பொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1


தமிழ் மொழி இலக்கியங்களில் ஐம்பெரும் காப்பியங்கள், அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கந்தபுராணம், பெரியபுராணம் என பல இலக்கியங்கள் பண்டைய காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் பாட்டுடைத்லைவனாக கடவுள்களையும் சில மன்னர்களையும் வைத்து எழுதப்பட்டவையே. பிற்காலத்தில் நாவல், சிறுகதை இலக்கியங்கள் தோன்றிய பின்னர் சாதாரணமானவர்களையும் கதையின் நாயக நாயகிகளாக வைத்து பல புதினங்கள் எழுதப்பட்டன. அவற்றில் கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவல் இன்றுவரை பலராலும் வியந்து பேசப்படும் ஒரு புதினமாகும்.
சோழர்களினதும் அவர்களது இராட்சியங்களினது பெருமையை முறையாக வரலாற்றுச் சுவடிகளில் பதிவு செய்ய நமது முன்னோர்கள் தவறி இருந்தாலும், செப்பு ஏடுகளில், கல்வெட்டுகளில் தமிழ் மக்கள் குறித்து வைத்து இருக்கிற செய்திக் குறிப்புகளைக் கொண்டு ஒருபொன்னியின் செல்வன்எனும் இந்த வரலாற்றுப் புதினத்தைப் படைத்தார் அமரர் கல்கி.
சோழப்பேரரசின் ஆட்சி பீடம் யாருக்கு என்பதுதான் கதை. சோழப்பேரரசின் அன்றைய அரசன் சுந்தரசோழர் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது சோழ அரியணை அவரின் மூத்த மகனான ஆதித்தகரிகாலனுக்கோ அல்லது இளையபிராட்டி என அழைக்கப்படும் சுந்தரச்சோழரின் பெண் வாரிசான குந்தவையின் அன்பினைப் பெற்ற அவரின் தம்பி அருள்மொழிவர்மனுக்கோ கிடைக்கவேண்டும். அதே நேரம் சுந்தரச்சோழரின் சகோதரன் கண்டராதித்தரின் மகன் மதுராந்தகசோழனை ஆட்சி பீடத்தில் ஏற்றவேண்டும் என பழுவேட்டைரையர்கள் தலைமையில் ஒரு குழுவினர் விரும்பினாலும் மதுராந்தகனின் தாயாரான செம்பியன் மாதேவி அதனை விரும்பவில்லை. இந்த மும்முனைப் போட்டியில் யார் அரியாசனம் ஏறினார்கள்? அதன் போது நடந்த சதிகள், சூழ்ச்சிகள், கொலைகள், பழிவாங்கல்கள், காதல்கள், சைவ வைஷ்ணவ சச்சரவுகள் தான் பொன்னியின் செல்வனின் கதை.
தமிழ் சினிமாவில் இந்த கதையினை ஆரம்பத்தில் முன்னாள் முதல்வரும் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டவருமான எம்ஜீஆர் அவர்கள் திரைப்படமாக எடுக்க முயன்றார். பின்னர் உலகநாயகன் கமலஹாசன் இதனை திரைப்படமாக்க முயன்றார் அவரின் முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதியாக மகாபாரதத்தில் கர்ணன் கதையை தளபதியாகவும் இராமாயண இராவணனை இராவணன் எனவும் முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜீஆரின் கதையை இருவராகவும் திரைமொழியில் காட்சிப்படுத்திய இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சியை ஆரம்பித்து செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார். இதற்கான ஒத்திகையாக அவரின் திரைப்படமான செக்கச் சிவந்த வானத்தை குறிப்பிடலாம்.
கல்கி அவர்களினால் ஐந்து பாகங்களில் எழுதப்பட்ட ஒரு கதையை வெறும் 3 மணி நேரத்தில் அடக்குவது என்பது மிகப்பெரிய சவாலாக இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இருக்கப்போகின்றது. பொன்னியின் செல்வனின் வாசகர்களுக்கு திரைக்கதையில் எந்தவிதமான மாறுதல்களும் இன்றி பாகம் பாகங்களாக வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் வணிக ரீதியான சினிமாவில் சில சமரசங்கள் செய்யவேண்டி இருப்பதால் மணிரத்னமிடம் இருந்து எந்த சம்பவங்களை வாசகர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பார்கள் என்பதையே இந்த தொடரில் பகிரவிருக்கிறேன். இது ஒரு வாசகனின் பார்வையில் திரைக்கதை எப்படி இருக்கும் என்ற கற்பனையே ஒழிய மணிரத்னத்திற்க்கு வழங்கும் ஆலோசனை இல்லை. வாசகர்களால் பலமுறை மீள்வாசிப்பு செய்யப்பட்ட கதைகளை சினிமா மொழியில் எடுப்பது என்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை. ஓரிரு கதைகள் தவிர ஏனையவற்றை திரைப்படமாக கொண்டுவரும் போது அது ஏனோ ரசிகர்களை கவர்வதில்லை.
காட்சி 1:
கல்கி தனது முதலாவது அத்தியாயமான ஆடித்திருநாளை வல்லத்துவீரன் வந்தியத்தேவனுடனே தொடங்குகிறார். பொன்னியின் செல்வன் என அழைக்கப்படுபவர் அருள்மொழிவர்மனாக இருந்தாலும் இந்தக் கதையின் நாயகன் வந்தியத்தேவனே. அதே போல மணிரத்னமும் முதல்காட்சியில் வீரநாராயணபுரம் ஏரியில் வந்தியத்தேவன் வருகையையும் அன்றைய நிகழ்வான ஆடித்திருநாளையும் ஒரு பாடலில் மூலமாக காட்சிப்படுத்தலாம். மணிரத்னம் சினிமாவை பெரும்பாலும் ஆகத்தான் காண்பிப்பவர் அதாவது அவரின் திரைப்படங்களில் அதிக வசனங்களை விட காட்சிகளினூடாக ரசிகனை ஈர்ப்பவர். வீரநாராயணபுரத்தில் ஆரம்பிக்கும் போதே ஆழ்வார்க்கடியானையும் பெரிய பழுவேட்டரையும் அறிமுகப்படுத்தலாம்.
பழுவேட்டரையர்களின் வீரர்கள் வந்தியதேவனுடன் வீண் வம்புக்கு வரும் சந்தர்ப்பங்களில் அவன் அமைதியாக இருப்பதற்கான காரணத்தை அடுத்த காட்சியின் மூலம் காண்பிப்பதால் கல்கியின் கதையின் போக்கிலையே திரைக்கதையும் நகரும்.
காட்சி 2:
ஆதித்தகரிகாலன் அறிமுகம் இதனை ஒரு பிளாஷ்பேக் மூலம் காட்டமுடியும். காஞ்சியில் ஆதித்தகரிகாலனும் வந்தியதேவனும் இராச்சியம் தொடர்பாக பேசிக்கொண்டவையும் வந்தியதேவன் பழையாறைக் கோட்டைக்கு செல்லும் காரணமும் இந்தக் காட்சியின் மூலம் காண்பிக்கமுடியும். இந்த காட்சியை கொஞ்சம் நீட்டிக்கவிரும்பினால் கந்தமாறன், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியதேவன் ஆகியோரின் நட்பையும் காட்சிப்படுத்தலாம்.

காட்சி 3 :
வீரநாராயண ஏரியில் இருந்து பழையாறை அரண்மனை செல்லும் வழியில் வந்தியதேவன் கடம்பூர் மாளிகையில் தன் நண்பன் கந்தமாறனை சந்திக்கச் சென்றபோது அங்கே அவனுக்கு கிடைத்த வீரமான வரவேற்பு மூலம் வந்தியதேவனின் போர் ஆற்றலைக் காண்பிக்ககூடிய காட்சி இது. அந்தசிறிய சண்டையின் பின்னர் சம்புவரையர் அரண்மனையில் பழுவேட்டரையர் தலைமையில் இந்த கதையின் முக்கிய திருப்புமுனையான சதி ஆலோசனையும் தேவராளன் தேவராட்டியின் குரவைக்கூத்தும் அதன் பின்னர் மூடுபல்லக்கில் இருந்து மதுராந்தகனின் வருகையும் முக்கியமான இடங்களாகும்.


அகரம் செய்தி இணையத்தில் வெளியான கட்டுரை

0 கருத்துக் கூறியவர்கள்: