தீப்பிடித்த லண்டனும் வேடிக்கை பார்த்த காவல் துறையும்

கடந்த ஞாயிறு மிதமான குளிர் அடித்துக்கொண்டிருந்த அதிகாலை வேளை வேலை இல்லாத நாளாக இருந்தபடியால் இன்னும் கொஞ்சம் தூங்குவோம் என பிளாங்கெட்டினுள் தூக்கத்தை அனுபவித்துக்கொண்டிருந்தபோது போன் அடித்தது நம்பரைப் பார்த்தால் இலங்கையில் இருந்து மைத்துனன்.

"மச்சான் நோர்த் லண்டன் டொட்டனம்(Tottenham) உங்களுக்கு அருகிலா?"
"இல்லை ஏன்டா கேட்கின்றாய்?"
"அங்கே கலவரமாம் அதுதான் கேட்டேன், நான் பிறகு எடுக்கின்றேன்" என்றபடி வோக்கி டோல்க்கியில் கதைப்பதுபோல சோர்ட் அன்ட் ஸ்வீட்டாகப் பேசியபடி வைத்துவிட்டான்.

தூக்க கலக்கத்தில் டிவியைப்போட்டால் ஸ்கை நியூசில் Tottenham பகுதியில் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையைக் காட்டினார்கள். அல்டி(ALDI) சூப்பர் மார்க்கெட் உட்பட பல கட்டடங்கள் சூறையாடப்பட்டத்துடன் எரிந்துகொண்டும் இருந்தன. ஒரு டவுள் டெக்கர் பஸ் எரிந்து பஸ்பமாகியது.

Mark Duggan

வடக்கு லண்டன் Tottenham பகுதியில் கடந்த வியாழக்கிழமை (04.08.20110 கறுப்பினர் இளைஞர் மார்க் டக்கன் பொலீசாரால் சுடப்பட்டு இறந்ததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் பொலீஸ் நிலையம் முன்னாள் கடந்த சனி பிற்பகல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறி பொலீஸ்காரர்களின் கார்கள் உட்பட சில வாகனங்கள் கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் என பல உடைத்தெறியப்பட்டு எரியூட்டவும் பட்டன.

ஞாயிறு மதியம் அந்தப் பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை கட்டுக்கு அடங்கியதாக Metropolitan பொலிஸார் தெரிவித்தார்கள். ஆனால் ஞாயிறு இரவு வடக்கு லண்டன் Enfield பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்தது.

திங்கள் காலை வழக்கம் போலவே லண்டன் வாசிகளுக்கு விடிந்தது. அவரவர் தங்கள் கடமைகளில் தம்மை மறந்து இருந்தபடியால் முதல் நாள் நடந்த சம்பவத்தை மறந்தேவிட்டார்கள். மாலையில் மீண்டும் Oxford Circus, Enfield, Lewisham, Brixton, Peckham, Camberwell என தென்கிழக்கு, வடக்கு லண்டனில் வன்முறை வெடித்தது. கார்கள் எரிப்பு, சூப்பர் மார்க்கெட்டுகளை உடைத்து பொருட்கள் சூறையாடல் என்பன பெரும்பாலும் இளவயது இளைஞர் யுவதிகளால் முகத்தை மூடியபடி நடத்தப்பட்டன.

வன்முறையின் உச்சக்கட்டமாக குறொய்டனில் உள்ள 100 வருடங்களுக்கு மேற்பட்ட ஹவுஸ் ஆவ் ரீவ்ஸ் (House of Reeves) என்ற தளபாடக் கடை தீயிடப்பட்டு கொழுந்துவிட்ட எரியத் தொடங்கியது. தீயணைப்பு படையினர் பெரும் பிரயத்தனம் செய்தும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. அத்துடன் Waltham Cross லுள்ள சொனி கம்பனியின் ஸ்டோர் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் எரியூட்டப்பட்டது.
ஈலிங்கிளுள்ள ஒரு கடை என் கமேராவில் சுட்டது


இதே நேரம் நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் Clapham சந்தியில் கூடி கறிஸ் டிஜிட்டல், டெபனாம்ஸ் ஆடையகம் போன்றன உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன.

கிழக்கு வடக்கு தென்கிழக்கு லண்டன்களில் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் போது மேற்கு லண்டன் மட்டும் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியிலும் இரவு 9 மணியளவில் மண் அள்ளிப்போட்டார்கள் வன்முறையாளர்கள். ஈலிங் (Ealing)பகுதியில் ஆடையகம் மக்டொனால்ட் உட்பட சில கடைகளை கொள்ளை அடித்ததுடன் இரண்டு கார்களும் எரியூட்டப்பட்டன. திங்கள் இரவு முழுவதும் லண்டனில் பெரும்பாலான நகரங்கள் தீயுடன் புகைந்தன.

லண்டனுக்கு வெளியே பெர்மிங்காமில் மட்டும் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டத்தொடங்கினார்கள்.

இவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கின்றதே, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலீஸார் உள்ள லண்டனில் எப்படிப் பொலிஸாரால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனது என்ற சந்தேகம் சாமான்யனுக்கும் ஏற்படும். உண்மைதான் லண்டன் பொலீசாரால் வேடிக்கை மட்டுமே சில மணி நேரம் பார்க்கமுடிந்தது. காரணம் அவர்களுக்கு வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. அத்துடன் பிரதமர் உட்பட பொறுப்பு வாய்ந்த பல அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருந்தார்கள்.

உள்துறைச் செயலாளர் திரேசா மே உடனடியாக தன் விடுமுறைய ரத்துச் செய்துகொண்டு வந்திருந்தாலும் அவரால் பொலீசாருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்கமுடியாமல் போனது. வெறுமனே இந்த வன்முறைகள் தண்டிக்கப்படவேண்டியவை என அறிக்கை மட்டுமே அடிக்கடி கொடுக்க முடிந்தது. ஸ்கொட்லாண்ட் யார்டின் பிரதி காமிசனர் ரிம் காட்வின் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளை உடனடியாக எங்கே இருக்கின்றார்கள் எனத் தேடும் படி அறிக்கை கொடுத்தார். இவர்கள் இருவரும் அடுத்தநாள் பிரதமர் டேவிட் கமரூன் வரும் வரை தாம் எதுவும் செய்யமுடியாது என்பதையும் தெரிவித்தார்கள்.

சில இடங்களில் வன்முறையாளர்கள் பொலீசாரை தாக்கிய சம்பங்களும் நடந்தன. இத்தனைக்கும் ஒரு சில ஆயிரம் பொலீஸார் மாத்திரமே கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். விடுமுறையில் சென்ற பொலீஸார் மீண்டும் கடமைக்கு அழைக்கப்பட்டார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை முதல் நாள் நடந்த வேண்டத்தகாத சம்பவங்களினால் லண்டன் வாசிகளுக்கு பயத்துடனே விடிந்தது. பல கடைகள் திறந்து உடனடியாகவே மூடப்பட்டன. மத்திய லண்டனில் இருக்கும் லண்டன் ஐ போன்ற சுற்றுலா இடங்களும் பொலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறுது நேரமே இயங்கின. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்டது போல வன்முறை லண்டனில் வெடிக்கவில்லை மாறாக மன்செஸ்டரில் வெடித்தது.

வன்முறையாளர்களில் பலர் வயதுக்கு வராத மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் 11 வயது மாணவனும் அடக்கம் என்பதும் பாடகி மியாவின் உறவினர் ஒருவரின் கடை கொள்ளையில் ஒரு 5 வயதுச் சிறுவன் ஈடுபட்டான் என்பதும் மியாவின் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இந்த வன்முறைக்கு மார்க் டுங்கனின் கொலை மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது, சமூக வலைத்தளங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடுத்த தாக்குதல் எங்கே என அறிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. பழமைவாதக் கட்சியின் சில கெடுபிடியான சட்டங்கள் மக்களை அரசின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. அரச உதவித் தொகையை மட்டுப்படுத்துவது, மாணவர்களுக்கான பல்கலைக் கழக கட்டணம் அதிகரிப்பு, போன்றன பலரிடம் அரசின் மீது வெறுப்பை தந்தது.

ஏற்கனவே மாணவர்கள் சென்ற வருடம் செய்த ஆர்ப்பாட்டங்கள் இத்தகைய வன்முறைக்கு அடிகோலினாலும் வன்முறைக்காரர்கள் அரசை எதிர்க்கின்றேன் என்று பொது மக்களின் சொத்துக்கு சேதம் விளைவித்ததும் கொள்ளை அடித்ததும் தண்டனைக்குரிய குற்றமே.

அத்துடன் பொலீசாரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமையும் ஒரு காரணமாகும். நேற்றுத்தான் வன்முறையாளர்கள் மேல் தண்ணீர் பீய்ச்சி அடிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் வன்முறையாளர்களுக்கு காலுக்கு கீழ் அடிக்கவோ அல்லது சுடவோ அதிகாரம் கொடுக்கப்படவில்லை.(எங்கள் நாட்டுப் பொலீசார் என்றால் சகல அதிகாரமும் இருக்கு). அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தை விட கொஞ்சம் சர்வாதிகாரம் கலந்த ஜனநாயகமே என்றைக்கும் நன்மை பயக்கும்.

லண்டன் 2012 ஒலிம்பிக்குக்கு இன்னமும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் போது லண்டன் வன்முறைகள் பாரிய பொருளாதார பாதுகாப்பு நெருக்கடிகளை கமரூன் அரசுக்கு கொடுக்கும் என்பது நிச்சயம்.

பின்குறிப்பு :அடடே இது எனது 300ஆவது பதிவு. (ஷப்பா எவ்வளவு கஸ்டம்)

19 கருத்துக் கூறியவர்கள்:

KANA VARO சொல்வது:

300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

நிரூஜா சொல்வது:

300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மாமா!

இந்த வாரம் முழுவதும் ஒரு வெள்ளையுடன் சேர்ந்து ஆணி புடுங்கவேண்டி இருந்ததால், லண்டன் கலவரம் பற்றி ஒரு தகவலும் வாசிக்கவில்லை. விடயங்களைத் தொகுத்து தந்தமைக்கு நன்றி.

லண்டனில் இருந்து வந்த வெள்ளை சொன்னான், சுடப்பட்டவர் ஒரு போதைப் பொருள் வினியோகஸ்தர் என்று? அப்படியா?

KANA VARO சொல்வது:

ஈலிங்கிளுள்ள ஒரு கடை என் கமேராவில் சுட்டது//

என்னால சுட முடியல. போனை ஆட்டையை போட்டுட்டாங்கள்.

ஜோ/Joe சொல்வது:

பல செய்திகளை படித்தும் பிரச்சனையின் அடிப்படையை புரிந்துகொள்ள முடியவில்லை ..நீங்க கச்சிதமா கொடுத்திருக்கீங்க ..300-வது பதிவுக்கு வாழ்த்துகளோடு சேர்த்து நன்றி.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

300வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அதை விட முக்கியம் நீங்கள் கவனமாக இருக்கவும்... Be Safe

Subankan சொல்வது:

300வது பதிவுக்கு வாழ்த்துகள் மாம்ஸ்!


லண்டனில் பிரச்சினை என்றால் பேசாமல் புலம்பெயர்ந்து இலங்கைக்கு வரவேண்டியதுதானே? ஏன் அங்கே இருந்து கஸ்டப்படுகிறீர்கள்? ;-) :p

vidivelli சொல்வது:

நல்ல தகவல்..
அனைத்துச்சம்பவங்களையும் பதிவிட்டிருக்கிறீங்க..
அறிந்துகொண்டேன்..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

எனதுபக்கம்...
எதற்கோ தெரியவில்லை..?

Unknown சொல்வது:

300வது பதிவுக்கு வாழ்த்துகள் Lond0n மாம்ஸ்! (-:

Unknown சொல்வது:

ரிபிள் செஞ்சுரி அடித்தமைக்கு வாழ்த்துக்கள்

வந்தியத்தேவன் சொல்வது:

KANA VARO said...
300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

நன்றிகள்

வந்தியத்தேவன் சொல்வது:

//நிரூஜா said...
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மாமா!//

நன்றிகள் காவலரே

//இந்த வாரம் முழுவதும் ஒரு வெள்ளையுடன் சேர்ந்து ஆணி புடுங்கவேண்டி இருந்ததால், லண்டன் கலவரம் பற்றி ஒரு தகவலும் வாசிக்கவில்லை. விடயங்களைத் தொகுத்து தந்தமைக்கு நன்றி.//

வெள்ளையுடன் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.

//லண்டனில் இருந்து வந்த வெள்ளை சொன்னான், சுடப்பட்டவர் ஒரு போதைப் பொருள் வினியோகஸ்தர் என்று? அப்படியா//

ஆமாம் ஒருமுறை சிறையும் சென்றவராம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//KANA VARO said...

என்னால சுட முடியல. போனை ஆட்டையை போட்டுட்டாங்கள்.//

போன் மட்டுமல்ல ஆளையே ஆட்டையைப்போடும் நாடு இது.

வந்தியத்தேவன் சொல்வது:

//ஜோ/Joe said...
பல செய்திகளை படித்தும் பிரச்சனையின் அடிப்படையை புரிந்துகொள்ள முடியவில்லை ..நீங்க கச்சிதமா கொடுத்திருக்கீங்க ..300-வது பதிவுக்கு வாழ்த்துகளோடு சேர்த்து நன்றி.//

நன்றிகள் ஜோ ஆனாலும் சிலர் இந்த வன்முறைகளை புரட்சியுடன் சேர்த்துப் பார்க்கின்றார்கள். இது அப்பட்டமான வன்முறையே ஒழிய அரசுக்கு எதிரான புரட்சி அல்ல.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வொய்ஸ் (யோகா) said...
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அதை விட முக்கியம் நீங்கள் கவனமாக இருக்கவும்... Be Safe//


நன்றிகள் யோகா, நாங்கள் வன்முறைப் பக்கம் தலை வைக்காமல் மான் கராத்தேயில் எஸ்கேப் ஆனவர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// Subankan said...
300வது பதிவுக்கு வாழ்த்துகள் மாம்ஸ்!//

நன்றிகள் சின்னமாம்ஸ்.

//லண்டனில் பிரச்சினை என்றால் பேசாமல் புலம்பெயர்ந்து இலங்கைக்கு வரவேண்டியதுதானே? ஏன் அங்கே இருந்து கஸ்டப்படுகிறீர்கள்? ;-) :ப்//

அட இது நல்லா இருக்கே. அங்கே மன்னராட்சியில் மாதம் மும்மாரி பொழியும் போது நான் ஏன் கஸ்டப்படவேண்டும், இன்னும் சில நாட்கள் இருந்து பார்த்துவிட்டு வாறன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//vidivelli said...
நல்ல தகவல்..
அனைத்துச்சம்பவங்களையும் பதிவிட்டிருக்கிறீங்க..
அறிந்துகொண்டேன்..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றிகள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//UsaMa said...
300வது பதிவுக்கு வாழ்த்துகள் Lond0n மாம்ஸ்! (‍://

நன்றிகள்.

வந்தியத்தேவன் சொல்வது:

M.Shanmugan said...
ரிபிள் செஞ்சுரி அடித்தமைக்கு வாழ்த்துக்கள்

நன்றிகள்.

aotspr சொல்வது:

300வது பதிவுக்கு வாழ்த்துகள்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com