மொழிக்கு மாநாடு என்பது காலத்தின் கட்டாயம். இதுவரை நடந்தேறிய உலகத் தமிழாராட்சி மாநாடுகள் இதனைத் தான் செய்தன. அங்கே தமிழுக்கு மட்டும் தான் ஆராய்ச்சி நடந்தது. இன்றைக்கு இணையத்தில் ஆங்கிலத்திற்க்கு அடுத்து ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்க்கு என பொறுப்பான குழு இருக்கும் போது, கருணாநிதியால் முதலில் தமிழாராய்ச்சி மாநாடு என அறிவிக்கப்பட்டு பின்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அவர் கூறிய காரணம் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த போதிய அவகாசம் போதாது என தமிழாராய்ச்சி மன்றம் மறுத்துவிட்டது. இதனால் தான் என்னவோ தன்னுடைய தலைமையுரையில் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளை விட இது பெரியது சிறப்பானது என கூறினாரோ.
உண்மைதான் ஏனென்றால் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளில் தமிழைத் தான் ஆய்வு செய்தார்கள். கோவையிலோ தமிழர் தலைவன் என்பவரையல்லவா ஆய்வு செய்தார்கள்.
எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் வெளியே கேட்காத குரல்களுக்கும் மத்தியில் செம்மொழி மாநாடு நடந்துமுடிந்துவிட்டது. பலரால் எதிர்பார்க்கப்பட்டது போல் கருணாநிதிக்கு பிரமாண்டமாக நடந்த பாராட்டுவிழா போல் தான் செம்மொழி மாநாடு நடந்தேறியது.
முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் மாநாட்டின் மைய்ய நோக்குப்பாடலே தமிழிசையில் இல்லாமல் தமிழில் அழகாகப் பாடமுடியாத தமிழைக்கொலை செய்யும் பாடகர்களினால் ஏஆர் ரகுமானால் பாடவைத்து தன்னை மலையாளி என காட்டிக்கொள்வதில் பேருவகை அடையும் கெளதம் வாசுதேவ மேனனினால் படமாக்கப்பட்டது. பாடலை கவிஞர் கருணாநிதி அழகாக தொகுத்திருந்தார். தொல்காப்பியம், திருக்குறள், மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்த வரிகளை அழகுறத் தொகுத்தபடியால் இதனை அவர் எழுதிய கவிதை எனச் சொல்லமுடியாது தானே.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பது போல் கோவையில் எத்தனையோ மொழிஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் உரைகள் நிகழ்ந்திருந்தாலும் கவியரங்கத்தில் கருணாநிதி புகழ்பாடிய கவிஞர்கள் இதனைத் தலைவன் விழாவாகவே மாற்றிவிட்டார்கள்.
மு.மேத்தா,வாலி,நா.முத்துக்குமார் என மதிப்பு வைத்திருந்த கவிஞர்கள் தங்கள் மதிப்பையும் தமிழ்த் தாயின் மதிப்பையும் குறைத்தே விட்டார்கள். வைரமுத்து சொல்லவே தேவையில்லை கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கவே பிறந்தவர். அண்ணா நூற்றாண்டுக் கவியரங்கத்தில் தம்பிக்கு கவி பாடி, அண்ணாவை உயர்த்துகின்றேன் என மஹாத்மாவையே கீழிறக்கிய அற்பன். கருணாநிதியின் பேர்த்தி கயல்விழியோ கவிதை வாசிக்கும் போது "ஸ்டாப்" என ஆங்கிலத்தில் எழுதி அந்த இடங்களில் நிறுத்தி வாசிக்கும் "புகல்" வாய்ந்த கவிஞர், தன் தாத்தாவின் உமிழ்நீர் கூட தமிழ்நீர் எனப் புதிய கண்டுபிடிப்பை மாநாட்டு மேடையில் முழக்கி பெருமை சேர்த்துவிட்டார்.
வாலியோ தமிழுக்கு ஆராய்ச்சி செய்யாமல் குஷ்புவை ஆராய்ச்சி செய்தார். சோ என்ற விஷக் கிருமியைக் கண்டிக்கின்றேன் என சாதியை தமிழாராய்ச்சி மேடையில் உரைத்தார்.
ஐயா கவிஞர்களே நடந்ததோ செம்மொழி மாநாடு. ஒரு வரலாற்று நிகழ்வு அங்கே ஏன் அரசியல்? சினிமா?. உங்கள் தலைவன் சிறந்த கதாசிரியர் தான் அதனால் தான் என்னவோ மாநாடு தொடங்குவதற்க்குச் சிலநாட்களுக்கு முன்னரும் நல்லதொரு திரைக்கதை அமைத்திருந்தார். செம்மொழி மாநாட்டை கருணாநிதி தமிழுக்கு எடுத்த விழாவாக நடத்தி முடித்தபின்னர் அவருக்கு நீங்கள் எடுக்கும் பாராட்டுவிழாவில் அவரைப் பாராட்டி இருந்தால் ஒருதரும் உங்களைப் பழிக்கமாட்டார்களே? ஆனால் அப்படிச் செய்யாமல் நீங்கள் அனைவரும் இப்போ பாணபத்திர ஓணான்டியை விட கீழிறங்கிவிட்டீர்கள். இந்தக் கலங்கத்தைத் துடைக்க நீங்கள் எத்தனை கவிராயன் கவிதையோ, கிருஷ்ணாவதாரமோ, கண்ணீர்ப்பூக்களோ எழுதினாலும் முடியாது.
கவியரங்கம் தொடங்குமுன்னரே கருணாநிதி என்னைப் பாடாமல் என் தமிழைப் பாடுங்கள் என உத்தரவிட்டிருக்கலாம். ஏனோ செய்யவில்லை.
இனியவை நாற்பது என்ற தமிழக் கலாச்சார ஊர்வலத்தினை காட்டிய கலைஞர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் மன்னரையும், மஹாராணிகளையும், இளவரசர்களையும், இளவரசியையும் அவரது புதிய தோழி பச்சைத் தமிழச்சி குஷ்புவையும் காட்டி தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். கருணாநிதியின் குடும்ப அங்கத்தவர்கள் 84 பேர் மேடையில் அமர்ந்திருந்ததாக விகடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
தமிழை ஆட்சிமொழியாக கொண்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்களை அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். சில நாடுகளில் இருந்து அரசியல்ப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் பக்கத்து நாடான இலங்கையில் இருந்து எந்த அரசியல்வாதிகளும்(தமிழ் பேசும்) அழைக்கப்படவில்லை.
பேராசிரியர் சிவத்தம்பி ஆரம்பத்தில் இதற்க்குச் செல்லமாட்டேன் என மறத்து பின்னர் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றி நாமும் ஆங்கிலம் பேசுவோம் என செம்மொழி மாநாட்டில் நிரூபித்துள்ளார்.
கம்பனுக்கு கவிபாடும் கம்பவாரிதி ஜெயராயோ "நாம் தமிழ்த் தாய் பெற்றவர்கள், கருணாநிதியோ தமிழத் தாயைப் பெற்றவர்" என ஒரு வரியைச் சொல்லி கருணாநிதியைக் குளிர்வித்திருக்கின்றார். யாழ் நூலகம் எரித்தவர்களுக்கு துணை போனவருக்கு பாராட்டுவிழா நடத்தியவர்களிடம் இதனைவிட அதிகம் எதிர்பார்த்தேன்.
தமிழில் கதைத்தால் குற்றமென அபராதம் விதிக்கும் பத்மா சுப்பிரமணியத்தின் நடன நிகழ்வு, ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற வாசுகி ஜெகதீஸ்வரனின் இந்திய வம்சாவளி நடனங்கள். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேஸ்வரன் நாட்டுக்கூத்தை வாசுகியின் நடனத்திற்க்குப் பதிலாக இலங்கையில் இருந்து தருவித்திருக்கலாமே.
இன்னும் பல குற்றச்சாட்டுகளை எழுதலாம். ஆனாலும் என்னை தமிழனாகப் பார்க்காமல் ஈழத்தமிழனாகப் பார்க்கும் சில திமுக அன்பர்கள் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் இதனை எழுதியிருக்கின்றேன் என நினைத்து திட்டுவார்கள். அன்பர்களே தமிழனாக இருந்து நான் சொன்ன சில குற்றச்சாட்டுகளைப் ஆராய்ந்தால் நடந்தது தலைவனுக்கு பாராட்டுவிழாவே அன்றி தமிழன்னைகான விழா இல்லை என்பது புலப்படும்.
தனக்கு பாராட்டு விழாவாக இல்லாமல் இதனை செம்மொழி விழாவாகவே நடத்தியிருந்தால் கலைஞர் கருணாநிதி என்றென்றும் தமிழர் மனங்களில் பழைய கசப்புகளை மறந்து இடம் பிடித்திருப்பார்.
பட உதவி : ஆனந்த விகடன்
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
43 கருத்துக் கூறியவர்கள்:
-
சில இடங்களில் நல்ல ஆதங்கங்கள்... சில இடங்களில் அபத்தமான ஆதங்கங்கள்... - இது தான் எனது அபிப்ராயம்!
கௌதம் மேனன் - மலையாளி - கருத்தை ஏற்க மறுக்கிறேன். இப்படியான கருத்துக்கள் எம்மைச் சிறுமையாக்கும்.
கருணாநிதி புகழ் பாடுதல் - முற்றாக ஏற்கிறேன்.
ஆங்கிலத்தில் பேசுதல் - அது சந்தர்பம் சூழ்நிலை தேவை என்பவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும், ஆனால் தனித்தமிழில் பேசியிருந்தால் இன்னும் அழகாகவே இருந்திருக்கும்.
நாட்டுக்கூத்தைக் கொண்டுபோயிருக்கலாம், பரதத்தை விட்டிருக்கலாம் என்ற கருத்துடன் உடன்பாடில்லை. நாட்டுக்கூத்தையும் போட்டிருக்கலாம் ஆனால் அதற்காக இன்னொரு கலையை இகழ்வது அழகல்ல.
மேடைகளில் சாதிவெறி கொண்டு உளறியவர்களுக்கு எனது கண்டனங்கள். தமிழன் என்றால் சாதிவெறி கொண்டவன் என்று நிரூபித்திருக்கிறார்கள் (இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று வேறுபாடு சம்பந்தமில்லாதது).
செம்மொழி மாநாடு என்பதை விட, கருணாநிதிக்கு சர்வதேசப் பாராட்டு விழா என்று நடத்தியிருக்கலாம்! ஏதோ தமிழே கருணாநிதிதான் என்று பேசுவதெல்லாம் மிக மிக அளவுக்கதிகமானது - இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதே கொடுமை!.
//தனக்கு பாராட்டு விழாவாக இல்லாமல் இதனை செம்மொழி விழாவாகவே நடத்தியிருந்தால் கலைஞர் கருணாநிதி என்றென்றும் தமிழர் மனங்களில் பழைய கசப்புகளை மறந்து இடம் பிடித்திருப்பார்.//
மணம் என்ற பெயரில் நாற்றம் பரப்பும் கருவாட்டு கூடை... நாற்றம் போகாது.
உங்கள் எதிர்பார்ப்பு வீண்
நண்பரே..
இது முதல்வருக்க நடந்த பாராட்டுவிழாதான்..
பெயர்தான் செம்(மறியாட்டு)மொழிமாநாடு..
எதிர்பார்த்தது தானே... :(
பேபராசிரியர் கா.சிவத்தம்பியின் அங்கிலப் பேச்சைப் பார்த்தேன், ஏனோ பெரிய வெட்கக் கேடாக உணர்ந்தேன்.
பட்டிமன்றத்திலும் இதே கூத்துத்தான்.
தமிழை வளர்ப்பதில் பெரிய பங்கை வகிக்க வேண்டியது வெள்ளித்திரையா, சின்னத்திரையா அல்லது எழுத்துத் துறையா என்று தலைப்பு வைத்துவிட்டு கருணாநிதி புகழ் பாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனா மனுசன் எல்லாப் புகழ்ச்சியையும் கேட்டுக்கொண்டு அசையாம அப்பிடியே உணர்வுகளே இல்லாதமாதிரி இருந்திச்சு, எப்பிடி அப்பிடி இருக்கிறது எண்டு பழகோணும்.
செம்மறி தினம் செம்மறி தினமே தான்.
தமிழிகத் தமிழன், புதுச்சேரி தமிழன், ஈழத்தமிழன், மலேசியத்தமிழன், சிங்கபூர் தமிழன், பிரான்ஸ் தமிழன், ஐரோப்பா தமிழன் இப்படி எத்தனையோ அடையாளத்தோடு தமிழன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறான். ஆனால், மானமுள்ளத்தமிழன், மானங்கெட்ட தமிழன் என்ற இரண்டு வகைத்தமிழர்கள் மட்டுமே உலகில் உள்ளனர் என்று இந்தமாநாடு நிறுபித்துள்ளது.
முன்பே எதிர்பார்த்ததுதான், செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கும் விழா தமிழுக்கானது அல்ல என்று.
உங்கள் ஆதங்கத்தை அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பரே.
எதிர்பார்த்ததுதான் :(
சுய விளம்பரதாரர்களின் மேடை நிகழ்ச்சி பற்றி எல்லோரும் எதிர்பார்த்தது தான் நடந்தது. பாவம் மனுசன். போற நேரத்திலையும் தாத்தாவுக்கு பொன்னாடை கேட்குதாம். இம் மாநாய்டு பற்றிய விமர்சனம், பரந்து பட்ட ரீதியில் உள்ளது. அனைத்துத் துறை சார் வால்களையும் நன்றாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
தமிழை வைத்து நடக்கும் பிழைப்புத் தான் இது. பாவம் மனுசன். சேடம் இழுக்கிற நேரத்திலையும்???
பாசத் தலைவனுக்கு இது இன்னொரு பாராட்டு விழாவாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்தது தானே ...வேறு மாதிரியாக நடந்திருந்தால் அதிசயித்திருக்கலாம்
அருமையான அலசலும் அதன் வெளிப்பாடும் !இன்னும் சொல்லியிருக்கலாம் போல
இருக்கு வந்தியத்தேவன்.
நேற்றுதான் செம்மொழி பற்றி தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைத்தது, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் பார்த்து நொந்து விட்டேன்.
”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”
ஐயகோ? ஏன்தான் தமிழுக்கு இந்த சோதனையோ?
கோவி.கண்ணன் அவர்களின் கருத்துதான் என் கருத்தும். ஆனால் சிறு திருத்தத்துடன்.
மணம் என்ற பெயரில் துர் நாற்றம் பரப்பும் கருவாட்டு கூடை... துர் நாற்றம் போகாது.
உங்கள் எதிர்பார்ப்பு வீண்.
[ நாற்றம் என்பது மணம் என்பதின் தூய தமிழ் சொல் ( தவறெனின் திருத்தவும் ). நீங்கள் சொல்ல வந்தது "துர் நாற்றம்".]
வந்தி உங்கள் நேர்மையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.
யாருக்கும் அஞ்சாமல் துணிவாக மனதில் பட்டதை சொல்லியுள்ளீர்கள்.
நான் ஒரு சில நிகழ்வுகளைப் பார்த்து மனம் நொந்து பார்ப்பதை விட்டுவிட்டேன்.
கவியரங்கம் பார்க்க ஆசைப்பட்டேன்.
அநியாயம்.. பார்த்து அந்தக் கவிஞர்கள் மேல் இவ்வளவு நாளும் வைத்திருந்த மதிப்பை (இருந்த கொஞ்சமும்)எல்லாம் தொலைத்தே விட்டேன்.
கலைஞர் புகழ் பாடும் விழாவே இது.
இது செம்மறி மாநாடே..
நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய வந்தியை சூடும் சுவையுமாகப் பார்க்கிறேன்.
Keep it up
கருணாநிதியின் உமிழ் நீரைக் கூட தமிழ் நீர் என்று சொல்லிவிட்டார்கள்.
மாநாடு வெற்றியடைந்துவிட்டது. தமிழ் செத்துவிட்டது.
- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/
நான் பார்க்கவில்லை. வைரமுத்துவின் கவிவரிகளை இணையத்தில் வாசித்தேன் வந்தியண்ணா. எப்படிப்பட்ட வரிகளையெல்லாம் தந்த அந்தக் கள்ளிக்காட்டுக் கவிஞன் கருணாநிதிக்கு முன்னால் இப்படிக் கூனிப்போனாரே என்று வருத்தமாயிருந்தது. (சமீபத்திய சிலாகிப்பு: கோடு போட்டா--- இராவணன் வரிகள்). வைரமுத்து குப்பையில் கிடக்கும் குன்றிமணி என்கிற நிலைகடந்து குப்பையாகிக்கொண்டிருக்கிறார்.
உங்கள் நேர்மையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.
நடந்து முடிந்த செம்மறி மாநாட்டில்; கா. சிவதம்பி "ஈழம் என்ற சொல், சிங்களச் சொல்லில் இருந்து வந்ததாக நினைக்கிறேன்" என தனது அபிப்பிராயத்தையும் வெளியிட்டுருந்தார். இவ்வளவுக்கும் இவர் ஒரு பேராசிரியர்!!!! இதனை மானங்கெட்ட தமிழரின் மாநாடு என்பதே பொருத்தமாகும். - பஸ்பன்
ஒரு பேராசிரியர் என்ற வகையில் அவர் பக்கச்சார்பாக இருக்க முடியாது. அவர் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்ட அடிப்படையில் அப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருக்கலாம்.
அதை மறுதலிக்கும் உரிமை உங்களுக்குண்டு ஆனால் வசைச்சொற்களாலல்ல, ஆதார பூர்வமான வாதத்தின் மூலம். அக்கருத்தை மறுக்க எனக்கும் விருப்பம் ஆனால் ஆதாரங்கள் இல்லாமல் அதைச்செய்வது முறையல்ல, ஆதாரங்களுடன் மறுதலியுங்கள்.
// என்.கே.அஷோக்பரன் said...
சில இடங்களில் நல்ல ஆதங்கங்கள்... சில இடங்களில் அபத்தமான ஆதங்கங்கள்... - இது தான் எனது அபிப்ராயம்!//
உங்கள் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு அசோக்.
// கௌதம் மேனன் - மலையாளி - கருத்தை ஏற்க மறுக்கிறேன். இப்படியான கருத்துக்கள் எம்மைச் சிறுமையாக்கும்.//
எனக்கும் கெளதமை பிடிக்கும், ஆனால் அண்மைக்காலமாக தன்னை ஒரு மலையாளி என்பதைக் காட்டிக்கொள்வதில் ஆதீத ஆர்வம் காட்டுகின்றார். மின்னலே எடுக்கும் போது கெளதமாக இருந்தவர் இப்போ வெற்றி பெற்றதன் பின்னர் கெளதம் வாசுதேவ மேனனாக மாறிவிட்டார். அத்துடன் அந்தப்பாடலின் ஒளிவடிவம் கூட தமிழ்க் கிராம கலாச்சாரம் அதிகமில்லாமல், நகரத்து கலாச்சாரத்தையே காட்டுகின்றது.
//ஆங்கிலத்தில் பேசுதல் - அது சந்தர்பம் சூழ்நிலை தேவை என்பவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும், ஆனால் தனித்தமிழில் பேசியிருந்தால் இன்னும் அழகாகவே இருந்திருக்கும்.//
உண்மைதான் ஆனால் இதனைச் சிலர் தங்களின் விசக் கருத்துகளால் வேறுவிதமாக கருதுகின்றார்கள்.
// நாட்டுக்கூத்தைக் கொண்டுபோயிருக்கலாம், பரதத்தை விட்டிருக்கலாம் என்ற கருத்துடன் உடன்பாடில்லை. நாட்டுக்கூத்தையும் போட்டிருக்கலாம் ஆனால் அதற்காக இன்னொரு கலையை இகழ்வது அழகல்ல.//
நான் பரதத்தை இகழவில்லை. பரதம் திகட்டிவிட்டது. பத்மா சுப்பிரமணியம் பரதம் ஆடும்போது அதே நாளில் ஏன் இன்னொரு நடன நிகழ்ச்சி.
// செம்மொழி மாநாடு என்பதை விட, கருணாநிதிக்கு சர்வதேசப் பாராட்டு விழா என்று நடத்தியிருக்கலாம்! ஏதோ தமிழே கருணாநிதிதான் என்று பேசுவதெல்லாம் மிக மிக அளவுக்கதிகமானது - இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதே கொடுமை!.//
கருணாநிதியின் புகழில் தொல்காப்பியர், திருவள்ளுவர், புறநானூறு, அகநாறுத் தமிழப் புலவர்கள் எல்லோரும் மறைந்துவிட்டார்கள். விட்டால் கருணாநிதிதான் தமிழைக் கண்டுபிடித்ததாகவே சொல்வார்கள்.
//கோவி.கண்ணன் said...
மணம் என்ற பெயரில் நாற்றம் பரப்பும் கருவாட்டு கூடை... நாற்றம் போகாது.
உங்கள் எதிர்பார்ப்பு வீண்//
உண்மைதான் இவர்கள் துர்நாற்றம் பிடித்த கருவாட்டுக்கூடைகள்.
//முனைவர்.இரா.குணசீலன் said...
நண்பரே..
இது முதல்வருக்க நடந்த பாராட்டுவிழாதான்..
பெயர்தான் செம்(மறியாட்டு)மொழிமாநாடு..//
நன்றிகள் முனைவரே. பிரமாண்டமான செலவில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டுவிழாவாக அவரே இதனை மாற்றிவிட்டார். வேறு என்ன சொல்லமுடியும்.
//கன்கொன் || Kangon said...
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அங்கிலப் பேச்சைப் பார்த்தேன், ஏனோ பெரிய வெட்கக் கேடாக உணர்ந்தேன்.//
அவருக்கும் வயதுபோய்விட்டது. எங்கே என்ன பேசவேண்டும் என மறந்துவிட்டார் போல் தெரிகின்றது.
//பட்டிமன்றத்திலும் இதே கூத்துத்தான்.
தமிழை வளர்ப்பதில் பெரிய பங்கை வகிக்க வேண்டியது வெள்ளித்திரையா, சின்னத்திரையா அல்லது எழுத்துத் துறையா என்று தலைப்பு வைத்துவிட்டு கருணாநிதி புகழ் பாடிக் கொண்டிருந்தார்கள்.//
பட்டிமன்றத்தில் லியோனி 1008ஆவது தடவையாக கங்காகெளரி படத்தில் தான் நடிச்ச சோகக்கதையைச் சொன்னார். இந்தக் கதையை கடந்த ஜனவரியில் இலங்கையில் நடந்த தன்னுடைய பட்டிமன்றத்தில் கூடச் சொன்னது ஞாபகம் இருக்கா?
// ஆனா மனுசன் எல்லாப் புகழ்ச்சியையும் கேட்டுக்கொண்டு அசையாம அப்பிடியே உணர்வுகளே இல்லாதமாதிரி இருந்திச்சு, எப்பிடி அப்பிடி இருக்கிறது எண்டு பழகோணும்.//
யாருக்குத் தெரியும் மனிசன் காதில் பஞ்சடைந்து வைத்திருக்கின்றாரோ.
// செம்மறி தினம் செம்மறி தினமே தான்.//
நாம் எல்லோரும் செம்மறி ஆட்டு மந்தைகள் தானே இல்லையென்றால் புரியாணிக்கும் காசுக்கும் ஓட்டுப்போடமுடியுமா?
//Anonymous சீ.பிரபாகரன் said...
தமிழிகத் தமிழன், புதுச்சேரி தமிழன், ஈழத்தமிழன், மலேசியத்தமிழன், சிங்கபூர் தமிழன், பிரான்ஸ் தமிழன், ஐரோப்பா தமிழன் இப்படி எத்தனையோ அடையாளத்தோடு தமிழன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறான். ஆனால், மானமுள்ளத்தமிழன், மானங்கெட்ட தமிழன் என்ற இரண்டு வகைத்தமிழர்கள் மட்டுமே உலகில் உள்ளனர் என்று இந்தமாநாடு நிறுபித்துள்ளது.//
உண்மைதான் மானம் கெட்ட தமிழர்கள் அல்ல. மானத்தை ஒரு தனிமனிதனுக்காக மறந்த மனிதர்கள் தான் அவர்கள்.
//செ.சரவணக்குமார் said...
முன்பே எதிர்பார்த்ததுதான், செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கும் விழா தமிழுக்கானது அல்ல என்று.
உங்கள் ஆதங்கத்தை அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பரே.//
நாம் எல்லோரும் எதிர்ப்பார்பதை முறியடித்து தன்னுடைய பாராட்டு விழா போல் இல்லாமல் கருணாநிதி இதனை புதிதாகச் செய்வாரோ என நினைத்தால், அவர் வழக்கம் போல் பிரமாண்டமாக தன்னுடைய விழாவினை சர்வதேச ரீதியில் நடத்தி முடித்துவிட்டார்.
நன்றிகள் நண்பரே..
//Subankan said...
எதிர்பார்த்ததுதான் :(//
கருத்துக்கு நன்றிகள் சுபாங்கன்
//தமிழ் மதுரம் said...
சுய விளம்பரதாரர்களின் மேடை நிகழ்ச்சி பற்றி எல்லோரும் எதிர்பார்த்தது தான் நடந்தது. பாவம் மனுசன். போற நேரத்திலையும் தாத்தாவுக்கு பொன்னாடை கேட்குதாம். இம் மாநாய்டு பற்றிய விமர்சனம், பரந்து பட்ட ரீதியில் உள்ளது. அனைத்துத் துறை சார் வால்களையும் நன்றாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
தமிழை வைத்து நடக்கும் பிழைப்புத் தான் இது. பாவம் மனுசன். சேடம் இழுக்கிற நேரத்திலையும்???//
கருத்துக்கு நன்றிகள் தமிழ்மதுரம்
//பூங்குழலி said...
பாசத் தலைவனுக்கு இது இன்னொரு பாராட்டு விழாவாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்தது தானே ...வேறு மாதிரியாக நடந்திருந்தால் அதிசயித்திருக்கலாம்//
அது சரி, குடும்பத் தலைவனிடம் இருந்து வேறு மாதிரி எதிர்பார்த்த நாம் தான் முட்டாள்கள். நன்றிகள் பூங்குழலி.
//ஹேமா said...
அருமையான அலசலும் அதன் வெளிப்பாடும் !இன்னும் சொல்லியிருக்கலாம் போல இருக்கு வந்தியத்தேவன்.//
இன்னும் சொல்லி இருந்தால் பதிவு நீளமாகி நாம் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் எழுதுகின்றோம் அல்லது முட்டையில் மயிர் பிடுங்குகின்றோம் என்ற நிலை சிலருக்கு தோன்றியிருக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் சரிதானே.
உங்களின் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பதிவும் சிறப்பானது நெகிழ்வானது.
//யோ வொய்ஸ் (யோகா) said...
நேற்றுதான் செம்மொழி பற்றி தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைத்தது, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் பார்த்து நொந்து விட்டேன்.//
ஹாஹா வாழ்க வாழ்க,
// ”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”//
உண்மைதான் ஆனால் எல்லாம் பழைய சோறுகள்.
// ஐயகோ? ஏன்தான் தமிழுக்கு இந்த சோதனையோ?//
தமிழ் என்றால் கருணாநிதி என அர்த்தமாம். அவருக்கு சோதனை இல்லை. தமிழர்களாகிய நமக்குத் தான் சோதனை.
//அஹோரி said...
// [ நாற்றம் என்பது மணம் என்பதின் தூய தமிழ் சொல் ( தவறெனின் திருத்தவும் ). நீங்கள் சொல்ல வந்தது "துர் நாற்றம்".]//
நீங்கள் சொல்வது தான் சரி, நாற்றம் என்றால் நறுமணம் தான் ஆனால் நம்ம வட்டாரங்களில் நாறுகின்றது என்றால் துர்நாற்றம் எனப் பொருள் பட்டுவிட்டது.
//LOSHAN said...
வந்தி உங்கள் நேர்மையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.
யாருக்கும் அஞ்சாமல் துணிவாக மனதில் பட்டதை சொல்லியுள்ளீர்கள்.//
நன்றிகள் லோசன். எனது மொழிக்கு விழா என்றுவிட்ட தனிமனிதனுக்கு விழா எடுத்ததைப் பார்த்தால் எந்த ரோசம் உள்ள தமிழனும் கோபம் கொள்வான். நல்ல காலம் பாரதி, பாரதிதாசன், விபுலானந்தர், அண்ணா, பெரியார் எல்லாம் இந்தக் கொடுமைகளைப் பார்க்காமல் போய்விட்டார்கள்.
// நான் ஒரு சில நிகழ்வுகளைப் பார்த்து மனம் நொந்து பார்ப்பதை விட்டுவிட்டேன்.//
நான் முதல் நாள் ஊர்வலத்தை மட்டும் தொகாவில் பார்த்தேன் மற்றவை இணையத்தில் பார்த்ததினால் அடித்து அடித்து பார்த்தால் கருணாநிதி வாழ்த்துதான் பல,
// கவியரங்கம் பார்க்க ஆசைப்பட்டேன்.
அநியாயம்.. பார்த்து அந்தக் கவிஞர்கள் மேல் இவ்வளவு நாளும் வைத்திருந்த மதிப்பை (இருந்த கொஞ்சமும்)எல்லாம் தொலைத்தே விட்டேன்.//
அண்ணா நூற்றாண்டுக் கவியரங்கத்துடன் நான் கவியரங்கம் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.
//கலைஞர் புகழ் பாடும் விழாவே இது.
இது செம்மறி மாநாடே..//
இதனை நாம் சொன்னால் நம்மவர்களே தமிழகத்துச் சகோதரன் பெயரில் திட்டுகின்றார்கள்.
//LOSHAN said...
நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய வந்தியை சூடும் சுவையுமாகப் பார்க்கிறேன்.
Keep it up//
நன்றிகள் இவ்வளவு நாளும் குளிர் இப்போ வெயில் தொடங்கிவிட்டது. அதுதான் சரியான சூடு.
//ஜெகதீஸ்வரன். said...
கருணாநிதியின் உமிழ் நீரைக் கூட தமிழ் நீர் என்று சொல்லிவிட்டார்கள்.
மாநாடு வெற்றியடைந்துவிட்டது. தமிழ் செத்துவிட்டது.//
பலர் சொன்ன விடயத்தை நான்கே வரிகளில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள். உங்களைப்போன்றவர்கள் இருக்கும் வரை தமிழுக்கு அழிவேது. வாழ்க தமிழ்.
//Kiruthikan Kumarasamy said...
நான் பார்க்கவில்லை. வைரமுத்துவின் கவிவரிகளை இணையத்தில் வாசித்தேன் வந்தியண்ணா. எப்படிப்பட்ட வரிகளையெல்லாம் தந்த அந்தக் கள்ளிக்காட்டுக் கவிஞன் கருணாநிதிக்கு முன்னால் இப்படிக் கூனிப்போனாரே என்று வருத்தமாயிருந்தது. (சமீபத்திய சிலாகிப்பு: கோடு போட்டா--- இராவணன் வரிகள்). வைரமுத்து குப்பையில் கிடக்கும் குன்றிமணி என்கிற நிலைகடந்து குப்பையாகிக்கொண்டிருக்கிறார்.//
வைரமுத்து குப்பை என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்றைக்கு தன்னை ஏற்றிய ஏணியை உதைத்தாரோ. என்றைக்கு இன்னொருவருக்கு பத்மஸ்ரீ கிடைக்க உதவினாரோ அன்றைக்கே அவர் குப்பைதான். இவர்கள் எல்லாம் காசுக்கு தமிழை விற்பவர்கள் அதனால் கிடைத்த காசுக்கு கூவியுள்ளார்கள். ஆனால் வாலியும் எம்ஜீஆரைப் பாடிய வாயால் எவரையும் பாடமாட்டேன் எனச் சொல்லி இன்றைக்கு எம்ஜீஆரின் நண்பரை புகழ்ந்து தள்ளியுள்ளார். யார் கண்டார் நாளைக்கே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்(நடப்பது கடினம்) அவரை போற்றிப்பாடுவாரோ. கவிதைக்கு பொய் அழகு ஆனால் கவிஞர்கள் நேர்மையாக இருக்கவேண்டும்.
//Anonymous said...
நடந்து முடிந்த செம்மறி மாநாட்டில்; கா. சிவதம்பி "ஈழம் என்ற சொல், சிங்களச் சொல்லில் இருந்து வந்ததாக நினைக்கிறேன்" என தனது அபிப்பிராயத்தையும் வெளியிட்டுருந்தார். இவ்வளவுக்கும் இவர் ஒரு பேராசிரியர்!!!! இதனை மானங்கெட்ட தமிழரின் மாநாடு என்பதே பொருத்தமாகும். - பஸ்பன் //
என் அறிவுக்கு எட்டியவரை ஈழம் என்பது தமிழ்ச் சொல்தான். இதற்க்கு ஆதாரத்தை யாராவது தருகின்றார்களா எனப் பார்க்கவேண்டும்.
//என்.கே.அஷோக்பரன் said...
ஒரு பேராசிரியர் என்ற வகையில் அவர் பக்கச்சார்பாக இருக்க முடியாது. அவர் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்ட அடிப்படையில் அப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருக்கலாம்.
அதை மறுதலிக்கும் உரிமை உங்களுக்குண்டு ஆனால் வசைச்சொற்களாலல்ல, ஆதார பூர்வமான வாதத்தின் மூலம். அக்கருத்தை மறுக்க எனக்கும் விருப்பம் ஆனால் ஆதாரங்கள் இல்லாமல் அதைச்செய்வது முறையல்ல, ஆதாரங்களுடன் மறுதலியுங்கள்.//
அசோக் ஆதரங்களைத் தேடினால் நிச்சயம் கிடைக்கும். ஈழம் என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால் பலர் அதனைத் தங்களின் அமைப்புகளின் பெயர்களோடு இணைத்திருக்கமாட்டார்கள்.
//ஜெகதீஸ்வரன். said...
கருணாநிதியின் உமிழ் நீரைக் கூட தமிழ் நீர் என்று சொல்லிவிட்டார்கள்.
மாநாடு வெற்றியடைந்துவிட்டது. தமிழ் செத்துவிட்டது.//
அவர் கழுவிய நீர்தான் காவேரி தீர்த்தம்னு சொல்லுவாங்க. வாய் புளித்தால் வாந்திவரும்பாங்க..... ஓணாண்டி கவிஞர்களுக்கு பேதியே வந்திருக்கு.
கலைஞருக்கு கலைஞரினால் கொடுக்கப்பட்ட பாராட்டு விழாவே இந்த்ச்செம்மொழி மாநாடு.
ஈழம் என்பது தமிழ்ச்சொல்தான். அது இலங்கைத்தீவில் முன்னர் வாழ்ந்த மக்களையும் அவர்கள் பேசும் மொழியையும் குறிக்க பயன்பட்டது. அது பின்னர் வடஇந்தியாவில் இருந்து குடியேறியவர்களால் ஹெல என உச்சரிக்கப்பட்டது. ஈழவர் அல்லாதவர் அதாவது ஹெல அல்லாதவர் என்ற பொருளில் மற்றவர்கள் சிஹல என்று அடையாளப்படுத்தப்பட்டனர். இது வடஇந்தியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து வந்தவர்களை குறிக்க பொதுவாக பயன்பட்டது. அவர்களே பின்னாளில் சிங்களவர் என தமிழால் அடையாளப்படுத்தப்படுபவர்கள். ஆனால் அவர்களில் ஈழவர்களின் கலப்பும் , பாண்டிய,சேர நாட்டு தமிழர்களின் கலப்பும் பின்னர் காலமாற்றத்தோடு சேர்ந்து நிகழ்ந்தாலும் சிஹல/சிங்களம் என்பது புதிதாக தோன்றிய கலப்பு இனத்தினையும் ,மொழியையும் குறிப்பதற்கு பயன்படலாயிற்று.. இந்நிலையில் எப்படி சிங்களத்தில் இருந்து ஈழம் என்ற வார்த்தை உருவாயிற்று என்ற ஆய்வு வந்தது. ஆய்வு என்பது மாடிவீட்டில் உட்கார்ந்து கொண்டு நாலு ஆங்கில புத்தகத்தை படிப்பதல்ல.. அது கடந்த காலத்தோடு பயணிக்க கூடிய மனநிலையோடு இயல்பான சிந்தனை பார்வையோடு மக்களின் தற்கால கடந்தகால வாழ்க்கை முறையில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்தவன் மொழிச்சிந்தனையிலோ, அடுத்தவன் வழிச்சிந்தனையிலோ, அடிமைத்தனத்திலோ மேற்கொள்ளப்படாமல்... சுய விருப்பு வெறுப்புக்களை கடந்து தன்வழிச்சிந்தனையில் மேற்கொள்ளப்படவேண்டும். யாரேனும் வெள்ளவத்தையில் இருப்பவர்கள் சிவத்தம்பியிடம் இதை தெரிவிக்க முடிந்தால் கூறவும்.
மாமோய் ஏன் இந்த தாகம் ஏன் இந்த வேட்கை ஆனால் அதில் கூட நியாயம் இருக்கு....நான் ரொம்ப சின்ன பையன் என்பதால் கருத்து அதிகம் சொல்லவில்லை
ஒரு திரைப்படத்தின் பாத்திரங்கள் பல்வேறு கோணமுடையது. பலவேறு பாத்திரங்கள் உள்ளது. பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் அல்லது கதைக்கு ஏற்றாற்போல் புதிய நடிகர்களையோ அல்லது பழைய நடிகர்களையோ கூட நடிக்கவைக்கப்படும். நகைச்சுவையாக விடயங்களைச் சொல்லலாம். சிலவேளை பாத்திரத்தின் பொருத்தம் கருதி, பாத்திரத்துடன் பொருந்திப்போகும் ஒருவரை நடிக்கவைக்கலாம். ஒரு திரைப்படத்தின் கதையுடன் தொடர்பில்லாமல், ஒரு சில காட்சிகளிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ கூட, ஒரு புகழ்பெற்ற நடிகரை கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து, ரசிகர்களைக் கவருவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உள்ளன. நகைச்சுவை நடிகர்களை அல்லது நகைச்சுவையை விரும்புவோரை கவரும் விதமாக கதையுடன் தொடர்பில்லாத காட்சிகள் கூட சில திரைப்படங்களில் வந்துள்ளன.
ஆனால், ஒரு திரைப்படத்தின் கதையுடனோ, கதாப்பாத்திரத்துடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாமல், "மன்மதன் அன்பு" எனும் திரைப்படத்தில் காட்டப்படும் "ஈழத்தமிழர்" பாத்திரமானது வேண்டுமென்றே ஒரு இனத்தை வழிய இழுத்து, இழிவு படுத்தும் வகையிலானது என்பது திரைப்படத்தை பார்த்த எந்த ஒரு சாதாரணனுக்கும் புரியும்.
இச்செயலானது ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கமல் செய்த செயலானது, கமலஹாசன் எனும் நடிகன் எத்தனை கேவலமானவன் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய செயலாகும்.
Post a Comment