அம்புலிமாமா, கோகுலம், ராணி காமிக்ஸ் வாசிக்கும் காலத்தில்(கிட்டத்தட்ட 7 அல்லது 8 வயது என நினைக்கின்றேன்) நான் முதன் முதலில் படித்த நாவல் செங்கை ஆழியான் அவர்களின் முற்றத்து ஒற்றைப் பனை. அதன் பின்னர் அவரது நாவல்களை தேடி வாசிக்கத் தொடங்கினேன்.
அப்போது தான் ஒரு நாள் நம்ம ஊர் நூலகத்தில் சுஜாதாவின் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது, என்ன பெயர் என்பது மறந்துவிட்டது. முதலில் எனக்கு ஜெயின்(ஜயராஜ்) ஓவியமே புதிதாக இருந்தது. பின்னர் ஏதோ ஒரு உந்துதலில் அந்த நாவலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டில் பார்த்துவிட்டு உனக்கு சுஜாதாவின் நாவல்கள் பெரிதாக விளங்காது எதற்க்கும் வாசி என்றார்கள். உண்மைதான் அப்போது எனக்கு அவரது நாவல்களில் பல விளங்கவில்லை, காரணம் வயது.
பின்னர் பாடசாலைக் காலத்தில் நாம் சிலர் சுஜாதாவின் கதைகள் வாசிப்பதற்க்கு என்றே நூலகம் செல்வோம். கணேஷ்சும், வசந்தும் எம் ஹீரோக்கள் ஆனார்கள். என் இனிய இயந்திரா, பிரிவோம் சந்திப்போம், கனவுத் தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்பூ எல்லாம் மனப்பாடம் பண்ணுகின்ற அளவிற்கு வாசித்தோம்.
பின்னர் காலமாற்றங்கள் இடமாற்றங்களில் நூலகத்தை மறந்தாலும் சுஜாதாவை மறக்கவில்லை. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இருக்கும் அனைத்து சுஜாதாவின் புத்தகங்களும் வாசித்துள்ளேன். சிலவற்றை மீள் வாசிப்பு செய்வதுண்டு, அண்மையில் கூட இணையத்திலிருந்து இறக்கி "மெரினா" என்ற நாவலை வாசித்திருந்தேன்.
பின்னர் விகடனில் வெளிவந்த "கற்றதும் பெற்றதும்" ஜீனியரில் வெளிவந்த "ஏன் எதற்க்கு எப்படி" என இவரின் எழுத்துக்களின் வாசிப்பு தொடர்ந்துகொண்டே தானிருந்தது, விகடன் வாங்கியதும் முதலில் படிப்பது "கற்றதும் பெற்றதும்" தான்.
அதன் பின்னர் சுஜாதா கதை, வசனம் எழுதிய படங்களைப் பார்க்கத்தொடங்கினேன். சில நாட்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு கேடிவியில் "கரையெல்லாம் செண்பகப்பூ" படம் போட்டார்கள். முடியும் வரை பார்த்தேன். ஆனால் வாசிக்கும்போது இருந்த அந்த சுவை படத்தில் இருக்கவில்லை. இதே நிலைதான் இவரின் "விக்ரம்", "ப்ரியா" போன்ற படங்களுக்கும். நேற்றுக்கூட கேடிவியில் "விசில்" படத்தில் இவரது எழுத்துக்களை பார்க்ககூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
இவரின் "ஒரு லட்சம் புத்தகங்கள்" என்ற சிறுகதையை நான் இதுவரை வாசிக்கவில்லை. இந்த சிறுகதை யாழ்ப்பாணம் நூலகம் எரிப்புச் சம்பவத்தைப் பற்றிய சிறுகதை. எத்தனையோ இடத்தில் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை.
அத்துடன் காந்தளுர் வசந்தகுமாரன் கதை, அதன் இரண்டாம் பாகம் விரைவில் எழுதப்போகின்றேன் என்றவர் அதனை எழுதாமலே சென்றுவிட்டார்.
இவர் ஷங்கருடன் சேர்ந்த படங்களில் இவரின் வசனங்கள் இளமையாக இருப்பதைப் பார்த்து அதிசயப்பட்டிருக்கின்றேன்.
பொறியியளாளர், எழுத்தாளர், வ்சனகர்த்தா, எனப் பல்முகத் திறமையுடைவர் ஒருவரின் இழப்பு தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த பேரிழப்பாகும்.
எல்லாம் வல்ல ஸ்ரீ ரங்கப் பெருமாளின் பாதகமலத்தில் இவரும் சென்றடைந்துவிட்டார்.
சுஜாதா சில நினைவுகள்
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா மறைவு.
பிரபல எழுத்தாளர் சுஜாதா காலமாகிவிட்டார். மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சன் நியூஸில் செய்தி போடுகிறார்கள்.
அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சுஜாதா
அஞ்சாதே - ஆச்சரியம்
நீண்ட நாட்களின் பின்னர் திரையில் ஒரு சிறந்த படம் பார்த்தேன். வலையுலக நண்பர்களின் சீரிய விமர்சனங்களால் பொங்கல் படங்களை திரையில் பாராததாலும் அஞ்சாதே படத்தைப் பற்றிப் பலரும் நன்றகாச் சொல்வதாலும் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் பார்க்கமுடிந்தது.
சினிசிட்டியில் பில்லா, காளை, பீமா மற்றும் அஞ்சாதே ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பீமாவுக்கும் காளைக்கும் மக்கள் இல்லையென்பதால் இன்று திரையிடவில்லை என்றார்கள்.பில்லா இன்னமும் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் கதை இத்துடன் போதும்.
அஞ்சாதே பற்றிய கதை அனைவருக்கும் தெரிந்திருக்கம் எத்தனையோ பேர் எழுதியதால் அதனை எழுதவிரும்பவில்லை. இந்தப்படத்தில் மனதைத் தொட்ட விடய்ங்களை மட்டும் பார்ப்போம்.
1. பாண்டியராஜன் :
இதுவரை சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், நல்ல நகைச்சுவை நடிகராகவும் இருந்தவர் முதன் முறையாக வில்லன் பாத்திரம் செய்திருக்கிறார். ஏனைய வில்லன்கள் போல் காட்டுக்கத்தல் கத்தாமல் சைலண்டாக தன் வெள்ளை வேட்டி சட்டையுடன் இவர் செய்யும் வில்லத்தனங்கள் இவருக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது. அதிலும் " என்னை மீண்டும் வெள்ளை சட்டைப்போட வைக்காதீர்களாடா" என இவர் புலம்பும் போது பழைய பாண்டியராஜனாக இருக்கிறார். அந்தத் திருட்டுமுழியை இந்தப் படத்தில் காணமுடியவில்லை.
2. பிரசன்னா:
சாக்லேட் பையனாக அழகியதீயே, 5 ஸ்டார், படங்களில் பார்த்த பிரசன்னாவா இவர் என ஆச்சரியப்படவைக்கிறார். கொஞ்சம் கவனம் சிதறினால் கூட "காக்க காக்க" ஜீவனின் அல்லது "வேட்டையாடு விளையாடு" டேனியல் பாலஜியின் சாயல் கிடைத்திருக்கும் ஆனாலும் அவற்றைத் தவிர்த்து புதுப்பாணியில் இவர் செய்திருக்கும் வில்லத்தனம் தமிழ் சினிமாவிற்க்கு இன்னொரு நல்ல நடிகரை தந்திருக்கிறது. நீண்ட தலை முடி குர்த்தா என்பன தமிழ் சினிமாவிற்க்கு புதிதல்ல என்றாலும் இந்த கெட்டப்புடன் பிரசன்னாகாட்டும் சில நளினங்கள் புதிது. அத்துடன் இவர் அடிக்கடி கையைத் திருப்பி மணிபார்ப்பார் அது புதுசு கண்ணா புதுசு. நாலு படம் நடித்து முடிந்தவுடன் வில்லனாகவோ இரண்டு கதானாயகர்கள் கதை என்றால் ஓடி ஒளிகின்ற சில ஹீரோக்கள் மத்தியில் பிரசன்னா விதிவிலக்கு.
3. விஜயலட்சுமி :
சென்னை 28ல் ஒரே ஒரு வசனம் பேசி "யாரோ யாருக்குள் யாரோ என" டூயட் பாடிய பொண்ணு. அச்சுஅசல் காலனியில் வசிக்கும் பொண்ணாகவே வாழ்ன்திருக்கிறார். சத்யா( நரேன்) நல்லவன் என தன் அண்ணனிடம்(கிருபா) சொல்லும் காட்சிகளிலும் கிளைமாக்ஸ்சிலும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். டூயட்பாடலில் மட்டும் சினிமாத்தனம் அவரது மேக்கப்பில் தெரிகின்றது. ஆனாலும் தமிழ் சினிமாவில் ஸ்ரேயா, நயன்தாரா நமீதாக்களுடன் போட்டி போட இவரால் முடியாது. காரணம் இவர் தமிழ்ப் பெண்.
4. நரேன் :
படத்தின் கதாநாயகன் இவர் என்றாலும் பிரசன்னா, பாண்டியராஜன் மற்றும் அஜ்மல் மூவரும் இவரைவிட அதிகம் ஸ்கோர் செய்தபடியால் இந்திய அணியில் சச்சினின் நிலைதான் இவருக்கு, ஆனாலும் கிடைத்த சில இடங்களில் சிக்ஸ்சர் அடித்துப் பட்டையைக்கிளப்பியிருக்கிறார். குறிப்பாக ரெள்டியாக இருந்து சப் இன்பெக்ஸ்டராக மாறும் சில காட்சிகளிலும், ரோட்டோரம் ஒருவர் வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் செய்வதறியாது ஓடித்திரியும் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
5. அஜ்மல் :
அறிமுக நடிகர் என்றாலும் எந்தவித பதட்டமுமின்றி அற்புதமாக நடித்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் ஒரு ஹீரோ லுக் தெரிந்தாலும் பிரசன்னாவுடன் சேர்ந்த பின்னர் தாடியுடன் தன் சோகத்தை பிரதிபலித்தபடியே இருக்கிறார். அத்துடன் ஐஜின் பிள்ளைகளுக்கு உதவும் காட்சிகளில் ஒரு நியமான சகோதரனாகவே மாறிவிடுகின்றார். சூழ்நிலை ஒருவனை எப்படிக் குற்றவாளி ஆக்குகிறது என்றதற்க்கு சிறந்த உதாரண பாத்திரம்.
6. பொண்வண்ணன் :
அண்ணாமலை சீரியலில் கோமதிநாயமாக வந்து அலப்பறை பண்ணிய பொண்வண்ணனா இவர்? தன் பாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். தமிழ்சினிமா ஏன் இவரை இன்னமும் நன்றாக பயன்படுத்தவில்லை என்பது புரியவில்லை. போலிஸ்காரரான இவர் என்த இடத்திலும் யூனிபோர்மில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7. ஒளிப்பதிவு மகேஷ் முத்துச்சாமி:
ஆரம்பகாட்சியிலையே தரையிலிருந்து வானத்தைக் காட்டுவதிலையே தெரிந்துவிட்டது இது ஒரு வித்தியாசமான ஒளிப்பதிவாக இருக்கும் என்று. காட்சிக்கு காட்சி வியப்பை அளிக்கின்றார். ஆனால் சில இடங்களில் கமேரா அசையாமல் ஸ்டில் கமேராபோல் நிற்பது ஏன் எனப் புரியவில்லை. குறிப்பாக கிளைமேக்ஸ் கரும்புத்தோட்டக்காட்சிகளை வர்ணிக்கவார்த்தைகள் இல்லை. நிச்சயமாக அது ஒரு விசுவல் ட்ரீமெண்ட்தான். அஜ்மலும் விஜயலட்சுமியும் க்டைசியாகப்பேசும் காட்சியை ஏரியல் வீயூவில் எப்படித்தான் எடுத்தாரோ தெரியவில்லை காரணம் அது ஒரு குன்றின்மேல் நடக்கும் காட்சி. பிசிஸ்ரீராம், ரவி கே சந்திரன், ஜீவா, சந்தோஷ் சிவன் வரிசையில் அடுத்த ஒளிப்பதிவாளர்.
9. இசை சுந்தர் சி.பாபு :
படத்தில் மொத்தமாக மூன்றே மூன்று பாடல்கள் தான். அதிலும் "கண்ணதாசன் காரைக்குடி" பாடலும் "கத்தாழைக் கண்ணாலே" பாடலும் ரசிகர்களை கவர்ந்தாலும் டூயட் பாடல் இடைச் செருகல்போல் இருக்கின்றது. பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிப்பின்னணி அட்டகாசம். பல இடங்களில் வீணையைப் பயன்படுத்தியிருப்பது பிளஸ் பாயிண்ட்.
10. எழுத்தும் இயக்கமும் மிஷ்கின் :
சித்திரம் பேசுதடி சினிமாமூலம் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் உச்சத்திற்க்குப் போயிருக்கின்றார். எத்தனையோ போலிஸ் கதைகள் வந்தாலும் இதனை வித்தியாசமாக காட்டியிருக்கிறார். இளம் பெண் கடத்தல்களும் கொலைகளும் மன்மதன்களும் வல்லவன்களும் செய்திருந்தாலும் எந்த ஒரு காட்சியிலும் அவற்றைக் காட்டாமல் மறைத்திருப்பது சாமர்த்தியம். இதனால்தானோ என்னவோ இந்தப் படத்திற்க்கு" U" சேர்டிபிக்கேட் கிடைத்திருக்கிறது. மிஷ்கினின் அடுத்த படத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
மொத்தத்தில் "அஞ்சாதே" பார்ப்பவர்களை மட்டுமல்ல, பேரரசு, ஹரி, பி.வாசு போன்ற இயக்குனர்களிடமிருந்து தமிழ்சினிமாவைக் காக்க அமீர்,பாலா, பாலாஜி சக்திவேல் வரிசையில் இன்னொருவர் இருக்கிறார் நீங்கள் அஞ்சவேண்டாம் என்கிறது.
சில கேள்விகள்:
1. ஒரு சில நடிகர்களின் படத்திற்க்கு ஊடகங்கள் கொடுக்கும் பில்டப்புக்களுக்கு மத்தியில் ஏன் இப்படியான நல்ல படங்களுக்கு பக்கங்கள் ஒதுக்குவதில்லை. ஒரு நடிகர் தும்புகிறார் இருமுகிறார் எனச் செய்திபோடும் ஊடகங்கள் மிஷ்கினையோ, பிரசன்னாவையோ பாராட்டுவதில்லை?
2. அடுத்து டாப் டென்களில் பழனிக்கும் காளைக்கும் கொடுக்கும் மதிப்பு ஏன் இப்படியான படங்களுக்கு கொடுப்பதில்லை? அவர்கள் வசூலைப் பார்த்தாலும் பீமா, காளை எல்லாம் வசூல் கூட இல்லை என தகவல்.
படத்தில் சில நெருடுகள் இருந்தாலும் நல்ல விருந்தில் சோற்றில் உள்ள சில கற்களை எடுத்து எறிந்துவிட்டுச் சாப்பிடுவதுபோல் அவற்றை புறக்கணிக்கலாம்.
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அஞ்சாதே, நரேன், பாண்டியராஜன், பிரசன்னா, மிஷ்கின்
ஸ்ரேயா விவேக்
என்ன பேசியிருப்பார்கள்?
சிவாஜி வெற்றி விழாவில் ஸ்ரேயாவும் விவேக்கும் இருக்கும் காட்சி இது இவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள்.
உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள்.
மிட் வீக் லொள்ளு
எழுதியது வந்தியத்தேவன் at 5 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் மிட் வீக் லொள்ளு, விவேக், ஸ்ரேயா
கணணிப் பொறியியளாளர்களின் கனவுக் கன்னி
கணணிப் பொறியியளாளர்களின் கனவுக் கன்னி
கீழே உள்ள படங்களில் இருப்பவர் யார் எனத் தெரியுமா? கணணி உலகில் மிதப்பவர்களுக்கு இவர் கனவுக் கன்னி ஆவார். கண்டுபிடியுங்கள். விடை 24 மணி நேரத்தின் பின்னர் வெளியிடப்படும்.
எழுதியது வந்தியத்தேவன் at 14 கருத்துக் கூறியவர்கள்
பழனிக்குப் போன பழனியாண்டவர்
பழனி மலை அடிவாராத்தில் நம்ம முருகப்பெருமான் டைட்டான ஜீன்ஸ் "யாமிருக்க பயமேன்" என பொறித்த ரீசேர்ட் என மார்டனாக இருக்கிறார். அப்போது " நாராயண நாராயண " என்ற கோஷத்துடன் வருகிறார் நாரதர்.
முருகன்: வாருங்கள் நாரதரே வாருங்கள், எப்படி நலம்?
நாரதர் : வணக்கம் முருகா ஏதோ உன் புண்ணியத்தில் நான் நலமாக இருக்கிறேன். ஆமா உன் கோவணம் எங்கே? ஆண்டிக்கோலத்தில் இருக்கும் நீ இதென்ன தசாவதாரம் கமல் போல கெட்டப் மாற்றி இருக்கிறாய்?
முருகன் : (சலிப்புடன்) என்னத்தைச் சொல்ல நாரதரே நேற்று நானே எனக்கு சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டேன்.
நாரதர்: என்ன சொந்தச் செலவில் சூனியமா? கொஞ்சம் தெளிவாக சொல்லப்பா?
முருகன் : பழனி என்ற திரைப்படம் பார்த்தேன் நாரதரே, வாழ்க்கையே வெறுத்து மீண்டும் மலைக்கு செல்லலாம் என முடிவெடுத்தேன் ஆனால் அதையும் கைவிட்டுவிட்டேன்.
நாரதர்: ஏன் இளவளே கைவிட்டீர்கள்?
முருகன்: முன்பென்றால் கேபிசுந்தராம்பாள் அழகாகப் பாடி என்னைத் திரும்ப வீட்டுக்கு அழைத்துவருவார். இன்றோ பரவை முனியம்மா குத்துப்பாட்டுப்பாடி என்னை அங்கிருந்தும் அனுப்பிவிடுவார்.
நாரதர்: ம் என்ன செய்வது பழனி படக்கதையைச் சொல்லுங்கள்.
முருகன்: அந்தக் கொடுமையைச் சொல்கிறேன். முதல் காட்சியே சிறையில் தொடங்குகின்றது யாரோ ஒரு ரவுடி பயங்கரமாச் சத்தம் போட்டபடி எல்லோரையும் திட்டுகிறான். அப்போதான் நம்ம ஹீரோ பரத் கிராபிக்ஸ் துணையுடன் அறிமுகமாகின்றார். உடனே அந்த ரவுடியுடன் காது கிழியும் சத்தத்தில் சண்டை. சண்டை முடிந்ததும் ஜெயிலில் பாட்டு ஒன்று.
நாரதர்: இது வழக்கமாக எல்லா சினிமாவிலும் வாறதானே இதில் என்ன வித்தியாசம்?
முருகன் : வித்தியாசம் இருக்கு நாரதரே ஒன்றல்ல இரண்டு.
நாரதர்: இரண்டா?
முருகன் : முதலாவது சிறையில் கைதிஉடைகளுடன் மேல்மருவத்தூர் சிவப்பு கலருடன் சிலர் கூட ஆடுகின்றனர் அவர்கள் யாராயிருக்கும் என என் மண்டையைக் குடைந்து ஒன்றும் தோன்றவில்லை.
நாரதர்: சிலவேளை அவர்கள் போலிச்சாமியார்களாக இருக்கும் நாட்டில் இப்போ அவர்களின் ஆட்டம் அதிகம்தானே.
முருகன் : அட ஆமாம் இந்த சிந்தனை எனக்கு வரவில்லையே. பரவாயில்லை நாரதரே உனக்கும் சிந்திக்கும் ஆற்றல் இருக்கு,
முருகன் : அடுத்தது பாடலில் இடையிடையே பிட்டு பிட்டாக
நாரதர் : (இடைமறித்து) என்ன பிட்டுப்படமும் போடுகிறாகளா?
முருகன் : அவசரப்படாதீர்கள் நாரதரே பிட்டுப்படமல்ல பிட்டுபிட்டாக, சூப்பர் ஸ்ராரின் ஒரு பாடல் காட்சி, இளையதளபதியின் ஒரு பாடல் காட்சி , நம்ம தலயின் ஒரு பாடல் காட்சி என போட்டு பரத்துக்கு பில்டப்பை ஏத்துகிறார்கள்.
நாரதர் : அதென்ன தலக்கு மட்டும் நம்ம தல.
முருகன் : பில்லா ப்டத்தில் நம்மைப் பற்றி ஒரு பாடல் பாடுகிறார் அந்த அன்பில்தான் நம்ம தல என்றேன்.
நாரதர்: அப்போ வெகுவிரைவில் பரத்தும் சூப்பர் ஸ்ரார் நாற்காலிக்கு நானும் போட்டி போடுகின்றேன் என பேட்டி கொடுப்பார். என்ன கொடுகை சரவணா.
முருகன்: இருக்கலாம், சின்னத் தளபதி என டைட்டில் கார்ட்டில் போடுகிறார்கள்.
நாரதர் : கதையைச் சொல்லுங்கள்.
முருகன் : கதையா? இருந்தால் தானே சொல்ல, எல்லாம் பழைய பாசமலர்க் கதைதான். ஒரு எஸ் எம் எஸ் சில் அனுப்பக்கூடிய கதை.
நாரதர் : என்ன எஸ் எம் எஸ்ல கதையா?
முருகன் : எத்தனை நாளைக்குத்தான் பஸ் டிக்கெட்டில் கதை எழுதுகிறது எனச் சொல்கிறது.
நாரதர் : ஹீரோயின் எப்படி?
முருகன் : யாரோ புதுமுகமாம். வாறார் பரத்துடன் சண்டை போடுகிறார்,பரத்தை லவ்பண்ணுகிறார் டூயட்பாடுகிறார் அவ்வளவுதான்.
நாரதர் : புதுமுகமா? நான் நமீதாவோ நயந்தாராவோ என நினைத்தேன்.
முருகன் : நீங்கள் வேற நாரதரே நயந்தாரா என்றால் இன்னொரு முறை படம் பார்கலாம். பில்லாவில் என்னுடைய துண்டை இரண்டாக்கி ஒரு உடையில் வருவார் பாருங்கள். நம்ம ரம்பை, ஊர்வசி எல்லாம் தோத்துப்போவார்கள்.
நாரதர்: முருகா நீயா இப்படிக் கதைப்பது?
முருகன்: என்ன செய்வது நாரதரே. இரண்டு கண் உடைய மானிடனே ஜொள்ளு விடும்போது 12 கண்ணுடைய நான் எப்படி ஜொள்ளுவிடாமல் இருப்பது.
நாரதர் : பாடல்கள் எப்படி?
முருகன் : தேனிசைத் தென்றல் தேவாவின் மகன் தான் இசை. தேவா காப்பி இராகத்தில் நல்ல பாடல்கள் பல அமைத்திருந்தார். மகனோ இசை அமைக்கும் முன்னர் வெண்கலக் கடைக்குள் சென்றுவந்திருப்பார்போலிருக்கு. நாரதர் : இருக்கும் இருக்கும் அவரே யானைபோல உருவம் உடையவர்தானே. வேறை என்ன விசேடமாக இருக்கிறது.
முருகன் : இயக்குனர் பேரரசு போலிஸாக வருகிறார் அவரின் பெயர் திருத்தணி. வரும்போது பில்டப்பும் டயலாக்கும் என மக்களை கொடுமைப்படுத்துகிறார்.
நாரதர் : ஐயோ கொடுமை கொடுமை என்ன செய்வது நாம் செய்த பாவம் இவர்களின் இயக்கத்தில் படம் பார்க்கவேண்டியது.
முருகன் : நாரதரே உங்களுக்கு தற்கால அரசியல் தெரியும் என நினைக்கின்றேன் எனக்கு ஒரு சந்தேகம் தீர்ப்பீர்களா?
நாரதர் : என்ன சந்தேகம் குமரா? தோழர் திருமாதான் டாக் ஆவ் த டவுன்.
முருகன் : போடா, தடா போல அறுவை சினிமா எடுக்கும் இயக்குனர்களை உள்ளே தள்ள வழி இருக்கிறதா?
நாரதர் : கலைஞர் இப்போதான் புதிய சட்டம் ஒன்று இயற்ற ஆலோசனை செய்கிறார் அத்துடன் இதற்க்கும் ஒரு முடுவெடுத்தால் தமிழ் சினிமா வளம் பெறும்.
முருகன் : அவர் நினைத்தால் என்னவும் செய்யலாம்.
நாரதர் : குமரா நீ என் எப்படி மேல் நாட்டுக் கலாச்சாரத்துடன் இருக்கிறாய்.
முருகன்: அதுவா? பழனி படம் பார்த்து பலருக்கு டவுசர் கிழிந்துபோய்விட்டது, நானோ கோவணத்துடன் போனவன். கட்டியிருந்த கோவணமும் கிழிந்துபோய்விட்டது. வரும் வழியில் சரவணாஸ் ஸ்ரோரில் சினேகா எடுத்துக்கோ எடுத்துக்கோ என்றா அதுதான் இந்த உடையை சுட்டுக்கொண்டுவந்துவிட்டேன்.
நாரதர்: முருகா, எத்தனையோ பேரை உன் அப்பன் சோதனை செய்து அருள் வழங்குவார் ஆனால் உனக்கு ஏற்பட்ட சோதனைக்கு என்ன செய்வதோ.
முருகன் : என்ன செய்வது நாரதரே எல்லாம் என் விதி. என் ஊர்ப் பெயரில் படம் என பார்க்கப்போனது என் தலை எழுத்து.
நாரதர் : பேரரசின் அடுத்த படத்தின் தலைப்பைக் கேட்டால் நீ மறுபடியும் ஓடிவிடுவாய்.
முருகன் : என்ன அப்படியா?
நாரதர் : பேரரசுவின் அடுத்த படம் "கீழ்ப்பாக்கம்"
போட்டிருந்த ஜீன்சையும் ரீசேர்ட்டையும் கழட்டி எடுத்தார் ஓட்டம் முருகப்பெருமான்.
டிஸ்கி : நேற்றிரவு சீடியில் பழனி பார்த்தவிளைவுதான் இந்தப் பதிவு, மொக்கை மொக்கையைத் தவிர வேறில்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
மும்முனைத் தாக்குதல்
ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சிபி(கொமன்வெல்த் பாங்க்) தொடர் நாளை பிரிஸ்பேனில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஆரம்பமாகின்றது. உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை, 20க்கு20 சாம்பியன் இந்தியா என மூன்று பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு குறைவில்லாமல் இருக்கும்.
1979 களில் ஆரம்பமான இத்தொடர் (காலத்துக்கு காலம் பெயர் மட்டும் மாறியிருக்கின்றது) முதற்தொடரில் அக்காலத்தில் பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, மற்றும் ஆஸி அணிகள் மோதின. மேற்கிந்திய சாம்பியன் ஆனது. இதுவரை 6 தடவைகள் மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது.
ஆஸி அணி இரண்டாவது தொடரில்(1980 1981) முதன் முறை சாம்பியனானது. இதுவரை 18 தடவை சாம்பியாகி இத்தொடரில் தங்களது ஆதிக்கத்தை என்றும் நிலைனாட்டிவருகின்றார்கள். 5 தடவை இத்தொடரில் விளையாடிய இந்தியாவும் 7 தடவை விளையாடிய இலங்கையும் ஒரு தடவை கூட சாம்பியன் ஆகவில்லை. 1996 97களில் விளையாடிய பாகிஸ்தான் அந்த வருடம் சாம்பியனாகிய ஒரே ஒரு ஆசிய அணியாகும். தவிர தென்ஆபிரிக்கா ஒரு தடவையும் கடந்தவருடம் நடந்தபோட்டியுடன் சேர்த்து இங்கிலாந்து இரண்டு தடவையும் சாம்பியனானது.
மூன்று அணிகளின் பலம் பலவீனத்தைப் பார்ப்போம்.
ஆஸ்திரேலியா
ஆஸியைப் பொறுத்தவரை பொண்டிங் தலைமையில் அனுபவவீரர்கள் பலருடன் சில இளம் வீரர்களையும் கொண்டிருக்கிறது. துடுப்பாட்டத்தில் ஹைடன், கிளார்க், பாண்டிங், அதிரடி கில்கிறிஸ்ட்(இவரது இறுதித் தொடர்),சைமண்ட்ஸ், மைக் ஹசே என அதிக பலத்துடன் காணப்படுகின்றது. பந்துவீச்சில் வேகங்கள் பிரட் லீ, ஜோன்சன்,பிராக்கனுடன் சுழலில் பிரட் ஹக்கும் பகுதி நேரத்தில் சைமண்ட்ஸ்,ஸ்ருவர்ட் கிளார்க், ஹோப்ஸ் என பலத்துடனே காணப்படுகின்றது.
பலம்:
1. சொந்த மண், பழகிய காலநிலை.
2. துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை என சகலதிலும் திறமையான வீரர்கள்.
3. உலகச் சாம்பியன்.
பலவீனம் :
1. வீரர்களின் வாய்ப்பேச்சுகளும், மைதானத்தில் ஒழுங்கீனமாக நடத்தல்.
இந்தியா:
முதன் முறையாக டோணி தலைமையில் இளம் இரத்தங்கள் பங்குகொள்ளும் போட்டி. சச்சின், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் தவிர்ந்த அனைவரும் 100 போட்டிகளுக்கு குறைவாக விளையாடியவர்கள். துடுப்பாட்டத்தில் சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ், உத்தப்பா, டோணி எனப் பலர். சகல துறையில் பதான். பந்துவீச்சில் வேகங்கள் பதான். ஸ்ரீ சாந், முனாப் பட்டேல், இசாந் சர்மா, பிரவீன் குமார் என நீளும் வரிசை. சுழலில் ஹர்பஜன், பியூஸ் சாவ்லா, மனோஜ் திவாரி ஆகியோருடன் பகுதி நேரமாக சேவாக், சச்சின், யுவராஜ் ரெய்னா போன்றோரும் மிரட்டத் தயாராக உள்ளனர்.
பலம்:
1. இளம் கன்று பயமறியாது இளம் வீரர்கள். இதுவே முக்கிய பலவீனமாகும்.
2. சச்சின், சச்சின், சச்சின்.
பலவீனம்:
1. இளம்வீரர்கள் என்பதால் போதிய அனுபவம் இல்லாமை.
2. தடுமாறும் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள்.
இலங்கை:
அடுத்து மஹேல ஜெயவர்த்தனவின் தலைமையிலான இலங்கை அணியை எடுத்துக்கொண்டால். இறுதியாக இங்கிலாந்துடனான ஒரு நாள்போட்டியில் சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்த கவலையுடன் இருக்கும் அணி. ஜெயசூரியா, தரங்கா, சங்ககாரா, தில்ஷான், ஜெயவர்த்தன, மஹுரூப் என அதிரடியாக மிரட்டும் வீரர்கள். பந்துவீச்சில் வாஸ், மாலிங்கா போன்ற வேகங்களுடன் சுழல் மாயவித்தை மன்னன் முரளி.
பலம்:
1. போராட்டகுணம்.
2. பலமான மத்திய தரவரிசை.
பலவீனம்:
1. அண்மைக்காலமாக சமிந்த வாஸின் பந்துவீச்சு எடுபடாமை,
2. ஜெயவர்த்தனவின் துடுப்பாட்டம் சமீபகாலமாக சோபிக்காமை.
பொறுத்திருந்துபார்ப்போம் வெல்லப்போவது மீண்டும் ஆஸியா? அல்லது முதன் முறையாக இந்தியா அல்லது இலங்கையா?
எழுதியது வந்தியத்தேவன் at 0 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, சிபிதொடர்
வீழ்ந்தது இந்தியா
இன்று மெல்பேர்னில் நடைபெற்ற 20க்கு 20 போட்டியில் உலக சாம்பியன் இந்தியாவை மிக இலகுவாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு கால்கோளாக இன்றைய 20க்கு 20 போட்டி அமைந்துள்ளது.
சீனியர்கள் (ஹர்பயன் சிங் தவிரகாயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய போட்டியில் விளையாடவில்லை)யாருமற்ற நிலையில் இளம் வீரர்களுடன் (பலர் 20க்கு 20 போட்டியில் விளையாடியவர்கள்) களம் புகுந்த இந்தியா நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட விரும்பியது. தற்போது அவ்வளவு ஃபார்மில் இல்லாத சேவக்கும் கம்பீரும் களம் புகுந்தனர். முதலாவது ஓவரிலேயே தேவையற்ற ஓட்டம் ஒன்றை எடுப்பதற்க்காக ஓடி சேவாக் ரன் அவுட் முறையில் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். என்ன காரணத்துக்காக இந்திய கிரிக்கெட் சபை இவரைத் திரும்ப திரும்ப ஆட்டத்தில் சேர்க்கிறார்களோ வெங்சகாருக்குத்தான் வெளிச்சம்.
அடுத்த பிராக்கனின் ஓவரில் கம்பீரும் 9 ஓட்டங்களுடன் ஹோப்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஸ் கார்த்திக்கும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார் பின்னர் மூன்றாவது ஓவரில் பிரட் லீயின் பந்தில் போல்ட்டாகி 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். நான்காவது ஓவரில் உத்தப்பா ஒரு ஓட்டம் போதும் என்ற மனநிலையில் பிராக்கனின் பந்துவீச்சில் டேவிட் ஹசியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 4 ஓவரில் இந்தியா எடுத்த மொத்த ஓட்ட எண்ணிக்கை 20.
பின்னர் ரோகித் சர்மாவும் அணியின் தலைவர் டோணியும் சிறிது நேரம் (3 ஓவர்கள்) விளையாடினார்கள். ஏழாவது ஓவரில் ரோகித் சர்மா 8 ஓட்டங்களுடன் ஹாப்சின் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். டோணியுடன் இணை சேர்ந்த பதான் கொஞ்சம் அடித்து ஆடத்தொடங்க அதுவரை டெஸ்ட் மேட் ஆடிய டோணி 9ஓட்டங்களுடன் டேவிட் ஹசியின் பந்துவீச்சில் லீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். டோணி இன்னமும் டெஸ்ட் மேட்ச் மனநிலையில் இருந்து திரும்பவில்லை போல் தெரிகின்றது. டோணி எதிர்கொண்ட பந்துகளின் எண்ணீக்கை 27 எடுத்த ஓட்டங்கள் வெறும் 9 தான்.
அதன் பின்னர் ஆடவந்த பிரவீன் குமார் என்ற அறிமுக வீரரும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க. சர்ச்சை நாயகன் ஹர்பஜன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் ஹர்பஜனும் சைமன்ட்ஸ்சும் அருகருகில் சந்தித்தார்கள் ஆனால் எந்தவிதமான சர்ச்சைகளும் ஏற்படவில்லை. சைமண்ட்ஸ் தனது பொக்கட்டில் ரெக்கோடர் ஒன்று வைத்திருந்தார். ஹர்பயன் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணியினருக்கு தன்னைக் கண்டாலே பயம் என அறிக்கை விட்ட ஸ்ரீ சாந் வந்தார் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சென்றுவிட்டார். ஹர்பயன் ஸ்ரீ சாந் இருவரும் வோஜசின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இறுதியாக பதான் மீண்டும் பிராக்கனின் பந்து வீச்சில் கில்கிறிஸ்டிடம் பிடிகொடுத்து 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இந்திய அணியில் பதான் மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி மொத்தமாக 74 ஓட்டங்களுக்கு 17.3 ஒவரில் ஆட்டமிழந்தது. கென்யா அணி கடந்த வருட 20 க்கு 20 உலக கிண்ணப்போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக எடுத்த 73 ஓட்டங்கள்தான் அதிகுறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை. அதனை ஒரு ஓட்டத்தால் தாண்டி இந்தச் சாதனையை முறியடிக்க பதானின் துடுப்பாட்டம் விடவில்லை. இல்லையென்றால் இச் சாதனை இந்தியாவிற்க்கு கிடைத்திருக்கும்
ஆரம்பவீரர்களான கில்கிறிஸ்டும் தலைவர் கிளார்க்கும் இந்த இலக்கை இலகுவில் எட்டிவிடுவார்கள் எனப் பலர் நினைத்தபோதும் புதுமுக வீரர் பிரவீன் குமாரின் பந்துவீச்சில் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த கில்லி அடுத்த பந்தில் கம்பீரிடம் பிடிகொடுத்து 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கிளார்க் கொடுத்த இலகுவான ஒரு பிடியை ஹர்பஜனும் பதானும் தம்மிடையே எந்த பேச்சுவார்த்தையும் இன்றி ஒருவரும் ஒருவருடன் மோதித் தவறவிட்டுவிட்டார்கள். 11.2 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டநாயகன் விருது ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் சேவாக்கை ரன் அவுட்டாக்கியதும் திறம் பட அணியை வழி நடத்திய கிளார்க்குக்கு கிடைத்து.
இந்தியாவின் தவறுகள்:
1. இதுவரை(இந்தப்போட்டி தவிர) 2 தடவை ஆஸியுடன் 20க்கு 20 போட்டியில் மோதி இரண்டுத்டவையும் வெற்றி பெற்றதனால் எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்ற தலைக்கனம்.
2. சச்சினை சும்மா வைத்திருந்தது.
3. வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்.
4. இளம் வீரர்களால் எதனையும்சாதிக்க முடியும் என்ற இறுமாப்பு. ஆஸியில் பல அனுபவ வீரர்கள் விளையாடினார்கள்.
5. டோணியின் சவடால் பேச்சு. இந்த ஆட்டத்திற்க்கு முன்னர் இந்தப் போட்டி ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரு பயிற்சிப்போட்டியாக அமையும் எனக் கூறியது.
பொறுத்திருந்துபார்ப்போம் ஒரு நாள் போட்டிகளில் டோணியின் இளமை அணி என்ன செய்யப்போகின்றது என்பதை.
எழுதியது வந்தியத்தேவன் at 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, கிளார்க், டோணி