தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் நடித்திருக்கும் இல்லை இல்லை வாழ்ந்திருக்கும் படம் தான் பா. அமிதாப், அபிஷேக் வித்யா பாலன் என ஒரு சில குறிப்பிட்ட பாத்திரங்களுடன் சிறந்த கதையினாலும் இசையினாலும் மனதைக் கொள்ளையடித்துவிட்டது.
கதை
ஆரோ(அமிதாப்) progeria என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன். அதாவது இந்த நோய் வந்தவர்கள் தங்கள் வயதை விட அதிகம் வயதுடைய தோற்றம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். ஆரோவின் பாடசாலைப் பரிசளிப்பு வைபத்துக்கு பிரதம விருந்தினராக வரும் அமோல்(அபிஷேக்)சிறுவன் ஆரோவின் வெள்ளையடிக்கப்பட்ட பூமிப் பந்தைப் பார்த்துக் கவர்ந்து அந்தச் சிறுவனுக்கு சிறந்த மாணவன் விருதை வழங்குகின்றார். அத்துடன் அந்தச் சிறுவனின் நிலையைப் பற்றி ஊடகங்களுக்கும் அறிவித்தும் விடுகின்றார். இதனால் ஆரோவைத் தேடி அவனது பாடசாலைக்கு ஊடகங்கள் முற்றுகை இட இதனால் ஆத்திரமடைந்த ஆரோ இதற்க்கு காரணமான அமோலுக்கு தன்னுடைய எதிர்ப்பை மின்னஞ்சல் செய்கின்றான். இதிலிருந்து ஆரோவுக்கும் அமோலுக்குமான உறவு ஆரம்பிக்கின்றது.
அமோல் யார் என்றால் ஆரோவின் தந்தை என்பதையும் அவருக்கும் வித்யாவிற்க்கு(வித்யா பாலன்)இடையிலான காதலில் கருத்தரித்தவன் தான் ஆரோ என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகின்றார் இயக்குனர். இந்த வேண்டாத கர்ப்பத்தால் வித்யா அமோலை விட்டுப் பிரிந்துவிடுகின்றார்.
ஆரோ தன் தந்தை அமோல் தான் என்பதை அறிந்தாரா? வித்யாவும் அமோலும் சேர்கின்றார்களா? என்பதை 2 மணித்தியாலம் 15 நிமிடங்களில் சொல்லும் கதை தான் ஹிந்தியில் வெளியான பா(Paa).
ஆரோ :
நெடிதுயர்ந்த கம்பீரமான குரலில் பார்த்துப் பழக்கப்பட்ட அமிதாப் பச்சனை வயது போன தோற்றத்தில் வித்தியாசமான குரலில் ( ஒரு பாடல் கூடப் பாடியிருக்கின்றார்)பார்ப்பது புதுமை. எந்தவொரு இடத்திலும் அமிதாப்பை தெரியவில்லை ஆரோ தான் தெரிந்தான்(ர்). தன்னுடை கண்களாலே சில இடங்களில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். எத்தனையோ கான்கள் வந்தாலும் எப்படி அமிதாப்பால் இன்றைக்கும் ஹிந்தி சினிமாவில் நின்று நிலைக்க முடிகின்றது என்ற கேள்விக்கு தன் நடிப்பாலே பதில் சொல்லியிருக்கின்றார். தான் ஒரு நோயாளி என்பதைத் வெளிக்காட்டாமல் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் நக்கல் நையாண்டிகள் செய்வதும் ஆரோவின் வயது 12 தான் என்பதை உணர்த்துகின்றது. சில படங்களில் மாற்று ஆற்றல் உள்ளவர்களை ஏனைய நண்பர்கள் கிண்டலடிப்பார்கள், ஆனால் பாவில் கிளைமாக்ஸ் காட்சிக்கு உதவிய சிறுமியைத் தவிர ஒருவர் கூட ஆரோவின் இயலாமையை கிண்டல் செய்யவில்லை. அமிதாப்பின் குரலும் ஒப்பனையும் நேர்த்தி.
திரைக்கதை :
ஒரு சோகமான செண்டிமென்டான கதையை நகைச்சுவை, காதல், அரசியல் பழிவாங்கல்கள், பாசம் என்ற பல கலவைகளினூடாக கொண்டு சென்றிருக்கின்றார் இயக்குனர் பால்கி. ப்ப்ப்பா என ஜெயாப் பச்சான் திரைப்படத்தின் கலைஞர்கள் ஒவ்வொருவராக தன் குரலினூடக அறிமுகப்படுத்துவதுடன் அறிமுகம் அமிதாப் பச்சான் என்பதிலிருந்து ஆரம்பித்த திரைக்கதை, தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கின்றது. இடைவேளையில் அதிர்ச்சியான ஒரு விடயத்தை எந்தவித ஆர்ப்பாடமும் இன்றிச் சொல்வதில் நிறுத்தி மீண்டும் அடுத்த பாதியில் சில இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்தாலும் குறையில்லாத திரைக்கதையாகவே இருக்கின்றது.
வசனம் :
படத்தின் பலமே வசனங்கள் தான்( ஹிந்தி தெரியாவிட்டாலும் ஆங்கில சப் டைட்டில் காப்பாத்திவிட்டது). அமோலும் ஆரோவும் பேசுமிடங்கள் அதிலும் அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு ஆரோ கொடுக்கும் விளக்கத்தில் தியேட்டரே கலகலத்தது. வித்யா பாலனும் அவரது அம்மாவும் ஒரே வசனத்தில் கர்ப்பத்தை என்ன செய்வது எனப் பேசுவது எனப் பல இடங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.
இயக்கம் :
ஏற்கனவே "சீனி கம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பால்கியின் இரண்டாவது படம் இது. ஆரம்ப காட்சிகளில் இருந்து இறுதிக்காட்சிவரை நேர்த்தியான இயக்கம். அதிலும் ஒரு சோகமான கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. அத்துடன் ஒருவித்தியாசமான கதைக் களத்தில் ( சில வேளைகளில் கதையின் சாயல் அஞ்சலியை நினைவுபடுத்தினாலும் அது வேறை இது வேறை)ஒரு சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு திறம்பட இயக்கியிருக்கின்றார்.
இசை அல்லது இளையராஜா :
ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.
ஒளிப்பதிவு :
இன்னொரு நம்மவர் பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் நிற்கின்றன. சில கமேராக் கோணங்களும் குளோசப் காட்சிகளும் வர்ணிக்க வார்த்தைகள் அற்றவை. ஒரு காட்சியில் வித்யா பாலனினதும் அமிதாப்பினதும் முகம் மட்டும் திரையை இருவரின் கண்ணீருடன் நிறைக்கும் சிம்ப்ளி சூப்பர்.
அபிஷேக் :
அப்பாவுடன் போட்டி போட்டு நடிக்கவேண்டிய பாத்திரம், தன்னால் முடிந்ததைச் செய்திருக்கின்றார். சில இடங்களில் குருவில் பார்த்த நடிப்பு. குறைசொல்லமுடியாத அளவிற்க்கு நடித்திருக்கின்றார்.
வித்யா பாலன் :
ரேவதி, சுஹாசினி இருவருக்கும் பின்னர் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் காட்டியுள்ளார். முகத்தினாலையே பல இடங்களில் அழுகின்றார், கேள்வி கேட்கின்றார் காதல் வயப்படுகின்றார். தமிழில் நல்ல படங்கள் கிடைத்தால் நடிக்கலாம்.
ஆரோவின் தந்தை, வித்யாவின் தாய், ஆரோவின் நண்பன் விஷ்ணுவாக வரும் அந்தச் சிறுவன், ஆரோவின் நண்பியாக வரும் அந்தச் சிறுமி( கோல்ட் வின்னர் விளம்பரச் சிறுமி)போன்ற பாத்திரங்களும் தங்கள் பங்கை திறம்படச் செய்திருக்கின்றார்கள்.
நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கதால் பா எல்லோர் மனதையும் நிச்சயம் கவரும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது எழுந்த கேள்வி தமிழில் ஏன் எப்படி வித்தியாசமான கோணங்களில் கதைகள் வருவதில்லை?
"பா" ர்த்தேன் ரசித்தேன்
பின் குறிப்பு : தியேட்டரில் ஜேம்ஸ் கமரூனின் அவதார் படத்தின் ட்ரையிலர் போட்டார்கள், மிரட்டியிருக்கின்றார்கள். வேட்டைக்காரன் வெளியாகும் 18 ந்திகதி உலகமெங்கும் வெளியாகின்றது அவதார்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
12 கருத்துக் கூறியவர்கள்:
//ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.//
அப்பிடிப் போடு ராசா!
பணம் பார்க்கவேண்டும் என்கிறீர்கள், பார்த்துவிடலாம்.
படத்தில் அமிதாப்பின் பெயரை மாற்ற முடியாதா? :P
நல்ல படமா?
பொதுவாக நான் படங்களே பார்ப்பதில்லை.
பார்த்தாலும் தமிழ்ப்படங்களைத்தவிர வேறேதும் பார்ப்பதில்லை.
அமிதாப்பின் வேடத்தைப் பார்க்க ஆசை வருகிறது.
பார்க்கிறேன்...
அருமை ,கலக்கல்
‘பா’ பார்த்துவிட்டே முழுமையாக எழுதவேண்டும். என்னுடன் தாங்கள் நேற்று அலைபேசும் போது ‘பா’ படம் குறித்து ஆர்வத்துடன் கூறும் போதே நல்ல சினிமா என்று ஊகித்துக்கொண்டேன். விரைவில் பார்த்து விட்டு எழுதுகிறேன்.
பி.சி. சிறிராம், இளையராஜா மட்டும் நம்மவர்கள் அல்ல இயக்குனர் ‘பால்கி’ என்கிற பாலகிருஸ்னனும் நம்பவரே.
இந்த கூட்டணியின் முன்னைய படமான ‘சினிகம்’ல், அமிதாப் ஆணுறை வாங்க கடைக்கு செல்வதாக காட்சியொன்று வரும். அந்த காட்சி ஒன்றே அபிதாப்பின் நடிப்பின் ஆளுமையைச் சொல்லப் போதுமானது.
"பா" ர்த்தேன் ரசித்தேன்
அழகாயிருந்தது நல்ல ரசனை
நானும் "பா" ர்த்தேன் ரசித்தேன்
உங்கள் பதிவை
என் வழி இணையத்தளத்தில் ரஜினியிடம் படத்தை ரீமேக் செய்வோமா என்று கேட்டதாகப் படித்தப் பின்தான் இந்த ஐடியா வந்தது. என் தெரிவென்றால் அபிஷேக் வேடத்தில் மாதவனும் ஆரோவாக கமலும்தான் வித்யாபாலன் மாற்ற வேண்டாமே
curious case of benjamin button இப்பதான் பாரத்தேன் அந்த படத்தை ஞாபகப்படுத்துகிறது.
///curious case of benjamin button இப்பதான் பாரத்தேன் அந்த படத்தை ஞாபகப்படுத்துகிறது.///
நானும் அமிதாப்பின் வேடத்தைப் பார்த்து அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உண்மை அதுவல்ல. Curious Case of Benjamin Buttonல் Benjamin Button முதியவர் தோற்றத்தில் பிறந்து வளர வளர இளமையாவதாகக் காட்டுவார்கள். ஒரு கற்பனைக் கதை மூலம் பலதரப்பட்ட மனிதர்களின் முகங்களைப் படம்பிடிக்க முயன்றிருப்பார்கள். அமிதாப்பின் வேடம் போல நிஜத்திலும் பலர் அவதிப்படுவதாக எங்கோ படித்தேன். ஒப்பனை ஒரே மாதிரி இருப்பதால் படமும் ஒன்றாகிவிட முடியாது.
நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன் வந்தி.
ம்ம்ம்ம்...நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு திரை விமர்சனம் பார்க்க முடிகின்றது.. நானும் இன்னும் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு சொல்கிறேன்... உங்கள் விமர்சனத்தை பார்க்கின்றபோது உடன பார்க்க வேண்டும் போல இருக்கு... ஆனால் நேரம் வில்லத்தனம் பண்ணுது.. என்ன செய்ய...
'பா' பார்த்து விட்டுத் தான் விமர்சனம் வாசித்தேன்.
//இசை அல்லது இளையராஜா //அந்த ஆரம்ப இசை, 'வயலின்' என்கிற மெக்சிகன் சினமாவிலே கேட்ட மாதிரி இருந்தது. இருந்தாலும் ராஜா ராஜா தான்...!
'பா' பி.சி.ஸ்ரீராமுக்கு
இன்னுமொரு நிரூபணம்.
நல்லதொரு விமர்சனம்.....!
Post a Comment