நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அமரர் சுஜாதாவின் கொலையுதிர் காலம் வாசிக்க முடிந்தது. ஏற்கனவே இந்த நாவல் குமுதத்தில் தொடராக வந்தபோது அரைகுறையாக வாசித்த பின்னர் முழுநாவலாக நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.
அறிவியலுக்கும் அமானுஷ்யத்துக்கும் இடையில் நிகழும் இந்த நாவலின் முடிவை சுஜாதா வாசகர்களிடமே விட்டுவிட்டார். அத்துடன் அவர் முன்னுரையில் இந்த அறிவியல் அமானுஷ்யம் போன்றவற்றுக்கு அடுத்த நூற்றாண்டிலும் பதில் கிடைக்காது என எழுதியிருந்தார்.
கதை இதுதான் கணேஷ், வசந்த் இருவரும் ஒரு சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக குமாரவியாசன் என்றவரையும் அந்த சொத்துக்குச் சொந்தக்காரியான 18 வயதே நிறைந்த எந்தக் குறையும் சொல்லமுடியாத அழகியான லீனாவையும் சந்திக்கின்றார்கள். லீனாவின் சொத்துக்கள் அவரின் 18 வயதின் பின்னரே அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என அவரது தந்தையின் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரை அந்தச் சொத்துக்களுக்கு பாதுகாவலராக அவரது சித்தப்பா குமாரவியாசனே இருந்துவந்தார்.
அவர்களின் பங்களாவையும் அதன் பின்பக்கமுள்ள அரசமரம், சுனை போன்ற சிறிய காட்டுப் பக்கம் ஏற்படும் சில அமானுஷ்யங்கள் அந்த சொத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதையும் பங்களாவின் பின்பக்கம் அடுத்தடுத்து இருவர் கொலை செய்யப்படுவதும் இவையனைத்தும் கார்த்திகை மாதத்தில் மட்டுமே நடக்கும் என ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் அத்துடன் கணேஷ் வசந்துடன் காவல்துறையினரும் நேரடியாகப் பார்த்த புகைபோன்ற அந்த ஆவியின் உருவமும் அதனது பேச்சு அழுகையும் நடப்பை ஏதோ அமானுஷ்யம் என்ற முடிவுக்கு வந்தாலும் கணேஷ் அதனை நம்பாமல் இதில் விஞ்ஞானம் கலந்திருக்கின்றது என்ற முடிவில் விஞ்ஞான ரீதியாக ஆராய வசந்தோ அமானுஷ்ய ரீதியில் ஆராய இறுதியில் யாருமே எதிர்பார்க்கத ஒருவர் குற்றவாளியாக அறியப்படுகின்றார்.
முதல் அத்தியாம் தொடக்கம் கணேஷ், வசந்த் தங்கள் பாணியில் சிறப்பாக துப்பறிகின்றார்கள். வசந்தின் சில ஜோக்குகளை வழக்கம்போல் சுஜாதா இடையில் நிறுத்திவிடுகின்றார். மெக்சிகன் சலவைக்காரி ஜோக் போல் ஒரு ஜோக் இடையில் நிற்கின்றது.
லீனா என்ற கதை நாயகியின் குணாதிசயங்கள் பிரிவோம் சந்திப்போம் மதுவிதாவை ஒத்திருந்தாலும் மதிவிதாவை விட அழகியாகவே சுஜாதா வர்ணித்திருந்தார். "நிறைய அழகிகளை கணேஷ் பார்த்திருக்கின்றான் எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும் மூக்கில்,உதட்டோரத்தில், பற்களில், குரலில், உடலமைப்பில் பருமனில், வாசனையில் தலைமயிரில் எங்கையோ ஒரு சின்ன தப்பிருக்கும், இவளிடம் இல்லை" என்ற வரிகளில் லீனாவை வர்ணிக்கும் சுஜாதா, ஒரு காட்சியில் லீனா சுனையில் ஆடைகள் இல்லாமல் நீந்துவதை கணேஷ் பார்க்கும் போது ஒரு உவமையைப் பாவிக்கின்றார் அதன் அர்த்தம் புரியவில்லை அந்தச் சொல் "படவரவல்குல்". அர்த்தத்தைக் கேட்க சுஜாதாவும் இன்றில்லை. லீனா குளிக்கும் காட்சியை சுஜாதா கொஞ்சம் வித்தியாசமாகவே வர்ணித்திருக்கின்றார். எப்படியென கொலையுதிர் காலம் வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.
ஆவிகளை அல்லது முப்பரிமாண உருவத்தை ஹோலோகிராஃபி மூலமும் அன்றையகால (1981) லேசர் தொழில்நுட்பப் படியும் உருவாக்கலாம் என்பதையும் அது பற்றிய சில விஞ்ஞானக் குறிப்புகளும் கதையின் கடைசிச் சில அத்தியாயங்களில் பரவிக் கிடக்கின்றன. அந்தக் காலத்தில் புதிதாக அறிமுகமான பார்கோடுகளும் கதையில் இடம் பிடித்திருக்கின்றது. இன்றைய காலத்தில் முப்பரிமாண உருவங்கள், லேசர் போன்றவை மிகவும் இலகுவான அறியப்பட்ட விடயங்களாக இருந்தாலும் 1981லே சுஜாதா இவற்றைப் பற்றி எல்லாம் தொட்டுச் சென்றிருக்கின்றார் என நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.
சுஜாதாவின் உவமானங்கள் பெரும்பாலும் அந்த அந்த கால கட்டங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் சில இடங்களில் அந்த நாள் அரசியல்வாதிகள், குரானா காங்கிரஸ் சிக்கல் என சில இடங்களில் பளிச்சிட்டாலம் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். "கேஸ் இளையராஜாவுடைய இரண்டாவது சரணம் மாதிரிப் புதுப்பாதையில் பாய்ஞ்சுடுச்சு பாஸ்" என வசந்த் சொல்லும் வரிகளில் கேஸ் புதுப் பாதையில் பயணிக்கின்றது என்பதை அவர் அந்த கால இளையராஜா இசையுடன் ஒப்பிடுகின்றார். இதன் மூலம் இரண்டாவது சரணங்களில் புதிய பாணியை இளையராஜா கையாள்கின்றார் என்ற விடயமும் புலப்படுகின்றது.
சில அத்தியாயங்கள் இரவில் படிக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அமானுஷ்யங்கள் இருக்கோ? இல்லையோ? சுஜாதா அவற்றை விபரிக்கும் இடங்களில் இரவில் வாசிக்கும் போது துணிச்சலானவர்களுக்கே கொஞ்சம் பயம் ஏற்படும்.
நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு நாவலை வாசித்த சுகானுபவத்தை ஏற்படுத்தியது சுஜாதாவின் கொலையுதிர் காலம். வாசித்து முடித்த பின்னர் சுஜாதா அமானுஷ்யங்களை நம்புகின்றாரா? விஞ்ஞானத்தை நம்புகின்றாரா? என்ற சிக்கலான கேள்விக்கு பதில் கிடைக்கவில்ல்லை. காரணம் குற்றவாளி பிடிபட்டாலும் அவர் கொலை செய்த முறைகளோ? அந்த அமானுஷ்யங்களுக்கான குற்றவாளியின் பதில்களோ சொல்லப்படவில்லை. நீங்கள் அமானுஷ்யங்களை நம்புபவர் என்றால் அமானுஷ்ய வழிகளில் கொலைகள் நடந்தன எனவும், பகுத்தறிவுவாதி என்றால் ஹோலாகிராஃபி தொழில்நுட்பத்தால் அந்த அமானுஷ்யங்கள் இயங்கியனது எனவும் முடிவுகொள்ளலாம்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
17 கருத்துக் கூறியவர்கள்:
படிக்கத் தூண்டும் முறையில் எழுதியுள்ளீர்கள்.
அந்த சொல் பட அரவு அல்குல் என்ற சொல்லின் பகாப்பதம்.
அதாவது படம் எடுத்து நிற்கின்ற பாம்பினை(அரவு என்றால் பாம்பு) ஒத்த அல்குல் என்ற பொருள்...
அல்குல் என்றால் என்ன என்று மாதவிப்பந்தல் கேஆர் எஸ் விவரித்துப் பதிவு போட்டிருக்கிறார்,பார்த்து தெரிந்து கொள்ளவும் !
அண்ணே....
இது உங்கட பக்கம்...
அடியேனுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத துறை.
எண்டாலும் வழமையைப் போல வந்து உங்கட பதிவின் சுவாரசியத்தை வாசிச்சு முடிச்சாயிற்று.
//சில அத்தியாயங்கள் இரவில் படிக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. //
என்னண்ணே...
நீங்களே பயந்தா....
சரி சரி... உந்தப் பயமெல்லாம் விரைவில மாறீடும்... :)
//நீங்கள் அமானுஷ்யங்களை நம்புபவர் என்றால் அமானுஷ்ய வழிகளில் கொலைகள் நடந்தன எனவும், பகுத்தறிவுவாதி என்றால் ஹோலாகிராஃபி தொழில்நுட்பத்தால் அந்த அமானுஷ்யங்கள் இயங்கியனது எனவும் முடிவுகொள்ளலாம்.//
அண்ணே...
நான் பகுத்தறிவுவாதியும் இல்ல, அமானுசியங்களை நம்பிறவனும் இல்ல.... நான் என்ன செய்யிறது? :P
ஏற்கனவே படித்து விட்டேன்,,
செம சூப்பர்...
அய்யோ அய்யய்யோ.. இந்த நாவலை எப்படியாவது எனக்கு தாருங்கள்.. உதை ஒரு பழைய நைந்து போன புத்தகமாக வாசித்திருக்கிறேன்.. ஏறத்தாழ 13 வருடங்களுக்கு முன்பு ..
ஆனால் அவர் வர்ணிககும் காட்சிகள் இன்னும் என் மனதில் நிற்கிறது.. படம் போல..
அந்த லீனா குளிக்கும் காட்சியில் அவர் ஒரு வரியில் அவளது ஒரு அந்தரங்க இடத்தை வர்ணிப்பார்.. அந்த வெண் புறாக்கள் சற்று ஊதா தொட்டுத்தெரிய கணேஷ் எச்சிலை விழுங்கினான் என்று.. ஆஹா ஆஹா.. பதின்மூண்டு வருசமாயும் மறக்கல சாரே..
ஆனால் அவர் பகுத்தறிவு ரீதியாகத்தான் முடித்துளடளார்.. அந்த விஞ்ானி காணிக்கு உரிமை கோரும் வகையில் கொலைகளை செய்து விட்டு பேய் மீது பழியை போட்டு விட்டார்..பெயை உருவாக்க பயன்படுத்திய தொழிநுட்பம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.. அத்துடன் இடிக்கப்பட்ட வீட்டில் கிளறப்பட்ட நிலத்தில் இருந்த வயர்கள் வருவதாயும் முடித்திருந்தார்..
உந்த நூலை ஒரு 50 60 தடவை வாசித்திருப்பேன்.. ஒருபோதும் அலுத்ததில்லை.. மீண்டும் வாசிக்கவேண்டும்.. பின்னர் பிடுங்கிக்கோள்கிறேன்.. 13 வருசம் அப்பாடி..
உந்த கதையை வைத்து வசந்தாக விவேக் நடிக்க ஒரு தொடர் முன்னர் தூரதர்சனில் ஒளிபரப்புவார்கள்..
ின்னர் சுஜாதா அமானுஷ்யங்களை நம்புகின்றாரா? விஞ்ஞானத்தை நம்புகின்றாரா? என்ற சிக்கலான கேள்விக்கு பதில் கிடைக்கவில்ல்லை. ..........சுஜாதாவின் எழுத்துக்கள் அவர் மறைவிற்கு பிறகும் மிளிர்கிறது. நல்லா கருத்து சொல்லி எழுதி இருக்கிறீங்க.
450பக்க புத்தகம் என்று நினைக்கின்றேன்...
கடைசி ஒரு அத்தியாயத்தில் கிளைமாக்ஸ் சொல்லி இருப்பது அந்த நாவலின் சிறப்பு...
இந்த கதையை தூர்சதர்சனில் ஒளிபரப்பினார்கள்... இதன் இயக்குனர் எனது நண்பரும் செந்துரப்பூவே படத்தின் கேமராமேன் ரங்கசாமி ஆவார்
ஓட்டு போட்டுவிட்டேன்
அட.. நல்லாயிருக்கும் போல இருக்கே..
புத்தகம் எல்லாம் வாசித்ததில்லை
ம்ம்..
இந்தப்புத்தகத்துன் வாசிக்க ஆரம்பிக்கப்போறன்..
நன்றி அண்ணா பகிர்வுக்கு..;)
நானும் வாசித்திருக்கிறேன் ஆனால் மறந்துவிட்டேன் அண்ணா சுஜாதாவின் கதைகளிலேயே சிறப்பு அவரது நகைச்சுவையான வர்ணனைகள் தான்.... மிகவும் அருமையாக இருக்கும்
நான் இதை ஒரு 10 வருடத்திற்கு முன்னர் பாடசாலை காலத்திலே வாசித்து விட்டேன், கதை முழுவதுமாக நினைவுக்கு வரவில்லை. உங்கள் பதிவு பார்த்து மீண்டும் வாசிக்க ஆவலாயிருக்கிறது வந்தி
அருமை அண்ணா, வாசித்த நாவல்தான். ஆனால் மீண்டும் வாசிக்கவேண்டும்போல் இருக்கிறது - உங்கள் பதிவால்
Theodore Maiman என்பவர் 1960ல் லேஸர் பற்றிஉலகுக்கு அறிவித்து
விட்டார்.1974ல் பார் கோட் ஸ்கானர்
சுப்பர் மார்கெட் பாவனைக்கு வந்து
விட்டது.இந்நிலையில் 1981ல்
சுஜாதா இது பற்றி எழுதியதில்
ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆஹா கொலையுதிர்காலம் நாவலா
நானும் சுஜாதா நாவல் எதையும் விட்டு விடக்கூடாது எனத் தேடி தேடி வாசித்தக் காலத்தில் வாசித்தது. ஹோலோக்ரம் பற்றியெல்லாம் என் இனிய இயந்திராவிலும் சொல்லியிருப்பார்.
போன வருடம் நூலகத்தில் எடுத்து வாசித்தேன்...த்ரில்லான தில்லான நாவல்..
விவேக் நடிக்க தொலைக்காட்சி தொடராக வந்ததாக சுஜாதாவே முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்...
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்
"மீண்டும்" சுஜாதா! எனக்கும் அதே!!!!
தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருக்கிறேன். நாவல் வடிவில் இன்னும் கைக்கு சிக்கவில்லை.
யாரேனும் மென்நூல் வைத்திருக்கின்றீர்களா!...
Post a Comment