கொதிக்கும் மலேசிய தமிழர்கள்!
கலை இரவுக்கு கிளம்பும் கோலிவுட்...
‘மனுஷங்களா நீங்க?!’
பறிக்கப்பட்டு வரும் தங்கள் அடிப்படை உரிமைகளை மீட்க, நவம்பர் 25&ம் தேதி அமைதியான முறையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை மலேசிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிய அராஜகத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட பலர் இன்று மலேசிய சிறையில்! இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்குப் பிறகு சர்வதேச அரங்கில் மலேசிய தமிழர்களின் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்து, புதியதோர் இன உரிமைப் போராட் டத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
தமிழக அரசு, இந்திய அரசு தவிர அமெரிக்கா உட்பட உலக நாடுகள் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித் திருக்கின்றன. ஆனாலும், எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் மலேசியாவின் திக்திக் நிலவரம்.
இப்படியரு சூழலில், மலேசிய தமிழர்கள் முன்பு கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் வரும் வருவாயை தங்கள் சங்கத்தின் நலனுக்குப் பயன்படுத்த தீவிரமாக தமிழ் திரையுலகத்தினர் ஏற்பாடுகள் செய்துவருகிறார்கள். இது கோடம்பாக்கத்துக்குள்ளேயே பெரிய புயலைக் கிளப்பி இருக்கிறது.
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டவும், நலிந்த கலைஞர்களுக்கு உதவும் வகையிலும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தலா ஒருநாள்
நடைபெறும் கலை நிகழ்ச்சி களில் பங்கேற்பதே கோலிவுட் ஸ்டார்களின் திட்டம். இந்த தருணத்தில் மலேசியத் தமிழர் அமைப்பிலிருந்து நடிகர் சங்கத்துக்குப் படுகாட்டமான ஒரு கடிதம் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘‘நடுத்தெருவில் எங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். பிரச்னை பற்றியெரியும் இந்த நேரத்தில் நீங்கள் இங்கு வந்து எங்களை சந்தோஷப்படுத்தப் போகிறீர்களா? நீங்கள் இங்கு வந்து, உங்களைப் பார்க்க நாங்களும் ஆடிட்டோரியத்தில் கூடி, கைதட்டி ஆர்ப் பரிப்புடன் ரசித்தால் எங்கள் போராட்டம் பற்றி உலகம் என்ன பேசும்? மலேசிய அரசு எங்கள் உரிமைப் போரின் நேர்மை குறித்து என்ன சொல்லும்? இதையெல்லாம் யோசிக்காமல், ஏற்கெனவே தீட்டிய பயணத்தை விடாப் பிடியாக மேற்கொள்ள நினைக்கும் நீங்கள் மனிதர்களா?’’ என்று நீள்கிறதாம் அந்தக் கடிதம்.
இதுபற்றி சினிமா பிரமுகர் ஒருவரே தன் அடையாளத்தை மறைத்துப் பேசினார். ‘‘எல்லாமொழி சினிமாவிலும் தேவைகள் உண்டு. அதை நிறைவேற்றிக்கொள்ள எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கேரளா சினிமாவின் அமைப்பான ‘அம்மா(association of all malayala movie artists-AMMA)’ தங்கள் கலைஞர்களின் நலனுக்காக நிதி திரட்ட ஒரு யோசனை செய்தது. அதன் படி நடிகர் திலீப் தலைமையில் காமெடி ப்ளஸ் கமர்ஷியல் படமெடுத்து சூப்பர் ஹிட்டாக்கி சம்பாதிக்க ஐடியா செய் தார்கள். இப்போது படத்துக்கு ‘ட்வென்டி ட்வென்டி’ என்று தலைப்பிட்டு, மலையாளத்தின் அத்தனை ஸ்டார் களும் அதில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நல்ல காரியத்துக்காக உருவான சினிமா என்பதாலேயே அதற்குப் பெருவாரியான ஆதரவு... மலையாள சினிமா வில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் படம் வியாபார மாகியிருக்கிறது.
மலேசிய கலை நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் போகவில்லை. விஜய், விக்ரம் போன்றவர்கள் போனால்தான் உண்டு. இந்நிலையில் யாரைத் திருப்திப்படுத்த, யாருடைய வியா பார வளர்ச்சிக்காக இந்த மலேசியப் பயணம் என்பது தெரியவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார்.
மலேசியத் தமிழர்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ‘இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு’வின் (இந்தஅமைப்புதான் மலேசிய தமிழர்களின் உரிமைகளுக்காக இப்போது போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது) சட்ட ஆலோசகரும் முன்னணி தலைவர் களில் ஒருவருமான வழக்கறிஞர் கணபதி ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
‘‘மலேசிய அரசுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளின் உதவியோடுதான் தமிழகக் கலைஞர்களை மலேசியாவுக்குக் கொண்டுவர சிலர் ஏற்பாடு செய்திருக் கிறார்கள். அவர்களுக்கு எங்கள் நிலைமையின் தீவிரமோ, வேதனையோ தெரியவில்லை. இங்குள்ள பளபள ஹோட்டல்களில் தங்கிவிட்டு, நகரத்தை சுற்றிவிட்டு, வந்த வேலை முடிந்து திரும்பிவிடுவார்கள். அவர்கள் நடத் தும் கலைநிகழ்ச்சிகளுக்கு நாங்கள் போனால் அதை இந்த அரசாங்கம், ‘இங்கே எல்லோரும் அமைதியாக, ரிலாக்ஸாக இருக்கிறார்கள்’ என்று உலக நாடுகளிடம் பிரசாரம் செய்யும். இதனால் எங்கள் போராட்டத்தின் வீரியம் குறைந்துபோகாதா?
கோரிக்கைகளை வலியுறுத்தி பொது இடத்தில் கூடுகிறோம். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கிறது, சிறையில் தள்ளுகிறது என்பதெல்லாம் வந்த செய்திகள். வராத செய்தி ஒன்றைச் சொல்கிறேன்... கோலாலம்பூருக்குப் பக்கத்திலிருக்கும் பட்டா கேவ்ஸ் என்ற இடத்திலிருக்கும் முருகன் கோயிலில் சுமார் ஏழாயிரம் தமிழர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காகக் கூடினார்கள். அங்கும் வந்த போலீஸ் பீதியைக் கிளப்பி, ‘இவர்களால் சட்டம்&ஒழுங்கு பாதிக்கப்படும்’ என்ற பொய்யைச் சொல்லி, எல்லோரையும் அந்தக் கோயில் வளாகத்துக்குள் சிறை வைத்தது. அனைவர் மீதும் கண்ணீர்ப் புகையைப் பாய்ச்சியது. பக்திப் பரவசத்துடன் கூடிய தமிழர்களை அடக்க போலீஸ் செய்த அராஜகத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால், அந்தக் களேபரத்தில் ஒரு போலீஸ்காரரின் நெற்றியில் சிறு கீறல் விழுந்தது. இதற்காக 33 தமிழர்கள் மீது ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள். இதற்கான தண்டனைக்காலம் இருபது வருடங்கள்.
இதுதான் எங்களின் இப்போதைய நிலை. ஆனால், Ôஉணவும், உடையும், இருக்க வீடும்தான் கிடைக்கிறதே... பிறகும் ஏன் போராட்டம்?Õ என்று கேலியாகக் கேட்கிறது மலேசிய அரசு. நாங்கள் எந்தத் தொழில் தொடங்கினாலும் அதில் முக்கால்வாசிப் பங்குகளை மலேயர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். 2003&ம் வருடத்தில் மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு சீட்டைத்தான் தமிழர்களுக்கு ஒதுக்கினார்கள். நாங்கள் போராடிய பிறகு அது கூட்டப்பட்டிருக்கிறது. அழகான நகரங்களை விட்டு சற்று உள்ளே சென்றால், தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்களின் நிலைமையை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை சூப்பர் ஸ்டார் வேண்டுமானாலும் எங்கள் மண்ணுக்கு வரலாம்... நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் பிரச்னையைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்கள் பிரச்னையை அவர்களும் இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்ல வேண்டும்! அதற்காக வந்தால் மனமுவந்து வரவேற்போம். செய்வார்களா தமிழ் நட்சத்திரங்கள்?’’ என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் கணபதி ராவ்.
மலேசிய தமிழர்கள் சிலர் தங்கள் பெயர் குறிப்பிடாமல் நம்மிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ‘‘ஏழு வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமா இசைப் பிரபலம் ஒருவர் மாபெரும் கச்சேரிக்காக மலேசியா வந்தார். அதற்கு கோடிக்கணக்கில் வசூல் கொட்டியது. உணர்ச்சிப் பெருக்கில் எங்களை சந்தித்த அவர், ‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று நெகிழ்வோடு கேட்டார். விழுந்து நொறுங்கும் நிலையிலிருக்கும் சில தமிழ்ப் பள்ளிகளைக் குறிப்பிட்டு அவற்றைப் புனரமைக்க நிதி கேட்டோம். ‘நிச்சயம் செய்கிறேன்’ என்று போனவர்தான். அதன்பிறகு மலேசியாவுக்கு அவர் உதவி வந்தது. ஆனால், எங்களுக்கல்ல... வேறு சிலருக்கு... அதுவும் அவர் விரும்பியவர்களுக்கு!’’ என்றார்கள்.
கடைசியாக, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் பேசினோம். ‘‘எனக்குத் தெரிந்து கலை நிகழ்ச்சி நடத்த மலேசியாவில் யாருக்கும் எதிர்ப்பு இல்லை. நீங்கள் சொல்வது போல் கடிதம் எதுவும் வரவுமில்லை. மலேசிய தமிழர்களின் நலனில் எங்களுக்கும் மிகுந்த அக்கறை இருக்கிறது. அது அவர்களுக்கும் புரியும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி இந்த நிகழ்ச்சி நன்றாகவே நடந்து முடியும். ஆனால் மலேசிய தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக நாங்கள் நிகழ்ச்சி நடத்தப்போகிறோம் என்று வர்ணிப்பதை உணர்வுள்ள ஒரு தமிழனான என்னால் ஏற்க முடியாது!’’ என்றார்.
நன்றி ஜீனியர் விகடன்
பின்குறிப்பு : இந்த வார ஜூனியர் விகடனின் வந்திருக்கும் இந்த செய்தி உங்கள் பார்வைக்கு. சினிமாக்காரர்கள் தமிழனின் பணத்தில் வாழ்ந்துகொண்டு தமிழனை அழிக்கப்பார்க்கிறார்கள்.
வேதனையுடன் விடைபெற்ற சதனை வீரன் அஸ்வின்
-
*கிறிக்கெற் உலகில் தனக்கென ஒரு தனி இராஜ்ஜித்தை உருவாக்கி ஆட்சி செய்த
இந்திய சுழற்பந்து வீரர் கடந்த புதன்கிழமை சர்வதேச கிரிக்கெற்றில் இருந்து
ஓய்வுபெற...
2 days ago
2 கருத்துக் கூறியவர்கள்:
நடிகனுங்க நாசமாபோவ
தமிழ் நடிகர்களுக்கு, தமிழர்களப் பத்திக் கவலையா? என்னங்க காமெடி பண்றீங்க?
இவனுங்க இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு, தெருவில் பிச்சை எடுக்கலாம்.
சம்பாதிக்கிற காசுல 1% சங்கத்துக்கு குடுத்தாலே அவனுங்க 'கஷ்டம்' தீந்துடும். அது மட்டும் செய்ய மாட்டானுங்க.
Post a Comment