நான்காம் ஆண்டும் நட்புகளும்

இன்றுடன் நான் உளறத் தொடங்கி நான்கு வருடங்கள் முழுமையாக முடிந்துவிட்டன. 2006ல் ஏனோ தானோ எனத் தொடங்கிய வலைப்பதிவு இன்று வரை 270 பதிவுகள் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் 145 பிந்தொடர்பவர்கள் என ஓரளவு ஆரோக்கியமாக இருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாக என்னை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கும் பெயருடனும் பெயரில்லாமலும் வந்து திட்டியவர்களுக்கும் பின்னூட்ட இட்ட திரட்டிகளில் ஓட்டுப்போட்ட நண்பர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய திரட்டிகளான தமிழ்மணம்,யாழ்தேவி, தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும் என்னுடைய சில பதிவுகளையும் அறிமுகத்தையும் பிரசுரித்த தினக்குரல், இருக்கிறம், மெட்ரோ நீயூஸ் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் , அத்துடன் ஈழத்துமுற்றம், சகலகலா வல்லவன் ஆகிய வலைகளில் என்னுடைய ஆக்கங்களை வெளியிட்ட அதன் நிர்வாகிகளுக்கும், என்னுடைய உளறல்களைப் பிந்தொடரும் 145 அப்பாவிகளுக்கும் அல்லது பொறுமைசாலிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.



ஏற்கனவே வலை எழுத வந்த கதையை எழுதியிருப்பதால், இந்தப் பதிவில் என்னை ஊக்குவிக்கின்ற வலையுலக நண்பர்களையும் வலையுலகில் எனக்கு கிடைத்த நண்பர்களையும் பற்றி ஒரு சின்ன தொகுப்பு.

முதலில் வலையுலகில் எனக்கு கிடைத்த குருநாதர்களைப் பற்றிப் பார்த்தபின்னர் நண்பர்களைப் பார்ப்போம்.

லக்கிலுக் :

என்னுடைய வலையுலக வாழ்க்கையை ஒரு துரோணராக இருந்து கற்பித்த குரு. இன்றைக்கு தனக்கென ஒரு பாணி, ஒரு வட்டம் என அமைத்து இடையிடையே என் வலையையும் எட்டிப் பார்க்கின்ற இனிய நண்பன். சில அரசியல் கருத்து வேறுபாடுகள் எமக்கிருவருக்கிடையில் இருந்தாலும் என்றைக்கும் அவர் என் குருதான்.

கானா பிரபா :
வலை எழுத வருமுன்னர் கிடைத்த இன்னொரு நட்பு. பின்னர் வலையுலகில் நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு. அனானித் தாக்குதல்களைச் கருத்தில் எடுக்கவேண்டாம் என பலவேளைகளில் ஆறுதல் கூறியதுடன் பின்னர் ஈழத்துமுற்றத்தில் என்னையும் இணைத்து இன்றைக்கும் உலாத்தல் நாயகனாக ட்விட்டர் சிங்கமாக வலம் வருகின்றவர். இன்று நண்பனாக, அண்ணனாக, குருவாக பல அவதாரம் எடுத்து என்னுடன் அன்பு பாராட்டுகின்றவர்.

லெனின் :
வலை எழுத முன்னரே லக்கியுடன் அறிமுகமான சகோதரன் என்னுடைய ஒரு தம்பி என்பதில் பெருமை அடையலாம். என்னுடைய வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்த பெருமை இவனுக்குத் தான் சேரும் (இவர் என எழுதினால் என்னுடன் கோவிப்பார்). நக்கல், நளினம், இவரிற்க்கு கைவந்த கலை. வலை ஒன்றை ஆரம்பித்து இடையில் வேலைப் பழுகாரணமாக‌ கைவிட்டுவிட்டு இன்று நறுமுகையின் சொந்தக்காரராக அடுத்த அடி வைத்திருக்கின்றார். எனக்கு மொக்கைப் பதிவுகளை எழுத ஊக்கம் கொடுத்த லெனினாந்தா இவர் தான்.

என் நட்புகளை ஒன்றானவன் இரண்டானவன் என வகைப்படுத்த முடியாதபடியால் அகர வரிசையில் (ஆங்கில) தருகின்றேன்.




அசோக்பரன் :
முதலாவது சந்திப்பில் அறிமுகமான நண்பர். தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக கூறுகின்றவர். பின்னூட்டங்களில் மட்டுமல்ல பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் என்னுடன் நட்பு பாராட்டுகின்றவர். நடமாடும் கால்ப் பந்து திரட்டி.

அச்சுதன் :
பங்குச் சந்தை என அறியப்பட்டவர், தற்போது லண்டனில் இருக்கின்றார். நேரிலும் ஓரிருமுறை போனிலும் பேசியிருக்கின்றேன். லண்டனில் இருந்தும் பங்குச் சந்தையைக் கொண்டு நடத்துகின்றார். விரைவில் அவரைச் சந்திப்பேன் என நினைக்கின்றேன்.

ஆதிரை :
முதலாவது பதிவர் சந்திப்பின் ஒரு அச்சாணி. நளபாகத்தின் முன்னாள் புல்லட்டை என்னுடன் கதைக்கவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் இன்றைக்கு என்னைக் கலாய்ப்பது என்றால் அவருக்கு அலாதி ப்ரியம். விசாப் பிள்ளையாரின் பக்தன். என் பாடசாலையில் எனக்கு சில வருடங்கள் இளையவர். நல்லதொரு தம்பியாக இருக்கவேண்டியவர் நல்ல நண்பனாக மாறிவிட்டார். இன்றும் எலித் தொல்லையால் கஸ்டப்படுவதாக வெள்ளவத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திரமான பதிவர், சிலவேளைகளில் மொக்கையும் எழுதி என்னைக் கவலை அடையவைத்தவர். இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர்.

ஆயில்யன் :
வலையில் கிடைத்த இன்னொரு நட்பு இந்தச் சின்னப்பாண்டி. ட்விட்டரில் இவரும் கானாவும் இருந்தால் களை கட்டும். அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர். துரியோதனன் கர்ணன் நட்புக்குப் பின்னர் இவரதும் கானாவினதும் நட்பும் தான் பதிவுலகில் பிரபலம். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் (பதிவுலகில் தான்) சிக்காதவர்.

பவன் :
இதுவரை நேரில் கண்டிராத கலகலப்பான பொடியன். போனில் பல தடவைகள் கதைத்திருக்கின்றேன்,இவனிடம் உசாராக இருக்கவேண்டும் இல்லையென்றால் எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர். எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம்.

பாலவாசகன் :
நேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது.

புல்லட் :
முதலாவது சந்திப்பின் ஆணி வேர். பல தடவை உணவகங்களில் சந்தித்த இனிய நண்பன். கொழும்பில் எந்த கடையில் சாப்பாடு ருசி என இவரிடம் கேட்டால் பதில்ல் கிடைக்கும். ஏனோ அண்மைக்காலமாக எழுதுவதில்லை. என்னை லண்டன் போனபின்னர் அடிக்கடி எழுதக்கூடாது போனவிடயத்தை கவனிக்கவும் என அன்பாக மிரட்டிய தம்பி. டைமிங் சென்சில் இன்னொரு கவுண்டமணி.(செந்தில் ஆதிரையா எனக்கேட்ககூடாது). தன்னுடைய அஞ்ஞாதவாசத்தை கைவிட்டு விரைவில் வலையுலகில் கலக்குவார் என புல்லட்டின் மூன்று கோடி வாசகர்கள் சார்பில் பத்துமலை முருகனை வேண்டுகின்றேன். (உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).

டொன் லீ :
நீண்ட காலமாக பதுங்குகுழியில் பதுங்கியே இருக்கும் சிங்கை மாதவன். வலையுலகில் ஆரம்பித்த நட்பு இன்று ட்விட்டரில் பரகுவே மொடல் அழகி லாரிசா ரிக்கீயூமீ பற்றி ட்விட்டுகின்ற வரை தொடர்கின்றது. பேஸ்புக்கில் ஃபார்பிலேயில் விவசாயம் கற்றுக்கொடுத்தது ஒரு யானையையும் எனக்கு அன்பளிப்புச் செய்த நண்பன். பதுங்குழியில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தன்னுடைய வலைப் பதிவை எழுதவேண்டும் என்பது பலரது விருப்பம். இப்போது தன்னை ஒரு வலைப்பதிவர் என்பதை விட ஒரு ட்விட்டியாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றார் இந்தச் சிவதயாளன்.

ஜாக்கி சேகர் :
தன்னுடைய வெள்ளந்தியான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னுடன் நட்புப் பாராட்டும் இனிய நண்பன். இவரின் திரைவிமர்சனங்களால் பார்த்த படங்கள் சில, பாராமல் தப்பிய படங்கள் பல. என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பிற்க்கு இவரின் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் தான் காரணம். விரைவில் வெள்ளித்திரையிலும் மின்னவிருக்கும் நட்சத்திரம்.

கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்

என்னை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட குருவைப் பல இடங்களில் மிஞ்சிய சிஷ்யன். முதலாவது சந்திப்பில் அமைதியாக பம்மிக்கொண்டிருந்தவர் பின்னர் தன்னுடைய முதலாவது பின்னூட்டங்களால் பலரின் நட்பை பெற்றவர். கிரிக்கெட் தரவுகளில் இவர் ஒரு நடமாடும் களஞ்சியம். என்னைப்போல் ஒரு தாவரபோஷணி. விரைவில் பசுப்பையன் மதுவினால் மாமிச போசணியாக மாறப்போவதாக ஏதோவொரு சமூகவலைத்தளத்தில் தகவல் இருந்தது. எந்தவொரு விடயத்தைக்கேட்டாலும் கூகுள் அம்மன் அருளால் உடனே பெற்றுத் தருபவர். அண்மைக்காலமாக இந்த உருவத்தின் மீதும் பலரின் கண்ணூறு பட்டுள்ளதால் பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியுள்ளார். இவரின் ஜீமெயில் காதல் மேசேஜ்களைப் பார்த்தால் பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர். கங்கோன் மீண்டும் உன் எழுத்துக்கள் எமக்குத் தேவை ஆகையால் மீண்டும் வரவும்.

கரவைக் குரல் :
இலங்கைப் பதிவுலகின் மூத்த பதிவரான தாசனினால் அறிமுகம் செய்யப்பட்டவர். இன்றைக்கு லண்டனில் வசிக்கும் இன்னொரு பதிவர் அலைஸ் ஊடகவியளாளர். என்னுடைய பள்ளியின் இளையமாணவர். அடிக்கடி போனில் கதைத்தாலும் இன்னமும் நேரில் சந்திக்கவில்லை. அவரின் ஆவலும் விரைவில் நடந்தேறும் என நினைக்கின்றேன். ஈழத்து மண்வாசனையில் பல விடயங்களை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பதிவர் இவர்.

கீர்த்தி :
முதலாவது பதிவர் சந்திப்பில் சந்தித்த கவிதாயினி. முன்னர் தினமும் ஒரு கவிதை எழுதியவர் இப்போ இடையிடையே தான் எழுதுகின்றார். அடிக்கடி பேஸ்புக்கிலும் ஜீமெயிலிலும் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு மறைந்துபோவர். நல்லதொரு நண்பி.

கிருத்திகன் :
பலதரப்பட்ட பதிவுகளை தன்னுடைய வலையில் எழுதிய கீத் எனப்படும் கிருத்திகனின் நட்பு பின்னர் பேஸ்புக், ட்விட்டர் எனப் பரவியது. இவரும் எனது பாடசாலை பழைய மாணவன். தன்னுடைய கருத்துகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்காத கீத் சிலவேளைகளில் அனானிகளால் சில விடயங்களில் நான் பாதிக்கப்பட்டபோது அவற்றை பெரிதாக எடுக்கவேண்டாம் என எனக்கு அறிவுரையும் வழங்கியவர். பாடசாலை காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்தான் என அவரின் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். நல்ல நண்பன் என்பதை விட நல்லதொரு தம்பி என்றே கூறவேண்டும்.

லோஷன் :
பாடசாலைக் கால நண்பர், பின்னர் இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தபடியால் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையுலகில் எனக்குப் பின்னர் வந்தாலும் பல பதிவுகளை எழுதிக் குவித்துள்ளார். சில நாட்களில் 3 அல்லது 4 பதிவு போட்டு சாதனை படைத்திருக்கின்றார். வலையுலகில் எழுதியபின்னர் மீண்டும் எம் நட்பு தொடங்கியது. நல்லதொரு நண்பன் சிலவேளைகளில் எனக்கு அறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்.

மருதமூரான் :
பெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன்.

மு.மயூரன் :
வலைப்பதிவு எழுதுவதற்க்கு முன்னரே கணணி வகுப்பில் அறிமுகமானவர். இலங்கைப் பதிவுலகின் பிதாமகன் இவர் தான். தான் சொல்லவந்தவற்றை எவருக்கும் பயப்படாமல் சொல்லும் இவரின் குணம் தான் இவரின் மிகப்பெரிய பலம். பாமின், பாலினி எனப் பலவகையான விசைப்பலகைகளுடன் குடும்பம் நடத்தினாலும் லினெக்ஸ்தான் இவரின் முதல் மனைவி. இவருடன் இணைந்து சில விடயங்கள் செய்வதற்கான திட்டம் இருந்தது ஆனாலும் என்னுடைய பெயர்வும் வேறுசில காரணிகளும் அவற்றைத் தள்ளிப்போட்டுவிட்டன.

பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்.

சமுத்திர சங்கீதம் - புதுமை , காதல் , அர்ப்பணிப்பு

சில புத்தகங்களை வாசிக்கத் ஆரம்பித்தால் அதன் கடைசிப் பக்கத்தில் முற்றும் வாசிக்கும் வரை நிறுத்தமுடியாது. என் வாசிப்பு அனுபவத்தில் பெரும்பாலான சுஜாதா கதைகள், பொன்னியின் செல்வன், செங்கைஆழியானின் நாவல்கள் இந்த அனுபவத்தை தந்தவை. அந்த வகையில் அண்மையில் சமுத்திர சங்கீதம் என்ற ஒரு புதுவகையான நாவலை அனுபவித்து வாசித்திருந்தேன்.

சமுத்திர சங்கீதம் திரு.புதுயுகன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ஃபாண்டசி அல்லது மெஜிக்கல் ரியலிசம் (தமிழ்ப் பெயர் தெரியவில்லை) எனப்படும் வகைக்குள் அடங்கும் நாவலாகும். ஒரு அம்புலிமாமா கருவினை பல தத்துவங்களுடனும் சிந்தனைகளுடனும் புதுயுகன் விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கின்றார்.

ஏட்ரியல் எட்மண்ட் என்ற இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் இந்தியாவைப் பற்றி எழுதுவதற்கு தன் நண்பன் தாமஸின் ஊரான கன்னியாகுமரிக்கு வருகின்றார். அந்த அழகிய கடற்கரையில் அவர் ஒரு அழகிய மச்சக் கன்னியை சந்தித்து அவளின் மேல் அல்லது அதன் மேல் மையல் கொள்கின்றார். அதே நேரம் அவரது நண்பரான தாமஸின் சகோதரி கிறிஸ்டி ஏட்ரியலின் மேல் காதல் கொள்கின்றார். இடையில் வேதாச்சலம் என்ற பெரிய மனிதர் அந்த மச்சக் கன்னியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்து வில்லனாக மாறுகின்றார். ஏட்ரியல் மச்சக் கன்னியுடன் சேர்ந்தாரா? கிறிஸ்டியின் காதல் நிறைவேறியதா? வேதாச்சலம் வெற்றி கண்டாரா? போன்ற விடயங்களை சுவாரசியமாக தனது கன்னி நாவலில் புதுயுகன் படைத்திருக்கின்றார். நாவலின் முடிவு எவராலும் எதிர்பார்க்க முடியாத‌து தான் இந்த நாவலின் வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கின்றேன்.

புதுயுகனின் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது ஒவ்வொரு அத்தியாய ஆரம்பங்களிலும் முதல் அத்தியாய முடிவுடன் ஒட்டியதான ஒரு தத்துவத்தை பாத்திரத்தினூடாக விளக்கி கதையைத் தொடர்கின்றார். வசனங்கள் யாதர்த்தமானவை மட்டுமல்ல ஆழமானதும் கூட. சில இடங்களில் ஆசிரியர் தன்னுடைய மெய்ஞான அறிவைக் காட்டியிருக்கின்றார். உதாரணமாக மரணத்தினை இலகுவாக விளக்கும் இடத்தைக் குறிப்பிடலாம்.

ஏட்ரியலும் தாமசும் மீனவக் குப்பம் ஒன்றில் எதிர்பாரத விதமாக சென்றபோது அவர்களின் விருந்தோம்பலை தவிர்க்கமுடியாமல் இருந்த இடத்தில் நடந்த உரையாடல் இது ;

"ஏட்ரியல் இவர்கள் அயல்நாட்டவரின் நட்புக் கிடைத்ததில் ரொம்ப பெருமை . அதனால் தான் உன்னை விடமாட்டேன் என்கின்றார்கள். எப்படி எங்கள் இந்தியர்களின் விருந்தோம்பல்?

உங்கள் விருந்தோம்பலைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இருநூறு ஆண்டுகளாக நாங்கள் இங்கு விருந்தாளிகளாக இருந்தோமே! அதிலிருந்து தெரியவில்லையா?

தாமஸ் என்னை முறைத்தான்"

இதில் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தமையை ஏட்ரியல் விருந்தோம்பல் என்ற ரீதியில் கிண்டலாகச் சொல்ல தாமஸ் முறைத்தான் என்பது இன்றைக்கும் இந்தியர்கள் அதனை மறக்கவில்லை என்பதையே உணர்த்துகின்றது.

இப்படிப் பல இடங்களில் புதுயுகன் சிந்திக்க வைக்கின்ற வரிகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் பல பாத்திரங்கள் இல்லாமல் ஒரு சில பாத்திரங்களூடு கதையைக் கொண்டு சென்றதும் அவரின் ஆற்றலுக்கு சான்று. சாமுத்திரிகாதேவி என்ற பாத்திரம் சாமுத்திரிகா லட்சணம் என்ற எண்ணக் கருவில் உருவானது போல காட்டியிருப்பது சிறப்பானது.

தத்துவமசி என்கின்ற உபநிடத தத்துவத்தை அதாவது நீ எதுவாக எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற எண்ணக்கருவை இந்தக் கதையின் நாயகன் ஏட்ரியலின் பாத்திரம் உணர்த்துகின்றது. அத்துடன் இன்பம் போலியானது, இயற்கையுடன் கூடவே மனிதன் வாழவேண்டும் என்பது போன்ற தத்துவங்கள் அல்லது சிந்தனைகள் மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் விளக்கப்பட்டிருக்கின்றது.

"தன் இயல்பான மொழியில் பாசங்கில்லாத வெளிப்பாட்டில் ஒரு நாட்குறிப்பின் தொனியில் இந்த நாவல் நடையைப் புதுயுகன் அமைத்திருக்கின்றார். அதனால் வாசிப்பவர் மனதுக்குள் சோர்வைத் தராது சுகமாய் இடம் பிடித்து விடுகின்றது இவரின் நடை.

இவர் தெறிப்பான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் என்பதனை இந்தப் படைப்பின் வழி அறியமுடிகின்றது "

என கவிப்பேரரசு வைரமுத்து தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

"காதலுக்குரிய கண்ணியம், கெளரவம் ஆகியவற்றை அமரர் கல்கி போலவே இவரும் தருகின்றார். அத்தியாயங்களின் எண்ணிக்கை மட்டும் கூடவில்லை கதையின் போக்கில் எதிர்பார்ப்பும் கூடுகின்றது."

என கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தின் நிர்வாக அறங்காவலர் திரு.அ.வேதரத்னம் தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.

லண்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.அசோகன் த‌ன் அணிந்துரையில் நாவலைப் பற்றி மிகவும் சுருக்கமாக குறிப்பிட்டு இந்தக் கதை காதல் கதை நிறைந்த அனுபவத்துடன் புதுமையாக எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

பிரபல ஓவியர் ஜெ... என அறியப்பட்ட திரு.ஜெயராஜ் தன்னுடைய அணிந்துரையில் புதுயுகன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றார். அவருடைய எழுத்து நடை கடலலையின் அடுக்குத் தன்மையை மென்மையை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது என்கிறார்.

அவருக்கும் என்னைப்போல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அவரின் ஓவியங்களும் நாவலுக்கு வலு சேர்க்கின்றது என்றால் மிகையில்லை.

ஒரு வித்தியமாசமான களத்தில் எதிர்பாரத முடிவுடன் நிறைவடைந்துள்ள இந்த நாவல் வாசித்தமை எனக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இந்த நாவலை வாசித்தபின்னர் இன்னமும் மனதில் கன்னியாகுமரிக் கடற்கரையும், ஜென்னியும் ஏட்ரியலும் நிற்கின்றது.

புதுயுகன் :
திரு.டி.கே.ராமனுஜம்(ராம்) என்கின்ற புதுயுகன் "காந்தி காவியம்" புகழ் கவிராஜர் ராமானுஜனார் அவர்களின் பேரனாவார். தற்போது லண்டனிலுள்ள கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக‌ பணியாற்றுகின்றார். அண்மையில் நடந்த உலகத் தமிழ்ச் சொம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் எனது விரிவுரையாளரும் கூட.

ஒருநாள் கல்லூரி உணவு அறையில் சும்மா பேசிக்கொண்டிருக்கும் போது என்னைத் தமிழர் என அறிந்தபின்னர் இலக்கியங்கள் பற்றி எம் பேச்சு திரும்பியபோது தான் திரு.ராம் அவர்கள் எனக்கு தன்னுடைய புத்தகத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சின்ன அறிமுகம் செய்தார். இதுவரை அவரை ஒரு தொழில்சார் நிபுணராக பார்த்தேன் இனிமேல் அவரை ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கவேண்டும்.

ஆங்கிலத்திலும் நிறையப் பாண்டித்தியம் பெற்றவர் என்பதால் இதனை பலர் கோரியதுபோல் ஆங்கிலத்திலும் விரைவில் மொழிபெயர்ப்பார் என நினைக்கின்றேன்.

சமுத்திர சங்கீதம் - புதுமை காதல் அர்ப்பணிப்பு