ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதைதான். தற்கால மென்பொருள் இளைஞன் ஒருவனுக்கு அவனது மேலதிகாரிமேல் ஏற்படும் காதல். அந்த மேலதிகாரி யார் எனத் தெரியவரும்போது இடைவேளை. பின்னர் கலகலப்பான கூட்டுக்குடும்பம், இன்னொரு இனக்கவர்ச்சிக் காதல். இறுதியில் ஒருபக்கக் கதைபோன்ற கிளைமாக்ஸ் முடிவு.
முற்பாதியில் மென்பொருள்காரர்கள் ஆணிபிடுங்கும் கலகலப்பான காட்சிகள். அதுவும் ஒரு இரவில் ஒரு தீர்வைத் தனுஷ் எழுதுகின்றார் என்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். அப்படியே அவுஸ்திரேலியாவுக்கு வேலைவிடயமாக விசிட். அங்கே ஒரு டூயட். நைட் கிளப்பில் நயன் குடித்துவிட்டு அடிக்கும் லூட்டிகள் அங்கங்கே பஞ்சதந்திரம் தேவயாணியை நினைவூட்டினாலும் நயனின் சினுங்கலும் தனுஷின் மிரட்டலும் புதிது. இயக்குனர் செல்வராகவனின் சீடன் என்பது இந்தக்காட்சிகளில் தெரிகின்றது.
பிற்பாதியில் கிராமம் அதிலும் ஐயர் ஆத்தில் நடக்கும் காட்சிகள். இன்னமும் ஆத்தில் ஏனையவர்களை அனுமதிக்காத தன்மை. தனுஷ்க்காகவே ஒரு சண்டை. (ஒரே ஒரு சண்டைமட்டும்தான்). தனுஷ்சின்மேல் காதல் கொள்ளும் 15வயது மச்சினி. தனுஷ்சின் காதலைப் புரிந்துகொள்ளும் நயன். அது என்னவோ சினிமாவில் மட்டும்தான் இன்னொருவனுக்கு நிச்சயம் செய்த பெண் இன்னொருவரைக் காதலிப்பார். நியத்தில் இப்படியான கதை இதுவரை கேள்விப்படவில்லை. வழக்கமான முடிவு.
தனுஷ் : பல இடங்களில் நடித்திருக்கின்றார். ஆனாலும் சில இடங்களில் மாமனாரைக் கொப்பி அடிப்பது ரசிக்கமுடியவில்லை. சிலவற்றை ஒரிஜினல்கள் செய்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற சின்ன விடயம் ஏனோ இன்னமும் தனுஷ் சிம்பு வகையறாக்களுக்கு புரியவில்லை.
நயந்தாரா : இந்தப் படத்தில் தான் நயனை இவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள். வாழ்க கமேரா சித்தார்த். பல இடங்களில் நடித்து தன் இருப்பைக் காட்டியிருக்கிறார். சில நடிகைகளினதும் ஒரு நடிகனினதும் வயிறுகள் நிச்சயம் எரியும்.
யுவன் சங்கர் ராஜா : பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் அந்த ரகசியாப்பாடல் தாளம்போடவைக்கின்றது. ரீமிக்ஸ் ஏனோ ரசிக்கவில்லை. (யுவனின் என் ஆசை மைதிலியும், ஆசை நூறுவகை போல் எனைய ரீமிக்ஸ்கள் ரசிக்கமுடியவில்லை.) இதனைவிட விஜய் டிவி ஈகியூவில் கல்லூரி மாணவர்கள் நன்றாக ரீமிக்ஸ் செய்கிறார்கள். ஏனையவை மெலடி டைப். சில பாடல்களை சன் மியூசிக் இசையரவிகளில் இனி அடிக்கடி கேட்கலாம்.
பின்னனி இசை டி.இமான் பல இடங்களில் அழகாகவும் சில இடங்களில் வெண்கலக்கடைக்குள் இமான் புகுந்ததுபோலும் இருக்கின்றது. (தியேட்டர் டிடிஎஸ்சின் தவ்றோ தெரியவில்லை).
ரகுவரன் : படம் ஆரம்பிக்கும்போதே டைட்டிலில் அஞ்சலி செலுத்துகிறார்கள் . நல்லதொரு நடிகனை திரையுலகம் இழந்துவிட்டது என மீண்டும் புரியவைத்தார். லவ் டுடே விஜயின் தந்தையைவிட மிகவும் அன்னியோன்னியமான தந்தையாக வாழ்ந்து நிஜமாகவே இறந்துவிட்டார்.
சித்தார்த் : கமேராமேன் சித்தார்த்தின் கமேரா ஆஸியின் அழகையும் பின்னர் கிராமத்தின் அழகையும் அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றது. கூடுதலாக நயந்தாராவை மிக அழகாகக் காட்டுகின்றது.
செல்வராகவன் : கதை, வசனம் எழுதியுள்ளார். இயல்பான வசனங்கள். தன்னுடைய படக்கதைபோல் இல்லாமல் இருப்பது அதிர்ச்சி.
நா.முத்துக்குமார் : சில பாடல்களில் வரிகள் காதல் கவிதைகளாக இருக்கின்றது. நா.முத்துக்குமார், யுவன், செல்வராகவன் கூட்டணி இனி இல்லை என நினைக்கும்போது கவலையாக இருக்கின்றது. பாரதிராஜா, இளையராஜா வைரமுத்து கூட்டணிபோல் இருந்தவர்கள் தற்போது பிரிந்துவிட்டார்கள்.
கார்த்திக் : இத்துடன் மூன்றாவது படத்தில் தனக்கு நிச்சயம் பண்ணிய பெண்ணை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கின்றார். ஆனாலும் இன்னமும் நடிப்பில் முன்னேறவேண்டும். அழுகின்ற காட்சிகள் செயற்கைத்தனமாக இருக்கின்றது.
கருணாஸ் ஒருகட்டத்தில் சிரிக்கவைக்கின்றார் பின்னர் அரசியல் மாநாட்டில் தொலைந்த கொள்கைபோல் காணாமற்போய்விடுகின்றார். சரண்யா அழகாக இருக்கின்றார் அடுத்த சினேகாவாக மாற வாய்ப்புகள் உண்டு. தன்னைவிட இன்னொரு அழகான பையன் உனக்கு வருவான் என தனுஷ் கூறும்போது அப்படியான எனக் கேட்பது அக்மார்க் டீன் ஏஜ் பெண்.
மித்ரன் ஆர்.ஜவகர் : முதல் படம். முற்பாதியில் செல்வராகவன் படம்போலும் பிற்பாதியில் அழகம்பெருமாள், விக்ரமன் படம்போலவும் இயக்கியிருக்கிறார். சில இடங்களில் இயக்குனரின் திறமை வெளிப்படுகின்றது. குறிப்பாக சரண்யா தனுஷ் காட்சிகள் கத்திமேல் நடக்கும் இடங்கள் அழகாக கையாண்டிருக்கின்றார். படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை இவருக்கு நன்றாக கைகொடுத்திருக்கின்றது. முதல் படத்தில் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். தனுஷ்சை வைத்துக்கொண்டு பஞ்ச் டயலாக்கோ, அதிகம் சண்டையோ வைக்காததற்க்கு பூச்செண்டு கொடுக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். பிற்பாதியில் சில இடங்களில் துணிந்து கத்தரி வைக்கலாம்.
மொத்தத்தில் பழைய கதைதான் என்றாலும் நயன் என்ற மோகினியாலும் தனுஷ் என்ற அப்பாவித் தோற்ற இளைஞனாலும் யுவன் என்ற குட்டி இசைராஜாவினாலும் செல்வராகவன் என்ற இளைஞர்கள் மனதைப் படித்த இயக்குனரினாலும் யாரடி நீ மோகினி மனதைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
டிஸ்கி :நயந்தாரா ரசிகர்களுக்காக இரண்டுபடங்கள்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
6 கருத்துக் கூறியவர்கள்:
//சில நடிகைகளினதும் ஒரு நடிகனினதும் வயிறுகள் நிச்சயம் எரியும். //
ஹாஹா.. ரசித்து ரசித்து சிரித்தேன். உங்க விமர்சனம் என்னை படம் பார்க்க தூண்டிவிட்டது.
நயந்தாரா எண்டோண்ணை பெடியள் முதல் நாள் முதல் ஷோவுக்கே ஓடிவிடுவாங்கள்.
உங்களைச் சொல்லேல்லை வந்தி ;-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தமிழ்மாங்கனி, பிரபா.
//நயந்தாரா எண்டோண்ணை பெடியள் முதல் நாள் முதல் ஷோவுக்கே ஓடிவிடுவாங்கள்.//
எதற்கும் தசாவதாரம் வரட்டும் அசினைப் பார்த்த பின்னர் தான் நயந்தாரா ரசிகனா இல்லை என்ற எந்த முடிவும் எடுக்கமுடியும் .
படம் ரொம்ப நல்லா இருந்தது.. முதல் நாளே பார்த்தாச்சு! :-)
படத்த பத்தி என்னுடைய பதிவு :
http://veerasundar.blogspot.com/2008/04/blog-post_09.html
நல்லா விமர்சனம் செஞ்சிருக்கீங்க. கண்டிப்பா படம் பார்க்கிறேன்.
படம் எப்படி இருக்கோ,உங்க விமர்சனம் நல்லாதான் இருக்கு !
Post a Comment