சுஜாதா சில நினைவுகள்

அம்புலிமாமா, கோகுலம், ராணி காமிக்ஸ் வாசிக்கும் காலத்தில்(கிட்டத்தட்ட 7 அல்லது 8 வயது என நினைக்கின்றேன்) நான் முதன் முதலில் படித்த நாவல் செங்கை ஆழியான் அவர்களின் முற்றத்து ஒற்றைப் பனை. அதன் பின்னர் அவரது நாவல்களை தேடி வாசிக்கத் தொடங்கினேன்.



அப்போது தான் ஒரு நாள் நம்ம ஊர் நூலகத்தில் சுஜாதாவின் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது, என்ன பெயர் என்பது மறந்துவிட்டது. முதலில் எனக்கு ஜெயின்(ஜயராஜ்) ஓவியமே புதிதாக இருந்தது. பின்னர் ஏதோ ஒரு உந்துதலில் அந்த நாவலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டில் பார்த்துவிட்டு உனக்கு சுஜாதாவின் நாவல்கள் பெரிதாக விளங்காது எதற்க்கும் வாசி என்றார்கள். உண்மைதான் அப்போது எனக்கு அவரது நாவல்களில் பல விளங்கவில்லை, காரணம் வயது.

பின்னர் பாடசாலைக் காலத்தில் நாம் சிலர் சுஜாதாவின் கதைகள் வாசிப்பதற்க்கு என்றே நூலகம் செல்வோம். கணேஷ்சும், வசந்தும் எம் ஹீரோக்கள் ஆனார்கள். என் இனிய இயந்திரா, பிரிவோம் சந்திப்போம், கனவுத் தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்பூ எல்லாம் மனப்பாடம் பண்ணுகின்ற அளவிற்கு வாசித்தோம்.

பின்னர் காலமாற்றங்கள் இடமாற்றங்களில் நூலகத்தை மறந்தாலும் சுஜாதாவை மறக்கவில்லை. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இருக்கும் அனைத்து சுஜாதாவின் புத்தகங்களும் வாசித்துள்ளேன். சிலவற்றை மீள் வாசிப்பு செய்வதுண்டு, அண்மையில் கூட இணையத்திலிருந்து இறக்கி "மெரினா" என்ற நாவலை வாசித்திருந்தேன்.

பின்னர் விகடனில் வெளிவந்த "கற்றதும் பெற்றதும்" ஜீனியரில் வெளிவந்த "ஏன் எதற்க்கு எப்படி" என இவரின் எழுத்துக்களின் வாசிப்பு தொடர்ந்துகொண்டே தானிருந்தது, விகடன் வாங்கியதும் முதலில் படிப்பது "கற்றதும் பெற்றதும்" தான்.

அதன் பின்னர் சுஜாதா கதை, வசனம் எழுதிய படங்களைப் பார்க்கத்தொடங்கினேன். சில நாட்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு கேடிவியில் "கரையெல்லாம் செண்பகப்பூ" படம் போட்டார்கள். முடியும் வரை பார்த்தேன். ஆனால் வாசிக்கும்போது இருந்த அந்த சுவை படத்தில் இருக்கவில்லை. இதே நிலைதான் இவரின் "விக்ரம்", "ப்ரியா" போன்ற படங்களுக்கும். நேற்றுக்கூட கேடிவியில் "விசில்" படத்தில் இவரது எழுத்துக்களை பார்க்ககூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

இவரின் "ஒரு லட்சம் புத்தகங்கள்" என்ற சிறுகதையை நான் இதுவரை வாசிக்கவில்லை. இந்த சிறுகதை யாழ்ப்பாணம் நூலகம் எரிப்புச் சம்பவ‌த்தைப் பற்றிய சிறுகதை. எத்தனையோ இடத்தில் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை.

அத்துடன் காந்தளுர் வசந்தகுமாரன் கதை, அதன் இரண்டாம் பாகம் விரைவில் எழுதப்போகின்றேன் என்றவர் அதனை எழுதாமலே சென்றுவிட்டார்.

இவர் ஷங்கருடன் சேர்ந்த படங்களில் இவரின் வசனங்கள் இளமையாக இருப்பதைப் பார்த்து அதிசயப்பட்டிருக்கின்றேன்.

பொறியிய‌ளாள‌ர், எழுத்தாள‌ர், வ்ச‌ன‌க‌ர்த்தா, என‌ப் ப‌ல்முக‌த் திற‌மையுடைவ‌ர் ஒருவ‌ரின் இழ‌ப்பு த‌மிழ் இல‌க்கிய‌த்துக்குக் கிடைத்த‌ பேரிழ‌ப்பாகும்.

எல்லாம் வல்ல ஸ்ரீ ரங்கப் பெருமாளின் பாதகமலத்தில் இவரும் சென்றடைந்துவிட்டார்.

6 கருத்துக் கூறியவர்கள்:

பிரேம்ஜி சொல்வது:

செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

காண்டீபன் சொல்வது:

அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்...

அருண்மொழி சொல்வது:

/அத்துடன் காந்தளுர் வசந்தகுமாரன் கதை, அதன் இரண்டாம் பாகம் விரைவில் எழுதப்போகின்றேன் என்றவர் அதனை எழுதாமலே சென்றுவிட்டார். //

இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்

Muruganandan M.K. சொல்வது:

சுஜாதாவின் பத்தி எழுத்துக்களே என்னைக் கவர்ந்தவை. ஏனெனில் மிக ஆழமான விடயங்களையும் கவரும் விதத்தில் சொல்லும் நடை எனக்கு மிகவும் பிடித்தம். குறுநாவல்களில் கரையெல்லாம் செண்பகப்பூ மட்டுமே எனக்கு மிகவும் பிடித்தது. திரையில் காணக்கிடைக்கவில்லை. எழுத்து உலகில் நடையில் மிக அற்புத மாற்றத்தைக் கொண்டு வந்த அவரது மறைவுக்காக வருந்துகிறேன்.

Unknown சொல்வது:

வாழ்க்கையிலும் VCR la இருக்கும் Rewind button இருந்தால் நல்ல இருக்கும்

கானா பிரபா சொல்வது:

வணக்கம் வந்தியத்தேவன்

சுஜாதா குறித்த உங்கள் வாசிப்பு நினைவு நன்றாக இருக்கின்றது. கடந்த வாரமும் அவரின் நான்கு புத்தகங்களை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருக்கின்றேன்.