சுறா திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு நேற்றுத் தான் கிடைத்தது. படம் பார்க்கும் முன்னர் ட்விட்டரில் சுறா படம் பார்க்கப்போகின்றேன் என்ற விடயத்தை ட்விட்டியதும் பலரும் ஏன் இந்த ரிஸ்க்? சொந்த செலவில் சூனியம் என என்னை எச்சரிக்கை செய்தும் ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க்கு சாப்பிடுவதுபோல் என்பதால் ஒரு மாதிரி பார்த்து முடித்தேன்.
படத்தினை சாதாரணமாக பார்த்தால் வழக்கமான மசாலாப் படமாகத் தான் தெரியும் ஆனால் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் நம்ம இளைய தளபதியின் அரசியல் நகர்வுகளையும் அவர் அந்தப் படத்தின் மூலம் சொல்லவந்த விடயத்தினையும் புரிந்துகொள்ளமுடியும். பேசாப் பொருளை இயக்குனர் பேசியிருக்கின்றார்.
முதல் காட்சியில் காட்டப்படும் மீனவக் குப்பத்தின் பெயர் யாழ் நகர். இந்தப் பெயர் ஒரு இனத்தின் குறியீடாக இங்கே உருவகிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர் மீனவர்கள் கடலில் காணாமல் போகின்றனர். பின்னர் சுறா தவிர ஏனையவர்கள் கரைக்கு வந்தது அரச அதிகாரி ஒருவர் ஒருவர் தானே அவருக்காக கவலைப் படவேண்டாம் என்பது இந்திய மீனவர்கள் மீது தமிழக அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகின்றது. இதற்க்கு தோதாக இன்னொரு காட்சியில் டீ கடையில் விஜய் இருக்கும் போது ஒருவர் பத்திரிகையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்தியைப் படிக்கும் போது சுறா மக்களைப் பார்த்துக்கூறுவார் இந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்க விரைவில் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நல்ல தலைவர் வருவார்.
சுறாவை வில்லனுடைய ஆட்கள் பின்னாலிருந்து தாக்கி நெருப்பு வைத்துக் கொல்கின்றார்கள். யாழ் நகர் குப்பம் முழுவதும் சுறா இறந்துவிட்டதாக நம்பி வில்லனாகிய மந்திரி கொடுக்கும் இடத்தில் தங்குவதற்க்கு சம்மதிக்கின்றார்கள். சில நிமிடங்களில் சுறா காளியின் அருளால் உயிர்தப்புகின்றார். உடனடியாக மக்கள் மீண்டும் சுறாவுடனேயே சேர்கின்றார்கள். இந்தக் காட்சியிலும் சில வெளிநாட்டு அரசியல் சம்பவங்கள் ஏனோ மறைமுகமாக நினைவு படுத்தப்படுகின்றது.
அதே காட்சியில் எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா அரசுசாரா நிர்வணம் போல் உவமிக்கப்பட்டிருக்கின்றார். அதாவது கஸ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்வது வெளிநாட்டு நிறுவனங்கள் என்பதை இந்தக் காட்சியில் உணர்த்திய இயக்குனர் தமன்னாவின் மதத்தை கிறிஸ்தவமதமாக காட்டியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் தமன்னாவின் பெயரான பூர்ணிமாவில் உள்குத்து இருப்பதுபோல் தெரிகின்றது.
இறுதிக்காட்சியில் வில்லனுடன் சீனத்து முகச்சாயல் உட்பட பல வில்லனின் அடியாட்கள் மோதுகின்றார்கள். இது வில்லன் தான் மட்டும் தனியனாக சுறாவை எதிர்க்காமல் வெளிநாட்டு உதவிகளுடன் எதிர்த்ததாக காட்டப்படுகின்றது.
மேலே குறிப்பிட்ட காட்சிகளில் விஜயின் மக்கள் மீதான கரிசனையும் அக்கறையும் வெளிப்படுவதுடன் அவரது எதிர்காலம் அரசியல் தான் என்பதை தன்னுடைய ஐம்பதாவது படத்தில் உறுதி செய்கின்றார்.
கதாநாயகி தமன்னா தன்னுடைய செல்ல நாயைக் காணாமல் தற்கொலை செய்வதனைக் காட்டுவதன் மூலம் இயக்குனர் பிராணிகளிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பதையும் கடலினுள் மூழ்கும் தமன்னாவையும் கடலின் ஆழத்தையும் மாறிமாறி காட்டுவதன் மூலம் பெண்களின் மனது கடலைப்போல் ஆழமானது என்பதையும் குறியீடாக காட்டுகின்றார்.
அத்துடன் உடல் குறைபாடு உடையவர்கள் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பெண்களைக் கவரலாம் என்ற உண்மையை இளைஞர்களுக்கு அறியத்தருகின்றார். எப்படி வாசனைத் திரவியங்கள் விளம்பரங்களில் வாசனைத் திரவியத்தை பாவித்தவுடன் அந்த ஆணின் பின்னால் பெண்கள் வருகின்றார்களோ அதேபோல் பிறருக்கு உதவி செய்தாலும் இளகிய மனம் படைத்த இளம் பெண்களைக் கவரலாம் என்பதை விஜய் கண் தெரியாத ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் தமன்னாவின் மனதில் இடம் பிடிக்கும் காட்சி மூலம் விளங்கப்படுத்தியுள்ளார்.
ஒரு பாடலில் தமன்னாவின் நிற்குமோ நிற்காதோ ஜீன்ஸ் கீழே விழவிழ விஜய் தான் மேலே தூக்கிவிடுவார். இது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையாகவே தோன்றுகின்றது.
இயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் ஆனால் இயக்குனருக்கு என்ன அரசியல் சிக்கல்களோ தெரியவில்லை படங்களில் அதிகம் குறீயீட்டு காட்சிகளின் மூலம் தான் சொல்ல வந்ததைச் சொன்னாலும் சாதாரண மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் சுறா கருவாடாகியதன் காரணம் என நினைக்கின்றேன்.
பின்குறிப்பு : இந்தப் பதிவை மொக்கையாக எடுக்க விரும்பினால் மொக்கையாகவே எடுக்கவும் அல்லது அரசியலாக எடுக்கவிரும்பினால் என்னைத் திட்டக்கூடாது.
சுறா - குறியீட்டு அரசியல்
எழுதியது வந்தியத்தேவன் at 35 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சினிமா. அரசியல், மொக்கை
பீட்ஷா, பேர்கர், சிப்ஸ்
பதிவரசியல்
சில நாட்களாக பதிவுலகம் கண்டங்களையும் தாண்டி அல்லோலபட்டுக் கொண்டிருக்கின்றது. வலை என்பது ஒன்லைன் டயறி என வரைவிலக்கணம் கொடுக்கின்றது புரொஜக்ட் மனேஜ்மெண்ட். வலையை தனிப்பட்ட விடயங்களை விட எத்தனையோ ஆக்கபூர்மான விடயங்களுக்கும் பயன்படுத்தலாம், பயன்படுத்துகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் குரோதங்களையும் காழ்ப்புணர்ச்சிகளையும் காட்ட வலையுலகை நாறடித்திருக்கின்றார்கள்.
வலை என்பது ஒருவர் தன்னுடைய கருத்துகளை அல்லது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். அவரின் கருத்துக்கள் பிடிக்கவில்லையா? வாசித்துவிட்டு சிரித்துவிட்டுப் போகவேண்டியதானே. அதனைவிட்டு விட்டு மற்றவர்களைத் தாக்கித் தான் ஏனையவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பது கடைந்தெடுத்த முட்டாள் தனம். மற்றவர்களும் பாராட்டும் படி எழுதவேண்டும் அல்லது பலர் படிக்கும் திரட்டிகளில் இணைக்கவேண்டும் இதை எல்லாம் செய்யாமல் கடை விரித்தேன் கொள்வார் எவரும் இல்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.
அதிலும் அண்மைக்காலமாக மறைவாக்கு நேர்வாக்கு பிரச்சனைகளும் போலி ஐடிகளும் குழாயடிச் சண்டையாகவே மாற்றிவிட்டது. தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நிறுத்தும்படி சில சண்டைகள் நடந்துமுடிந்துள்ளன / நடக்கின்றன. இங்கே எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருதரும் புரபெசனல் எழுத்தாளர்கள் அல்ல. பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்கு எழுதத் தொடங்கி தேர்ந்த எழுத்தாளர்களாகி புத்தகம் கூட வெளியிட்டுள்ளார்கள். ஒரு சிலரின் தேடுதல்கள் ஆச்சரியப்பட வைக்கும். எத்தனை விதமான விடயங்களை எழுதுகின்றார்கள். ஒரு சிலரோ தனது துறை சார்ந்த பதிவுகளில் வல்லவர்களாக இருக்கின்றார்கள். வாசகனுக்கு சலிப்பூட்டாமல் எழுதுவது என்பது ஒரு கலை.
சிலரோ தங்களின் சுயவிளம்பரத்திற்க்காக ஏனையோர்களால் கொஞ்சம் கவனிக்கப்படும் பதிவர்களைத் தாக்கி எழுதுவதும் அவரோ இவரோ எனக் குற்றம் சாட்டுவதும் அவர்களின் எதிர்காலம் அரசியலில் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதையே காட்டுகின்றது. பலரால் ரசித்து எழுதிய சிலர் ஒரே வகையான பதிவுகளினால் சலிப்பூட்டுகின்றார்கள் என்பது அவர்களின் பதிவுகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையில் இருந்து விளங்குகின்றது.
வலைப் பதிவுகள் பற்றி ஆங்கிலத்தில் புத்தகங்கள் வந்தாலும் இன்னும் தமிழில் நல்லதொரு புத்தகம் வரவில்லை என நினைக்கின்றேன். அண்மைக்காலத்தில் அதிகரித்த வலைப்பதிவர்களின் எண்ணிக்கை ஆரோக்கியமானது தான் ஆனாலும் புதிதாக எழுத வருபவர்கள் இந்தக் குழாயடிச் சண்டைகளைப் பார்த்து ஒதுங்கிப் போனாலும் ஆச்சரியமில்லை.
சில காலத்திற்க்கு முன்னர் நண்பர் ஒருவர் "வலை எழுத எதாவது படித்திருக்கவேண்டுமா?" என என்னைக் கேட்டார். இதுவரை டிப்ளோமா இன் புளொக் என்ற கற்கை நெறி ஆரம்பிக்கப்படவில்லை விரைவில் ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம் உங்களுக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனை எழுதுங்கள் என்றேன் இன்றைக்கு அவர் பலரால் கவனிக்கப்படும் ஒரு வலைப்பதிவராகிவிட்டார்.
மிகவும் முக்கிய குறிப்பு : மொக்கைப் பதிவு எழுதுவதற்க்கும் திறமை வேண்டும். (இது சாதாரண டயலாக் தான் பஞ்ச் அல்ல)
கால்ப்பந்து 2010
உலகத்தின் மிகப் பெரும் விளையாட்டுத் திருவிழா நாளை தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கின்றது. உலகத்தின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 25% மக்கள் இந்த விளையாட்டை ரசிக்கப்போகின்றார்கள். இன்னும் சில நாட்களுக்கு பெற்றோல் விலை ஏற்றம், நயந்தாரா பிரச்சனை, ஜெனிலியாவின் பித்தலாட்டம், குளிர் போன்ற விடயங்களை விடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிப்பாரா? ரூனி தங்கக் காலணி வாங்குவரா? மீண்டும் ஆர்ஜென்டினா கப் தூக்குமா என்பவை தான் அனைவரினதும் பேச்சாக இருக்கும்.
செம்மொழி
சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள ஒரு நூலத்திற்க்கு செல்லவேண்டி இருந்தது. நூலகத்தின் முகப்பில் நூல் நிலையம் வரவேற்கின்றது என ஆங்கிலம், சீன, அரபி உட்பட 10 மொழிகளில் தமிழ் மொழியிலும் வரவேற்பு பலகை வரவேற்றது. 1934ல் கட்டப்பட்ட அந்த நூலத்தில் தமிழ் மொழி பார்த்ததும் புல்லரித்தது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என யார் சொன்னாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய தமிழ் என்றைக்கும் வாழும்.
ஐஃபா
சென்றவாரம் ஐஃபா விருதுகள் வழக்கம் போல் இந்திய திரைப்படங்களுக்குப் பதிலாக ஹிந்தித் திரைப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக தென்னிந்திய சினிமாவினர் இதனைப் பகிஸ்கரித்தாலும் இன்னொரு காரணம் ஐஃபா விருதுகள் பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்களுக்கே வழங்கப்படும். காரணம் இது சர்வதேச ஹிந்தியன் திரைப்பட விருது. ஆனாலும் இம்முறை சிறந்த நடிகைக்கான விருதை ஜெனிலீயா தவறவிட்டாலும் அவருக்கு இம்முறை ஆஸ்கார் கிடைக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அவரின் நடிப்பு உலக மகா நடிப்பு. ட்விட்டரிலும் தன் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கின்றார்.
ரசித்தது
எழுதியது வந்தியத்தேவன் at 11 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் செம்மொழி, பதிவர் வட்டம், விளையாட்டு
நட்புகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எமது உயர்தரக் கணித வகுப்பு தூய, பிரயோக கணிதம் புரிகின்றதோ இல்லையோ ஆசிரியரின் நக்கலுக்காகவும் பகிடிகளுக்காகவும் அருமையாகவே இருக்கும். அந்த வகுப்புக்கு மெலிஞ்ச நன்றாக உயர்ந்த ஒரு மாணவன் அடிக்கடி பிந்தித்தான் வருவார். ஆசிரியரும் ஒவ்வொரு தடவையும் நீ நாடகம் நடிக்கத் தான் சரி என கண்டிப்பார் ஆனாலும் அவர் அதனை ஒரு புன்முறுவலுடன் சிரித்தபடி அமருவார். அப்படியே பெரும்பாலும் அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லுவார்.
பாடசாலை நாட்களில் பட்டிமன்றங்களில் இவர் குரல் ஒலிக்கும் எங்களுக்கு பாடங்கள் போரடித்தால் இடைக்கிடை சென்று பார்ப்பது அப்படியே பொடியன் நல்லாப் பேசுகின்றான் என ஒரு கொமெண்ட் அடிப்பது இப்படித் தான் அவரின் அறிமுகம் கிடைத்தது.
உயர்தரம் முடிந்தபின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இறங்கிச் சிலநாட்களில் சக்தி வானொலியில் ஒரு பழகிய குரல். எங்கேயோ கேட்டகுரல் போல் இருக்கே எனப் பார்த்தால் நம்ம வாமலோஷனன் லோஷன் என்ற பெயருடன் தாயகத்திற்க்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் அவரின் வாழ்க்கை ஒலிபரப்பாளனாக அல்லது ஊடகவியளாளனாக மாறிவிட்டது. நானும் இன்னொரு பக்கம் போய்விட்டபடியால் தொடர்புகொள்ள முடியவில்லை. இடையிடயே தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் சில கம்பன்கழக நிகழ்வுகளிலும் கண்டு கதைத்தது மட்டும் தான்.
பின்னர் 2008 செப்டம்பரில் லோஷன் வலை எழுதவந்தபின்னர் அவரின் முதலாவது பதிவில் பின்னூட்டம் இட்டேன் ஆனாலும் அவரால் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு நான் யார் என அறிமுகம் செய்தபின்னர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.
பின்னர் முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது அவரைச் சந்தித்தவுடன் நான் கேட்ட கேள்வி " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்". இதன்பின்னர் மீண்டும் பதிவுகளினூடும் மின்னஞ்சல்களினூடும் தொடர்ந்தது எம் நட்பு.
கமல் , எஸ்பிபி , சுஜாதா கிரிக்கெட் எனப் பலவிடயங்கள் ஒரே அலைவரிசையில் இருவருக்கும் இருந்தாலும் கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. அத்துடன் கலாய்ப்பதும் கலாய்க்கபடுவதும் எமக்கு மிகவும் பிடித்தவை.
இன்றைக்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இனிய நண்பன் லோஷன் அண்ணாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.
கிருத்திகன்
வலையுலகில் கிடைத்த இன்னொரு நட்பு மற்றும் தம்பி மெய் சொல்லபோகின்றேன் வலையின் சொந்தக்காரர் கிருத்திகன். எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து இன்றைக்கு கனடாவில் குடியிருக்கும் கிருத்தியின் எழுத்துகள் மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக இவரின் கிரிக்கெட் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வேலைப்பழுக்களால் அண்மைக்காலமாக தனது எழுத்துகளை இவரும் குறைத்துக்கொண்டுள்ளார்.
நாளை(06.06.2010) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கிருத்திகன் எனச் செல்லமாக அழைக்கப்படும் கீத்திற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு : பாடங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால் அண்மைக்காலமாக பதிவுகள் எழுதுவதை குறைத்திருந்தேன். ஆனாலும் இந்தப் பதிவு என் நட்புகளுக்கு வாழ்த்துச் சொல்வதற்காக அவசரமாகவும் நெருக்கடியிலும் எழுதியது.
பின் பின்குறிப்பு : லோசன் பற்றியும் கிருத்தி பற்றியும் கவிதை (ஏன் இந்தக் கொலைவெறி என கேட்காதீர்கள்) தான் எழுத இருந்தேன். எது எனக்கு வருமோ அதுதான் சரி என்பதால் நீங்கள் தப்பிவிட்டீர்கள்.
உள்குத்து : லோஷனின் பச்சைக் கலர் படம் அவரின் வருங்கால அரசியல் வாழ்க்கையுடன் தொடர்புடையது என நினைக்கவேண்டாம்.
எழுதியது வந்தியத்தேவன் at 18 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிருத்திகன், நட்பு, லோஷன், வாழ்த்து