நேற்று சன் பிக்சர்சினால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தீ வெளியானது. ட்ரைலரிலேயே சுந்தர்.சியை வாய்ஸ் சித்தார்த் கெட்டப்போல் நிர்வாணமாக காட்டியும் வழக்கறிஞர் ஒருவரை போலீஸ்காரரான சுந்தர்.சி மிரட்டுவதுபோலவவும் காட்டினார்கள். (இன்றிலிருந்து அந்த காட்சிகள் காட்டப்படவில்லை).
நீண்ட நாட்கள் திரையில் படம்பார்க்கவில்லை என்பதனால் இன்றைக்கு காலைக்காட்சிக்கு போனால் தியேட்டரில் கூட்டத்தையே காணவில்லை. போகும் வழியில் நான் கடவுள் திரையிடப்பட்ட தியேட்டரில் ஓரளவு சனம் நின்றது.
படத்தின் டைட்டிலில் தான் நமீதாவும் இன்னொரு மலேசியப் புதுமுகமும் நடிப்பதையே அறிந்துகொண்டேன். வடிவேல், விவேக் இருவரும் இல்லை என்றவுடனேயே சப்பென்று ஆகிவிட்டது. வையாபுரி வில்லனின் அல்லக்கையாக வருகின்றார் சிரிக்கவைக்கவில்லை. முதல்காட்சியே சுந்தர்.சியின் நிர்வாணம் தான். படத்தின் கதையைச்(?) சொல்லவிரும்பவில்லை.
முதல்பாதி சத்யராஜின் மகாநடிகன், அமைதிப்படை படங்களை அப்படியே காப்பி பண்ணியது. இயக்குனர் கிச்சா சத்யராஜ் ரசிகரோ தெரியவில்லை நன்றாக காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றார்.
நீதிமன்றக் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் நடித்த ஒருபடம் போல் சாட்சி சொல்பவர் ஊமை என எதிர்க்கட்சி வக்கீல் வாதம் செய்கின்றார். இந்தப்படத்திலும் வில்லன் சத்யராஜ் என நினைக்கின்றேன். படம் ஞாபகம் வரவில்லை.
சுந்தர்.சி ஆக்சனில் இறங்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்படம் எடுத்திருக்கின்றார்கள். ஆனாலும் அவருக்கு ஆக்சன் ஒத்துவரவேயில்லை. சிலவேளைகளில் இந்தப்படத்தில் விக்ரம் அல்லது அர்ஜீன் நடித்திருந்தால் ஓரளவு ஏற்றுக்கொண்டிருக்கலாம். சுந்தர்.சி போலீஸ்காரரான பின்னர் வேட்டையாடு விளையாடு ராகவன் பாடல் போல் ஒரு பாடல் எடுத்திருக்கின்றார்கள். இந்தப் படத்தின் நகைச்சுவைக்காட்சியே இதுதான். கானமயிலாட பழமொழி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது.
நமீதா ரசிகர்களுக்கு கிளுகிளுப்பான விருந்தையே தந்திருக்கின்றார். நீச்சல்க் குளக் காட்சியில் நீச்சல் உடைக்கு மேல் ஏன் இன்னொரு உடைபோட்டுக்கொண்டு நீந்துகின்றார் என்பதுதான் தெரியவில்லை. ருச்சிதேவி என்ற நடிகையாக வந்துபோகின்றார் அல்லது முழுத்திரையையும் ஆக்கிரமிக்கின்றார்.
நமீதாவுடன் சுந்தர்.சி நடிக்கும் காட்சிகள் குஷ்வுவின் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்படியொரு கெமிஸ்ரி இருவருக்கிடையில் இந்தப் படத்தில். நமீதாவுக்காக இந்தமொக்கைப் படத்தைப் பார்க்கலாம் என வெளியில் வந்தவர்கள் காதுபடக் கூறினார்கள்.
இன்னொரு நடிகையான மலேசிய இறக்குமதி இரண்டுபாடல்களுக்கு ஆடுகின்றார் நாலு வரி வசனம் பேசுகின்றார், அவ்வளவுதான். நடிகைக்குரிய எந்தவொரு அறிகுறியும் அவரிடம் இல்லை. தமிழ் சினிமாவில் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
தளபதி தினேஷ் சண்டைக்காட்சிகளில் நன்றாக உழைத்திருக்கின்றார். டாக்டர் விஜயின் சண்டைகள் போல் புவியீர்ப்பு விசைக்கு எதிராக சண்டை இல்லாதது கொஞ்சம் ஆறுதல்.
இசை ஸ்ரீகாந்த் தேவா முதல் பாடலில் தந்தை பெயரைக் காப்பாற்றிவிட்டார், வேறை என்ன தேவாவின் கானாப்பாடல் சாயலில் வரிகளைமாற்றி ஒரு பாடல். ஏனைய பாடல்கள் கேட்கும்
ரகமாகவே இல்லை.
பல வசனங்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே இருக்கின்றன. இதயம் இனிக்கமுன்னர் தயாரித்த படம்போல இருக்கின்றது. இறுதிக்காட்சியில் சுந்தர்.சி வசனம் பேசியே கொல்கின்றார். தலைவாசல் விஜயும் தானும் வசனம் பேசிவதில் சளைத்தவர் இல்லை என்பதுபோல் அதிகமாகவே நடிக்கின்றார். கெட்டவார்த்தைகள் சகஜமாக வந்துபோகின்றன.
சூப்பர் ஸ்டாரின் கலக்கல் படமான தீயின் பெயரைவைத்தது ஏனோ தெரியவில்லை. படத்திற்க்கு தீ என்ற பெயரைவிட இரத்தம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் அவ்வளவு இரத்தக்களரி. கமலின் சண்டியர் பெயருக்கு அரிவாள் இரத்தம் வன்முறை என கூச்சலிட்டவர்கள் இப்படையான வன்முறை நிறைந்த படங்கள் கண்களுக்குத் தெரியாது.
சன் பிக்சர் மொக்கைப்படம் எடுப்பது என்றே சபதம் செய்திருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. வரும்வாரங்களில் இவர்களின் டாப் டென்னில் தீ முதல் இடம் பிடிப்பது என்னவோ உண்மைதான்.
படிக்காதவன், தெனாவட்டு, வில்லுப் படங்களை விட தீ ஓரளவு பரவாயில்லை.
தீ புகைமட்டும்.
தீ இன்னொரு மசாலா
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சுந்தர்.சி, தீ, நமீதா
வலைமாமணி விருதுகளும் வாழ்த்துக்களும்
இந்த வாரம் ஏதோ விருதுகள் வாரம் போல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தமிழன் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றார். பின்னர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்மணத்தின் சிறந்த பதிவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்தப்போட்டியில் நானும் என் இரண்டு ஆக்கங்களை அனுப்பியிருந்தேன். பெரும்பாலான என் ஆக்கங்கள் மொக்கையாகவே இருக்கும். அப்படியிருந்தும் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக்கி அழகுபார்த்த வேளையில் ஒரு சில நல்ல பதிவுகள் எழுதியிருக்கின்றேன் என நண்பர்கள் கூறினார்கள். என் ஆக்கங்கள் இரண்டும் முதல் 10 இடத்துக்குள் வந்தபடியால் என் தன்னம்பிக்கை இன்னும்கொஞ்சம் வளர்ந்துள்ளது. என்னுடன் போட்டியிட்டவர்கள் பெரியதலைகள் அதில் சிலர் பதிவுலகில் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். ஆதலால் இந்தப்போட்டியில் நானும் இருந்தேன் என்பதே மகிழ்ச்சிதான். காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)என்ற பிரிவில் நான் எழுதிய தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
சுஜாதா இன்றிருந்தால்....
எழுத்தாளர் சுஜாதா மறைந்து நாளையுடன் ஓராண்டு ஆகின்றது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது. அவரது இழப்பு தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பேரிழுப்பு என்பதை யாரும் மறக்கமுடியாது. இறந்தபின்னரும் அவரது எழுத்துக்கள் இன்னமும் வெகுஜன இதழ்களில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இனியும் வரும்..
இந்த ஓராண்டுடிற்க்குள் உலகில் எத்தனை மாற்றங்கள். என்னைப்போன்ற சோம்பேறி( தேடிப்பிடித்து வாசிப்பது என்பது சில காலமாக குறைந்துவிட்டது) வாசகர்களுக்கு கற்றதும் பெற்றதும் மூலமாக அந்த நாட்களில் உலகத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஓரளவு சுருக்கமாக விளங்கப்படுத்தியவர் அமரர் சுஜாதா.
சுஜாதா இன்றிருந்தால் எவற்றைப் பற்றியெல்லாம் விகடன் கற்றதும் பெற்றதில் எழுதியிருப்பார்.
1. ஓபாமாவும் உலகப் பொருளாதாரமும்
தன் இயல்பான நடையில் பொருளாதார அடிப்படை அறிவில்லாதவனும் விளங்கக்கூடியவாறு உலக பொருளாதரத்தின் வீழ்ச்சியையும் ஓபாமாவின் எழுச்சியையும் அமெரிக்க கணணி வல்லுனர்களின் பிரச்சனைகளையும் எழுதியிருப்பார்.
2. சிலம்டோக் மில்லியனர்
அண்மையில் பரபரப்பான விடயமாக இருக்கின்ற இந்தப் படத்தைப் பற்றி இன்னொரு கோணத்தில் ஜோசித்திருப்பார்.
3. தசாவதாரம்
சுஜாதாவின் மறைவின் பின்னர் வெளியான கமலின் பிரமாண்ட தயாரிப்பு. கதைவிவாதத்தில் சுஜாதா பங்குபற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும், படத்தில் சில காட்சிகளில் கூட சுஜாதாவின் பாதிப்புகள் இருந்தன. வசனம் கமல் எழுதியதாக இருந்தாலும் சில இடங்கள் சுஜாதா டச்.
4. சுப்பிரமணியபுரம்
ஒவ்வொரு வருட இறுதியிலும் இவர் கற்றதும் பெற்றதிலும் கொடுக்கின்ற விருது பட்டியலில் சுப்பிரமணியபுரம் முதல் இடத்தைப் பிடித்திருக்கும்.
5. இந்தியக் கிரிக்கெட் அணியின் எழுச்சி
டோணியின் தலைமைத்துவத்தின் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற பெற்றிகள் பற்றியும் ஐபில் போட்டிகள் பற்றியும் நிறையவே எழுதியிருப்பார்.
6. ஆஸ்கார், ரகுமான்
ரகுமானின் இசை பற்றியும், ரகுமானுடன் தன் அனுபவங்கள் பற்றியும் சிலம்டோக் மில்லியனர் இசைக் குறிப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்திருப்பார்.
7. சந்திராயன்
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளினால் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயன் பற்றிய சுவையான தகவல்கள் வழங்கியிருப்பார்.
8. வலைப்பதிவாளர்கள்.
இன்றையகாலத்தில் வலைப்பதிவாளர்களும் இலக்கியத்தில் ஒரு அங்கம் வகிப்பதனாலும் விகடன் தன் வரவேற்பறையில் வாரம் ஒரு வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதனாலும் நிச்சயம் வலைப்பதிவாளர்கள் பற்றிய குறிப்புகள் இடையிடயே எழுதியிருப்பார். அத்துடன் தன் விருதுப்பட்டியலில் சிறந்த வலைப்பதிவு ஒன்றையும் குறிப்பிட்டிருப்பார்.
9. நான் கடவுள்
நான் கடவுள் படத்தையும் அகோரிகள் பற்றிய விவரங்களையும் தன் பாணியில் தந்திருப்பார். அகோரிகள் பற்றி கருடபுராணம் போல ஏதாவது ஒரு புராணத்தில் இருப்பதாகவும் எழுதியிருப்பார்.
10. எந்திரன்
எந்திரன் படத்தைப் பற்றியதோ அல்லது கதைபற்றியோ மூச்சுவிடாமல் ஐஸ்வர்யா ராய் பற்றியும் சூப்பர் ஸ்டார், சங்கர் பற்றியும் சுவையான தகவல்கள் கிடைத்திருக்கும்.
சுஜாதா பெரும்பாலும் அரசியல் பற்றி எழுதுவதில்லை என்பதால் உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், வக்கீல்கள் போராட்டம், போன்ற சமூக சார்ந்த விடயங்களை தவிர்த்திருந்திருப்பார்.
சுஜாதா இன்று நம்முள் இல்லாவிட்டாலும் அவரின் பாத்திரங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தே இருக்கும். கணேஷ், வசந்தையும், அனிதாவின் காதலையும், கெட்டவார்த்தை பேசுகின்ற விக்ரத்தையும், ஜீனோ நாயையும், குருபிரசாத்தையும் தமிழ் வாசகர்கள் அவ்வளவு எழுதில் மறக்கமாட்டார்கள். குறிப்பாக அவரின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக் இன்னமும் பூர்த்தியாகவே இல்லை. வசந்த் இதுவரை அந்த ஜோக்கை சொல்லவேயில்லை.
அமரர் சுஜாதாவின் எழுத்துக்கள் உள்ளவரை அவரது புகழ் மங்காது.
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஓராண்டு அஞ்சலி, சுஜாதா
கலைமாமணி ஐஸ்வர்யா தனுஷ்.
இன்றைக்கு வெளியான தமிழக அரசின் கலைமாமணி விருதுப்பட்டியலில் ஐஸ்வர்யா தனுஷின் பெயரைப் பார்த்தது அதிர்ச்சியாகிவிட்டேன். இவர் சாதாரண ஒரு குடும்பப்பெண்(ரஜனி மகள் என்பதைத் தவிர )இவருக்கு எந்த வகையில் விருது கொடுத்திருக்கின்றார்கள்.
விருது பெறும் ஏனையவர்கள்.
அபிராமி ராமநாதன் - திரைப்பட தயாரிப்பாளர்
சேரன் - திரைப்பட இயக்குனர்
சுந்தர்.சி - நடிகர்
பரத் - நடிகர்
நயன்தாரா - நடிகை
அசின் - நடிகை
மீரா ஜாஸ்மின் - நடிகை
பசுபதி - குணசித்திர நடிகர்
ஷோபனா - குணசித்திர நடிகை
வையாபுரி - நகைச்சுவை நடிகர்
சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை
வேதம்புதிது கண்ணன் - வசனகர்த்தா
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்
ஆர்.டி.ராஜசேகர் - ஒளிப்பதிவாளர்
பி.கிருஷ்ணமூர்த்தி - கலை இயக்குனர்
சித்ரா சுவாமிநாதன் - புகைப்பட கலைஞர்
நவீனன் - பத்திரிகையாளர்
சீனிவாசன் - ஓவிய கலைஞர்
சுந்தர்.கே.விஜயன் - சின்னத்திரை இயக்குனர்
திருச்செல்வம் - சின்னத்திரை இயக்குனர்
பாஸ்கர் சக்தி - வசனகர்த்தா
அபிஷேக் - சின்னத்திரை நடிகர்
அனுஹாசன் - சின்னத்திரை நடிகை
அமர சிகாமணி - சின்னத்திரை
என்ன கொடுமை இது?
எழுதியது வந்தியத்தேவன் at 24 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஐஸ்வர்யா தனுஷ், கலைமாமணி
ராஜா, ரகுமான்,ஆஸ்கார்
இன்றைக்கு உலகத் திரைப்படவரலாற்றில் ஒரு மகத்தான நாள். ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. எதிர்பார்க்கப்பட்டதுபோல் இசைப்புயல் ஏஆர் ரஹுமான் தன் இரண்டு விருதுகளையும் பெற்று தமிழர்களுக்கு கெளரவம் கொடுத்துள்ளார். இன்னொரு தமிழச்சியான மாதங்கி அருள் பிரகாசமும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்களில் ஒருவர். ஏனோ விருதுகிடைக்கவில்லை.
1992ல் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமான ரகுமானைப் பற்றி பலர் பல இடங்களி எழுதியிருப்பதால் அதனைத் தொடாமல் இன்னொரு விடயத்தை ஆராயலாம் என நினைக்கின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரகுமானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது பலர் புருவத்தை உயர்த்தினார்கள், காரணம் மெல்லிசை மன்னர், இசைஞானி என்ற இரண்டு இசை மேதைகளை விட்டுவிட்டு தற்போது வந்த இளைஞனுக்கு விருதா? என்ற கேள்வி அவர்களின் புருவ உயர்த்தலில் தொக்கி நின்றது.
இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் ரகுமான் அவர்கள் நிச்சயம் அந்த விருதுக்கு தகுதிவாய்ந்தவர் இதனை எவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் மூத்தோர்கள் இருக்க இளையவருக்கு கொடுத்த காரணம் என்ன? இதற்க்கு வைரமுத்துவின் உள்குத்து அரசியல் தான் காரணம் என்கிறார்கள் பலர்.
இந்த பதிவில் நான் இசைஞானியையோ அல்லது இசைப்புயலையோ இல்லை மெல்லிசை மன்னரையோ ஒப்பிடவரவில்லை. அவர் அவர் தங்கள் இசையில் உச்சம் தொட்டவர்கள்.
ஆனாலும் சிம்பொனி இசை, திருவாசகத்துக்கு இன்னொரு வடிவம், கெளவ் டூ நேம் இட் என ஆல்பம் என் சாதனை படைத்த பண்ணைபுரத் தமிழனை ஏன் இதுவரை இந்திய அரசு கெளரவிக்கவில்லை?
இன்னொரு சாராரின் வாதம் இசைஞானி இசையில் உச்சத்தை அடைந்தாலும் ரகுமான் அளவுக்கு அடக்கம் இல்லாதவர் கர்வம் பிடித்தவர். இதனைப் பல சந்தர்ப்பங்களில் பலராலும் அவதானிக்ககூடியதாக இருந்தது. அண்மையில் கூட இசைப்புயலுக்கு கோல்டன் குலோப் விருது கிடைத்த போது இசைஞானி அவரைப் பாராட்டவில்லை என சில இணையத்தளங்களில் சிண்டு முடிந்தார்கள்.
அத்துடன் கோல்டன் குலோப் விருது கிடைத்த ரகுமானுக்கு தமிழக அரசின் சார்பில் எந்தப் பாராட்டு விழாவோ அல்லது கோடம்பாக்கத்தின் பாராட்டுவிழாவோ இதுவரை எடுக்கப்படவில்லை. ஆஸ்கார் வாங்கியபின்னர் சேர்த்து எடுக்கலாம் என்ற எண்ணமோ தெரியாது.
இளையராஜாவுக்கும் எம் எஸ் விஸ்வநாதனுக்கும் ஏன் உரிய கெளரவம் கொடுக்கப்படவில்லை என்பதனை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
குட்டிக்குட்டி விழாக்களில் எல்லாம் தமிழ்மொழியில் பேச அகெளரவம் என நினைக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஆஸ்கார் என்ற உயரிய விழாவில் தமிழிலும் ஒருவார்த்தை பேசி தலை நிமிர வைத்த தமிழன் அல்லா ரக்கா ரகுமானுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
டிஸ்கி : இந்த நேரத்தில் ஏன் இந்தப் பதிவு எனக்கேட்பவர்கள் குசும்பனின் பதிவை ஒரு முறை சென்று பார்க்கவும்.
எழுதியது வந்தியத்தேவன் at 11 கருத்துக் கூறியவர்கள்
தலை நிமிர்ந்த தமிழன்
எல்லாப் புகழும் இறைவனுக்கு என தமிழில் பேசி தமிழர்களைப் பெருமை கொள்ளப் பண்ணிய இசைப் புயல் ஏ ஆர் ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 0 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஆஸ்கார், ஏ ஆர் ரகுமான்
திரிஷாவின் காதலர் தின வாழ்த்துக்கள்
கவிதைகள் தபூசங்கர்.
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் இனிய காதலர் தினவாழ்த்துக்கள்.
எனக்கென ஏற்கனவே பிறந்தவளை தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும் கிடைக்கவில்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் காதலர் தினம், தபூசங்கர்