"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" : ஆயில்யன்
கானா என்றால் இசைப் ப்ரியர்களுக்கு கானா உலகநாதனும் இசையமைப்பாளர் தேவாவும் நினைவுக்கு வருவார்கள் ஆனால் வலைப்பதிவர்களுக்கோ கானா பிரபா என்ற அழகான வதனத்தையும் சிரிப்பையும் கொண்டு உலகம் சுற்றும் உலாத்தல் பதிவர் தான் ஞாபகம் வருவார்.
ஒரு கறுத்தகொழும்பான் மாம்பழத்துடன் எங்கள் உறவு ஆரம்பித்தது. அதன் பின்னர் நான் வலையெழுத வந்தமைக்கும் கானாவின் நட்பும் ஒரு காரணம்.
நேரடியாக இதுவரைக் காணாவிட்டாலும் தினமும் இவரின் சிட்னியில் காலை இனிதே விடிந்தது என்ற ட்விட்டைப் படித்துவிட்டு தான் நான் நித்திரைக்கே போவது, தொலைபேசியில் உரையாடி இருந்தாலும் ஈமெயில்களீனூடும் சமூக வலைத்தளங்களினூடும் கானாவுடன் உரையாடுவது என்பது இனிமையானது.
வலையுலகில் உலாத்தல் கட்டுரைகள், இசைப்பிரிப்புகள், நேர்முகங்கள், ஈழத்து மரபுகள், தமிழ் சினிமா விமர்சனம் எழுதாவிட்டாலும் மலையாள சினிமா விமர்சனம் ஆங்கில சினிமா விமர்சனம் என பலதரப்பட்ட காத்திரமான பதிவுகளை எழுதும் சீரியசான பதிவர்.
என்னைப்போன்ற யூத்துகளுக்காக தனது லுமாலா சைக்கிள் காலக் காதல் கதையை எழுதி மேலிடத்தில் இருந்து வந்த செல்ல மிரட்டலுக்காக அதனை நிறுத்திய காதல் இளவரசன்.
ட்விட்டருக்கு வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனச் சொல்லியபடி கானா வரும் அழகை ரசிக்கவே அவரின் நட்புகள் காத்திருப்பது வழக்கம். அதிலும் கானா வந்தால் தான் ட்விட்டர் பக்கம் எட்டிப் பார்க்கும் எங்கள் அன்புச் சின்னப்பாண்டி ஆயில்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்கவர்(சின்னப்பாண்டி அண்ணோய் விரைவில் உங்களுக்கும் ஸ்பெசல் போஸ்ட் ரெடி ).
சினிமாப் பாடல்களில் அண்ணன் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். எந்தப்படத்தில் எந்தப்பாட்டு எனச் சந்தேகம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார். அதிலும் எங்கள் இசைஞானியின் பரமரசிகர்(இது ஒன்றே எம் இருவரையும் பிணைக்கும் இன்னொரு சங்கிலி). அதனால் தான் என்னவோ இராமராஜனின் தீவிர விசிறி.
ஆஸியில் தமிழ் வானொலி ஒன்றில் கானாவின் நிகழ்ச்சியை பல தடவை கேட்டு மகிழ்ந்துள்ளேன். எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தை அதிகம் நேசிப்பதனாலோ என்னவோ இவரின் நிகழ்ச்சி ஒன்றிற்க்கு முத்துமணி மாலை எனப் பெயரிட்டிருக்கின்றார். முத்துமணி மாலையும் அதில் அண்ணனின் பாடல் தெரிவுகளும் சிறப்பாகவே என்றைக்கும் இருக்கின்றது. அத்துடன் அண்ணன் சிறந்த மிமிக்ரிக் கலைஞரும் கூட, முத்துமணிமாலை நிகழ்ச்சி முன்னோட்ட விளம்பரத்தில் சிறுகுழந்தையின் குரலில் பேசுவது வேறுயாருமல்ல எங்கள் அண்ணன் கானாவே.
சரோசா அக்காவின் சாப்பாட்டுக்காகவே பகல் பந்தி என்ற வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பவர். இணையத்தில் சகல வானொலிகளையும் கேட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் எந்த வானொலியில் நடக்கின்றதோ அதனை ஏனையோருக்கு அறியத் தந்து தான் பெற்ற இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கர்ணன் இவர்.
அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவை எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம். (அண்ணே பிடிபடாமல் புனைவு எழுதுவதற்க்கு என்னிடம் வரவும்).
நடிகைகள் ரசனையைப் பொறுத்தவரை அந்தகாலத்து பத்மினி வரை இந்தக்காலத்து ஹன்சிகா மேத்வானி வரை பாரபட்சமின்றி யூத்தாக மாறி ரசிப்பார். வெள்ளைக் கரப்பான் தமன்னாவினை ரசிப்பது எங்களின் இன்னொரு உறவான முன்னாள் பதுங்குகுழிப் பதிவர் டொன்லீக்கு பிடிக்காமல் தமன்னாவை தனது தம்பிக்கு தாரைவார்த்துக்கொடுத்துவிட்டாராம்.
அண்மைக்காலமாக தனது உடம்பைத் தேர்த்திக்கொள்ள ஜிம்முக்கும் மனதைத் ஒருமுகப்படுத்த கோவிலுக்கும் செல்கின்றாராம்.
கானாவைப் பற்றி நிறைய எழுதலாம் ஆனாலும் இப்படியான பாராட்டுகளை அவர் என்றைக்கும் விரும்புவதில்லை.
இன்று (14.05.2011)தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் அண்ணன் ட்விட்டர் மன்னன் உலாத்தல் பொடி கானா பிரபாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றும் போல் என்றும் அதே கள்ளச்சிரிப்புடனும் கலகலப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல மடத்துவாசல் பிள்ளையாரையும் சிட்னி முருகனையும் வேண்டுகின்றேன்.
கானா என்ற நட்புக்கு
எழுதியது வந்தியத்தேவன் at 12 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கானாப் பிரபா, பதிவர் வட்டம், வாழ்த்து
கன்னியின் செல்வன் - வரலாற்று மொக்கை
முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.
அமரர் கல்கியின் ஆவி மணிரத்தினத்தை மன்னித்ததுபோல் என்னையும் மன்னிக்கட்டும். இந்த விடயத்துக்கு எழுத்துவடிவம் கொடுக்க ஊக்கவும் ஆக்கவும் சில தரவுகளை ட்விட்டியும் உதவிய முன்னாள் பதிவர் இன்னாள் ட்விட்டர் டொன்லீக்கு நன்றிகள். 
மிகவும் அழகான ஒரு பெளர்ணமி பின்னேரம் வெள்ளவத்தை கடற்கரையில் சில பதிவர்கள் கானா பிரபா தலைமையில் மந்திராலோஷனை நடத்திகொண்டிருக்கின்றார்கள். கோபியும், வதீஸும் நடக்கும் விடயங்களை ஆலோசனைக் கூட்டத்திற்க்கு வராதவர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் உடனக்குடன் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள்.
கானா : வணக்கம் நண்பர்களே, எங்கடை சிங்கப்பூர் மாதவனின் கடும் தொந்தரவினால் இந்த மந்திராலோஷனைக்கூட்டத்தை நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நாம் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதை சிங்கை மாதவன் டொன்லீயே சொல்லுவார்.
டொன்லீ : இங்கே இருப்பவர்களில் எத்தனைபேர் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்கள் ?
பெரும்பாலனவர்கள் கையை உடனேயே தூக்கினார்கள், பவன் மட்டும் உயர்த்தாமல் பக்கத்தில் இருந்த சுபாங்கிடம் "அது ரவிகிருஷ்ணா நடிச்ச படம் தானா?" எனக்கேட்டு திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.
டொன்லீ : விரைவில் அந்தக் கதையை மணிரத்தினம் படமாக எடுக்கபோகின்றார், அவருக்கு முன்னால் நாங்கள் பதிவர்கள் இதனை ஏன் படமாக்க முடியாது, மணிரத்தினத்தையே மன்னித்த கல்கியின் ஆவி எம்மைப்போன்ற சிறுவர்களையும் மன்னிக்கும் தானே. தலைப்பு மட்டும் கன்னியின் செல்வன்
லோஷன் : நல்ல முயற்சி ஆனால் இதற்க்கு யார் செலவு செய்வது?
வந்தி : அங்கிள் ஒரு பிரபல நிறுவனம் ஸ்பொன்சர் செய்கின்றார்களாம்
லோஷன் : ஓஓஓ அப்படியென்டால் நான் ரெடி.
கானா : சரி பொடியள் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்பதை இனித்தான் முடிவு செய்யவேண்டும், உவர் வந்தியர் வந்தியத்தேவன் என்ற பெயரையே வைத்திருப்பதால் அவரே வந்தியதேவனாக நடிக்கட்டும்.
டொன்லீ : அருள்மொழிவர்மனாக லோஷனைப் போடலாம் ஆனால் அவரின் உடல்வாகு அதிகம் என்பதால் அவர் சில நாட்களில் தன்னுடம்பைக் குறைத்தால் அருண்மொழிவர்மன் இல்லையென்றால் இலங்கை தண்டநாயக்கர்களில் ஒருவராகத் தான் நடிக்கவேண்டும்.
வந்தி : பெரிய பழுவேட்டரையராக கானா தான் சரியான ஆள், சின்னப் பழுவேட்டரையராக எங்கடை தலை நிரூஜாவைப் போடவேண்டியதுதான்.
கானா : யோவ் மாம்ஸ் நான் ஒரு அப்பாவி என்னைப்போய் வில்லனாக்குகின்றீர்களே?
வந்தி : பெரியப்பு கதையின் நாயகியே நந்தினி தான், நீங்கள் தான் நந்தினியின் கணவர், நந்தினியாக வித்யாபாலனை டொன்லீ கேட்கப்போறாராம்,
வந்தி சொல்லி முடிக்கமுன்னரே கானா விழுந்தடித்து
கானா : வித்தியா நந்தினி என்றால் நான் பெரிய, சின்ன என இரண்டு பழுவேட்டரையராகவும் டவுள் ஆக்டிங்கே செய்கின்றேன்.
லோஷன் : ஐயா நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக எல்லாப் பாத்திரமும் உங்களுக்குத் தரேலாது, சின்ன பழுவேட்டரையருக்கு நிரூஜா தான் பொருத்தம்,
ஆதிரை : ஓமோம் சின்னப் பழுவேட்டரையர் தான் பழையாறை அரண்மைனையின் தலைமைக் காவலர், நம்ம நிரூஜாவும் நிஜவாழ்க்கையில் காவலன் தானே சரியான பொருத்தமாக இருக்கும்.
நிரூஜா ; கோதாரியில் போறவங்கள் இனித் தொடங்கிவிட்டார்கள்.
வந்தி : ஆழ்வார்க்கடியனாக கோபிதான் சரி, கோபிக்குத் தான் பெரிய பெரிய தொந்தியும் உடம்பும்.
கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா?
டொன்லீ : சேந்தன் அமுதனாக நடிப்பவர் கொஞ்சம் விடலையாக இருக்கவேண்டும் பவன் தான் சரி என நினைக்கின்றேன்.
அனுதினன் : நானும் சின்னப் பொடியன் தான்.
வதீஸ் : ஓமோம் பத்து வருடத்திக்கு முன்னர் நீயும் பொடிதான்.
தன்னுடைய ட்விட்டரில் நடக்கின்றவையை அப்டேட் செய்துகொண்டிருந்த கோபி திடீரென
கோபி : குரு எங்கடை சேது ஐயா தான் சுந்தரச்சோழனுக்கு வாறாராம். ஆனால் கோப்பெரும் தேவியாக சரோஜாதேவிதான் வேணுமாம்.
வந்தி ; அவர் பொருத்தமானவர் தான் ஆனால் நடிகைகளை பிறகு பார்ப்போம்.
கானா : அமைச்சர் அநிருத்தராக மருதமூரான் தான் சரி, அவர் தான் அடிக்கடி நடுநிலைமை பற்றி எல்லாம் கதைக்கின்றவர்.
மருதமூரான் : சரி சரி என்ரை குணத்திற்க்கு ஏற்ற பாத்திரம்.
வந்தி : இனி ஆதித்த கரிகாலன், மதுராந்தகர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் தான் மிச்சம்.
கானா : சுபாங்கன் மதுராந்தகராக நடிக்கலாம், ஆதிரையை ஆதித்த கரிகாலனாக்கலாம், கந்தமாறனாக வதீஸும் பார்த்திபேந்திரனாக மதுவும் சரியாக இருக்கும்.
மது : அண்ணே பார்த்திபேந்திரனுக்கு என ஏதாவது இசம் இருக்கா?
லோஷன் : ஒரு இசமும் இல்லை அவர் சும்மா ரசம் மட்டும் தான் குடிப்பார். விட்டால் இவன் எஸ்,ஜே.சூர்யா தான் படத்தை இயக்கவேண்டும் என்பான்.
கானா : சரியப்பா இனி முக்கிய விஷயத்துக்கு வாங்கோ, கதாநாயகிகள் யார் யார்? எவரை டொன்லீ ஒப்பந்தம் செய்யப்போறார்?
டொன்லீ ; குஞ்சியப்பு உங்களுக்கு வித்தியா பாலன் அதாவது நந்தினியா வித்தியா பாலன்.
கானா : உது காணும் எனக்கு. என்ன வந்தியரின் காதுக்குள்ளை புகையது போல.
வந்தி : பெரியப்புக்கு கதை தெரியாதுபோல நந்தினி மேலும் வந்தியதேவனுக்கு ஒரு லவ் வருது அந்த நேரம் நானும் வித்தியா பாலனும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி வைக்க எங்கடை டொன்னுக்குத் தெரியாதோ.
லோஷன் : ஹன்சிகா மேத்வானி வானதியாக நடித்தால் என் கால்சீட் நாலு மாதத்துக்கு தருவேன் இல்லையென்றால் ஐபிஎல், ஐசிஎல் என நான் பாட்டுக்கு கிரிக்கெட் தம்பியாகிவிடுவேன்.
வந்தி : குந்தவைக்கு பொருத்தமானவர் என்றால் தமன்னா தான்.
ஆதிரை : உந்தாளுக்கு அந்த வெள்ளைக் கரப்பானை விட்டால் வேறை ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. என்ரை விசாப் பிள்ளையாரே உவருக்கு தமன்னா கிடைக்ககூடாது, உனக்கு நான் 100 தேங்காய் அடிச்சு சிரட்டைகளை வந்திக்கே கொடுக்கின்றேன்.
கோபி ; சித்தப்பூ சும்மா குருவை நக்கலடியாதேங்கோ, ரசனை ஆளுக்கால் மாறுபடும்தானே.
லோஷன் : பூங்குழலியாக புதுமுகமாக பூனம் பாண்டேயே ஏன் போடாக்கூடாது.
டொன்லீ : ஷப்பா இந்த மனிசன் மும்பை பைனல் பார்த்ததில் இருந்து பூனம் பைத்தியமாகவே மாறிவிட்டது.
நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம்.
லோஷன் ; யோவ் அடங்குங்கோ பூங்குழலி கட்டுமரம் ஓட்டுகின்றவர் பூனத்தை போட்டால் தான் பொருத்தமாக இருக்கும் அடுத்தது இரண்டு பேர் பெயரும் பூவிலை தொடங்குது.
கானா : அப்படியெண்டால் பூர்ணிமா பாக்கியராஜும் ஓக்கேதானே.
வதீஸ் : பெரியப்பு அடிக்கடி பழைய நடிகைகளைச் சொல்லி தன்ரை வயதைக் காட்டுகின்றார்.
வந்தி : மணிமேகலையாக அமலா பாலைப் போடவும்
லோஷன் : நீ கொடுத்து வைத்தவன் மணிமேகலை, குந்தவை, நந்தினி, பூங்குழலி என சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்கலாம்.
பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்.
லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி
கோபி : இல்லை அண்ணை குரு எந்தப் பிரச்சனை என்றாலும் சமாளிப்பார்.
மது : ஓமோம் உன்னையே சமாளிக்கின்றவருக்கு உதெல்லாம் சிம்பிள்
லோஷன் : மது இதிலை உள்வெளி குத்துகள் இல்லைத்தானே.
டொன்லீ : அப்போ விரைவில் திரைக்கதையை, வந்தி எழுதினால் சூட்டிங் போகவேண்டியதுதான்.
கானா : தண்டநாயக்கர்கள், தேவராளன், குடந்தைச் சோதிடர் இதெற்கெல்லாம் விரைவில் ஆட்களை எடுக்கவேண்டும்.
டொன்லீ ; அதை அந்த நேரம் பார்ப்போம். அப்போ கிளம்புவோம்.
கோபி : பொறுங்கோ லோஷன் அண்ணை சைனீஸில் டின்னர் தாறாராம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு போகலாம்.
ஆதிரை : ஏனப்பா உந்தாள் டின்னர் கொடுக்குது ஏதும் விசேடமோ?
வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம்.
லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.
எல்லோரும் ஒட்டுமொத்தமாக : அப்போ ஐபிஎல்லில் கொச்சி தோற்கும் என்கின்றீர்கள் விக்ரமாதித்தன் வாழ்க .
எழுதியது வந்தியத்தேவன் at 23 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் பதிவர் வட்டம், பம்பல், மொக்கை
எவன்டி உன்னைப் பெத்தான் - பின்நவீனத்துவப் பாடல்
அண்மைக்காலமாக நடிகர் சிம்பு எழுதிய வானம் படத்தின் எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியிருந்தாலும் சிலரிடம் பலத்த அடியும் வாங்கியிருக்கின்றது. அந்தப் பாடலில் மறைமுகமாக இருக்கும் தத்துவங்களை விளக்கவே இந்தப் பதிவு,
மிக முக்கிய குறிப்பு : இது ஒரு சீரியஸ் பதிவு ஆனாலும் கும்மிக்கு இடமிருக்கு,
பாடல் ஆரம்பிக்கும் போதே தமிழர்களின் சொந்தமொழியான ஆங்கிலத்தில்
Oh baby I feel like flying
Flying above up in the air
When I look at you looking and me like
you wanna make love to me then,
இந்த வரிகள் வருகின்றன. எனக்கு ஆங்கிலம் தெரியாதபடியால் இதனை விளங்கபடுத்த முடியவில்லை (இதனை விளங்கபடுத்தினால் கடைசியாக வரும் ஆங்கில வரிகளுக்கும் விளக்கம் கொடுக்கவேண்டும் அதனை விட ஆங்கிலம் தெரியாதவனாக இருப்பதே மேல்)
உன்னை பார்த்த firstடு secondல என்ன காணோம்,
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்.
இந்தவரிகளில் கவிஞர் சிம்பு அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற இராமாயண வரிகள் போல தன் காதலியைத் தான் பார்த்த அந்த வினாடியே தன்னை அவளிடம் தொலைத்துவிட்டதாக கூறியிருக்கின்றார். என்றைக்கும் ஆண்கள் தான் பெரும்பாலும் காதலில் தொலைகின்றார்கள் என்பதையும் இந்த இடத்தில் மறைமுகமாக காணோம் என்ற வரிகளில் சொல்கின்றார்.
சத்தியமா எனக்கு நீ வேணாம்,
கண்டிப்பா எனக்கு நான் வேணும்..
இந்த வரிகள் காதல் தோல்வியில் காதலியை வேண்டாம் எனச் சொல்கின்றாரா என நினைத்தால் அதுதான் இல்லை, ஏற்கனவே முதல் வரியில் அவளிடம் தன்னைத் தொலைத்தபடியால் அவளுக்குள் இருக்கும் அவனும் அவனுக்குள் இருக்கும் அவளும் தான் இங்கே உவமையாக காட்டப்படுகின்றது, நீ வேணாம் என்றால் காதல் தனக்கு தன்னுடைய இதயத்தை வேண்டாம் என்கின்றார். அதேமாதிரி நான் வேணும் என்பது காதலி வேண்டும் என்பது பொருள்.
ஒன்னு என்ன கண்டுபுடிச்சு குடு,
இல்ல ரொம்ப simple உன்னை எனக்கு குடு,
இல்ல தயவுசெஞ்சு ஒரு Gunனெடுத்து என்ன சுடு.
இந்த வரிகளில் காதலும் வியாபாரம் தான் என்பதை கவிஞர் அழகாக நிலையுறுத்துகின்றார். தன்னை தன் காதலி கண்டுபிடிக்கமாட்டார் ஆகவே அவர் கட்டாயம் தன்னை காதலுனுக்கு கொடுக்கவேண்டும் என்ற கொடுக்கல் வாங்கல் இங்கே காட்டப்படுகின்றது. அதே நேரம் காதலிலும் வன்முறை உண்டு என்பதைக் காட்ட Gunனெடுத்து என்ன சுடு என்கின்றார், இந்த இடத்தில் கவிஞரின் சிலேடை புகுந்து விளையாடுகின்றது Gun என ஆங்கிலத்தில் துப்பாக்கி எனவும் அர்த்தம் கொள்ளலாம் இல்லையென்றால் காதலி தன்னுடைய கண்ணால் பார்க்கவேண்டும் என்ற இரண்டாவது அர்த்தமும் கொள்ளலாம். கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்ற திருக்குறளின் அடிநாதம் தான் இந்த வரிகளில் தொனிக்கின்றது.
எவன்டி உன்னை பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்,
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்.
இந்த விஞ்ஞானபூர்வமான வரிகளுக்கு ஏன் பலரும் கண்டனம் தெரிவிக்கின்றார்கள் என்பது விளங்கவில்லை. எங்கடை ஊர்களில் யார் பெத்த புள்ளையோ என ஒரு சொலவடை உண்டு. அதனைத்தான் கவிஞர் சிம்பு கொஞ்சம் மாற்றி காதலியின் தாய்க்கும் தந்தைக்கும் அவரின் பிறப்பில் பங்குண்டு என்ற விஞ்ஞான விளக்கத்தைக் கொடுக்கின்றார். இதனை ஆணாதிக்க கருத்தாக பலர் விளங்கிக்கொண்டுள்ளமைதான் கவலையளிக்கின்றது.
முதலாவது சரணத்தில் தற்போதைய இளைஞர்கள் மட்டுமல்ல வயதுபோனவர்களும் பல மணி நேரத்தை செலவிடும் பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் என தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சிகளை காதலியுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். எத்தனை நாளுக்குத் தான் நிலாவுடனும் மலர்களுடனும் காதலியை ஒப்பிடுவது. 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களின் நினைவாகவே இருக்கும் பலர்போல காதலனும் தன் காதலியின் நினைவாக இருக்கின்றான் என்பதையே
என் Facebook statusசும் நீதான்,
என் Twitter tweetingகும் நீதான்,
என் Skype callலும் நீதான், நீதான்...
என் BBMமும் நீதான், என் FaceTimeமும் நீதான்,
என் iPhone iPad எல்லாமே நீதான்,
என் iTunes playlist நீதான்,
அதில் Love songகும் நீதான்,
அது play ஆகுற speaker நீதான்,
வரிகள் விளக்குகின்றன.
அடுத்த வரிகள் கவிஞரின் உச்சத்திறமையையே காட்டுகின்றன். உலகில் தாய் தந்தையருக்கு நிகரான எவரும் இல்லை என்பதுதான் வெளிப்படை உண்மை, அதையே உடைத்து தன் காதலியை தன் அப்பா அம்மாவுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். அத்துடன் தன்னுடைய சொத்தாக காதலியையே ஒப்பிடுகின்றார். இதற்க்கு எல்லாம் மேலாக கடவுளுடன் காதலியை ஒப்பிடுகின்றார். காரணம் இரண்டுமே பலருக்கு இன்னும் எட்டாத விடயம் என்பதால் கடவுளாகவும் கண்டுபிடிக்கமுடியாத விடயம் என்பதால் உயிர் எனவும் உவமிக்கின்றார்.
என் அப்பாவும் நீதான்,
என் அம்மாவும் நீதான்,
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்,
என் கடவுளும் நீதான்,
என் உயிரும் நீதான்,
எனக்கு எல்லாமே நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்...
இரண்டாவது சரணத்தில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையுடன் காதலியை ஒப்பிடுகின்றார், காலையில் எழும்பி பல் துலக்கும் பேஸ்டுடனும் பிரசுடனும் ஒப்பிட்டு என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதால் தலையை அழகுபடுத்தும் ஷவர் ஜெல்லும் தன் காதலிதான் என்கின்றார். இப்படியே பெண்களின் ஒப்பனைப் பொருட்களாக எல்லாம் தான் இருப்பதாகவும் புலம்பி ஹைலைட்டாக அவளின் வீட்டு வோட்ச்மேனாகவும் இருப்பான் என்பதைச் சொல்லி வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்க தான் சம்மதம் என்கின்றார்.
பின்னர் மனித உடம்பின் எலும்பு சதை இரத்தம் எல்லாவற்றிலும் தன் காதல் நிறைந்துள்ளது என புலம்புகின்றார். இறுதியாக காதலியின் நண்பனும் நான் தான், அவரின் காதலனும் தான் தான் என முடிக்கின்றார். இந்த இடத்தில் நட்பு காதலாக மாறலாம் என்ற தத்துவத்தைத் தொட்டுச் செல்கின்றார் கவிஞர் சிம்பு.
இப்படிப் பல அர்த்தங்கள் மறைந்திருக்கும் அற்புதமான பாடல் தான் எவன்டி உன்னைப் பெத்தான் என்றபாடல். இந்தப் பதிவைப் படித்தபின்னர் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள் மறைபொருட்கள் துல்லியமாகத் தெரியும்.
கீழேயுள்ள காணொளியும் உங்களின் மனதை சந்தோஷப்படுத்தும்,
பின்குறிப்பு : இந்தப் பாடலின் வரிகளை எனக்கு தட்டச்சு செய்து தன்னுடைய வேலைப் பளுக்களுக்கிடையில் எனக்கு மின்னஞ்சிய எனது சிஷ்யன் கன்கோனுக்கும் மிக்க நன்றிகள்.
இந்தப் பாடலைக் கேட்டபின்னர் சிம்புவின் தந்தையாரின் "தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ! ..." என்ற கவித்துவமான வரிகள் எல்லாம் மறந்தேபோயின.
அந்தப்பாடலும் உங்கள் பார்வைக்கு.
எழுதியது வந்தியத்தேவன் at 20 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இசை, சினிமா, சீரியஸ் பதிவு, பின்நவீனத்துவம்

