிந்த பெயர் லெனின் பொன்னுசாமி. முதலில் யாரோ நகுலன் பொன்னுசாமி என்ற எழுத்தாளரின் உறவினரோ என்ற அச்சம் ஆனாலும் இவரின் ஒரு பதிவின் தலைப்பான ஜோடிப்பொருத்தம்..சீசன் - தேனிலவு இது எனக்குத் தெரிந்த லெனின் தான் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. உடனே அந்த வலையைப் பார்த்தால் சாட்சாத் எங்கள் அனைவராலும் செல்லமாக பூக்குட்டி என அழைக்கப்பட்ட லெனின்.

ஏற்கனவே இவர் குழந்தைகளை கவரும் பெயரில் ஒரு வலை வைத்திருந்தார் என்ன காரணமோ அதனை விட்டுவிட்டு அல்லது வேறு யாருக்கோ விற்றுவிட்டு புதிதாக ஆரம்பித்துள்ளார்.

லெனினுடனான என் உறவு 2006 ஏப்ரலில் ஒரு விவாதக் களத்தில் ஆரம்பித்தது. நான் வலை ஆரம்பிக்க காரணமாக இருந்த கர்த்தாக்களில் இவரும் ஒருவர். அத்துடன் என் வலையை அழகுபடுத்தித் தந்த கலைஞர் இவர்.

சிறந்த எழுத்தாளாராக அதிலும் எந்த சீரியசான விடயத்தையும் நகைச்சுவையாக சொல்லக்கூடிய ஒருவர். நிச்சயம் இவரின் வலை பேசப்படும். இதற்க்கு இரண்டு காரணங்கள் :

முதலாவது இவரிற்க்கு மொக்கை போடுவது கும்மி அடிப்பது கைவந்தகலை.
இரண்டாவது சீரியாசகவும் பல சிந்திக்கத் தக்க விடயங்கள் எழுதுவார்.

வாழ்த்துக்கள் லெனின் இனி தினம் தினம் உன் வலையில் கொண்டாடு.

http://leninonline.blogspot.com/

கலாநிதி மாறன் ஏமாத்திப்போட்டார்.

இன்று விடுமுறை என்பதால் சன் டிவியின் அதீத விளம்பரத்தினால் காதலில் விழுந்தேன் பார்க்க கிடைத்தது.(திரையில் அல்ல சிடியில் தான்). எத்தனையோ விமர்சனம் வாசித்திருந்தாலும் குருவி, சத்யம் போன்ற படங்களை விடவா கொடுமைப் படுத்தப்போகின்றது என்ற அசட்டுத்துணிவில் களத்தில் இறங்கினேன்.

இப்படிக்கொடுமையான ஒரு படத்தை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை.
இதனைப்போய் சன் டிவியின் டாப் டென்னில் முதலாவது இடத்தில் வைத்திருக்கும் கலாநிதி மாறனின் ரசனையை என்ன சொல்வது.

இந்தப் படத்திற்க்கு எல்லாம் விமர்சனமா ஐயோ சாமி ஆளைவிடுங்க.

சர்வேசன் போன்ற எதற்க்கும் துணிந்தவர்கள் சன் குழுமத்தின் அடுத்த படமான தெனாவட்டையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இதனால் என்னைப்போன்றவர்கள் பலர் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு சன் குழுமம் விருது கொடுத்து கெளரவிக்கவேண்டும்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்க்கு என்ன படம் பார்க்கலாம்?

கண்சிமிட்டும் நட்சத்திரம்

கண்சிமிட்டும் நட்சத்திரம்

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற நர்சரி பாடல் புதிய வடிவில். பாடலைப்பாடுகின்றவர் திருமதி. ரேவதி சங்கரன் அவர்கள் இவர் கவியரசர் கண்ணதாசனின் மகள் என அறிந்தேன் உண்மையா?
இந்த பாடலின் யூடுயூப் சுட்டி அனுப்பிய நண்பனுக்கு நன்றிகள். ஏற்கனவே பார்த்து ரசித்தவர்கள் மீண்டும் ஒருமுறை ரசியுங்கள்.
 

நாம் யார் ? (Who We Are?)

நாம் யார் ? (Who We Are?)

வளமையான 
வாழ்விற்காக 
இளமைகளை 
தொலைத்த 
துர்பாக்கியசாலிகள்
 ! 

வறுமை என்ற 
சுனாமியால் 
கடலோரம்

கரை ஒதுங்கிய 
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் ! 

சுதந்திரமாக 
சுற்றி திரிந்தபோது 
வறுமை எனும் 
சூறாவளியில் சிக்கிய 
திசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு 
முத்தம் கொடுக்கும் 
அபாக்கிய சாலிகள் ! 

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும் 
தொடர் கதைகள் ! 

கடிதத்தை பிரித்தவுடன் 
கண்ணீர் துளிகளால் 
கானல் நீராகிப் போகும் 
மனைவி எழுதிய
எழுத்துக்கள் ! 

ஈமெயிலிலும் 
இண்டர்நெட்டிலும் 
இல்லறம் நடத்தும் 
கம்ப்யூட்டர் வாதிகள் 

நலம் நலமறிய
ஆவல் என்றால் 
பணம் பணமறிய 
ஆவல் என கேட்கும் 
 . டி எம் . மெஷின்கள் ! 

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக 
வாழக்கையை 
பறி கொடுத்த 
பரிதாபத்துக்குரியவர்கள் ! 

 சி காற்றில் 
இருந்துக் கொண்டே 
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே 
வாரிசுகளை
வாரியணைத்து 
கொஞ்சமுடியாத 
கல் நெஞ்சக்காரர்கள் ! 

தனிமையிலே 
உறங்கும் முன் 
தன்னையறியாமலே 
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் ! 

அபஷி என்ற அரபி 
வார்த்தைக்கு 
அனுபவத்தின் மூலம் 
அர்த்தமானவர்கள் !

உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை 
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!

முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும் 
நோயாளிகள் 

கொளுத்தும் வெயிலிலும் 
குத்தும் குளிரிலும் 
பறக்கும் தூசிகளுக்கும் 
இடையில் பழகிப்போன 
ஜந்துகள் ! 

பெற்ற தாய்க்கும் 
வளர்த்த தந்தைக்கும் 
கட்டிய மனைவிக்கும் 
பெற்றெடுத்த குழந்தைக்கும் 
உற்ற குடும்பத்திற்கும்

உண்மை நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும் 
தியாகிகள்


நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய கவிதை. எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

நானும் சினிமாவும்

திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி என்னை ஆட்கொண்டுவிட்டது. இதனை நீங்கள் என் பதிவுகளில் இருந்தே கண்டுகொள்ளலாம். சிலவேளைகளில் இந்தியாவில் பிறந்திருந்தால் யாரோ ஒரு நடிகருக்கு பாலாபிசேகம் செய்கின்ற ரசிகனாக மாறியிருந்திருப்பேன். நல்ல காலம் ஈழத்தில் பிறந்தபடியால் சும்மா படம் பார்த்து நண்பர்களுடன் சேர்ந்து விமர்சிப்பதுடன் நிறுத்திவிட்டேன்.   நான் விடலையாக இருக்கும்போது தமிழ்சினிமாவை கமல்,ரஜனி என்ற இருவரின் ஆட்சி(இப்போதும் இளையவர்களுடன் போட்டிபோடும் வல்லமை இவர்களை விட்டால் வேறு யாருக்கும் இல்லை). இவர்களைத் தவிர்த்து சண்டைக்காக விஜயகாந்தையும், காதல் நகைச்சுவைக்காக கார்த்திக்கையும் பிடிக்கும். இப்பவும் மூத்த ந‌டிகர்களின் விசிறியாக இருந்தாலும் ஏனோ நடிகைகள் மட்டும் அடிக்கடி மாறுகிறார்கள். ஆரம்பத்தில் ஸ்ரீ தேவி, குஷ்பு, கெளதமி,ரம்பா,மீனா, ஜோதிகா, சிம்ரன், அசின், பாவனா, மீரா ஜாஸ்மின் என நீண்ட பட்டியல் தற்போது சரண்யா மோகனில் வந்து நிற்கிறது. என் சினிமா அனுபவங்களை அதிலும் முதல் முதல் தியேட்டரில் பார்த்த கதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்கின்றேன்.   என்னை இந்த சங்கிலித் தொடரில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த அண்ணன்(?) கானாப் பிரபாவிற்க்கு நன்றிகள்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

முதன் முதலில் பார்த்த சினிமா ஞாபகம் இல்லை. ஆனால் எண்பதுகளின் ஆரம்பத்தில் நெல்லியடி மஹாத்மா தியேட்டரில் கர்ணன் படம் பார்த்தேன். மஹாபாரதக் கதையும் கர்ணனாக நடித்த செவாலியே சிவாஜியின் அற்புத நடிப்பும் உள்ளத்தின் நல்ல உள்ளம் பாடலும் இன்னும் நினைவில் நிற்கின்றது. அந்தக்காலத்தில் உள்ளூர் சனசமூக நிலையங்களில் நிதி சேகரிக்க தொலைக்காட்சிப்பெட்டியில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் இருந்து டிவி, டெக் போன்றன காரில் வரும் கார் வந்தவுடன் எம்மைப்போன்ற சிறுசுகள் டிவி டெக் பார்க்க ஓடிப்போறதும் பின்னர் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் இருந்து சிறிது நேரம் படம் பார்த்துவிட்டு அந்த வெறும் நிலத்தில் நித்திரையாகி பொழுதுவிடிந்தபின்னர் வீட்டுக்கு வந்து பாடசாலையில் நித்திரை கொள்வதும் ஆசிரியர்கள் என்ன இரவும் படம் பார்த்தியா எனக்கேட்டுவிட்டு மாணவர்களை அடிப்பதும் ஞாபகம் இருக்கின்றது. சனசமூகப் படங்களில் கமலின் "எத்துகேயே லி", "சனம் தெரி ஹசம்" போன்ற படங்கள், ரஜனியின் முரட்டுக்காளை, போன்ற படங்கள் அடிக்கடி திரையிட்டார்கள். சிவராத்திரி போன்ற சமய சம்பந்தப்பட்ட நாட்களின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற பக்திப்படங்கள் போடுவார்கள்.   காலம் ஓடி திரையரங்குகள் யுத்ததில் அழிந்தபின்னர் மினிசினிமா என்கின்ற தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து படம் காட்டுகின்ற இடங்களில் பெரும்பாலான ராமராஜன் படங்களும் அந்தக்காலத்தில் வந்த ஏனைய படங்களும் பார்த்த ஞாபகம்.  முன்னர் நடிகர்களுக்காக படம் பார்த்த நான் பின்னர் இளையராஜாவின் இசை உள்ள படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். இந்த மினிசினிமா கலாச்சாரமும் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தடைப்பட்டவுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.   அதன் பின்னர் ஜெனரேட்டடில் படம் காட்டத்தொடங்கினார்கள். இந்தக்காலத்தில் நான் ஏஎல் மாணவன் அதனால் பெரும்பாலும் படம் பார்க்க போவதில்லை வீட்டில் படிக்கவேண்டும் என்று விடமாட்டார்கள். ஆனாலும் அயல் வீடுகளில் என்ன படம் போடுகின்றார்கள் என அறிந்தால் ரஜனி,கமல், கார்த்திக் படங்கள் என்றால் அதனை மட்டும் பார்த்துவிட்டு வருவேன். நீண்டகாலம் எந்தப் படங்களும் பாராமல் முதன்முதலில் ஜெனரேட்டர் காலத்தில் பார்த்த படம் சின்னத்தம்பி. இடையிடையே கட்டுப்பாடுகளை மீறி அடுத்த கிராமங்களில் கூட படம் பார்க்க நண்பர்களுடன் சென்ற அனுபவம் இருக்கின்றது.   மீண்டும் மினிசினிமா ஆரம்பமாகியது. டிக்கெட் விலை 5 ரூபா. இல்லையென்றால் ஜெனரேட்டருக்கு கால்ப்போத்தல் மண்ணென்னெய் கொடுக்கவேண்டும். பெரும்பாலும் பின்னேரங்களில் மினிசினிமாவில் படம் போடுவார்கள். ஒரு முறை நாம் படம் பார்த்துக்கொண்டிருந்த மினிசினிமாவில் கிட்டத்தட்ட 50 பேரை இராணுவம் சுற்றிவளைத்து கைது செய்தார்கள். பின்னர் அனைவரையும் விட்டுவிட்டார்கள். அன்றைக்குப் பார்த்த படம் "அண்ணாமலை". அடுத்த நாள் மிகுதிப்படம் பார்த்தோம்.  

அந்த நாளில் சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் அறிந்திருந்தேன். நடிகர்கள் நிஜமாக சண்டைபோடுகிறார்கள். நம்பியார் என்றவர் மிகவும் கெட்டவர். எம்ஜிஆர் தான் நல்லவர் என்ற விம்பங்கள் மனதில் உண்டாகின.   பின்னர் சில காலங்களில் இயக்குனர்களுக்காக படம் பார்க்கின்ற தகுதி வந்துவிட்டது. பாரதிராஜா, பாலசந்தர், ஷங்கர், மணிரத்தினம், சுந்தர்.சி என சிலரின் படங்கள் தவறவிடுவதே இல்லை. 

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"ச‌ரோஜா" வெங்கட் பிரபுவின் சென்னை 28 தந்த அனுபவத்தில் பார்க்கச் சென்ற படம். வெங்கட் பிரபு ஏமாற்றவில்லை. யுவனின் இசையும் பிரேம்ஜியின் நகைச்சுவையும் ஒரு திரில்லரையு விழுந்துவிழுந்து சிரிக்க வைத்தது. 

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தினமும் ஏதாவது ஒரு படம் முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோ (சில படங்கள் ஒரு கிழமையாக விட்டுவிட்டு பார்த்திருக்கின்றேன் உதாரணம் குருவி, சத்யம்) டிவிடியில் பார்ப்பது உண்டு. தற்போது தாம்தூம் ஓடிக்கொண்டிருக்கின்றது இன்னும் பார்த்துமுடியவில்லை. தியேட்டரில் படம் பார்ப்பதை விட வீட்டில் பார்ப்பது வசதி பாடல்களை ஓடவிடலாம், தேவையான நேரத்தில் நிறுத்திவைக்கமுடியும் போன்ற வசதிகளால் டிவிடி தான் தற்போது சிறந்த தெரிவு.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? 

இதுவரை பெரிதாக எந்த சினிமாவும் என்னைப் பாதிக்கவில்லை. குணா மகாநதி போன்ற படங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சில காதல் படங்கள் என்னைப் பாதிக்காவிட்டாலும் என் நண்பர்களை பாதித்ததை நேரில் கண்டேன் உதாரணம் காதலுக்கு மரியாதை.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? 
தசாவதாரம் படத்திற்க்கு சில மதவெறியர்கள் காட்டிய வீண் எதிர்ப்பும், குசேலன் படத்தையும் ரஜனி என்ற தனிமனிதனையும் ஊடகங்கள் கிழித்துக்காயப்போட்டதும். 

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறைய வாசிப்பதுண்டு. அதற்காக அந்த நடிகையின் நாய்க்குட்டி விபரம் இந்த நடிகரின் ஆட்டுக்குட்டி விபரங்களை எல்லாம் வாசிப்பதில்லை. கிசுகிசுக்கள் வாசித்து அந்த நபர் யார் எனக் கண்டுபிடிப்பதில் அலாதிப் பிரியம். சில தேர்ந்தெடுத்த விமர்சகர்களின் சினிமா சம்பந்தமான புத்தகங்கள் ஆக்கங்கள் படிப்பதுண்டு, கே.எஸ்.சிவகுமாரனின் ஆக்கங்கள். டொக்டர்.முருகானந்தனின் கட்டுரைகள் ரொம்ப பிடிக்கும். டொக்டர் பல நாட்களாக உங்கள் சுவைத்த சினிமாவில் ஆக்கங்களைக் காணவில்லை. இவர்களின் விமர்சனங்களின் பின்னர் பார்த்த பிறமொழிப்படங்கள் அதிகம். 

தமிழ் சினிமா இசை?
இசை என்றால் இளையராஜா என கருதும் இசைஞானியின் தீவிர ரசிகன் நான். அதற்காக மற்றவர்களைப் பிடிக்காது என்றில்லை. தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கு முக்கியம் கொடுத்தவர்களில் இசைஞானியின் பங்கு மிகப்பெரியது. மசாலாப் படமான வெற்றிவிழாவின் பின்னணி இசையை கசட் ரெக்கோடரில் ரெக்கோட் பண்ணி அடிக்கடி கேட்ட அனுபவம் உண்டு, ஜிந்தாவை மறக்கமுடியுமா? ஆனாலும் இதுவரை தமிழ் சினிமாவில் இசையை மையமாக வைத்து பெரிதாக படங்கள் வரவில்லை என்பது ஒரு சிறிய கவலை. சிந்துபைரவியில் கூட இசையுடன் காதலும் வருகின்றது. சில மலையாளப் படங்கள் இசைக்காகவே வந்தன உதாரணமாக மோகன்லாலின் "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா".

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
90களின் தொடக்கத்தில் மோகன்லால் மம்முட்டியின் பல மலையாளப் படங்கள் பார்த்தேன். மதிலுகள், வைசாலி, ஒரு மின்னாமினியின் நொருங்கு வட்டம், கைதியின் டயரிக்குறிப்பு( பெயர் சரியோ எனத் தெரியவில்லை) என்பவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. கொஞ்சம் ஆங்கில அறிவு வளர்ந்தபின்னர் உப தலைப்புகளுடன் வந்த ஹிந்திப்படங்கள் பார்த்தேன். தற்போது சில நல்ல ஹிந்திப்படங்கள் வருகின்றன என்பது என் தாழ்மையான விமர்சனம்.

ஆங்கிலப்படங்கள் வரிசையில் முதல் முதல் பார்த்த படம் "என்டர் த ட்ராகன் "புருஸ்லி படம். அதன் பின்னர் கெள பாய் படங்கள், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் குறிப்பாக அதிரடிப்படங்கள் விரும்பிப்பார்ப்பது. டைட்டானிக்கைத் தவிர எந்த ஆங்கிலக் காதல் படங்களும் பார்க்கவில்லை. அந்தளவுக்கு எனக்கு பொறுமையில்லை. சிலவேளைகளீல் நேரம் கிடைத்தால் திரைப்பட விழாக்களில் சில வாயினுள் நுழையமுடியாத வேற்றுமொழிப்படங்கள் பார்த்திருக்கின்றேன்.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இதுவரை இல்லை, ஆர்குட்டில் கமல் ரசிகனாக இருக்கின்றேன் இதனால் சில கமல் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு உண்டு. கிரிக்கெட் வீரர்களுடன் படம் எடுத்ததுபோல் இதுவரை எந்த சினிமா சம்பந்தப்பட்ட நபர்களுடன் படம் எடுக்கவில்லை. அவர்களை ரசிக்கமட்டுமே முடிகின்றது படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்சினிமாவை சில இயக்குனர்களிடமிருந்து காப்பாத்தினால் உருப்படும். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் போல் இளையவர்களும் வர முயற்சி செய்தால் நிச்சயம் தமிழ் சினிமா உலகத்தரத்தை அடையும். அமீர், செல்வராகவன் போன்றவர்கள் முயற்சி செய்துள்ளார்கள். 

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒன்றுமே ஆகாது யாழில் சிலகாலம் எந்த தொடர்பும் இன்றி இருந்தனாங்கள் அதனால் இவை எல்லாம் எம்மைப் பாதிக்காது. ஆனால் இணையம் இன்றி இருப்பது என்பது கஸ்டம் உணவு உடை உறையுளுடன் இப்போது இணையமும் சேர்ந்துவிட்டது. 

இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் இனிய நண்பர்கள்.
1. இறக்குவானை நிர்ஷன்
2. மாயா
3. தூயா
4. சிவகுமார் அண்ணா
5. லோஷன்
6. டொக்டர் முருகானந்தன்( டொக்டர் உங்கள் அனுபவத்தை எப்படிம் ஒரு தடவையாவது எழுதுங்கள்)

*** என் நன்றி கொன்றார்க்கும் ***


சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு நிர்வாகியிடமிருந்து எதிர்வரும் செப்டம்பர் 29ந்திகதி தொடக்கம் அக்டோபர் 6 ந்திகதிவரை தமிழ்மணத்தின் நட்சத்திரமாக இருக்கமுடியுமா? என அழைப்பு வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த வாரமல்ல அதற்க்கு முதல்வாரமே உங்களை நட்சத்திரமாக்குகின்றோம் என அழைப்புவிடுத்தார்கள். என் வாழ்க்கையில் அவசரம் என்பது கூடவே வருவது அதனால் உடனடியாக ஒரு வாரம் முன்னர் இருப்பதாக ஒத்துக்கொண்டேன்.

என்னுடைய கஷ்டகாலம் என் நட்சத்திரவாரத்தில் தான் அலுவலகத்தில் நிறையவேலை புதிய புரஜெக்ட் ஒன்றுமே செய்யமுடியாத நிலை. அப்படியிருந்தும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பற்ற ஏதோ என்னால் முடிந்த சில பதிவுகளைக் கொடுத்திருந்தேன். வலைக்கு வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. ஆனால் நான் நினைத்ததுபோல் ஏனோ பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை. ஆனாலும் இலங்கைப் பதிவாளார்கள் சிலர் தங்கள் கருத்துக்களை மின் அஞ்சல் ஊடகச் சொல்லியிருந்தார்கள்.

பெயரிலி அவர்கள் ஒரு பதிவில் இலங்கையைப் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். நட்சத்திரமாக இருந்துதான் எழுதவேண்டியதில்லை ஏற்கனவே எழுதிய சில இலங்கைப் பதிவுகளுக்கு பெரிதாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் வராதபடியால் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற எண்ணத்தில் அதனைக் குறைத்துக்கொண்டேன். பெயரிலியின் வேண்டுகோளுக்காக ஒரு பதிவை மீள் பதிவாகக் மீண்டும் தந்திருக்கின்றேன்.

கடந்த வாரம் முழுவதும் எனது வலைக்கு வருகை தந்த நண்பர்களுக்கும், கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த வாரத்தில் எனக்குத் தெரிவித்த ஆதரவுபோல் மீண்டும் எனக்கு உங்கள் ஆதரவுக்கரங்களைத் தருவீர்கள் என நம்புகின்றேன்.

இந்த இடத்தில் நன்றிக்குரியவர்களாக என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்ற நண்பர்களான இறக்குவானை நிர்ஷன், மாயா, தாசன்,வர்மா, வியாபகன்( ஏனோ சில நாட்களாக எழுதுகின்றார் இல்லை) லீனாரோய்,தூயா, கானாப் பிரபா போன்ற தாயக உறவுகளுக்கு நன்றிகள்.

தமிழ்மணத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மீண்டும் என் நன்றிகள். சுவையான நினைவுகளுடனும் நானும் ஒரு வலைப்பதிவன் என பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்னம்பிக்கையுடனும் நட்சத்திர வாரத்தில் இருந்து விடைபெறுகின்றேன்.

என்னுடைய உளறல்கள் தொடரும்......

மழைக்கால நினைவுகள்

என் நினைவுகளை 15 வருடங்களுக்கு பின்னால் பின்னோக்கிப்பார்க்கிறேன் கார்த்திகை மார்கழி மாதம் என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான் அதற்கு இரண்டு காரணம் ஒன்று பாடசாலை விடுமுறை மார்கழியில் வரும் மற்றது மாரிமழை.

எப்படியும் எங்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும்போதே மழையும் ஆரம்பித்துவிடும் அதிலும் எமது பாடசாலை அலைவந்து தாலாட்டும் கடலுக்கு அருகில் இருப்பதால் மழை நாட்களில் கடல் ஒரு பெண்னைப்போல் தோற்றமளிக்கு அதுதான் அழகான ஆபத்து. நீலக்கடல் கருமையாக இருப்பதுடன் வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் இணையும் கடல் எமது கடல் ஆகையாலும் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த நாட்களில் தான் நீந்தப்போவது.



பரீட்சை நாள் என்றால் பாடசாலை பரீட்சை முடிந்ததும் விட்டுவிடுவார்கள் சிலவேளை காலை 8 மணிக்கு பரீட்சை என்றால் எப்படியும் 10 மணி 11 மணிக்கு விட்டுவிடும் நாம் உடனே வீடு செல்வதில்லை யாரும் படிக்கும் மாணவர்கள் வீடு சென்று அடுத்த நாள் பரிட்சைக்கு தம்மை தயார்ப் படுத்துவார்கள் நாமே கடலில் சென்று குளித்து கும்மாளவிடுவது தான் எம் தலையாய கடமை அடுத்த நாளைப் பற்றி அன்றே நாம் சிந்திப்பதில்லை. 2 மணிமட்டும் கடலில் கும்மாளமிட்டுவிட்டு ஈரகாற்சட்டைகளுடன் அப்படியே வீடு செல்வது வழியில் அந்தக் காற்சட்டை உலர்ந்துவிடும்.

ஒரு முறை யாரோ ஒரு எட்டப்பன் வீட்டில் காட்டிக்கொடுத்துவிட்டான் நான் எவ்வளவு மறுத்தும் அம்மா நம்பவில்லை இறுதியாக அவர் என் கையை நக்கிப்பார்த்தார் உப்புக்கரித்தது வேர்வை உப்பல்ல கடல் உப்பு அப்புறம் என்ன செம திருவிழா தான் . நண்பர்களுக்கு இந்த விடயத்தை சொன்னதபின் தான் அவர்கள் ஒரு ஐடியா கொடுத்தார்கள் வீட்டுக்குபோகுமுன் ஏதாவது நல்ல தண்ணி உள்ள கிணற்றில் குளித்துவிட்டு செல்லும்படி அதன் பின் வரும் வழியில் உள்ள அம்மன் கோவில் கிணற்றில் நீராடிவிட்டுத்தான் வீடு செல்வது.

கடலில் தினமும் குளித்தால் உடம்பு கறுக்கும் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதின் பின்னர் என்னை மாதிரி சிவலைப் பொடியள் கடலில் குளிக்க செல்வது குறைவு . கடலில்ற்குப் பதில் கோயில் கேனிகள் (தெப்பக்குளம்).

யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பது அந்த நாளில் எமக்கு கடவுளை வணங்கப் பயன்பட்டதோ இல்லையோ சைட் அடிக்கவும் கேணிகளில் குளித்து கும்மாளமிடவும் நன்றாகப் பயன்பட்டது. மழை நாட்களில் கோயில் குளங்கள் நிரம்பி வழியும் எப்படியும் ஒரு 15 அல்லது 20 அடிகளுக்கு தண்ணிர் நிரம்பியிருக்கும். அங்கே டைவ் அடிப்பது முதல் நீரின் அடியில் சுழியோடி மண் எடுப்பது என பல வித்தைகள் செய்வோம். சில்வேளை மதிய உணவு உண்ண வீடு செல்வது கூட இல்லை பக்கத்து காணிகளில் உள்ள மாமரங்கள் தென்னமரங்கள் எல்லாம் எம் கட்டுப்பாட்டில் மாங்காய் தேங்காய் தான் எம் உணவு. சில பெரிய பொடியள் மட்டும் கொஞ்சம் கள்ளும் சிகரெட்டும் குடிப்பார்கள் (அவர்கள் வேறை கேங்). நாம் அவர்கள் சுருள் சுருளாக புகைவிடுவதை வேடிக்கை பார்ப்போம்.

எமது பாடசாலைக்கு அருகில் உள்ள அம்மன் கோவில் கேணி, இன்னொரு வீரபத்திரர் கோவில் கேணி சிலவேளை மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் குளமும் கேணியும் எங்கள் மழைக்கால வாசஸ்தலங்கள். மழை நாட்களில் எந்த விளையாட்டும் விளையாடமுடியாது ஆதாலம் எமக்கு தெரிந்த ஒரே பொழுதுபோக்கு இதுதான். சில தடவைகள் வீட்டில் எச்சரித்தார்கள் பின்னர் அவர்களே தண்ணி தெளித்து போனால் போகட்டும் போடா என்று விட்டுவிட்டார்கள் .

இன்றும் இந்த நினைவுகள் மனதைவிட்டு அகலாதவை. இனி எப்ப வரும் அந்த வசந்தகாலம்

*** இவர்களைத் தெரியுமா? ***

சில காலங்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த சிலர் இப்போ எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைப் பற்றிய சில சிறுகுறிப்புகள்.

தயாரிப்பாளர்கள்:
எத்தனையோ தயாரிப்பாளர்கள் சில இயக்குனர்களாலும், பொருத்தமில்லாத கதைகளாலும் பிரமாண்ட விளமபரங்களாலும் போண்டியாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஞாபகம் வைத்த்திருப்பது கடினம் அதில் ஒருவரை மட்டும் உங்களுக்குத் தெரிகின்றதா?

ஜென்டில்மேன் குஞ்சுமோன்:
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வாழ்வளித்த வள்ளல். பின்னர் மகனை( மகனின் பெயர் எபி என ஞாபாகம்) வைத்து கோடிஸ்வரன் என்ற பெயரில் பத்து வருடங்களுக்கு முன்னர் படம் எடுத்தார். இன்னமும் படமும் வெளிவரவில்லை இவரும் படம் எடுப்பதில்லை. அந்த படத்தின் ஒரு பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. நம்ம ஊர் எவ் எம் வானொலிகள் ஆரம்பித்த காலத்தில் வெளிவந்த பாடல் அடிக்கடி ஒலிபரப்பினார்கள். பாடல் ஞாபகம் இல்லை. இந்தப் பாடலை கானாபிரபா கண்டுபிடித்துக்கொடுப்பார் என நினைக்கின்றேன். ஷங்கர் தன் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இவருக்கு ஏன் நிதி உதவி செய்யக்கூடாது?

இயக்குனர்கள் :

ஆர்.வி.உதயகுமார்:
கமல், ரஜனியை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர். பலகாலமாக படம் எதையும் இயக்கவில்லை.

பாண்டியராஜன் :
கதாநாயகனாக நடிப்பதை சில காலமாக நிறுத்தியிருந்தார். துணை நடிகராக பல படங்களில் தலைகாட்டுபவர் சில காலமாக படங்களை இயக்குவதை ஏனோ நிறுத்திவிட்டார். ஆண்பாவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம மற்றக்முடியாது.

எஸ்பி.முத்துராமன்:
ரஜனி, கமலை வைத்து ஏவிஎம் நிறுவனத்துக்கு பல படங்களை இயக்கிவெற்றிகொடுத்தவர். இவர்களை இருவரையும் வசூல் நாயகன்களாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் ஏனைய நடிகர்களை வைத்து படம் இயக்கிய படங்கள் மிகச் சிலவாகும்.

மணிவண்ணன் :

நூறாவது நாள், அமைதிப்படை என பல சிறந்தபடங்களைக் கொடுத்தவர். பின்னர் இவர் இயக்கிய படங்கள் பெரிதாக சோபிக்காவிட்டாலும் படங்களீல் வில்லனாகவும் கொமடியனாகவும் வந்துபோனார். நண்பர் முரளிகண்ணன் இவர் பற்றிய சிறப்பான பதிவு ஒன்றைப்போட்டிருக்கின்றார்.

சசி :
ரோஜாக்கூட்டம், சொல்லாமலே என சிறந்த காதல் படங்களைக் கொடுத்தவர். தற்போது என்ன செய்கின்றார் எனத் தெரியவில்லை.

இசையமைப்பாளர்கள் :


கார்த்திக்ராஜா:
டும்டும்டும், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளைபோகுமே, அல்பம்( செல்லமே செல்லம் ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ்ப் பாடல்) என பலபாடல்களில் உள்ளத்தை கொள்ளைகொண்ட இசைராஜாவின் முதல்வாரிசு, தம்பி யுவன் இசை உலகில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார். ஏனோ வாரிசுகளில் இரண்டாமவருக்குத் தான் செல்வாக்கு அதிகம் என நினைக்கின்றேன். தற்போது புதிதாக ஒரு படத்திற்க்கு இசையமைப்பதாக அறியக்கிடைத்தது.

தேவா:
காப்பி ராக மன்னர் தேவா, பாடல்கள் பல ஒரே மாதிரியும் எங்கேயோ கேட்டதுபோல் இருந்தாலும், கானாப்பாடல்களில் கொடிகட்டிப்பறந்தவர். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். வாலி, குஷி, நேருக்கே நேர், கண்ணெதிரே தோன்றினாள் என பல படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், ஸ்ரீகாந்த் தேவாவின் வரவின் பின்னர் ஒதுங்கிவிட்டாரோ தெரியவில்லை.

எஸ்ஏ ராஜ்குமார் :

லாலலா புகழ் இசையமைப்பாளர் அனேகமாக இவரது பாடல்கள் மெல்லிசையாகவே இருக்கும். இயக்குனர் விக்ரமனி ஆஸ்தான இசையமைப்பாளர். சில காலமாகக் காணாமல் போய்விட்டார்.

நடிகர்கள் :

கார்த்திக் :

80களின் காதல் மன்னன், இளவரசன் எனப் பல பட்டங்களைக் கூறலாம். இளஞிகளைக் கட்டிப்போட்ட நடிகர். எத்தனையோ ஹிட் கொடுத்தவர். அரசியல்வாதியாகி 2011 ஆம் ஆண்டில் முதல்வராகும் கனவில் இருப்பதாலோ என்னவோ படங்களில் அதிகம் காணவில்லை.

முரளி :
மைக் மோகனிற்க்கு பின்னர் அதிகம் மைக் பிடித்த நடிகர். காதலைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் பலகாலம் கல்லூரிக்கு போனதிலும் இவரது சாதனையை வருங்கால கதாநாயகர்கள் உடைப்பது என்பது மிகவும் கஸ்டம். இறுதியாக இவரின் நல்ல படம் என்றால் சுந்தரா ராவல்ஸ் தான்.

பிரபு :

என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை மிகப் பிரபலமாக்கியவர். சமீபகாலமாக துணை நடிகராகத் தான் வருகின்றாரே ஒழிய கதாநாயகனாக வருவதில்லை.

நடிகைகள் :

நடிகைகளைப் பொறுத்தவரை அவர்கள் காலத்திற்கேற்ப அடிக்கடி மாறுவதால் பட்டியல் இடமுடியாது. ஆனாலும் திவ்யா உன்னி, மீரா ஜாஸ்மின் போன்ற சில கேரளத்து கிளிகள் காணாமல் போனது கவலை அளிக்கின்றது. அல்லது நடிகைகள் தங்கள் காலம் முடிய சின்னத் திரையில் கிளிசரினுடன் அவதாரம் எடுக்கிறார்கள்.


இன்னும் யார் யாரை நீங்கள் தேடுகின்றீர்கள் என அறியத்தாருங்கள்.