கிட்டத்தட்ட தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்னர் 90களின் ஆரம்பத்தில் தூரதர்சனில் ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் மட்டுமே பார்த்துவந்த தமிழ்மக்களுக்கு (இலங்கைவாழ் மக்களுக்கு செய்திகளும் கலையரங்கம் என்ற இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நிகழ்ச்சி)சன் தொலைக்காட்சி புத்துயிர்கொடுத்தது,
புதிய படங்கள், திரைவிமர்சனம், டாப் டென், சிறந்த நகைச்சுவைகள், பாடல்கள், போட்டிகள் என புதிய புதிய நிகழ்ச்சிகள் மக்களும் சன்னுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகத் தொடங்கிவிட்டார்கள். சில நாட்களில் தமிழர்களை மெல்லக் கொன்றுகொண்டிருக்கும் விஷமான மெஹா சீரியல்களின் வருகை என சன் மெல்ல மெல்ல தன் கிளைகளை படரவிட்டது.
அத்துடன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் டிவி என்ற அரசியல் முத்திரையும் குத்தப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் அதிமுகவும் தன் அரசியல் பணிகளுக்காக ஜெயா டிவியை தொடங்கியது. இப்படியே சட்டர்லைட் யுகத்தில் பல தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன.
தன் சிறப்பான தனித்துவமான நிகழ்ச்சிகளால் மக்கள் மத்தியில் சன் பிரபலமடையத் தொடங்கியது. இதன் வெளிப்பாடக சினிமாப் படங்களில் செய்தி என்றால் தூரதர்சனைக் காட்டியவர்கள் சன்னைக் காட்டத்தொடங்கினார்கள்.
தற்போது சன்னில் பல நிகழ்ச்சிகள் மறைந்து மெஹா சீரியல்களே முற்றுமுழுதாக ஆக்கிரமித்துள்ளது. சன்னை விட்டு மறைந்த சில நல்ல நிகழ்ச்சிகள்.
ஸப்தஸ்வரங்கள் :
ஏவிரமணனால் தொகுத்தளிக்கப்பட்ட சுபஸ்ரீ தணிகாசலத்தால் தயாரிக்கப்பட்ட பல இளம் பாடகர்களை வெளி உலகிற்கு கொண்டுவந்த நிகழ்ச்சி. சுபஸ்ரீயின் வெளியேற்றத்தாலும் ஏவிரமணனின் வெளியேற்றத்தாலும் சில நாட்கள் இன்னொருவரால் நடாத்தப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
இந்த வார உலகம்:
கடந்த வாரம் உலகில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு. பின்னர் சன் நியூசில் சிலகாலம் நடத்தினார்கள். அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.
நீங்கள் கேட்டபாடல் :
விஜயசாரதியால் பல நாடுகளுக்கும் சென்று அந்த அந்த நாடுகள் பற்றிய தகவல்களுடன் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி. பாடல் நிகழ்ச்சியைவிட விஜயசாரதி தொகுத்தளிக்கும் நாடுகள் பற்றிய சுவையான செய்திகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
மலரும் மொட்டும் மற்றும் குட்டிஸ் சாய்ஸ்:
சிறுவர்களுக்கான நிகழ்ச்சி, சுட்டி டிவியின் வருகையுடன் இந்த நிகழ்சிக்கும் கல்தா.
இளமை புதுமை :
சொர்ணமால்யாவை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி. காலேஜ் மாணவமணிகளை வைத்து இவர் செய்த ரகளை. பல இளைஞர்களின் விருப்பத்திற்க்குரிய நிகழ்ச்சி. சொர்ணமால்யாவிற்க்கு பின்னர் அர்ச்சனா, அர்ச்சனாவின் திருமணத்திற்க்கு பின்னர் ஹேமா சிங்ஹா என அழகிகளின் கை மாறி இப்போ கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
பாட்டுக்கு பாட்டு :
பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியின் வருகையின் பின்னர் ரமேஷ் பிரபாவின் வெளியேற்றத்தால் அப்படியே இடம் பெயர்ந்து அதே தலைப்பில் அதே ஸ்பொன்சருடன் கலைஞர் டிவியில் வெற்றி நடைபோடுகின்றது.
மீண்டும் மீண்டும் சிரிப்பு :
இதுவும் கலைஞர் டிவியின் வருகையால் காணாமல் போன நிகழ்ச்சி. மூர்த்தியின் காமெடியும் இறுதியில் இவர்கள் சொல்லும் மெசேயும் பிரபலம். இப்போ கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகின்றது.
காமெடி டைம் :
மயில்சாமியால் இரவு வேளையில் நடத்தப்பட்டு பின்னர் சிட்டிபாபு அர்ச்சனாவின் வணக்கம், வணக்கம், வணக்கத்தால் ரொம்பவும் பிரபலமான நிகழ்ச்சி. அர்ச்சனாவின் விலகலுக்குப் பின்னர் இன்னொருவர் (சுப்ரஜா என நினைக்கின்றேன் அவரையும் இப்போ எந்த சானலிலும் காணவில்லை) சிட்டிபாபுடன் இணைந்து செய்தார். பின்னர் அப்படியே மறைந்துபோய்விட்டது. அதன் புதியவடிவம் ஆதித்யாவில் காலை மாலை வேளைகளில் பலரால் தொகுத்தளிக்கப்படுகின்றது.
திரைவானம், கொண்டாட்டம் :
மோனிகாவால் தொகுத்தளிக்கப்பட்ட திரைப்படங்களின் சிறப்புக்காட்சிகள். திரைவானத்தில் ஒரே மாதிரி கதை அல்லது காட்சிகள் உள்ள இரண்டு படங்களைக் காட்டுவார்கள். கொண்டாட்டம் நகைச்சுவைத் துணுக்குகள் நிறைந்த காட்சிகள் காட்டப்படும் நிகழ்வு.
அசத்தப்போவது யாரு :
சன் இன்னொரு சானலில் இருந்து லாவகமாக சுட்ட பல நிகழ்ச்சிகள் இருக்க ஒரு சானலில் இருந்து நிகழ்ச்சியை மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், நிகழ்ச்சி செய்பவர்கள் என பலரையும் தூக்கி இயக்குனருக்கும் மதன்பாபு சிட்டிபாபுவுக்கும் ஜால்ரா அடித்த நிகழ்ச்சி. அதிலும் பத்தோ பதினொரு படங்கள் மட்டும் நடித்த சிட்டிபாபுவை காமெடி ஜாம்பவான் எனும்போது வரும் சிரிப்பு இவர்களின் பார்போர்மன்ஸ் பார்க்கும் போது வருவதில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மனாக மதுரை முத்து ஒருவரையே பல கால நம்பியிருந்த நிகழ்ச்சி. சில வாரங்களாக ஏனோ நிறுத்திவிட்டார்கள். இதே நிகழ்ச்சியின் இன்னொரு காப்பியான எல்லாமே சிரிப்புத்தான் கலைஞர் டிவியில் களை கட்டுகிறது. குறிப்பாக ரோபோ சங்கர் அரவிந்த் இருவரின் பார்போமன்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது.
விஜய் டிவியில் இருந்து எப்படி ஒரு நிகழ்ச்சியை சன் முற்றுமுழுதாக தன் வசமாக்கியதோ அதேபோல் சன்னுக்கு நியூட்டனின் மூன்றாம் விதிப்படி கலைஞர் டிவி செய்துகாட்டியது.
இப்படிப் பல நிகழ்ச்சிகளை நிறுத்தி தற்போது சன் வெறும் மெஹா சீரியல்களை ஒளிபரப்பி மக்களின் சிந்தனைகளை பாழாக்குகின்றது. கோலங்கள் என்ற தொடர் கடந்த 5 வருடமாக மக்களை அறுத்துக்கொண்டிருக்கின்றது. பெரும்பாலான மெஹா சீரியல்களின் கதைகள் ஒரே மாதிரியான கதைதான் பழிவாங்கல், குடும்பப் பிரச்சனை. இன்னொருத்தி கணவன் மேல் ஆசைப்படும் பெண், இன்னொருவன் மனைவி மேல் ஆசைப்படும் ஆண். இரண்டு கல்யாணம், கள்ளக்காதல் என ஒரே திசையில் மக்களை முட்டாளாக்கும் தொடர்கள்.
சன்னில் தற்போது எந்தவிதமான நகைச்சுவைத் தொடர்களோ அல்லது விடாது கருப்பு, ருத்ரவீணை போன்ற திரில் தொடர்களோ இல்லை. சனி ஞாயிறுகளில் அம்மன் தொடர்போட்டு அறுக்கின்றார்கள்.
சன்னின் இந்த தடம் புரளல்களுக்கான காரணமாக எனக்குப் பட்டவை:
1. கலைஞர் டிவியின் வருகையும் வளர்ச்சியும் என்னதான் கண்கள் பனித்து இதயம் இனித்தாலும் டிவியைப் பொறுத்தவரை சன்னின் தற்போதைய எதிரி கலைஞர் தான். அதனால் தான் அவர்கள் ரஜனி படம் போட்டால் இவர்களும் ரஜனி படம் போடுவார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்பெசல் ஷோ போட்டால் இவர்கள் உடனே அதே நேரத்தில் கேடிவியில் சூப்பர் ஹிட் திரைப்படம் போடுவார்கள். இந்தப்போட்டி இசையருவிக்கும் சன் மியூசிக்கும் கூட உண்டு.
2. கேடிவி, ஆதித்யா, சுட்டிடிவி, சன் மியூசிக் என ஒவ்வொரு வகைக்கும் ஒரு சானல் இருப்பதால் சன்னில் மெஹா சீரியல் மட்டும் போதும் என்ற மனப்பான்மை. கேடிவியில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் பத்தாயிரம் முறையாக ஒளிபரப்பான படமே ஒளிபரப்பாகும். லியோனி நடித்த கங்கா கெளரி படம் தியேட்டரைவிட கேடிவியில் அதிக நாட்கள் ஒளிபரப்பானது.
3. சன் குழுமம் படம் தயாரிக்க அல்லது மற்றவர்கள் தயாரித்ததை வாங்கி விநியோகிக்கத் தொடங்கியதன் பின்னர் தங்கள் இதுவரை தயாரித்த மொக்கை படங்களை மாத்திரம் டாப் டென்னிலும் சூப்பர் சீன்ஸ்சிலும் ஒளிபரப்பாக்கி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்தது. மாசிலாமணி விளம்பரத்தைக் கண்டாலே ஆட்டோமடிக்காக ரிமோட் சானல் மாற்றுகின்றது.
4. சன் மியூசிக்கில் முன்னர் போல் அழகான தொகுப்பாளினிகள் இல்லை. இருந்தவர்களும் இசையருவிக்கு போய்விட்டார்கள். அத்துடன் சன் மியூசிக்கில் தங்கள் படத்தின் மொக்கைப்பாடல்களே போடுகின்றார்கள். அயன் பாடல்களைப் போட்டுமுடித்ததும் "சான்ஸே இல்லை சூப்பர் டூப்பர் பாடல் பார்த்தோம்" என தொகுப்பாளினி தினமும் சொல்லும் போது அவரை அடிக்கத் தான் மனம் வருகின்றது.
5. சன் நியூஸ் பக்கத்தில் பாரிய அனர்த்தம் நடந்தபோதும் அமெரிக்காவில் 4 பேர் விபத்தில் செத்ததும், ரஷ்யாவில் மாடு கன்னு போட்டதும் என நடுநிலையான செய்திகளால் வெறுப்படையச் செய்தது.
6. ஆதித்யா காமெடிச் சானலில் சிரிக்கமட்டும் என மற்றவர்களைத் துன்புறுத்தின் ஒரு நிகழ்ச்சி செய்கிறார்கள். இதனை இதுவரை எவரும் கண்டிக்கவில்லை. அத்துடன் ஒரே காமெடியையே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள். எத்தனையோ இடைக்கால கவுண்டமணி காமெடிகள். பழைய நாகேஷ் சுருளி சோ காமெடிகள் இருக்க மீண்டும் மீண்டும் வடிவேலும் விவேக்கும் தான்.
சன் தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்யவேண்டும் இல்லையென்றால் அடுத்த இடத்தில் இருக்கும் டிவிக்கள் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
3 கருத்துக் கூறியவர்கள்:
அருமையான அலசல்
You said it correct about Sun Tv. Excellent blog.
Radha
சப்தஸ்வரங்கள் மற்றும் ரமணனை யாராலும் மறக்கமுடியாது. அந்த நிகழ்ச்சியையே தூக்கிய சன்னுக்கு மற்றதெல்லாம் சும்மா
Post a Comment