நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி

மொழிக்கு மாநாடு என்பது காலத்தின் கட்டாயம். இதுவரை நடந்தேறிய உலகத் தமிழாராட்சி மாநாடுகள் இதனைத் தான் செய்தன. அங்கே தமிழுக்கு மட்டும் தான் ஆராய்ச்சி நடந்தது. இன்றைக்கு இணையத்தில் ஆங்கிலத்திற்க்கு அடுத்து ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்க்கு என பொறுப்பான குழு இருக்கும் போது, கருணாநிதியால் முதலில் தமிழாராய்ச்சி மாநாடு என அறிவிக்கப்பட்டு பின்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அவர் கூறிய காரணம் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த போதிய அவகாசம் போதாது என தமிழாராய்ச்சி மன்றம் மறுத்துவிட்டது. இதனால் தான் என்னவோ தன்னுடைய தலைமையுரையில் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளை விட இது பெரியது சிறப்பானது என கூறினாரோ.

உண்மைதான் ஏனென்றால் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளில் தமிழைத் தான் ஆய்வு செய்தார்கள். கோவையிலோ தமிழர் தலைவன் என்பவரையல்லவா ஆய்வு செய்தார்கள்.

எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் வெளியே கேட்காத குரல்களுக்கும் மத்தியில் செம்மொழி மாநாடு நடந்துமுடிந்துவிட்டது. பலரால் எதிர்பார்க்கப்பட்டது போல் கருணாநிதிக்கு பிரமாண்டமாக நடந்த பாராட்டுவிழா போல் தான் செம்மொழி மாநாடு நடந்தேறியது.

முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் மாநாட்டின் மைய்ய நோக்குப்பாடலே தமிழிசையில் இல்லாமல் தமிழில் அழகாகப் பாடமுடியாத தமிழைக்கொலை செய்யும் பாடகர்களினால் ஏஆர் ரகுமானால் பாடவைத்து தன்னை மலையாளி என காட்டிக்கொள்வதில் பேருவகை அடையும் கெளதம் வாசுதேவ மேனனினால் படமாக்கப்பட்டது. பாடலை கவிஞர் கருணாநிதி அழகாக தொகுத்திருந்தார். தொல்காப்பியம், திருக்குறள், மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்த வரிகளை அழகுறத் தொகுத்தபடியால் இதனை அவர் எழுதிய கவிதை எனச் சொல்லமுடியாது தானே.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பது போல் கோவையில் எத்தனையோ மொழிஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் உரைகள் நிகழ்ந்திருந்தாலும் கவியரங்கத்தில் கருணாநிதி புகழ்பாடிய கவிஞர்கள் இதனைத் தலைவன் விழாவாகவே மாற்றிவிட்டார்கள்.

மு.மேத்தா,வாலி,நா.முத்துக்குமார் என மதிப்பு வைத்திருந்த கவிஞர்கள் தங்கள் மதிப்பையும் தமிழ்த் தாயின் மதிப்பையும் குறைத்தே விட்டார்கள். வைரமுத்து சொல்லவே தேவையில்லை கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கவே பிறந்தவர். அண்ணா நூற்றாண்டுக் கவியரங்கத்தில் தம்பிக்கு கவி பாடி, அண்ணாவை உயர்த்துகின்றேன் என மஹாத்மாவையே கீழிறக்கிய அற்பன். கருணாநிதியின் பேர்த்தி கயல்விழியோ கவிதை வாசிக்கும் போது "ஸ்டாப்" என ஆங்கிலத்தில் எழுதி அந்த இடங்களில் நிறுத்தி வாசிக்கும் "புகல்" வாய்ந்த கவிஞர், தன் தாத்தாவின் உமிழ்நீர் கூட தமிழ்நீர் எனப் புதிய கண்டுபிடிப்பை மாநாட்டு மேடையில் முழக்கி பெருமை சேர்த்துவிட்டார்.

வாலியோ தமிழுக்கு ஆராய்ச்சி செய்யாமல் குஷ்புவை ஆராய்ச்சி செய்தார். சோ என்ற விஷக் கிருமியைக் கண்டிக்கின்றேன் என சாதியை தமிழாராய்ச்சி மேடையில் உரைத்தார்.

ஐயா கவிஞர்களே நடந்ததோ செம்மொழி மாநாடு. ஒரு வரலாற்று நிகழ்வு அங்கே ஏன் அரசியல்? சினிமா?. உங்கள் தலைவன் சிறந்த கதாசிரியர் தான் அதனால் தான் என்னவோ மாநாடு தொடங்குவதற்க்குச் சிலநாட்களுக்கு முன்னரும் நல்லதொரு திரைக்கதை அமைத்திருந்தார். செம்மொழி மாநாட்டை கருணாநிதி தமிழுக்கு எடுத்த விழாவாக நடத்தி முடித்தபின்னர் அவருக்கு நீங்கள் எடுக்கும் பாராட்டுவிழாவில் அவரைப் பாராட்டி இருந்தால் ஒருதரும் உங்களைப் பழிக்கமாட்டார்களே? ஆனால் அப்படிச் செய்யாமல் நீங்கள் அனைவரும் இப்போ பாணபத்திர ஓணான்டியை விட கீழிறங்கிவிட்டீர்கள். இந்தக் கலங்கத்தைத் துடைக்க நீங்கள் எத்தனை கவிராயன் கவிதையோ, கிருஷ்ணாவதாரமோ, கண்ணீர்ப்பூக்களோ எழுதினாலும் முடியாது.

கவியரங்கம் தொடங்குமுன்னரே கருணாநிதி என்னைப் பாடாமல் என் தமிழைப் பாடுங்கள் என உத்தரவிட்டிருக்கலாம். ஏனோ செய்யவில்லை.

இனியவை நாற்பது என்ற தமிழக் கலாச்சார ஊர்வலத்தினை காட்டிய கலைஞர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் மன்னரையும், மஹாராணிகளையும், இளவரசர்களையும், இளவரசியையும் அவரது புதிய தோழி பச்சைத் தமிழச்சி குஷ்புவையும் காட்டி தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். கருணாநிதியின் குடும்ப அங்கத்தவர்கள் 84 பேர் மேடையில் அமர்ந்திருந்ததாக விகடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

தமிழை ஆட்சிமொழியாக கொண்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்களை அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். சில நாடுகளில் இருந்து அரசியல்ப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் பக்கத்து நாடான இலங்கையில் இருந்து எந்த அரசியல்வாதிகளும்(தமிழ் பேசும்) அழைக்கப்படவில்லை.

பேராசிரியர் சிவத்தம்பி ஆரம்பத்தில் இதற்க்குச் செல்லமாட்டேன் என மறத்து பின்னர் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றி நாமும் ஆங்கிலம் பேசுவோம் என செம்மொழி மாநாட்டில் நிரூபித்துள்ளார்.

கம்பனுக்கு கவிபாடும் கம்பவாரிதி ஜெயராயோ "நாம் தமிழ்த் தாய் பெற்றவர்கள், கருணாநிதியோ தமிழத் தாயைப் பெற்றவர்" என ஒரு வரியைச் சொல்லி கருணாநிதியைக் குளிர்வித்திருக்கின்றார். யாழ் நூலகம் எரித்தவர்களுக்கு துணை போனவருக்கு பாராட்டுவிழா நடத்தியவர்களிடம் இதனைவிட அதிகம் எதிர்பார்த்தேன்.

தமிழில் கதைத்தால் குற்றமென அபராதம் விதிக்கும் பத்மா சுப்பிரமணியத்தின் நடன நிகழ்வு, ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற வாசுகி ஜெகதீஸ்வரனின் இந்திய வம்சாவளி நடனங்கள். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேஸ்வரன் நாட்டுக்கூத்தை வாசுகியின் நடனத்திற்க்குப் பதிலாக இலங்கையில் இருந்து தருவித்திருக்கலாமே.

இன்னும் பல குற்றச்சாட்டுகளை எழுதலாம். ஆனாலும் என்னை தமிழனாகப் பார்க்காமல் ஈழத்தமிழனாகப் பார்க்கும் சில திமுக அன்பர்கள் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் இதனை எழுதியிருக்கின்றேன் என நினைத்து திட்டுவார்கள். அன்பர்களே தமிழனாக இருந்து நான் சொன்ன சில குற்றச்சாட்டுகளைப் ஆராய்ந்தால் நடந்தது தலைவனுக்கு பாராட்டுவிழாவே அன்றி தமிழன்னைகான விழா இல்லை என்பது புலப்படும்.

தனக்கு பாராட்டு விழாவாக இல்லாமல் இதனை செம்மொழி விழாவாகவே நடத்தியிருந்தால் கலைஞர் கருணாநிதி என்றென்றும் தமிழர் மனங்களில் பழைய கசப்புகளை மறந்து இடம் பிடித்திருப்பார்.

பட உதவி : ஆனந்த விகடன்

அதிரடி ஆர்ஜென்டீனா, ஆக்ரோச பிரேசில், உலக கோப்பை யாருக்கு?

ரோமுக்குப் போனால் ரோமானியனாக மாறு என்ற பழமொழிக்கு அமைய நானும் கிரிக்கெட்டை மறந்து செல்சீ, மஞ்சஸ்டர் யூனைட்டட், ஆர்சனல், கிறிஸ்டல் பலஸ், வெஸ்ட்காம்( மிகவும் அழகான மைதானம்) என உதைபந்தாட்ட ரசிகனாக மாறிவிட்டேன். ஆனாலும் ஏன் ஒரு பந்துக்கு 22 பேர் அடித்துக்கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை.

இந்த மாற்றத்தினால் தென்னாபிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பைப்போட்டிகளை பார்க்கும் பாய்க்கியம்(தொலைக்காட்சியில் தான்)கிடைத்தது. வீரர்களைவிட வக்கா வக்கா என அக்கா ஷகிரா (34 வயதாம் அப்போ அக்காதானே) ரொம்பவே கவர்ந்துவிட்டார்).

நேற்றுடன் முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. நடப்புச் சம்பியன் இத்தாலி, முன்னாள் சம்பியன் பிரான்ஸ், போட்டிகளை நடத்தும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் வெறும் கையுடன் வெளியேறிவிட்டன. இங்கிலாந்து மயிரிழையில் அடுத்த சுற்றுக்குச் சென்றாலும் பலம் வாய்ந்த ஜேர்மனியுடன் மோதவேண்டும்.



குழு A யில் முதன்முறை சாம்பியனான உருகுவே, முன்னால் சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா மற்றும் மெக்ஸிகோ கலந்துகொண்டன. முதலாவது போட்டியில் மெக்சிகோவை 1 க்கு 1 என சமநிலைப் படுத்தி தென்னாபிரிக்கா தன்னுடைய திறமையை உலகிற்க்கு காட்டியது. பிரான்சுடனான போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றாலும் உருகுவேயுடனான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் குழுவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதே நேரம் உருகுவே மெக்சிகோவையும் தென்னாபிரிக்கைவையும் வீழ்த்தி குழுவில் முதல் இடத்தைப் பிடித்தது.

குழு B யில் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனா, தென்கொரியா, கிறீஸ், நைஜீரியா ஆகிய அணிகள் விளையாடின. ஆர்ஜென்டீனா விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்று முதல் இடத்தையும் தென்கொரியா கிறீசுடனான போட்டியில் வெற்றி பெற்றது அத்துடன் நைஜீரியாவை சமப்படுத்தி இரண்டாம் இடத்தில் பி பிரிவில் இடம் பெற்றது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, சுலவேனியா ஆகிய அணிகள் பிரிவு C யில் இடம் பெற்றன. இங்கிலாந்து இலகுவாக இந்தப் பிரிவில் முதலிடம் பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அமெரிக்காவைச் சமநிலைப்படுத்தியது, அடுத்த போட்டியில் அல்ஜீராவை கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி வாழ்வா சாவா என்ற சுலவேனியாவுடனான போட்டியில் டெஃபோவின் அபார கோலினால் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துவிட்டது. ஆனால் நாளைய போட்டியில் ஜேர்மனியுடன் மோத இருப்பதால் இங்கிலாந்தும் நடையைக்கட்டும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. அமெரிக்கா அல்ஜீரியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று கோல் அடிப்படையில் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது.

பிரிவு Dயில் முன்னால் சாம்பியன் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கானா, சேர்பியா ஆகிய அணிகள் மோதின. ஆசியுடனான போட்டியில் 4 கோல்கள் அடித்த ஜேர்மன், சேர்பியாவுடனான அடுத்த போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. கானாவுடனான இறுதிப்போட்டியில் மீண்டும் தன்னுடைய அதிரடியைக் காட்டி பிரிவில் முதலிடத்தை ஜேர்மனி பிடித்தது. சேர்பியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதுடன் ஆசியுடனான போட்டியில் சம்நிலையையும் பெற்று கானா இரண்டாம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தெரிவானது.

பிரிவு Eயில் நெதர்லாந்து, ஜப்பான், கமரூன், டென்மார்க் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. நெதர்லாந்து எதிர்த்து விளையாடிய மூன்று அணிகளையும் வென்று இலகுவாக முதலிடத்தை அடைந்தது. ஜப்பான் கமரூனையும் டென்மார்க்கையும் வீழ்த்தி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதே நேரம் பலராலும் எதிர்பார்க்கபபட்ட கமரூன் சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. நெதர்லாந்தும் ஆர்ஜென்டீனாவும் மாத்திரமே விளையாடிய அனைத்து முதல் சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரிவான Fவில் நடப்புச் சாம்பியன் இத்தாலி, பரகுவே, சொலவாக்கியா, நீயூசிலாந்து ஆகிய அணிகள் ஆடின. பரகுவே சொலவாக்கியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று மற்ற இரு போட்டிகளையும் சமநிலைப்படுத்தியது. சொலவாக்கியா பலம் வாய்ந்த இத்தாலியை வென்ற்றதுடன் நீயூசிலாந்துடனான போட்டியை சமநிலைப்படுத்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. நான்கு தடவைகள் சாம்பியனான நடப்புச் சாம்பியன் இத்தாலி ஒரு போட்டியைத் தானும் வெல்லாமல் கோப்பையை தென்னாபிரிக்காவில் பறிகொடுத்துவிட்டு வெறும் கையுடன் இத்தாலிக்குத் திரும்பினார்கள்.

ஐந்து தடவைகள் சாம்பியனான பிரேசில், இம்முறை உலகக்கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள போர்த்துக்கல், ஜவரி கோஸ்ட், வட கொரியா ஆகிய நாடுகள் பிரிவு G யில் இடம் பெற்றன. பிரேசில் வடகொரியா, கோஸ்ட்ரோரிக்கா இரண்டையும் வெற்றி பெற்றாலும் போர்த்துக்கல்லுடனான போட்டியை மிகவும் கடினமாக ஆடி சமநிலைப்படுத்தி பிரிவில் முதலிடம் எடுத்தது. போர்த்துக்கல் வடகொரியாவை ஏழுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலகுவாக வென்றாலும் பிரேசிலையும் ஜவரி கோஸ்ட்யும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் சுற்றில் போர்த்துக்கல்லும் உருகுவேயும் தான் எந்தக் கோலையும் எதிரணியினர் அடிக்கவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எட்டாவது பிரிவான Hசில் ஸ்பெயின், சிலி, சுவிஸ்ர்லாந்து மற்றும் கொன்டூரஸ் ஆகிய நாடுகள் விளையாடியன. முதலாவது போட்டியில் ஸ்பெயின் சுவிசிடம் அடிவாங்கிச் சறுக்கினாலும் அடுத்த போட்டிகளில் சுதாகரித்து வெற்றி பெற்று பிரிவில் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள். ஸ்பெயினிடம் தோல்வியடைந்த சிலி ஏனைய இரண்டு போட்டிகளையும் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இன்று இரண்டாவது சுற்றான லாஸ்ட் 16 ஆரம்பமாகியது. (கிரிக்கெட் போல் சூப்பர் சிக்ஸ்டீன், சூப்பர் சிக்ஸ் எனப் பெயரிட மோடி போல் பீபாவில் எவரும் இல்லையோ) முதல் போட்டியில் உருகுவே தென்கொரியாவும் மோதிய விறுவிறுப்பான போட்டியில் உருகுவே 2 க்கு 1 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தெரிவானது.

சில குறிப்புகள் :
1. இங்கிலாந்து அணி கிரிக்கெட்டில் இந்திய அணிபோல் காணப்படுகின்றது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் வெற்றி அரிதாக இருக்கின்றது. ஜெராட், ரூனி, ரெறி, லம்பார்ட், குறூச் எனப் பெரிய பட்டாளமே இருக்கின்றது. பயிற்சியாளருடனான சண்டைகளும், வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லையும் இவர்களைப் பின்னடையச் செய்கின்றது.

போட்டிகள் ஆரம்பமாகும் முன்னர் பலரது வீடுகளிலும் வாகனங்களிலும் இங்கிலாந்து கொடிகள் பறக்கவிடப்பட்டன இரண்டாவது போட்டியையும் சமநிலைப்படுத்தியதும் பலர் அவற்றை அகற்றிவிட்டனர். மீண்டும் சொலவேனியாவை வென்று அடுத்த சுற்றுக்கு சென்றதனால் கொடிகள் மீண்டும் தென்படுகின்றன.

2. 1986ல் ஆர்ஜென்டீனாவிற்க்கு இரண்டாம் தடவை உலககிண்ணத்தை பெற்றுக்கொடுத்த டிக்கோ மரடோனாவின் பயிற்சியால் ஆர்ஜென்டீனா இம்முறை கிண்ணம் வென்றாலும் ஆச்சரியமில்லை. கோல் அடித்த வீரர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதும், கோல் அடித்த வேளைகளில் ஏனையவர்களை பாய்ந்து பாய்ந்து கட்டிப்பிடிப்பதும் என மனிதர் கலக்குகின்றார். சில பயிற்சிவிப்பாளர்கள் ஏனோ தானோ என இருக்கும் போது இவரின் நடைமுறைகள் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற அனைவருக்கும் சந்தோசம் தருகின்றது.

3. ரூனி எத்தனை கோல் அடிப்பார்? இன்றைய போட்டியில் வெல்வது யார்? இங்கிலாந்து ஜேர்மனியை 3க்கு 2 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தும் என பந்தய நிறுவனங்களின் கல்லா களைகட்டுகின்றது. பல முக்கிய போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தோல்வி அடைந்தபடியால் இவர்களுக்கு வருமானம் கூடுகின்றது. ஒரு நிறுவனம் போட்டிக்காலத்தில் வாங்குகின்ற தொலைக்காட்சி, மடிக்கணணி போன்றவற்றிற்கு இங்கிலாந்து கிண்ணம் சுவீகரித்தால் பணத்தை திரும்ப தருவதாக விளம்பரம் செய்திருக்கின்றார்கள்.

4. வழக்கமாக கால்ப்பந்துப் போட்டிகள் என்றால் அழகான காட்சிகளையும் பெண்களையும் காட்டும் கமேராமேன்கள் இம்முறை இனியவை நாற்பதுவில் ஊர்வலத்தைத் தவிர்த்து கருணாநிதி குடும்பத்தைக் காட்டியதுபோல் போட்டியை மட்டும் காட்டுகின்றார்கள்.



எதிர்வரும் 11ந்திகதி உலக சனத்தொகையில் 30%மான மக்கள் ரசிக்கும் போட்டியின் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். அதுவரை என்ன என்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ பொறுத்திருந்துபார்ப்போம்.

சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை.

ஹாட் அண்ட் சவர் சூப் 17-06-2010

அரசியல்

இந்தியாவின் போபால் நச்சுப்புகை சோகத்திற்க்கு இருபது வருடங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. குற்றவாளி நிறுவனத்திற்க்கு கிடைத்த தண்டனையோ வெறும் 2 ஆண்டுகள் தான். இருபதினாயிரம் மக்கள் கொல்லப்பட்ட சோகத்திற்க்கு 20 வருடத்தின் பின்னர் வெறும் 2 ஆண்டுகள் தான் தண்டனை என்றால் மனுநீதி சோழனும் இராஜராஜனும் அசோகனும் இன்னும் பலரும் நீதி தவறாமல் ஆட்சி செய்த பாரத தேசத்தின் நிலையை நினைக்க வருத்தமாக இருக்கின்றது. இனிமேல் பாரதத்தை புண்ணியபூமி என அழைப்பது தவறாகும் போல் இருக்கின்றது.

இதைப் பற்றி அண்ணன் ஜாக்கி குமுறோ குமுறென்று குமுறியிருக்கின்றார். நீதித்துறையில் கூட பாரபட்சம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள். ஒரு தனிமனிதனுக்காக ஒரு இனத்தையே மாற்றம் தாய் மனப்பான்மையில் பார்ப்பவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாமா? ஒருகாலத்தில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இருந்த இந்தியா அண்மைக்காலமாக சர்வாதிகார நாடாக மாறுவது கவலை அளிக்கின்றது. (மனதில் ஹிட்லரை வீட முசோலினியே ஏனோ வந்துபோகின்றார்).

ஆன்மிகம்

44 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் நித்தியானந்தா மீண்டும் தன் ஆசிரமத்திற்க்கு வந்திருக்கின்றார். வந்தவர் சும்மா இருக்காமல் அக்னி சூழ தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். துறவி என்ற பெயரில் நித்தியானந்தா செய்தவை கண்டிக்கப்படக்கூடியவையே. காரணம் துறவு என்றால் முற்றும் துறத்தல் என்பது அர்த்தமாகும் ஆனாலும் இக்கால துறவிகள் எதனையும் துறக்காமல் துறவியாகிவிடுகின்றார்கள். சீதை தீக்குளித்தது போல் நித்தியானந்தாவும் தனக்குத் தானே அக்னிப் பரீட்சை வைக்கின்றாரோ தெரியவில்லை. கடவுளை நம்பினாலும் நம்பலாமே ஒழிய இந்த கடவுளின் பெயரால் தங்களை வளர்ப்பவர்களை நம்பவே கூடாது. எத்தனை பிரேமானந்தாக்கள், கல்கிகள், பகவான்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

நித்தியானந்தா வெளியே வந்துவிட்டார், ரஞ்சிதா எப்போ மீண்டும் வெளிஉலகிற்க்கு வருவார்?

உலகக் கோப்பை

நேற்றுடன் சகல அணிகளும் ஒவ்வொரு போட்டியில் விளையாடி முடித்துவிட்டன. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி பலம் வாய்ந்த அணிகள் மிகவும் கஸ்டப்பட்டதையும், இரண்டாம் தர அணிகள் பலமாக இருந்ததையும் பார்க்கமுடிந்தது. வழக்கம் போல் அதிர்ச்சிகள் அடுக்கடுக்காக வந்தன. இங்கிலாந்து அமெரிக்காவை சமநிலைப் படுத்தியது, பிரான்சும் கஸ்டப்பட்டு மெக்சிகோவை சமநிலைப்படுத்தியது. இம்முறை உலகச் சம்பியனாக வரும் எனப் பலரால் கணிக்கப்பட்ட ஸ்பெயின் பரிதாபமாக சுவிசிடம் தோற்றது. பிரேசில் பலத்த போராட்டத்தின் பின்னர் வடகொரியாவை வென்றது. நடப்புச் சம்பியன் இத்தாலியும் பரகுவேயை சமநிலைப் படுத்தியது.

இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆர்ஜென்டினாவும் ஜேர்மனியுமே பலமாக இருக்கின்றன. ஆனாலும் கால்ப்பந்தில் கடைசி நிமிடம் வரை எதையும் கூறமுடியாது என்பாதல் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆசியக் கிண்ணம்

உலக கோப்பை உதைபந்தாட்டப்போட்டிகளினால் பெரிதாக அறியப்படாத போட்டிகளாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அத்துடன் தம்ம்புள்ளை மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களும் எடுக்கமுடியாது (ஏன் தான் இங்கே வைக்கின்றார்களோ?). இதுவரை நடந்த 2 போட்டிகளையும் வைத்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது ஆனாலும் சொந்த மண்ணில் நடப்பதால் இலங்கைக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகின்றது. முரளிதரனும் நம்ம பாஉ போல் கொஞ்சம் களைப்படைந்துவிட்டது நேற்றைய போட்டியில் தெரிந்தது. எரியாத சுவடிகள் பவன், வலைமனை சுகுமார் நக்கலடிக்கமுன்னர் அவர் தன்னை மறுபரீசீலனை செய்வது நல்லது.

இராவணன்

இந்தவாரம் இராவணன் படம் வெளிவருகின்றது. அண்மைக்காலமாக எனக்கு ஏனோ மணிரத்னம் படங்களில் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. அதிகமாக வரலாறுகளைத் திரிக்கின்றார். தமிழ் மன்னன், சிறந்த சிவபக்தன் இராவணனை வில்லனாக்கி ஆரியர்களின் மாயைக்கு உதவுகின்றாரோ தெரியவில்லை. இராவணன் என்பவரை வில்லனாக்கிய பெருமை ஆரியரையே சாரும் ஆனாலும் நாங்கள் (திராடவிடர்) ஆரியக் கடவுளுக்குத் தான் விழா எடுப்போம். எங்கள் தமிழ் மன்னனை மறந்துவிடுவோம். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேசனில் இராவணன் தான் கதாநாயகன். இராவணன் பற்றி விரைவில்(?) தனிப்பதிவே எழுதவேண்டும். இந்தவாரம் தமிழ்மணம், தமிழிஷ் எல்லாம் இராவணன் தான் அதிகம் அடிபடும் என்பதால் கொஞ்சம் ஆறுதலாக எழுதலாம்.

திரையுலகிற்க்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது, மறக்காமல் உங்கள் வாக்குகளை சிறந்தவர்களுக்கு அளியுங்கள். மேலதிக விபரங்களுக்கு :




நறுமுகை

என்னுடைய உடன்பிறவாச் சகோதரன் அன்புத் தம்பி லெனினால் அண்மையில் நறுமுகை என்ற பெயரில் ஒரு இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் செய்திகளுடன் கருத்துக்களம், திரட்டி, வலைப்பதிவர்கள், குறும்படம் என பல விடயங்கள் இருக்கின்றன. லெனினின் திறமைகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். அவரின் நறுமுகை இணையமும் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என நம்புகின்றேன். என்னுடைய வலையினை அழகுற அமைத்துத் தந்தவர் லெனின் தான். லெனினுடன் இன்னும் சில நண்பர்களும் இணைந்து இதனைச் செய்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



ஜெசி ஜெசி என உருகினவர்களுக்கு மன்மதன் அம்பு திரிஷா
பட உதவி : அன்பு நண்பன் ஆதிரை.

பின்குறிப்பு : நீண்ட நாட்களின் பின்னர் சூப் ரசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.