நாளை விநாயக சதுர்த்தி வழக்கம் போல் நம்ம தொலைக்காட்சி முட்டாள் பெட்டிகள் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முதலாக திரைக்குவந்தே சில மாதங்கள் ஆனா டப்பா படங்களை ஒளிபரப்புவார்கள். நமீதா, ப்ரியாமணி, நயந்தாரா போன்ற நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி விஷ்சஸ் என தமிங்கிலிஸில் ஒரு வரி சொல்லிவிட்டு தங்கள் கலைச் சேவை பற்றி பேட்டிகொடுப்பார்கள். காலையில் மட்டும் ஒரு அரைமணி நேரம் ஒரு நூல் பூண்டவர் விநாயகர் பற்றி செத்துப்போன மொழியில் இருக்கும் ஸ்லோகங்களைக் கொண்டு ஏதோ சொல்வார்.
இது வழமையான நடைமுறை ஆனால் இம்முறை விநாயக சதுர்த்தியை கலைஞர் தொலைக்காட்சி மட்டும் வித்தியாசமாக விடுமுறைதினம் என ஏனோ அழைக்கின்றது. சகலதொலைகாட்சிகளும் விநாயகர் சதுர்த்தி என அழைக்க இவர்கள் மட்டும் விடுமுறைதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என விளம்பரம் செய்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி என அழைத்தால் இவர்களின் கட்சிக்கொள்கைக்கு பிழையானது என நினைக்கின்றார்கள் போல. ஆனால் வெள்ளிக்கிழமைகளில் கலைஞர் தொலைக்காட்சியில் பக்திப்படம் ஒளிபரப்புகின்றார்கள்.
ஏன் இந்த முரண்பாடு?
விநாயக சதுர்த்தியும் கலைஞரும்
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கலைஞர், விநாயக சதுர்த்தி
குசேலனான மும்மூர்த்திகள்
நடந்துமுடிந்த இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட்போட்டிகளில் இலங்கை அணி இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் மும்மூர்த்திகளான சச்சின் டெண்டுல்கர், ராகுல் ராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள்.
சச்சின் டெண்டுல்கருக்கு மேற்கிந்திய அணியின் நட்சத்திர பிரைன் லாராவின் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 11953 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் சச்சினால் அந்த சாதனையை இலங்கை மண்ணில் எட்டமுடியவில்லை. இலங்கைக்கு தொடர் ஆட வரும்பொழுது சச்சினுக்கு வெறும் 172 ஓட்டங்களே தேவைப்பட்டன. ஒரு இனிங்ஸ்சில் சச்சின் இந்த சாதனை நிலை நாட்டுவார் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் மொத்தமாக 6 இனிங்ஸ்சிலும் சச்சின் எடுத்த ஓட்டங்கள் 95 மட்டுமே. 
தொடர் ஆரம்பமாகும் முன்னரே இலங்கை அணித் தலைவர் ஜெயவர்த்தனா இஅல்ங்கை மண்ணில் சச்சின் இந்த சாதனை நிலை நாட்ட அனுமதிக்கமாட்டோம் என சவால் விட்டிருந்தார் அதிலும் ஜெயித்துக்காட்டிவிட்டார்.
எஸ் எஸ் சியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் சச்சின் முரளியின் சுழலில் அகப்பட்டு முறையே 2, 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். காலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா சேவக்கின் இரட்டைச் சதத்தாலும் ஹர்பஜனின் சுழலாலும் வெற்றிபெற்றது. சச்சின் சமிந்த வாஸின் வேகத்தில் வீழ்ந்தார். எடுத்த ஓட்டங்கள் முறையே 5, 31(இத்தொடரில் சச்சின் எடுத்த அதிகூடிய ஓட்டம்). பி.சரவணமுத்து மைதானத்தில் நடந்த மூன்றாவதும் இறுதியுமான ஆட்டத்தில் முதல் இனிங்க்ஸ்சில் அறிமுக வீரர் பிரசாத்தின் வேகத்தில் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதே நேரம் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சச்சின் காயமடைந்ததால் அடுத்த இனிங்கிஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது, ஆனாலும் சச்சின் அடுத்த இனிங்க்ஸில் விளையாடினார் அஜந்த மெண்டிஸின் சுழலுக்கு தன் விக்கெட்டை தாரைவார்த்தார், எடுத்த ஓட்டங்கள் 14.
மொத்தத்தில் இத்தொடரில் சச்சின் 6 இனிங்ஸ்சில் 95 ஓட்டங்களுடன் 15.83 என்ற சராசரியுடன் அதிகூடிய ஓட்டமாக 31 மட்டும் எடுத்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
பல இலங்கை அணி ரசிகர்கள் கூட சச்சினின் இந்த சாதனையை நேரில் பார்க்க ஆவல் கொண்டிருந்தார்கள். 
அடுத்தவர் வங்கப்புலி சவுரவ் கங்குலி சில காலம் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார். பின்னர் சில தொடர்களில் பிரகாசித்ததன் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இத்தொடரில் இவராலும் பிரகாசிக்கமுடியாமல் போனது 6 இனிங்ஸ்சிலும் மொத்தமாக 96 ஓட்டங்கள் எடுத்தார். சராசரி 16.00 அதிகூடிய ஓட்டம் 35. இவராலும் ஒரு அரைச்சதத்தையேனும் எடுக்கமுடியவில்லை. இவர் முரளிதரனின் சுழலில் 5 தடவைகள் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெரும்சுவர் என அழைக்கப்படும் ராகுல் ராவிட்டும் இத்தொடரில் பிரகாசிக்கத்தவறிவிட்டார். மூன்றாவது போட்டி இரண்டாம் இனிங்ஸ்சில் மட்டும் ஒரு அரைச் சதமடித்தார். 4 தடவைகள் அஜந்த மெண்டிசின் சுழலில் ஆட்டமிழந்த ராவிட் மெண்டிஸின் முதல் டெஸ்ட் விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. 6 இனிங்ஸ்சிலும் மொத்தமாக 148 ஓட்டங்களை மட்டுமே பெற்றார்(சச்சின், கங்குலி இருவருடன் ஒப்பிடும்போது பரவாயில்லை). சராசரி 24.66 அதிகூடியஓட்டம் 68.
இவர்கள் மூவரும் மிகவும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால் இவர்களால் ஏன் இலங்கையில் சாதிக்கமுடியவில்லை. டெஸ்ட்போட்டிகளில் மிகவும் நிதானமாக விளையாடும் லக்ஸ்மன் 48.53 என்ற சராசரியுடன் 2 அரைச்சதங்களுடன் 215 ஓட்டங்களைப் பெற்றார். அதிரடி வீரர் சேவக் இத்தொடரில் அதிகூடிய ஓட்டங்களை எடுத்த வீரர், இவருக்கு அடுத்து கெளதம் கம்பீரும் மூன்றாவதாக இலங்கை அணித்தலைவர் ஜெவர்த்தனாவும் இருக்கிறார்கள்.
சேவாக் 344, கம்பீர் 310 , ஜெவர்த்தனா 279.
மும்மூர்த்திகள் தம்மை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். எத்தனைகாலம் பழைய சாதனைகளை வைத்துக்கொண்டே அணியில் இடம் பிடிப்பது. பின்னால் யுவராஜ்,பத்ரினாத், சுரேஸ் ரெய்னா, விராட் கோலி என ஒரு இளம் படையே தெரிவுக்காக ஏங்கி நிற்கின்றது. தெரிவாளர்களும் இவர்கள் விடயத்தில் அசிரத்தையாக( ஒருநாள் போட்டிகளில் நிறுத்தியது) டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம்.
சச்சினின் சாதனை பற்றி இந்திய நண்பர் ஒருவருடன் பேசியபோது சொன்னார் அவுஸ்திரேலிய அணியின் இந்திய விஜயத்தில் சொந்த மண்ணில் சாதனை நிலை நாட்ட சச்சின் விரும்பியுள்ளார் என்று.
கொசுறு. டோணி மீண்டும் டெஸ்ட் அணிக்கு வரவேண்டும் இந்திய அணி இலங்கையில் தோல்வியுற்றதற்க்கு இன்னொரு காரணம் சிறந்த விக்கெட் காப்பாளர் இல்லாததும்தான். தினேஸ் கார்த்திக், பட்டேல் இருவரும் விக்கெட் காப்பிலும் துடுப்பாட்டத்திலும் சொதப்போ சொதப்பென்று சொதப்பினார்கள். தினேஸ் கார்த்திக்கு பல தடவைகள் இடம் கொடுத்தும் தன் இடத்தை தக்க வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
பின்குறிப்பு :அவினவ் பிந்ரா என்ற சுனாமியில் இந்த தோல்வி மறக்கப்பட்டுவிட்டது.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கங்குலி, கிரிக்கெட், சச்சின், ராவிட்
உலகத் தரத்திற்குத் தமிழ்ச் சினிமாவை நகர்த்திச்செல்லும் ‘தசாவதாரம்’
அண்மைக் காலங்களில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த படம்தான் தசாவதாரம். இதில் கமல் ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார். வந்து சில நாட்களுக்குள்ளேயே வசூலில் சாதனை படைத்துள்ள இந்தப்படம் கமல் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றபடமாகவும் கருதப்படுகிறது.
உலகிலே எந்தவொரு நிகழ்வும் தற்செயலானதல்ல, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பதை விளக்க முற்படுகிறது கதை. உயிரியல் ஆயுதத்திற்கெதிராக அமெரிக்காவில் பணிபுரியும் விஞ்ஞானியான கோவிந் (கமல்) ஒரு பரிசோதனையில் ஈடுபட்டுவருகிறார். அந்த முயற்சியில் அவர் பரிசோதிக்கும் உயிரியல் ஆயுத மாதிரியை வெளியாட்களுக்கு விற்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதனையறிந்த கோவிந் அதனைத் தடுக்க முயலுகிறார். அதன்போது அந்த உயிரியல் ஆயுத மாதிரி இந்தியாவிற்கு வந்துசேர்ந்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து கோவிந்தும் உயிரியல் மாதிரியைக்கொள்ள முயன்றுவரும் வில்லனும் இந்தியா வருகின்றனர். கோவிந் பின்னால் வில்லனும் இவர்களின் பின்னால் இந்திய உளவுபிரிவு மற்றும் காவல்துறையும் ஓடுகின்றனர். இறுதியில் எவ்வாறு அந்த உயிரியல் ஆயுத மாதிரியிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்பதைப் படம் காட்டுகிறது.
கதையை மேலோட்டமாகப் பார்த்தால் வழமையான சினிமாக் கதை, தமிழுக்கே உரித்தான சண்டை, பாட்டு, கதாநாயகன், வில்லன் இப்படி தமிழ்ச் சினிமாத்தனங்களிற்குக் குறைவில்லை. இவ்வாறு இந்தப் படத்தைப் பொழுதுபோக்குக்காகவும் பார்க்கலாம். கமல் தனது வழமையான ஆஸ்திக நாஸ்திக கொள்கைளை சொல்லவருகின்றார் என்று கூடக் கருதிக்கொள்ளலாம்.
ஆனால், இது கமலின் படம். முக்கியமாக அவரின் கதை-திரைக்கதை-வசனம், பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்ட படம், நீதி மன்று ஏறிய படம் என்ற அடிப்படையில் சற்றுக் கூர்ந்து பார்க்கையில் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் சேர்ந்து எம்மைச் சற்று கதிரைகளில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ஏன் இத்தனை கமல் ஹாசன்கள்? உலகிலேயே கூடிய பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற அவாவா? மேலோட்டமாகப் பார்த்தோமானால் பெரும்பாலான பாத்திரங்கள் முக்கியத்துவமே இல்லாத பாத்திரங்கள் ; குணச்சித்திரப் பாத்திரங்கள்.
ஒரு நேர்காணலில் கமல் சொல்லியிருந்த ஒரு கருத்து என்னவெனில், ‘தனது சில படங்களை மக்கள் புரிந்துகொள்வதற்கு சில காலம் ஆகலாம். உதாரணமாக குணா படத்தைப் புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு 20 வருடங்கள் ஆகியிருக்கிறது’; ‘காதல் கொண்டேன்’ என்ற பட வெற்றியை குறித்து அவர் வெளியிட்ட கருத்து அது. தசாவதாரத்தைப் பொறுத்தவரையிலும் கூட இது உண்மையாக இருக்கலாம். மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படலாம். ஏனெனில் அதற்குள் பொதிந்திருக்கும் விஞ்ஞானம் அத்தகையது.
இந்நாட்களில், ஆங்கிலப் பட உலகிலும் சரி, பேசப்பட்டுவரும் விடயங்கள்தான் Chaos தத்துவம் மற்றும் அதன் பகுதியாகக் கருதக்கூடிய Butterfly effect தத்துவம். Chaos தத்துவமானது சிக்கலான, எழுந்தமானமான தொகுதிகளின் குணவியல்புகளை ஆராயவும் அவற்றை விளக்கவும் உதவும் ஒரு தத்துவம். அவ்வாறான தொகுதிகளை Chaotic தொகுதிகள் என்று சொல்வார்கள். இவற்றின் இயக்கங்கள் எதிர்வு கூற முடியாதவை. இப்போது இது நடக்கிறது, எனவே இனி இது நடக்கும் என்று குறிசொல்லமுடியாத தொகுதிகள். இவ்வகையான தொகுதிகளில் ஒரு கட்டத்தில் நடக்கும் ஒரு சிறிய மாற்றம், ஒரு சிறிய அசைவு கூட எதிர்காலத்தில் ஒரு பாரிய விளைவை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் உருவாகியதே Butterfly effect தத்துவம். அதாவது ஒரு சிறிய மாற்றம் பெரிய விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறது அத்தத்துவம். அதாவது சொல்வார்கள், ஆபிரிக்காவில் ஒரு வண்ணாத்திப்பூச்சி சிறகடிப்பின் அதனால் ஏற்படும் சிறுகாற்று அமெரிக்காவில் ஒரு சுழல்காற்றை ஏற்படுத்தலாமாம். இயற்கையில் உள்ள ஏறக்குறைய எல்லாத்தொகுதிகளுமே Chaotic தொகுதிகளாம். உதாரணமாக, வானிலை, புவித் தட்டுகளின் நகர்வுகள் போன்றவற்றைச் சொல்லாம். நாம் எவ்வளவு நுட்பமாக ஆய்தறிந்தாலும் வானிலை பற்றிய மிகச்சரியான எதிர்வுகூறல்களை எப்போதுமே செய்யமுடிவதில்லை.
நாம் இந்த Chaos தத்துவத்தை எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு விதமாகக் படமாக்கலாம். ஒன்று, நடக்கும் ஒரு சிறுமாற்றம் எவ்வாறு எதிர்காலத்தில் பாரிய மாற்றத்திற்குக் காரணமாகின்றன என்று காட்டுவதற்கு, ஆரம்பத்தில் நடக்கும் மாற்றங்களை மாற்றி மாற்றி, ஏற்படும் இறுதி விளைவுகளைக் காட்டலாம். இந்த அடிப்படையிலேயே Chaos தத்துவம் சம்பந்தமான ஆங்கிலப் படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக The Butterfly Effect, The Sound of Thunder போன்ற படங்களைக் கூறலாம். இத்தத்துவத்தைக் காட்டக்கூடிய மற்றமுறை, ஒரு பாரிய விளைவு நடத்திருக்கிறது, அதற்கான சிறிய சிறிய காரணிகள் எவை என்று காட்டுவது. ஆனால் இம்முறையிலுள்ள சிக்கல் என்னவெனில், இதனை மக்களுக்குப் புரிய வைப்பது சற்றுச் சிக்கலான விடயம், சில வேளை மக்கள் இக்காரணிகளின் பெறுமதியை, அவற்றின் தாக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாது போய்விடலாம். ஆனால் கமல், வழமைபோன்று, ஆங்கிலப் படவுலகமே முயற்சிக்கச் சிந்திக்கும் இந்த இரண்டாவது முறைமையைக் கையெடுத்திருக்கிறார். அதாவது, ஒரு பெரிய நிகழ்வுக்கு அதற்கு முன்னான சிறிய நிகழ்வுகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்பட்டுத்துகின்றன என்பதை அவர் காட்ட முயன்றிருக்கிறார். இங்கேதான் அவருக்கு 10 வேடங்கள் கைகொடுக்கின்றன. எனவே பார்வையாளர்கள் குறைந்தது 10 வெவ்வேறு காரணிகள் இறுதி நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றாவது புரிந்துகொள்வார்கள். கமலின் இந்தப் பாரிய பரிசோதனை முயற்சியை முதலில் பாராட்டவேண்டும்.
இதன் அடிப்படையில் இப்படத்தினை பார்க்கையில், இந்தப் படத்தின் மைய நிகழ்வாக அல்லது அந்தப் பெரிய நிகழ்வாக நாம் பார்க்கக்கூடியது, எவ்வாறு உயிராயுதக் கிருமியில் இருந்து இந்தியா காப்பாற்றப்படுகிறது என்பதாகும். இந்த நிகழ்வில் எவ்வாறு உலகில் பல்வேறு திசைகளில், பல்வேறு மட்டங்களில் உள்ள காரணிகள் தாக்கங்களைச் செலுத்தியிருக்கின்றன என்று இந்தப் படம் காட்டுகிறது. அதற்கும் மேலாக, 12ம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு நிகழ்வுகூட 2004ம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் காட்டிநிற்கிறது இந்த தசாவாதரம்.
12ம் நூற்றாண்டுச் சோழர்காலத்தில், 2ம் குலோத்துங்க மன்னன் வைணவ எதிர்ப்பில் அனந்த நாராயண சிலையை கடலில் போடுகிறான். அந்த விக்கிரகத்துடன், முதலாவது கமலும் மூழ்கடிக்கப்படுகிறார். இதுவும் இறுதி நிகழ்விற்கு ஒரு காரணி என்று இதன் மூலம் அழுத்தங்கொடுக்கப்படுகிறது. அதாவது புவியோட்டில் இந்த சிலை வீழ்ந்ததால் ஏற்பட்ட சிறு அதிர்வுகூட சுனாமி ஏற்பட்டதற்கு ஒரு காரணியாக இருந்திருக்கலாம். நீங்கள் கேட்கலாம், என்ன இது... ஒரு சிலை புவியோட்டைப் பாதித்துவிடுமா என்று! பாதித்துவிடும் என்கிறது Butterfly effect தத்துவம்.
உயிரியல் ஆயுதம், அது எப்படி அமெரிக்காவிலிருந்து இந்தியக் கடற்கரைக்கு வந்தது என்பதனைக் காட்டுவதாகவே படத்தின் பெரும்பகுதி அமைகிறது. இங்கே மேலும் 9 கமல்ஹாசன்கள் வருகிறார்கள். அதாவது, கமல் 9 காரணிகளின் முக்கியத்துவத்தைக் காட்ட முயல்கிறார். இதில் வரும் ஒவ்வொரு கமலும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இருந்திருக்காவிடின், அவ்வாறு செயற்பட்டிருக்காவிடின் நாம் பார்த்த முடிவு கிட்டியிருக்காது. இதில் நாம் பார்ப்போமானால், கோவிந் பாத்திரம் மற்றும் வெள்ளைக்காரப் Fletcher பாத்திரத்தைத் தவிர ஏனைய பாத்திரங்கள், ஆங்காங்கே வந்துபோகின்றன. இடையில் சம்பந்தமே இல்லாத ஒரு மணலேற்றும் கதை, அதுதொடர்பான சர்ச்சைகள், அதில் ஒரு தலித் கமல். ஜப்பானில் ஒரு கமல், அமெரிக்க ஜனாதிபதியாகவும் ஒரு கமல்... இவ்வாறு எல்லாமட்டங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ள சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட கதையில் அதன் முடிவில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, ஜப்பான் கமல் ஹாசன் கடைசி நேரத்தில் வராவிடின், அந்த உயிரியல் ஆயுதம் கைமாறி உலகிற்கு ஆபத்தாகியிருக்கும். அமெரிக்க ஜனாதிபதி புஷ் குறித்த விமானத்தை திருப்பிக்கொண்டுவர ஒத்துக்கொண்டிருப்பின் என்ன நடந்திருக்கும். அந்த தலித் வாதி இல்லாவிட்டால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு படத்தில் வரும் எல்லா கமல் ஹாசன் பாத்திரங்களின் அசைவுகளும் இறுதிப் பெரு நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியருக்கின்றன. இந்தப் பத்து கமல் ஹாசன்களும் கதையை விளக்குவதற்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் மாத்திரமே. அதேபோன்று படத்தில் வரும் எல்லா நிகழ்வுகளுமே இறுதி நிகழ்விற்குக் காரணம். இடையில் வரும் எந்தவொரு நிகழ்வும் இடம்மாறியிருப்பின், அது பார்த்த முடிவைத் தந்திருக்காது!
அடுத்துப் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டு வைஷ்ணவ ஆழ்வாரும் 2004ம் ஆண்டின் கோவிந்தராஜனும் ஒரேமாதிரி நெற்றிப்பொட்டில் அடி வாங்குகிறார்கள், இதுவும் Chaos தத்துவத்தின் ஒரு இயல்பேயாம். ஒரு கட்டத்தில் நிகழும் நிகழ்வு, இன்னொரு கட்டத்தில் நிகழும் நிகழ்வுடன் மேற்பொருந்தலாம், அதே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்கிறது அத்தத்துவம்.
இதில் கமல் ஹாசன் சொல்ல வந்த முக்கிய விடயமாக நாம் கருதக்கூடியது, இந்த உலக அழிவில் அதில் நடக்கும் மாற்றங்களுக்கு அன்றும் சரி இன்றும் சரி நாம் எல்லோருமே காரணிகளாக இருக்கிறோம். அடுத்து நாம் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டில் வரும் ஆழ்வார் கமல் ஹாசன் சிலையைக் கடலில் போட்டு ஏற்படப்போகும் சுனாமியைத் தடுக்க நினைக்கிறார்... அவரும் இறந்துபோகிறோர். 2004ம் ஆண்டின் தலித் கமல் ஹாசன், மணல் அள்ளுவதை நிறுத்தி அழிவைத் தடுக்க முயல்கிறார். அவரும் இறந்துபோகிறார். எனவே தனிமனிதராக இந்நிகழ்வுகளைத் தடுக்க முடியாது, நாம் எல்லோருமே மாறவேண்டும் என்று காட்ட முயல்கிறாரோ?
தசாவதாரம் படம் எவ்வாறு விஞ்ஞானம் பகர்கிறது என்பதை மட்டுமல்ல அதன் அழகியல்சார் அம்சங்களையும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
இதில் கமல் ஹாசன் ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், அவ்தார் சிங், பல்ராம் நாயுடு, Fletcher, கலிபுல்லாஹ் முக்தார், நரஹாசி, ஜோர்ஜ் புஷ், பூவராகவன், கிருஷ்ணவேணி போன்ற பாத்திரங்களை ஏற்றிருக்கின்றார். இதன் மூலம் உலகத்தில் முதன் முதலாக பத்துவேடங்களில் நடித்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். இச்சாதனை தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படவேண்டிய விடயம். முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயமென்னவெனில், இவற்றில் எல்லாப் பாத்திரங்களிலிமே கமலின் திறமையான நடிப்புத் வெளிப்பட்டிருக்கிறது, நடிப்பை எவ்விடத்திலுமே குறைகூற முடியாது. பாத்திரங்களின் ஒப்பனைகளில் சில போதாமைகள் இருந்தாலும், Body Language – மற்றும் குரல் பேச்சு மூலம் கமல் ஹாசன் பாத்திரங்களை எம்கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, பல்ராம் நாயுடு, Fletcher, பூவராகவன், ஜோர்ஜ் புஷ் போன்ற பாத்திரங்களைக் குறிப்பிடலாம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கட்டையாக வந்த கமல் இதில் கலிபுல்லாஹ் முக்தார் பாத்திரத்தில் நெட்டையாகியும் சாதனை படத்திருக்கிறார். ரங்கராஜன் நம்பியின் பாத்திரம் கமலின் சுயரூபம் என்றாலும் அதில் அவருடைய நடிப்பு, அந்த வெறி... அவருக்கு நிகர் அவரே. உலகநாயகன் என்பதில் எந்தத் தப்புமே இல்லை.
பட ஓட்டத்தில் இடையில் ஒருவரை ஒருவர் துரத்துமிடங்களில் படம் சற்றுத் தொய்ந்துவிடுகிறது. ஆனால் அந்தத் தொய்வுகளை, காட்சி அமைப்பு மற்றும் கமேரா கோணங்கள் சலிப்பில்லாமால் இழுத்துச் செல்கின்றன. இசையமைப்பு மற்றும் பாடல்களைப் பொறுத்தவரையில் ‘கல்லை மட்டும் கண்டால்’ எனும் பாடலில் இருக்கும் உணர்வும் ஹரிகரனின் குரலும் இசையும் படப்பிடிப்பும் மிகத் திறமையாக உள்ளது. ‘முகுந்தா முகுந்தா’ பாடல் இதயத்தை வருடிச் செல்கிறது. பின்னணி இசையையும் குறை சொல்வதற்கில்லை.
படத்தில் வரும் Graphics காட்சிகளைப் பற்றியும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. குறிப்பாக இறுதியாக வரும் சுனாமி காட்சி. நிட்சயமாக ஆங்கிலத்தரத்தில் இவை இல்லை ஆனாலும் இம்முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. சண்டைக் காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. தேவையான இடங்களில் படக்காட்சிகளை ஒரு வண்ணாத்திப் பூச்சி மூலம் தொடுத்து Butterfly effect தத்துவத்தைக் குறியீடாகக் காண்பிப்பது பாராட்டுக்குரியது .
திரைக்கதையில் கமல் தனது அரசியலையும் செய்யத் தவறவில்லை. பல இடங்களில் அவரது கருத்து வெளிப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ‘கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றே சொல்கிறேன்’, ‘மடம் என்றால் தப்பு நடக்காதா?’ போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம்.
பாத்திரப்படைப்பு, நடிப்பு, திரைக்கதை, படப்பிடிப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நோக்குமிடத்து கமல், தமிழ் திரையை உலக தரத்திற்கு நகர்த்திச் செல்கிறார் என்பதை ஐயமறத் தெரிந்துகொள்ளலாம். அதற்கான மற்றுமொரு படிக்கல்லாக தசாவதாரம் அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமில்லை.
- நன்றி 'ஞானம்' கலை இலக்கியச் சஞ்சிகை. ஜூலை 2008
-கெ.சர்வேஸ்வரன், கணினி விஞ்ஞானம் மற்றும் இயந்திரவியற் துறை, மொரட்டுவைப் பல்கலைக்கழகம்.
இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இலக்கிய சஞ்சிகையில் வந்த விமர்சனம். எனையவர்கள் பார்வைக்காக இங்கே பதிவு செய்துள்ளேன், இங்கேயுள்ள கருத்துக்கள் இதை எழுதியரையே சாரும்.
எழுதியது வந்தியத்தேவன் at 5 கருத்துக் கூறியவர்கள்

