இளையராஜா இசை கெளதம் இயக்கம் அழகுப் பதுமை சமந்தா என எதிர்பார்ப்பை எகிறவைத்த நீதானே எந்தன் பொன்வசந்தம் நீண்ட நாட்களின் பின்னர் முதல்நாள் இல்லை முதல்நாளுக்கு முதல்நாள் முதல்காட்சி படம் பார்க்கமுடிந்தது. தீடீரென வெளியிட்டபடியாலோ என்னவோ பெரிதாககூட்டம் இல்லை ஆனால் சில பெண்களை தியேட்டரில் பார்க்ககூடியதாக இருந்தது.
கதை
பாடசாலை நாட்களில் ஏற்படும் பப்பிக் காதல் கதை. அந்தந்த வயதில் காதலர்களுக்கிடையே ஏற்படும் ஈகோச் சண்டைகள். விட்டுக்கொடுப்புகள் பிடிவாதங்கள் இறுதியில் என்ன நடக்கின்றது என்பதுதான் கதை.
திரைக்கதை
முதல் பாதியில் பாடசாலை கல்லூரிக் காதல்களை வேகமாகவும் யதார்த்தமாகவும் அமைத்த கெளதம் இரண்டாம் பாதியை கிளைமாக்ஸ் வரை இழுவையாக அமைத்திருக்கின்றார். அதிலும் கிளைமாக்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கெளதமின் படமா என்ற சந்தேகம் ஏற்படும். அடுத்தது இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை படத்தின் பலவீனங்களில் ஒன்று.
வசனம்
படத்தின் மிகப்பெரிய பலமே இயல்பான வசனங்கள் தான் வழக்கமான கெளதம் படங்களில் வரும் ஆங்கிலத் திணிப்பு அவ்வளவாக இல்லை. சந்தானத்தின் நகைச்சுவையான சில பஞ்ச் வசனங்கள் பேஸ்புக் ஸ்டேடசுக்கு பொருத்தமானவை.
இயக்கம்
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற காதல் ஹிட் அடித்த கெளதம் அலிஸ்டர் குக் போல அசரமால் இதிலும் அதிரடியாக சதமடித்திருக்கின்றார். இதற்கான முழுக்காரணம் இந்தக் கதையின் ஏதாவது ஒரு காட்சியாவது உங்கள் வாழ்க்கையில்(நீங்கள் காதலித்தவர், காதலித்துக்கொண்டிருப்பவர் என்றால்) நடந்திருக்கும். பல இடங்களில் திரைக்கதையுடன் உங்களை ஒன்ற வைத்திருப்பது கெளதத்தின் வெற்றியே.
வருண்
வருண் என்ற பாத்திரத்தில் வரும் ஜீவாவை நீங்கள் எப்படியும் உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள், உங்கள் நண்பனாகவோ உறவினனாகவோ ஏன் சில வேளை நீங்களாகவோ கூட இருக்கலாம். ஒரு சாதாரண வாலிபனாக படம் முழுவதும் ஜீவா ஆக்கிரமித்திருக்கின்றார். கல்லூரியில் நீண்ட நாட்களின் பின்னர் சமந்தாவை கண்டதும் மேடையில் ஜீவா பாடும் பாடலில் நண்பன் குறும்பு கொப்பளிக்கின்றது. சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகளில் தியேட்டரே அதிருகின்றது. சமந்தாவுக்கு கொடுக்கும் முத்தகாட்சிகளில் மட்டுமே ஜீவாவிடம் கெமிஸ்ரி மிஸ்சிங்.(புன்னகை மன்னன் படத்தை நாலு தடவை பார்த்திருந்தால் கெமிஸ்ரி பிசிக்ஸ் எல்லாம் தானாகவே வந்திருக்கும்).
நித்யா
நினைவெல்லாம் நித்யா, நினைவெல்லாம் சமந்தா என படம் பார்த்துக்க்கொண்டிருக்கும் போதே ட்விட்டர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட முனைந்தேன் ஆனால் அது சில பல சொசெசூ ஆகிவிடும் என்றதாலே கைவிட்டுவிட்டேன். அழகாக இருக்கின்றார், அழகாக சிரிக்கின்றார் அழகாக நடிக்கின்றார் அழகாக அழுகின்றார்(சமந்தாவை அழவைத்த கெளதமுக்கு பக்கத்தில் இருந்த ஜது கண்டனம் தெரிவித்தான்). விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசியை விட எனக்கு நீஎபொவ நித்யாவை பிடித்திருக்கின்றது. ஈகோ பிடித்த அழுத்தமான கொஞ்சம் சுயநலமான இக்காலப் பெண்களை சமந்தா பிரதிபலிக்கின்றார்.
சந்தானம்
படத்தின் இன்னொரு பலம் சந்தானம். ஜீவாவின் நண்பனாக இவர் அடிக்கும் லூட்டிகள் கலக்கல். லாரிக்கு கீழ போனவனைக் கூட காப்பாத்தலாம் ஆனால் லவ்விலை விழுந்தவனை காப்பாத்தவே முடியாது. சல்வார் மங்கிப்போனதும் ஜீன்ஸ் பேண்டிடம் வருவியள் கரண்டைக்கூட சொல்லிப்போட்டுத்தான் கட் பண்ணுவான் ஆனால் காதலை என இவர் அடிக்கும் பஞ்ச் வசனங்கள் அக்மார்க் சந்தானம் குறும்பு. அந்தக் குண்டுப் பெண்ணின் மேல் இவருக்கு வரும் காதலும் அதன் பின்னர் ஒரு இடத்தில் இவர் அடிக்கும் ஒரு கொமெண்ட் 18+ ஆக இருந்தாலும் தியேட்டரில் பலருக்கு புரியவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கவுண்டர்மணி பாணியில் இருந்து சந்தானம் விடுபடுகின்றார்.
ஆண்டனியின் எடிட்டிங் மட்டும் இல்லையென்றால் படம் பப்படமாகி இருக்கும். எங்கே எங்கே தேவையோ அங்கை எல்லாம் அழகாவும் அளவாகவும் கத்தரி வைத்திருக்கின்றார். எம் எஸ் பிரபு ஓம்பிர்காஷின் ஒளிப்பதிவில் இராமேஸ்வரம் காட்சிகள் இயற்கை. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். கால ஓட்டத்தினை மொபைல் போனை வைத்து வேறுபடுத்தியிருப்பது அசல் கெளதம் வாசுதேவ் மேனன் டச்.
ஒரு அழகான காதல்கதையை இயல்பாக சொன்ன கெளதமுக்கும் அந்தக் கதாபாத்திரங்களில் வாழ்ந்த ஜீவா சமந்தாவுக்கும் பூங்கொத்து அல்ல பூந்தோட்டத்தையே பரிசளித்திருக்கலாம்.
ஓஓஓ மிகவும் ரசித்த ஒரு விடயத்தை மறந்துவிட்டேன் நினைவெல்லாம் நித்யா படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடலை கெளதம் பாடும் போது மட்டுமே இசை இசைஞானி இளையராஜா மனதை வருடுகின்றார்.