யாவரும் பயம் ‍- விமர்சனம்

வலையுலகப் பதிவுகள் மூலம் படத்தைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டாலும் முதன்முறை பேய்ப்படம் தியேட்டரில் தனியாகப் பார்க்கபோனது இந்தப் படத்திற்க்குத் தான். ஏற்கனவே தீ படம் பார்த்து நொந்த மனதை இப்படியான படங்கள் பார்ப்பதன் மூலம் கொஞ்சம் ஆற்றிக்கொள்ளமுடியும்.

முதல்காட்சியிலிருந்தே ஏற்படும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இடைவேளையில் பாப்கோர்ன் வாங்கவதையோ ஐஸ்கிறீம் வாங்குவதையோ மறக்கவைக்கின்றது. பின்னர் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் டல் அடித்தாலும் கிளைமாக்ஸ்சில் சீட் நுனிக்கு வரவைக்கின்றது. இயக்குனருக்குப் பாராட்டுகள்.

படத்தின் கதையைச் சொல்லவிரும்பவில்லை. ஒரு திகில் படம் அவ்வளவுதான். சுஜாதாவின் நாவல் ஒன்றை வாசித்த உணர்வு இந்தப் படம் பார்க்கும்போது வரும். அதிலும் சமையல் குறிப்பு புத்தகம் ஒன்றை மனைவிக்கு மாதவன் பரிசளித்து நடத்தும் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. இதுவரை எத்தனை கணவர்மார் தங்கள் மனைவிக்கு இந்தப் புத்தகத்தை பரிசளித்தார்களோ தெரியாது. சர்வேசன் ஒரு சர்வே எடுக்கவும்.

புதுமுக இயக்குனர் விக்ரம் குமார் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருக்கின்றார். வில்லன் யார் என்பதிலிருந்து ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் சஸ்பென்ஸாக இருக்கின்றது. யாரும் எதிர்பாராத திருப்பம் என்றாலும் ராஜேஸ்குமார், சுஜாதா , சிட்னிஷெல்டன் போன்றவர்களின் மர்ம நாவல்கள் படித்தவர்களுக்கு ஓரளவுக்கு முடிவையும் கொலையாளியையும் ஊகிக்கமுடிந்திருக்கும்

பிசி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அவ்வளவு நேர்த்தி பிளாஷ்பேக் காட்சிகளில் இன்னொரு நிறம் என இவரது காமேரா நிறம் மாறுகின்றது. அதிலும் அடிக்கடி லிப்டை காட்டுகின்ற கோணங்கள் அசத்தல்.

படத்திற்க்கு பாடல்கள் தேவையில்லை ஆனாலும் முதல் பாதியில் அரைகுறையாக இரண்டுபாடல்கள். இசை சங்கர் எஸான் லாய் பெரிதாக பாடல்கள் கேட்கவில்லை. பின்னணி இசை இன்னொருவரின் பெயர் போடுகின்றார்கள். அவர் பின்னணீ இசையில் அதகளப்படுத்தியிருக்கின்றார் சிலவேளைகளில் கொஞ்சம் ஓவராகவும் இருக்கின்றது. சில இடங்களில் சைலண்டாக விட்டிருந்தால் நிச்சயம் பார்வையாளர்களின் இதயத் துடிப்புக்கேட்டிருக்கும். ஆனால் இந்த இடங்களில் இவர் ட்ரம்ஸ்சை அலறவிட்டுவிட்டார். படம் முடிந்த பின்னர் மாதவனுக்கு ஒரு ஐட்டம் பாடல்.

மொத்தத்தில் நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் வந்திருக்கும் ஒரு திகில் கலந்த மர்மப் படம்.இறுதியாக வந்த படம் விசில் என நினைக்கின்றேன் நாகாக் கதைகள். அந்த நாள் படம் அண்மையில் கேடிவியில் பார்த்தேன். அமரர் ஸ்ரீதர் கலக்கியிருப்பார். அதனைப்போல் படம் பார்த்தவர்கள் முடிவை மற்றவர்களுக்குச் சொல்லகூடாது.

மாதவன், சரண்யா மற்றும் பிளாஷ்பேக்கில் தோன்றும் சில சீரியல் நடிகர் நடிகைகளைத் தவிர்த்து ஏனையோர் புதுமுகங்கள். கதாநாயகி தமிழ் சினிமாவுக்கு ஒத்துவராது. புதுமுகங்களுக்குப் பதிலாக பழைய தெரிந்தவர்களை நடிக்கவைத்திருக்கலாம்.

சில லாஜிக் அத்துமீறல்கள்:
1. மாதவனின் தாயார் ஒரு காட்சியில் முதல் நாள் பார்க்காத சீரியலைப் பற்றி இன்னொருவரிடம் போனில் கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால் தங்கள் வீட்டில் மட்டும் ஒளிபரப்பாகின்ற சீரியலைப் பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை.
2. மாதவனுக்கு மட்டும் வேலை செய்யாத லிப்ட் பற்றி மாதவன் தவிர ஏனையோர் கவலையே படவில்லை.
3. எல்லாப் திகில் ப்டங்களில் இருப்பதுபோல் கண் தெரியாத ஒருவர். அவர் பின்னர் எங்கே போனார் எனத் தெரியவில்லை.

இப்படிச் சில இடங்களில் லாஜிக் அடிபட்டாலும் குருவி, வில்லு,ஏகன் , தீ போன்ற படங்களைப் பார்த்து ரசித்த நம்ம ரசிகர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு நிச்சயம் தெரியாது. என்ன மீண்டும் மீண்டும் பார்க்கமுடியாது ஆகவே ரிப்பீட் ஓடியன்ஸ் இந்தப் படத்திற்க்கு அவ்வளவு இருக்காது.

அதுசரி நண்பர்களே உண்மையில் பேய் இருக்கா இல்லையா? லோஷன் கூட பேய் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்தப் படமும் பேய்ப்படம் ஆனாலும் மருந்துக்கும் ஒரு வெள்ளை உருவம், புகை ஆவி எனப் பயமுறுத்தவில்லை. இதற்கான விடையை ஏனோ இயக்குனர் சொல்லவில்லை. அதேபோல் தொலைக்காட்சிப் பெட்டியில் எப்படி இவர்களுக்கு மட்டும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகின்றது என்பதையும் அவர் ஏனோ சொல்லவில்லை.அட்லீஸ்ட் தசாவதாரம் கமல் போல் பேய் இல்லை இருந்திருந்தால் நல்லாயிருக்கும் என்றாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இப்படி இவர் ஒன்றும் சொல்லாதது என்னைப்போன்ற சிறுவர்களை இரவில் நித்திரை கொள்ளமுடியாமல் செய்துவிடும். பாருங்கள் யாவரும் நலம் என டைப் செய்ய நினைத்து பயத்தில் யாவரும் பயம் என டைப் செய்துவிட்டேன்.

பயப்படாமல் பார்க்ககூடிய பயம் கலந்த படம்.

4 கருத்துக் கூறியவர்கள்:

ஸ்வர்ணரேக்கா சொல்வது:

வந்தியத்தேவரே....
சுருங்க சொல்லி விமர்சித்தமைக்கு பாராட்டுக்கள்....

வந்தியத்தேவன் சொல்வது:

சுவர்ணரேகா அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

SurveySan சொல்வது:

சாமி இருக்குதுன்னா,கண்டிப்பா பேய் பிசாசும் இருக்கும்.

:)

எதுக்கும் ராத்திரியில் தனியா எங்கியும் போவாதீங்க. :)

சமையல் புக் மேட்டரென்னா, இன்னும் கொஞ்சம் வெளக்கிருக்கலாமே :)

Muruganandan M.K. சொல்வது:

ஏற்கனவே இப்படம் பற்றி வாசித்துள்ளேன். இன்னும் பார்க்கக் கிடைக்கவில்லை. உங்கள் விமரசனம் விரைவில் பார்க்கத் தூண்டுகிறது.