Showing posts with label 2011. Show all posts
Showing posts with label 2011. Show all posts

2011 சில நிகழ்வுகள் நினைவுகள்



அரசியல்


இலங்கை

இந்த ஆண்டில் இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை பாரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. யாழ்ப்பாண மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு விழுந்த அடியும் கிரிஸ் மேனும் தான் ஹைலைட்டான விடயங்கள். அதை விட ரணில் விக்ரமசிங்காவுக்கு உள்கட்சிக் குடைச்சல்கள் இன்னும் சுவாரசியமான விடயம். சங்கிலியன் சிலை விவகாரமும் கொஞ்சம் சூடுபிடிச்சு பின்னர் அப்படியே ஆறிவிட்டது.

இந்தியா

தமிழகத்தில் திமுக ஆட்சி கலைந்து மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தாமல் 5 ஆண்டுக்கு ஒரு முறை திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் தேர்தல் செலவு மிச்சமாகும். கனிமொழி கைது, கலைஞர் டிவி சிக்கல், அன்னா ஹசாரே, முல்லைப் பெரியாறு, தண்ணிப் பிரச்சனை என பல சிக்கல்கள் இன்னமும் நீடிக்கின்றது. இவ்வளவையும் சாமாளிக்கும் திறமைக்காக மன்மோகன் சிங்குக்கு இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

பிரிட்டன்

வில்லியம் கேட் மிடல்டென் திருமணம் இந்த வருட ஏப்ரலில் நடந்தது. என்னதான் மக்கள் அரச குடும்பத்தின் மேல் வெறுப்பாக இருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வாக ரோயல் வெடிங் நிகழ்ந்தது. வில்லியத்தின் மனைவி இளவரசி கேட்டை விட அவரின் தங்கை பிப்பா மிடெல்டன் தான் இப்போ பிரிட்டன் பத்திரிகைகளின் ஹாட் கேர்ல்.

ஆகஸ்ட் 6 ந்திகதி நடந்த இங்கிலாந்து கலவரங்கள். டொட்டனத்தில் மார்க் டக்கன் என்ற கறுப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் பொலீசாருக்கு எதிராக நடத்திய வன்முறை லண்டனில் தொடங்கு மஞ்செஸ்டர், லிபர்பூல், பேர்மிங்ஹாம், நொட்டிங்காம் என இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் பரவி பல்லாயிரம் பவுண்ட்ஸ் பெறுமாதியான பொருட்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.


உலகம்

ஜனவரின் தென் சூடான் என்ற புதிய நாடு உருவாகியது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி முகாபேயின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் சிரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு இந்த எழுச்சிகள் பரவி கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையும் காடபியின் மரணமும் இந்த ஆண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகும்.

மே முதலாம் திகதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவிப்புச் செய்தார்.

நோர்வே ஒஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடும் இந்த ஆண்டில் மறக்கமுடியாத இன்னொரு நிகழ்வாகும்.

ஒக்டோபர் 1ல் உலக சனத்தொகை ஏழு பில்லியனாக உயர்ந்தது.

ஜ‌ப்பான் புக்கோஷிமா நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தமையும் அப்பிளின் சக ஸ்தாபகர் ஸ்ரிவ் ஜாப்ஸ் மற்றும் சி மொழியின் தந்தை டெனிஸ் ரிச்சி ஆகிய இருவரின் இறப்பு தொழில்நுட்ப சமூகத்தை உலுப்பிய மரணங்களாகும்.

விளையாட்டு

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டோணி தலைமையிலான அணி மீண்டும் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. எதிர்த்து விளையாடிய இலங்கை அணி மீண்டும் ரன்னர்ஸ் ஆகவே வந்தது, உலகக்கோப்பை வென்ற்
கையுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணியினருக்கு இங்கிலாந்து மரண அடிகொடுத்ததும் அதே இங்கிலாந்தை இந்திய ஆடுகளங்களில் வைத்து இந்தியா பழிக்கு பழி வாங்கியதும் விறுவிறுப்பான கிரிக்கெட் நிகழ்வுகள் ஆகும்.


தனது நூறாவது சதத்தை இன்றைக்கு அடிப்பார் நாளைக்கு அடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் இந்தப் பதிவு பிரசுரமாகும் வரை(மெல்பேர்ன் டெஸ்ட் முடிய‌ இன்னும் 2 நாட்கள் இருக்கின்றது)அடிக்கவில்லை. 

சச்சினின் ஒருநாள் உலகசாதனையான 200 ஓட்டங்களை அவரின் சகாவான சேவாக்கினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முறியடிக்கப்பட்டது. 

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஜோன் டெரி அன்டன் பேர்டினென்ட்க்கு எதிராக தெரிவித்த இனவாத கருத்துக்கள், இங்கிலாந்து நட்சத்திர வீரர் வெயன் ரூனியின் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகளால் கால்பந்தாட்ட உலகம் சூடுபிடித்தது.


சினிமா

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மாறன் சகோதரர்களின் மொனோபோலியில் இருந்து ஓரளவு தப்பியதால் சில படங்கள் உண்மையாகவே ஹிட் ஆகின. தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை சென்ற ஆண்டுப்படங்கள் அள்ளிக்கொடுத்ததை இந்த வருடம் அறிவித்தார்கள். கொலைவெறிப்பாடல் பட்டி தொட்டி என உலகமெல்லாம் பரவியது இந்த ஆண்டிலைதான்.

உலக அழகி ஐஸ்வர்யாயின் பிரசவமும் இந்த ஆண்டின் பரபரப்பான விடயம் நவம்பர் மாத அழகிக்கு இன்னொரு நவம்பர் மாத அழகி. நவம்பர் மாதத்தில் பிறந்தாளே ஒரு தனி அழகுதான். 

புத்தகம்

இந்த ஆண்டில் பெரும்பாலும் வலை வாசிப்பே வாசித்ததால் பெரிதாக புத்தகம் எதுவும் வாசிக்கவில்லை. இலங்கை சென்றிருந்தபோது கானாப் பிரபாவின் கம்போடியாவும், அகிலனின் மரணத்தின் வாசனையும் வாங்கி விமானத்தில் வாசித்தேன். கம்போடியாவில் கானா கவர்ந்தார், மரணத்தின் வாசனையில் அகிலன் நடு வானில் கலங்கவைத்தார். இரண்டு புத்தகம் பற்றிய விமர்சனமும் எழுதவேண்டும் (எப்போ? இன்னும் ஆறுமாதத்தில் தானே என நீங்கள் கேட்பது புரிகின்றது)

நான் 

2011 ல் என் வாழ்க்கையில் ஒரு மாதம் மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒக்டோபர் 23ல் தொடங்கி நவம்பர் 22 வரை சொந்த மண்ணில் நண்பர்களுடன் உறவினர்களுடன் கழித்த நாட்கள் என்றும் இனிமையானவை. இந்த குறுகிய காலத்தில் வடக்கே யாழ்ப்பாணம் கிழக்கே மட்டக்களப்பு தெற்கே கதிர்காமம் என மேற்கில் கொழும்பிலிருந்த நான் திக் விஜயம் செய்து மகிழ்ந்தேன். மத்திய மலைநாட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை.



என் தெரிவில் சில சிறந்த 2011 விருதுகள்
வலைத்தளம்
சாதாரணவனின் மனது என விசரன் எழுதும் வலை. இவரின் சில கதைகள் அட என ஆச்சரியமூட்டுபவை. புலம் பெயர் தேசத்து விடயங்களை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக எழுதுகின்றார். 

ட்விட்டர் 
சண்முகன் (இலங்கை) 
முழு நேர ட்விட்டராக மாறி பலரின் ட்விட்டகளை ரீட்விட்டுவதிலும் தன்னுடைய சில ட்விட்டுகளிலும் கவர்ந்தவர். http://twitter.com/#!/shanmugan10
ராஜன் லீக்ஸ் (இந்தியா) 
இவரின் சில ட்விட்டுக்கள் ஆச்சரியமாக இருக்கும்.
http://twitter.com/#!/RajanLeaks

வலைப்பதிவர்
மருதமூரான் (இலங்கை)
http://maruthamuraan.blogspot.com/
நடுநிலையான கருத்துக்களுடன் பலதும் எழுதுகின்றார், மொக்கை மட்டும் இன்னும் கைகூடவில்லை, அதே நேரம் இவர் பேஸ்புக்கில் இடும் காதல் வசனங்களுக்கு நான் ரசிகன்


ஜாக்கி சேகர் (இந்தியா)  http://www.jackiesekar.com/
இவரின் திரைப்பட விமர்சனங்களும் வெள்ளந்தித்தனமான சில பதிவுகளும் என்னை மிகவும் கவர்ந்தது.


படம்  : எங்கேயும் எப்போதும்


பாடல் : என்னமோ ஏதோ : படம் கோ


சிறந்த நடிகர் : அஜித் (மங்காத்தா)


சிறந்த நடிகை : அஞ்சலி ( எங்கேயும் எப்போதும்)


சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)


சிறந்த இயக்குனர் : சரவணன் (எங்கேயும் எப்போதும்)


சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி  ( கோ, நண்பன்)


தொகுப்பாளர்  : சிவகார்த்திகேயன் (இவரின் அது இது எது பார்க்காமல் விடுவதில்லை)


சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்

வடிவேல்

சும்மா இருக்காமல் அழகிரியின் சொல்லைக் கேட்டு விஜயகாந்தை எதிர்க்கின்றேன் என தேர்தல் மேடைகளில் மொக்கைப்போட்டு இப்போ வீட்டில் அடைந்து கிடைக்கின்றார். பாவம் கைப்புள்ளை கருணாநிதியின் நிதியை மட்டும் நம்பி மோசம் போய்விட்டார்.



அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2012 உங்கள் வாழ்வில் வசந்தங்களையும் சந்தோஷங்களையும் கொண்டுவர வாழ்த்துக்கின்றேன்.