ஜேம்ஸ்பாண்டும் மாடஸ்தி பிளைசியும்

பாடசாலைகள் கல்வியை மட்டுமல்ல நல்ல நண்பர்கள், ஒழுக்கம், விளையாட்டு, வாசிப்பு மற்றும் பல விடயங்களை எமக்கு பெற்றுத்தரும் ஒரு இடம். இதனை விட என் பாடசாலைக் காலத்தில் எனக்கு அறிமுகமான ஒரு விடயம் காமிக்ஸ் புத்தகங்கள். அதிலும் ராணி காமிக்ஸ் எங்கள் பள்ளியில் மிகவும் பேமஸ்.

நான், கவி, வேந்தன், கபில்(பெயரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடுவான் என நினைக்கவேண்டாம்), மலர் என ஐந்துபேர்கள் பஞ்சபாண்டவர்கள் போல வகுப்பில் ஒன்றாகவே குழப்படி செய்வோம். எது கிடைத்தாலும் (வேறு என்ன அடிதான்) ஐவீரும் ஒருவீராக பகிர்ந்துகொள்ளும் நல்ல பழக்கமும் எமக்கு உண்டு.

பெரும்பாலும் மலரே ராணி காமிக்ஸ் நெல்லியடி மொடேர்ன் ஸ்ரோரிலோ அல்லது பருத்தித்துறை உதயன் புத்தகநிலையத்திலோ(டொக்டர் முருகானந்தன் மருத்துவசாலை கட்டடத்தில் இருந்த கடை) வாங்கிவருவான். அதனை நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வாசிப்பது வழக்கம். பெரும்பாலும் ஐந்துபேரும் ஒன்றாக இருந்தால் யாராவது சீபிளேன்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்பதால் மூன்று பேர் முதலிலும் மற்ற இருவர் பின்னரும் வாசிப்போம்.

எங்கள் பாடசாலையில் அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா போன்ற புத்தகங்களுக்கு அனுமதி ஆனால் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு தடா. ஏனென்றால் அவற்றில் வரும் படங்கள் சிறுவர்களைக் கெடுத்துவிடுமாம். ஏனென்றால் ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியையோ அல்லது ஏனைய ஏஜெண்டையோ முத்தமிடாமல் அவரின் எந்தக் கதைகளும் வருவதில்லை. மாடஸ்தி பிளைசி பெரும்பாலும் உள்ளாடைகளுடனே துப்புத் துலக்குவ்பார். இரும்புக்கை மாயாவியும் சிலவேளைகளில் ஜேம்ஸ்பாண்டாக மாறி விடுவார். ஆகவே பாட்சாலையில் இப்படியான காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை போட்டது சரிதான், ஆனால் அந்த நேரம் எமக்கு அந்த உண்மை விளங்கவில்லை. இப்போ ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகளை வாசித்தால் புரிகின்றது.

ஆசிரியர்களிடமும் மாணவர் தலைவர்களிடமும் பிடிபடாமல் வாசிக்க நாம் செய்யும் உத்திகள் புத்தகத்தை விஞ்ஞானம் அல்லது சமயப் புத்தகத்தின் உள்ளே வைத்து வாசிப்பது, வெளியில் இருந்துபார்த்தால் பொடியள் மும்முரமாக அப்பர் தேவாரமும் மின்குமிழின் அமைப்பும் படிப்பது போல் இருக்கும். அடுத்தது பாடசாலையில் அனுமதியுள்ள கதை கட்டுரைப் புத்தகங்களிற்குள் வைத்து வாசிப்பது. வாங்கிற்க்கு(பெஞ்ச்) அடியுள் வைத்து வாசிப்பது அதுவும் கஸ்டம் என்றால் மைதானத்திற்க்கு மற்றவர்கள் விளையாடச் செல்லும் வேளையில் அங்கே சென்று சுதந்திரமாக வாசிப்பது. நாங்கள் ஐவரும் பாடசாலையில் விளையாட்டுக்காக எதுவுமே செய்தது கிடையாது.

அதே நேரம் எமது வகுப்பில் இன்னொரு பிரிவில் கற்கும் மாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாடகைக்கு விடுவார்கள். ஒரு பாட நேரத்திற்க்கு 50 சதம். கொஞ்சம் பெரிய தீபாவளிச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் என்றால் புத்தகத்தின் சைசுக்கு ஏற்றபடி 1 ரூபா 2 ரூபாவாக அந்த வாடகை மாறும். வாடகைக்கு புத்தகம் விடுபவர்களின் சட்டதிட்டம் பொது நூலகத்தை விட கொடூருமானது

குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை வாசித்துவிட்டுக்கொடுக்கவேண்டும்.

சிலவேளைகளில் அவர்களே அடுத்து யாரிடம் கொடுக்ககூடாது.

ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தலைவர்களின் கைகளில் மாட்டினால் தம்மைக் காட்டிக்கொடுக்ககூடாது.

அப்படிக் காட்டிக்கொடுத்தால் இனிமேல் காட்டிக்கொடுப்பவனுக்கு புத்தகம் வாடகைக்குத் தரப்படமாட்டாது.

புத்தகம் பிடிபட்டால் அதற்க்குரிய பெறுமதியை அவருக்கு கொடுக்கவேண்டும்.

வாசிக்கும் நேரத்தில் தனது அனுமதி இன்றி இன்னொருவருக்கு புத்தகத்தை கைமாற்றம் செய்யக்கூடாது.

ஆகக்கூடியது இருவர் மட்டும் சேர்ந்துவாசிக்கலாம்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு கொண்டுபோய் வாசிப்பது என்றால் வாடகைப் பணம் இரண்டு மடங்கு.

இப்படிப் பல சட்டங்கள், நாங்கள் பொதுவாக எம்மிடையே காசைப் பங்கிட்டு எப்படியும் வாசித்துவிடுவோம். எங்கள் குறூப்புக்கு 007ம் மாடஸ்தியும் தான் பேவரிட் அதிலும் கவி இப்பவும் மாடஸ்தியின் நினைவுகளில் இருக்கின்றான். நாம் இடையிடையே சந்திக்கும் போது மீள நினைக்கின்ற விடயங்களில் பாடசாலை நாட்களில் வாசித்த இந்தமாதிரி எங்கள் சாகசங்களை நினைப்பது வழக்கம்.

அண்மையில் நாம் சந்தித்தப்போது இன்னொரு நண்பன் தான் வாசித்த ராணி காமிக்ஸை மாணவர் தலைவர் ஒருவரிடம் பறிகொடுத்து அதன் உரிமையாளருக்கு புத்தகத்தின் பெறுமதியான ரூபாய் 7.50 செலுத்திய கதையைச் சோகத்துடன் சொன்னான்.

சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ஒரு ராணி காமிக்ஸ் வாசித்தேன் பல வருடங்கள் போனாலும் ஜேம்ஸ் பாண்டும் மாறவில்லை ராணி காமிக்ஸின் தரமும் மாறவில்லை. நான் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஏனோ பலர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி எல்லாம் ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே இருந்தது.

பிற்குறிப்பு : 2010ல் ரசித்த பதிவுகள் பகுதி 2 சில நாட்களில் வெளிவரும். நேரமின்மை காரணமாக அது தாமதமாகின்றது. ஒரு பதிவு எழுத ஒரு மணி நேரம் போதும் அதுவே இங்கே கிடைப்பது கஸ்டம். அதனால் நான் தான் இடைக்கிடை மட்டும் என் இருப்பையும் தக்க வைத்துக்கொள்கின்றேன்.

16 கருத்துக் கூறியவர்கள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொல்வது:

வடை?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொல்வது:

எனக்கும் அன்றும் இன்றும் என்றும் காமிக்ஸ் என்றால் உயிர்! மாயாவியும், டெக்சும், டயானாவும் என்றுமே மறக்க முடியாதவர்கள்! ராணிகாமிக்ஸில் எழிலின் ஓவியம் என்ன சொல்ல அவ்வளவு அற்புதமாக இருக்கும்!

மாயாவி நகரத்துக்குப் போவதாக இருந்தால் கோட் போட்டுக்கொண்டு புதுவித கெட்டப்பில் போவார்! நான் அதை மிகவும் ரசிப்பேன்! காட்டு வாசிகளும், செவ்விந்தியர்களும் அப்படியே கண்ணுக்குள் நிக்கிறார்கள்!

வந்தி உங்களுக்கு நினைவிருக்கிறதா மாயாவி தனது முக மூடியை கழற்றவே மாட்டார். நீண்டகாலமாக அதை சஸ்பென்சாக வைத்திருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு கதையில் மாயாவி தனது முகமூடியைக் கழற்றுவார்! அது எந்த கதை என்று உங்களுக்குத் தெரியுமா?

டுமீல் என்ற சொல்லை அறிந்தது காமிக்ஸ் படிச்சு தானே!

இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அப்புறம் பால மித்ரா.... வாவ் என்ன ஒரு அழகான புத்தகம்! மாருதியின் அழகான ஓவியத்துடன் வரும் பாலமித்ராவை நான் ஒரு பக்கம் கூட கசங்கவிடாமல் பாதுகாத்து வந்தேன்!

அப்போது " மண்டூகத் தீவில் ஒரு மந்திரக் கோல் " எனும் தொடர்கதை வரும்! மண்டூகம் என்றால் தவளை என்று எனக்கு அக் கதை படித்துதான் தெரியும்! அக்கதையில் வரும் இளமாறன், பூங்குன்றன், ஜக்கு போன்ற கதா பாத்திரங்கள் இப்பவும் அப்படியே மனசில் நிக்கிறார்கள்!!

என்ன வந்தி பழைய நினைவுகளைக் கிண்டி விட்டீர்கள்! இப்போது பிரான்சில் நேரம் நள்ளிரவு 1.35 ! இனி தூங்கின மாதிரித்தான்! நாளைக்கு வேலைக்குப் போகவேணும்!

பை!!

ம.தி.சுதா சொல்வது:

மீளும் நினைவுகள் இதமாக இருக்கிறது... இப்போதும் எங்கெனும் கண்டால் எடுத்து வாசிப்பேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

கன்கொன் || Kangon சொல்வது:

ம்....... :-)))

Subankan சொல்வது:

இந்த ராணிகாமிக்ஸ் ரசனைக்கு நாங்களும் விதிவிலக்கில்லை மாம்ஸ், எங்கள் தெரிவு இரும்புக்கை மாயாவி. மற்றபடி பதிவில் சொல்லப்பட்ட விடயங்கள் எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படிதான் :)

Unknown சொல்வது:

எனக்குகம் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி என்றால் உயிர் நானும் சஜீவன்,ராஜசீலன் மூவரும் சேர்ந்து வாசிப்போம் அந்த 3ம ஆண்டு ஆரம்பகால கல்லூரி வாழ்க்கையை மறக்கமுடியாது.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

வந்தி, பழைய நினைவுகளை மீட்டு கொடுக்கிறது உங்களது பதிவு.

அம்புலிமாமா, பாலமித்ரா, ஜேம்ஸ்பாண்ட் 007, இரும்புக்கை மாயாவி, இன்னும் பல காமிக்ஸுகளின் பரம ரசிகன் நான், பக்கத்து வீட்டு அக்காவிடம் வாங்கி வாசித்து முடிக்கையில் இரவு 12 மணியாகிவிடும், வீட்டில் திட்டு வாங்கி தூங்குவேன்.

007 பாதிப்பு இன்னும் போகவில்லை என்பது எனது மின்னஞ்சல் முகவரியை பார்த்தால் தெரியும்.

பதிவிற்கு நன்றி...

Jana சொல்வது:

நண்பா... அடி மடியிலையே கைவைத்துவிட்டீங்களே????
ஒவ்வொருநாளும் பதிவெழுதவேண்டும் என்று கிடைக்கும் இரவுவேளைகளில் முழித்திருந்து ஒவ்வொன்றாக சிந்தித்து முதல்நாளே ட்ராவ்விலை சேமித்து மறுநாள் பதிவிட்டு செல்வது என் வழக்கம்.
சத்தியமாக சொல்கின்றேன். இன்று பப்ளிஸ் பண்ண வைத்திருந்து ட்ராப்பில் காத்திருக்கும் பதிவு..இது பற்றித்தான்.
அவ்வ்.... இன்றுபதிவுக்கு நான் என்ன செய்வேன்????
ஐயோ.. ஒத்த அலைவரிசை (கமலின் இரசிகர்கள் என்பதை தவிர) நிறைய இருவருக்கும் இடையில் ஓடுதுபோல!

Unknown சொல்வது:

அண்ணா உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு

நாங்க எல்லாம் இப்பதான் மாயாவி காமிக்ஸ் வாசிக்கிறம் ஆனா கிடைகிரதுதான் கஷ்டம

ஷஹன்ஷா சொல்வது:

mmm...பள்ளி நினைவுகள் அருமை....

Unknown சொல்வது:

பாடசாலைக் காலத்தை நினைவூட்டியதற்கு நன்றி.
மாதம் இரண்டு முறைவரும் ராணி காமிக்ஸ்க்காக காத்திருந்தது எல்லாம் ஒரு காலம்.

கார்த்தி சொல்வது:

அண்ணோய் நிங்களும் எங்கள் இனம்தான்! பள்ளிக்காலத்தில் நானும் எங்கள் நண்பர்களும் விரும்பி காமிக்ஸ் புத்தகம் வாசிப்போம்!
சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஸ்கொலசிப் எக்ஸாமுக்கு முதல்நாள் வீட்டுக்கு புதுசா 3ராணிகாிக்ஸ்புத்தகம் வந்திச்சு. அதவாசிக்கிற ஆர்வமீதியாலயே நான் ஒழுங்க பரீட்சை எழுதலே. ஆன பாஸ் பண்ணிட்டன். ஒழுங்கா எழுதியிருந்தா இன்னும் கூடவந்திருக்கும். அந்தளவு அப்புத்தகங்கள் என்ன பாதிச்சிருக்கு!
இன்னும் யாழ்ப்பாணத்தில ஏறாத்தாழ 100புத்தகமளவில் வைச்சிருக்கன்!

Bavan சொல்வது:

அட.. நானும் படிச்சிருக்கிறேன், என் பேவரிட் மாயாவிதான்.
ஆனால் இப்போது படக்கதைகளைப் படிக்கவே பிடிப்பதில்லை..;)

அது ஒரு காலம்..:)

கார்த்திகைப் பாண்டியன் சொல்வது:

அண்ணே.. ராணி காமிக்ஸ் காலாவதி ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு.. வெளிநாட்டு கதைகளை பிரசுரிச்சு வந்தவரை நல்லா இருந்தது.. அவங்களே சொந்தமா படம் போட்டு கதை சொன்ன காலத்தோட சீன் முடிஞ்சு போச்சு.. இப்போ வரைக்கும் லயனும் முத்துவும் தான் காமிக்ஸ கொஞ்சம் உயிரோட வச்சிருக்கு..:-))

எஸ் சக்திவேல் சொல்வது:

நீங்கள் "நல்ல" படங்கள் போட்ட கதைகள் வாசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. எங்கள் காலத்தில் லாரன்ஸ் / டேவிட் , ரிப் கிர்பி, இரும்புக்கை மாயாவி, மாயாவி, ஜானி நிரோ, என்றுதான் ஹீரோக்கள். மருந்துக்கும் பெண்கள் இருந்ததாக ஞாபகம் இல்லை. .

எஸ் சக்திவேல் சொல்வது:

ஆங், 'கத்தி முனையில் மாடஸ்தி பிளைசி" என்று ஒன்று வாசித்தது அரை குறையாக கருப்பு/வெள்ளையில் ஞாபகத்திற்கு வருது. :-)