தமிழ்மணம் விருதுகள் - நன்றிகள்

2009 ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகளில் எனது பதிவான "பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்" செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இதே பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றவர் அருமை அண்ணன் உண்மைத்தமிழன் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



அத்துடன் பல நண்பர்களுக்கும் இந்த விருதுகள் கிடைத்திருக்கின்றன அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனது பதிவைத் தேர்ந்தெடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

தமிழ்மணம் வெற்றி பெற்றவர்கள்

பின் குறிப்பு :இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் உள்ளது

கொலையுதிர் காலம்

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அமரர் சுஜாதாவின் கொலையுதிர் காலம் வாசிக்க முடிந்தது. ஏற்கனவே இந்த நாவல் குமுதத்தில் தொடராக வந்தபோது அரைகுறையாக வாசித்த பின்னர் முழுநாவலாக நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.

அறிவியலுக்கும் அமானுஷ்யத்துக்கும் இடையில் நிகழும் இந்த நாவலின் முடிவை சுஜாதா வாசகர்களிடமே விட்டுவிட்டார். அத்துடன் அவர் முன்னுரையில் இந்த அறிவியல் அமானுஷ்யம் போன்றவற்றுக்கு அடுத்த நூற்றாண்டிலும் பதில் கிடைக்காது என எழுதியிருந்தார்.

கதை இதுதான் கணேஷ், வசந்த் இருவரும் ஒரு சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக குமாரவியாசன் என்றவரையும் அந்த சொத்துக்குச் சொந்தக்காரியான 18 வயதே நிறைந்த எந்தக் குறையும் சொல்லமுடியாத அழகியான லீனாவையும் சந்திக்கின்றார்கள். லீனாவின் சொத்துக்கள் அவரின் 18 வயதின் பின்னரே அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என அவரது தந்தையின் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரை அந்தச் சொத்துக்களுக்கு பாதுகாவலராக அவரது சித்தப்பா குமாரவியாசனே இருந்துவந்தார்.



அவர்களின் பங்களாவையும் அதன் பின்பக்கமுள்ள‌ அரசமரம், சுனை போன்ற சிறிய காட்டுப் பக்கம் ஏற்படும் சில அமானுஷ்யங்கள் அந்த சொத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதையும் பங்களாவின் பின்பக்கம் அடுத்தடுத்து இருவர் கொலை செய்யப்படுவதும் இவையனைத்தும் கார்த்திகை மாதத்தில் மட்டுமே நடக்கும் என ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் அத்துடன் கணேஷ் வசந்துடன் காவல்துறையினரும் நேரடியாகப் பார்த்த புகைபோன்ற அந்த ஆவியின் உருவமும் அதனது பேச்சு அழுகையும் நடப்பை ஏதோ அமானுஷ்யம் என்ற முடிவுக்கு வந்தாலும் கணேஷ் அதனை நம்பாமல் இதில் விஞ்ஞானம் கலந்திருக்கின்றது என்ற முடிவில் விஞ்ஞான ரீதியாக ஆராய வசந்தோ அமானுஷ்ய ரீதியில் ஆராய இறுதியில் யாருமே எதிர்பார்க்கத ஒருவர் குற்றவாளியாக அறியப்படுகின்றார்.

முதல் அத்தியாம் தொடக்கம் கணேஷ், வசந்த் தங்கள் பாணியில் சிறப்பாக துப்பறிகின்றார்கள். வசந்தின் சில ஜோக்குகளை வழக்கம்போல் சுஜாதா இடையில் நிறுத்திவிடுகின்றார். மெக்சிகன் சலவைக்காரி ஜோக் போல் ஒரு ஜோக் இடையில் நிற்கின்றது.

லீனா என்ற கதை நாயகியின் குணாதிசயங்கள் பிரிவோம் சந்திப்போம் மதுவிதாவை ஒத்திருந்தாலும் மதிவிதாவை விட அழகியாகவே சுஜாதா வர்ணித்திருந்தார். "நிறைய அழகிகளை கணேஷ் பார்த்திருக்கின்றான் எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும் மூக்கில்,உதட்டோரத்தில், பற்களில், குரலில், உடலமைப்பில் பருமனில், வாசனையில் தலைமயிரில் எங்கையோ ஒரு சின்ன தப்பிருக்கும், இவளிடம் இல்லை" என்ற வரிகளில் லீனாவை வர்ணிக்கும் சுஜாதா, ஒரு காட்சியில் லீனா சுனையில் ஆடைகள் இல்லாமல் நீந்துவதை கணேஷ் பார்க்கும் போது ஒரு உவமையைப் பாவிக்கின்றார் அதன் அர்த்தம் புரியவில்லை அந்தச் சொல் "படவரவல்குல்". அர்த்தத்தைக் கேட்க சுஜாதாவும் இன்றில்லை. லீனா குளிக்கும் காட்சியை சுஜாதா கொஞ்சம் வித்தியாசமாகவே வர்ணித்திருக்கின்றார். எப்படியென கொலையுதிர் காலம் வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

ஆவிகளை அல்லது முப்பரிமாண உருவத்தை ஹோலோகிராஃபி மூலமும் அன்றையகால‌ (1981) லேசர் தொழில்நுட்பப் படியும் உருவாக்கலாம் என்பதையும் அது பற்றிய சில விஞ்ஞானக் குறிப்புகளும் கதையின் கடைசிச் சில அத்தியாயங்களில் பரவிக் கிடக்கின்றன. அந்தக் காலத்தில் புதிதாக அறிமுகமான பார்கோடுகளும் கதையில் இடம் பிடித்திருக்கின்றது. இன்றைய காலத்தில் முப்பரிமாண உருவங்கள், லேசர் போன்றவை மிகவும் இலகுவான அறியப்பட்ட விடயங்களாக இருந்தாலும் 1981லே சுஜாதா இவற்றைப் பற்றி எல்லாம் தொட்டுச் சென்றிருக்கின்றார் என நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

சுஜாதாவின் உவமானங்கள் பெரும்பாலும் அந்த அந்த கால கட்டங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் சில இடங்களில் அந்த நாள் அரசியல்வாதிகள், குரானா காங்கிரஸ் சிக்கல் என சில இடங்களில் பளிச்சிட்டாலம் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். "கேஸ் இளையராஜாவுடைய இரண்டாவது சரணம் மாதிரிப் புதுப்பாதையில் பாய்ஞ்சுடுச்சு பாஸ்" என வசந்த் சொல்லும் வரிகளில் கேஸ் புதுப் பாதையில் பயணிக்கின்றது என்பதை அவர் அந்த கால இளையராஜா இசையுடன் ஒப்பிடுகின்றார். இதன் மூலம் இரண்டாவது சரணங்களில் புதிய பாணியை இளையராஜா கையாள்கின்றார் என்ற விடயமும் புலப்படுகின்றது.

சில அத்தியாயங்கள் இரவில் படிக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அமானுஷ்யங்கள் இருக்கோ? இல்லையோ? சுஜாதா அவற்றை விபரிக்கும் இடங்களில் இரவில் வாசிக்கும் போது துணிச்சலானவர்களுக்கே கொஞ்சம் பயம் ஏற்படும்.

நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு நாவலை வாசித்த சுகானுபவத்தை ஏற்படுத்தியது சுஜாதாவின் கொலையுதிர் காலம். வாசித்து முடித்த பின்னர் சுஜாதா அமானுஷ்யங்களை நம்புகின்றாரா? விஞ்ஞானத்தை நம்புகின்றாரா? என்ற சிக்கலான கேள்விக்கு பதில் கிடைக்கவில்ல்லை. காரணம் குற்றவாளி பிடிபட்டாலும் அவர் கொலை செய்த முறைகளோ? அந்த அமானுஷ்யங்களுக்கான குற்றவாளியின் பதில்களோ சொல்லப்படவில்லை. நீங்கள் அமானுஷ்யங்களை நம்புபவர் என்றால் அமானுஷ்ய வழிகளில் கொலைகள் நடந்தன எனவும், பகுத்தறிவுவாதி என்றால் ஹோலாகிராஃபி தொழில்நுட்பத்தால் அந்த அமானுஷ்யங்கள் இயங்கியனது எனவும் முடிவுகொள்ளலாம்.

ஹாட் அண்ட் சவர் சூப் 06-01-2010

ஜனாதிபதித் தேர்தல்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. பிரதான கட்சிகள் தங்கள் இதுவரை செய்த அபிவிருத்தியை விட எதிர்க் கட்சியியைத் திட்டுவதையே பெரும்பாலும் செய்கின்றன. தொலைக்காட்சிகள் செய்திகளின் போது சிலரது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தணிக்கை செய்தே வெளியிடுகின்றார்கள்.

இணையத் தளங்களில் வெளியிடப்படுகின்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளில் சரத் பொன்சேகாவிற்கு அதிகம் வாக்குகள் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலான இணையக கருத்துக் கணிப்புகளில் படித்த நகரவாசிகளே கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் வாக்கு வங்கி கிராமங்களிலையே இருக்கின்றது. இதனால் இந்தக் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே மாறுகின்றன. அதே நேரம் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்கள்(முஸ்லீம்கள் உட்பட) சரத் பொன்சேகாவை ஆதரிப்பது போன்ற சில கருத்துக் கணிப்புகளும் வெளிவருகின்றன. இவை சிலவேளைகளில் திட்டமிட்ட செயல்பாடுகள் போல் தெரிகின்றன.

மெஹா ஜோக் :
"ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வராதாம்" சொன்னவர் அவசரகாலச் சட்டத்திற்க்கு எதிராகவோ சார்பாகவோ வாக்களிக்க வக்கில்லாத ஐதேக எம்பி.

3 Idiots

அமீர் கான், மாதவன், ஷர்மான், போமன் இரானி மற்றும் கரினாவின் தேர்ந்த நடிப்பில் உருவான 3 இடியட்ஸ் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மீண்டும் ஹிந்தித் திரையுலகம் வித்தியாசமான ஒரு படத்தை தந்துள்ளது. முன்னாபாய் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இந்தப் படமும் நகைச்சுவையுடன் சில நல்ல கருத்துகளையும் சொல்கின்றது. படத்தின் பலமே அமீர்கானின் நடிப்பும் இளமையும் தான். சில இடங்களில் அமீர்கானை விட மாதவன் நன்றாக நடித்திருக்கின்றார்.

அண்மைக் காலமாக நல்ல படங்களைத் தந்துகொண்டிருக்கும் ஹிந்தித் திரையுலகை தமிழ்த் திரையுலகம் பார்த்து சில நல்ல படங்களை ரீமேக் செய்தாலோ அல்லது அதேபோன்ற் வித்தியாசமான கதையை எடுத்தால் தமிழ்த் திரையுலகம் கதை விடயத்தில் இன்னமும் முன்னேறலாம். இல்லையென்றால் வழக்கமான டெம்ளேட் கதைகளையும் அதீத விளம்பரத்தையும் நம்பி பத்தோடு ஒன்றாக மாறவேண்டும் தான்.

கிரிக்கெட்

சங்ககாரவின் குழந்தைகள் அணி டோணியின் இளமை அணியை நேற்று துவைத்து எடுத்துவிட்டது. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை இந்திய ஒருநாள் தொடரில் வெற்றியைத் தவறவிட்ட இலங்கை முதல் போட்டியில் வங்கதேசத்தையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவையும் இலகுவாக வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் நேஹ்ராவை இன்னும் ஏன் அணியில் வைத்திருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தை யாரும் தீர்ப்பீர்களா? இந்தியாவில் கூட இலங்கை வீரர்கள் அவரின் பந்துவீச்சை துவம்சன் செய்யததை மறந்துபோய் மீண்டும் நேற்று விளையாடி அடிமேல் அடிவாங்கினார்.

அத்துடன் இந்திய வீரர்களின் களத்தடுப்பு ரொபின்சிங்கின் விலகலின் பின்னர் மிகவும் பிந்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை புதியவர்கள் இளம் கன்று பயமறியாதது என்பது போல் சகல துறைகளிலும் கலக்கியே வருகின்றார்கள். நேற்று டில்ஷான் விளையாடமால் போனாலும் சமரவீராவின் அதிரடியும் சங்ககாரவின் பொறுப்பான ஆட்டமும் வெலகெதரவின் சிறப்பான பந்துவீச்சும் இலங்கை அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. ஏனைய போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் இதே ஆக்ரோசத்துடன் விளையாடுகின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



5ஆவது திருமணம்

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா தன்னுடைய 67 வயதில் 5ஆவது தடவையாக 37 வயதுப் தோபியா மடிமா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் அண்மையில் தென்னாபிரிக்காவில் பாராம்பரிய முறைப்படி நடைபெற்றது. ஏற்கனவே இவர் தோபியாவுடன் தொடர்பு இருந்து 3 குழந்தைகள் இருப்பதும் நீண்ட நாள் குடும்பம் நடத்திய பின்னரே இந்தத் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ரசித்த கவிதை

அரசியல்வாதிகளில் பலர்
அரக்கர்கள் என்பதாலேயே
ராட்சஸ வடிவில்
கட் அவுட் கட்டப்படுகின்றது
எலெக்ஷன் என்றதுமே
கலெக்சன் ஆரம்பம் ‍- அவர்கள்
கொடுப்பது வாய்க்கரிசி
பெறுவது வாக்குச் சீட்டு
சுவரொட்டி ஒட்டியவன்
வயிறு ஒட்டி வாடுகின்றான்
ஊர்வல்ம் தொண்டனுக்கு
கார்வலம் தலைவனுக்கு
தலைவனை வாழ்க என்று சொல்லி
தான் மட்டும் வீழ்பவன் - இவனைத்
தொண்டன் என்றழைப்பதா?
முண்டம் என்று சொல்வதா?
கைதியின் தவறுகளுக்கு
நீதிபதிக்கு தண்டனையா?
தலைவனின் ஊழல்களுக்கு
தொண்டனின் தீக்குளிப்பா?
கும்பகர்ணக் குடிமகனே
புரிந்து கொண்டால்
விழித்துக் கொள்வாய்
விழிக்காவிட்டால் டாஸ்மார்க்கோடு
அழிந்துபோவாய்.

எழுதியவர் பிரபல க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமார்.

அன்பு நண்பர் சுபாங்கனின் அன்புக்காக இந்த அசல் நாயகி பாவனாவின் படம் பட உதவியும் அவரே தான். நன்றி சுபாங்கன்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு கடிதம்

வணக்கம் ங்ண்ணா

நலம் நலமறிய ஆவல், வேட்டைக்காரன் வசூல் வேட்டையாடுவதால் சந்தோஷமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நான் ஒரு சராசரி சினிமா ரசிகன். அதிகமாக தமிழ்ப் படங்களையும் சில தேர்ந்தெடுத்த ஹிந்தி, ஆங்கிலப் படங்களையும் பார்ப்பவன். அண்மைக்காலமாக உங்கள் படங்கள் ஒரே வகையான படங்களாக வருவது கவலையளிக்கின்றது. வருங்கால சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என எதோ ஒரு அமைப்பு சில காலம் முன்னர் உங்களுக்கு விருது வழங்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.



ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்பு போட்டு மிகவும் சாதாரண நடிகனாக இருந்த உங்களை விக்ரமனின் பூவே உனக்காக படம் தான் அடுத்த கட்டத்திற்க்கு உயர்த்திச் சென்றது. அந்தப் படத்தினால் பல ரசிகர்கள் உங்களுக்கு உருவானார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்களில் நன்றாகவே நடித்திருந்தீர்கள்.

கமல், ரஜனி படங்களுக்குப் பின்னர் காதலுக்கு மரியாதை படம் தான் அதிகம் தடவை சிடியில் நான் பார்த்த படம். ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், காதலுக்கு மரியாதை போன்ற ரீமேக் படங்களில் உங்கள் பங்கு சிறப்பாகவே இருந்தது.

இடையிடயே மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, உதயா போன்ற சில பப்படங்களைக் கொடுத்தாலும் ரசிகர்களின் மனதில் கில்லியாக உங்களை உயர்த்தியவர் தரணிதான். கில்லி படம் போல் விறுவிறுப்பான வேகமான திரைக்கதையுடன் அண்மைக்காலங்களில் உங்கள் எந்தப் படங்களும் வரவில்லை. சிலர் போக்கிரியை கில்லியின் வேகத்துக்கு ஒப்பிட்டாலும் கில்லிதான் என்றைக்கும் முதல்வன்.

அண்மைக்காலமாக அதிரடி மசாலாப் படங்களில் அதிகம் நடிக்கும் நீங்கள் ஏன் தற்போது பிரண்ட்ஸ், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே போன்ற நல்ல காதல் கதைகளில் நடிப்பதில்லை. நீங்கள் குருவாக நினைக்கும் ரஜனிகாந்த் கூட நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்திருக்கின்றார். அவரின் மசாலாப் படங்களில் கதையும் திரைக்கதையும் லாஜிக்குடன் பெரும்பாலும் இருக்கும். அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஒருநாளும் லாஜிக் மீறி ஓடும் ரயிலுக்குத் தாவுவதோ, அருவில் குதித்து உயிர் தப்புவதோ இல்லை.

நீங்கள் மசாலாப் படம் நடிக்கவேண்டாம் எனச் சொல்லவில்லை, இடையிடையே நல்ல கதை அம்சமுள்ள படங்களிலும் நடிக்கலாமே இதுதான் இப்போதைய பல ரசிகர்களின் கருத்து.

நீங்கள் நடித்த ஆதி, குருவி, மதுர, வில்லு போன்ற படங்களை நீங்கள் மீண்டும் ஒரு தடவை பார்த்தீர்களா? அப்படிப் பார்க்கவில்லை என்றால் மீண்டும் ஒரு தடவை பாருங்கள்? எங்கே நீங்கள் சறுக்கியிருக்கின்றீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

இனியாவது உங்களை சூப்பர் ஸ்டார் உயரத்திற்க்கு வைத்துக் கதை சொல்பவர்களிடம் இருந்து தப்பி பாசில், சித்திக், செல்வபாரதி போன்றோரின் நல்ல இயக்குனர்களிடம் பேரரசு போன்ற மசாலப் படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனர்களிடம் கதை கேட்டு நல்ல படங்களில் நடியுங்கள். இல்லையென்றால் விஜய டி. ராஜேந்தர் போல் இணையங்களிலும் எஸ் எம் எஸ்களிலும் உங்களை பலர் வேட்டையாடுவார்கள்.

உங்களிடம் இருந்து நல்ல படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மிகவும் சாதாரண ரசிகர்களை இனியும் ஏமாற்றிவிடாதீர்கள்.

மீண்டும் என்னைக் கடிதம் எழுதவைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்.

நன்றிகள்

இங்ஙனம்
உங்களின் ரசிகன்

பின்குறிப்பு : தயவு செய்து உங்கள் படங்களை சன் குழுமத்துடன் கொடுத்து வெற்றி என்ற மாயையில் விழுந்துவிடாதீர்கள்

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2

இவ்வளவு ராகத்துடன் அழகாக ஆனால் பட்டுவேட்டிக்கு பொருத்தமில்லாமல் கூலிங் கிளாசுடன் வழிபாடு செய்பவர் யார் எனப் பார்த்த்தால் அது அதிரடிப் பதிவர் புல்லட். புல்லட்டும் இவர்கள் இருவரையும் கண்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சகஜமாக கதைக்கத் தொடங்கினார். மூத்த அனுபவம் உடையவர் என்றபடியால் கங்கோனின் பிரச்சனைக்கு புல்லட்டிடம் ஐடியா கேட்டார்கள் இருவரும்.


புல்லட்டும் தன்னுடைய சில சொந்த அனுபவங்களை நண்பர்களின் கதை போல் சொல்லிவிட்டு, கங்கோனிற்க்கு வலிகாமத்தை விட வடமராட்சியில் கங்கோனிற்க்கு பொருத்தமானவர் கிடைப்பார், ஆகவே வந்தி அல்லது ஆதிரையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அத்துடன் ஆதிரையைத் தொடர்புகொண்டால் அவர் விடயத்தை வெளியில் கசிய விட்டுவிடுவார் வந்திதான் ரகசியம் காப்பதில் வல்லவர் நல்லவர் ஆகவே வந்திக்கு உடனடியாக கோல் பண்ணவும் வந்தி உதவுவார் என வந்தியை வலையில் மாட்டிய சந்தோஷத்தில் தான் உடனடியாக நெடுந்தீவுக்கு போகவேண்டும் ஆகவே உங்களைப் பின்னர் சந்திக்கின்றேன் என விடைபெற்றார்.



புல்லட் விடைபெற்ற மறுகணமே கங்கோன் வந்திக்கு கோல் எடுத்தார். வந்தியும் அப்பாவியாக வெள்ளிக்கிழமைகளில் தொண்டைமனாறு சந்நிதி கோயிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுர ஆழ்வார் கோயிலும் வழிபாட்டிற்க்கு பெயர் போனவை என கங்கோன் கோயிலுக்கு வழிபடச் செல்வதாக நினைத்து தன்னுடைய கருத்தை உளறிவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை வல்லிபுர ஆழ்வாருக்கு தன்னுடன் வர பாலாவையும் கேட்டால் பாலா கொஞ்சம் பின்னடித்தார். பாலா பின்னடிப்பதைப் பார்த்த கோபி பாலாவிற்க்கு ஒரு சின்னப் பார்ட்டி கொடுத்தால் தன்னுடன் வருவார் என நினைத்து ரியோ கூல் பாருக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஒரு தூண் மறைவில் புல்லட் நீலச் சுடிதார் பெண்ணுடன் இரண்டு சர்பத்தும் இரண்டு ஸ்பெசல் ஐஸ்கிறீமுடன் உருகி வழிந்துகொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் புல்லட் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருமாதிரி சமாளித்துக் கொண்டு இவ‌ என்ரை பட்ச் மேட் கண்ட இடத்திலை ஐஸ்கிறீம் குடிக்க வந்தோம் சமாளிக்க கங்கோனும் பாலாவும் நண்பனுக்கு ஏன் சங்கடம் கொடுப்பான் என விலகிவிட்டார்கள். அதே நேரம் புல்லட் போல் பலபேர் ஜோடிகளாக ரியோவில் இருப்பதைப் பார்த்த கங்கோன் தான் நிற்பது யாழ்ப்பாணத்திலா? இல்லை எம்சியிலா என தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தார்.

ஞாயிற்றுக்கிழமை கங்கோனும் பாலாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வல்லிபுர ஆழ்வார் நோக்கி வல்லை வெளியூடாக பயணத்தைத் தொடங்கினார்கள். வல்லை எதிர்க் காற்றில் பாலா பறந்துவிடாமல் இருக்க கங்கோனை இறுக்க பிடித்தபடி படபடக்கும் இதயத்துடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலைச் சென்றடைந்தார். கோயில் வாசலில் அதே கச்சான் விற்க்கும் ஆச்சி மனசுக்குள் "குறுக்கால போவான் இங்கேயும் வந்துவிட்டான்" என புறுபுறுத்தாலும் கங்கோனைக் "கண்டதும் அப்பு ராசா உனக்கு தோதாக இங்கேயும் ஒண்டையும் காணவில்லையடி செவ்வாய்க் கிழமை தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு வாடி என்ரை குஞ்செல்லோ" என செல்லம் பொழிந்தார். ஆச்சியைக் கண்ட அதிர்ச்சியிலும் இங்கேயும் ஒன்றும் சரிவராது என்ற விரக்தியிலும் கங்கோனும் பாலாவும் நாமத்தை பட்டையாக நெற்றியில் இட்டபடி வீடு திரும்பினார்கள்.

அதே நேரம் ஃபேஸ்புக்கில் புல்லட் நெடுந்தீவில் வெங்காயம் உரித்து கதறிக் கதறி அழுத கதையும் குதிரையில் ஏறி விழுந்த கதையும் பரபரப்பாக நண்பர்கள் வட்டாரத்தில் அடிபட்டது. புல்லட் குதிரை மேல் இருந்ததைப் பார்த்து ஒருவர் குதிரை மேல் கழுதை போகின்றது என நக்கலடித்தார்.



கங்கோனும் தன்னுடைய கமேராவில் யாழ்ப்பாணத்தின் அழகையும் அழகானவர்களையும் படம் பிடித்தபடி நேற்று கொழுபுக்கிற்க்கு வெறும் கையுடன் வந்து சேர்ந்தார். வந்தவர் சும்மா இருக்காமல் தன்னுடைய அனுபவங்களை ட்விட்டரில் ட்விட்ட அவரின் பயணம் ஏன் வெற்றி அளிக்கவில்லை என ஆதிரை காரணம் கண்டுபிடித்துவிட்டார்.




கங்கோன் யாழ் செல்லும் போது விசாப் பிள்ளையாரை வணங்காமல் சென்றதுதான் காரணமாம். அதனால் விசாப் பிள்ளையாரை வணங்கிவிட்டு மீண்டும் பொங்கல் நேரத்தில் யாழ்ப்பாணம் சென்றால் நல்ல பலன் கிடைக்கும் எனவும் அத்துடன் தானும் அவருடன் வருவதாகவும் கங்கோனிற்க்கு உறுதி மொழி அளித்தார்.

அதே நேரம் கங்கோனிற்க்கு ஆப்பு சுபாங்கன் ரூபத்தில் வந்தது. சுபாங்கன் மீண்டும் தன்னுடைய தலைமுடி ஸ்டைலை மாற்றி கங்கோனுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிக் காட்ட தயார் எனவும் ஏற்கனவே தான் பல தடவை யாழ் சென்றபடியால் அந்த விடயங்களில் நிறைய அனுபவம் இருக்கின்றது எனவும் கூற சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து கங்கோன் அடுத்த சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் தனக்குரிய தேவதை இல்லையென்றால் வந்தி வழியில் சிங்கைக்குப் பறக்க இருப்பதாகவும் ட்விட்டரில் செய்திகள் கசிகின்றன. எது எப்படியோ கங்கோன் 2010ல் காதல் வலையில் எப்படியும் விழவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.

பின்குறிப்பு : இந்த மொக்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை ட்விட்டரில் தந்த சுபாங்கன், பாலவாசகன், பவன் ஆகியோருக்கு நன்றிகள். மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன் யாவும் கற்பனை அல்ல.


பகுதி 1 : கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கிறிஸ்துமஸுக்கு இரு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கங்கோனின் செய்தி " நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" இதன் பின்னர் அவர் தனது பயண விபரங்களை இடையிடையே அனுப்பிக்கொண்டிருந்தார். கங்கோனின் யாழ்ப்பாணத்திற்கான தீடிர் விஜயம் பற்றி ட்விட்டரில் பல வதந்திகள் வந்துகொண்டிருந்தன. ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என ஒருவர், அது இல்லை கங்கோன் ட்விட்டர், புளொக், பேஸ்புக் போன்றவற்றில் 24 மணித்தியாலத்தில் 25 மணித்தியாலங்களைச் செலவிடுவதாகவும் இதனால் அவரது தாயர் சில நாட்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணம் அனுப்பியதாகவும், இவை எதுவும் இல்லை கங்கோனின் ராசிக்கு இந்த வருடம் காதல் கைகூடும் என்பதால் அவர் தனது காதலியைத் தேடி யாழ் செல்வதாகவும் பரபரப்பான செய்திகள் அவரது நண்பர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டன.



கொழும்பு கோட்டையில் பஸ்சில் ஏறி கங்கோன் அனுப்பிய ட்விட்டர் செய்தியில் இருந்து கங்கோன் பெண் பார்க்கத் தான் போகின்றார் என்ற விடயம் புலனாகியது. அந்தச் செய்தி இதுதான் " பஸ்சினுள் ஏறிவிட்டேன் பஸ் மிகவும் வரட்சியாக இருக்கின்றது எப்படித்தான் பொழுது போகப்போகின்றதோ". சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டுவிட்டதாகவும் பஸ் புறப்படும் தருவாயில் 2 அழகான பெண்கள் பஸ்சினுள் ஏறிவிட்டார்கள் எனவும் கங்கோனின் செய்தி ட்விட்டரில் வெளியானது.

சரியாக பின்னேரம் 4.15 அளவில் கோட்டையில் இருந்து கங்கோனின் பஸ் யாழ் நகர் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அந்தப் பெண்களிடம் கங்கோன் கொஞ்சம் கதை கொடுத்தார். அவர்கள் இருவரும் வலைப்பூக்கள் வாசிப்பவர்கள் என்ற உண்மையை அறிந்த கங்கோன் தன்னை அறிமுகம் செய்ய ஒரு துடுக்கான பெண் அப்போ நீங்கள் தான் அந்த சமூக விலங்கோ என கங்கோனுக்கே அதிர்ச்சி அளித்தார். அவரைப் பழிவாங்க எண்ணிய கங்கோன் நிலவில் இருந்து பிரிண்ட் எடுத்து வந்த சில பின்நவீனத்துவ கட்டுரைகளை அவர்களீடம் வாசிக்க கொடுக்க, அந்தக் கட்டுரைகளின் தாக்கத்தில் அதனை வாசித்த அந்த இரு பெண்களைத் தவிர ஏனையவர்கள் நன்றாக நித்திரைகொண்டார்கள். பின்னர் வவுனியாவில் பஸ்சில் இருந்து அவர்கள் இறங்கும்போது கங்கோனைப் பார்த்த பார்வையில் மலையே சரிந்துவிழுந்துவிட்டது.

ஒருமாதிரி வவுனியாவில் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த கங்கோனிற்க்கு யாழ் செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. பொடியன் அந்த மகிழ்ச்சியான செய்தியையும் மொபைல் வெப் மூலம் ட்விட்டரில் அனைவருக்கும் அறிவிக்க விரும்பினால் அந்த இடத்தில் நெட்வேர்க் டவுணாகி இருந்தது. தன்னுடைய மொபைல்காரர்களைத் திட்டிக்கொண்டே கங்கோன் கண்டி வீதியுனூடாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார்.

கங்கோன் ஒரு சமூக அக்கறை உடையவர் என்பதால் அந்த வீதீயூடாக பயணிக்கும் போது கண்ட காட்சிகள் அவரது நெஞ்சையே கலங்கச் செய்தது. அந்தக் காட்சிகளைத் தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதனை வைத்து ஒரு பதிவு போட எண்ணிக்கொண்டார். ஆடி அசைந்து கங்கோன் சென்ற பஸ் யாழை அடைந்தது.

யாழ் மண்ணில் நீண்ட நாட்களின் பின்னர் காலை வைக்கும் போது கங்கோன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். கொழும்பு நரக மன்னிக்கவும் நகர வாகனப் புகையும், குப்பையுமாக இருந்த வீதிகளுடன் ஒப்பிடும் போது யாழ் வீதிகள் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. அந்த உணர்ச்சிப் பெருக்கில் கங்கோன் "சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" என இசைஞானியின் குரலில் பாடத் தொடங்கிவிட்டார்.

பயண அலுப்பில் அன்றைக்கு தன்னுடைய பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கமுடியாது அடுத்த நாள் வெள்ளிக்கிழமை நல்ல நாள் ஆகவே வெள்ளியே தன்னுடைய கடமையைச் செய்வோம் என எண்ணியபடி காதல் பாடல்களை கேட்டபடி கங்கோன் நித்திரைக்குச் சென்றுவிட்டார்.

வெள்ளி அதிகாலையில் வழக்கமாக நாலு சட்டி தண்ணியில் குளிக்கும் கங்கோன் கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு, நல்லூர் கந்தனைத் தரிசிக்கச் சென்றார். நல்லூரில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது பாலவாசகன் கண்டுவிட்டார். கங்கோன் கையும் குறிப்புமாக அவரிடம் பிடிபட்ட பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் பாலவாசகனிடம் உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார். ஆச்சி பல இடங்களுக்கும் வியாபாரம் செய்ய செல்பவர் ஆகவே அவருக்கு பலரின் தொடர்புகள் இருக்கும் அதுதான் அவரிடம் சாதகத்தைக் கொடுத்தேன் எனக்குத் தோதான ஒரு பெண்ணைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பயப்படுகின்றார் போல் தெரிகின்றது என கங்கோன் உண்மையச் சொல்லிவிட்டார்.

ஒரு பதிவரின் கஸ்டம் இன்னொரு பதிவருக்குத் தான் தெரியும் என்பதுபோல் பாலாவும் இதெற்கெல்லாம் கவலைப் படாதே வா கோயிலுக்குள் சென்று முருகனிடம் ஒரு விண்ணப்பம் கொடுப்போம் என உள்ளே சென்றார்கள். உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.

பின்குறிப்பு : சில பல ஆணிகள் இருப்பதால் பகுதி 2 மதியம் அல்லது மாலையில் வெளியாகும்.

முக்கியமான பின்குறிப்பு : உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல.

2010 புதுவருடம் சில அனுபவங்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் ஆங்கிலப் புதுவருடம் என்பது இன்னுமொரு சாதாரண நாள் தான் எமக்கு. அங்கே வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் புது ஆடை அணிந்து தேவாலாயம் சென்று வருவார்கள். கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டுக்கு எங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கச் செல்வது. பெரும்பாலு கிறிஸ்துமஸ், புதுவருடம் திருவெம்பாவைக் காலத்தில் வருவதால் சிலவேளைகளில் விருந்துபசாரத்தில் கேக் விடுபட்டுவிடும்.

பின்னர் கொழும்பிற்க்கு வாழ்க்கை மாறியபின்னர் ஆங்கிலப் புதுவருடம் கொஞ்சம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஆனாலும் சில காலம் வெடி கொழுத்துதல், நண்பர்களுடன் வீதிகளில் திரிதல் போன்றவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம் அப்போதைய நாட்டின் சூழ்நிலை. 2002ல் முதல் முறையாக ஆங்கிலப் புத்தாண்டை 31ந்திகதி இரவே சக்தி நிறுவனத்தில் கொழும்பு மாநகர சபை முன்றலில் நடந்த இன்னிசையுடன் தொடங்கி, நடு இரவில் வெள்ளவத்தை கடற்கரையில் வெடி கொழுத்தி மகிழ்ந்தேன்(தோம்).

2003ல் நாட்டில் நிலவிய சமாதானத்தால் வெள்ளவத்தை கடற்கரையால் ரோந்து போன காவல்துறை வாகனத்தில் நாம் கொழுத்திப்போட்ட ஈர்க்கு வானம் பட்டும் அவர்கள் சிரித்தபடி புதுவருட வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இதன் பின்னர் புதுவருடக் கொண்டாட்டங்கள் அதிகம் களைகட்டவில்லை. காரணம் நண்பர்கள் ஒவ்வொருவராக தொழில், கல்வி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றமை.

கொழும்பைப் பொறுத்தவரை ஆங்கிலப் புதுவருடம் என்பது இன, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக அண்மைக் காலங்களில் மாறிவிட்டது. முக்கியமாக இந்து ஆலயங்களில் சிலவற்றில் அதிகாலையில் விசேட பூஜைகள் செய்கின்றார்கள், இந்துக்கள் பட்டு உடுப்புகளில் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போல் கோயில்களுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் செல்கின்றார்கள். அத்துடன் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கத்தினால் ஆங்கிலப் புத்தாண்டு இன்னும் பிரபலமாகிவிட்டது. இது சரியோ தவறோ எனக்குத் தெரியாது.

நான் அறிந்தவரை 2000 ஆவது ஆண்டு பிறந்தது தான் உலகெங்கும் அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டதாகும். கொழும்பிலும் அந்த வருடத்தை கோலாகலமாக கொண்டாடினார்கள். ஆனால் அதனைவிட அதிகமான மகிழ்ச்சியுடன் இந்தவருடம் கொண்டாடப்பட்டதாக தெரிகின்றது. நான் வாழ்கின்ற இடத்தில் வழக்கம்போல் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.

இரவு நீண்ட நேரம் இணையத்தில் உலா வராததால் இணையத்தில் தமிழ்மணத்தைத் திறந்தால் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக என்னுடைய இரண்டு பதிவுகளும் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளன. எனக்கு ஓட்டுப்போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் திறந்த நன்றிகள். அத்துடன் நான் ஓட்டுப்போட்ட பலரின் பதிவுகள் அடுத்த கட்டத்திற்கு தெரிவாகி இருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தமிழ்மணம் விருதுகள் 2009 - முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

2010 புத்தாண்டானது மகிழ்ச்சியாகவே தொடங்கியிருக்கின்றது. 2009ல் என் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், பிரச்சனைகள், சோகங்கள் என மோசமாகவே சென்றவிட்டது ஆனால் 2010ல் முதல் நாளில் கிடைக்கும் செய்திகள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன. ஏனைய நாட்கள் எப்படி இருக்கின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.

வழக்கம் போல் சன் டிவியில் டாப் 10 படங்களில் அவர்கள் தயாரிப்பும், கலைஞரில் அவர்கள் வாங்கிய படங்களும் தெரிவாகின. விஜயில் நீயா? நானா? ஸ்பெசல் நிகழ்ச்சியில் கோபிநாத்துடன் சேர்ந்து சில ஜோதிடர்களும் மக்களை நிரம்பவே குழப்பினார்கள்.

எது எப்படியோ இந்த வருட ஆரம்பம் இன்று, ஆதலால் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு : இது என்னுடைய 250 ஆவது பதிவு.