நிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதை

"துளித் துளி மழையாய் வந்தாளே" என ஹரீஷின் செல்போன் தமன்னாபோலவே சிணுங்கியது.

"ஞாயிறு காலேலையும் நித்திரை கொள்ளவிடாமாட்டங்கள்" என நினைத்தபடி தூக்க கலக்கத்தில் "ஹலோ" என்றான்.

"டேய் மச்சான் நாங்கள் எல்லோரும் கிரவுண்டுக்கு வந்துட்டம் உடனே வா" எஸ் எம் எஸ் போல் சொன்னான் நண்பன் வருண்.

"குளிச்சிட்டு வாறன்டா" என்றபடி பாத்ரூமில் நுழைந்தான் ஹரீஷ்.

ஹரீஷ் கணணிப் பொறியியளாலனாக ஒரு தனியார் கம்பனியில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு கொழும்பில் வசிக்கும் இளைஞன். வாரத்தில் ஐந்துநாளும் ஜாவாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சனி ஞாயிறு என்றால் நண்பர்களுடனும் கிரிக்கெட்டுடனும் குடும்பம் நடத்துபவன். ஆறடி உயர ஜிம்பாடி பார்ப்பவர்களை அவனை ஒரு விளையாட்டுவீரனாகவே எண்ணவைக்கும். பாடசாலைக் காலத்தில் பாடசாலை அணிக்கும், பல்கலைக் கழக வாழ்க்கையில் பல்கலைக் கழக அணிக்கும் கிரிக்கெட் விளையாடிய சகலதுறை வீரன். நல்ல படிப்பு, நல்ல வேலை என சகல செளபாக்கியங்களும் இருந்தும் இன்னும் திருமணம் செய்யவில்லை.

"அம்மா டீ" உடலைத் துடைத்தபடி ஹரீஷ் குசினிக்குள் குரல் கொடுத்தான்.

டீயுடன் வந்த அவனின் தாய்,
"தம்பி உனக்கு அடுத்த பட்சில் படிச்ச ஒரு பெட்டையின் சாதகம் வந்திருக்கு, இனியாவது ஓம் என்று சொல்லடா?"

"காலமையே உங்கடை ஆக்கினியைத் தொடங்கிவிட்டியளே, நான் சிசிஎன்ஏ செய்யவேண்டும், இன்னும் நல்ல பொசிசனுக்கு வரவேண்டும் அதன் பிறகு பார்ப்பாம்" சலித்தபடி சொன்னான்.

"நீ இன்னும் அவளை மறக்கவில்லை போலிருக்கின்றது, துலைவாள் என்ரை பிள்ளைக்கு என்ன மருந்துபோட்டு மயக்கினாளோ"

"சும்மா அவளைத் திட்டாதை, எனக்கு டீயும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்" கோபத்துடன் பைக்கை உதைத்தான் ஹரீஷ்.

காலி வீதியில் போகும் போது பழைய ஏ எல் கால நினைவுகள் மெல்ல தாலாட்டத் தொடங்கின.

யாழில் பிரபலமான அந்தப் பாடசாலைகளின் வருடாந்த கிரிக்கெட் போர் நடந்துகொண்டிருந்தது. தன் கல்லூரிக்காக ஆரம்ப வீரனாக இறங்கிய ஹரீஷ் நான்குகள் ஆறுகள் என அடித்து நொருக்கிக்கொண்டிருந்தான். போட்டியைப் பார்க்கும் மாணவர்களினதும் ஏனைய பார்வையாளர்களினதும் சத்தம் வானைப் பிளந்தது. ஸ்கோர்போர்ட் பக்கம் இருந்த பக்கத்து பாடசாலை மாணவிகளின் கூட்டத்தில் ஒருத்திமட்டும் ஹரீஷின் ஒவ்வொரு ஓட்டத்தையும் கைத்தட்டியும் துள்ளியும் ரசித்தாள்.

முதல் நாள் ஆட்டம் முடிந்தது ஹரீஷ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தான். தன் சக மாணவர்கள் ஏனைய மாணவர்கள் என பலரும் கட்டிப்பிடித்தும் கைகொடுத்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

"வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" ஒரு தேன்குரல் தன்னுடைய மெல்லிய கைகளை கொடுத்து மின்னல் போல் வாழ்த்திவிட்டுச் சென்றது.

அவளின் உருவம் ஹரீஷின் மனதில் மெல்லிய விம்பமாக பதிந்துவிட்டது. சில நிமிடங்களில் அவளை மறந்துவிட்டு அடுத்தநாள் போட்டியில் எப்படி எதிரணியை விழுத்துவது என அணித்தலைவருடன் ஆலோசித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

அடுத்தநாள் ஹரீஷ் தன் வேகத்தில் எதிரணியை மிரட்டிக்கொண்டிருந்தான். ஜோர்க்கர்களும் பெளன்சர்களும் எகிறிப்பறந்தன. அத்துடன் அவன் கல்லூரி வெற்றியையும் ஈட்டிவிட்டது. ஹரீஷ் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் போது மீண்டும் தூறலாக அதே தேன் குரலில் "வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" இம்முறை கைகொடுக்காமல் மெல்லிய புன்னகை மட்டும். அவனும் ஒரு சிரிப்புடன் நன்றி எனச் சொல்லிவிட்டு அவளின் முகத்தையும் ரையையும் பார்த்தான்.

மறுநாள் மாலை ரியூசனில் ஹரீஷ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"இந்த முறை அவங்கடை ஆட்டத்துக்கு ஆப்படித்துவிட்டோம் மச்சான்."
"நீ ஆப்படிச்சாலும் அந்தக் கல்லூரி கோச்சின் மகள் நீ அடித்த ஓவ்வொரு அடிக்கும் கை தட்டினாளே"
"அட அவள் தேவா மாஸ்டரின் மகளோ, ரண்டு நாளும் என்னைப் பாராட்டினாள் அவளின் ரையைப் பார்த்தே நினைச்சேன். சூப்பர் பிகரடா"
"மச்சான் நீ நினைச்சால் அவளை மடக்கலாம்" நண்பர்கள் உசுப்பேத்தினார்கள்.
"இல்லையடா என்ரை லட்சியம் தேசிய அணியில் ஆடி மெக்ராத்தின் பந்துக்கு சிக்ஸ் அடிக்கவேண்டும்"
"அடப்பாவி நல்ல கனவு எனிவே உன் கனவு பலிக்க வாழ்த்துக்கள்"

கெமிஸ்ரி மாஸ்டர் உள்ளே வரவும் இவர்களின் கதையும் நின்றுவிட்டது.

வகுப்பு முடிந்ததும் "சொறி மச்சான் அம்மா நல்லூரானுக்கு ஒரு சலூட் அடித்துவிட்டு வரச்சொன்னார், நான் மற்றப்பக்கத்தாலை போறன் என்றபடி " சைக்கிளை எதிர்த்திசைக்கு திருப்பினான் ஹரீஷ்.

"ஹலோ ஹலோ" தன் பின்னால் ஒரு பெண் குரல் கூப்பிடுவதைக் கேட்டதும் சைக்கிளை ஸ்லோவாக்கி திரும்பிப் பார்த்தால் அந்த கோச்சின் மகள்.

"ஹலோ என்ன இந்தப் பக்கம்?" ஹரீஷ்
"நானும் உங்கடை ரீயூசன் தான் அடுத்த பேட்ச் நான் பயோ நீங்கள் மட்ஸ்தானே.."
"ஓமோம் நான் மட்ஸ்தான் அம்மாவின் விருப்பம் நான் எஞ்ஜினியராவது அப்பாவோ என்னை கிரிக்கெட் வீரனாக்கி அழகு பார்க்க விரும்புகின்றார், ஆமாம் உங்கடை பேர்?"

"ஐயோ உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் என் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன், லாவண்யா"

"உங்களைப்போலவே உங்கடை பேரும் அழகாக இருக்கு, உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?"

"பிடிக்குமாவா? பைத்தியம் நான், ஊரிலை பொடியள் டெனிஸ் போலிலை விளையாடினாலும் ஒருக்கால் நிண்டு பார்த்துவிட்டுப்போற கேஸ் நான்"

"சொறி லாவண்யா நான் நல்லூர் கோயில் பூட்டமுன்னர் போகணும், அதாலை நாம் சைக்கிளில் கதைத்தபடி போவோமா?" என்றபடி இருவரும் பரலலாக கிரிக்கெட் பற்றிக் கதைத்தபடியே சென்றார்கள்.

கல்வியங்காட்டுச் சந்தியில் லாவண்யா தான் அரியாலைப் பக்கம் போகவேண்டும் என்றபடி ஹரீசுக்கு பாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அன்றைய ஹரீஷின் இரவை லாவண்யாவே ஆக்கிரமித்திருந்தாள், முரளியின் தூஷ்ராவில் இருந்து சகலதும் தெரிந்துவைத்திருக்கின்றாள். இப்படியான பெண் எனக்கு வாய்த்தால் தான் பொருத்தமாக இருக்கும்.

தினமும் ரியூசன் முடிய இருவரும் ஒன்றாக வரத்தொடங்கினார்கள். வகுப்புகளிலும் பொடியளிடை அரசல்புரசலாக இவர்கள் கதைதான். சிலர் நேரடியாகவே கேலி செய்தார்கள். எக்ஸாம் நெருங்கி வந்தபடியால் ஹரீஷின் கவனம் படிப்பிலும் போனது.

"எப்படியும் சோதினை முடிந்ததும் என்ரை லவ்வை அவளுக்குச் சொல்லவேண்டும். கார்ட்டுடன் கடிதம் எழுதிக்கொடுப்பதோ சீ அது பழைய முறை அப்போ நேரடியாக போலைப் போடவேண்டியதுதான். எப்படியும் ஓம் என்பாள்" என மனசுக்குள் நினைத்தபடி பாஸ் பேப்பரைப் புரட்டினான்.

சோதினையும் முடிஞ்சு விட்டது, வெள்ளிக்கிழமைகளில் காதலைச் சொன்னால் பலிக்கும் என எங்கேயோ வாசிச்ச நினைப்பில் ஒரு வெள்ளிக்கிழமை நல்லூரானைத் தரிசித்தபின்னர் அவளுக்காக கல்வியங்காட்டுச் சந்தியில் நின்றான் ஹரீஷ்.

"ஹாய் ஹரீஷ், எப்படி எக்ஸாம்?"
"டவுள் மேட்ஸ் ஓக்கே, கெமிஸ்ரி தான் கொஞ்சம் கஸ்டப்படுத்திவிட்டது".
"ஓ அப்படியா"
"நான் உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணுகின்றேன்"
"எனக்காகவா ஏன் என்ன விசயம்?"
"ம்ம்ம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, சொல்லாமலும் இருக்க முடியவில்லை வாங்கோவன் லிங்கத்திலை ஒரு ஐஸ் கிறீம் குடிச்சபடி பேசுவம்"
"ஐயோ ஆளை விடுங்கோ யாராவது கண்டால் பிரச்சனை, பரவாயில்லை சொல்லுங்கோ"
"ஐ லவ் யூ"
"நினைச்சேன் இப்படி ஏதாவது உளறுவியல் என்று, என்னைப் பற்றி என்ன தெரியும்"
"தேவா மாஸ்டரின் மகள், பயோ படிக்கின்ற கெட்டிக்காரி, சுஜாதாவில் இருந்து கிரிக்கெட் வரை தெரிந்துவைத்திருக்கின்ற அறிவாளி, வேறை என்ன தெரியனும்?"

" என் பெயர் தெரியுமா?"
"லாவண்யா"
"முழுப்பெயர் தெரியுமா?"
"ம்ம்முழுப்பெயர்..."
" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்"..

இனிப் பவன் தொடர்வார்.

இந்த தொடர்கதையை நாம் சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது நான் எழுதியதன் தொடர்ச்சியை இன்னொருவர் எழுதுவார். இது ஒரு புதுவகையான முயற்சி. என்னைத் தொடர்ந்து நண்பர் பவன் எழுதுவான்.

பவனின் கதை நிலாக் காதல்

ஹாட் அண்ட் சவர் சூப் 19-08-2010

அரசியல்
பெரிதாக எந்த அரசியல் நிகழ்வுகளும் நிகழவில்லை என்பதால் அரசியல் இன்றைய சூப்பில் இல்லை.

நீண்ட நாள் சந்தேகம் : இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?

கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறும் முக்கோணத்தொடரின் கடைசியாக இந்தியா இலங்கை விளையாடியபோட்டியால் ஆசிய கிரிக்கெட் அதிர்ந்துபோய் ரணகளமாகி இருக்கின்றது. ரந்தீவ் செய்தது தவறுதான் அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், இப்போ பழைய குப்பைகளை இந்திய முன்னாள் வீரர்கள் கிளறுகின்றார்கள். இவர்கள் செய்யாத குழப்படிகளையா ரந்தீவ் செய்துவிட்டார்? ஆனாலும் வழக்கம்போல் பெரிய அண்ணனுக்கு பயந்து இலங்கை கிரிக்கெட் சபை மன்னிப்பு கேட்டுவிட்டது. இந்தியாவை உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பை ரணகளமாக்குகின்றார்கள். இத்தனைக்கும் அணித்தலைவர் டோணி அமைதியாக இருக்கின்றார்.

எத்தனையோ தேவையான விடயங்கள் இருக்க ஹிந்திய ஊடகங்கள் இதனை தூக்கிபிடிப்பது வேறு ஏதோ அரசியல் அல்லது உள்குத்து இருப்பது போல் தெரிகின்றது. இது பற்றி பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும் அதிகம் எழுதியபடியால் நான் பெரிதாக அலட்ட விரும்பவில்லை.

யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் மோகம் இன்னமும் குறையவில்லை என்பதற்க்கு நேற்று கெனிங்டன் ஓவலில் தொடங்கிய இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் போட்டி சாட்சி. மைதானத்தில் நல்ல கூட்டம், மைதானத்தில் அருகால் தான் தினமும் நான் பயனிக்கின்றனான். அதனால் தான் சனக்கூட்டத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் வழக்கம் போல் இங்கிலாந்து பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் தான் கிரிக்கெட் செய்தி காணக்கிடைத்தது. அவர்கள் கால்பந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.


சினிமா :

அண்மையில் தில்லாலங்கடியும் களவாணியும் பார்க்க கிடைத்தது. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் இரண்டும். தில்லாலங்கடி ரீமேக், களவாணி அக்மார்க் ஒரிஜினல், இரண்டும் நகைச்சுவை நிறைந்த படங்கள். ஜெயம் ரவிக்கு நகைச்சுவையும் நன்றாகவே வருகின்றது. தமன்னா அழகாக இருக்கின்றார். பசங்களில் அறிமுகமான விமல் களவாணியில் அசத்துகின்றார். கதாநாயகியும் ஓக்கே ரகம் தான். வழக்கம்போல் சரண்யா மனசுக்குள் மத்தாப்புதான்.

நாளைக்கு நான் மகான் அல்ல வெளியாகின்றது. கார்த்தி இதில் எப்படி நடித்திருக்கின்றார் எனப் பார்க்கவேண்டும், நான் மகான் அல்ல பாடல்களில் வழக்கம் போல் யுவன் ராஜாவாகி இருக்கின்றார். காதல் சொல்ல வந்தேன் படத்தின் சந்தியா பாடல் யுவனுக்கு இன்னொரு காதல் வளர்த்தேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் பாடல் போல் மெஹா ஹிட். அருமையான மெலடி. ஆனால் படம் தான் பப்படம் என்கின்றார்கள்.

பதிவுலகம்

இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பு நடந்து வரும் 23ந்திகதியுடன் ஒரு வருடமாகப்போகின்றது. சந்திப்பின் மூலம் கிடைத்த நன்மைகள் அல்லது விளைவுகள் என்னவென்றால் மதுவினால் இலங்கைப் பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டதும், பல நல்ல நண்பர்கள் கிடைத்து இன்றைக்கு அவர்கள் மாமன், மச்சான், சித்தப்பூ பெரியப்பூ என உறவு முறை கொண்டாடும் வரை நல்ல உறவுகளானதும் தான். எத்தனையோ விடயங்கள் நடைமுறப்படுத்த பலரும் முயன்றும் ஏனோ பலரின் ஒத்துழைப்பு இல்லாமையால் கைவிடப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது சந்திப்பும் சென்ற வருடம் டிசம்பரில் நடந்தது அதன் பின்னர் கடந்த 8 மாதங்களாக நண்பர்களாக சந்திக்கின்றார்களே ஒழிய இன்னொரு பதிவர் சந்திப்புக்கு சாத்தியம் ஏனோ ஏற்படவில்லை. இடையில் இலங்கையின் ஏனைய பாகங்களில் ஒரு இடத்தில் சந்திப்போம் என முடிவெடுத்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எத்தனையோ ஆற்றல்மிக்க துடிப்பான இளைஞர்கள் இப்போது பதிவு எழுதுகின்றார்கள், அவர்கள் நினைத்தால் விரைவில் இன்னொரு சந்திப்பை நடத்தலாம். இதன் மூலம் தூங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற பதிவர்களை மீண்டும் எழுத வைக்கலாம்.

சிறு விளக்கம் :
அண்மைக்காலத்தில் பெரும்பாலும் என்னுடைய பதிவுகளுக்கு நான் பதில் பின்னூட்டங்கள் இடுவது மிகவும் குறைந்துவிட்டது, இதனைச் சில நண்பர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் அறியத் தந்தார்கள். இதற்க்கான முக்கியமான காரணம் நேரம் மட்டுமே. பல தடவை பதில் அளிக்கமுயற்சி செய்வேன் ஆனாலும் ஏனோ முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலும் நான் ரசித்த பதிவுகளுக்கு தேவைப்பட்டால் வாக்கும் பின்னூட்டமும் அளித்துவருகின்றேன். பகலில் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. இரவிலும் அரைவாசி இரவில் நேரமில்லாதபடியால் இந்தப் பதிவு நள்ளிரவின் பின்னர் எழுதுகின்றேன். எத்தனையோ விடயங்கள் எழுத யோசித்தாலும் வேலைப்பளு, கல்விப்பளு எழுத விடுகின்றதில்லை. ஈட் கிரிக்கெட், ட்ரிங் கிரிக்கெட் என இருந்த நான் இப்போ கிரிக்கெட்டை கிரிகின்போவில் மட்டும் ஸ்கோர் பார்ப்பதுடன் விட்டுவிடுகின்றேன், ரந்தீவ் விவகாரம் கூட கங்கோனின் பதிவில் தான் அறிந்தேன். இனிமேல் எப்படியும் நேரம் ஒதுக்கி பதில் பின்னூட்டம் இட முயற்சிக்கின்றேன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அம்மாவுக்காக இந்தப் பாடல்.

ஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2010

அரசியல்

மீண்டும் இலங்கையின் அரசியல் அரங்கு சூடு பிடித்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆளும் கட்சியுடன் இணையப்போவதாக வந்த செய்திதான் இதற்கான காரணம். ஐக்கியதேசியக் கட்சியில் போட்டிபோடும்போதே பிரபா கணேசனுக்கு தெரிந்திருக்கும் எப்படியும் தாம் எதிர்க்கட்சிதான் என ஆனாலும் வெற்றி பெற்று சில நாட்களின் பின்னர் என்ன காரணத்துக்காகவோ அவர் ஆளும் கட்சியில் இணைய முனைகின்றார். ஏற்கனவே இவரின் அண்ணன் மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில் ரணில் இடம் கொடுக்கவில்லை என பிரச்சனைப் பட்டார்கள். இந்த கட்சி தாவும் நபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா? ஆகக்குறைந்தது மக்களுக்கு திருப்பி அழைக்கும் அதிகாரம் தேவை? மக்கள் பிரபா கணேசனை ஆளும் கட்சி எம்மியாக பாராளமன்றத்துக்கு அனுப்பவில்லை? ஆளும் கட்சியில் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தமிழர் ஒருவர் வேண்டுமென்றால் இராதகிருஷ்ணனையே அனுப்பியிருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் பலர் ஆளும் கட்சிக்கு தாவ இருக்கின்றார்களால். ரணில் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு துறவியாகலாம்.

அரசியல் சண்டியன் மேர்வின் சில்வாவை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. காலம் பிந்திய முடிவு தான் ஆனாலும் பாராட்டவேண்டிய முடிவு. சென்ற வியாழக்கிழமை மேர்வின் சில்வாவின் புகழ் லண்டன் புகையிரதங்களிலும் நீளத்துக்கீழ் புகையிரதங்களிலும் மேலும் பரவி இலங்கைக்கு மேலும் புகழ் சேர்த்தது. இங்கே புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மெற்ரோ எனப்படும் பத்திரிகை இலவசமாக கிடைக்கும். அந்தப் பத்திரிகையில் மேர்வினின் படத்துடன் அவர் சமுர்த்தி உத்தியோகத்தரைக் கட்டிப்போட்ட செய்தி வெளியாகியது. இந்த ஜோக்கரை பாராளமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான். சந்திரிக்கா செய்த எத்தனையோ பிழைகளில் இந்தப் பிழையும் ஒன்று, கடைசியில் சந்திரிக்காவையே திட்டி அரசியல் நடத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்றவர் மேர்வின் சில்வா. இவரை சில நாள் ஊடக அமைச்சராக்கி அழகு பார்த்த ஜனாதிபதி இப்போ அவரின் சண்டித்தனம் கூடக்கூட இடை நிறுத்தியிருக்கின்றார். இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் என பொறுத்திருந்து பார்ப்போம்.

எங்கள் நாடுகளில்
கோன்கள் உயர்கின்றார்கள்
வரப்புகள் மட்டும்
அப்படியே இருக்கின்றன.

சினிமா

எந்திரன் இசை வெளியீடு பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்று பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்றன. வழக்கம்போல் ரகுமானின் பாடல்கள் முதன்முறை கேட்கும் போது அவ்வளவு இதமாக இருக்கவில்லை. விண்ணைத்தாண்டி வருவாய், இராவணன் பாடல்கள் சில உடனடியாக பிடித்தது போல் எந்திரனில் எந்தப் பாடலும் முதலில் கவரவில்லை. கொஞ்சம் கொஞ்சம் கேட்டபின்னர் புதிய மனிதாவும் பூம்பூம் ரோபோடாவும் நல்லாயிருக்கு. எப்படியும் ஷங்கர் பாடல்களை அழகாக படமாக்கி ஹிட்டாக்கிவிடுவார். போதாக்குறைக்கு உழக அழகியும் இருக்கின்றார் சொல்லவா வேண்டும். எந்திரனின் வெற்றிக்கு காரணம் ஷங்கரா? சூப்பர் ஸ்டாரா? இல்லை சன் குழுமத்தின் ஓவர் டோஸ் விளம்பரமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மொக்கைப்படங்களான காதலில் விழுந்தேன், மாசிலாமணி, அம்பா சமுத்திரம் அப்பானிக்கே படம் வெளியாகி அடுத்த நாளே வெற்றிப்படம் என விளம்பரம் கொடுத்தவர்கள். ரோபோவுக்கு சும்மாவா இருப்பார்கள் அதிலும் சொந்தப்படம் வேறை பாவம் சன் நெட்வேர்க் இணைப்புகள் இருப்பவர்கள்.

நீண்ட நாள் சந்தேகம் ஒன்று படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்.

கிரிக்கெட்

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் பலம் குறைந்த நியூசிலாந்திடம் 200 ஓட்டங்களால் அவமானத் தோல்வியைத் தழுவியது. நியூசியின் புதிய தலைவர் ரோஸ் டைலரின் 95 ஓட்டங்களும் ஸ்டைரிசின் 89 ஓட்டங்களும் நியூசிக்கு 288 என்ற நல்ல ஓட்ட எண்ணிக்கையை கொடுக்க இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக், யுவராஜ் சிங், டோணி, ரைனா இலகுவாக இந்த எண்ணிக்கையை கடப்பார்கள் என நினைத்தால் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோற்றுவிட்டார்கள்.

இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் எட்பக்ஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் இரண்டாவது இனிங்கிசில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் புரோட் பந்துவீசும் போது பாகிஸ்தானிய வீரர் ஹைடரை நோக்கீ பந்தால் எறிந்தவிடயத்தில் ஐசிசி இங்கிலாந்துக்கு சார்பாக நிற்பதுபோல் தோன்றுகின்றது. கனவான்கள் ஆட்டம் என்ற நிலையில் இருந்த கிரிக்கெட்டில் புரோட் செய்தது பாரிய தவறாகும் இன்னொரு வீரரை காயப்பட்டுத்தும் நோக்கில் எறிந்த பந்துக்கு வெறும் அபராதத்துடன் புரோட் தப்பிவிட்டார். ஆகக்குறைந்தது அவரை இந்த தொடரில் இருந்து நீக்கி இருக்கவேண்டும் ஆனால் ஏனோ ஐசிசி செய்யவில்லை. சில இங்கிலாந்து வீரர்களும் பத்திரிகைகளும் புரோட்டுக்கு ஆதரவாக அவர் மன அழுத்தத்தால் அப்படிச் செய்தார் என்றும் பின்னர் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனை சுலபமாக முடிந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் புரோட்டுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்பது புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே தெரியும் போது ஐசிசிக்கு மட்டும் தெரியவில்லை. வெள்ளைத் தோலுக்கு என்றைக்கும் மதிப்பு அதிகம் தான்.

பேஸ்புக்கின் அசுர வளர்ச்சிக்கு கீழே உள்ள இந்தப் படமே சான்று. பட உதவி செய்த இளைப்பாறிக்கொண்டிருக்கும் புல்லட்டிற்க்கு நன்றிகள்.


நான்காம் ஆண்டும் நட்புகளும் - பகுதி 2

சரியாக ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் வலைப்பதிவுக்கு வருகின்றேன். இரண்டாம் பகுதியில் என்னுடைய ஏனைய வலையுலக நட்புகள் தொடர்கின்றன. சில நாட்களாக வலையுலகம் எனக்கு தூரமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலும் பதிவுகள் வாசிக்கின்றேன், சிலதுக்கு மட்டும் பின்னூட்டம் இடுகின்றேன். நேரமின்மை முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் முன்னையதைப்போல் ஏனோ இப்போ எழுதமுடியவில்லை, என்ன காரணமோ யாம் அறியோம். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இருக்கின்றது. இந்தக் கதைகளை விட்டுவிட்டு விடயத்திற்க்கு வாறன்.


மது
பெயரைப் போலவே இவரின் பேச்சும் போதை தரும். மதுவின் கருத்துக்களின் பெரும்பாலும் அவருக்குரிய மதுயிசம் இருக்கும்(மதுயிசம் என்ன என அறியவேண்டியவர்கள் தங்கள் மின்னஞ்சலுடன் என்னை அல்லது கோபியைத் தொடர்பு கொள்ளுங்கள்). இவருக்குத் தெரியாத சந்துபொந்துகள் இல்லை (தொழில்நுட்பத்தில்). பெரிய்ய ஹக்கராகவேண்டியவர், நேர்மையான மனிதர் என்றபடியால் அதனை செயல்படுத்துவதில்லை.

டொக்டர் எம்.கே.முருகானந்தன்
இவரை வலையுலகிற்க்கு வரமுன்னரே ஒரு எழுத்தாளராக தெரியும் பின்னர் வைத்தியராக அவரிடம் பலமுறை வைத்தியம் கூடப் பார்த்தேன். தன்னுடைய கடினமான வேலைப் பளுவிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் தன்னுடைய வலைப்பதிவு முகநூல் என அனைத்திலும் எழுதிக்கொண்டிருக்கின்ற கலை இவருக்கு மட்டுமே கைவந்தது. இவரின் எளிமையான தமிழில் பாமரனுக்கும் புரியும் படி எழுதும் மருத்துவப் புத்தகங்களும் கட்டுரைகளும் என்றைக்குமே மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கும். இவரின் சினிமா விமர்சனங்களை வாசித்து நான் பல படங்கள் பார்த்திருக்கின்றேன்.

மாயா
என்னை வந்தியத்தேவனாக மாறவைத்தவர்களில் இவரும் ஒருவர். பதிவுலகின் இன்னொரு மயூரன். ஆரம்பகால இலங்கைப் பதிவர்களில் ஒருவர், தற்போது லண்டனில் உயர்கல்விக்காக வசிக்கின்றார்(புலம் பெயர்ந்து அல்ல). இப்போது அடிக்கடி தொலைபேசியில் உரையாடினாலும் இன்னமும் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

நிர்ஷன்

வலையுலகின் மூலம் அறிமுகமானவர். 2007ல் ஒழுங்குபடுத்த முயன்ற பதிவர் சந்திப்பின் மூலம் தொலைபேசி மின்னஞ்சல் என தொடர்பில் இருந்தாலும் சென்ற வருடம் தான் நேரில் சந்தித்தேன். பதிவுலகத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தீர்த்துக்கொள்வோம். இவரின் துணிச்சல் வியக்கத்தக்கது.

நிலா

பின்நவீனத்துவ கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மூலம் கலக்கிக்கொண்டிருப்பவர். இவரின் சில கட்டுரைகளுக்கு அவரிடம் பேச்சுத்தமிழில் விளக்கம் கேட்டுக்கூட இருக்கின்றேம். சங்க இலக்கியங்கள் எல்லாம் முகநூலில் இட்டு தன் திறமையை அடிக்கடி காட்டுகின்றவர்.

சினேகிதி

நம்ம ஊரு சீனியர். வலையுலகில் பலகாலமாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் தத்தக்கபித்தக பதிவர். மின்னஞ்சல்கள், முகநூல் அரட்டைகள் என அடிக்கடி பேசுகின்ற ஒருவர். பதிவுகளில் காத்திரமாக இருந்தாலும் அரட்டைகளில் நகைச்சுவையாகவும் பேசுவார். அண்மைக்காலமாக இவரும் எழுதுவதைக் குறைத்துவிட்டார்.

சதீஸ்
இன்றைக்கு பிறந்தநாள் காணும் என் வலையுலக மருமகன். இவரைச் சந்தித்ததே சென்ற வருட அவரின் பிறந்தநாள் அன்றுதான். எவ்வளவு நக்கலடீத்தாலும் கோவம் பத்தாது. பதிவுலக நண்பர்களை உறவினராக்கிய பெருமை சதீசைத் தான் சேரும். காதலுக்கு மரியாதை கொடுப்பவர், சிறந்த கிரிக்கெட் வீரராம், என்னை மாமோய் என அழைக்கும் அழகோ அழகு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.

சுபாங்கன்

ஐந்தறைப் பெட்டியில் வசித்தவர் பவனின் வாஸ்து காரணமாக தரங்கத்தவராகிவிட்டார். சுபாங்கனுடன் எனது முதலாவது சந்திப்பு என்றைக்கும் மறக்கமுடியாமல் இருக்கிறன்(ம்). பழக நல்ல பொடியன் என நான் கூறினால் பவன் கோபிப்பான். எனக்கு சில பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைச் சொல்லித் தந்தவர். என்னைப்போல் இன்னொரு டயலொக்கின் 1000 நிமிடங்கள் வாடிக்கையாளர்.

தூயா

தமிழ்நாடுடோல்க் மூலம் அறிமுகமான இன்னொரு உறவு. மின்னஞ்சல் அரட்டைகள், முகநூல் என எங்கள் நட்பு இன்னமும் தொடர்கின்றது. இவரின் சமையல் குறிப்புகளைப் பார்த்து நானும் சிலதை முயற்சி செய்திருக்கின்றேன். என்னை முகநூலில் ஒரு சிறந்த விவசாயியாக மாற்றிய பெருமை என் அன்புச் சகோதரி தூயாவிற்க்கே சேரும். அனானித் தாக்குதல்கள் நடந்தால் ஆறுதல் கூறுகின்றவர்.

யோகா

யோகாவினையும் வலையுலகின் மூலம் அறிந்தாலும் பின்னர் நேரடியாக தொலைபேசியில் மின்னஞ்சலில் என நட்பு தொடந்துகொண்டேயிருக்கின்றது. சில தொழில்நுட்ப சிக்கல்களால் அண்மைக்காலமாக எழுதுவதை குறைத்துக்கொண்டமை கவலையளிக்கின்றது.

இவர்களை விட பலர் பின்னூட்டங்களின் மூலமும் முகநூலிலும் நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் பட்டியல் எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் மிகவும் நீண்டது. இங்கே பட்டியலில் இருக்கும் நண்பர்கள் ஏதோ ஒருவகையில் என்னுடன் தொடர்புடன் இருப்பவர்கள் மாத்திரமே.

என்னுடைய உளறல்களை தங்களுடைய பொன்னான நேரத்தை பயன்படுத்தி வாசிக்கும் அனைவருக்கும் என்னைப் பிந்தொடரும் அப்பாவிகள் 153 பேருக்கும் பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றிகள்.

பின்குறிப்பு : நேரமும் காலமும் கைகொடுத்தால் இங்கிலாந்து பற்றிய ஒரு தொடர் என் பார்வையில் எழுத இருக்கின்றேன். ஏதாவது உருப்படியாகவும் எழுதவேண்டும் தானே.