எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்



1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
2. நிம்மதியாக உறங்கலாம்.
3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.
4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.
5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.
6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.
7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.
8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.
9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.
10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.

போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.
டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் அசினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

6 கோடி = ஒரு ஓட்டம் ஐபிஎல்

இன்றைய போட்டியில் ஐபிஎல்லின் விலை உயர்ந்த துடுப்பாட்ட வீரர் மகேந்திர சிங் டோணி எடுத்த ஓட்ட எண்ணிக்கை 1 மட்டுமே.


டோணி இது சரியா?

நண்பர் ஒருவரின் குறிப்பு
இந்த ஐபிஎல் கிரிகேட் போட்டிக்கள் இந்திய அணியின் வீரர்களுக்கு ஈகோவை உண்டு பண்னிவிடலாம். இப்போது நடக்கும் போட்டியில் கங்குலி அணி எல்லா அணியையும் வெற்றிகண்டு பரிசை வென்றால் இந்திய ஒருமித்த அணியில் தோனி இடம் கொடுப்பாரா என்று சந்தேகம் உண்டு. அதேபோல தோனியை வெற்றிகொள்ளும் எந்த ஐபிஎல் அணி கேப்டனுக்கும் சுண்ணாம்புதான் என்று பட்சி சொல்கிறது. முக்கியமாக ஈகோவில் கபடியாடும் யுவராஜ், கங்குலி போன்றோர் தோனியை நொறுக்க இதுதான் வாய்ப்பென காத்துகொண்டிருப்பதாக இணைய உளவாளர் ஒருவர் கூறுகிறார்.

சந்தோஷ் ஹாசினி சுப்பிரமணியம்

அடடா எத்தனை நாட்களுக்குப் பின்னர் இப்படி ஒரு அழகான கவிதைபோன்ற தமிழ்ப் படம். அடிதடி இல்லை இரட்டை அர்த்த வசனம் இல்லை குத்துப்பாட்டில் தொப்புள் தரிசனம் இல்லை என தமிழ் சினிமாவின் பல நம்பிக்கைகளை உடைத்த படம். தெலுங்குப்படத்தின் ரீமேக் என்றாலும் அதனையும் சுவையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா.


மகன் தந்தைக்கு இடையில் நடக்கும் பிரச்சனைதான் கதை. இடையில் நிச்சயதார்த்தம் காதல் என சில தவிர்க்கமுடியாத சம்பவங்களை நிறைய நகைச்சுவை கலந்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜா.

படத்தின் கதையை நேரில் திரையில் பாருங்கள்( நிச்சயம் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் திரையில் பார்க்கலாம்). விரும்பினால் உங்கள் தந்தையோ தாயோ ஸ்பொன்சர் செய்து பார்ப்பது இன்னமும் நல்லது.

நடிகர்களுக்கிடையிலான போட்டியில் முதலிடம் பெறுவது என்னவோ இதுவரை காலமும் பெயர் சொல்லும்படியாக எந்தப் படத்திலும் நடிக்காத ஹரிணி சாரி ஜெனிலீயாதான்.



அவரின் பெயர் ஹாசினி. இப்படியான பெண்களை நிஜத்தில் காண்பது அரிது. பிச்சைக்காரன் முதல் கொண்டு அனைவரிடம் நட்புடன் இருப்பது, எந்த நேரமும் வாய்மூடாமல் பேசியபடியே இருப்பது பின்னர் ஜெயம் ரவிக்கு தன் காதலைச் சொல்லும் விதம் என முற்பாதியில் விறுவிறுப்பாக பேட்டிங் செய்த அம்மணி கிளைமாக்ஸ் சீனில் பிரகாஸ்ராஜ்யுடன் பேசும் காட்சிகளில் சென்சரியே அடித்துவிட்டார். அதிலும் இரண்டாம் பாதியில் ஜெயம் ரவியின் வீட்டில் தங்கியிருக்கும் காலத்தில் ரவியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் தன் வலையில் வீழ்த்தும் காட்சிகளில் செம கலக்கல். சில இடங்களில் ஓவர் டோஸ் போல் தெரிகின்றதை கொஞ்சம் குறைத்திருந்திருக்கலாம். இதே பாத்திரத்தை நம்ம அசின் செய்திருந்தால் இன்னமும் பிரமாதப்படுத்தி இருப்பார்.

அடுத்த விருது நம்ம செல்லம் பிரகாஸ்ராஜ்யுக்குத்தான். மனிசன் எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் அசராமல் நடிக்கின்றார். எம் குமரனில் கண்டிப்பான தகப்பனாக இருந்தவர் இதில் அதிகம் அன்பைப் பொழிகின்றார் ஆனால் அந்த அன்புதான் தனக்கும் தன் மகனுக்கு எதிரி எனத் தெரியாமல். இறுதிக்காட்சியில் ஜெனிலீயா வீட்டு வாசலில் நிற்பதும் தன் மகனுக்காக சாயாஜி ஷிண்டேயுடன் சண்டைபோடுவதும் என தன் பங்குக்கு செல்லமும் நன்றாக உழைத்திருக்கிறார்,

மூன்றாவதுதான் ஹீரோ ஜெயம் ரவி. அண்ணன் உடையான் எதற்க்கும் அஞ்சான் என்பதுபோல் தன் அண்ணனை நம்பி மீண்டும் ஜெயித்திருக்கிறார். இவரது நடிப்பும் குரலும் நன்றாக மெருகேறிவிட்டன. குடித்துவிட்டு தந்தையைத் திட்டும் காட்சிகளிலும், சாயாஜி ஷிண்டேயுடன் வம்புக்கு போகும் காட்சிகளிலும் இறுதியாக பிரகாஸ்ராஜை எதிர்த்துப்பேசும் காட்சிகளிலும் தன் நடிப்பை நன்றாக காட்டியுள்ளார்.

கீதா ஜெயம் ரவியின் அம்மாவாக வந்து பொதுவாக எல்லாம் அம்மாக்கள் போலவும் மகனுக்காக பரிந்துபேசுகின்றார். இவர் பாட்டுப் பாடுவதாக காட்டியிருப்பார்கள் ஏனோ அந்தக் குரல் இவருக்கு பொருந்தவில்லை.

சந்தானம், சத்யன் , பிரேம்ஜி, காதலிக்க நேரமில்லை ஸ்ரீ (ஸ்ரீ நாத்) கொமடியில் கலக்குகின்றார்கள். முற்பாதியில் இவர்களின் லூட்டியில் தியேட்டரே அதிர்கின்றது. அதிலும் சந்தானம், பிரேம்ஜி, ஸ்ரீ பிரகாஸ்ராஜைச் சந்திக்கின்ற காட்சிகள் அசத்தல்.

எம் எஸ் பாஸ்கரும் அப்துல் கலாம் கெட்டப் எல்லாம் போட்டு தன் பங்குக்கு சிரிக்கவைக்கின்றார்.

சடகோபன் ரமேஸ் இந்தப் பிட்சிலும் ஸ்கோர் பண்ணவில்லை. ஏனோ தானோ என வந்துபோகின்றார். இதே கதிதான் கெளசல்யாவுக்கும் எந்த நேரமும் போனில் பேசிக்கொண்டிருக்கும் பாத்திரம், இவரை விட அந்த பேசியல் செய்யும் தங்கை அதிகம் கவருகின்றார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கும் ரகங்கள். பின்னணி இசையிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.

சாதாரண தந்தை மகன் உறவுக்கு அழகான திரைகதையாலும் கவிதைத்தனமான சில வசனங்களாலும் முகம் சுழிக்க வைக்கதா நகைச்சுவையாலும் ரீமேக் படத்தையும் தன்னால் வெற்றிகரமாக தரமுடியும் என நிரூபித்த ராஜாவுக்கு பூந்தோட்டத்தையே பரிசளிக்கலாம்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் ரோஜாப்பூவில் முற்கள் இருப்பதுபோல் அவற்றைப் பார்த்தால் சந்தோஷ் சுப்பிரமணியம் சந்தோசமான படம்.


யாரடி நீ (நயன்தாரா) மோகினி

ஏற்க‌ன‌வே ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் பார்த்த‌ க‌தைதான். த‌ற்கால‌ மென்பொருள் இளைஞ‌ன் ஒருவ‌னுக்கு அவ‌ன‌து மேல‌திகாரிமேல் ஏற்ப‌டும் காத‌ல். அந்த‌ மேல‌திகாரி யார் என‌த் தெரிய‌வ‌ரும்போது இடைவேளை. பின்ன‌ர் கல‌க‌ல‌ப்பான‌ கூட்டுக்குடும்ப‌ம், இன்னொரு இன‌க்க‌வ‌ர்ச்சிக் காத‌ல். இறுதியில் ஒருப‌க்க‌க் க‌தைபோன்ற‌ கிளைமாக்ஸ் முடிவு.



முற்பாதியில் மென்பொருள்கார‌ர்க‌ள் ஆணிபிடுங்கும் கலகலப்பான காட்சிக‌ள். அதுவும் ஒரு இர‌வில் ஒரு தீர்வைத் த‌னுஷ் எழுதுகின்றார் என்ப‌து எல்லாம் சினிமாவில் ம‌ட்டுமே ந‌ட‌க்கும். அப்ப‌டியே அவுஸ்திரேலியாவுக்கு வேலைவிடய‌மாக‌ விசிட். அங்கே ஒரு டூய‌ட். நைட் கிள‌ப்பில் ந‌ய‌ன் குடித்துவிட்டு அடிக்கும் லூட்டிக‌ள் அங்க‌ங்கே ப‌ஞ்சதந்திர‌ம் தேவ‌யாணியை நினைவூட்டினாலும் ந‌ய‌னின் சினுங்க‌லும் த‌னுஷின் மிர‌ட்ட‌லும் புதிது. இய‌க்குன‌ர் செல்வ‌ராக‌வ‌னின் சீட‌ன் என்ப‌து இந்த‌க்காட்சிக‌ளில் தெரிகின்ற‌து.

பிற்பாதியில் கிராமம் அதிலும் ஐய‌ர் ஆத்தில் ந‌ட‌க்கும் காட்சிக‌ள். இன்ன‌மும் ஆத்தில் ஏனையவ‌ர்க‌ளை அனும‌திக்காத‌ த‌ன்மை. தனுஷ்க்காக‌வே ஒரு ச‌ண்டை. (ஒரே ஒரு ச‌ண்டைம‌ட்டும்தான்). த‌னுஷ்சின்மேல் காத‌ல் கொள்ளும் 15வ‌ய‌து ம‌ச்சினி. த‌னுஷ்சின் காத‌லைப் புரிந்துகொள்ளும் ந‌ய‌ன். அது என்ன‌வோ சினிமாவில் ம‌ட்டும்தான் இன்னொருவ‌னுக்கு நிச்ச‌ய‌ம் செய்த‌ பெண் இன்னொருவ‌ரைக் காத‌லிப்பார். நிய‌த்தில் இப்ப‌டியான‌ க‌தை இதுவ‌ரை கேள்விப்ப‌ட‌வில்லை. வ‌ழ‌க்கமான‌ முடிவு.

தனுஷ் : பல இடங்களில் நடித்திருக்கின்றார். ஆனாலும் சில இடங்களில் மாமனாரைக் கொப்பி அடிப்பது ரசிக்கமுடியவில்லை. சிலவற்றை ஒரிஜினல்கள் செய்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற சின்ன விடயம் ஏனோ இன்னமும் தனுஷ் சிம்பு வகையறாக்களுக்கு புரியவில்லை.

நயந்தாரா : இந்தப் படத்தில் தான் நயனை இவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள். வாழ்க கமேரா சித்தார்த். பல இடங்களில் நடித்து தன் இருப்பைக் காட்டியிருக்கிறார். சில நடிகைகளினதும் ஒரு நடிகனினதும் வயிறுகள் நிச்சயம் எரியும்.

யுவன் சங்கர் ராஜா : பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் அந்த ரகசியாப்பாடல் தாளம்போடவைக்கின்றது. ரீமிக்ஸ் ஏனோ ரசிக்கவில்லை. (யுவனின் என் ஆசை மைதிலியும், ஆசை நூறுவகை போல் எனைய ரீமிக்ஸ்கள் ரசிக்கமுடியவில்லை.) இதனைவிட விஜய் டிவி ஈகியூவில் கல்லூரி மாணவர்கள் நன்றாக ரீமிக்ஸ் செய்கிறார்கள். ஏனையவை மெலடி டைப். சில பாடல்களை சன் மியூசிக் இசையரவிகளில் இனி அடிக்கடி கேட்கலாம்.

பின்னனி இசை டி.இமான் பல இடங்களில் அழகாகவும் சில இடங்களில் வெண்கலக்கடைக்குள் இமான் புகுந்ததுபோலும் இருக்கின்றது. (தியேட்டர் டிடிஎஸ்சின் தவ்றோ தெரியவில்லை).

ரகுவரன் : படம் ஆரம்பிக்கும்போதே டைட்டிலில் அஞ்சலி செலுத்துகிறார்கள் . நல்லதொரு நடிகனை திரையுலகம் இழந்துவிட்டது என மீண்டும் புரியவைத்தார். லவ் டுடே விஜயின் தந்தையைவிட மிகவும் அன்னியோன்னியமான தந்தையாக வாழ்ந்து நிஜமாகவே இறந்துவிட்டார்.

சித்தார்த் : கமேராமேன் சித்தார்த்தின் கமேரா ஆஸியின் அழகையும் பின்னர் கிராமத்தின் அழகையும் அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றது. கூடுதலாக நயந்தாராவை மிக அழகாகக் காட்டுகின்றது.

செல்வராகவன் : கதை, வசனம் எழுதியுள்ளார். இயல்பான வசனங்கள். தன்னுடைய படக்கதைபோல் இல்லாமல் இருப்பது அதிர்ச்சி.

நா.முத்துக்குமார் : சில பாடல்களில் வரிகள் காதல் கவிதைகளாக இருக்கின்றது. நா.முத்துக்குமார், யுவன், செல்வராகவன் கூட்டணி இனி இல்லை என நினைக்கும்போது கவலையாக இருக்கின்றது. பாரதிராஜா, இளையராஜா வைரமுத்து கூட்டணிபோல் இருந்தவர்கள் தற்போது பிரிந்துவிட்டார்கள்.

கார்த்திக் : இத்துடன் மூன்றாவது படத்தில் தனக்கு நிச்சயம் பண்ணிய பெண்ணை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கின்றார். ஆனாலும் இன்னமும் நடிப்பில் முன்னேறவேண்டும். அழுகின்ற காட்சிகள் செயற்கைத்தனமாக இருக்கின்றது.

கருணாஸ் ஒருகட்டத்தில் சிரிக்கவைக்கின்றார் பின்னர் அரசியல் மாநாட்டில் தொலைந்த கொள்கைபோல் காணாமற்போய்விடுகின்றார். சரண்யா அழகாக இருக்கின்றார் அடுத்த சினேகாவாக மாற வாய்ப்புகள் உண்டு. தன்னைவிட இன்னொரு அழகான பையன் உனக்கு வருவான் என தனுஷ் கூறும்போது அப்படியான எனக் கேட்பது அக்மார்க் டீன் ஏஜ் பெண்.

மித்ரன் ஆர்.ஜவகர் : முதல் படம். முற்பாதியில் செல்வராகவன் படம்போலும் பிற்பாதியில் அழகம்பெருமாள், விக்ரமன் படம்போலவும் இயக்கியிருக்கிறார். சில இடங்களில் இயக்குனரின் திறமை வெளிப்படுகின்றது. குறிப்பாக சரண்யா தனுஷ் காட்சிகள் கத்திமேல் நடக்கும் இடங்கள் அழகாக கையாண்டிருக்கின்றார். படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை இவருக்கு நன்றாக கைகொடுத்திருக்கின்றது. முதல் படத்தில் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். தனுஷ்சை வைத்துக்கொண்டு பஞ்ச் டயலாக்கோ, அதிகம் சண்டையோ வைக்காததற்க்கு பூச்செண்டு கொடுக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். பிற்பாதியில் சில இடங்களில் துணிந்து கத்தரி வைக்கலாம்.

மொத்தத்தில் பழைய கதைதான் என்றாலும் நயன் என்ற மோகினியாலும் தனுஷ் என்ற அப்பாவித் தோற்ற இளைஞனாலும் யுவன் என்ற குட்டி இசைராஜாவினாலும் செல்வராகவன் என்ற இளைஞர்கள் மனதைப் படித்த இயக்குனரினாலும் யாரடி நீ மோகினி மனதைக் கவரும் என்பதில் ஐயமில்லை.



டிஸ்கி :நயந்தாரா ரசிகர்களுக்காக இரண்டுபடங்கள்.