குக்கைத் திணறடித்த குஞ்சு

"நோ மணி நோ ஹனி" என என் செல் என் அதிகாலை இனிமையான தூக்கத்தை கெடுத்தது, யார்டா இந்த நேரத்திலை என நம்பரைப் பார்த்தால் 009477... என ஒரு இலங்கை நம்பரைக் காட்டியது.

தூக்க கலக்கத்துடன் "ஹலோ"

"ஹாய் மாம்ஸ் நான் தான் பவன்"

"சொல்றா குஞ்சு என்னடா விடியக்காலையிலை "

"மாம்ஸ் இங்கே விடிஞ்சுடுத்து"

"அடப்பாவி காலையிலையே உன் கடியா என்ன விசயம்டா"

"மாம்ஸ் உங்கே ஒரு கிழமைக்கு கிரிக்கெட் பயிற்சி எடுக்க என்னை அனுப்புறாங்கள்"

"டேய் உலகச் சாம்பியன் எங்கடை பக்கத்து நாடு, நாங்களோ ரன்னர்ஸ் இவங்களோ அயர்லாந்தட்டை அடிவாங்கியவங்கள், இவங்களெட்டை என்ன பயிற்சியடா"

"இல்லை மாம்ஸ் இது ஜஸ்ட் போர் எக்ஸ்சேஞ் ட்ரெயினிங்"

பவனின் ஆங்கிலத்திலையே பொடியன் ரெடியாகிவிட்டான் என்பது தெரிந்துவிட்டது.

"சரிடா எப்ப வாறாய்? பிளைட் விபரம் எல்லாத்தையும் மெயில் பண்ணு நான் உன்னை பிக்கப் பண்ண வாறன்"

"எல்லாம் உங்களுக்கு இரவே மெயில் பண்ணிட்டன், இப்போ சுபாங்கன் அண்ணாவுடன் கட்டுநாயக்காவில் நிற்கின்றேன்"

"ஓக்கே மாம்ஸ் சீ யூ அட் ஹீத்ரூ"

மெயிலைத் திறந்து பார்த்தால் பவனின் கல்வி நிறுவனத்தில் சிறந்த பந்துவீச்சாளரான இவனை லோர்ட்ஸில் நடக்கும் 5 நாள் கோச்சிங் கேம்பில் கலந்துகொள்ள அனுப்பிய அழைப்பிதழும் பிளைட் விபரங்களும் அனுப்பியிருந்தான்.


நானும் என்னுடைய பகல் நேர ஆணி பிடுங்கல்களை முடித்துவிட்டு பிக்காடிலி லைனை அல்பேர்ட்டனில் பிடிச்சு ஒருமாதிரி ஹீத்ரு டெர்மினல் 4 க்கு சென்றுவிட்டேன்.

ஒரு 8 மணியளவில் தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான்.

பவனுடன் பயணக் கதைகளைக் கேட்டபடி நிற்க ஒரு அழகான வெள்ளைக்கார பெண் பவனுக்கு அருகில் வந்து "OK Bavan have a nice Holiday, pls drop me a mail and catch u later bye" என்ற படி பவனைக் கட்டிப்பிடித்து கன்னத்துடன் கன்னம் வைத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தபடி "Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு மின்னல் என மறைந்துவிட்டாள்.

"டேய் யாரடா இவள் எங்கே பிடிச்சாய்?"

"ஹிஹிஹி இவள் மலேயில் ட்ரான்சிட்டில் என் பக்கத்து சீட்டில் ஏறியவள் என்னை ஸ்ரீலங்கன் கிரிக்கெட்டர் என நினைத்து ஒரே கிரிக்கெட் கதைதான், நானும் யா யா எனச் சொல்லி பிக்கப் பண்ணிட்டேன்"

"என்னடா?"

"இல்லை மாம்ஸ் உவங்கடை இங்கிலீசைத் தான் பிக்கப் பண்ணிட்டேன் என்றேன், அவளின் பெயர் சாரா எட்வேர்ட்ஸ் பேர்மிங்ஹாமில் தானாம் இருக்கின்றாள் ஒரு நாளைக்கு தன்னுடன் டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் "

ஏற்கனவே அவள் பவனுக்கு முத்தமிட்டு என்னைக் கடுப்படித்துவிட்டாள் இதுக்குள்ளை அவளுடன் டின்னரோ என்ற ஆத்திரத்தில் "மவனே லேட்டாகுது வா" என்றபடி அவனின் லக்கேஜையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

என் ரூமில் லக்கேஜின் சிப்பைத் திறந்து எனக்கு நண்பர்கள் கொடுத்துவிட்ட சாமான்களை தந்தான்.


"ஆதிரை அண்ணாவுக்கு நெல்லியடி கொமர்ஷியல் வங்கியில் முக்கிய அலுவல் இருப்பதால் அவர் யாழ் சென்றுவிட்டார் அதனால் அவர் தன் சார்பாக இந்த நீலக் கலர் ரீசேர்ட்டை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார், அடுத்தமுறை நான் வரும் போது நளபாகம் ஸ்பெசல் வாய்ப்பான் தந்துவிடுவதாகச் சொன்னார்".

"ம்ம்"

"லோஷன் அண்ணா கொஞ்சம் கர்னாடக சங்கீத சீடிக்கள் தந்துவிட்டவர்,அந்த சீடித் தொகுப்பில் அவருக்குப் பிடித்த நித்யஸ்ரீயின் கீரவாணி வர்ணமும் இருக்காம், உங்களையும் ஒருக்கால் கேட்கட்டாம். உவன் கோபி தான் வாங்கி வைத்த பருத்தித்துறை வடையை பசிக்குது என்று எயார்போட்டுக்கு வாறவழியிலையே சாப்பிட்டுவிட்டான். வதீஸ் அண்ணா அரசியல் கூட்டம் என்று மன்னாருக்கோ மட்டக்களப்புக்கோ போய்விட்டார் சந்திக்க கிடைக்கவில்லை, மற்றது எல்லாம் அனுவும் சுபாங்கன் அண்ணாவும் தந்தவை தான் என்றபடி முறுக்கு, ஊறுகாய், என ஊர்ச் சாப்பாடுகளை எடுத்து வெளியே வைத்தான். நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.

"ஓகேடா விடிய உனக்கு பிரெக்டிக்ஸ் இருக்கு நேரத்துக்கு படு"

அடுத்த நாள் காலையே லோர்ட்சில் பயிற்சிக்கு அவனை அழைத்துக்கொண்டு போனால் அங்கே இங்கிலாந்து டீமும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

"அடப்பாவி உனக்கு நல்ல அதிர்ஷ்டம்டா இண்டைக்கு"

"எனக்கு மலேயிலையே அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது" பவன்

சில நிமிடங்களிலையே பயிற்சி தொடங்கியது, பவனின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். அதிவேகமாக ஓடிவந்து மெதுவாக ஸ்பின் போல வீசியதைப் பார்த்து அன்ரு பிளவர் தொடக்கம் அன்ரு ஸ்ரோஸ் வரை ஸ்தம்பித்துப்போனார்கள்.

இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜிம்மி அண்டர்சனோ பவனின் பந்துவீச்சில் மயங்கி பவனிடம் அவன் வீசும் பந்துவீச்சு என்ன வகை எனக் கேட்டார். பவனோ உடனடியாகவே இதன் பெயர் "பப்சர்" எனக் கப்சா விட்டான். "பப்சர் மீன் மிக்சர் ஒவ் ஸ்பின் அன்ட் சீம் சோ இஸ்ட் கோல்ட் பப்சர்" என விளக்கம் கொடுத்ததை கேட்டு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டாண்டிங் ஒவேசன் கொடுத்தார்கள்.

இந்த அலும்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சனியும் வியாழனும் டவுள் டெக்கர் போட்டு பவனின் தலையில் அமர்ந்துகொண்டதுபோல தெரிந்தது. பின்னை இவன் செய்வது கப்சா என்றால் என்னையும் சேர்த்து அடுத்த பிளைட்டில் டிப்போர்ட் செய்துவிடுவார்கள்.

ஆனால் பவனின் முகராசியோ என்னவோ புரோட் தொடக்கம் பீட்டர்சன் வரை பவனின் தோளில் கைபோட்டு அன்னியோன்னமாகிவிட்டார்கள்.

சில நிமிடங்களில் 20 ஓவர்கள் கொண்ட ஒரு பயிற்சிப்போட்டி இங்கிலாந்து அணிக்கும் பயிற்சிக்காக வந்த ஏனைய நாட்டு மாணவர்கள் அணிக்கும் தொடங்கியது,

இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவர் அலிஸ்டர் குக் ஓப்பனராக ஸ்ரோசுடன் களமிறங்க மறுபக்கமோ நம்ம பவன் பந்துவீச நேர்சரி என்ட் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரத் தயாராக நின்றான்.

பவனின் பந்துவீச்சுகள் குக்கை திணறடித்தன. பவனின் வேகத்தைப் பார்த்து பந்து புல்டோசாக வரப்போகுது என குக் பேட்டை ஓங்க பந்தோ லெப்டில் பவுன்ஸ் பண்ணி யூடேர்ன் எடுத்து குக்கை குழப்பியது. கடைசியாக பவனின் ஆறாவது பந்து நேராகவே குக்கின் விக்கெட்டை தகர்க்க குக் பேட்டையும் களத்தே போட்டு விட்டு வெறும் கையோடு பவிலியன் திரும்பினார்.

பவனின் விளையாட்டைப் பார்க்கும் போது அடுத்த ஐபிஎல்லுக்கு ப்ரீத்தி சிந்தாவோ ஷில்பா ஷெட்டியோ பவனை ஏலத்துக்கு எடுக்கும் அபாயம் என் மனசுக்குள் மணி அடித்தது.

பயிற்சி முடிந்ததும் பவனும் நானும் வீடு திரும்பும்போது

" மாம்ஸ் எசெக்ஸ், சசெக்ஸ், மிடில்செக்ஸ் மனேஜர்கள் தங்கள் அணிக்கு விளையாடும் படி கேட்டார்கள் ஆனால் உந்தப் பெயர் உள்ள டீம்களில் விளையாட மது அண்ணா தான் பொருத்தமானவர் என்பதால் நான் மாட்டேன் என்றுவிட்டேன், சொர்க்கமே என்றாலும் கூரேப் பார்க் போல வருமா ?"

தீடிரென்று பவன் என் காலில் விழுவது போல் இருந்தது
"டேய் ஏன்டா இதெல்லாம் நீ என் நண்பேன்டா எனச் சொல்ல "
"மாம்ஸ் நான் கழண்ட என் லேசைக் கட்டுறன் " வழக்கம் போல என்னைக் கலாய்த்தான்.

இரவு படுக்கும் போது
"மாம்ஸ் எனக்கு இன்னொரு ஆசை இருக்கு நிறைவேற்றுவியளா?"
"என்னாடா ?"
"மரியா ஷரபோவாவுடன் விம்பிள்டனில் சென்டர் கோர்ட்டில் கலப்பு இரட்டையரில் விளையாடவேண்டும்"
எனக்கு வந்த கோபத்தில் காலால் உதைக்க கால் சுவருடன் மோதியவுடன் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று.

காலையில் எழுந்து பார்க்கின்றேன் பவனின் பேஸ்புக்கில்

என்ற மெசேஜ் இருக்கின்றது.

டிஸ்கி: இந்தப் பதிவுக்கு ஆக இருந்தது கிரேசி மோகனின் ஒரு கதை. அந்தக் கதையும் அதனுடன் எனக்கு நடந்த சம்பவமும் விரைவில் பதிவாக வரும்(எப்போ இன்னும் 2 மாதத்தின் பின்னரா என ஆதிரை கேட்பது போல பிரமை).

நிழலைத் திருடும் மழலை

"என்னமோ ஏதோ " என ஆலாப்ராஜின் குரலில் மாறனின் ஐபோன் சிணுங்கியது, நம்பரைப் பார்த்தால் புதிசாக இருந்தது,

"ஹலோ"

"டேய் நாதாரி என்னடா செய்கின்றாய்" என மறுபக்கம் கேட்ட வசனத்தை வைத்தே அந்தப் பக்கம் கதைப்பது ஆருரன் என்பது புரிந்தது. அவன் தான் ஹலோவுக்குப் பதிலாக நாதாரி என அழைப்பது அவன் ஒருத்தன் தான்.

"மச்சான் நான் கொழும்பிலை தான் நிற்கின்றேன் பின்னேரம் வெள்ளவத்தை கோசிக்கு வா, இதுதான் என்ரை நம்பர் ஓகேடா"

இதுதான் இவன்டை கெட்டபழக்கம் தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணிவிடுவான்.

கிட்டத்தட்ட பத்து வருடத்துக்குப் பின்னர் அவனைச் சந்திக்கபோறேன்.

ஆரூரன் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் பிரபலமான மருத்துவன். இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கே இருதய மாற்றுச் சிகிச்சையில் மட்டும் செய்து இப்போ உலகம் பூராகவும் இளவயதில் பிரபலமானவன்.

மாறன் ஆருரன் இருவரும் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாகவே படித்தவர்கள். இருவரும் உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்தவர்கள், ஆருரன் மருத்துவத்துக்கு முதல் தரத்திலேயே எடுபட்டுவிட்டான். மாறனோ இரண்டாம் தடவையுடன் இதற்க்கு மேல் முயன்றால் ஒன்றும் கிடைக்காது என அந்தமுறை கிடைத்த விஞ்ஞானபீடத்துக்கு போய்விட்டான். இடையில் எதாவது பார்ட்டிகளில் சந்தித்தால் உண்டு. மற்றும்படி இருவரும் வெவ்வேறு துறைகளில் என்றபடியால் சந்திக்கவாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆருரன் மருத்துவக் கல்வியை நிறைவு செய்தபின்னர் மேல்படிப்புக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் ஏனோ தொடர்புகள் கால நேர மாற்றங்களினால் அறுந்துவிட்டன.

சரியாக 7 மணிக்கு ஆருரன் கோசிக்குள் நுழைய பின்னால் இருந்து ஒருதன் கட்டி அணைத்து மச்சான் எனக் கத்தினான்.

"டேய் நாதாரி நான் கே இல்லையடா கட்டிப்பிடிக்காதையடா " ஆருரன்

"இது உன்ரை அமெரிக்காஇல்லை இங்கே அன்பை எப்படியும் சொல்லலாம்."

ஓகேடா நல்ல டேபிளாக பார்த்து இருப்பம் என்றபடியே இருவரும் ஒதுக்குப்புறமாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள்.

மெனு கார்ட்டைப் பார்த்தபடி முதலில் சூப்புடன் தொடங்கினார்கள்.

"சொல்லு மச்சான் எப்படி அமெரிக்க வாழ்க்கை?

"அடபோடா ஹாஸ்பிட்டல் வீடு என வாழ்க்கை போகின்றது,வீக் எண்டில் சிலவேளை பிரண்ட்ஸ், ரிலேட்டிவ் வீடுகளுக்கு விசிட் அடிக்கின்றது, சிலவேளை ஒன் கோல் என்றால் அதுவும் கட் தான்"

"ம்ம்ம் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் 9 தொடக்கம் 5 வரை வேலை" பிறகு வெள்ளவத்தையில் ரோட்டு அளத்தல் நைட் ஏதாவது படம் பார்த்தபடி தூங்கிவிட வேண்டியதுதான், அது சரி மச்சான் நீ ஏன் இன்னும் கட்டவில்லை?"

"ம்ம்ம் கட்டத்தான் வேண்டும் அம்மா பெண் பார்க்கின்றார் ஆனால் நான் தான் வேண்டாம் என தள்ளிப்போடுகின்றேன், என்னால் அவளை மறக்கமுடியவில்லையடா?"

"என்னாது அவளா? யாரடா அவள்?" கதை கேட்கும் ஆவலில் மாறன் எதிர்க்கேள்வி கேட்டான்.

"அவள்தாண்டா எங்களுடன் படித்த இந்துமதி."

"யூமீன் டொக்டர் இந்து? எனக்கு இந்தக்காதல் கதை தெரியாதே?"

"சொறிடா மச்சான் இந்தக் கதை எனக்கு மட்டும் தான் தெரியும் இப்ப உனக்கு மட்டும் சொல்றேன்டா"

மெழுகுதிரி சுழன்றது.


ஆகஸ்ட்டில் பைனல் சோதனை என்பதால் தாவரவியல் வகுப்பில் மாணவர்கள் படுமும்முரமாக வருங்கால மருத்துவர்கள் ஆக தீவிரமாக படித்துக்கொண்டிருந்தார்கள். வகுப்புத் தொடங்கி சில நிமிடங்களில் ஆருரன் கிரிக்கெட் உடையுடன் களைச்சு விழுந்து வந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த ஆசிரியர்

"நீ தேறமாட்டாய்? எக்சாமுக்கு இன்னும் 7 மாதம் தான் இருக்கு நீ இப்பவும் கிரிக்கெட் அடி பெரிய அசாருதீன் என நினைப்பு" என திட்டலுடன் நக்கலடிக்க வகுப்பே சிரித்தது.

ஆருரன் வந்த சில நிமிடங்களில் இந்துமதியும் "எக்ஸ்யூமி சேர்" என்றபடி உள்ளே நுழைந்தாள்.

"வாம்மா கவிதாயிணி உனக்கு என்ன கவியரங்கம், பட்டிமன்றமா? பிறகேன் வயோ படிக்க வந்தாய் போய் ஆர்ட்ஸ் படித்திருக்கலாம் தானே" மீண்டும் வகுப்பு சிரித்தது.

இந்துமதி அந்நியன் சதா போல இருப்பாள் சராசரியான உயரம், நீண்ட தலைமுடி, மின்னலடிக்கும் கண்கள், ஆனால் எந்த நேரமும் முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டிருக்கும், புத்தபெருமானின் மறு அவதாரம் என வகுப்பு ஆண்கள் நக்கலடிப்பது. சாதாரண தரத்தில் எட்டுப் பாடங்களில் அதிதிறமைச் சித்தி எடுத்து சாதனை படைத்தவள். வருங்காலத்தில் மருத்துவராக வேண்டும் என கடினமாகப் படிப்பவள் ஆனாலும் கவிதை, பட்டிமன்றம் என பலவிடயங்களில் ஆர்வம் திறமை இருப்பதால் அவற்றிலும் சில மணி நேரம் செலவளிப்பவள்.

ஆருரனுக்கு சில நாட்களாக இந்துமதியைக் கண்டால் மனதுக்கு ஏதோ இரசாயன பெளதிக வேதியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. இதற்க்குப் பெயர் தான் காதல் என அவனின் மானசீக எழுத்தாளர் சுஜாதாவும் அனிதாவின் காதல்களில் எழுதியது ஞாபகத்துக்கு வர காதலர் தினம் அன்று எப்படியும் தன் காதலை இந்துமதிக்கு சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இன்டெர்மொட்டுக்குள் நுழைந்து அழகிய வெலன்டை கார்ட்டை அக்கம் பக்கம் யாரும் பாக்கின்றார்களோ என்ற பதற்றத்துடன் வாங்கிவிட்டான்.

இரவு பழைய விகடனில் இருந்த

"எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் எம்மைப்
பார்த்துக்கொள்ளட்டும்
காதலிப்போம் வா "

என்ற கவிதையைச் சுட்டு கார்ட்டில் எழுதி அடுத்தநாளுக்காக கனவுடன் தூங்கிவிட்டான்.

பலருக்கு இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் வழக்கம்போல் அந்த 14.02 விடிந்தது. லில்லி அவனியூ மூலையில் இந்துமதிக்காக ஆருரன் காத்துக்கொண்டிந்தான். நெஞ்சோ தடக்படக் என அதிவேகமாக அடிக்கத் தொடங்கியது. லில்லி அவ்னியூவுக்குள் இந்துமதி நுழையக் கண்டவுன் கொஞ்சம் முகத்தில் புன்னகை காதலடுன் அவளை நோக்கி நடந்தான்.

"எக்ஸ்க்யூஸ் மீ இந்து"
"ம்ம்ம் என்ன " கொஞ்சம் இறுக்கமாகவே இந்து கேட்டாள்.
"இல்லை இந்த கார்ட் உங்களுக்காக பிளீஸ் அக்செப்ட் இட்"
"வெரி சொறி எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எதிலும் நம்பிக்கை இல்லை" என்றபடி ஆருரன் நீட்டிய கார்ட்டை நாலாக எட்டாக கிழித்து ரோட்டில் வீசிப்போட்டு,
"இனிமேல் இப்படி நடந்து உங்கள் மேல் இருக்கும் மரியாதைக் குறைக்கவேண்டாம், ஒழுங்காக படித்து டொக்டராகவும், என் கனவும் அதுதான்" என்றபடி நடக்கத் தொடங்கினாள்.

ஒரு சிலநாட்கள் இந்தக் காதலின் வலி இருந்தாலும் தன் கனவுக்காக ஆருரன் நன்றாகப் படித்து மருத்துவனாகிவிட்டான். ஆனாலும் இன்னும் அவனால் அவளை மறக்கமுடியவில்லை.

"ம்ம்ம் இவ்வளவு விடயங்கள் நடந்திருக்கா? பரவாயில்லை விடடா உனக்கு என ஒரு தேவதை உந்த உலகத்தில் எங்கே ஒரு இடத்தில் காத்திருப்பாள் தேடு" மாறன்.

"அடே உனக்கு கலியாணம் முடிஞ்சுதா?" ஆருரன்
"ஓமோம் புரோபோசல் தான் நாளைக்கு நீ லஞ்சுக்கு வீட்டை வாடா"

அடுத்த நாள் மாறன் வீட்டு கோலிங் பெல்லை ஆருரன் அடித்தான்,

"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,

(யாவும் கற்பனையல்ல.)

டிஸ்கி : இதை சிறுகதையாகவோ புனைவாகவோ அல்லது ஒரு கட்டுரையாகவோ எடுப்பது வாசகர்களிடமே விட்டுவிடுகின்றேன்.

நட்புகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எமது உயர்தரக் கணித வகுப்பு தூய, பிரயோக கணிதம் புரிகின்றதோ இல்லையோ ஆசிரியரின் நக்கலுக்காகவும் பகிடிகளுக்காகவும் அருமையாகவே இருக்கும். அந்த வகுப்புக்கு மெலிஞ்ச நன்றாக உயர்ந்த ஒரு மாணவன் அடிக்கடி பிந்தித்தான் வருவார். ஆசிரியரும் ஒவ்வொரு தடவையும் நீ நாடகம் நடிக்கத் தான் சரி என க‌ண்டிப்பார் ஆனாலும் அவர் அதனை ஒரு புன்முறுவலுடன் சிரித்தபடி அமருவார். அப்படியே பெரும்பாலும் அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லுவார்.

பாடசாலை நாட்களில் பட்டிமன்றங்களில் இவர் குரல் ஒலிக்கும் எங்களுக்கு பாடங்கள் போரடித்தால் இடைக்கிடை சென்று பார்ப்பது அப்படியே பொடியன் நல்லாப் பேசுகின்றான் என ஒரு கொமெண்ட் அடிப்பது இப்படித் தான் அவரின் அறிமுகம் கிடைத்தது.

உயர்தரம் முடிந்தபின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இறங்கிச் சிலநாட்களில் சக்தி வானொலியில் ஒரு பழகிய குரல். எங்கேயோ கேட்டகுரல் போல் இருக்கே எனப் பார்த்தால் நம்ம வாமலோஷனன் லோஷன் என்ற பெயருடன் தாயகத்திற்க்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் அவரின் வாழ்க்கை ஒலிபரப்பாளனாக அல்லது ஊடகவியளாளனாக மாறிவிட்டது. நானும் இன்னொரு பக்கம் போய்விட்டபடியால் தொடர்புகொள்ள முடியவில்லை. இடையிடயே தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் சில கம்பன்கழக நிகழ்வுகளிலும் கண்டு கதைத்தது மட்டும் தான்.

பின்னர் 2008 செப்டம்பரில் லோஷன் வலை எழுதவந்தபின்னர் அவரின் முதலாவது பதிவில் பின்னூட்டம் இட்டேன் ஆனாலும் அவரால் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு நான் யார் என அறிமுகம் செய்தபின்னர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.

பின்னர் முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது அவரைச் சந்தித்தவுடன் நான் கேட்ட கேள்வி " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்". இதன்பின்னர் மீண்டும் பதிவுகளினூடும் மின்னஞ்சல்களினூடும் தொடர்ந்தது எம் நட்பு.

கமல் , எஸ்பிபி , சுஜாதா கிரிக்கெட் எனப் பலவிடயங்கள் ஒரே அலைவரிசையில் இருவருக்கும் இருந்தாலும் கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. அத்துடன் கலாய்ப்பதும் கலாய்க்கபடுவதும் எமக்கு மிகவும் பிடித்தவை.

இன்றைக்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இனிய நண்பன் லோஷன் அண்ணாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.

சயந்தன்

ஆரம்பகால மூத்த‌ பதிவர், சாரலின் உரிமையாளர். இப்போது இலங்கைப் பதிவர்களின் அனைத்துலக சங்கத்தின் தலைவராக தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு பதிவுலகத்தை கூர்ந்து அவதானிக்கும் ஒருவர். நல்ல சிறுகதை எழுத்தாளர். இன்றைக்கு கூட முகநூலில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். நன்றாக நடனமாடக்கூடியவர் ஒருமுறை தன்னுடைய நடனம் ஒன்றை யூடூயூப்பில் இட்டு ட்விட்டரில் பகிர்ந்து அந்த ஒரு காணொளி மூலம் பல்லாயிரக்கணக்கான பிந்தொடர்பவர்களைப் பெற்றவர்.

தனது பிறந்தநாளுக்கு தன்னுடயகாதலி ஐபொட் பரிசாக தருவார் எனக் கனவு கண்டு அந்தக் கனவை இன்று நனவாக்க இருக்கின்றார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சயந்தன்.

கிருத்திகன்

வலையுலகில் கிடைத்த இன்னொரு நட்பு மற்றும் தம்பி மெய் சொல்லபோகின்றேன் வலையின் சொந்தக்காரர் கிருத்திகன். எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து இன்றைக்கு கனடாவில் குடியிருக்கும் கிருத்தியின் எழுத்துகள் மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக இவரின் கிரிக்கெட் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வேலைப்பழுக்களால் அண்மைக்காலமாக தனது எழுத்துகளை இவரும் குறைத்துக்கொண்டுள்ளார். அடிக்கடி சமூகத்தின் மீது தார்மீக கோபம் கொள்வது கிருத்திக்கு மிகவும் பிடித்த விடயம்.

நாளை(06.06.2011) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கிருத்திகன் எனச் செல்லமாக அழைக்கப்படும் கீத்திற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 01-06-2011

அரசியல்

இலங்கை அரசியல் ஐநாவின் அறிக்கையுடன் ஒருபக்கம் போக இன்னொரு பக்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா கெளத புத்தரின் வம்சாவழி என பிரபல சிங்களக் கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்த கருத்துக்கு சில சிங்கள ஆங்கில இணைய தளங்களில் பலத்த கண்டனம் எழுந்திருக்கின்றது.

ஜெக்சன் அண்டனியின் கருத்தின் பின்னால் பலமான அரசியல்தலைகள் இருப்பதுடன் இது ஏதோ ஒருவகையான பிரச்சார உத்தியோ என்ற சந்தேகமும் ஏனோ ஏற்படுகின்றது. பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாமே.

இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஜெ தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். பேயாட்சி முடிந்து இப்போ பிசாசு ஆட்சி தொடங்கியுள்ளது தமிழக மக்கள் தான் பாவம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தாய் மேல் சிபிஐ பொய் வழக்குப்போட்டு திகாரில் தள்ளிவிட்டது. கடந்தவருடம் செம்மொழியான தமிழ்மொழியாம் என கருணாநிதியின் புகழ்பரப்பிய மாநாட்டின் சுவடுகள் மறையும் முன்னர் கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் என சாதாரண பொதுமக்கள் பாடத்தொடங்கிவிட்டார்கள்.

கருணாநிதி வினைத்த வினைகளை அறுவடை செய்யத்தொடங்கிவிட்டார். வடிவேலுக்கு வடை மட்டுமல்ல வாய்ப்பும் போச்சே. சன் தொலைக்காட்சி ஜெயாபுகழைக் கொஞ்சம் கொஞ்சமாக பாடத்தொடங்குகின்றது. இனிமேல் கண்களும் பணிக்காது இதயமும் இனிக்காது.

விளையாட்டு

ஐபிஎல் திருவிழா முடிவடைந்துவிட்டது. சென்னை சூப்பர் சிங்கங்கள் மீண்டும் கோப்பையை வென்றுவிட்டார்கள். தோணிக்கு இனி வெல்லுவதற்க்கு எந்தக் கோப்பைகளும் இல்லை, ராசிக்கார கப்டன்.

நேற்று முந்தினம் வேல்ஸ் தலைநகர் கார்டிவ்வில் நடந்த இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக மழை தெரிவாகும் எனப் பார்த்தால், தில்ஷானின் புதிய வீரர்களோ இரண்டாவது இனிங்கிஸில் போனமச்சான் திரும்பிவந்தான் என்றதுபோல அணி நடை பயின்றார்கள். இங்கிலாந்துப் பத்திரிகைகளே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்துப் பத்திரிகைகள் பெரும்பாலும் தங்கள் அணியை மிக உயரத்தில் வைத்து அல்லது மிகவும் கீழே வைத்தே எழுதுவார்கள் ஒரு நாளும் நடுநிலையாக(மன்னிக்கவும் நடுநிலை என்பது பதிவுலகத்தில் கெட்டவார்த்தை)எழுதுவதில்லை.

அடுத்த போட்டி கிரிக்கெட்டின் மெக்காவான லோர்ட்ஸில் நடக்கவிருக்கின்றது. காலம் நேரம் கைகூடினால் மெக்காவைத் தரிசிக்கின்ற எண்ணமிருக்கின்றது,

சினிமா

அண்மைக்காலத்தில் பெரிதாக எந்தப் படமும் பார்க்கவில்லை, கோ மட்டும் ஓரளவு பிடித்திருக்கின்றது ஆனாலும் அயனில் இருந்த பரபரப்பான திரைக்கதை கோ ல் மிஸ்சிங். அஜ்மல் பாத்திரம் மூலம் படித்த இளைஞர் தலைவராக அரசியலுக்கு வந்தால் நக்சல்போல் தான் இருப்பார் என்ற நச்சுக் கருத்தை ஏன் கே,வி.ஆனந்த் விதைத்தார் என்ற மர்மம் புரியவில்லை. சாதாரணமாக பார்த்தால் நல்ல படம் வினவுக் கண்ணுடன் பார்த்தால் பல இடங்களில் முதலாளித்துவம் மின்னுகின்றது. பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சின்னத்திரை

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இம்முறை உலகளவில் என கனடா, சிங்கப்பூர், நோர்வே என சில நாடுகளில் இருந்து பங்குபெறும் சில வெளிநாட்டவர்களுடன் நடக்கின்றது. இலங்கை, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸீ எல்லாம் உலகத்தில் தமிழர்கள் வாழாத நாடுகளா? திவ்யா என்ற ஒரே ஒரு பாடல் பாடிய பிரபல பாடகி தமிழைக் கொல்வதுடம் மலையாளிகள் உன்னியுடனும் சுஜாதாவுடனும் மலையாளத்தில் கொஞ்சுவது ஏதோ கேரளா சேனல்கள் பார்ப்பது போல் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் சில நேரங்களில் தொகுத்து வழங்குவது அருமையாக இருக்கின்றது. அதிலும் சுஜாதா பேசும் தமிழுக்கு ஒரு எபிசோட் தேவை, எத்தனை நல்ல தமிழ்ப் பாடகர்கள் பாடகிகள் இருக்கும் போது தமிழ் ஒழுங்காக கதைக்கத் தெரியாத சுஜாதாவை வைத்திருப்பதன் மர்மம் என்னவோ?

இந்தவாரம் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான் அறிவிப்பாளர் நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார், வழக்கம் போல கோபி கலக்கல். நடுவராக நித்யஸ்ரீ கலந்துகொள்கின்றார் நித்யஸ்ரீயின் தமிழ் கேட்கும் போது இன்பத்தேன் பாய்கின்றது.

வலையுலகம்

சில காலமாக வலையுலகத்தில் விகடன், குமுதம் மலர்களில் வரும் கட்டுரைகளைச் சிலர் அப்படியே எடுத்து ஏதோ தாங்கள் எழுதியதுபோல் எழுதுவது வலைப்பதிவர்களுக்கு ஏற்படும் அவமானமாகவே நான் கருதுகின்றேன். உண்மைத் தமிழன் போல் சிலர் மட்டும் அடைப்புக்குள் அந்தப் பத்திரிகைகளுக்கு நன்றி சொல்கின்றார்கள். இதைவிட கேலிக்குரியது என்னவென்றால் அந்தப் பதிவை கொப்பி பேஸ்ட் செய்த பதிவரின் அபிமானிகள் அந்தக் கட்டுரையே அவரே எழுதியதுபோல் அவரைப் புகழச் செய்வதைப் பார்க்கும் போது பதிவை வாசிக்காமல் டெம்ளேட் புகழுரைபோல் தெரிகின்றது. ஆரோக்கியமாகச் செல்லும் வலையுலகத்தில் வேண்டாமே இந்த ஈயடிச்சான் காப்பி பதிவுகள். சிலவேளை இவைதான் கிரியேட்டிவ்வான பதிவுகளோ தெரியவில்லை.

என் உளறல்

மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் வலையுலகம், ஆனாலும் இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. ஆனாலும் இடைக்கிடை வலையுலகத்தை எட்டிப் பார்பேன். அதாவது இம்சை தொடரும். எத்தனையோ விடயங்கள் எழுதமுயற்சித்து இடைவெளியில் நிற்கின்றது.

படித்ததில் சிரித்தது

திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் வென்றிருக்கும் யுவராசா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

படித்ததில் ரசித்தது.

கடவுள் மனிதர்களை படைத்தான், மனிதன் இசையைப் படைத்தான், இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)

பார்த்ததில் ரசித்தது

இதுவும் இசைஞானியின் பாடல் தான். ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா ஜெயராம் அலைஸ் பாக்கியராஜின் நடனமும் கலக்கல். பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.