Showing posts with label ஜெமோ. Show all posts
Showing posts with label ஜெமோ. Show all posts

தெருச் சண்டைகளாக மாறும் இலக்கியச் சண்டைகள்

என்றைக்குமே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளிடையே சேர்ந்திருக்கும் ஒரு விடயம் கருத்துமோதல்களாகும். இந்தக் கருத்துமோதல்கள் இன்றைக்கோ நேற்றைக்கோ தொடங்கியது அல்ல. ஆரம்பத்தில் கம்பன்கழக மேடைகளில் தொடங்கிய கருத்துமோதல்கள் பின்னர் படிப்படையாக வார மாத இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இடம்பிடித்தன. பல ஆரோக்கியமாக இருந்தாலும் சில வெறும் தனிமனித தாக்குதல்களாகவே மாறிவிட்டன.

பெரும்பாலான கருத்துமோதல்களுக்கு காரணம் ஒவ்வொருவரும் வெவ்வேறு இசங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தங்கள் இசங்களுக்கு அல்லது கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன் மல்லுக்கட்டுதல் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

இணையத்தின் பரவல் அதிகரிக்கப்பட்டபின்னர் இணையத்தில் இந்ததாக்குதல் தொடர்கின்றன. இதற்க்கு சிறந்த உதாரணம் அண்மையில் சாருவுக்கும் ஜெமோவுக்கு இடையிலான பனிப்போர்.

இந்தப்பனிப்போர்கள் இலங்கையில் கூட நடைபெற்றன, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு பட்டிமன்ற மேடையில் இரண்டு பேச்சாளர்களுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதம் எங்கள் ஊர்ப்பகுதியில் பிரசித்திபெற்றது. இவர்கள் இருவரும் ஏதோ நாட்டுப்பிரச்சனையில் வாக்குவாதப்பட்டிருந்தார்கள் என்றால் பாராட்ட்லாம் ஆனால் என்றைக்கோ கம்பன் எழுதிவைத்துவிட்டுப்போன இராமாயணத்தில் சீதை பற்றி சண்டையிட்டார்கள். இந்தச் சண்டை அந்த மேடையில் மட்டுமல்ல அதன் பின்னர் வந்த ஏனைய இலக்கியமேடைகளில் கூட எதிரொலித்தது. சீதையை இராவணன் கடத்தியபோது சீதை இருந்த நிலைதான் சண்டைக்கான முதல்காரணம். இராமாயணம் படித்தவர்களுக்கு அந்த நிலை என்னவென்று தெரியும்.

இலங்கையிலுள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என தம்மை அழைக்கிறார்கள். அதனால் இவர்களிடம் சுஜாதா பற்றியோ ராஜேஸ்குமார் பற்றியோ கதைக்கமுடியாது. இவர்களின் பார்வையில் சுஜாதா ராஜேஸ்குமார் புஷ்பா தங்கத்துரை போன்றவர்கள் எழுதியது குப்பை இலக்கியம் என்பார்கள். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோர்களின் எழுத்துக்கள் மட்டும் தான் தரமான இலக்கியம் என்பது இவர்களின் வாதம்.

ஒருமுறை எமது கல்லூரிக்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் உயர்தர மாணவர்களிடையே இலக்கிய சொற்பொழிவொன்றாற்றினார். இலக்கியம் என்றால் அது மண்வாசனையுடன் இருக்கவேண்டும், அதனைவிட்டுவிட்டு நகரங்களில் நடக்கும் கதைகள் துப்பறியும் கதைகள் எல்லாம் இலக்கியம் இல்லை என்ற தொணியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது உரை முடிவுற்றபின்னர் நாம் அவருடன் சிலமணி நேரம் கலந்துரையாடப் பணிக்கப்பட்டோம். அப்போது அவரிடம் தமிழ்வாணன் கதைகள் இலக்கியத்தில் வரதா? எனக்கேட்டபோது இல்லை என பதில் அளித்தார். பின்னர் சுஜாதா ராஜேஸ்குமார் போன்றவர்களையும் ஒரு பிடிபிடித்தார். இவர்களின் எழுத்துக்களில் ஆபாசம் தலைதூக்கியிருக்கிறது எனவும் சும்மா பொழுதுபோக்கிற்க்கு மட்டும் படிக்கலாம் எனவும் தன் கருத்துக்களைச் சொன்னார்.

இவர்களைப்போல் தமிழக எழுத்தாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். தமது எழுத்துக்கள் தான் தரமானது ஏனையவை தரமற்றது என்பது இவர்களின் கருத்து. சாரு போன்ற சிலர் தமிழ் எழுத்தாளர்களைவிட ஏனைய வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமே எழுதுவார். நம்ம நாட்டு கலைஞர்களைக் கெளரவிக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை.

சிலகாலத்திற்க்கு முன்னர் தினக்குரலில் இடம்பெற்ற கவிஞர் மு.பொன்னம்பலம்,
கம்பன் கழகப்பேச்சாளார் ஸ்ரீபிரசாந்தன் இடையே நடைபெற்ற விவாதங்களும் பிரசித்திபெற்றவை. இவர்கள் சண்டைபோட்ட விடயம் அல்குல் என்ற தமிழ் சொல் பற்றியதாகும். அத்துடன் பிரசாந்தன் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் மலையக கவிஞர்களைப் புறக்கணித்ததாக அந்தனி ஜீவாவால் ஞானம் இதழில் குற்றம் சாட்டப்பட்டார். குற்றச்சாட்டை நிராகரித்த பிரசாந்தன் அந்தனி ஜீவாவை பிரதேசவாதி என குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குமுதத்தில் கோணல் பக்கங்கள் எழுதிய காலத்தில் இருந்தே சாருவைப் படித்துவருகின்றேன். சாருவையோ ஏனைய எழுத்தாளர்களையோ விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை காரணம் அந்தளவிற்க்கு இலக்கிய அறிவு எனக்கில்லை. சாரு ஒரு இலக்கியவாதியாக இருந்துகொண்டு இளையராஜாவை விமர்சிப்பது பிடிக்கவில்லை. சாரு ஒரு இசைஅறிஞர் என்றால் இளையராஜாவை மட்டுமல்ல மொசார்ட், பீதோவனைக்கூட விமர்சிக்கலாம். ஆனால் சாருவுக்கு இசைபற்றித் ஆழ்ந்த அறிவுகிடையாது என்பது அவரது எழுத்துக்களில் இருந்து புரிகின்றது. அப்படியிருக்கையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இசைஞானியின் இசை இசையல்ல என்கிறார்.

இவரின் விமர்சனத்திற்க்கு அடிக்கடி உள்ளாகும் இன்னொருவர் நடிகர் கமலஹாசன். கமலஹாசனை அடிக்கடி விமர்சிக்கும் இவர் ஏன் தலைகளையும் தளபதிகளையும் விமர்சிப்பதில்லை? சாரு ரஜனிகாந்தைக்கூட இதுவரை விமர்சித்ததில்லை. இவரது புனைகதை எழுத்தில் இருக்கும் தைரியம் விமர்சனங்களில் இல்லை.

சாருவிடம் இன்னொரு கேள்வி உங்களுக்கு கேரளத்தில் இருக்கும் புகழ் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். கட் அவுட் வைத்ததாககூட எழுதியிருக்கிறீர்கள். ஏன் உங்களால் முல்லைப் பெரியார் பற்றி கேரளமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விளங்குமாறு விளக்கம்கொடுக்கமுடியாது உள்ளது. காரணம் நீங்கள் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மட்டும் விமர்சிக்கும் துணிவு அரசியல்வாதிகளிடத்தில் உங்களுக்கு இல்லை.

இறுதியாக சாரு ஜெமோ இருவருக்கும் ஒருவேண்டுகோள் உங்கள் சண்டைகளை ஆக்கபூர்வமான விடயங்களில் செலுத்தினால் அனைவருக்கும் பிரயோசனமாக இருக்கும்.

டிஸ்கி : அண்மைக்காலமாக சாரு, ஜெமோ, பைத்தியக்காரன், லக்கி, நர்சிம் எனப் பலரரின் விமர்சனங்கள் வாசித்தேன் அனைத்துக்கும் பொதுவான ஒரு பின்னூட்டமாக இந்த உளறல். வேறு எந்த உள்குத்தோ அரசியலோ இல்லை. இலக்கியச் சண்டைகள் எங்கும் நடைபெறுகின்றன என்பதற்காகவே இலங்கை எழுத்தாளர்கள் பற்றியும் ஒரு சின்ன விளக்கம்.