குமுதம் இதழில் வெளிவந்த தசாவதாரம் இசை விமர்சனம்.
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’’
_ ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள். இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற... கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது. உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட... அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.
‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’ பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை! சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.
மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!
வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!
‘‘உடல் பூமிக்கு போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்’’
‘‘கடவுளும் கந்த சாமியும்
பேசிக் கொள்ளும் மொழி இசை’’
‘‘வீழ்வது யாராயினும்
வாழ்வது நாடாகட்டும்’’
போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.
படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:
‘‘உலக நாயகனே... கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’
ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?
ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.
_ வி. சந்திரசேகரன்
நன்றி : குமுதம்
டிஸ்கி : இதுவரை எந்த இணையத்திலும் பாடல்கள் வெளிவரவில்லை.
அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
-
அவுஸ்திரேலிய ஓபன் 2025 10வது நாள் ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி
ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்த்து சேர்பியாவின் நோவக்
ஜோகோவிச் எதிர...
5 hours ago
3 கருத்துக் கூறியவர்கள்:
அப்ப கமலின்ர சாதியிழுத்துப் பெரும் சண்டையிருக்கு எண்டு சொல்லுங்கோ...
பாடல்களைப் பார்க்கும் பொழுது படம் சிறப்பாக வரும் எனத் தோன்றுகின்றது.
பாடல்கள் கேட்டேன் இனிமையாக இருக்கின்றது. பல மாதங்களுக்கு முன்னரே குமுதம் இதழ் எப்படி விமர்சனம் பாடல் வெளிவருவதற்க்கு முன்னரே எழுதினார்கள் என்பது புரியாதபுதிர்.
Post a Comment