நிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதை

"துளித் துளி மழையாய் வந்தாளே" என ஹரீஷின் செல்போன் தமன்னாபோலவே சிணுங்கியது.

"ஞாயிறு காலேலையும் நித்திரை கொள்ளவிடாமாட்டங்கள்" என நினைத்தபடி தூக்க கலக்கத்தில் "ஹலோ" என்றான்.

"டேய் மச்சான் நாங்கள் எல்லோரும் கிரவுண்டுக்கு வந்துட்டம் உடனே வா" எஸ் எம் எஸ் போல் சொன்னான் நண்பன் வருண்.

"குளிச்சிட்டு வாறன்டா" என்றபடி பாத்ரூமில் நுழைந்தான் ஹரீஷ்.

ஹரீஷ் கணணிப் பொறியியளாலனாக ஒரு தனியார் கம்பனியில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு கொழும்பில் வசிக்கும் இளைஞன். வாரத்தில் ஐந்துநாளும் ஜாவாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சனி ஞாயிறு என்றால் நண்பர்களுடனும் கிரிக்கெட்டுடனும் குடும்பம் நடத்துபவன். ஆறடி உயர ஜிம்பாடி பார்ப்பவர்களை அவனை ஒரு விளையாட்டுவீரனாகவே எண்ணவைக்கும். பாடசாலைக் காலத்தில் பாடசாலை அணிக்கும், பல்கலைக் கழக வாழ்க்கையில் பல்கலைக் கழக அணிக்கும் கிரிக்கெட் விளையாடிய சகலதுறை வீரன். நல்ல படிப்பு, நல்ல வேலை என சகல செளபாக்கியங்களும் இருந்தும் இன்னும் திருமணம் செய்யவில்லை.

"அம்மா டீ" உடலைத் துடைத்தபடி ஹரீஷ் குசினிக்குள் குரல் கொடுத்தான்.

டீயுடன் வந்த அவனின் தாய்,
"தம்பி உனக்கு அடுத்த பட்சில் படிச்ச ஒரு பெட்டையின் சாதகம் வந்திருக்கு, இனியாவது ஓம் என்று சொல்லடா?"

"காலமையே உங்கடை ஆக்கினியைத் தொடங்கிவிட்டியளே, நான் சிசிஎன்ஏ செய்யவேண்டும், இன்னும் நல்ல பொசிசனுக்கு வரவேண்டும் அதன் பிறகு பார்ப்பாம்" சலித்தபடி சொன்னான்.

"நீ இன்னும் அவளை மறக்கவில்லை போலிருக்கின்றது, துலைவாள் என்ரை பிள்ளைக்கு என்ன மருந்துபோட்டு மயக்கினாளோ"

"சும்மா அவளைத் திட்டாதை, எனக்கு டீயும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்" கோபத்துடன் பைக்கை உதைத்தான் ஹரீஷ்.

காலி வீதியில் போகும் போது பழைய ஏ எல் கால நினைவுகள் மெல்ல தாலாட்டத் தொடங்கின.

யாழில் பிரபலமான அந்தப் பாடசாலைகளின் வருடாந்த கிரிக்கெட் போர் நடந்துகொண்டிருந்தது. தன் கல்லூரிக்காக ஆரம்ப வீரனாக இறங்கிய ஹரீஷ் நான்குகள் ஆறுகள் என அடித்து நொருக்கிக்கொண்டிருந்தான். போட்டியைப் பார்க்கும் மாணவர்களினதும் ஏனைய பார்வையாளர்களினதும் சத்தம் வானைப் பிளந்தது. ஸ்கோர்போர்ட் பக்கம் இருந்த பக்கத்து பாடசாலை மாணவிகளின் கூட்டத்தில் ஒருத்திமட்டும் ஹரீஷின் ஒவ்வொரு ஓட்டத்தையும் கைத்தட்டியும் துள்ளியும் ரசித்தாள்.

முதல் நாள் ஆட்டம் முடிந்தது ஹரீஷ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தான். தன் சக மாணவர்கள் ஏனைய மாணவர்கள் என பலரும் கட்டிப்பிடித்தும் கைகொடுத்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

"வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" ஒரு தேன்குரல் தன்னுடைய மெல்லிய கைகளை கொடுத்து மின்னல் போல் வாழ்த்திவிட்டுச் சென்றது.

அவளின் உருவம் ஹரீஷின் மனதில் மெல்லிய விம்பமாக பதிந்துவிட்டது. சில நிமிடங்களில் அவளை மறந்துவிட்டு அடுத்தநாள் போட்டியில் எப்படி எதிரணியை விழுத்துவது என அணித்தலைவருடன் ஆலோசித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

அடுத்தநாள் ஹரீஷ் தன் வேகத்தில் எதிரணியை மிரட்டிக்கொண்டிருந்தான். ஜோர்க்கர்களும் பெளன்சர்களும் எகிறிப்பறந்தன. அத்துடன் அவன் கல்லூரி வெற்றியையும் ஈட்டிவிட்டது. ஹரீஷ் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் போது மீண்டும் தூறலாக அதே தேன் குரலில் "வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" இம்முறை கைகொடுக்காமல் மெல்லிய புன்னகை மட்டும். அவனும் ஒரு சிரிப்புடன் நன்றி எனச் சொல்லிவிட்டு அவளின் முகத்தையும் ரையையும் பார்த்தான்.

மறுநாள் மாலை ரியூசனில் ஹரீஷ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"இந்த முறை அவங்கடை ஆட்டத்துக்கு ஆப்படித்துவிட்டோம் மச்சான்."
"நீ ஆப்படிச்சாலும் அந்தக் கல்லூரி கோச்சின் மகள் நீ அடித்த ஓவ்வொரு அடிக்கும் கை தட்டினாளே"
"அட அவள் தேவா மாஸ்டரின் மகளோ, ரண்டு நாளும் என்னைப் பாராட்டினாள் அவளின் ரையைப் பார்த்தே நினைச்சேன். சூப்பர் பிகரடா"
"மச்சான் நீ நினைச்சால் அவளை மடக்கலாம்" நண்பர்கள் உசுப்பேத்தினார்கள்.
"இல்லையடா என்ரை லட்சியம் தேசிய அணியில் ஆடி மெக்ராத்தின் பந்துக்கு சிக்ஸ் அடிக்கவேண்டும்"
"அடப்பாவி நல்ல கனவு எனிவே உன் கனவு பலிக்க வாழ்த்துக்கள்"

கெமிஸ்ரி மாஸ்டர் உள்ளே வரவும் இவர்களின் கதையும் நின்றுவிட்டது.

வகுப்பு முடிந்ததும் "சொறி மச்சான் அம்மா நல்லூரானுக்கு ஒரு சலூட் அடித்துவிட்டு வரச்சொன்னார், நான் மற்றப்பக்கத்தாலை போறன் என்றபடி " சைக்கிளை எதிர்த்திசைக்கு திருப்பினான் ஹரீஷ்.

"ஹலோ ஹலோ" தன் பின்னால் ஒரு பெண் குரல் கூப்பிடுவதைக் கேட்டதும் சைக்கிளை ஸ்லோவாக்கி திரும்பிப் பார்த்தால் அந்த கோச்சின் மகள்.

"ஹலோ என்ன இந்தப் பக்கம்?" ஹரீஷ்
"நானும் உங்கடை ரீயூசன் தான் அடுத்த பேட்ச் நான் பயோ நீங்கள் மட்ஸ்தானே.."
"ஓமோம் நான் மட்ஸ்தான் அம்மாவின் விருப்பம் நான் எஞ்ஜினியராவது அப்பாவோ என்னை கிரிக்கெட் வீரனாக்கி அழகு பார்க்க விரும்புகின்றார், ஆமாம் உங்கடை பேர்?"

"ஐயோ உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் என் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன், லாவண்யா"

"உங்களைப்போலவே உங்கடை பேரும் அழகாக இருக்கு, உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?"

"பிடிக்குமாவா? பைத்தியம் நான், ஊரிலை பொடியள் டெனிஸ் போலிலை விளையாடினாலும் ஒருக்கால் நிண்டு பார்த்துவிட்டுப்போற கேஸ் நான்"

"சொறி லாவண்யா நான் நல்லூர் கோயில் பூட்டமுன்னர் போகணும், அதாலை நாம் சைக்கிளில் கதைத்தபடி போவோமா?" என்றபடி இருவரும் பரலலாக கிரிக்கெட் பற்றிக் கதைத்தபடியே சென்றார்கள்.

கல்வியங்காட்டுச் சந்தியில் லாவண்யா தான் அரியாலைப் பக்கம் போகவேண்டும் என்றபடி ஹரீசுக்கு பாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அன்றைய ஹரீஷின் இரவை லாவண்யாவே ஆக்கிரமித்திருந்தாள், முரளியின் தூஷ்ராவில் இருந்து சகலதும் தெரிந்துவைத்திருக்கின்றாள். இப்படியான பெண் எனக்கு வாய்த்தால் தான் பொருத்தமாக இருக்கும்.

தினமும் ரியூசன் முடிய இருவரும் ஒன்றாக வரத்தொடங்கினார்கள். வகுப்புகளிலும் பொடியளிடை அரசல்புரசலாக இவர்கள் கதைதான். சிலர் நேரடியாகவே கேலி செய்தார்கள். எக்ஸாம் நெருங்கி வந்தபடியால் ஹரீஷின் கவனம் படிப்பிலும் போனது.

"எப்படியும் சோதினை முடிந்ததும் என்ரை லவ்வை அவளுக்குச் சொல்லவேண்டும். கார்ட்டுடன் கடிதம் எழுதிக்கொடுப்பதோ சீ அது பழைய முறை அப்போ நேரடியாக போலைப் போடவேண்டியதுதான். எப்படியும் ஓம் என்பாள்" என மனசுக்குள் நினைத்தபடி பாஸ் பேப்பரைப் புரட்டினான்.

சோதினையும் முடிஞ்சு விட்டது, வெள்ளிக்கிழமைகளில் காதலைச் சொன்னால் பலிக்கும் என எங்கேயோ வாசிச்ச நினைப்பில் ஒரு வெள்ளிக்கிழமை நல்லூரானைத் தரிசித்தபின்னர் அவளுக்காக கல்வியங்காட்டுச் சந்தியில் நின்றான் ஹரீஷ்.

"ஹாய் ஹரீஷ், எப்படி எக்ஸாம்?"
"டவுள் மேட்ஸ் ஓக்கே, கெமிஸ்ரி தான் கொஞ்சம் கஸ்டப்படுத்திவிட்டது".
"ஓ அப்படியா"
"நான் உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணுகின்றேன்"
"எனக்காகவா ஏன் என்ன விசயம்?"
"ம்ம்ம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, சொல்லாமலும் இருக்க முடியவில்லை வாங்கோவன் லிங்கத்திலை ஒரு ஐஸ் கிறீம் குடிச்சபடி பேசுவம்"
"ஐயோ ஆளை விடுங்கோ யாராவது கண்டால் பிரச்சனை, பரவாயில்லை சொல்லுங்கோ"
"ஐ லவ் யூ"
"நினைச்சேன் இப்படி ஏதாவது உளறுவியல் என்று, என்னைப் பற்றி என்ன தெரியும்"
"தேவா மாஸ்டரின் மகள், பயோ படிக்கின்ற கெட்டிக்காரி, சுஜாதாவில் இருந்து கிரிக்கெட் வரை தெரிந்துவைத்திருக்கின்ற அறிவாளி, வேறை என்ன தெரியனும்?"

" என் பெயர் தெரியுமா?"
"லாவண்யா"
"முழுப்பெயர் தெரியுமா?"
"ம்ம்முழுப்பெயர்..."
" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்"..

இனிப் பவன் தொடர்வார்.

இந்த தொடர்கதையை நாம் சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது நான் எழுதியதன் தொடர்ச்சியை இன்னொருவர் எழுதுவார். இது ஒரு புதுவகையான முயற்சி. என்னைத் தொடர்ந்து நண்பர் பவன் எழுதுவான்.

பவனின் கதை நிலாக் காதல்

13 கருத்துக் கூறியவர்கள்:

maruthamooran சொல்வது:

வந்தி….!

நல்லாயிருக்கு நாம் பார்த்த பார்க்கிற பாடசாலைக் காதலை இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். சுபாங்கனின் சந்தியாவின் வருகைக்குப் பின்னர் நான்காவது கதையாக இதனை வாசிக்கிறேன். ஆனால், சுபாங்கனே முதலிடம் வகிக்கிறார்.

ஒரு உண்மை: ‘காதல்’ என்று வந்துவிட்டு மதம் மண்ணாங்கட்டி என்றெல்லாம் சொன்னால் கடுப்புத்தான் வருகிறது.

ARV Loshan சொல்வது:

ம்ம்.. நல்ல ஆரம்பம்..
கதைக் களம் கிரிக்கெட்டோடு ஆரம்பிப்பது நல்லாவே இருக்கு..
அடுத்தாளுக்கு ஒரு இடத்தில் திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புக் கொடுத்துள்ளீர்கள் ;)

"ம்ம்முழுப்பெயர்..."
" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்"..///

ஸோ வாட்? ;)

இது பற்றி பவனிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

ம் நடக்கட்டும் நடக்கட்டும்

M.Thevesh சொல்வது:

நீங்கள் கதையை யாவரும் ரசிக்கும்
வண்ணம் ஆரம்பித்துள்ளீர்கள்.
உங்களைத் தொடர்ந்து எழுதுபவர்
எப்படிக் கொண்டுபோவார் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கன்கொன் || Kangon சொல்வது:

ஆங்....

கதை நல்லா இருக்கு.

கதையை வாசிக்கும்போது தெரிந்த சிலரின் விம்பங்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.... ;-)

அருமையான ஆரம்பம், அருமையான முயற்சி.

பவன் கலக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

Subankan சொல்வது:

ஆகா, நல்ல ஆரம்பம் மாமா, தொடரட்டும்

Jana சொல்வது:

நல்ல ஆரம்பம். அஞ்சலோட்டத்தில் நல்ல தொடக்கம். கோல்கள் சிறப்பாக பரிமாற்றப்படட்டும். காதலுக்கு மதங்கள் தடையில்லை என்ற கருவில் போகப்போகின்றதுபோல இருக்கு!

சுபாங்கன் தொடங்கிய தொடர்கதை, கூல்போய் எழுதும் தொடர்கதை, அஞ்சல் ஓட்டம் என்று இலங்கைப்பதிவர்கள் எல்லோருமே கதைகளில் இலயிப்பது மிகச்சந்தோசம் தருவதுடன், சுவாரகசியமும் கூட. பவனின் அடுத்த ஓட்டத்திற்கு வெயிட்டிங்.

Bavan சொல்வது:

நிலாக்காதல் -2
http://nbavan7.blogspot.com/2010/08/2.html

ஆதிரை சொல்வது:

நல்ல ஆரம்பம்..

பவனுக்காக காத்திருப்பு!!!

கோபிநாத் சொல்வது:

நல்ல ஆரம்பம் தல...கதையின் தொடர்ச்சி உங்க பதிவில் லிங்கு இணைப்பு கொடுத்தால் இன்னும் நல்லாயிருக்கும் ;))

எம்.எம்.அப்துல்லா சொல்வது:

good start, very nice.

வடலியூரான் சொல்வது:

ம்ம்ம் உண்மைக் கதையோ..உங்கடை மாத்ரிக் கிடக்குது

Mathuvathanan Mounasamy / cowboymathu சொல்வது:

ஹரீஷ் பெயர் ஏனோ அந்நியமாக இருக்குது. சின்னப்பொடியங்களுக்குத்தான் இந்தப் பெயர் இப்ப இருக்குது.

ம்ம்ம்.. உயர்தரக் காதல் நல்லா வந்திருக்கு, திருப்பமும் கூட