உபகண்டத்தில் கிரிக்கெட் யுத்தம்

இலங்கை, இந்தியா, வங்களாதேஷ் ஆகிய 3 தென்னாசிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011ன் உலகக் கிண்ணப்போட்டிகளின் பரபரப்புகள் ஆரம்பிக்க இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை வங்கதேசம் மிர்பூரில் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்ளும் முதலாவது போட்டியுடன் உலகக் கிண்ணம் ஆரம்பமாக இருக்கின்றது.


அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை கணித்து எழுத நேரம் காணதபடியால் என்னுடைய பார்வையில் ஒரு மெல்லிய நுனிப்புல் மேய்தல் மட்டுமே.

அவுஸ்திரேலியா

நடப்புச் சாம்பியனும் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி இந்தமுறை கொஞ்சம் பலமிழந்த நிலையில் காணப்பட்டாலும் பொண்டிங், கிளார்க், டேவிட் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, வட்சன் போன்றவர்களின் அனுபவங்களால் எதுவும் நடக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் ; ரிக்கி பொண்டிங்

எதிர்வுகூறல் : அரை இறுதி

வங்கதேசம்

சொந்தமண் என்ற பலமும் ஷாகிபுல் ஹசனின் தலைமைத்துவமும் வங்கதேசத்தின் பலமாக இருப்பதுடன், தமீம் இக்பால், அப்டுர் ரஷாக், அஷ்ரபுல் போன்றவர்களும் அணிக்கு கை கொடுத்தால் வங்கதேசம் ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம்.

கவனிக்கவேண்டியவர் : தமீம் இக்பால்

எதிர்வுகூறல் : கால் இறுதி

கனடா

தங்களது குழுவில் சிம்பாவே அல்லது கென்யாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கலாம் மற்றும் படி இன்னமும் முன்னேறவேண்டிய அணி.

கவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன்

எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

இங்கிலாந்து

ஆஷஸ் தொடரில் ஆஸியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினாலும் ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாக தோற்றபடியால் பலராலும் உலகக்கிண்ணத்தில் சவாலாக இருக்கும் அணி எனக் கருதப்பட்டு தற்போது முதற்ச் சுற்றிலோ அல்லது காலிறுதியுடனோ வெளியேறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அணி. பீட்டர்சன், கொலிங்வூட், பெல், ஸ்ரோஸ், ரவி போபாரா என சிலரின் கைகளில் தான் இவர்களின் வெற்றி தங்கியிருக்கின்றது.

கவனிக்கவேண்டியவர் : பீட்டர்சன்

எதிர்வுகூறல் :கால் இறுதி

இந்தியா

ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது சொந்த மண் போன்ற அனுகூலங்களை மட்டுமல்ல அனுபவ சச்சின், சேவாக், டோணி, ரெய்னா, முக்கிய நேரங்களில் கைகொடுக்கும் யூசுப் பதான் என மிரட்டல் வீரர்களினாலும் மச்சக்காரன் டோணியினாலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு வரலாம் வந்தால் உலகக்கோப்பை அவர்களுக்குத் தான்.

கவனிக்கவேண்டியவர் : யூசுப் பதான்

எதிர்வுகூறல் :இறுதிப்போட்டி

அயர்லாந்து

இன்னொரு சாதாரண அணி நெதர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்)

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

கென்யா

2003 உலககிண்ணப்போட்டியில் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணி. சிம்பாவே கனடா போன்ற் நாடுகளுடன் வெற்றி பெற முயற்சிக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் :ஸ்டீவ் ரிக்கலோ

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

நெதர்லாந்து

இன்னொரு சாதாரண அணி அயர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : ரையன் ரென் டொச்செட்டே (எசெக்ஸ் சகலதுறை வீரர் கவுண்டிப்போட்டிகளில் கலக்கியவர்)

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

நியூசிலாந்து

பாகிஸ்தான் வங்கதேசம் என அண்மைக்காலமாக அடித்து துவைக்கப்பட்ட அணி, மக்கலம், வெட்டோரி, ரைடர், டைலர் எனப் பல அனுபவஸ்தர்கள் இருந்தும் எதோ ஒன்று குறைவதனால் பிரகாசிக்க முடியவில்லை.

கவனிக்கவேண்டியவர் :டானியல் வெட்டோரி

எதிர்வுகூறல் :கால் இறுதி

பாகிஸ்தான்

உட்கட்சிப்பூசலினால் கடைசி நேரம் வரை யார் தலைவர் என்ற விடயம் தெரிந்திருக்காத அணி, அவ்ரிடி, மிஷ்பா உல் ஹக். அப்துல் ரசாக், அக்தர், கம்ரன் அக்மல் என எதிரணியினரைப் பயமுறுத்தும் வீரர்கள் இருப்பதால் காலிறுதிப்போட்டி உறுதி காலிறுதியில் கலக்கினால் 1999 போல் இறுதிப்போட்டிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஒற்றுமையான அணியாக விளையாடினால் எதுவும் நடக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : அப்ரிடி

எதிர்வுகூறல் : கால் இறுதி

தென்னாபிரிக்கா

இதுவரை எந்தவொரு உலககிண்ணத்திலும் இறுதிப்போட்டிக்கு வராத துரதிஷ்டம் பிடித்த அணி. இம்முறை கிண்ணத்தைப் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா அல்லது ஆஸியுடம் மோதினால் நிலமை கவலைக்கிடம் தான். கலிஸ், ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி, அம்லா என அதிரவைக்கும் துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சுத்தான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது.

கவனிக்கவேண்டியவர் :ஜாக் கலீஸ்

எதிர்வுகூறல் :அரை இறுதி

ஸ்ரீலங்கா

போட்டிகளை இணைந்து நடத்தும் நாடு என்பதால் முதல் சுற்றில் சொந்த மைதானங்கள் பலம். சங்ககாரா, டில்ஷான், ஜெயவர்த்தனா, தரங்கா, கப்புஹெதரா என பலமான துடுப்பாட்ட வரிசை தனது இறுதி உலககிண்ணத்தில் விளையாடும் முரளியின் சுழல் என இலங்கை அணிக்கு சாதகமான அம்சங்கள் பல. இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் கிண்ணம் பறிபோகலாம்.

கவனிக்கவேண்டியவர் :முரளிதரன்

எதிர்வுகூறல்: இறுதிப் போட்டி

மேற்கிந்தியத்தீவுகள்

ஒருகாலத்தில் உலகையே அச்சுறுத்திய நாடு இன்றைக்கு வேஸ்ட் இண்டிசாக மாறியது பரிதாபமே. கெய்ல், சர்வான், சந்திரபோல், பிரவோ என பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் பந்துவீச்சு பலவீனம் தான். கிரிஷ் கெய்லுக்கு சாமி வந்தால் மட்டும் ஏதாவது அதிசயம் நிகழலாம் மற்றும் படி வந்தார்கள் சென்றார்கள் அணிதான். காலிறுதிக்கு வருவதே கனவுதான்.

கவனிக்கவேண்டியவர் :சந்திரபோல்

எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறலாம்.

சிம்பாவே

இன்னொரு வந்தார்கள் சென்றார்கள் அணி. ஒரு காலத்தில் கொஞ்சமாவது ஏனைய அணிகளை மிரட்டிய அணி இப்போ அரசியல் சிக்கல்களால் சின்னாபின்னமாகிவிட்டது.

கவனிக்கவேண்டியவர் :பிரன்டன் டைலர்

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்.

எந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.

ஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011

அரசியல்

உலகம்
சில நாட்களாக எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலகி எகிப்தில் இன்னொரு இடத்தில் தலைமறைவாக இருக்கின்றார். துனிஷியா, சூடான் வரிசையில் எகிப்தும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது.

முபராக் தனது அதிகாரங்களை எல்லாம் இராணுவ கவுன்ச்லிட‌ம் கொடுத்துவிட்டு பதவி விலகியுள்ள நிலையில் தற்போது இராணுவத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளிடம் பதவிக்கான இழுபறி நடைபெறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதே நேரம் இராணுவ கவுன்சில் விரைவில் அரசின் யாப்பை மாற்றவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியமூலம் எகிப்திய இளைஞர்கள் இந்தப் புரட்சியை உலகம் எங்கும் பரப்பியமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் புரட்சிகள் நமது தென்னாசிய நாடுகளில் எப்ப வெடிக்குமோ? அல்லது அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்தியா

இன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் திமுகவினர் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களினது ஆட்சிதான் நடக்கின்றது, இந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேர்தலுக்கான கண்துடைப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சு பதவிகளுக்காகவும் தேர்தல் கூட்டணிக்காகவும் டெல்லிக்கு பறக்கும் தாத்தா, வழக்கம் போல் பதவி விலகல், உண்ணாவிரதம் போன்ற ஓரங்க நாடகங்களை நிகழ்த்தியிருக்கலாமே? ஓஓஓ அப்படிச் செய்தால் ஆ.ராசாவுடன் அவரும் சிறைக்குள் போகவேண்டுமே. ஸ்பெக்ட்ரம் என்ற மூக்கணாங்கயிறு இப்போ சோனியாவின் கையில் இருப்பதால் தாத்தாவும் அவரது இளவரசியும் டெல்லி சொல்ப்படிதான் நடக்கவேண்டும்.

எகிப்துபோல் தமிழ்நாட்டு இளைஞர்களும் சில நாட்களாக இணையத்தளங்களில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலை தேர்தல் வரை நீடித்து அரசைக் கவிழ்க்குமா? இல்லை வழக்கம்போல் திமுக பணபலத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?

பயணமும் யுத்தம் செய்யும்

பயணம் பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான ஒரு த்ரில்லர். விமானக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பணயக் கைதிகளாக இருக்கும் பொதுமக்களை எப்படி சிறப்பு அதிரடிப்படையினர் அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகள், மீடியாக்களின் டீஆர்பி ரேட்டிங்குகள் போன்ற இடர்களில் இருந்து மீட்பதை இரண்டரை மணி நேர கடுகதி வேக திரைக்கதையில் ராதாமோகன் சிறப்பாகாவே சொல்லியிருக்கின்றார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்தின் சிறப்பு. அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாகர்ஜீனா தமிழ்ப்படத்தில், இதயத்தை திருடாதேயில் பார்த்ததுபோலவே இப்பவும் இளமையாகவே இருக்கின்றார். விமானப் பணிப்பெண்ணாக வரும் நடிகையும் இன்னொரு நடிகையும் அழகாகத் தான் இருக்கின்றார்கள்.

பாலம் என்றொரு படம் முரளி நடித்து பல காலத்துக்கு முன்னர் வெளியானது, அந்தப் படத்திற்க்குப் பின்னர் வெளி வரும் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். படத்தின் சிறப்பம்சம் பாடல்களே இல்லை.

யுத்தம் செய் சேரன் கதை நாயகனாக நடித்து மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு த்ரில்லர். படத்தின் வேகம் தான் பலவீனமே, மிகவும் ஆமை வேகத்தில் மெஹா சீரியல் பார்த்ததுபோல் போவது சினத்தை தருகின்றது. எடிட்டர் சில இடங்களில் கத்தரி போட்டு படத்தை அஞ்சாதே போல வேகமாக ஆக்கி இருந்தால் நிச்சயம் இந்தப் படம் இன்னமும் பேசப்பட்டிருக்கும்.

அந்தக் குத்துப்பாடல் இடைச் செருகலாக இருந்தாலும் அமீரின் நடனமும் சாரு நிவேதிதாவின் ஆர்மோனியா இசைப்பும் பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைக்கும். இனிமேல் சாரு இளையராஜாவைப் பற்றி தப்பாக எழுதினாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அவரின் விரல்கள் ஒரு தேர்ந்த‌ இசைமேதையின் விரல்கள் போல அந்த ஆர்மோனியத்தில் உலாவருவது அவரின் இசைத் திறனை நிருபீக்கின்றது.

பொன்னியின் செல்வன்
கல்கியின் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுச் சரித்திரம் இது. அந்தநாளில் இருந்து பலர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றாலும் ஏனோ அந்த முயற்சிகள் கைகூடவில்லை. சிவாஜியின் ராஜராஜசோழன் படம் மட்டும் கொஞ்சம் பொன்னியின் செல்வனைச் சார்ந்து வெளியானது.லட்சுமி குந்தவையாக நடித்தது பொருத்தமேயில்லை.

தற்போது மணிரத்தினம் இதனைத் திரைப்படமாக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகுகின்றன. ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது. அதேபோல் கல்கியினால் அழியா வரம் பெற்ற அருண்மொழிவர்மன், வந்திய்த்தேவன், குந்தவை, வானதி,நந்தினி, பழுவேட்டரையர்களை மணிரத்தினம் நிச்சயம் கேவலப்படுத்திவிடுவார். அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது.

மணிரத்தினம் இயக்கம் என்றவுடனே வசனம் சுஹாசினி எழுதப்போவதை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுது. கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம். பழுவேட்டரையர்களாக நாசர், பிரகாஷ்ராஜும் பொருத்தமாக இருக்கும். குந்தவை ,வானதி, பூங்குழலி, நந்தினி பாத்திரங்களுக்கு தற்போதைய எந்த நடிகையும் பொருத்தமில்லை.

கிரிக்கெட்

உலகக்கோப்பைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பயிற்சி ஆட்டங்களில் நேற்றைய ஆட்டத்தில் அயர்லாந்து சிம்பாவேயையும் நெதர்லாந்து கென்யாவையும் வீழ்த்து கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தன. ஏனைய போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளே வந்தன. ஆஸியின் ஸ்திரமில்லாத பேட்டிங் அவர்கள் கொஞ்சம் அண்டர்பிளே செய்வதுபோல் தெரிகின்றது, இந்தியா தென்னாபிரிக்கா இரண்டு அணிகளுடனும் ஆஸி 225க்கு குறைவான ஓட்டங்களே எடுத்தது. இலங்கை மேற்கிந்தியாவுடன் கொஞ்சம் கஸ்டப்பட்டு வென்றதுபோல் தெரிகின்றது, இனி வரும் நாட்களில் வேகங்களும் சுழல்களும் சிக்ஸர்களும் சின்னச் சண்டைகள் என உபகண்டம் அதிரப்போகின்றது.

ஒரு கண்டனம்

ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகை பெரும்பாலும் வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் அவர்களின் பெயர்களுடன் வெளிவருகின்றது, ஆனாலும் ஏனோ அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை இவர்கள் போடுவதில்லை. தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாது அவர்களின் சுட்டிகளையும் தந்தால் வாசிப்பவர்கள் அந்த வலைகளையும் சென்றுபார்க்கலாம்.

வாழ்த்து

எங்கள் நட்பு வட்டாரத்தின் இளையவன், உள்ளூர் ஜேம்ஸ் அண்டர்சன், எம்மாவின் அன்புக் காதலன், போட்டோ கமெண்ட் புலி, என்றும் நித்தியானந்தம் காணும் எங்களின் திருமலை குஞ்சு பவன் எனப்படும் பவானந்தன் இன்று தனது 21ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார். இவரை அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.

ரசித்தது
கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான், பார்த்து மனசுக்குள்ள கேப்பான்....
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க...

சுஜீவன் இராஜேந்திரம் (பேஸ்புக்கில்)

பவனுக்காக‌

வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும்

பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா?

சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

குந்தவை

"சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி."

என குந்தவையை கல்கி அறிமுகம் செய்கின்றார் அவளின் அழகை

"ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். பூரண சந்திரன்;ஆடும் மயில்; இந்திராணி; வேகவாஹினியான கங்காநதி;"

என வர்ணிக்கும் கல்கி இளையபிராட்டியின் அழகை வர்ணிப்பதைவிட அவரை ஒரு அரசியல் சாணக்கியம் மிகுந்தவராகவும், வீராங்கனையாகவுமே வாசகர்களிடம் உலாவவிடுகின்றார்.

இதனால் தான் என்னவோ வீராதிவீரனான வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலன் தன்னுடைய சகோதரியைப் பற்றி அவனுக்கு காஞ்சியில் கூறியபோதே ஒரு மெல்லிய மையல் ஏற்பட்டதும் அது பின்னர் அரிசிலாற்றங்கரையில் சந்தித்த முதல் சந்திப்பில் காதலாக மாறவும் காரணமாக இருந்திருக்கலாம். அதே நேரம் வந்தியத்தேவன் எப்போதும் கடமையே கண்ணானவன், குந்தவைக்கோ, தனது குடும்ப மற்றும் நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நேரம் போதவில்லை ஆகவே இவர்கள் இருவருக்கும் காதலிக்க நேரம் கிடைக்கவில்லை.

புத்திசாதுரியமான, தனது சகோதரனின் வெற்றிக்கு பாடுபட்ட , தலைமைத்துவத்துக்குரிய பெண்ணுக்கு சிறந்த உதாரணமாக குந்தவையை கூறலாம்.

வானதி

"கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள் வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை, குமுத மலரின் இனிய அழகை உடையவள், காலைப் பிறை, பாடும் குயில், மன்மதனின் காதலி, குழைந்து நெளிந்து செல்லும் காவேரி."

என வானதியைப் பற்றி வர்ணிக்கும் கல்கி இவரை ஒரு இளவரசி என்பதை விட சாதாரண பெண்ணாகவே பல இடங்களில் காட்டியிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் பயந்த, தானாகவே எந்த முடிவும் எடுக்கமுடியாத காதலில் விழுந்த ஒரு பேதையாகவே வானதி உலாவருகின்றாள். இப்போதைய நடிகைகளில் சிறுத்தை தமன்னா போல அல்லது லைலா போல் வானதி இருந்திருப்பாள்.

அதே நேரம் வாழ்ந்தாள் அருள்மொழிவர்மனுடன் தான் வாழுவேன் என காதல் பைத்தியம் பிடித்ததும் இவருக்குத் தான்.

அதே நேரம் சிற்றரசின் இளவரசி சோழப்பேரரசின் பட்டத்து ராஜாவை காதலித்து திருமணம் செய்ததன் மூலம் தகுதி, அந்தஸ்து போன்றவை அந்தக்காலத்தில் இல்லையோ என்ற ஐயமும் வாசிப்பவர்களுக்கு வரும். வந்தியத்தேவன் குந்தவை காதலும் இதேபோல் ஒரு சிற்றரசன் பேரரசி காதல் தான்.

நந்தினி

பொறாமை, கோபம், சுயநலம் என பல கெட்டகுணங்களை உடையவள், ஆனானப்பட்ட பழுவேட்டரையரையே கவிழ்த்ததுடன் ஆதித்தகரிகாலன், வந்தியதேவன், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன் போன்ற வீரர்களையும் ஒரு கணமேனும் தன் அழகில் மயக்கிய பெண் வடிவில் வந்த மாயப்பிசாசுதான் நந்தினி. நாகபாம்பின் நஞ்சும் பாயும் புலியும் ஆக்ரோசமும் பழுவூர் இளையராணியான நந்தினியிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்ட குணங்கள்.

தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு இனத்தையே(சோழர்கள்) பழிவாங்க முயன்று தோற்ற இராட்சசி. (இந்தவரிகள் பிரபல அரசியல்வாதியை இனம் காட்டினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல).

நந்தினியின் அழகை வந்தியதேவன் வாயிலாக நம்பிக்கும் வாசகர்களுக்கும் கல்கி இவ்வாறு சொல்கின்றார்.

"அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"

அதே நேரம் கல்கி நந்தினியின் அழகை வர்ணித்ததுபோல் குந்தவையையோ வானதியையோ வர்ணிக்கவில்லை.

"குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது."


"இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்."

ஒருவரின் பொறாமை கோபம் பழிவாங்கும் உணர்ச்சி அவருக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நந்தினி. குந்தவையிடம் அரசியல் சாணக்கியம் இருந்தது என்றால் நந்தினியிடம் அரசியல் சூழ்ச்சி இருந்தது.


பூங்குழலி

அருள்மொழிவர்மனையும் வந்தியத்தேவனையும் சமுத்திரராஜனிடம் இருந்து காப்பாற்றிய ஓடக்காரி. சேந்தன் அமுதனின் மைத்துணி. அருள்மொழிவர்மனுடன் தான் பட்டத்துராணியாக இருப்பதுபோல் கனவு கண்ட ஒருதலைக்காதல்காரி. பொன்னியின் செல்வனில் இன்னொரு சராசரிப் பெண். ஓடக்காரியாக இருந்தபடியாலோ என்னவோ இவளின் காதல் நிறைவேறவேயில்லை.

இவளின் அழகை சேந்தன் அமுதன் வந்தியதேவனுக்கு கூறும்போது "மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்." என்கின்றான்.

ஒருதலைக் காதலுக்கு சிறந்த உதாரணம் என்றால் பூங்குழலி அருள்மொழிவர்மன் மேல் வைத்திருந்த காதலையும் சேந்தன் அமுதன் பூங்குழலி மேல் வைத்திருந்த காதலையும் கூறலாம்.

இந்த நான்கு பெண்கள் மூலம் கல்கி பெண்களின் குணாதிசயங்களை பெரிதும் எடுத்தியம்பியிருக்கின்றார்.

எனக்கு குந்தவையை விட வானதியைத் தான் அதிகம் பிடித்திருக்கின்றது. குந்தவை பேரழகியாக இருந்தாலும் வானதியைப்போல் அடக்கம், அமைதி, விட்டுக்கொடுத்தல் போன்ற சில குணங்கள் அவரிடம் இல்லை. உங்களுக்கு பிடித்த அழகி யார்? பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுபோங்கள்.

பின்குறிப்பு :
தலைப்பைப் பார்த்து எனது வழக்கமான சொசெசூ கதை என நினைத்து வந்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. இந்த நான்கு பெண்களில் வானதியைத் தவிர்த்து ஏனைய மூவர் மேலும் வந்தியதேவனுக்கு ஈர்ப்பு வந்தது மட்டும் உண்மை.